திருடராய்ப் பார்த்து…

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 10, 2016
பார்வையிட்டோர்: 7,304 
 

குமரனுக்கு காலையிலேயே பரபரப்பு தொற்றிக்கொண்டது. அவன் அவனது அலுவலக வரிசை முறைப்படி மட்டப்பாறைக்கு மாற்றலாகி பணி புரிந்து கொண்டிருந்தான். காந்தியார் கனவை நனவாக்கவும் இந்நாட்டு கைத்தொழில்களை அழியாமல் காப்பதற்காகவும் உருவாக்கப்பட்டு இயங்கி வருகின்ற கைத்தறி துணி விற்பனை மையங்களில் ஒன்றின் கிளை மேலாளராகப் பொறுப்பேற்றிருந்தான். வாரா வாரம் சனிக்கிழமை தன் சொந்த மண்ணான புதுச்சேரிக்கு வந்து ஞாயிற்றுக்கிழமை மனைவி மக்களுடன் நாளைக் கழித்துவிட்டு திங்கள்கிழமை காலை மட்டப்பாறைக்குப் பயணப்படுவது வழக்கம்.

இருப்பு பொறுப்புடன் கூடிய பணியில் உள்ள எவருக்கும் ஆண்டிற்கு இருமுறை உயிரை வாங்குவது இருப்புச் சோதனை என்பது எவராலும் மறுக்க இயலாது. அவர்கள் கட்டாயமாக அரையாண்டு மற்றும் முழு ஆண்டு இருப்புச் சோதனைகளைச் சந்தித்தே ஆக வேண்டும் என்பது விதி. அதுவும் மார்ச் 31-க்கான இருப்பு சோதனையென்பது அவ்வாண்டுக்கான இறுதித் தணிக்கையுடன் தொடர்புடையது என்பதால் தணிக்கையின்போது ஏதும் இருப்புக் குறைவு வந்துவிடக்கூடாது என்பதில் முழுக்

திருடராய்ப் பார்த்துகவனத்தையும் செலுத்திச் செயல்பட்டான் குமரன். ஒரு வாரத்திற்கு முன்னதாகவே புத்தக சரக்கிருப்போடு ஒவ்வொரு துணிவகைகளின் இருப்பையும் ஒப்பிட்டுப் பார்த்து ஒன்றிரண்டு வகைகளில் ஏற்பட்ட குறைவிற்கு தாங்களாகவே சொந்தப் பணத்தில் ரசீது போட்டு சரி செய்து வைத்திருந்தனர் குமரனும் சக பணியாளர்களும்.

ஏப்ரல் முதல் தேதி ஞாயிற்றுக்கிழமையாதலால் இரண்டாம் தேதி சரியாக பத்து மணிக்கு வந்துவிடுவேன் என்று தணிக்கையாளர் தகவல் அளித்திருந்தார். அதனால் சனிக்கிழமை இரவே சற்று கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டு இருப்பு சோதனைக்கு ஏதுவாக சரக்குகளை மிக நேர்த்தியாக அடுக்கி வைத்துவிட்டு சென்றிருந்தனர்.

திங்கள்கிழமை காலை சற்று சீக்கிரமாகவே புறப்படத் தயாரான குமரனிடம் வழக்கம்போல் அந்த மாதத்திற்கான அரிசி, மளிகை, பால், சமையல் எரிவாயு மற்றும் காய்கறி செலவுகளுக்கான பட்டியலை அடுக்கினாள் அவன் மனைவி வள்ளி.

“”இரு. அவசரப்படாதே. சனிக்கிழமை வரை சம்பளத்துக்கான காசோலை வந்து சேரலே. எப்படியும் இன்னிக்கு வந்து சேர்ந்திடும். இந்த வாரம் இருக்கிறதை வச்சி சமாளிச்சிக்கோ” என்ற குமரனை எரித்துவிடுவதுபோல் பார்த்தாள்.

“”வர வியாழக்கிழமை என் தம்பிக்கு நிச்சயதார்த்தம்முன்னு எங்கப்பா சொல்லிட்டுப் போனதாவது ஞாபகம் இருக்கா?” வள்ளி.

“”இருக்குதுடி” பல்லைக் கடித்துக்கொண்டு பதில் சொன்னான்.

“”கடிக்காதீங்க. உங்களுக்கு வர வர குடும்பத்து மேலே அக்கறை கொறைஞ்சுகிட்டே வருது”.

துணிமணிகளை எடுத்து அவசரமாக பையில் திணித்து முடித்தவனுக்கு எதையோ மறந்துவிட்டதாக ஒரு நினைப்பு. திடீரென ஞாபகத்துக்கு வந்தவனாய் புத்தக அடுக்கைத் துழாவ ஆரம்பித்தான்.

“”அங்க என்னாத்த வச்சிட்டு துழாவிக்கிட்டுக் கெடக்கிறீங்க?”

“”இல்லே. பட்டுக்கோட்டை பாடல்கள் புத்தகம் இருந்துச்சி. எங்கேயோ வச்சிட்டேன்”

“”அது எதுக்காம்?”

“”ஞாயிற்றுக்கிழமை தமிழ்ச் சங்கத்திலே ஒரு கவியரங்கம். கவிதை வாசிக்கணும்.”

“”அது சரி. இதுக்கெல்லாம் உங்களுக்கு நேரம் இருக்கும். எங்க வீட்டு விசேஷமின்னாதான் உங்களுக்கு ஞாபகம் இருக்காது” என்றவள் படுக்கை அறையில் இருந்த அப்புத்தகத்தை எடுத்து வந்து அவன் கையில் திணித்தாள்.

அவன் அவசரமாகப் பெற்றுக்கொண்டு ஒரு பழுப்பு நிற உரையில் வைத்து பையில் வைத்துக் கொண்டான். அந்தப் புத்தகம் கச்சிதமாக ஒரு நூறு ரூபாய் கட்டு அளவிற்கு இருந்தது.

“”அப்ப நான் வரட்டுமா?” என்றவன் அவனது மேல் சட்டைப் பையிலிருந்து இருநூறு ரூபாயை எடுத்து மனைவியிடம் நீட்டினான்.

“”இதை வச்சுக்கோ. வியாழக்கிழமை விடுப்பு போட்டுட்டு வந்துடுறேன். ஊருக்குப் போயி வரலாம்.”

வள்ளியின் முகத்தில் லேசான புன்னகை அரும்பியது.

“”பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க.”

அவசர அவசரமாய் நகரப் பேருந்தைப் பிடித்து பேருந்து நிலையம் வந்தவன் மட்டப்பாறை செல்லும் பேருந்துகள் நிரம்பி வழிவதைக் கண்டான். பிறகுதான் தெரிந்து கொண்டான் அது சந்தை நடக்கும் தினமென்று. நேரத்திற்கு விற்பனையகத்திற்குச் செல்ல வேண்டுமென்ற உந்துதலில் புறப்படத் தயாராக இருந்த பேருந்தில் ஏறி நின்றபடியே பயணம் செய்தான். வழி நெடுகிலும் பயணிகள் ஏறி பேருந்து நிரம்பி வழிந்ததே தவிர குறைந்தபாடில்லை.

பேருந்துகள் அரை கி.மீ.க்கு முன்னதாகவே நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். “இதற்கு யாரை நொந்து கொள்வது?’

என நினைத்தவனாய் இறங்கி நடக்கத் தொடங்கினான். நேராக அறைக்குச் சென்றவன் பையை வைத்துவிட்டு அறையைப் பூட்டிக் கொண்டு விற்பனையகம் வருவதற்கும் தணிக்கையாளர் வந்து சேருவதற்கும் சரியாக இருந்தது.

வந்தவருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு சக பணியாளர்களிடம் சாவியைக் கொடுத்துவிட்டு விற்பனையகத்தைத் திறந்து சுத்தம் செய்யச் சொல்லிவிட்டு தணிக்கையாளரை அழைத்துக் கொண்டு தேநீர் கடைக்கு வந்தான்.

“”எனக்கு எதுவும் வேண்டாம் தம்பி” என முதலில் மறுத்தாலும் குமரன் வாங்கித்தந்த தேநீருடன் சுடச்சுட இரண்டு மசால் வடையையும் எடுத்துக் கொண்டார்.

இடையில் எவ்வளவு சரக்கு இருப்பு மதிப்பு, சென்ற முறை தணிக்கை செய்தவரின் விவரம் போன்றவற்றைக் கேட்டுத் தெரிந்துகொண்டார்.

விற்பனையகத்தில் நுழைந்தவர் சுற்றி நோட்டமிட்டார்.

தணிக்கையாளர் வழக்கமாக கையிருப்புத் தொகையைச் சரிபார்ப்பது முறைமையென்பதால் ரொக்கப் பதிவேட்டையும் கையிருப்புத் தொகையையும் எடுத்து மேசை மீது வைத்தான்.

“”எல்லாம் சரியா இருக்குதா?”

“”இருக்குதுங்க ஐயா”.

“”சரி சரி. அப்படியே குறைஞ்சாலும் நீங்கதான் சரிபண்ணி வங்கியில கட்டப் போறீங்க” என்றவர் “”ரூபா பைசா விவரம் சொல்லுங்க” என்றார்.

குமரன் சொல்லச் சொல்ல சரிபார்த்து கையொப்பமிட்டார்.

“”தினைக்கும் புதுச்சேரியில இருந்தா வரீங்க?”

“”இல்லீங்கய்யா, வாரம் ஒரு தடவை போயிட்டு வந்துடுவேன்.” என்று கூறியபடி இருப்புப் பதிவேட்டை எடுத்து தணிக்கையாளர் முன் வைத்தான் குமரன்.

“”சொல்லுப்பா” என்ற அவரது ஆணையை எதிர்பார்த்திருந்த விற்பனையாளர் மதி வரிசையாக அடுக்கப்பட்டிருந்த சரக்குகளின் குறியீட்டு எண் எண்ணிக்கை விவரங்களைச் சொல்லச் சொல்ல தணிக்கையாளர் “”அப்புறம்”, “”அப்புறம்” என்று கூறிக்கொண்டே இருப்புப் பதிவேட்டில் சரிபார்க்கப்பட்டதற்கான அடையாளமிட்டு கையொப்பமிட்டுக்கொண்டு வந்தார்.

“”புதுச்சேரியில இருந்து ஏதாச்சும் புடிச்சிக்கிட்டு வந்திருக்கிறீங்களா?”

“”புரியலீங்க.”

“”இன்னாங்க புரியலங்கிறீங்க. அங்கே எல்லாம் ரொம்ப மலிவாக் கிடைக்குதாமே. வரும்போது ரெண்டு எம்.சி. புடிச்சிப் போட்டுட்டு வரவேண்டியதுதானே?”

“”பழக்கமில்லீங்க ஐயா”

ஏதோ பெரிய நகைச்சுவையைக் கேட்டுவிட்டது போல வாய்விட்டுச் சிரித்தார். குமரன் ஏதோ தவறு புரிந்து விட்டதைப்போல் அவனை ஏளனமாகப் பார்த்தார் தணிக்கையாளர்.

“”ஏன்யா, நான் இன்னிக்கு வருவேன்னு தெரியுமில்ல. ஒரு விருந்தாளியைக் கவனிக்கிற மாதிரி நம்மள கண்டுக்கிட்டு இருக்கலாமில்ல.”

ஒருபுறம் விற்பனையாளர் மதி சொல்லச் சொல்ல தணிக்கையாளர் சரி பார்க்கும் வேலையும் பெயரளவுக்கு நடந்து கொண்டிருந்தது.

“”பெரிய தப்பு பண்ணிட்டியே” என்று தணிக்கையாளர் சொன்னவுடன் பதறிப் போன குமரன்.

“”என்னாங்க ஐயா?” என்றான்.

“”பின்ன என்ன? நான் என்னமோ நெனைச்சிக்கிட்டு வந்தேன். ஒண்ணும் சரியில்லையே.”

“”கணக்குல எதனாச்சும் வித்தியாசப்படுதுங்களா?”

“”ச்சூ… அதெல்லாம் சரியாத்தான் இருக்குது. அப்படியே வித்தியாசம் வந்தாலும் சரி பண்ணிக்கலாம். நீ, கையோட ரெண்டு புட்டியைப் புடிச்சிப் போட்டுட்டு வந்திருந்தியானா இந்நேரம் கண்ணை மூடிக்கிட்டு கையெழுத்தைப் போட்டுட்டு போயிக்கிட்டே இருப்பேன்.” என்று ஆதங்கப்பட்டார்.

“”ஐயா, கணக்குல ஏதாச்சும் குறை இருந்தா பதில் சொல்ல வேண்டியது என் பொறுப்பு. நீங்க எப்படி வேணுமின்னாலும் பார்த்துக்குங்க மேற்கொண்டு சம்பந்தா சம்பந்தமில்லாமல் எதுவும் கேட்காதீங்க” என்றான் குமரன் சற்று சூடாகவே.

தணிக்கையாளர் தன்னை இச்சூடு பெரியதாக பாதித்ததாகவே காட்டிக்கொள்ளவில்லை.

விற்பனையாளரிடம் மட்டும் “”இன்னா மதி உங்க மேனேசரு எதுவும் பிடி கொடுத்துப் பேச மாட்டேங்கிறாரே” என்றார் இரகசியமாக.

இருப்பு சோதனைப்பணி ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.

“”சரிங்க குமரன். நீங்க பட்டியல் தயார்பண்ணி அலுவலகத்துக்கு மதிகிட்ட கொடுத்தனுப்புங்க. அறிக்கை தயார்பண்ணிக் கொடுத்தனுப்புறேன்” என்று எழுந்தவர் “”மதி எனக்கு சட்டைக்கு இரண்டரை மீட்டர் போதுமா?” என்று கேட்டார்.

“”சரியா இருக்குங்க” மதி ஆமோதித்தான்.

மூன்று சட்டை மடிப்புகளை உருவிய தணிக்கையாளர் “” இது ஒன்னுன்னுலேயும் இரண்டரை மீட்டர் கிழிங்க”என்றார்.

மதி துணிகளைக் கிழித்து மடித்து வைத்தான். தணிக்கையாளர் இரண்டு வேட்டிகளைத் தேர்வு செய்து அதன் மீது வைத்தார்.

“”நம்ம குடும்பம் பரம்பரையா கதர் கட்டற குடும்பம். மதி இதை ஒரு பையிலே போடு” என்றார்.

“”குமரன், இதை உங்க கையால எடுத்துக் கொடுங்க.”

“”ஐயா இரசீது போட்டுடலாங்களா?” வெள்ளந்தியாக கேட்ட குமரனை நோக்கி ஒரு நமட்டுச் சிரிப்பு சிரித்தவர்.

“”யோவ், கணக்குல சரி பண்ணிக்கையா. வரட்டுமா?” பதிலுக்கு எதிர்பாராமல் விற்பனையகத்திலிருந்து கிளம்பினார் தணிக்கையாளர்.

விற்பனை பிரிவுக்கு புதியதாக வந்திருந்த குமரனுக்கு இது வித்தியாசமாகவே இருந்தது.

“”என்ன மதி இது?” என்றான் குமரன், அதிர்ச்சியிலிருந்து மீளாமல்.

“”இது தேவலாங்க. இன்னும் பெரிய கொடும்பாவிங்க எல்லாம் இருக்கிறாங்க.”

மதி வெகு ஆண்டுகளாக விற்பனையாளராகவே இருப்பவன். அவன் தன் அனுபவத்திலிருந்து சொன்னான்.

“”இவனுங்க திருந்தவே மாட்டானுங்களா?”

தங்கள் நிலையை நொந்துகொண்டவர்களாக குமரன் பட்டியல் தயாரிக்கும் பணியிலும் விற்பனையாளர்கள் கலைத்துப் போடப்பட்ட துணி வகைகளை சரிசெய்து அடுக்கும் பணியிலும் கவனம் செலுத்தினர்.

இரவு உணவை சிற்றூண்டி விடுதியிலேயே முடித்த குமரன் அறைக்குச் சென்று உடை மாற்றிக் கொண்டு கவியரங்கத்திற்கான தயாரிப்பில் ஈடுபடலாமென்று பையை எடுத்தவனுக்கு மற்றுமொரு அதிர்ச்சி காத்திருந்தது. பை கத்தியால் கிழிக்கப்பட்டிருந்தது.

காலையில் அவன் பேருந்தில் நெரிசலில் நின்று கொண்டு பயணம் செய்து வந்தது நினைவுக்கு வந்தது. பையில் அவன் பணமேதும் வைத்திருக்கவில்லை என்பதில் அவனுக்குச் சற்று நிம்மதி. வேறு ஏதேனும் பறிபோய் இருக்கிறதா எனத் தெரிந்து கொள்ள பையை ஆய்ந்தவன் களவாடப்பட்டிருந்தது உறைக்குள் வைத்திருந்த பட்டுக்கோட்டையார் பாடல்கள் புத்தகம் என தெரிந்து கொண்டான்.

“மாச ஆரம்பமாச்சே கத்தையா இருக்கவே பணமின்னு நெனைச்சிக்கிட்டு திருடி இருப்பான்” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். தணிக்கையாளரிடம் துணி பறிகொடுத்ததையும் இதையும் ஒப்பிட்டுப் பார்த்தான்.

“திருட்டு நமக்கு தெரிஞ்சும் நடக்குது. தெரியாமலும் நடக்குது. ஆனா திட்டம் போட்டு நடக்குது.”

தாளை எடுத்தான். தான் எழுதப்போகும் கவியரங்கக் கவிதைக்கு தலைப்பிட்டான்

“திருடராய்ப் பார்த்து திருந்தாவிட்டால்.’

– மு.ஆதிராமன் (பெப்ரவரி 2014)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *