துக்கஞ் சொல்லி!

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 26, 2015
பார்வையிட்டோர்: 13,198 
 
 

“ஏலே ரெங்கசாமி, எந்திருச்சி வெளியவாடா!” அந்த ஐப்பசி மாத மழைநாளில், விடியற்காலை மூன்று மணிக்கு பண்ணை காரியஸ்தர் சின்னையா பிள்ளையின் குரல் இடிமுழக்கமாய் ஒலித்தது. ஊரே மழைச் சாரலுக்குப் பயந்து வீட்டினுள் கதகதப்பாய் உறங்கிக் கொண்டிருந்தது.

“ஏ ரெங்கா, எந்திருச்சு வாடா?” மீண்டும் காட்டமாய்க் கத்தினார் காரியஸ்தர். அவர் பிடித்திருந்த குடையில் பட்டு தூரல் துளிகள் தெரித்து விழுந்தன. மீண்டும் பதிலில்லை. “சீச்சீ! இது லாயக்கு படாது!” என்று குடையை மடித்தார். கழுத்துத் துண்டால் தலை நனையாமல் போர்த்திக் கொண்டார். குடையின் கைப்பிடியால் குடிசை வாசல் தட்டியில் “லொட், லொட்’ என்று தட்டினார்.

“யாரது?” என்று வாரிச் சுருட்டி எழுந்தான் ரெங்கசாமி. “வாடாப்பா தூங்குமூஞ்சி. அரைமணி நேரமா கூப்பாடு போடுறேன். மவராசன் இழுத்து போத்திகிட்டு தூங்குறீங்களோ?” என்று சொல்லவும், ரெங்கன் தட்டியைத் திறந்து வெளியே வரவும் சரியாய் இருந்தது.

“அய்ய மழை பெய்யுதே! உள்ளாற வாங்க, நனையாதீங்க?” என்று அவன் சொல்ல,

“இருக்கட்டும். அதெல்லாம் பாத்தா இப்ப கதைக்காவாது. நீ சீக்கிரம் பொறப்படு!” “என்னங்க விசியம்? இந்த அர்த்த ராத்திரில?”

“அங்க பெரிய பண்ணை முதலாளிக்கு, “இப்பவோ’, “அப்பவோன்னு’ இழுத்துகிட்டிருக்குடா, ரொம்ப நேரம் தாங்காது. நாடி கொறைய ஆரம்பிச்சிருச்சி. இன்னும் ஒரு மணி நேரத்துக்கு மேல தாங்காதுன்னு முத்துராமன் டாக்டரு சொல்லிட்டாரு. ஒன்னையப் பாத்து ஏதோ கடைசி சேதி, முக்கியமா சொல்லணும்னு சொன்னாங்களாம் பெரிய முதலாளி. அதான் கையோட கூட்டியாரச் சொல்லி என்ன அனுப்பிச்சு வச்சாங்க பெரிய சின்னையா. ஜல்தியா பொறப்படு!” என்று சொல்லி குடையை விரித்தார் சின்னையா பிள்ளை.

ரெங்கன் தலைக்கு ஒரு துண்டை எடுத்துப் போட்டுக்கொண்டு, தட்டியைச் சாத்திவிட்டு அவர் பின்னால் ஓடி வர ஆரம்பித்தான். “பாத்து வாடாப்பா. தரை வழுக்குது. நீ வேற உழுந்து வாரிக்காத. நாளைக்கு நெறைய ஊருக்கு துக்கம் சொல்லப் போகணும் நீ. நாளைக்கு ஒனக்கு நல்ல வேட்டைதான். அரிசி, தேங்கா, பணம்னு ஒரு தட்டு தட்டிடுவே நரி மொகத்துலதான் முழிச்சிருக்க” என்றார்.

“எங்குன? ஒங்க மொகத்துலல்ல முழிச்சிருக்கேன். பாப்போம் சுக்ர தசை பிச்சுகிட்டு அடிக்கறதை.”

“எம் மொகராசியையே நீ சந்தேகப்படுறியா? பெரிய மொதலாளி நெதைக்கும் நல்ல காரியத்துக்கு போகும்போது என்ன எதுக்க வரச் சொல்லிதான், பயணப்படுவாங்க, தெரியுமா? இது ஏன், இன்னைக்கு கூட எம்மூஞ்சிலதான் முழிச்சாங்க… தெரியுமால?”

“அதான் இன்னைக்கு ஒரேடியா சீட்டுவாங்கிப் போறாங்க போல?” என்றான் ரெங்கன் சிரிக்காமல்.

“துக்கிரி பயலே! மூடு உன் காள வாயை! என்னையே நக்கல் பண்றீயா! பயமொவனே, ரொம்பதான் அதப்புவச்சு போச்சு ஒனக்கு. இந்த கொடக்கம்பாலயே ஒரே சொறுகு சொறுவனன்னா? மவனே! பேசாத வா!” என்று பொய்யாகக் கோபித்துக்கொண்டு வாய்க்கால் கடந்து, பள்ளிக்கூடம் தாண்டி வேகமாய் நடந்தார். அவரது பெருநடையை ஈடுகட்ட ரெங்கன் சிறு ஓட்டம் ஓட வேண்டி இருந்தது. பண்ணைகுளம் திரும்பியதுமே கியாஸ்லைட் வெளிச்சம் நன்றாகத் தெரிய ஆரம்பித்தது.

நாலைந்து இடங்களில் பெட்ரோமாக்ஸ் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. பெரிய திண்ணையிலும், சிறிய திண்ணையிலும் உறவு மனிதர்கள் கும்பல் கும்பலாய் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். ஏழெட்டுபேர் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர்.

காரியஸ்தர் ராஜநிலை வழியாக உள்ளே நுழைந்தார். ரெங்கன், பக்கவாட்டில் இறங்கி சிமெண்ட் தளத்தில் இறங்கி பெரிய முதலாளி படுத்திருந்த ஜன்னலோரம் வெளியே நின்றான். அதற்குள், அறையின் உள்ளே வந்த காரியஸ்தர், பெரியவர் மேல் கை வைத்து காதோரம் குனிந்து ஏதோ சொல்ல, கண் விழித்துப் பார்த்தார் பெரிய முதலாளி.

சைகையால் ஜன்னலுக்கு வெளியே நின்றிருந்த ரெங்கனைக் காட்டினார். திரும்பிய முதலாளி, கண்ணீர் மல்க நின்றிருந்த ரெங்கனைப் பார்த்தார். காரியஸ்தர் ஜன்னலோரம் தலையணையை நகர்த்தி வைத்து, அவரை அதில் சாய்மானமாகக் கிடத்தினார். குறிப்பறிந்து அறைக்கதவைச் சாத்திவிட்டு வெளியேறினார்கள். கால்மாட்டில் உட்கார்ந்திருந்த வீட்டுப் பெண்களும் அவர் கூடவே எழுந்து வெளியேறினார்கள். முதலாளி சுற்று முற்றும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, சன்னமாய்க் கம்பியோரம் வாய் வைத்து, ரெங்கனிடம் ஏதோ சொன்னார். ரெங்கன் இடுப்பில் கைகளைக் கட்டிக்கொண்டு பவ்யமாய் தலையசைத்தான். சிரமப்பட்டு, ஒற்றை விரலை உயரே உயர்த்தினார். பின்பு அதே விரலை குறுக்கும், நெடுக்கும் ஆட்டி, கறாராய் ஏதோ உத்தரவு போட்டார். அவர் கண்களில் நெருப்பு பறந்தது அப்போது. ரெங்கசாமி ஜன்னலுக்கு அப்புறம் விக்கித்துப் போய் நின்றான்.

“என்ன புரிஞ்சுதா?” என்கிற ரீதியில், இவர் கடைசியாய்க் கேட்க, அவன் ஆமோதிப்பாய் தலையசைத்தான். அத்துடன் சரி. அதுதான் அவர் கடைசியாய் பேசியது. ரெங்கன் சந்தில் நகர்ந்ததும், சொல்லி வைத்ததுபோல் கதவைத் திறந்து கொண்டு அறையினுள் நுழைந்தார் காரியஸ்தர். பெரியவருக்கு விக்கல் வந்தது. உடம்பும் நெஞ்சும் உயரே எழும்பிற்று. அடுத்து ஒரு பெரிய விக்கல். அத்துடன் எல்லாம் அடங்கி முடிந்துவிட்டது. திமுதிமுவென ஓடி வந்த பெண்கள் கூட்டம், மாரில் அடித்துக்கொண்டு ஓங்கி அழ ஆரம்பித்தது. திண்ணையில் இருந்த ஆண்கள் கூட்டமும் வேகமாய் வந்தது. ஒரு சிலர் துண்டை வாயில் புதைத்துக்கொண்டு உடல் குலுங்கி அழுதனர்.

அரைமணி நேர களேபரத்திற்குப் பிறகு, எல்லாம் நிதானத்திற்கு வந்தது. தொலைபேசி, கைப்பேசி, மின்சார வசதி, வாகன வசதி என்று எதுவுமே வராத காலகட்டம் அது. தொலைதூரத்தில் உள்ளோர் யார் யாருக்குத் தந்தி அடிப்பது என்று பட்டியல் தயாரித்தனர். வாசலில் தெருவடைத்து பெரிய பந்தல் போட ஏற்பாடு நடந்தது. மழை விட்டிருந்தது. பண்ணை ஆட்கள் மூங்கில் வெட்டவும், கீற்று கொண்டு வரவும், பாளை கிழிக்கவும் திக்காலுக்கு ஒருவராய்ப் பறந்தனர். திண்ணையிலிருந்த நெல் மூட்டைகளும், விதைக் கோட்டைகளும், ஸ்ப்ரேயர் மெஷினும் அப்புறப்படுத்தப்பட்டன. மர நாற்காலிகளும், பெஞ்சுகளும் கொண்டு வரப்பட்டன. பந்தலில் போடுவதற்கு. ரெங்கன் ஓர் ஓரமாய் விக்கித்து நின்றான். பெரிய சின்னையா என்று எல்லோராலும் அழைக்கப்படும், இறந்துபோன பெரிய முதலாளியின் மூத்த மகன், உத்தரவு போட்டுக் கொண்டிருந்தார். துக்கத்தை யார் யாருக்கு ஆளனுப்பி சொல்ல வேண்டும்? என்ற பட்டியலை, பெரிய சின்னையாவிடம் காட்டி மேலும் அவர் சேர்க்கச் சொன்ன ஓரிரு பெயர்களைச் சேர்த்து, வெளியில் நின்று கொண்டிருந்த ரெங்கனிடம் கொடுத்தார் கணக்கப்பிள்ளை.

“டேய், ரொம்ப ஜாக்ரதை. அதுல எழுதி இருக்கறது எல்லாம் ரொம்ப பெரிய மனுஷா வீடு. யார் ஒத்தரையும் விட்டுடப்படாது. பாத்து, பணிவா விஷயம் இன்னுது. “இத்தனை மணிக்கு காரியம்’ அப்படீன்னு சொல்லிட்டு, வரனும். புதுசா யார் ஒருத்தரையும் நீயா சேத்துடப்படாது. பெரிய இடத்து விவகாரம், பாத்து, பயம் பத்தரமா துக்கஞ் சொல்லிட்டு வா!” என்று சொல்லி, பட்டியல் பேப்பரையும், டீ செலவிற்கு சில்லரைக் காசுகளையும் திண்ணைக்குறட்டில் வைத்தார்.

“ஆகட்டுங்க!” என்று சொல்லி ரெங்கன் பட்டியலையும், பணத்தையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டான். மழைவிட்டு லேசாய் பொழுது புலர ஆரம்பித்தது. பண்ணை கொட்டகையிலிருந்து பெரிய கூடையும், ஓர் உரச்சாக்கும் எடுத்துக் கொண்டான். வேகமாய் நடந்தான். வெண்ணாற்றில் சீராய் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது – முழங்காலளவு இருந்தது. இறங்கி, கடக்கும்போதே, முகத்தை அலம்பி, வாய் கொப்பளித்துக் கொண்டான். ஏறு துறையில் ஏறி, சின்னப்பன் வீட்டு வழியாக நடந்து கீழத்தெருவை அடைந்தான். கல்யாணம் பிள்ளை அய்யா, பாலூர் பிள்ளை வீடு, காரைக்கால் பிள்ளை வீடு என்று மூன்று இடங்கள் மட்டும் செல்ல வேண்டி இருந்தது. முதலில் கல்யாணம் பிள்ளை வீடு வந்தது. மழைக் காலமாதலால், மண்தரையில் கோலம் போட்டால் மழை வந்து அழித்துவிடுமென்று வாசல்படிகளில் மட்டும் அலசிவிட்டு கோலம் போட்டிருந்தார்கள்.

“பெரியய்யா, பெரியய்யா!” என்று குரல் கொடுத்தான்.

“யாருப்பா!” என்று வயதான மூதாட்டி வெளியே வந்தார். பெரியய்யா சம்சாரம்தான்.

“நாந்தான் பெரியாச்சி, ரெங்கசாமி. மணிமங்கலத்திலேர்ந்து வர்றேன், பெரிய பண்ணை முதலாளி செத்த முன்னாடி காலமாயிட்டாங்க. பெரிய சின்னையா மொதல் துக்கமா இங்க நம்ம வீட்லேர்ந்து ஆரம்பிக்கச் சொன்னாங்க?”

“அடக்கடவுளே! “அந்த வைத்தியநாத அண்ணனா! என்ன பண்ணுச்சு”?

“ரெண்டுநாள்தான் ஒடம்பு ஆவாம இருந்தாங்க. இப்பதான் எறந்து போயிட்டாங்க!” பெரியய்யா இல்லீங்களா?”

“இப்பதான் எந்திரிச்சி கொல்லப் பக்கம் போனாங்க!”

“இருந்து சொல்லிட்டு போகட்டுங்களா?”

“இன்னும் பல ஊர் போய், நீ சொல்லணுமே! வேண்டாம். அவரு வந்தா நான் சொல்லிக்கிறேன்”

“அப்ப நா பொறப்படட்டுங்களா?”

“இரு, இரு, பெரிய எடத்து துக்க செய்தி, மொத மொத நம்ம வீட்லவந்து சொல்லிட்டு, வெறுங்கையோட போகாத!” என்று உள்ளே ஓடி ஒரு முறத்தில் பச்சரிசி ஒரு படியும், உரித்த முழு தேங்காய் ஓன்றும் கொண்டு வந்தார்.

“பை கொண்டாந்திருக்கியா?” என்று அவர் கேட்கவும், ரெங்கன் தான் தயாராய், பண்ணையிலிருந்து எடுத்து வந்த மெழுகிய கொட்டுக் கூடையைக் காட்டினான். அரிசி, தேங்காயைக் கூடையில் வாங்கிக் கொண்டு, அடுத்து பாலூர் பிள்ளை வீட்டிற்கு சென்று துக்கம் சொன்னான். அங்கு ஒரு சீப்பு வாழைக் காயும், பணமும் கொடுத்தார்கள். அடுத்து காரைக்கால் பிள்ளை வீட்டில், அலுமினிய சொம்பு நிறைய காப்பி கொடுத்தார்கள். அங்கு முடிந்தது. அடுத்து ரெங்கன் வெண்ணாற்றின் மேல்கரையில் வடவேற்குடியை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அவனுக்கு கடைசி நிமிடம் பெரிய பண்ணை முதலாளி முகமும் அவர் தன்னிடம் தெரிவித்த விவரங்களும் ஞாபகத்திற்கு வந்தன.

“அந்த குடி கெடுத்த கழுதை, எந்தக் காரணத்துக்காகவும் இந்த வீட்டுப்படி மிதிக்கக் கூடாது. குடும்ப மானத்தை சந்தி சிரிக்க வச்ச அந்த கோடாலி என் முகத்தில் முழிக்கக் கூடாது. நீ என் துக்கஞ் சொல்லப் போவும்போது “உங்கப்பா, நீ அவரு பேச்சை கேக்காமல், அந்த ஜாதிகெட்டவனோட ஓடிப்போனபோதே செத்துப் போயிட்டாரு, அதனால நீ புதுசா உறவு கொண்டாடிகிட்டு இப்ப வரவேண்டாம்னு சொல்லிட்டு செத்தாருன்னு!’ தைரியமா சொல்லு, அவ வரப்புடாது… வரப்புடாது!” என்று விரல் உயர்த்தி குறுக்கும் நெடுக்கும் ஆட்டி ஆவேசமாய் எப்படிச் சொன்னாங்க? நல்ல வேளை, அவர் அப்படி சொல்லும் போது அறைக்குள்ளவோ, ஜன்னலுக்கு வெளியவோ யாரும் இல்லை. சாகற நேரத்துல கூட என்ன ஒரு ஜாதி பிடிப்பு, வெறி!”

மேல மணக்குடியில் ராமலிங்கம் வீடு, வேற்குடியில் சார் வீடு, சுந்தரம் பிள்ளை வீடு, பிரசிடெண்ட் வீடு, காவல் குடியார் வீடு என்று சொல்லிவிட்டு, அங்கு கிடைத்த வரும் படியை வாங்கிக் கொண்டு உச்சிவாடி சென்றான், அங்கு இரண்டு வீடுகளில் சொல்லிவிட்டு, கொளத்தூர், முடித்துவிட்டு அங்காளம்மன் கோவில் பூசாரி வீட்டிற்குச் சொல்லிவிட்டு, நெடுங்கறை வந்த போது கால்கள் பின்னின. இங்குதான் அவர் சொல்லக் கூடாது என்று சொல்லி இருந்த பெரிய பண்ணையாரின் பெண் மங்களத்தின் வீடு இருந்தது. வேண்டுமென்றே பக்கத்தில் அய்யம்பெருமாள் சார் வீட்டிற்கு சொல்லச் சொல்லி எழுதிக் கொடுத்தார்கள். ரெங்கனின் பையும், தலைக் கூடையும் துக்கம் சொல்லச் சென்ற இடத்தில் கிடைத்த வரும்படியால் கனத்தது என்றால், மனம் அந்தப் பெண்ணை நினைத்து கனத்தது.

அப்பாவிற்கு பிடிக்காதவனை ஜாதி மாறி கல்யாணம் பண்ணிக்கொண்டதாம். அதற்காக எத்தனை வெறுப்பு? வன்மம்? இருந்தவரை அநாதை போல் ஒதுக்கி தனிமைப்படுத்தியது போதாது என்பது போல், இறக்கும் தறுவாயிலும் சத்திய எச்சரிக்கை. சாகும்போது மனது பக்குவப்படும் என்பார்கள். பண்ணை முதலாளிக்கு பணமிருந்து என்ன பயன்! பெற்ற பெண் விஷயத்தில் இத்தனை பிடிவாதமும், பிற்போக்குத்தனமும் தேவையா? அவள் என்ன அத்தனை பெரிய பாவியா? முப்பது வருடத்திற்கு மேலாகியும் இன்னும் பெண் முகத்தில் விழிக்காமல், பகை மறக்காமல், ஆவேசம் அடங்காமல், ஜாதி வெறிபிடித்து இருந்தாரே! சார் வீட்டிற்குச் சொல்லிவிட்டு வெளியே வந்து திரும்பிப் பார்த்தான். மங்களம் அப்பொழுதுதான் கதவைத் திறந்து கொண்டு எதேச்சையாய் வெளியே வந்தாள்.

“சின்ன பாப்பா, மோசம் போயிட்டமே! பெரியய்யா நம்மள விட்டுட்டு போயிட்டாங்கம்மா. சாகறப்போ கூட கடேசியா, எங்கிட்ட பழச மறந்துட்டு, நீ அவசியம் அவங்க வீட்டுக்கு போய், எம்பொண்ணுகிட்ட துக்கம் சொல்லி அதை கலந்துக்க வைக்கணும்டா ரெங்கான்னு உத்தரவும், சத்தியமும் பண்ணிட்டு போனாங்க சின்னபாப்பா! நீங்க வந்து பாத்தீங்கண்ணாதான் அந்த கட்டவேவும்!” என்று இவன் கூடையை தரையில் இறக்கி வைத்துவிட்டு கதறவும்.

“ஐய்யயோ… அப்பா! நா பாவி ஆயிட்டனே. என்ன விட்டுட்டு போயிட்டீங்களே!” என்று அவள் போட்ட கூச்சலில் வீடே கூடிவிட்டது. விஷயம் கேள்விபட்டதும், துக்கத்தை மீறிய ஓர் ஆச்சரியம் அவர்களுக்கு. பிடிவாதத்திற்கு பேர் போன பண்ணை முதலாளி, தான் இறப்பதற்கு முன், தன் பெண் வீட்டிற்கும் சொல்லச் சொல்லிவிட்டு இறந்தாரா? ஒரு தலைமுறை பகை, ஒரே நொடியில் மறைந்துவிட்டது. சம்பந்தி சீருடன் கும்பலாய் புறப்பட்டு, ஒற்றைப் பனை மரம் வழியாக குறுக்கு ரோட்டில் கீழிறங்கி, பெரு ஓட்டமாய் ஓட ஆரம்பித்தார்கள் துக்க வீட்டை நோக்கி. கூடையைத் தூக்கிக் கொண்டு நடந்த ரெங்கனுக்கு வியர்த்து வழிந்தது. சொல்லி விட்டானே தவிர அவனை பயமும், பதற்றமும் பற்றிக் கொண்டது. முதலாளி பையன் பெரிய சின்னையா, தன்னை வெட்டிக் கண்டம் போடப் போவது உறுதி, என்று பயந்து கொண்டே, காளியம்மன் கோவில் வழியாக நடந்து, இறக்கம் தாண்டி, முதலியார் வீட்டில் மூன்று பேருக்கு சொல்லிவிட்டு, ஊர் நோக்கி நடக்க ஆரம்பித்தான். வழியில் அய்யனார் கோவில் வந்தது.

“அய்யனாரப்பா மன்னிச்சுடு. என்னோட ஆதாயத்துக்காக பொய் சொல்லலை. போனவங்க போயிட்டாங்க, இருக்கறவங்களாச்சும், இனி வர்ற காலத்துல வெட்டு குத்துன்னு பகை வளர்த்திகிட்டில்லாம, ஒண்ணா, உறவா இருக்கட்டும்னுதான் பொய் சொன்னேன். யாரையும் ஏமாத்தலை, நீதான் அங்க ஒண்ணும் ரகளை நடக்காமக் காப்பாத்தணும்!” என்று வேண்டிக்கொண்டே நடக்க ஆரம்பித்தான். அவனுக்கு குறித்துக் கொடுத்த வீடுகள் அத்தனைக்கும் துக்கம் சொல்லிவிட்டான். ஒன்றுகூட விடுபடவில்லை. கூடுதலாய் அவர்கள் சொல்லாத இடத்திற்கும் சென்று சொல்லிவிட்டான். கூடை கொள்ளாமல் கூலியும் கிடைத்துவிட்டது. ஏதேதோ யோசனையாய் தலைச்சுமையுடன் நடந்தான். பெரியகுளம் முக்கு அருகில் எதிரே அவன் மனைவி வந்து கூடையை வாங்கி வீட்டிற்கு எடுத்துச் சென்றாள். ஒரு மாதத்திற்கு வேண்டிய அரிசி, பருப்பு, தேங்காய், காய்கறி வந்துவிட்டது. பிள்ளைகளுடன் பசி இல்லாமல் ஓட்டலாம் என்று பாரம் குறைந்தவனாக முதலாளி வீடு நோக்கி நடந்தான்.

பந்தல் கொள்ளாமல் கூட்டம் அலைமோதியது “பெரிய முதலாளி!” என்று துக்கம் தாளாமல் ரெங்கன் அழுதுகொண்டு வர, பெரிய சின்னையா அவனை “இங்க வா ரெங்கா!” என்று கூப்பிட்டார். தோல் உரியப் போகிறது” என்று பயந்துகொண்டே சென்றான் ரெங்கன்.

“அந்த வேம்படியாத்தான் அப்பா மனசுல பூந்து, உன் மூலமா அக்காவையும் குடும்பத்தையும் சேத்து வச்சிருக்கு, அப்பா ஒங்கிட்ட சத்தியம் வாங்குனாங்களாம்ல, “அக்காவை அவசியம் கூட்டி வரனும்னு!’ நீ சொல்லவே இல்லையே! என்னவோ போ, அப்பா போன துக்கத்தை மீறி, அக்கா வந்து சேர்ந்தது பெரிய ஆறுதலா இருக்குடா ரெங்கா. நம்ம காரியஸ்த்தர விட்டு உன் கணக்குல நாலு கலம் நெல்லு கூடுதலா சேர்த்து தரச் சொல்லி இருக்கேன். நீ போய் ஆக வேண்டியதை பாரு!” என்று சொல்லவும், தலையிலிருந்து மலையே இறங்கியதைப்போல இருந்தது ரெங்கனுக்கு.

– மார்ச் 2014

Print Friendly, PDF & Email

1 thought on “துக்கஞ் சொல்லி!

  1. கதை மிக நன்று. வேலைக்காரனாக இருந்தாலும் ரெங்கனின் மனம் அவனுடைய முதலாளியினுடையதைவிட பெரிதாக இருக்கிறது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *