தூக்கத்தை தொலைத்தவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 11, 2020
பார்வையிட்டோர்: 4,140 
 

சேரன் எனக்கு பிடித்த Train! பத்து மணிக்கு மேல் கிளம்புவதால் எல்லா வேலைகளையும் முடித்து விட்டு ( நான் ஒண்டிக்கட்டை) வீட்டையும் clean பண்ணி ,ஒரு பஸ்ஸை பிடித்தால் பத்து நிமிஷத்தில் station.

புத்தகக் கடையில் , நக்கீரன், குமுதம், விகடன் என்று சில வாரப்பத்திரைகள் ( வீட்டில் படிப்பது பகவத்கீதையும் உபநஷத்தும்) வாங்கிக் கொண்டு பிளாட்பாரம் போனால் சேரன் தயாராக இருந்தான். சுகமான upper berth.யார் தொந்தரவும் இல்லாமல் ஏறிப்படுத்தால் சென்னையில் தான் முழிப்பு!

சரியான நேரத்தில் ஒரு குலுக்கலுடன் கிளம்பி விட்டது. Mobile வந்தாலும் வந்தது , வண்டி கிளம்பியதும் எல்லாருக்குமே முக்கியமான விஷயங்கள் நிறைய பேச வேண்டியிருக்கும் போல…காதை தீட்டி வைத்து கொண்டேன்.

” சேரன் சரியா கிளம்பிட்டான்! வாசக் கதவை சரியா மூடு.கேஸ் அணச்சிருக்கா பாத்துட்டு படு.காலம்பற பால் பாக்கெட்டை மறக்காம உள்ள வச்சுட்டு தூங்கு! பூனை உண்டு இல்லைன்னு பண்ணிடும்!__ இது ஒரு கணவனின் கரிசனம்.

“ரயில் கிளம்பிட்டுது. ரொம்ப நேரம் முழிக்காதீங்க. நாளைக்கி சாப்பாடு இருக்கு. ராணியும் கூப்பிட்டு கிட்டே இருக்கு! போய் இரண்டு நாள் நிம்மதியா இருங்களேன்……போய் சேந்ததும் கூப்பிடறேன்”

இது ஒரு மனைவியின் அங்கலாய்ப்பு………

எதிர் berthல் ஒரு யுவதி. தூங்கிவிட்ட மாதிரி இருந்தது.அதற்குள்ளயா? ஆனால் வாய் ஏதோ முணு முணுப்பதுபோல இருந்தது.அதானே பார்த்தேன்!

காதோடு ஒட்டி கவச குண்டலம் போல் Mobile. எவ்வளவு காதை தீட்டி கேட்டாலும் ஒரு வார்த்தை விழ வேண்டுமே! காதலர்களுக்கான special phone போலிருக்கு! தூக்கம் கண்ணை சுழற்றியது! TT வரட்டும். புத்தகத்தைப் புரட்டினேன்.

TT வந்து விட்டார்.எல்லாரும் ஒரே சமயத்தில் ஆதாரையும் ‘ மொபைலையும் நீட்டினோம் . அவர் பொறுமையாகத்தான் இருந்தார்.எங்களுக்குத்தான் படுக்க அவசரம்.

அப்போதுதான் அவர் பின்னால் நிற்கும் பெண்ணைப் பார்த்தேன்.பார்த்ததுமே வெளிநாட்டு பெண் என்று தெரிந்து. சுமார் முப்பத்தைந்து வயது இருக்கும். சிம்பிளாக Fabindia சுரிதார். குறிப்பிட்டு சொல்ல ஒன்றுமில்லை. முகத்தில் கொஞ்சம் களைப்பைத் தவிர.

TT side berth ல் உள்ளவரைப் பார்த்து ” கொஞ்சம் adjust பண்ணிக்குங்க ஸார்…. இன்னும் அரைமணியில இவங்களுக்கு berth ready ஆகிடும். அது வரைக்கும் இங்க உட்காரட்டும்!”

என்று சொல்லி விட்டு பதிலை கூட எதர்பார்க்காமல் போய் விட்டார்.

” I’m Sara . sorry for the inconvenience ” என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டாள்……

“I’m Saravanan” என்று பதிலுக்கு தன்னை அறிமுகம் செய்து கொண்டார் நம்முடைய ஆள்.

எனக்கு சுத்தமாக தூக்கம் தொலைந்தது. லேசாய் எட்டி பார்த்தேன். சரவணன் நல்ல மாதிரி தான் தெரிந்தான். அவனுக்கும் முப்பது அல்லது முப்பத்தைந்து வயது இருக்கும். எனக்கும் கொஞ்சம் வம்பு வேண்டியிருந்தது போலிருக்கு…..தூக்கம் போயே போச்சு!

சரவணணைப் பற்றி கொஞ்சம் சொல்லி விட்டால் நல்லது.சிறிய உருவம் ….Typical middle class….எளிமையான உடை. முகத்தில் ஒரு புத்திசாலித்தனம்!

இனி அவர்களுடைய உரையாடல்……

சரவணணுக்கு சரளமாக ஆங்கிலம் வராவிட்டாலும் சமாளித்தான். அவளும் நடுவில் சில தமிழ் வார்த்தைகளை கலந்து பேசினாள். ஆங்கில உரையாடல் தமிழில்…

” நான் சாரா. I’m from France”

” இந்தியாவுக்கு சுற்றுலா வந்திருப்பீர்கள் !”

” நான் பலமுறை இங்கு வந்து இருக்கிறேன். முதலில் என் கணவர் , பையனுடன் வந்தேன்.ஒரு வாரத்தில் அவர்களுக்கு அலுத்துவிட ஊர் திரும்பி விட்டார்கள்.எனக்கு ரொம்ப பிடித்து விட்டது. ஆறு மாதம் இருந்தேன்.அப்புறம் ஒவ்வொரு ஆண்டும் வருகிறேன்.இங்கேயே தங்கி விட ஆசை “

நிறைய பேசினார்கள்.

“அப்படியானால் உங்கள் குடும்பம் ?

“அவர் வேறு பெண்ணை மணக்க விரும்புகிறார் “

நீங்க எங்கே தங்கியிருக்கிறீர்கள்?”

“ஐதராபாத்தில் ஒரு hostel லில்”

” எனக்கும் ஆந்திராதான் …..”

எனக்கு இப்போது கொஞ்ச கோபம் வந்தது. இவன் எதுக்கு இவ்வளவு நெருங்கி வருகிறான். எல்லாரும் தூங்கியாச்சு. எனக்கு தூக்கம் வருமா?

சரி என்னதான் நடக்கிறது என்று பார்த்து விட்டு தான் தூங்குவது என்று கங்கணம் கட்டிக் கொண்டேன்.

” நானும் அடிக்கடி ஐதராபாத் வருவேன்.
Address தர முடியுமா?”……

சரி climax வந்தாச்சு! இப்போ அந்த பெண்ணின் முகம் எப்படி இருக்கும் என்று பார்க்க குனிந்தேன்.

கொஞ்சம் கூட முகச்சுளிப்போ கோபமோ இல்லாமல் நிச்சலனமா இருந்தது. யோகா , art of living என்று training எடுத்திருப்பாளோ? அவள் கூறப்போகும் பதிலில் ஆர்வமாயிருந்தேன்.

” என்னை மன்னியுங்கள் ! யாருக்கும் address கொடுப்பதில்லை ! ”

அப்பாடி ! தப்பித்தாள்!அவன் விடுவதாயில்லை.

” என்னுடைய phone number எடுத்துக் கொள்ளுங்கள்.நான் தனியாகத்தான் இருக்கிறேன்.உங்களுக்கு ஆட்சேபம் இல்லையென்றால் என்னுடன் வந்து தஙகியிருக்கலாம்!……

எனக்கு அவனை அப்படியே கழுத்தைப் பிடித்து நெரிக்கலாமா என்று தோன்றியது.அவளை இவ்வளவு சீப்பாக எடை போட்டுவிட்டானே பாவி ! அடுத்து நடந்த சம்பவம் என்னால் மறக்க முடியாதது.

” Mr. Saravanan ! என்னை மன்னியுங்கள்! நான் இந்தியா வந்ததிலிருந்து ஒரு மன மாற்றத்தைஉணர்கிறேன்.ஆன்மீகத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டு விட்டேன். நீங்கள் தேடும் பெண் நானல்ல.தயவு செய்து வெளிநாட்டு பெண்களைப் பற்றிய உங்கள் தவறான எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.! ”

என்று அழுத்தமாக கூறி விட்டு அந்த பெண் எழுந்து நின்றாள்.

அதற்குள் TT வந்து விட்டார்.

“Good night” என்று கூறி அவள் ஒன்றுமே நடக்காதது போல் சென்று விட்டாள்.

சிறிது நேரம் கழித்து அவனும் படுத்து விட்டான்.உடனே தூங்கியும் விட்டான் போல.

எனக்கு இன்றைக்கு சிவ ராத்திரி தான்.எப்படி அந்த பெண்ணால் இப்படி அமைதியாயும் அழுத்தமாயும் பதில் சொல்ல முடிந்தது. அவன் வாயடைக்க செய்து விட்டாளே!

எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை…
ஏதேதோ குரல்கள் .Station நெருங்கி விட்டது……

” Saravanan ! Mr.Saravanan.! என்ற இனிமையான குரல் என்னை எழுப்பியது. சரவணன் கண்ணை முழித்தான்.

” Bye my friend! Take care! “

சாரா அவனிடம் கூறிவிட்டு பதிலுக்கு கூட காத்திருக்காமல் போய் விட்டாள்.

அந்தக் குரலில் கோபம் கொஞ்சம் கூட இல்லை.

யோசித்து பார்த்ததில் சரவணன் மேலே இருந்த கோபம் கொஞ்சம்கொஞ்சமாக குறையஆரம்பித்தது.

அவன் ஆரம்பத்திலிருந்தே அவளிடம் மிகவும் மரியாதையாகத்தான் நடந்து கொண்டான். அவளிடம் நெருங்கி கூட உட்காரவில்லை. அவன் மனதில் இருந்ததை அப்பட்டமாக கேட்டு விட்டான்.அவளும் அவளுடைய பதிலை கூறிவிட்டாள். இருவரும் முகமூடி அணியவில்லை என்பதுதான் உண்மை. அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு விட்டார்கள்.

சம்பந்தப்பட்ட இருவரும் நிம்மதியாகதூங்கியிருக்கிறார்கள். இதில் எந்த சம்பந்தமும் இல்லாத நான் தான் தூக்கத்தை தொலைத்தவன் . நம்மில் பலர் மற்றவர்கள் பிரச்சினைகளை நம் தலையில் ஏற்றிக்கொண்டுதான் தூக்கத்தை தொலைக்கிறோமோ??

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *