கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 9, 2021
பார்வையிட்டோர்: 4,920 
 
 

காலையிளங்காற்று உடம்பில் பட்டதால் எற்பட்ட புத்துணர்வு சுகமாக இருக்கிறது. வெளியில் உலகம் விடிந்து விட்டதற்கான சந்தடிகள் கேட்கின்றன.படுக்கை அறைக்குள் இருளும் ஒளியுமான ஒரு கலப்பு வெளிச்சம். திறந்திதிருந்த ஜன்னல் ஊடாக குளிர்மையான தென்றல் தவழ்ந்து கொண்டிருக்கிறது.ஆனால் என் உடம்பின் எரிவு அதன் குளிர்மையை மிகப் படுத்துவதால் ஏற்படும் விறைப்பினால் போர்வையைத் திரும்பவும் இறுக்கிக் கொள்கிறேன்.காயம்பட்டு புண்ணாகி வலி தரும் எனது காலை மெல்லமாக உயர்த்த முயல்கிறேன்.தாங்க முடியாவில்லை,அவ்வளவு வலி.

மெல்லமாகத் திரும்புகிறேன்.திரும்பியதும் பக்கத்தில் படுத்திருக்கும் மனைவியின் மெல்லிய-ஒரே சீரான சூடான மூச்சுக் காற்று என் கன்னத்தைத் தடவிச் செல்கிறது.எனது பக்கம் திரும்பிப் படுக்கிறாள்.எனது பின் பக்கத்தில் எனது மகனின் கால்,அவளின்மேல் கிடக்கிறது.அவளையே பார்த்துக் கொண்டிருக்கிறேன்.இரவு நடந்த சம்பவங்கள் மனதில் திரையிடுகின்றன.நினைக்க நினைக்க நெஞ்சு எரிந்து கொண்டிருக்கிறது.

அவளும் சூடாகத்தான் பேசினாள்.அவளையடித்தது தப்பில்லை என நினைத்துக் கொள்கிறேன். எல்லோருக்கும் என்னைப் பிடுங்கத்தான் தெரியும். என்னைச் சுற்றிய உறவுகள் எல்லாம் சுயநலம்தான்.எனக்கு இந்த உலகத்தில் ஆத்திரம் வருகிறது.மூன்று தங்கைகள் திருமணமாகவில்லை.நான் மூத்தவன்.எனக்குப் பின்னால் தங்கைகளுடன் மூன்று சகோதரர்கள்.நான்தான் இவர்களுக்கெல்லாம் பொறுப்பாம்.இவர்களைக் கரையேற்றாமல் காதல் கல்யாணம் செய்துவிட்டேனாம்.பெற்றோர் படிப்பித்து விட்டார்களாம். குடும்பத்தைப் பாராமல் இருக்கிறேனாம்.என்ன படிப்பு? ஒரு அரசாங்க கிளார்க் வேலை கிடைத்த படிப்பு.இந்தப் படிப்பால் வரும் வருமானம் எவ்வளவு பொறுப்புக்களைத் தாங்கும்?.இந்த படிப்பையும் உத்தியோகத்தையும் தொடராமல் யாழ்ப்பாணத்தில்; சுருட்டு சுத்தும் தொழில் செய்து பிழைத்திருக்கலாம்.

மாதக் கடைசியில்,பணப் பிரச்சினையால் எங்கள் வீட்டுச் சண்டையும் தொடங்கி விடும்.உலகில் பெருமபாலான உறவுகளும் பாசமும் பொருளாதார அடிப்படையில் அமைந்தனவையா?.;மனதில் ஓடும் சிந்தனையுடன் எனது அடிபட்ட காலை தூக்குகிறேன்.வலிக்கிறது.அன்றைக்கு பஸ்சுக்கு ஓடும்போது தவறி விழுந்த விட்டேன்.சின்னக் காயம் என்று கவனிக்காமல் விட்டது தவறு.இப்போது காயமும் பெருத்து,காய்ச்சலும் வந்து பாடாய்ப் படுத்துகிறது.

இன்றைக்கு எப்படியும் வேலைக்குப் போகமுடியாது,ஆஸ்பத்திரிக்குக் கட்டாயம் போயே ஆகவேண்டு;.எங்கே போவது? பிரைவேட் ஆஸ்பத்திரிக்குப்போவதா? ஐந்து ரூபாய்கள் இருந்தால் பிள்ளைக்குப் பால் வாங்கலாம்.இதில்தானே இரவு சண்டை நடந்தது? ஓரு மனிதன் வேலையால் களைத்து வரும் போது வீட்டில் நிம்மதியாக இருக்க முடிகிறதா? அது இல்லை.இது இல்லை என்ற பாட்டுத்தான் தொடரும். எனக்குத் திரும்பவும் எரிச்சல் வருகிறது.
மெல்லமாக எழுகிறேன்.எப்படியும் நேரத்தோடு போனாற்தான் கியுவில் நின்று மருந்து வாங்கலாம்.ஆஸ்பத்திரியை நினைத்ததும் எனக்கு வேறோன்றும் ஞாபகம் வருகிறது.என்னுடன் படித்த ஒருவன் டாக்ராக அங்கு இருக்கிறான்.மெல்லமாகப் பழைய காலத்தை அசை போட்டபடியே எழுகிறேன்.எழுந்து குளிக்குமறை என்னும் மறைவுக்குப் போகிறேன். நான் எழும்பும் சத்தம் கேட்டு என் மனைவி அசைவது தெரிகிறது. அவளுக்குத் தெரியாமல் சாடையாக அவளைப் பார்க்கிறேன்.இரவு நான் அடித்த காயத்தால் கன்னம் வீங்கியிருக்கிறது.குழந்தையைத் தன்னிடமிருந்து அப்புறப்படுத்தி விட்டுச் சமயலறைப் பக்கம் போகிறாள்.

நான் பல் விளக்கி முகம் கழுவுவதற்கிடையில் என் மகனின் அழுகுரல் கேட்கிறது.நான் முகம் கழுவிக்கொண்டிருக்கிறேன். குழந்தை அழுதுகொண்டேயிருக்கிறான்.அவள் வந்து அழும் குழந்தையைத் தூக்கவில்லை என்று தெரிகிறது.எனக்கு ஆத்திரம் வருகிறது. ஏன் ஆத்திரப் படுகிறேன் என்று தெரியாமல் அவளில் ஆத்திரப் படுகிறேன்.முகத்தைத் துடைத்தபடி வந்த எனக்கு மேசைமேல் கிடந்த அம்மாவின் கடிதம் கண்களிற் படுகிறது.அதைக் கண்டதும் மனிதில் இன்னும் எரிச்சல் படர்கிறது.
எல்லோருக்கும் என் உழைப்பு வேண்டும்.எனது உழைப்பு இல்லையென்றால் என்னைப் பற்றிக் கவலைப்பட யார் இருக்கிறார்கள்? குழந்தையின் அழுகை தொடர்கிறது. எனக்கு ஆத்திரம் கூடுகிறது.’இந்த வீட்டில் இந்தச் சனியனை அடக்கவும் ஆளில்லையா?’

என் கத்தலில் என் ஒரே ஒரு குழந்தை.’சனியன்’ என்று என்னால் அழைக்கப்பட்ட சிறு உருவம் மெல்லமாகத் தன் விழிகளை உருட்டி என்னைப் பயத்துடன் பார்க்கிறது.மனைவி முணுமுணுத்தபடி சமயறையிலிருந்து வருகிறாள்.’ ம்ம் இந்த வீட்டில் உங்களுக்கு எல்லாரும் சனியன்கள்தான்,அது மட்டும்தான் சொல்லத் தெரியும்’

நான் போட்ட சத்தத்தில் எனது காலில் உள்ள புண் விண் விண் என்று வலிக்கிறது.அவள் தொடர்ந்து முணுமுணுக்கிறாள்.எனக்கு வந்த எரிச்சலில் ‘படாரென்று’ அவள் கன்னத்தை அடித்துவிட்டேன்.அடுத்த கன்னமும் வீங்கட்டுமெ.

காப்பி கூடக் குடிக்கவில்லை. காலைச் சாப்பாடும் இல்லை,நான் செத்துத் தொலைந்தால் ஒரு பிரச்சினையும்; தெரியாது. செத்துப்போகும் நினைவு தட்டியதும் என்து நெற்றியில் கைவைத்துப் பார்க்கிறேன்.நெற்றி நெருப்பாகக் கொதிக்கிறது.

விண்விண் என்று வலிக்கும் எனது காலைக் குனிந்து பார்க்கிறேன்.என்னுடைய கால் இருமடங்கு வீங்கித் தெரிகிறது.ஓயாது உழைக்கிறேன். ஆனால் வீங்கிப் புடைத்து வலிதரும் காலுக்கு பிரைவேட்டாக அவசர வைத்தியம் செய்ய என்னிடம் பணமில்லை.நான் இந்த நிலையில் வாழ்கிறேன் அம்மாவின் கடிதம் எனது தங்கையின் திருமணத்திற்கான சீதனம் கொடுக்க எனது உதவி கேட்டு வந்திருக்கிறது!

நான் வீட்டிலிருந்து வெளியே வருகிறேன். ஏதோ எங்கேயோ வைத்து விட்ட பொருளை எடுக்கும் அவசரத்தில் உலகம் ஓடிச் செல்கிறது.எல்லோரும் என்னைப்போல் க~;டப்படுபவர்களா? அவர்களும் எதையோ தீர்த்து முடிப்பதற்காக விரைகிறார்களா?

அந்தக் காரில் போகிறவர் எவ்வளவு சந்தோசமாகப் போய்க்கொண்டிருக்கிறார்.யார் கண்டார்கள்? உள்ளுக்குள் எதையோ வைத்து ஒப்பாரி வைத்துக்கொண்டு வெளியில் சிரித்து வேடம் போடுபவராக இருக்கலாம்.

பஸ்ஸில் ஏறி இடிபட்டு ஆஸ்பத்திரிக்குச் செல்கிறேன்.உடம்பு நெருப்பாகக் கொதிக்கிறது.தலையிடி ஒருபக்கம்.காலில் உள்ள காயத்தலான புண் விண்விண் என்று வலிக்கிறது.காலை ஏழுமணிக்கே ஆஸ்பத்திரிக்கு இவ்வளவு மனிதர்கள் எப்படி வந்து குவிந்தார்கள்?.என்னைப்போல் ஏழை உத்தியோகத்தர்களா?அப்படியில்லை என்றால் பிரைவேட் வைத்தியசாலைக்குப் போயிருப்பார்களே.

கியுவில் நின்று நம்பர் எடுத்துக்கொண்டு டாக்டரிடம் போவதற்கிடையில் காலை எட்டுமணியாகிவிட்டது.உடம்பு ஏதோ செய்கிறது.காலைத் தூக்கி நடக்கவே முடியவில்லை.
‘அட யார் அது? என்னோட ஒரு காலத்தில ஒன்றாகப் படித்தவன் ஸ்டெதஸ்கோப்பும் கையுமாக?’.. நான் அவனை நோக்கி விரைகிறேன்.தூரத்திலிருந்தே அவனை நான் அடையாளம் கண்டு கொண்டேன்.அவனும் என்னையே பார்க்கிறான்.யாரோ தெரிந்த முகம் என்ற அறிதல் அவனின் பார்வையில் ஒரு கணம் தெறிக்கிறது.அதைத் தொடர்ந்து அவன் முகத்தில் ஒரு மாறுதல்.நான் அவனிடம் போகிறேன்.அது அவனுக்குப் பிடிக்கவில்லை என்று அவன் பார்வை என்னிடம் உணர்த்துகிறது.
எனது கால்கள் முன்னேற மறுக்கின்றன.
ஓரு காரணம் அவனுடைய அலட்சியப் பார்வை.இன்னொன்ற என்னுடைய கால்வலியால் வந்த ஏலாமை.இருந்தும் முயற்சிக்கிறேன். ஓ யாரடா அது இடையில் வந்து குறுக்கிடுபவன்? அவன் தாஸ் புஸ் என்ற ஆங்கிலத்துடன் எனது நண்பனை நெருங்குகிறான்.அது பத்தாதா எனது ‘பழைய சினேகிதனுக்கு? அவன் புதிதாக வந்தவனுடன் நழுவிச் செல்கிறான்.அது ஒரு விதத்தில் பரவாயில்லை என்று நினைக்கிறேன். அதாவது அவனிடம் நான் சென்று அவன் என்னைத் தெரியாதவன் மாதிரி நடந்து கொண்டிருந்தால் என்னால் தாங்கியிருக்க முடியுமா? அதை விட அவன் சமயம் பார்த்து நழுவி விட்டது நல்லது. அவன் போன திசையில் என் பார்வை நீள்கிறது. எனது நினைவுகளும் நீண்ட நினைவுகளிற் தொடர்கின்றன.

இன்று அவன் மிகப் படித்த டாக்டராகவிருக்கிறான் ஆனால் ஒருகாலத்தில் ஒன்றாகப் படிக்கும்போது,அவனுக்குக் கணக்கு சரியாக வராத காலத்தில் அது பற்றிச் சொல்லிக் கொடுத்து உதவியிருக்கிறேன்.அக்கால கட்டத்தில் நாங்கள் இருவரும் கிட்டத்தட்ட ‘இணைபிரியாத சினேகிதர்கள்’.பரீட்சையின்போது,காப்பியடிக்கக்கூட உதவியிருக்கிறேன். இருவரும் கீரிமலைக் கடற்கரையில் நீந்தி விளையாடி விட்டுக் கச்சான் வாங்கிச் சாப்பிட்ட காலங்கள் நினைவில் பதிந்தவை.அக்காலத்தில் முகத்தில் எண்ணெய் வழிந்த முகத்துடன் எப்போதும் பல்லையிளித்துக் கொண்ட திரிந்த தில்லைநாதனா இவன்?

பெருமூச்சுடன் திரும்பிய என் பார்வையில் தெரிந்த நீண்ட கியு பயமுறுத்துகிறது.நீண்ட நேரம் காத்திருந்த பொறுமைக்குப்பின் டாக்டரைக் கண்டதும் எனது வீங்கியிருந்த காலைக் காட்டுகிறேன்.அதைக் கண்டதும் டாக்டர் கோபத்தில் என்னில் பாய்கிறார்.இப்படி வீங்கும் வரையிருந்துவிட்டுக் கடைசி நேரத்தில் வந்து தன் உயிரை(?) வாங்குவதாக முணுமுணுக்கிறார்.
‘கொஞ்சம் முந்தி வந்திருக்கலாமே.இரண்டு நாள் முந்தி வந்திருந்தால் இப்படி வீக்கம் வந்து பிரச்சினை வருவதைத் தடுத்திருக்கலாம்’ அவர் மருந்தை எழுதித் தருகிறார். ‘நினைத்தவுடன் லீவு போட நாங்கள் என்ன உயர் அதிகாரிகளா?’ அந்த டாக்டரின் திட்டுகளுடன் அவர் எழுதிக் கொடுத்த மருந்தை எடுக்க அவ்விடத்தை நோக்கி நடக்கிறேன்.
எனது நடை தளர்கிறது.காலையில் எனது மனைவியைத் திட்டி அவளின் கன்னத்தில் அறைந்து சண்டை பிடிக்காமலிருந்தால் காலைச் சாப்பாட்டைச் சாப்பிட்டு விட்டு வந்திருக்கலாம்.
கண்களை இருட்டிக்கொண்டு வருகிறது.சாப்பாட்டுக்குப் பசிக்கவில்லை. ஆனால் என்னுள் ஏதோ செய்து கொண்டிருக்கிறது.மருந்தெடுக்கும் அறையிலும் கியூ பெரிதாகவிருக்கிறது.என்ன அநியாயம்,நோய்க்கு மருந்தெடுக்க வந்தால் இத்தனை கியூவா? வருத்தமில்லாவிட்டாலும் இந்தப் பெரிய கியூவில் காத்து நின்றால் நிச்சயம் வருத்தம் வரும்.எத்தனை நேரம் இந்த நெருக்கத்தில் அவதிப் படவேண்டும்? மருந்தெடுத்து, அதன்பின் ஊசிபோட்டுக் கொண்டபின் காலுக்கு மருந்து கட்டக் காத்திருக்கிறேன் எனக்குப் போதும் போதும் என்று மனம் சலித்துக்கொள்கிறது.

கைவேறுவலிக்கிறது.கழுத்தைச் சுற்றிக் கிடந்த மவ்ளருக்குள் வியர்க்கிறது.நேரம் காலை பதினொரு மணியாகிறது.தலையைச் சுற்றிக்கொண்டு வருகிறது.எப்போது வீட்டுக்குப் போகலாம்,இந்த நினைவு வந்ததம் எனக்குப் பக்கத்தில் இருக்கும் குழந்தையைப் பார்க்கிறேன்.

எனது மகனின் வயதுதானிருக்கும்.அதே களங்கமற்ற முட்டைக் கண்கள்.குழந்தைக்குப் பசி போலும்,தாயைச் சுரண்டிக் கொண்டிருந்தது.நான் அவனையுற்றுப் பார்ப்பதைக் கண்டதும் தாயின் சேலைக்குள் முகத்தைச் சாடையாக மூடிக்கொண்டு என்னை ரகசியமாகப் பார்க்கிறான்.நான் எனது வேதனையை மறந்து சிரிக்கிறேன். ஆந்தத் தாய் தன் குழந்தையை அணைத்துக் கொள்கிறாள்.

உடனே வீட்டுக்கு ஓடிச் சென்று என் மனைவியையும் மகனையும் அணைத்துக் கொள்ள மனம் துடிக்கிறது. தாங்கேலாது இடிக்கும் என்தலையை மனைவியின் அன்புமடியில் வைத்துப் படுக்க, அவள் எனது நெற்றியைத் தடவினால் எவ்வளவ நிம்மதியாகவிருக்கும்? பாவம் காலையில் அவளை அடித்து விட்டேன்.இரவும் அவள் சாப்பிடவில்லை.காலையிலும் அவள் நிச்சயமாகச் சாப்பிட்டிருக்கமாட்டாள். கோபம் வந்தால் என்னைப் பேசமாட்டாள்.தனக்குள்த் தானே ஏதோ முணுமுணுப்பாள்,சிலவேளைகளில் மகனிடம் முணுமுணுப்பாள். எல்லாம் முடியவிட்டுத் தானே தனியாகவிருந்த அழுவாள்.

வீட்டு ஞாபகம் வந்ததும் திரும்பவும் அந்தத் தாயையும் குழந்தையையும் பார்க்கிறேன்.அந்தக் குழந்தை மெல்லமாக என்னைப் பார்க்கிறான்.பின்னர் கொஞ்சம் சிரிக்கிறான்.பின்னர் தாயிடம் மெல்லமாக ஏதோ சொல்கிறான். அவள் என்னைப் பார்த்து புன்முறுவல் செய்கிறாள்.இளமை குலுங்கும் வயது.அவள் கன்னம் குழிவிழச் சிரித்தது அலாதியாகவிருக்கிறது.

‘அவனுக்குச் சரியாகப் பசிக்கிறது.காலையில் சரியாகச் சாப்பிடவில்லை’ சிங்களத்தில் சொல்கிறாள்.’அதிகம் நேரம் காத்திருக்கிறீர்களா’? நானும் சிங்களத்தில் கேட்கிறேன்.
‘எட்டு மணியிலிருந்து இங்கு நிற்கிறோம்’ அவள் சொல்கிறாள்.

ஓரு படியாக எங்கள் முறை வந்ததும் மருந்து கட்டும் அறைக்கு அழைக்கப்படுகிறோம்.இரு தாதியர் மருந்து கட்டத் தயராக நிற்கிறார்கள். அவளின் குழந்தை முரண்டு பிடிக்கிறான்.அவளால் அவனைக் கட்டுப் படுத்த முடியாமல் அவன் திமுறுகிறான். நானும் சேர்ந்து அவனைப் பிடித்துக் கொண்டு மருந்து கட்ட உதவுகிறேன் நேர்ஸ் எங்களைப் பார்த்துச் சிரிக்கிறாள்.’இந்தப் பொல்லாத குழந்தையை எப்படித்தான் வீட்டில் சமாளிக்கிறீர்கள்’.அந்த நேர்ஸ் எங்களைத் தம்பதியர்கள் நினைப்பதை உணர்ந்து நான் திடுக்கிடுகிறேன். ஆந்தத் தாயும்; தர்மசங்கடப் படுவது அவளின் கன்னம் குப்பெனச் சிவந்ததிலிருந்த புலப்படுகிறது.’இவன் என்னிடம்தான் இப்படி அடம்பிடிப்பான். அப்பாவும் வந்திருந்தால் இப்படித் துள்ளமாட்டான்’அவள் அழுத்திச் சொல்கிறாள்.

என்னையும் அவளையும் அந்த நேர்ஸ் தம்பதிகளாக நினைத்தது தவறு என்பதை அவள் சுட்டிக் காட்டுவதுபோல,;’வாரும், வீட்டுக்குப் போனதும் அப்பாவிடம் சொல்லி இரண்டு அடிவாங்கித் தருகிறேன்’என்கிறாள் பின்னர் ஒரு திருப்தியுடன் என்னைப் பார்க்கிறாள்.

எனது காலுக்கு மருந்துபோடும் நேரம் வருகிறது. சில நாட்களாக இந்தப் புண்வலி தருகிறது. எனது காலைப் பார்க்கிறேன்.காலையில் சற்று நாற்றமாகவுமிருந்தது. நேர்ஸ் பேசுவாளா? நேர்ஸ் எனது காலிலுள்ள புண்ணைத் துடைத்துவிட்டு, அந்தத் துடைக்கும் கருவியால் மெல்லமாக அழுத்துகிறாள்.எனக்கு வலியால் உயிர் போவதுபோலிருக்கிறது.
‘உள்ளுக்குள் நிறையச் சிதழ் இருக்கிறது.எடுக்காவிட்டால் கூடாது,சிதழ் இருக்கும்வரை காய்ச்சலும் குறையாது’. நேர்ஸ் கடுமையான தொனியில் சொல்கிறாள்.என்ன செய்வது ? பேசாமலிருக்கிறேன்.ஒவ்வொருதரமும் அவள் அழுத்திச் சிதழை வெளியெடுக்கும்போது வரும் வேதனையால் எனது மயிர்க்கால்கள் சில்லிடுகின்றன.

எனது புண்ணை அழுத்தியதால் அந்த நேர்ஸின் கைகளிலும் சிதழும் இரத்தமும் படுகிறது. அவள் முகத்தில் எந்த அருவருப்பு உணர்ச்சியுமில்லை.கைகளைக் கழுவிவிட்டு வந்து எனது காலுக்கு மருந்து கட்டுகிறாள்.அவள் யார்? நான் யார்? எந்த உறவுமில்லை.அவளின் இரக்கமான சேவையுணர்வு மனதை அழுத்துகிறது.

சிதழ் எல்லாம் வெளிNறியதால் கால் இலேசாக இருக்கிறது,வலி குறைந்திருக்கிறது. வெளியில் வருகிறேன்.மூன்று,நான்கு மணித்தியாலங்கள் உள்ளேயிருந்து வெளியே வெயிலுக்கு வந்ததால் தலைசுற்றுகிறது.கொதிக்கும் வெயிலில் நடக்கத் தொடங்க, நடை தடுமாறுகிறது.இவ்விடத்தில் சடடென்று விழுந்து விட்டால்?

‘யாரோ அனாதை மனிதன் விழுந்து கிடப்பதாக வார்ட்டில் கொண்டுபோய்ப் போட்டு விடுவார்கள்.காலையில் நான் எங்கே போனேன் என்று என் மனைவிக்குத் தெரியாது.இந்த நேரம் என்ன பாடு படுவாளோ? எப்போது வீடுபோய்ச் சேருவேன்’? உள்ள தைரியம் எல்லாவற்றையும் சேர்த்துக் கொண்டு நடக்கிறேன்.மருந்து கட்டிய இடத்தில் கண்ட அந்தப் பெண் எதிர்ப்படுகிறாள்.பாதையைக் கடக்கிறேன்.’நீங்களும் இந்த பஸ் ஹோல்ட்தானா’ நான் ஆம் என்று தலையசைக்கிறேன்.அவளின் அழகிய குழந்தை என்னைப் பார்த்துச் சிரிக்கிறான்.

அவள் கையில் பிஸ்கட் இருக்கிறது. ‘பஸ் இனி வந்து வந்து விடும்’ என்கிறாள்.நான் கடைக்குப்போய் சாப்பிடுவதற்கு ஏதும் வாங்கி வருவததற்கிடையில் பஸ்போய்விட்டால்? நான் நிற்கிறேன்.பஸ் வரவில்லை.அதோ அந்தக் காரில் வருவதுயார்? காலையில் என்னைத் தெரியாதவனாக நடந்து கொண்ட எனது பழைய காலத்து சினேகிதன் இப்போது இவ்விடத்தில் என்னைக் கண்டால் தெரிந்தமாதிரிக் காட்டிக்கொண்டு என்னைக் காரில் ஏற்றிக் கொண்டு போகமாட்டான் என்றே நினைக்கிறேன்.

‘தில்லைநாதன் எங்களின் அந்த இளமை நினைவுகள் மறந்துவிட்டனவா?உன்னுடைய ஸ்டெத்தை உனது இருதயத்தில் வைத்துப் பார்.அது எத்தனையோ கதைகள் சொல்லும்.நீ மாமரத்திலிலிருந்து விழுந்து உனது காலை ஒடித்தபோது நாங்கள் இருவராக உன்னைத் தூக்கிக்கொண்டுபோய் உன்னுடைய வீட்டில் விட்டது ஞாபகமில்லையா? இப்போது நீ ஒரு டொக்டர்,நான் ஒரு நோயாளி,என்னைப் பார்த்தாலே எவ்வளவு ஏலாமையுடன் நிற்கிறேன் என்ற உனக்குத் தெரியும்.’எனது உள்ளம் ஓலமிடுகிறது.

அவன் என்னைக் கண்டுவிட்டான்.கார்கூட என்னை நோக்கி வருகிறது.நான் இப்போதும் அவனைப் பார்த்துச் சிரிக்கிறேன்.’பஸ்சுக்குக் காத்து நின்ற களைத்து விட்டேன்.அந்தக் காலி றோட்டின் திருப்பத்தில் என்னை இறக்கி விட்டால் நான் வீட்டுக்குப் போய்விடுவேன்’.நான் எனக்குள் சொல்லிக் கொள்கிறேன். நான் அவனைப் பார்த்தபடியே நிற்கிறேன்.

மின்னலென ஒரு வேண்டா வெறுப்புச் சிரிப்பு அவன் முகத்தில் தோன்றி மறைகிறது.அவனின் பக்கத்தில் இருப்பவளுக்குத் தெரியாமல்.அவள் யார்? நிச்சயம் அவனின் மனைவியாக இருக்கமுடியாது.பட்டப்பகலில் மனைவியுடன் யாரும் இப்படி நடந்து கொள்ளமாட்டார்களே. யாராயிருந்தாலும் எனக்கென்ன? நான் நிற்க முடியாமல் தவிக்கிறேன்.’ஏற்றிக்கொள்ள மாட்டானா’? என்மனம் ஏங்குகிறது. கார் போய்விட்டது.

கண்கள் இருட்டிக்கொண்டு வருகின்றன. என்ன நடந்தது? நான் மயங்கி விழுந்து விட்டேனா? அந்தச் சிங்களத்தாயும் சேயும் என்னைப் பரிதாபமாகப் பார்த்துக்கொண்டு நிற்கிறார்கள்.என்னையே மாதிரியான ஏழைகள் அவர்கள்.அவள் தந்த காப்பி என்னைச் சிறிது நேரத்தில் எழும்பி நிற்க உதவி செய்கிறது.அவர்கள் யார்? நான் யார்? இருவருக்கும் எந்தவிதமான உறவும் கிடையாது. நாங்கள் ஒரே வர்க்கம். மற்றவர்களின் இலாபத்திற்காக உழைத்து ஓடாய்ப்போகும் வர்க்கம்.என் நண்பன் இப்போது அவனின் பெரிய வீட்டிலிருப்பான்.’அவன் என் நண்பனா?’இல்லை ஸ்டெத் போட்ட உயர்வர்க்கம்.மனித உணர்வின் மறுபக்கம் தெரியாத வர்க்கம்.

(வீரகேசரி-இலங்கை-02.05.1971.சில சொற்கள் மாற்றப்பட்டிருக்கின்றன)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *