நண்பனைத் தேடி…

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 7,253 
 
 

தேர்தல் களப்புழுதி அடங்கி ஓய்ந்திருந்தது. மக்கள் பிரதிநிகளில் சிலர் அமைச்சர்களாகவும் பிரமாணம் எடுத்துக் கொண்டிருந்தனர். கட்டையும் குட்டையுமாய் மூன்று நான்கு “மாண்புமிகு’க்கள். வழுக்கையும் தொந்தியும் பெரும்பாலானோரை அலங்கரித்திருந்தாலும் ஒரு முகம் மட்டும் தொலைக்காட்சித் திரையில் அதிக பரிச்சயத்தைக் காட்டியது. மனதில் லேசான உறுத்தல். வாசன் பெயர் பட்டியலைத் தேடினார். அப்படி இருக்கலாமோ…?

இளவழகன், மலைநம்பி, மறைமதி, அருட்செல்வம்…பட்டியல் நீண்டு கொண்டிருந்தது. அவர் எதிர்பார்த்த “ராமசுப்பு’ என்கின்ற அந்த இராம சுப்பிரமணியன் ஏதாவது தூய தமிழ்ப் பெயர் ஒன்றில் ஒளிந்திருக்கலாம். முப்பது ஆண்டுகளுக்கு முன் பள்ளியில் பார்த்த முகம். ஒருவரிடம் அந்தச் சாயல் இருந்ததென்னவோ நிச்சயம்.

நண்பனைத் தேடிசின்ன வயசில் ராமசுப்பு அடிக்கடி சொல்வான்… (சொல்வார்) “”தூய தமிழ்ப் பெயரா இருக்கணும் சீனிவாசா! நேரம் வரும்போது மாத்திக்கணும்”

பள்ளியில் படிக்கும்போது ராமசுப்பு, மாணவர் குழுவின் தலைவன். பெரிய வகுப்புகளில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள். கூடப் படித்த கோகுல கண்ணன்களுடன் வயது முதிர்ந்த குசேலனாய்த் திகழ்வான். ஆனால் பேச்சுப் போட்டிகளில் மட்டும் எப்போதும் முதல் பரிசு. அரசியலில் இருக்கத் தேவையான தகுதிகள் அவனிடம் இயற்கையாகவே குடிகொண்டிருந்தன.

“பிறர் மனை நோக்காத பேராண்மை கொண்டவனையும் இளமை, அழகுடன், காதல், வீரம் என வாழ்வுக்கு இலக்கணம் வகுத்த தமிழ்க் கடவுளையும் சேர்த்து பெயராகக் கொண்ட இராம சுப்பிரமணியனாகிய நான்…’

பேச்சுத் தொடக்கமே வந்தோரை இருக்கையில் எழும்ப வைக்கும்.

அரசியல் நுழைவு ஒருவேளை ராமசுப்புவிற்கு விதிக்கப்பட்டிருந்ததோ…? “விளையும் பயிர் முளையிலே’ன்னு தமிழ் ஆசிரியர் அப்போது சொல்லிக் கொடுத்தது புரிந்ததில்லை. இப்போது ஓர் எடுத்துக்காட்டுடன் புரிகிறதோ…?

வாசன் மனைவியிடம் தனது ஊக்கத்தையும் நம்பிக்கையையும் பகிர்ந்து கொண்டார்.

“”என்னங்க! சரியாப் பாருங்க! உங்ககூட கிராமத்தில படிச்சவங்க யாருங்க இந்த மாதிரி வர முடியும்…?”

வாசனையும் சேர்த்து அவள் அனுமானம் அவ்வளவுதானோ என்னவோ?

“”அடுத்த மாசம் எப்படியும் அந்த ஊரைத் தாண்டித்தான் குல தெய்வம் கோயிலுக்குப் போகணும். அப்ப தெரிஞ்சுகிட்டாப் போச்சு…”

சுருக்கமாக வாசன் முடித்தாலும் மனம் நிலை கொள்ளவில்லை. சிந்தனை தொடர்ந்தது.

சின்ன வயதில் வாசனுக்கும், வாசன் நண்பர்களுக்கும் ராமசுப்பு அறிமுகமானதே ஓர் இக்கட்டான சூழ்நிலையில்தான். வசித்த கிராமத்தில் உயர்நிலைப்பள்ளி இல்லை. பக்கத்து கிராமத்துக்கு ரயிலில் சென்று படிக்க வேண்டிய கட்டாயம். விடிகாலை சென்று இருள் கவிழ்ந்ததும் திரும்ப வேண்டிய நிலை. தொடக்கத்தில் ரசிக்கும்படியாக இருந்தாலும் வயதும் வகுப்பும் ஏற ஏற சீக்கிரம் வீடு வர மாட்டோமா? என்ற ஏக்கம் அவர்களை வாட்டியது. காலையில் கொஞ்சம் தாமதமாகக் கிளம்பினால் வசதியாக இருக்கும் என்று தோன்றியது. இரண்டாவது ரயிலுக்கு ஏற்றபடி தலைமை ஆசிரியர் பள்ளி நேரத்தை மாற்ற வேண்டும். சனிக்கிழமை முழு நேரம் வரும் மனநிலையிலும் கூட இருந்தார்கள்.

எவருக்கும் துணிவில்லாதபோது பூனைக்கு மணி கட்ட ராமசுப்புதான் சென்றான். தலைமை ஆசிரியர் வழக்கம்போல் ஓர் ஆசிரியர் குழாமை முன்னால் நிறுத்தியிருந்தார்.

“”நேரத்தைக் கொஞ்சம் மாத்தினா உங்களுக்கும் நேரம் விரையமாகாது…நீங்களும் சாயந்திரம் ரயில் வரும் வரைக்கும் பள்ளிக்கூடத்திலேயே இருக்கீங்க. இல்லைன்னா கடைத் தெருப்பக்கம் போறீங்க. உங்க குடும்பத்தோட இருக்க அதிக நேரம் கிடைக்கும். மறுநாளைக்கு எங்களுக்குப் பாடம் தயார் செய்திட்டு வர போதிய அவகாசம் கிடைக்கும்…”

ராமசுப்பு மாணவர்கள் விருப்பத்தைவிட ஆசிரியர்கள் செüகர்யத்தைப் பற்றி அதிகம் பேசினான். அவர்களும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டார்கள். அவர்களில் பாதிப்பேர் ரயிலில் வருபவர்கள். தலைமை ஆசிரியர் மாணவர்கள் பரிந்துரைக்குப் பணிய நேர்ந்தது. வாக்கு சாதுர்யம் என்றால் என்னவென்று வாசனும் நண்பர்களும் புரிந்து கொண்டார்கள்.

ஆண்டுதோறும் பக்கத்துப் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா நடக்கும். பெயருக்கு ஆண்கள் பள்ளிக்கு அழைப்பு வந்திருந்தது. இயற்கையான ஈர்ப்பில் உயர் வகுப்புப் பையன்களுக்குச் சென்று பார்க்க ஆசை. தலைமை ஆசிரியர் மறுத்துவிட்டார். ராமசுப்புதான் முனைந்து அனுமதி வாங்கி, ஆனால் உத்திரவாதி ஆனான்.

“”வாசா! திருமலை! பழனி! நீங்களும் இன்னும் பத்து பேரும் கைகோர்த்துச் சங்கிலியாய் முன் வரிசையில நில்லுங்க. உங்களைத் தாண்டி யாரும் மைதானம் பக்கம் போகக்கூடாது.

சத்தம் போட்டு விளையாடுறவங்கள நாகரிகமா ஊக்கப்

படுத்தலாம்”

நிகழ்ச்சி முடியும் வரை மைதானத்தை ஒட்டி ராமசுப்பு ஒரு வேலியாய்ப் படர்ந்தான். யார் யாரிடம் எந்த வேலை தந்து குழுவாக பிரகாசிக்கலாம் என்பதெல்லாம் ராமசுப்புவிற்கு அத்துப்படி. பையன்களது கைதட்டலுக்கும், நடத்தைக்கும், ஒழுக்கத்திற்கும் இறுதியில் பெண்கள் பள்ளி தலைமை ஆசிரியை ஒலி பெருக்கியில் சான்றிதழ் வழங்கினார்.

கணக்கு ஆசிரியர்களிடம் மாணவர்களுக்கு எவ்வளவு அச்சமோ அவ்வளவு மரியாதையும் உண்டு. ரத்தப் புற்றுநோய் காரணமாக கணித ஆசிரியர் பாஸ்கரன் இறந்தபோது அதிகம் அழுதது ராமசுப்புதான். அவர் குடும்பத்துக்கு அவர் இறந்த பத்து நாள்களுக்கு தேவையான சேவை அனைத்தையும் செய்ததும் அவன்தான். தலைமை ஆசிரியருக்குச் சொல்லி இரங்கல் கூட்டம், பள்ளிக்கு விடுப்பு, அத்தனை மாணவர்களின் கையெழுத்துடன் அந்தக் குடும்பத்திற்கு இரங்கல் செய்தி…

ராமசுப்புவின் மனமும் உடலும் ஒன்றாக இயங்கும்.

யார் மூலமாக ஒரு பரிந்துரையை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதும் ராமசுப்புவிற்கு கை வந்த கலை. தினந்தோறும் இறை வணக்கத்தின்போது திருக்குறளும் ஒலிக்க வேண்டும் என்பது ராமசுப்புவின் அவா. இருந்ததில் அதிக வயதான தமிழ் ஆசிரியர் மூலம் அதை தலைமை ஆசிரியரிடம் எடுத்துச் சென்றான். தமிழ் ஆசிரியர்தான் மன்றாடினார். நேரம் காரணமாக முதலில் தயங்கிய தலைமை ஆசிரியருக்கு இறுதியில் அனுமதிப்பதைத் தவிர எந்த வழியும் தெரியவில்லை. மறுநாள் காலையில் “உருவுகண்டு எள்ளாமை வேண்டும்…’ என ராமசுப்புவின் குரல்தான் முதலில் ஒலித்தது. அவனது உருவத்தைக் கேலி செய்தவர்களுக்காக இருக்கலாம். தமிழ் ஆசிரியர் பெருமிதத்துடன் பார்க்க, தலைமை ஆசிரியர் சுப்புவின் பேச்சு நீளுவதைக் கண்டு கையைப் பிசைந்து கொண்டிருந்தார்.

பள்ளிக்கூடத்தோடு மட்டும் ராமசுப்புவின் பணிகள் அடங்கிவிடவில்லை. கிராமத்துத் தெருக்களில் விநாயக சதுர்த்தியோ, உறியடியோ, பொங்கல் விழாவோ…எதுவாக இருந்தாலும் சரி, ராமசுப்புவின் பங்கேற்பு அவசியம் இருக்கும். முச்சந்தியில் ஒருமுறை பண்டிகை தினத்தன்று மடிச்சுக் கட்டிய வேட்டியும் துண்டுமாய் பந்தலில் தோரணம் கட்டிக்கொண்டிருந்தான். கிராமத்துப் பெரியவர் ஒருவர்,””என்ன சுப்பு! பெரிய மனுசன் ஆயிட்டியா?”

என்று கேட்டார்.

“”வயசானவங்கள எங்க மதிச்சுக் கூப்பிடுறீங்க…! அதனால்தான் நான் வந்தேன்!”

ராமசுப்புவின் பதில் பளிச்சென்று திரும்பியது.

காரணம் இருந்தது. ராமசுப்புவின் அப்பா வயதானவர். கிராமத்து ரயில் நிலையத்தில் ஒரு சின்ன ஸ்டால் போட்டு வடை, மிக்சர், காப்பி என்று விற்றுக் கொண்டிருந்தார். மாலை கிராமத்து மூலையில் அவருக்குச் சொந்தமான பஜனை மடத்தில் அவ்வப்போது பஜனைகளும் செய்வதுண்டு. அவர் விநியோகிக்கும் பிரசாதத்திற்கு முண்டியடிக்கும் கும்பல். ஆனால் அவரை எந்த விழாக்களுக்கும் அழைத்து கெüரவித்ததில்லை.

அன்று வீட்டிற்குத் திரும்பிய ராமசுப்பு தகப்பனாரிடம் கண்டிப்பாய்ச் சொல்லிவிட்டான், “”அப்பா! நீங்க இனிமே எதையும் விக்க வாங்கன்னு போக வேண்டாம். பஜனையோட நிறுத்திக்கோங்க! சம்பாதித்தது போதும். மிச்சத்தை நான் பார்த்துக்கறேன்”

கடமையையும் சரி, கெüரவத்தையும் சரி, ராமசுப்பு என்றும் கை கழுவியதேயில்லை!

ராமசுப்புவின் வீட்டுப் பின்னால் பெரிய வாய்க்கால், அதை ஒட்டி விவசாய நிலங்கள். ஞாயிற்றுக்கிழமை களத்து மேட்டில் நின்றபடி ராமசுப்பு கவனிப்பான். கிரிக்கெட், கால்பந்து என்று எதுவும் அவனை ஈர்த்தது கிடையாது. சமயத்தில் நீர்ப்பங்கீட்டை மத்யஸ்தமும் செய்வான். நிலைமை முற்றினால், அறிவு ஜீவி பண்ணையார்கள் “இரிகேஷன் குமாஸ்தாவைக் கூப்பிடலாம்’ என்பார்கள். ராமசுப்பு தலையிட்டு,””இந்த சின்ன விஷயத்துக்கு வாய்க்கால் மணியக்காரர் எதுக்கு? நாமளே பேசி முடிவுக்கு வந்துடலாம்” என்பான்.

சுமூகத் தீர்ப்புக்கு வழி காண்பதும் ஜனரஞ்சக மொழி பேசுவதும் ராமசுப்புவின் அடித்தளங்கள். அவன் வயதைவிட அவன் தோரணைக்கும் முனைப்பிற்கும் அதிக மரியாதை கிடைக்கும்.

வாசனுக்கு விடுப்பு கிடைப்பதற்குள் போதும்போதும் என்றாகிவிட்டது. வடக்கிலிருந்து ஊர்பக்கம் வர ஒருநாள் பயணம். குடும்பத்தோடு கடைசியாக எப்போது வந்தோம் என்றே வாசனுக்கு ஞாபகம் இல்லை. மறுநாள் வளர்ந்த ஊர்பக்கம் நெருங்க,நெருங்க நெஞ்சம் தடக் தடக் என்று அடித்துக்கொண்டது.

பள்ளிக்கூடம் முடிந்ததுமே ஏதோ கட்சியில் சேர்ந்து இளைஞர் அணியில் ராமசுப்பு இருந்ததாகக் கேள்விப்பட்டார். அப்புறம் ஒரு செய்தியும் இல்லை. அவரும் கவலைப்பட்டதுமில்லை. “”என்ஜினியரிங் படிச்சு என்னத்தைக் கண்டோம். பொழுது விடிஞ்சா மன உளைச்சல், பரபரப்பு…வேலை பிடிக்கலைன்னா தனியார் துறையிலேயே நாலைஞ்சு வருடத்திற்கு ஒரு மாற்றல். என்ன வாழ்க்கை”

வாசன் நொந்துகொண்டார்.

சின்ன வயசில ராமசுப்புவிற்குப் கொஞ்சம் போராட்டங்கள் இருந்திருக்கலாம். அப்புறம் எம்.எல்.ஏ. எத்தனை முறையோ? இப்ப அமைச்சர்னா வீடு, கார், சுழல்விளக்கு, பின்னால மத்திய மந்திரி சபைக்குக்கூட ராமசுப்பு மாதிரி ஆட்கள் போகலாம். ஏன்? மத்தியில கூட்டணி ஆட்சியா இருந்து சச்சரவு வந்தா கொஞ்ச நாளைக்குப் பிரதமராகக் கூட உட்காரலாம்.

வாசன் மனதில் பொறாமை மெதுவாக எட்டிப் பார்த்தது. ஜன்னல் வழியே வெளியே பார்க்க முயன்றார்.

பச்சைப்பசேல் என்று வழி முழுவதும் தெரியும் இடங்களை, காங்கிரீட் சுவர்கள் இப்போது மறைத்து இருந்தன. நிலையத்தில் வண்டி நின்றபோது பையனை நூறு ரூபாய் நோட்டுடன் இறக்கிவிட்டார். “”இந்த ஊர்ல வடை, மிளகு வடை, முறுக்கு, அந்த காலத்துல ரொம்ப ஃபேமஸ். பாத்து வாங்கிண்டு வா! நான் கீழ இறங்கி தெரிஞ்ச முகம் ஏதாவது இருக்கான்னு பார்க்கிறேன். வண்டி ரொம்ப நேரம் நிக்காது”

வாசனும் இறங்கினார்.

அங்கொன்றும் இங்கொன்றுமாய் அந்தக் காலத்தில் பயணிகள் தெரிவார்கள். இன்று பிளாட்பாம் முழுதும் நிறைந்திருக்கிறார்கள். ஊர்க்கோவிலுக்கு முடி காணிக்கை தந்து விட்டுப்போகும் பக்தர்கள் இப்போது இல்லை. பெருமூச்சு விட்டார்.

“”இந்த வண்டிக்கின்னே போட்ட புது சரக்கு சார்! மிளகு வடை வாயில கரையும். தட்டைன்னும் சில பேர் சொல்லுவாங்க. முறுக்கில இந்த ஊர்த் தண்ணியோட மகிமை தெரியும். வடையும் சட்னியையும் உங்க ஊர் போய்ச் சேர்ற வரைக்கும் மறக்கமாட்டீங்க…”

மூன்று பக்கங்களையும் கண்ணாடியால் அடைத்த பெட்டி. மேற்புறம் வலை போட்டு மூடியிருந்தது. அதில் சுகாதாரமாக பண்டங்களை வைத்து விற்று வருபவர் பக்கத்துப் பெட்டியருகே நேர்த்தியாக முழங்கிக்கொண்டிருந்தார். அவரைச் சுற்றி கூட்டம் பணத்துடன் மொய்த்தது.

குரல் அடையாளம் தெரிய திடுக்கிட்டு வாசன் வண்டியில் ஏறிப் பார்த்தார்.

சந்தேகமேயில்லை! ராமசுப்புதான்!

முகத்தில் கண்ணாடியும், கழுத்தில் துளசி மாலையும் ஏறியிருந்தன. கைகள் லாகவமாக பொட்டலங்களை மடித்து சில்லறையை எண்ணிக்கொண்டிருந்தன. சத்தம் போடாமல் வந்து இருக்கையில் அமர்ந்துகொண்டார்.

“”என்னங்க, யாரையும் எதுவும் கேட்கலையா?”

சகதர்மினி வினவினாள்.

“”ஊருக்குப் போய் லெட்டர் எழுதிப் பார்க்கலாம். ஃபோன் நம்பர் கிடைச்சா விசாரிக்கலாம்”

வாசனுக்கு வேறு எதுவும் மனைவியிடம் சொல்ல விருப்பமில்லை. ராசுப்பு அவர் மனதில் மறுபடியும் பழைய பள்ளித் தோழனாய் மாறிக்கொண்டிருந்தான்.

– சீதாராம் (மார்ச் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *