தோப்புத் தெருவும் ஆலமரமும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 10,763 
 
 

இன்னமும் சில விஷயங்கள் ஞாபகத்திலிருந்து மறையவில்லை. முதன் முதலாய் அந்தப் பள்ளிக் கூடத்தில் அடியெடுத்து வைத்தது. பழைய வீட்டிலிருந்து ஏழு கிலோமீட்டர் தூரம். நானும் தம்பியும் பஸ்ஸிலேறித் தோப்புத் தெருவிலிருந்து இறங்கி பதினைந்து நிமிடம் நடந்து பள்ளிக்குச் செல்ல வேண்டும். ஊரின் எல்லையில் அமைதிச் சூழலில் சுற்றிலும் மணல் வெளியின் நடுவில் கூரை வேய்ந்த பள்ளிக்கூடம். ஒரு வகுப்புக்கும் மற்றொரு வகுப்புக்கும் நடுவில் தட்டிகள் தடுப்புச் சுவர்கள் . இவற்றைக் கடந்து பெரிய ஆலமரம். மயில் தோகை விரிந்த சாயலில்.கோட்டைச் சுவர்களாக விழுதுகள். அத்தனைப் பிள்ளைகளையும் தத்தெடுத்த தாயாகி.

மதியம் எல்லாப் பிள்ளைகளும் வீட்டில் சூடாய்ச் சாப்பிட்டுவரும்.நாங்கள் மட்டும் ஏக்கத்தில்!. அம்மாவுக்கு முடியவில்லை . எங்களுக்குத் தனியாக சமைத்துக் கொடுக்க. அப்பாவுக்கு ஷிப்ட் . சில சமயம்அப்பா எங்களுடன் வந்து இறங்கி வாடகை சைக்கிளில் கூட்டிச் சென்று விட்டதுண்டு. தம்பிதான் ரொம்பவும் அழுவான். நான் மூன்றாம் வகுப்பு. அவன் இரண்டாம் வகுப்பு.

அவனுக்குப் புதுப் பள்ளிக்கூடம் பிடிக்கவில்லை. எனக்கும் அப்படித்தான். ஆனால் சொந்த வீடு கட்டி வாழ்வதே அப்பாவின் லட்சியம். அம்மாவும் மறுப்பு சொல்ல வில்லை. ஒட்டுக் குடித்தனத்தில் ஓட்டு வீட்டில், குழாயடித் தண்ணீருக்கும், கூட்டு வண்டி விறகு வாங்குவதற்கும் .கூவி விற்கும் காய்கறிக்கும் தடைப் போட்டு விட நினைத்தாள்

அதன் முதல் படிதான் எங்கள் பள்ளிக் கூட இட மாற்றம்.

ஒரு விஷயம் சொல்லியே ஆகவேண்டும். முன்பெல்லாம் எங்கள் வீட்டில் விறகடுப்பு தான். வாரத்தில் மூன்று நாள் விறகடுப்பில் சமையல். மீதி நாள் நாடார் மரக்கடையில் நாலணாவிற்கு மரத்தூள் வாங்கி மர அடுப்பில் சமையல். பாவம் அம்மா ரொம்பத்தான் கஷ்டப்பட்டு விட்டாள். எனக்கு நினைவிருக்கிறது அப்பொழுதெல்லாம் மின்விளக்கு கிடையாது.அரிக்கேன் லைட், சீமெண்ணெய் விளக்குத்தான் உண்டு. தெருவின் நடுவில் விளக்கு ஏற்றி வைத்து ஆறரை மணிக்கு மேல் விற்பனை ஆரம்பிக்கும். அத்திப் பூத்தாற்போல் தான் சினிமா. ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லி அம்மா சினிமாவிற்குப் போக விடாமல் செய்து அந்தப் பணத்தில் சில சமயம் விறகு வாங்குவாள். ஒவ்வொரு சனிக்கிழமையும் ரத்தினவேல் மாட்டுவண்டியில் விறகுக் கட்டுகளும் சுள்ளிகளும் தெருவில் விற்பனைக்கு வரும்.எல்லாம் விற்ற பிறகு வண்டியில் உதிர்ந்திருக்கும் சுள்ளிகளுக்கும், உதிரிகளுக்கும் எங்களைப் போலவே இன்னும் இரண்டு,மூன்று குடும்பம் காத்திருக்கும். விலை குறைவு. இந்தப் பிரச்சினைகள் இனிமேல் இருக்காதென்ற எண்ணத்தில் அப்பா கிடைத்த இடத்தில் வீடு கட்ட முயன்றார். அதற்கான ஒத்திகைதான் இந்தப் பள்ளிக்கூடம்.

பழைய பள்ளிக்கூடம் சீக்கிரமே முடிந்து விடும். இங்குதான் மாலை ஐந்து மணியாகிறது. காலையில் அம்மா கொடுத்துவிடும் தயிர் சோறும் ஊறுகாயும் மூன்று மணிக்குள்ளே பசித்து விடும். தினமும் அப்பாவிடம் ஆளுக்குப்

பத்துப் பைசா வாங்கிக் கொள்வது வழக்கம்.பள்ளிக்கூட வாசலில் பலகாரங்கள், பழங்கள், உதிர்ந்த அழுகிய அடிபட்டுப்போன காய்கள்,கனிகள்,எல்லாமே கிடைக்கும். நான் நெல்லிக்காய் சாப்பிடமாட்டேன். இலந்தைப் பழம், சர்க்கரை வள்ளிக் கிழங்கு வாங்கிக் கொள்வேன். தம்பி எதுவுமே வாங்காமல் சேர்த்து வைப்பான். அவனுக்கு விளையாட்டு ஏரோப்ளேன் வாங்க வேண்டும் என்பது கனவு.

ஒருமுறை நான் கொடுக்காப்புளி தின்று, அது ஒத்துக் கொள்ளாமல் கிடுகிடுவென்று ஜுரம் ஏற பயந்து போன பத்மா டீச்சர் ‘ஆலமர நிழலில்’ பெஞ்சில் படுக்க வைத்து மாத்திரையும் டீயும் வாங்கிக் கொடுத்தது அத்தனை ஆறுதலாய் இருந்தது. முன்பெல்லாம் தொலைபேசி கிடையாது. ஏதேனும் அவசரமென்றால் உள்ளூர்ப் பிள்ளைகளின் பெற்றோருக்கு அழைப்பு விடுப்பார்கள். எங்களைப் போன்ற பிள்ளைகளை ஆலமரத்தடியில் உட்கார வைத்துவிட்டுப் ‘ பெரிய டீச்சர் ‘ வீட்டுக்குப் போகும் போதுதான் அனுப்புவார்கள். பெரும்பாலும் ஆலமரம் தான் எங்களின் பகுதி நேரப் பள்ளிக் கூடம்.

தொடக்கத்தில் எங்களுக்குப் பள்ளிக் கூடம் பிடிக்கவேயில்லை. பிள்ளைகள் சரியாகப் பழக மாட்டார்கள். ஏதோ ஒரு மனஉளைச்சல் இருந்து கொண்டே இருந்தது. படிப்பில் நாட்டமில்லை. கணக்குப் பாடம் வரவே மாட்டேன் என்றது.தம்பிக்குத் தினமும் புத்தகத்தைப் படிப்பதென்றால் பயத்தில் அழுகையே வந்து விடும். அவன் கொஞ்சம் பலவீனம். .ஆனால் போகப் போக பழகி விட்டது. எல்லாவற்றிற்கும் ஆலமரம்தான் காரணம். நான்காம் வகுப்புக்கான பேச்சுப் போட்டிக்கு நான் பெயர் கொடுத்து, முத்து வாத்தியாரின் ( தமிழ் -அய்யா) முயற்சியில்ஒன்றரைப் பக்கம் எழுதி வாங்கிப் படித்து மனப் பாடம் செய்ததை ‘ஆலமரத்திடம்’ ஒப்பித்ததன் பலன் தான் முதல் பரிசு, (இன்றைக்கு வாங்கியிருக்கும் பேச்சாளர் பட்டம்) அடுத்தடுத்து கிடைத்த பேச்சுப் போட்டி வாய்ப்புகள். இப்பொழுதெல்லாம் சனிக்கிழமையும், ஞாயிற்றுக் கிழமையும் பள்ளிக் கூடம் இல்லாததால் வெறுமனே கழிந்ததை உணர முடிந்தது. கோடை விடுமுறை எனக்குக் காய்ச்சலைத் தந்தது. வெளியூருக்குச் சென்ற தகப்பனைத் தேடும் பிள்ளையின் ஏக்கமாய்!

ஒரு வழியாக அம்மாவிடம் அழுது பிடித்து சத்துணவு சாப்பிடும் பிள்ளைகள் பட்டியலில் என் பெயரும் தம்பிப் பெயரும்சேர்த்து விட்டேன். மணி அடித்ததும் வரிசையில் ஓடி வந்து இடம் பிடிக்க வேண்டும். கூடுமான வரை தம்பியைத் தான் நிற்க விடுவேன். நான், எங்கள் இருவரின் தட்டையும் (அலுமினியத் தட்டு- எண்,வகுப்பு எண் போட்டது) எடுத்துக் கொண்டு வருவேன். சுடச் சுட சோறும் சாம்பார் குழம்பும், ஒரு கீரையும் (புழு,புழுங்கல், வாடையும் இருக்கும்) தினமும் இருக்கும்.சூடு பொறுக்கமுடியாமல் கீழே போட்டு விடுவோமோ? என்ற பயம் வேறு.

வாங்கிய சோற்றுத் தட்டோடு எங்களை வரவேற்பது படர்ந்த ஆலமரம். அம்மாவின் மடியில் தலை வைத்தது போன்ற சுகம். ஏதேதோ பேசிக் கொண்டிருப்பேன் ஆலமரத்திடம். அப்பா திட்டியது, அம்மா அடித்தது, தெருவில் மருதாணி விற்றது,வண்ணத்திப் பூச்சி பிடிக்கப் போவது,சொடக்குத் தக்காளி பறிக்கப் போவது,சூசைகோயில் போய்வருவது,கோயில் கொடை வருவது பற்றி, பக்கத்து வகுப்பு பரிமளா அக்கா பரிட்சையில் பார்த்து எழுதியது, மகேஷ் அண்ணன் புது ஜாமெட்ரி பாக்ஸ் வாங்கிவந்தது,பட்டுப் பூச்சிப் பிடித்துத் தீப்பெட்டிக்குள் அடைத்து வைத்து பத்துப் பூச்சிக்கு ஒரு கை கடலை என்று ரீசஸ் பீரியர்டில் நடத்திய வியாபாரம் பற்றி எல்லாமே நான் பேசிக்கொண்டிருப்பேன். இலை அசைவது நிழலில் தெரியும்.ஏதோ மரம் என் சொல்லுக்குத் தலையசைப்பது போல் தோன்றும். மழை பெய்யும் நாட்களில் பாதி நாள் பள்ளிக் கூடம் இருக்காது.

மரத்திடம் பேச எனக்கு நிறைய விஷயங்கள் இருக்கும். இரண்டு மூன்று நாள் கழித்துப் பார்த்தால் பழைய இலைகள் கொட்டிப் புதுத் தளிரில் சிரித்து நிற்கும் மரம். இரண்டு ஆண்டு காலம்தான் இந்தத் தொடர்பு. அப்பாவின் பிடிவாதத்தால் அப்பா வேலை பார்க்கும் தொழிற்சாலை பக்கத்திலேயே புதுப் பள்ளிக்கூடம். அங்கு மாற்றிவிட்டார்கள். ஒரு வருடம் எப்படியோ அழுது புரண்டு சேர்க்கைக்கு ஒத்திவைப்பு நிகழ்த்தி விட்டேன். அந்த வருடம் தம்பி மட்டும் புதுப் பள்ளிக் கூடத்தில் படித்தான். நான் தனியாக இங்குப் படித்தேன். எந்த வருத்தமும் எனக்கு இல்லை.

அடுத்த வருடம் என் தந்திரம் எதுவும் பலிக்கவில்லை. தேம்பித் தேம்பி அழுதேன். மரத்தடியில் நீண்ட நேரம் நின்று விட்டு வந்தேன்.அப்பொழுது கூட மரம் என்னிடம் ஒன்றும் கேட்கவே இல்லை. கடைசியாக டி .சி . பாரம் எழுதிக் கொடுத்த அன்றைக்குத்தான் பார்த்தேன். இன்றோடு இருபத்தேழு வருடம் ஓடிவிட்டது. எங்கெங்கோ சுற்றிவிட்டேன், இன்னமும் அதே ஆல மரத்தடியும் புளியந்தோப்புப் பள்ளிக்கூடமும் கண்ணில் படவில்லை.

இன்று என் மகளின் நாட்டிய அரங்கேற்றம். அப்பா, அம்மாவின் ஆசைப் படி பிறந்த ஊரிலேயே வைத்துக் கொள்ள ஏற்பாடாயிற்று. மனது துள்ளிக் குதித்தது. இந்த முறை எப்படியும் தோப்புத் தெருப் பள்ளிக் கூடத்தைப் பார்த்தாகிவிட வேண்டுமென்று ஒரு தவம்.

ஊருக்கு வந்த வேலை முடிந்தது. அப்பாவிடம் சொல்லி கார் எடுத்துக் கொண்டு தோப்புத் தெரு போகலானேன். புளியந்தோப்பில் பாதி மரங்கள் செத்துப் போயிருந்தன. பேருக்கு இரண்டு மரம் மட்டும் நிற்க மற்ற இடமெல்லாம் மாடி வீடுகளாய்ப் பரிணமித்தது . பள்ளிக் கூடத்தின் அருகில் நெருங்கிச் செல்லச் செல்ல மனத்தில் ஒரு பரவசம். உடலுக்குள் ஒரு வேதியியல் மாற்றம். எல்லாம் நிமடத்தில் தவிடுபொடியானது. நடந்து போய் படித்த நாட்களை எண்ணுகையில் கண்ணோரம் நீர் துளிர்த்தது. இயல்பாய் இருக்கத்தான் நினைக்கிறேன். இருந்தும் உணர்ச்சிகளை மறைக்க முடியவில்லை.

பள்ளிக்கூடமும் தடம் மாறிப் போயிருந்தது. பெரிய கட்டடம், முகப்பில் பெரிய கதவு. பச்சை நீல வண்ணத்தில் பெயர்ப் பலகை. சத்துணவுக் கூடம் காணவில்லை. மரப் பெஞ்சுகளுக்குப் பதில் இரும்பு நாற்காலியும் மேசையும். முன்பு பதியம் போட்டத் தோட்டத்தில் இன்று புத்தக நிலையம். எல்லாமே மாறியது கண்டு அதிர்ச்சி. இறுதியாக பின் வாசல் வழியாக என் தோழி ஆலமரத்தைத் தேடினேன். அதற்கு வயதாகி இருப்பது தெரிந்தது. மரப் பட்டைகளெல்லாம் வெள்ளை நிறத்தில் தெரிந்தன. விழுதுகள் ஏகமாய்ப் பெருகியிருந்தன. வயிறும் இடுப்பும் புடைத்த குண்டுக் கிழவியாகத் தோற்றமளித்தது. யாரோ ஒரு குட்டிப் பெண் என் பால்ய வயதில் நான் சுற்றி வந்தது போலே கட்டிப் பிடிக்க முடியாத மரத்தைச் சுற்றிச் சுற்றி வந்தாள். அவளின் இருபத்தேழாவதுகளில் என் ஆலமரம் இப்பொழுது நான் பார்ப்பதேப் போலாகிலும் இருக்க மனம் பிரார்த்தித்தது. நான் வந்த – தகவலை, மரத்திடம் சொல்லி விட்டு உதிர்ந்த இலைகளில் நரம்பாய் ஒட்டியிருக்கும் என் நினைவுகளைச் சேகரித்துக் கொண்டு திரும்பலானேன். இன்னமும் நான் தோப்புத் தெரு ஆலமரப் பள்ளிக் கூடத்தின் மாணவன்தான். .எண்ணங்களை விழுதாக்கி வண்டியில் ஏறலானேன் மரமாகி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *