நடைபாதை வாழ்வு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 13, 2016
பார்வையிட்டோர்: 6,590 
 
 

அது நகரத்தின் மிகப் பிரதானமான சாலையில் அமைந்துள்ள ஒரு கட்டிடம். பார்க்கவே நல்ல பணக்காரக் களையுடன் புதிதாக வண்ணம் அடிக்கப்பட்டு விளங்கியது. வாசலில் சிவப்பு வண்ண கூண்டுக்குள் வட இந்திய வாயிற்காவலர், பச்சை நிறச் சீருடையில் ஜாவ், ஜாவ் என்றபடி பிளாட்பாரத்தில் நிற்பவர்களைக் கூட அதிகாரமாகத் துரத்திக்கொண்டிருந்தார். அடிக்கடி பல வகையான கார்களில் அலங்காரமாக நடுவயது பணக்கார பெண்மணிகள் வந்த வண்ணம் இருந்தனர். எதிரே பிளாட்பாரத்தில் பக்கத்து மதில் சுவற்றில் ஒரு புறமும், சாலையில் மறுபுறமும் ஆக சாய்வாக கட்டப்பட்ட பழைய நடந்து முடிந்த திருமணத்தில் வைக்கப்பட்டிருந்த ஃப்ளெக்ஸ் பதாகையை கூரையாக வைத்துக் கட்டப்பட்ட குடியிருப்பு. எதிரே வந்து போகும் கார்களையும் , அதிலிருந்து இறங்கி நடந்து கம்பீரமாக ஆங்கிலத்தில் பேசியபடி செல்லும் பெண்மணிகளையும் வேடிக்கை பார்த்தபடி இருந்தாள் ரோசம்மா.

சின்ன வயதில் இந்த கட்டிடத்திற்கு வரும் பெண்களைப் போல மதிய வேளைகளில் கற்பனை செய்து கொண்டு தனக்குத்தானே தஸ், புஸ் என்று ஆங்கிலத்தில் பேசுவதாக கற்பனை செய்து விளையாடுவாள். அப்பன் மாரி அம்மா இருவரும் வேலைக்கு போய்விட்டால் அவளுக்கு பொழுது போக்கே இதுதான்.

மாரிக்கு சால்ட் குவார்ட்டஸ்சில் மூட்டை துக்கூம் கூலி வேலை. அம்மா செல்விக்கு மார்க்கெட்டில் பூக்கட்டி தரும் வேலை. பெரிய பூக்கடையில் அவளைப்போல் இருபது இருபத்தைந்து பேர் பூக்கட்டுகிறார்கள். சின்ன வயதில் வால்டாக்ஸ் ரோடு கொண்டித்தோப்பில் வீடு. வீடு இதே போல பிளாஸ்டிக் ஷீட் மறைப்புத்தான்.

அங்கே மாரி சைக்கிள் ரிக்சா இழுத்துக்கிட்டிருந்தான். இப்பொவெல்லாம் யார் சைக்கிள் ரிக்சாவில் பயணம் செய்கிறார்கள். கறிகடையிலிருந்து கறி ஏற்றி வரக் கூட மீன்பாடி வண்டிதான். தொழிலை மாற்ற ரிக்சாவை விற்று கிடைத்த பணத்தை வைத்து கூட கொஞ்சம் காசு கடன் வாங்கி சால்ட் குவார்ட்டஸ் சுமைதூக்குவோர் சங்கத்தில் உறுப்பினர் ஆகி விட்டான். ரோசம்மா பிறந்தபின் அவளை கரையேற்ற காசு வேண்டும் என்பதால் செல்வியும் பூக்கடை வேலைக்கு வந்து விட்டாள். அப்படி இப்படி போலீசுக்கு, ரவுடிகளுக்கு இப்படி பயந்து பயந்து ஜீவனம். திடீர் திடீரென்று பிளாட்பாரத்தை விட்டு துரத்துவார்கள். கையில் கிடத்தவற்றை எடுத்துக்கொண்டு தொலைவாகப் போய் இருந்து விட்டு மீண்டும் பழையபடி வர வேண்டும். எல்லாம் பத்திரிக்கைகள் போட்டோ எடுக்கிறவரைதான்.

ரோசம்மாவை பக்கத்து கார்போரேசன் பள்ளியில் சேர்க்கப் போனால் அது என்னவோ சாதி சான்றாமே அதுவும் வருமானச் சான்றும் கேட்டார்கள். மாரிக்கு சாதி எல்லாம் தெரியவில்லை. அதை தெரியவைக்கும் முன்பே 1962 இல் அவனது பெற்றோர் காரனமின்றி குடிசைகள் எரிந்தன அல்லவா, அப்போது தீவிபத்தில் இறந்து போய் விட்டனர். அப்போது அவனுக்கு வயது ஆறு. அப்புறம் காட்டுச் செடியாக எப்படி எப்படியோ தானே வளர்ந்தான். அதெல்லாம் பெரிய கதை. 2000 வாக்கில் கட்டிட காண்டிராக்டரிடம் எடுபிடியாக வேலை பார்த்தபோது அங்கு சித்தாளாக தன்னைப்போல ஆதரவற்ற செல்வியை பாடிகார்ட் முனீஸ்வரன் கோவிலில் வைத்து தாலிகட்டி கல்யாணம் செய்து கொண்டான். இருவருக்குமே சாதியில்லாம் கிடையாது, தெரியாது. அப்படிப்பட்டவனிடம் சாதியைச் சொல் அல்லது முழுக் கட்டணம்தான் என்றது பள்ளி நிர்வாகம்.

வெறுத்துப் போன அவன் ரோசம்மாவை பள்ளிக்கு அனுப்பவில்லை. இப்பொழுது ரோசம்மாவுக்கு வயது பதினான்கு. காலையில் வேலைக்குப் போனால் பொழுதுபோன பின்புதான் முதலில் செல்வியும் அப்புறம் மாரியும் வருவார்கள். மாரி குடிகாரன் இல்லை. ஆனாலும் உடம்பு வலிக்காக கொஞ்சம் சாராயமோ, மதுவோ சாப்பிட்டு வருவது வழக்கம். செல்வி வரும் போதே அரிசியும் கொஞ்சம் காயும் வாங்கிவந்தால் அன்று அரிசிச் சோறும் சாம்பாரும். இல்லாவிட்டால் ஆளுக்கு இரண்டு பன்னும் டீயும் தான்.

இப்படி வாயைக்கட்டி வயத்தைக்கட்டி இருபதாயிரம் ரூபாய் சேர்த்துவிட்டாள். அந்த மறப்புக் குடிசையின் சுவற்றில் மாட்டியுள்ள மஞ்சள் பையில்தான் அதை பத்திரப் படுத்தியிருந்தாள். இன்னும் ஒரிரு வருசத்தில் ரோசம்மாவை நல்ல மாப்பிள்ளை பார்த்து கட்டிக் கொடுக்கணும்.ரோசம்மாவும் கஷ்டம் தெரிந்த புள்ளைதான். தனக்கு வேண்டியதை வாங்க, புரசைவாக்கம் பக்கத்தில் ஒரு பணக்காரங்க வீட்டில் வீட்டு வேலை செய்து சம்பாதித்துக் கொள்ளுகிறாள்.

ரோசம்மாவின் மறைப்புக்கு எதிரே இருந்த முன்னால் சொன்ன கட்டிடத்தில் இருந்து இயங்கிக் கொண்டிருந்தது ஒரு மகளிர் சங்கம். கோடீஸ்வர்களின் பொழுது போகாத மனைவிமார்கள் சேர்ந்து நடத்தும் சங்கம். இன்று அங்கே மகளிர் தினம் கொண்டாடுவது பற்றிய விவாதக் கூட்டம். உழைக்கும் மகளிரை எப்படி கவுரவிப்பது என்பதை ஆராய கூட்டம் தலைவி திருமதி. அகிலா தலைமையில் கூடியது.

தொழிலதிபர் சிவாவின் மனைவிதான் அகிலா.மகளிர் தினம் கொண்டாட இந்தமுறை மகளிர் நல அமைச்சரை அழைக்க வேண்டும் என்பதில் எல்லோருக்கும் உடன்பாடுதான். அகிலாவின் சமீபத்திய வெளிநாட்டுப் பயணம் பற்றிய புராணங்களை வெளியில் தெரியாமல் கொட்டாவி விட்டபடி கேட்ட உறுப்பினர்கள் வாய் மட்டும் நைஸ் ஜீ, இண்ரெஸ்டிங்க் ஜீ என்றபடி இருந்தது.

அகிலாவை மட்டம் தட்ட முயலும் கும்பல் ஒன்றும் அதில் உண்டு. அது தொழிலதிபர் ஆனந்தனின் மனைவி திவ்யா. எதாவது குறை சொல்ல வேண்டியதன் கட்டாயம். ஆகவே சங்க கட்டிடத்திற்கு எதிர் வாடையில் இருக்கும் அந்த அசிங்கம் பிடித்த மறைப்பு குடியிருப்பு பற்றி புகார் சொல்ல அதை அவர் ஆதரவாளர்கள் பிடித்துக் கொண்டனர். இந்த குடிசைகளை அப்புறப் படுத்த வேண்டியதன் முக்கியத்துவம் விவாதப் பொருளானது. அகிலா எந்த முயற்சியும் இவ் விஷயத்தில் எடுக்கவில்ல என்று குற்றம் சாட்டப்பட்டது. அகிலா தான் வெளிநாடு சென்றிருந்ததால் இந்த சுணக்கம் என்றதும், அப்போது வெளிநாடு அடிக்கடி செல்லாத தலைவரை தேர்ந்தெடுப்போம் என்றதும் நிலைமை சிக்கலானது.

சிக்கலை தீர்க்க உடனே மாநகர கமிஷ்னர், அமைச்சர், காவல் துறை என்று தொலைபேசியில் தொடர்பு கொள்ளப்பட்டனர். விழாவிற்கு முன் எல்லாம் சரி செய்யப்படுமென்று உறுதிமொழி தரப்பட்டது. அகிலா அம்மையாருக்கு மூச்சு வந்தது. அடுத்தது விழாவிற்கு கூட்டம் சேர்ப்பது சம்பந்தமாக ஏஜென்சி தொடர்பு கொள்ளப்பட்டது. அவர்களின் முகவர் உடனே வந்தார். 500 நபர்களுடன் கூட்டம் ஏற்பாடு செய்ய 5 லட்சம் செலவழிப்பது என்று முடிவானது. இதற்கான ஸ்பான்சர்களை அமைச்சரின் கடைக்கண் பார்வையை எதிர் நோக்கியுள்ள தொழிலதிபர்களிடம் தொலை பேசியில் தொடர்பு கொண்டு அடுத்த ஒரு மணி நேரத்தில் அகிலா பெற்றுவிட்டார். உடனே ஆனாலும் நம்ம பிரிசிடெண்ட் மாதிரி சாமர்த்தியம் யாருக்கும் வராது என்று திவ்யா கோஷ்டியின் மூக்கை அகிலா கோஷ்டியினர் உடைத்தனர்.

கூட்டம் இனிதே முடிந்தது. மறுநாள் காலையில் ஐந்து மணிக்கே வழக்கம் போல மாரியும், செல்வியும் வேலைக்குப் போய் விட்டனர். ஏழு மணிக்கு ரோசம்மா வீட்டு வேலைக்கு கிளம்பும் முன் அதிரடியாக ஏதோ கலவரத்தை அடக்க வருவது போல இருபது காவலர்களுடன் ஒரு காவல்துறை வாகனம் வந்தது. கையில் வாக்கி டாக்கியுடன் ஜீப்பில் இருந்தபடி அதிகாரி யாரிடமோ எஸ் சார், எஸ் சார் ஓகே சார் என்று பேசிக்கொண்டிருந்தார்.

ரோசம்மாவிற்கு ஒன்றும் புரியவில்லை. அங்கே வந்த காவலர்களில் ஒருவரைக் கேட்டபோது எங்கிரோச்மென்ட் எவிக்சன் என்றார். அது எதுவும் புரியவில்லை. அவள் காதில் எவிக்சன் என்பது எலக்சன் என்று கேட்டதில் மனது சமாதானம் ஆனது. அந்த பகுதியில் ஒரே மறைப்புக் குடிசை மாரியின் குடிசை ஒன்றுதான். வேறு எதுவும் இல்லை. பக்கத்து கார்பொரேஷன் கழிவறைக்கு நடந்து போய் எல்லாம் முடித்துக் கொண்டு திரும்ப தன் மறைப்புக் குடிசைக்கு வந்தாள்.

அந்த சுவற்றில் ஆணியில் மாடியிருந்த பையில் கை விட்டு ஸ்டிக்கர் பொட்டு வைத்துக் கொண்டு பல் போன சீப்பால் தலையை சீர் செய்து கொண்டு சுமாரான ஒரு பழைய சுடிதாரை மாற்றிக்கொண்டு புரசைவாக்கம் கிளம்ப தயாரானபோது, மற்றொரு ஜீப் வந்தது. இதில் வந்தவர்கள் காக்கி சட்டை அணிந்திருக்கவில்லை. வந்தவர்கள் போலீஸ் ஜீப்பை நோக்கிச் சென்றனர். எதோ பேசினார்கள்.

அடுத்த சில நிமிடங்களில் ஆறு, ஏழு பெண் போலீசார் ரோசம்மாவின் கையைப் பிடித்து வெளியே இழுத்தனர். ஆண் போலீசார் அந்த மறைப்பை அகற்றினர். சுவற்றில் மாட்டியிருந்த பையை எடுத்து தூக்கி எறிந்தனர். பையில் செல்வி, ரோசம்மா திருமணத்திற்கு சேர்த்திருந்த இருபதாயிரம் பணம் இருந்தது. அது சில்லறையும் நோட்டுகளுமாக கீழே சிதறி விழுந்தது.பத்திரிக்கை நிருபர்கள் படம் எடுத்துக் கொண்டனர். ரோசம்மாவை கதறக் கதற போலீஸ் வண்டியில் ஏற்றியது. சைதாப்பேட்டை சிறு குற்றவியல் கோர்ட்டில் ஆஜர் செய்தது. ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது மூன்று மாத சிறை என்ற தீர்ப்புப்படி பணம் கட்ட முடியாமல் சிறைக்குப் போனாள் ரோசம்மா.

மாலை வந்த செய்தித்தாளில் சென்னையில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம். அகற்றும் பணி நடக்கும் போது கிடைத்த பையில் கேட்பார் அற்றுக் கிடந்த ரூபாய் ஐந்தாயிரம் அரசுக்கணக்கில் சேர்க்கப்பட்டது என்று வந்த செய்தியை பொதுமக்கள் பெரிதும் பாராட்டி முகநூலில் பதிவிட்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *