(1931ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஒருவன் தன் உழைப்பால் எவ்விதம் உயர் நிலையை அடையலாம் என்பதைப் பற்றி விளக்க ஒரு நண்பரது சரித்திரத்தைச் சொல்ல விரும்புகிறேன். ஏழ்மையில் பிறந்து ஏழ்மையில் வளர்ந்து, பிறர் உதவியின்றி கல்வியில்லாதிருந்தும் உற்றார் உறவினரை விட்டு அந்நிய நாட்டில் தன் முயற்சியால் உயர்நிலையை அடைந்த திரு. ராமசாமி சேர்வையின் சரித்திரத்தைக் கேள். அவர் லட்சாதிகாரியாய் இறக்கவில்லை. ஏன் பொருளே வாழ்க்கையின் லட்சியமாய்க் கொண்டவர் அல்லர்.
தன்னாலியன்ற உதவி தன் இனத்தவர்களுக்கும், பிற பொது மக்களுக்கும் செய்து அவர்களது கஷ்டங்களை நீக்குவதே தனது வாழ்க்கையின் நோக்கங்களில் ஒன்றாகக் கொண்டவர் என்பதை மறக்கலாகாது. காலஞ்சென்ற நண்பர் இராமசாமியாருக்கு எழுதப் படிக்கவும் நன்றாய்த் தெரியாது. மாடுமேய்த்துக் கொண்டிருந்த இராமசாமி வறுமையின் கொடுமையால், விரட்டப் பெற்று தாய்க்குத் தெரியாமல் இலங்கைக்கு வந்தவர்களில் ஒருவர் என்பதை மறந்துவிடாதே.
புதுக்கோட்டை சமஸ்தானத்தில், திருமயம் தாலுக்கா மூவூர் என்னும் கிராமத்தில் இராமசாமி சேர்வை என்னும் ஓர் ஏழைக்குடியானவன் வயிற்றுதித்தவர். தகப்பன் பஞ்சத்தின் காரணமாய் இலங்கைக்குக் கூலி வேலை செய்ய வந்துவிட்டார். 12 வயதிலேயே தாயையும் பிறரையும் பாடுபட்டுக் காப்பாற்றும் பாரம் இராமசாமிக்கு ஏற்பட்டிருந்தது. இந்தியாவில் மாடு மேய்க்கும் பண்ணைக்காரனுக்கு என்ன வருமானம் கிடைக்கும் என்பதை கவனியுங்கள்! தன் தலைவிதி மாடு மேய்ப்பதே என்று எண்ணிச் சும்மாவிருக்கவில்லை. காலையில் கஞ்சியும் இல்லாது மாடுமேய்க்கப் போய் வெயிலில் வாடி குட்டைத் தண்ணீரில் இருகைத் தண்ணீரைப் பருகிப் பசியாறி மர நிழலில் சாய்ந்திருக்கும் சமயம், தனது ஆண்டைகளைப் போல் (முதலாளிகள்) தானும் வரமுடியாதா என்ற கனவு காண்பதுண்டாம்! தான் நினைக்கும் நினைவு முடிவு பெறுமோ, பிறரிடம் சொன்னால் ஏளனம் செய்வார்களோ என்ற எண்ணத்தால் தன் தாயிடம் அவற்றைச் சொல்லியதில்லை. காலை முதல் மாலை வரையில் ஒரு வேளைக் கஞ்சிக்குக் கஷ்டப்படவேண்டிய நிலைமையைக் கசிந்து எண்ணியெண்ணிப் பல நாள் இராமசாமி கண்ணீர் விட்டதுண்டு.
இளமையில் தேடிப் போடும் தகப்பனும் அயல்நாடு சென்றான். அவர் உள்ள இடமும் தெரியாது. பட்டினியால் உடல் மெலிந்த தாய் ஒரு பக்கம். என் செய்வான் சிறுவன்! தன் தகப்பன் சென்ற கண்டிப் பிரதேசத்தில் தேனும், பாலும் வடிவதாகக் கேள்விப்பட்டதுண்டு. அவ்விதம் செழுமை கொண்ட ஊரிலுள்ள தன் தகப்பன் ஏன் அது வரையில் தன்னை அழைத்துக் கொள்ளவில்லை என்ற கவலையும் நமது இராமசாமிக்குண்டு.
கண்டிக்குப் போகவேண்டும். அங்கே தானும் தன் தாயும் பசியாதிருக்க வேண்டும் என்ற ஆசை நாளுக்கு நாள் நமது இராமசாமிக்குப் பலப்பட்டுக் கொண்டே வந்தது. கண்டியோ வெகுதூரம். தண்ணீரில்லாக் குட்டைகளைத் தவிர வேறு சமுத்திரங்கண்டிலாத இராம சாமிக்குக் கடல் தாண்டக் கப்பலில் போகவேண்டுமே என்ற பயம் ஒரு பக்கம். கையில் காசுமில்லை. வழியும் தெரியாது. இவ்வித இடையூறுகள் இருந்த போதிலும், கண்டிக்குப் போக வேண்டும் என்ற எண்ணத்தை அவன் விட்டு விடவில்லை.
கோவில் திருநாள் பார்க்கத் திருமயம் சென்றான் ஒரு நாள் இராமசாமி. அத்தினமே இராமசாமிக்கும் பெருநாளாய் முடிந்தது. திருவிழா பார்க்கத் தாயிடம் விடை பெற்றுச் சென்றவன் கோவில் பக்கம் செல்லவேயில்லை. கடைகளில் ஜனங்கள் கூட்டமாய் நின்று தேவை யானவற்றை வாங்கும் காட்சியையும், கையில் காசில்லாது தான் நிற்க வேண்டியிருப்பதையும் எண்ணிய வண்ணமாயிருந்தான். அச்சமயம் வயது சென்ற ஒருவன் இராமசாமியைப் பார்த்து ”என்ன பேராண்டி சுகமா? வா பலகாரம் சாப்பிடுவோம்” என்றான். பையன் திரும்பிப் பார்த்தான். ஆள் யாரெனத் தெரியவில்லை. முன்பின் பார்த்த ஞாபகமும் இல்லை. “பலகாரம் சாப்பிடவா” என்று அழைப்பதைக் கண்டு ஒருவிதத்தில் சந்தோஷம் கொண்டான். ஆயினும் முன்பின் தெரியாதவர் பலகாரம் வாங்கிக் கொடுப்பானேன் என்ற திகைப்பும் ஏற்பட்டது. ஆச்சரியத்தோடு தன்னைக் கூப்பிட்ட ஆளைத் திரும்பிப் பார்த்தான் இராமசாமி.
காதில் பொன் கடுக்கனாடத் தலையில் சரிகை வேஷ்டி, கையில் தங்கக் காப்பு, 10 விரல் பொன் மோதிரங்கள், இடுப்பில் புதுவேஷ்டி, கையில் புதுக்குடை, காலில் புதிய செருப்பு போட்டு வெகு உல்லாசமாய் அந்தக் கிழவன் காணப்பெற்றான். மேற்சொல்லிய கிழவனுடன் வேறு ஒரு ஆளும் நின்று கொண்டிருந்தான். இராமசாமி ஆச்சரியப்பட்டு நின்றதைக் கண்டு ”தம்பி! பயப்படாதே. உன் அப்பா வந்துவிட்டாரா?” என்றான் கூட நின்ற ஆள்.
“அப்பா கண்டிச் சீமையில் இருக்கிறார் வரவில்லை” என்றான் இராமசாமி.
இராமசாமியின் தகப்பன் கண்டியில் இருப்பது அந்த புதிய ஆளுக்கு அப்பொழுதுதான் தெரியும். ஆயினும், இராமசாமியின் தகப்பனுடன் நெருங்கிப் பழகியவன் போல்,
“ஆம் அது தெரியும். உன் தகப்பன் எனக்கு மச்சான் தான் வேணும். கண்டிச் சீமையில் பெரிய வீடுவாசல்களுடன் நல்லாயிருக்கிறான். நான் வந்த கப்பலில் தானும் வருவதாகச் சொன்னான். ஆனால் வரமுடியாமற் போய்விட்டது. உன்னை எப்படியாவது கூப்பிட்டுக் கொண்டு வரும்படி சொன்னான். உன்னைக் காணாமல் உன் அப்பன் மிச்சம் கவலையுடனிருக்கிறான். உன்னைப் பார்த்தால் அவன் உயிரை விட்டுவிடுவான். வா போவோம்” என்றான்.
இராமசாமிக்கு இன்னது செய்வதென்று தெரியவில்லை. “தகப்பனுடைய உறவினன் என்கிறார். உறவினனாயில்லாவிட்டால் நமக்கேன் பலகாரம் கொடுக்கிறான்?” எனப் பலவாறாக எண்ணி மேற்சொல்லிய இருவருடன் ஓர் பலகாரக் கடையில் நுழைந்து வயிறாரத் தின்று வெளிக்கிளம்பும் சமயம் கூட வந்த பெரியவன் ”பேராண்டிவா கண்டிக்குப் போகலாம்.” என்றான். அந்த வயது சென்றவன் யார் தெரியுமா? அவன் தான் இலங்கைக்கு ஆள் சேர்க்கும் கங்காணி. கங்காணி அவன் என்ற இரகசியம் இராமசாமிக்குத் தெரியாது. தன் உறவினன் என்றே அவனை எண்ணியிருந்தான். கண்டிக்குப் போக வேண்டுமே என்ற வருத்தம் மறுபக்கம் தாய் சம்மதிப்பாளோ என்ற சந்தேகமும் இடையே. இந்நிலையில் கங்காணியைப் பார்த்து “அம்மாவைக் கேட்டுக் கொண்டு போகலாம்” என்றான்.
“பேராண்டி, நான் அவசரமாய்ப் போக வேண்டும். உன் அப்பன் உன்னை எப்படியும் அழைத்து வரச்சொன்னான். அதனால் நேராக உன் வீட்டுக்குப் போய் உன் அம்மாவைக் கேட்டேன். நீ திருமயம் வந்திருப்பதாகவும் உன்னைத் தேடி அழைத்துப் போகும்படி சொன்னாள். வந்து தேடி உன்னைக் கூப்பிட்டேன்” என்றான் கங்காணி.
இராமசாமிக்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை. கங்காணியை விட்டுப் போகவும் மனமில்லை. அதற்குள் கங்காணியும், ஒரு புது வேஷ்டியும் சட்டையும் வாங்கி இராமசாமிக்குக் கொடுத்து விட்டான். ஒன்றும் பதில் சொல்லாமல் கங்காணி பின்னே போகும் சமயம், “பேராண்டி, நீ இனி ஒன்றுக்கும் பயப்பட வேண்டாம். நீ மாடு மேய்க்கப் போக வேண்டாம். கண்டிச் சீமை மிகவும் நல்ல சீமை. நீ சும்மாயிருந்தாலும் நாள் ஒன்றுக்கு 1 ரூபாய் கொண்டு வந்து கொடுப்பார்கள். செலவு உனக்கு ஒன்றுமில்லை. நீ வந்து இரண்டொரு மாதம் கழித்து அம்மாவையும் அழைத்துப் போகலாம். ஏன் கஷ்டப்பட வேண்டும். எனக்கு ஒரு பெண் இருக்கிறது. அதை உனக்குக் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று உன் அப்பன் சொன்னான். அதற்குச் சரி என்றிருக்கிறேன்” என்றான் கங்காணி.
“நல்ல சம்பளம், போதாக் குறைக்குக் கலியாணம் வேறு செய்து கொடுக்கிறான்”. என்று எண்ணிச் சந்தோஷப்பட்டுக் கொண்டு தாயையும் மறந்து தொண்டித் துறைமுகம் சேர்ந்தான். கங்காணி கையில் அகப்பட்ட சிறுவன் என் செய்யமுடியும். தொண்டிக் கரைக்கு வந்து கப்பலுக்குக் காத்திருந்து கப்பலேறி மன்னார் வந்திறங்கி, கண்டிக்குக் காட்டு மார்க்கமாய் நடக்கத் தலைப்பட்டார்கள். தலையில் சாக்கு மூட்டை திருமயம் சந்தையில் “பேராண்டி” என்றது அன்புடன் கூப்பிட்ட வார்த்தையெல்லாம் போய்விட்டது. அதிகார வார்த்தைகள் இலங்கைக் கரைக்கு வந்ததும் ஏற்பட்டு விட்டது.
தன் தகப்பனைக் காணப்போகிறோம். பட்டினியாலும் பசியாலும் வாடாது உயர் நிலையில் இருக்கப் போகிறோம் என்ற ஆசை பின்னே பிடித்துத் தள்ள, கங்காணி ஆடம்பரமாய் முன்னே செல்லக் கண்டிக்கு வரும் கூட்டத்தாருடன் அநுராதபுரம், தும்பளை, பன்னாமம் முதலியவிடங்கள் வழியாய் நடந்து 15வது நாள் கண்டி நகரம் வந்து சேர்ந்தான் நமது இராமசாமியும்.
கண்டி வந்ததும் இராமசாமிக்குக் குளிர் தாங்க முடியவில்லை. “கங்காணியைப் பார்த்து, அப்பா எங்கேயிருக்கிறார்” என்றான் இராமசாமி. “நாளைக்குப் போகலாம்” என்று சொல்லி மறுநாள் கலகாப் பகுதியில் உள்ள கடுதாசித் தோட்டத்திற்கு சுமார் 55 வருஷங்க ளுக்கு முன் நமது இராமசாமியைக் கங்காணி அழைத்து வந்தான். தோட்டத்திற்கு வந்ததும் தகப்பனைப் பற்றி விசாரித்தான். போகவும் ஆசை ஒரு பக்கம். பயம் ஒரு பக்கம். தாயை விட்டுப் போன இராமசாமி. “கம்பளைக்குப் போயிருக்கிறார் நாளைக்கு வருவார்” என்றான் கங்காணி முதல் நாள். அன்று யாதொரு வேலையும் இராமசாமிக்குக் கொடுக்கவில்லை. 10க்கும் 10க்கும் உள்ள ஓர் அறையில் படுத்துறங்கினார்கள். காலையில் தப்படிக்கப் பெற்றது. புலியால் விரட்டப்பட்ட ஆடுகள் போல் அறைகளை விட்டு ஆட்கள் அவசர அவசரமாய் வெளியேறி னார்கள். இராமசாமியும் கிளம்பினான். தன்னை அழைத்து வந்த கங்காணியைக் காண ஒருவித பயமேற்பட்டது. கங்காணி போட்ட சப்தம் காட்டின் நாலு பக்கங்களிலும் எதிரொலி கிளம்பியது. யாதொரு வேலையும் இல்லாமல் சோறு போடுவதாகவும் பெண்ணைக் கலியா ணம் செய்து கொடுப்பதாகவும் சொன்ன கங்காணியைப் பார்க்க பயங்கரமாயிருந்தது. வேலைக்குப் போகாமல் தங்க எண்ணித் தயங்கி நின்றான். இராமசாமியைப் பார்த்து “ராசா வீட்டுப் பிள்ளையோ என்ன பார்க்கிறே” என்றான் கங்காணி. இராமசாமி இன்னது செய்வது என்று தெரியாமல் வேலைக்குப் போனான்.
காலையில் 8 மணியளவில் மாட்டின் மேல் ஏறிக் கொண்டு காட்டுப் பக்கம் போய் உடல் நோகாது வேலை செய்து வந்த இராமசாமிக்குத் தோட்ட வேலை சுகமாயிருக்குமா? அவனுக்கு வேலை ஓர் பாரமாயிருந்தது. தகப்பன் எங்கே என்று மறுநாள் விசாரிக்க கங்காணி ஒரு அடி இராமசாமியின் முதுகில் வைத்தான். அப்பொழுதுதான் இராமசாமிக்கு உண்மை விளங்கியது. என் செய்வான்?
எப்படியும் தோட்டம் விட்டுப் போக வேண்டும் என்றெண்ணிச் சமயம் பார்த்திருந் தான். கங்காணிக்குத் தெரியாமல் ஓடுகிறவர்கள் காவற்காரர்களால் பிடிக்கப்பட்டு கங்காணியின் வீட்டு முன் நிறுத்தப்பெற்றிருக்கும் கம்பத்தில் கட்டப்பட்டு அடிக்கப்படுவதைத் தினந்தோறும் காணும் ராமசாமிக்கு ஓடவும் தைரியம் வரவில்லை. விதியை நொந்து ஒரு வேளை பலகாரத்திற்கும் நாலு பணம் வேட்டிக்கும் அடிமையானோமே என்ற எண்ணத்தால் வருந்தி மற்றைய தொழிலாளர்கள் போல் வேலை செய்யத் தலைப்பட்டான். சிறுபிள்ளையெனினும் இராமசாமி புத்திசாலி. படிப்பில்லை எனினும் நன்மையிது தீமையிது என்பதைப் பகுத்தறியும் குணம் உடையவன். தாயையும் பிற உறவினர்களையும் விட்டு வந்தோம் வீணாய் ஓடி அடிபட்டுச் சாகவேண்டாம். உண்மையில் உழைத்து நாமும் கங்காணியைப் போல் வரப் பார்ப்போம் என்ற ஆசை நமது இராமசாமிக்கு ஏற்பட்டது. தானும் கங்காணியாய் வரவேண்டும். அதற்கு உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தால் கங்காணியின் கட்டளையை உண் மையுடன் ஏற்று உழைத்து அவனுடைய தயவை சம்பாதிப்பதே நன்மையென்று திட்டம் செய்து கொண்டான். கங்காணிக்குத் தன் மேல் பிரியம் ஏற்படும்படியும் நம்பிக்கை உண்டா கும்படியும் நடந்து வந்தான். தனக்குக் கொடுக்கப் பெற்ற வேலை கஷ்டமெனினும், எப்படியும் செய்து முடிக்க வேண்டும் என்று சந்தோஷத்துடன் ஏற்றுச் செய்து வந்தான். கஷ்டமான வேலை கங்காணி கொடுக்கிறானே என்ற முகக்குறி இராமசாமியிடம் ஒரு சமயமும் ஏற்பட்டதில்லை. இதன் காரணமாய் கங்காணிக்கு இவன் பேரில் நம்பிக்கையும் அன்பு மேற் பட்டது. தன்னுடைய பண வரவு செலவு முதலியவையெல்லாம் இராமசாமியின் மூலமாகச் செய்து வரத் தலைப்பட்டான்.
இராமசாமி, பெரிய கங்காணியின் வேலையாய் கடைக்காரர்களிடமும் செட்டிமார்களிடமும் அடிக்கடி போய் வரவேண்டிய நிலைமையில் அவர்கட்கு இவனிடத்தில் நம்பிக்கை ஏற்பட்டது. இராமசாமி யோக்கிய ஊக்கமுள்ளவன், நம்பிக்கைக்கு பாத்திரமுள்ளவன் என்ற பெயர் ஏற்பட்டது. காலக்கிரமத்தில் இராமசாமி கருவானை. பசுமலை முதலிய தோட்டங்களில் வேலை செய்து கடைசியாய் ஓர் சில்லரைக் கங்காணியாய் சுமார் 45 வருட காலத்திற்கு முன் நூரளை வம்பரக் கொல்லைத் தோட்டத்திற்கு வந்து சேர்ந்தான். இச்சமயம் அத்தோட்டத்தில் வேலை பார்த்த துரைக்கு இராமசாமியின் வேலையில் திருப்தியேற்பட்டது. நம்பிக்கையும் ஏற்பட்டது. இவனைப் பெரிய கங்காணியாக்கி முன்னேற வைத்தான். போதிய பொருளுதவியும் தோட்டத்துரையே செய்தான்.
தனக்குப் பெரிய கங்காணி வேலை கிடைத்து விட்டதே என்ற பெருமை இராமசாமிக்கு ஏற்படவில்லை தன்னிடம் உள்ள தொழிலாளர்களைத் தன் சகோதரர்களைப் போல் நடத்தி வந்தார். தொழிலாளர்களுக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்களைத் தன் கஷ்டங்கள் போல் பாவித்து அவற்றைத் தன்னால் இயன்ற அளவு நீக்கி வந்தார். அக்காரணம் பற்றியே ஒரே தோட்டத்தில் சுமார் 45 வருஷ காலமாய் பெரிய கங்காணி வேலை பார்த்து வர ஏதுவாயிற்று.
திரு. இராமசாமி சேர்வை தனது ஆட்களுக்கு மாத்திரம் நன்மை செய்து வந்தார் என்று சொல்ல முடியாது. இந்தியர்களுக்கு ஆகவேண்டிய பொது நன்மைக்கான காரியங்கள் ஒவ்வொன்றையும் தன்னால் கூடிய அளவு கவனித்து உதவி செய்து வந்தார் என்பது மிகையாகாது. தூரளைப் பகுதியில் இவரைப் பற்றி நன்மையாகச் சொல்லாதவர் இல்லை.
– 1931
– ஈழத்துச் சிறுகதைக் களஞ்சியம், முதற் பதிப்பு: நவம்பர் 2019, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வடக்கு மாகாணம்.
கோ.நடேசய்யர்
14 சனவரி 1887 அன்று தமிழகத்தில் பிறந்து இலங்கையின் மலையத்தில் குடியேறிய தமிழறிஞர் கோதண்டராம நடேசய்யர் பதிப்பாளராகவும் அரசியல் வாதியாகவும் இதழாசிரியராகவும் எழுத்தாளராகவும் பன்முகதளங்களில் இயங்கியவர். 1924 முதல் இலங்கை சட்டசபையிலும், பின்னர் இலங்கை அரசாங்க சபையிலும் உறுப்பினராக இருந்தவர். 1914இல் வணிகர்களுக்காக வர்த்தக மித்திரன் என்ற பத்திரிகையை மாதமிருமுறையும், பின்னர் வாரமொரு முறையும் நடத்தினார். ஒற்றன் என்ற புதினத்தையும் எழுதினார் 1921-ஆம் ஆண்டு தேசநேசன் என்ற நாளிதழைத் தொடங்கினார். கொழும்பு நகரில் வாழ்ந்த இந்தியத் தமிழர்களின் வேதனைகளை விவரிப்பதற்காகவே, தி சிட்டிசன் என்ற ஆங்கில வார இதழையும் தொடங்கினார். “தேசபக்தன்” இதழின் முகப்பில் புதிய மலையக ஆத்திசூடிப் பாக்களை எழுதி நடேசய்யர் வெளியிட்டார். வெற்றியுனதே, நீ மயங்குவதேன், இந்திய இலங்கை ஒப்பந்தம், தொழிலாளர் சட்டப் புத்தகம், அழகிய இலங்கை என பதினான்குக்கு மேற்பட்ட நூல்களை எழுதிய நடேசய்யரால் எழுதப்பட்ட சிறுகதையே “ராமசாமி சேர்வையின் சரிதம்” ஆகும்.