கால் கிலோ

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 6, 2021
பார்வையிட்டோர்: 2,448 
 

அதிகாலையிலேயே அந்த ஆலமர, ஆட்டிறைச்சி கடை கூடிவிடும் ஞாயிற்றுகிழமைகளில், அந்த சிறிய கிராமத்திற்கு இதற்க்காகவே சுற்றியுள்ள நகரங்களில் இருந்துகூட வாடிக்கையாளர்கள் வருவார்கள். அங்குதான் கலப்படமில்லாத, ஊறல்போடத இயற்கை எடையுடன் ஆட்டு கறி கிடைக்கும் என்பது நம்பிக்கை. இன்னும் கிராமத்தார்கள் திறன்பட ஏமாற்ற கற்றுக்கொள்ளவில்லையென நினைக்கும் நகரத்தார்களின் அறியாமைகூட அதற்கு காரணமாக இருக்கலாம். அன்றுவரை சில்லறை வாங்ககூட அந்த கடைக்கு ஒதுங்காத, அதே கிராமத்தை சேர்ந்த ஜான், அன்று முதல் ஆளாக நின்றான். ஆனால் மழைகாலமானதால் அன்று சற்று தாமதமாகவே கடை தயாரானது.

அந்த கறிக்கடை பாய் கொஞ்சம் கஞ்சன் தராசை தட்டி தட்டிதான் எடைபோடுவார். அவர் தட்டுற தட்டுல தராசே அவருக்கு சாதகமாதான் எடை காட்டும். இதையறியாத ஜான் அலட்சியமாக, “கால் கிலோ நெஞ்சலும்பு பாய்” னு பணத்தை நீட்டினான். அவரும் ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு “இரு” என சைகை செய்துவிட்டு அப்போதுதான் ஆட்டை அறுக்கவே தயாராகிறார். முதல் ஆளாக வந்த மகிழ்ச்சியில் இருந்தவனுக்கு சிறு ஏமாற்றமாக இருந்தாலும் காத்திருக்க தயாரானவன், போனை நோண்டுகிறான். பாயின் உதவியாளர் “மப்பா இருந்துச்சா அதான் கொஞ்சம் தூங்கிட்டேன்” னு கொட்டாவி விட்டு வேலையை ஆரம்பித்தான்.

ஜான், பத்து WHATS APP STATUS பாத்திருப்பான், அதற்குள் இருபது பேர் சூழ்ந்து விட்டார்கள். நிலைமை புரிந்து “பாய் கால் கிலோ” னு கத்துறான். அவர் பரபரப்பாக தனது வாடிக்கையாளர்களை கவனித்து கொண்டிருக்கிறார். ஜான் கத்தியதை பார்த்து ஏதோ செய்ய முயன்றவர், “காலையில் தினமும் கண் விழித்தால், நான் கை தொழும் தேவதை அம்மா” என அம்மா அழைக்க, அதற்கு சற்றும் பொருத்தம் இல்லாத தொனியில் “என்னம்மா.. இப்போ., எதுக்கு சும்மா சும்மா போன் அடிக்கிற?” னு எரிந்து விழுகிறான். அவன் போன் பேச போனதால், மற்றவர்களுக்கு விநியோகிக்கிறார். மறுமுனையில் இவனை பெற்றவளாயிற்றே “ எப்போ போன நீ?, இவ்ளோ நேரம் என்ன புடுங்கிகிட்டு இருக்கே?…… ” கண்ணா பின்னானு பீப் வார்த்தைகள் கொஞ்சம் சேர்த்து பேசுகிறாள். நிதானித்து ஜான், என்னம்மா ஆச்சு இப்போ? னு கேட்க அவள் எதோ சொல்கிறாள் அதற்கு இவன் “தலைகறிக்கும் தலபிரசவத்துக்கும் என்னமா சம்மந்தம்” என நொந்து கொள்கிறான். கடுப்புடன் போனை கட் செய்கிறான்.

போனை வைத்தவிட்டு கறிக்கடையை பார்க்கிறான், ஈ மொய்ப்பதுபோல் வாடிக்கையாளர்கள் பாயை சூழ்ந்து 2 கிலோ நாலு கிலோனு ஓடிட்டு இருக்கு, ஜானும் எவ்வளோவோ முயன்று பார்த்தான், இறுதியில் கறி கிடைக்கவில்லை, ஏமாற்றதுடன் மற்ற பொருட்களை வாங்கிகொண்டு, “நாமலே, கறி விக்குற விலையில வருசத்துல ஒரு நாள்தான் கறி வாங்க போறோம், அதையும் கெடுத்துட்டாரே இந்த பாய். “ஐயோ! இன்னைக்கு தாய்கிழவி கொல்லத்தான் போறா, நாம ரெகுலர் கஸ்டமர் இல்லன்னு, அந்த பாய் நம்மல கண்டுக்கலையோ?, இல்ல கால் கிலோனு கண்டுக்கலையோ?, அக்கா வேற தலபிரசவத்துக்கு வந்திருக்கு, சரியா கவனிக்கலேன்னு அவங்க வீட்ல கொற சொல்ல போறாங்க என்ன பண்றது” பாய் மீது கடுங்கோவத்துடன் புலம்பிக்கொண்டே வீடு வந்தான்.

ஜானின் தாய், வாசலில் கறியை அலசிக்கொண்டு, “துரை அவ்ளோ பெரிய புடுங்கியா போய்டீங்கலோ,கறியை ஆள் வச்சு கொடுத்து விடறீங்க, ஒரு கிலோ எடயில அவன் கொஞ்சம் ஆட்டைய போடவா”-னு எப்போதும்போல் திட்ட ஆரம்பிச்சுட்டு. ஜானுக்கு ஷாக் ஆயிடுச்சு, என்னடா இது, “கால் கிலோ வாங்கவே காசு இல்ல ஒரு கிலோவா” மனதுக்குள் நினைத்துகொண்டு கசாப் கடைக்கு திரும்பி ஓடுகிறான்.

பாய் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை மூடுகிறார் அவர் உதவியாளர் ஜானை பார்த்து, கிண்டலாக “என்ன தம்பி கால் கிலோ கறி எடை சரியா இருந்துச்சா” ஜான் பாயை பார்த்து முழிக்க “பாயோட கணக்கு எப்போவும் தப்பாது” என்றார் அவர். பாய் எதுவும் பேசவில்லை. ஜான் “எவ்ளோ பாய்” னான். “மொத மாச சம்பளம் வாங்கி கொடு, இப்போ வேணாம் போ” –என்று, ஆட்டுகால் நாலு கொடுத்து அனுப்பினார் பாய்.

அப்பா இல்லாத அந்த குடும்பத்தையும், அவன் படும் கஷ்டத்தையும் நன்கு அறிந்த அந்த பாயை பற்றி அவனுக்கு தெரியாமல் இருந்தது வியப்புதான்.

“கசாப் கடையிலும் கருணை மலரும்”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *