கப்பல் சலசலத்து மிதந்து கொண்டிருந்தது. உப்புக்கரித்தக் காற்று அவன் முகத்தில் அடித்துப்போனது.முகம் கோணலாகியிருந்த்து.
“அந்தத் தீவோட பேர் என்ன…”
“பேரே இல்லை…”
“பேரே இல்லையா…”
“பேரே இல்லாமல் இது மாதிரி நிறைய இருக்கு”
“மனுஷங்களாவது இருப்பாங்களா”
“ஆதிவாசிகளைப் பத்திக் கேக்கறையா… வாய்ப்பிருக்கலாம்”
“துறவிகள்…”
“சாமியார்க வந்து சேர்ர எடம்கற எண்ணத்திலெ கேக்கறையா.”
“எங்காச்சும் போய் சேரணும்…” விக்னேஷிற்கு விழிப்பு வந்தது. அவன் கண்முன் கிள்ளான் பகுதி என்று காட்டுகிற விதமாய் பெயர் பலகை இருந்தது. கனவில் இதென்ன சட்டென்று வந்து விட்டது.மலேய கிள்ளானுக்கு ஒரு தரம் போயிருந்தான் மேனன் நாதன் என்பவருக்கு பணம் கொடுக்கச் சொல்லியிருந்தான். நாலைந்து கட்டுப்பணத்தை ஒரு சாதாரணப் பையில் வைத்துக் கொண்டு போவது பரபரப்பாய் இருந்தது. அவன் கண்களில் பரபரப்பும் பயமும் கூடிவிட்டது. நாதனுக்கு பணத்தைக் கொடுத்துவிட்டால் எல்லா பாரமும் இறங்கிவிடும். பயம் ஒருவகைக் காய்ச்சலாய் மிதந்து கொண்டிருந்தது.
கிள்ளானில் பெரிய கிளர்ச்சியெல்லாம் நடந்ததாக கேள்விப்பட்டிருந்தான். எழுபது ஆண்டுகளுக்கு முன்னால் நடந்திருக்கிறது. அந்தப் பகுதிக்குப் போகும் போது என்னமோ பதட்டமாகி விடுவது போலாகிவிடுகிறது.
உடனே ஊருக்கு ஓடிப்போய்விடு என்று யாராவது துரத்தினால் ஓடிப்போய்விடலாம். இப்போது ஒற்றை ஆள். நன்கு தூங்குவது பாக்யம் என்றாகி விட்டது.
வேலை நிறுத்தம் என்று வந்தபோது கிள்ளானில் வேலை செய்து வந்த தொழிலாளர்களை உடனே குடியிருக்கும் இடங்களை விட்டு எங்காவது ஓடிவிட வேண்டுமாற்று உத்தரவு போட்டிருக்கிறார்கள். தண்ணீர் கூட கிடைக்கவில்லை. பச்சிளம் குழந்தைகள் தாகத்தால் வாடியிருக்கின்றனர். பொதுவான இந்தியர்கள் மோட்டார் வண்டிகள், மாட்டு வண்டிகளில் தண்ணீர், உணவுப் பொருட்களைக் கொண்டு வந்திருக்கின்றனர். அவர்களையும் கிளர்ச்சிக்காரர்கள் என்று கைது செய்திருக்கிறார்கள் கிள்ளான், போர்ட் கிள்ளான், பந்திஸ், மோரிப், பத்து ஆராங், தஞ்சோங் மாலிம் பகுதிகளில் தோட்டத் தொழிலாளர்களுக்கும் காவல் துறையினருக்கும் மோதல்கள் சாவுகள். எல்லாவற்றையும் அடக்கி விட்டார்கள். தோட்டப்புறங்கள் கொத்தடிமை கிராமங்கள் ஆகிவிட்டன.
பலரை வெளியேற்ற குடிசைகளுக்கும் தீவைத்திருக்கிறார்கள். தீக்கு பயந்து பலர் ஓடியிருக்கிறார்கள்.பலர் என்பது என்ன வேலை செய்வது என்றில்லாமல் கிடைக்கிற வேலையைச் செய்கிறவர்கள்.தமிழர்களுக்கு அதுதான் வாய்திருக்கிறதென்று செய்வார்கள்.
காய்ந்த ரப்பர் மரக்கிளைகள் கருகிக் கொண்டிருந்தன பால்மரவாசம் கிளர்ந்து மேலேறிக் கொண்டிருந்தது. ரப்பரும், வெள்ளீயமும் அடுக்கப்பட்டிருந்த இடத்தில் தீ பற்றிக் கொண்டது. புகையிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தவர்கள் உடம்பிலிருந்து துணி கழன்று விழுந்து விட்டது போல் இடுப்பிலிருந்த துணி தவிர மற்றெல்லாம் இல்லாமல் போய்விட்டது. அல்லது கருகிக் கொண்டிருப்பதை கழற்றி எறிந்திருப்பார்களா. தீயே ஆடையாக கருகியிருந்தவர்களும் இருக்கக் கூடும். சிவந்த பிழம்புகள் எங்குமாகி விட்டது. விக்னேஷின்உடம்பிலும் எந்தத் துணியும் இல்லை இடுப்பில் இருந்த ஜட்டியை வலது கையில் பிடித்திருந்தான். இன்னொரு கையில் சின்ன மரப்பாச்சி பொம்மை இருந்தது.
இந்தக் கனவு அவனுக்கு ஏனோ பிடித்திருப்பதாக விக்னேஷ் சொல்லிக் கொண்டான்.
யோசித்துப் பார்த்தபோது அவன் சின்ன வயதில் ரொம்பநாள் வைத்திருந்த மரப்பாச்சி பொம்மையும். மரப்பேழைப் பெட்டியும் ஞாபகத்திற்கு வந்தன.
மரப்பாச்சி பொம்மையும் , மரப்பேழைப்பெட்டியும் மட்டும் வைத்துக்கொண்டு ஒரு தீவிற்குள் இருக்கச் சொன்னால் இருந்து விடலாம் என்ற நினைப்பு அப்போதைக்கு வந்தது அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவனுக்கு வந்த கனவைப் போலவே.
ரொம்ப நேரத்திற்கு மரப்பாசி பொம்மையும், மரப்பேழையும் வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும் என்ற கேள்வி அவனுக்கு வரவேயில்லை.