(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“அப்பா!” என்றான் பையன். “ஏண்டா, ராஜீ?” என்றார் அப்பா.
“பொங்கல் அப்பா…..”
“பொங்கல்தானே?……. நாளைக்கு நம்ம வீட்டிலே பண்ணச் சொன்னால் போச்சு; உனக்கு சர்க்கரைப் பொங்கல் வேணுமா; சாதாப் பொங்கல் வேணுமா?”
“ஊ ஹும்….. அது இல்லேப்பா, பொங்கலுக்கு…. பொங்கலுக்கு….”
“ஒஹோ, பொங்கலுக்கா?….என்ன வேணும் உனக்கு?”
“புஷ்-கோட், அப்பா!”
“இவ்வளவுதானே? தைத்து விட்டால் போச்சு. எங்கே தங்கச்சி……?”
“இதோ, வந்துட்டேன்!”
‘உனக்கு ஒன்னும் வேணாமாம்மா?”
“எனக்கா?…… எனக்கு……. எனக்குப் பட்டுப்பாவாடை, பட்டு ஜாக்கெட்டு, அப்பாலே……. அப்பாலே……. எனக்கு எல்லாம் வேணும்ப்பா!”
“சரி, உனக்கு வேணுங்கிறதெல்லாம் அந்த எல்லாங்கிறதுல அடங்கிப் போச்சு இல்லையா?” என்றார் அப்பா சிரித்துக் கொண்டே.
இந்தச் சமயத்தில் கடைக்குட்டி கல்யாணி எங்கிருந்தோ ஓடோடியும் வந்து, அப்பாவின் கால்களை தன் பிஞ்சுக் கைகளால் சேர்த்துப் பிடித்துக் கொண்டு, “அப்பா, அப்பா, அப்ப்பா!” என்று வாய் ஓயாமல் அடித்துக் கொண்டாள்.
“என்னடா, கண்ணு?” என்றார்.அவர், அவளை மேலே தூக்கிப் பிடித்துக் கொண்டே.
“எல்லோர் வீட்டுக்கும் பொங்கல் வரப்போகிறதாமே, அது நம்மவீட்டுக்கு வருமாப்பா?” என்று ஒரு போடு போட்டாள் அவள்.
அவ்வளவுதான்; எல்லோரும் ‘கொல்’ என்று சிரித்தார்கள்.
அந்தச்சிரிப்பொலியைத் தொடர்ந்து, “இதென்ன நியூஸென்ஸ்! என்ற வகைச் சொல் படுக்கையறையிலிருந்து வந்தது.
எல்லோரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தனர்; மத்தியானம் சாப்பிட்டுவிட்டுப் படுத்த எஜமானியம்மாள் அப்போதுதான்துக்கம் கலைந்து எழுந்து, கட்டிலின் மேல் உட்கார்ந்திருந்தாள்.
ஹாலில் மாட்டியிருந்த கடிகாரம் மணி ஆறு அடித்து ஓய்ந்தது.
“ஜம்பு, டேய் ஜம்பு….!”
இந்தக் குரலைக் கேட்டதும் சமையலறையிலிருந்த ஜம்பு கரண்டியும் கையுமாக ஓடோடியும் வந்து அவளுக்கு எதிரே நின்றான்.
“ஏண்டா இடியட், நான் எழுந்து எவ்வளவு நேரமாச்சு? காப்பி கொண்டு வந்து கொடுப்பதற்கு என்ன கேடு?”
“ஒண்ணுமில்லேம்மா; இதோ வந்துட்டேன்!” என்றுதடுமாறிக் கொண்டே சென்று, அடுத்த நிமிஷமே கையில் காப்பியுடன் உள்ளே நுழைந்தான் ஜம்பு.
எரிச்சலுடன் அதை வாங்கி அவன் முகத்தில் கொட்டி விட்டு எஜமானியம்மாள் ஹாலுக்கு வந்தாள். அவளைக் கண்டதும் குழந்தைகள் மூன்றும் பீதிநிறைந்த கண்களுடன் அப்பாவிடமிருந்து ஒதுங்கின.
“ஏன் சுஜாதா, என்மேல் இன்னுமா கோபம் உனக்கு” என்று குழைந்து கொண்டே எஜமானியம்மாளை நெருங்கினார் எஜமான்.
அவள் பதிலுக்கு ஒன்றும் சொல்லாமல் அவரை எரித்து விடுபவள் போல் பார்த்தாள்.
இவ்வளவு தூரம் அவளுடைய கோபத்துக்கு அவர் ஆளாகியிருந்ததற்கு காரணம் இதுதான்:
எஜமானியம்மாளுக்கு ஒரு ‘பிரண்ட்’ உண்டு. ஜாலிலைப்பில் ஈடுபட்டிருந்த அந்த ப்ரெண்டுக்குச் சட்டைப் பை எப்போதுமே காலி?-எனவே. அடிக்கடி அதை இட்டு நிரப்ப வேண்டிய பொறுப்பு எஜமானியம்மாளைச் சார்ந்தது. அதற்காக ‘அன்பளிப்பு’ என்னும் பேரால் அவளிடமிருந்து அவன் ஏதாவது, அவ்வப்போது பெற்றுக் கொள்வது வழக்கம். சாதாரணமாக அல்ல; கொஞ்சம் பிகுவுடன்தான். அந்த வழக்கத்தின் காரணமாக அன்று எஜமான் கையிலிருந்த வைர மோதிரத்திற்கு பிடித்தது தலைவலி. அதை எப்படியாவது பிடுங்கித் தன் ‘ப்ரெண்’டுக்குக் கொடுத்து விடவேண்டுமென்று எஜமானியம்மாள் தீர்மனித்தாள்-அவ்வளவுதான்; அன்று மாலை ‘காதல்’ திடீரென்று கரை புரண்டது; என்று மில்லாத திருநாளாகத் தன் கணவனை அழைத்துக் கொண்டு அவள் கடற்கரையை நோக்கிச் சென்றாள். வெகு நேரம் சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்த பிறகு, அவரை ஆசையுடன் அணைத்து முத்தமிடப் போனாள். நாலுபேருக்கு முன்னால் அவ்வாறு நடந்து கொள்ளத் துணிந்தது அவளுக்கு வெட்கமாக இல்லாவிட்டாலும், அவருக்கு வெட்கமாக இருந்தது. “இதெல்லாம் இங்கே எதற்கு? வீட்டில் வைத்துக் கொள்வோமே!” என்றார்-உடனே வந்துவிட்டது கோபம் அவளுக்கு. அந்தக் கோபம் தான் இன்னும் தீரவில்லை-எப்படித் தீரும்-அதனால் வைர மோதிரமல்லவா கிடைக்காமற் போய்விட்டது!
அந்தத் தீராத கோபத்தைத் தீர்த்து வைப்பதற்காக, “பொங்கல் வரப்போகிறதே, உனக்கு ஒன்றும் வேண்டாமா?” என்று கேட்டார் அந்த அப்பாவி.
“நான் என்ன பச்சைக் குழந்தையா?-மிஸ்டர் ஹரன், என்னை இன்னொரு முறை இப்படியெல்லாம் கேட்காதீர்கள்!” என்று அவள் உறுமினாள்.
“இல்லை; இல்லவே இல்லை!” என்று கன்னத்தில் போட்டுக் கொள்ளாத குறையாக அவர் கலங்கினார்.
“ஆமாம், எனக்கு வேண்டியதை நானே வாங்கிக் கொண்டு விட்டேன்!” என்றாள் அவள்.
“எப்போது என்று தெரிந்து கொள்ளலாமோ?” என்றார் அவர்.
“ஓ, பேஷாய்! இன்று ‘கிவ் அண்ட்டேக்’குக்குப் ‘போன்’ பண்ணி ஒரு நூறு புடவைகள் கொண்டுவரச் சொன்னேன். அவற்றில் பத்துப் புடவைகள் எனக்கு பிடித்திருந்தன. எடுத்துக் கொண்டேன். நீங்கள் இம்மீடியட்டா அவனுக்கு ரூபாய் இரண்டாயிரத்து ஐநூறுக்கு ஒரு ‘செக்’ அனுப்பிவையுங்கள்!” என்று சொல்லிவிட்டு அவள் சிங்கார அறைக்குச் சென்றாள். அவர் மூர்சையானார்!
“கல்யாணம் செய்து கொள்வது முட்டாள்தானம்” என்பது விவேகானந்தர் வாக்கு. அந்த முட்டாள் தனத்தை மும்முறை செய்தவர் மிஸ்டர் ஹரன். மூன்று குழந்தைகளில், இரண்டு முதல் மனைவியுடையவை. ஒன்று இரண்டாவது மனைவியுடையது; மூன்றாவது மனைவியான சுஜாதாவுக்கு இன்னும் புத்திரபாக்கியம் கிட்டவில்லை; அதற்காக அவள் அவரை நம்பியிருக்கவும் இல்லை.
வாழ்க்கை எத்தனையோ பேருக்கு எத்தனையோ விதமாகத் தோன்றுகிறது. மிஸ்டர் ஹரனுக்கு அது ஒரு கலையாகத் தோன்றியது. காரணம், கஷ்டத்தை பற்றியும் கவலையைப் பற்றியும் அவருக்கு ஒன்றும் தெரியாமல் இருந்தது தான்!
ஹரனின் பத்தாம் பாட்டனார் சத்தியம் என்றால் இன்னதென்றே தெரியாத ஓர் அப்பாவி, தம்மை லேவா தேவி செய்து வந்த நாலைந்து பண மூட்டைகளுக்கு ஶ்ரீமந்நாராயணனின் நாமத்தைப் பக்தி சிரத்தையுடன் போட்டு, வசதி மிக்க ஏழெட்டு விதவைகளின் கற்பைச் சூறையாடி, தமது பிற்காலச் சந்ததிகளுக்கு ஏராளமான வீடுவாசல்களையும், நிலபுலன்களையும் அவர் சேர்த்துவிட்டுப் போய் விட்டார். அதிலிருந்து வருஷம் ஒன்றுக்கு லட்சக் கணக்கில் வருமானம்வரவே, அவர்களுடைய குடும்பம் ‘கலைக்குடும்ப’மாக மாறிவிட்டது. அத்தகைய குடும்பத்தின் பத்தாவது தலைமுறையைச் சேர்ந்தவர் மிஸ்டர் ஹரன்; அவருடைய 1951-ம் வருடத்திய மாடல் மனைவி சுஜாதா. அந்த மாடலுக்கு ஏற்ப, அவள் மண்ணாசை, பொன்னாசையோடு ஆணாசையும் கொண்டிருந்தாள். ஆண்கள் பெண்ணாசை கொள்ளும் போது, பெண்களும் ஆணாசை கொள்ள வேண்டியதுதானே?
இந்த நிலையில் மூர்ச்சையான ஹரனைச் சுஜாதா கவனிக்க வில்லை; அவனுக்குப் பதிலாக ஜம்பு கொஞ்சம் தண்ணீரை கொண்டு வந்து அவருடைய முகத்தில் தெளித்து, விட்டு விசிறினான். டிரைவர் கன்னையா அது தான் சமயம் என்று, அவருக்கு எதிரே வந்து நின்று “எஜமான் எஜமான்!” என்று ‘காக்கா’ பிடித்துக் கொண்டிருந்தான்.
கோபம் வந்துவிட்டது எஜமானுக்கு-“ஏண்டா தடியன்களா! உங்களை யார் இங்கே வரச் சொன்னது?” என்று எரிந்து விழுந்தார்.
அவ்வளவுதான் ஜம்பு நழுவிவிட்டது; அசட்டுக் கன்னையா மட்டும் “எங்களைத் தவிர இங்கே வேறே யாரும் இல்லீங்களே!” என்று குழைந்த வண்ணம் அங்கே நின்றான்.
“ஏன், அம்மா எங்கே?” என்று திடுக்கிட்டுக் கேட்டார் அவர்.
“அவங்க ‘ப்ரெண்ட்’ டாக்ஸியிலே வந்து அவங்களை எப்பவோ அழைச்சிகிட்டுப் போயிட்டாருங்க!” என்றான் அவன்.
“சரி, சரி நீங்களும் எங்கேயாவது போய்த் தொலையுங்கள்!” என்று மனைவியிடம் காட்ட முடியாத கோபத்தை அவர்கள் மேல் காட்டிவிட்டு, அவர் விறைப்புடன் எழுந்தார்.
“எஜமான்…..!” என்று தலையைச் சொறிந்தான் கன்னையா.
“என்னடா?”
“பொங்கலுக்கு…..”
“பணம் வேண்டும் என்கிறாயா? ஒரு காலணாக்கூட ‘அட்வான்ஸ்’ கொடுக்க முடியாது; அப்புறம்…..?”
“அட்வான்ஸ் கேட்கலைங்க; போன மாசத்துச் சம்பளம்….”
“போன மாசத்துச் சம்பளமா…..இன்னுங் கொடுக்கவில்லை?”
“இல்லைங்க!”
“அம்மாவிடம் கொடுத்திருந்தேனே?”
“நெசமாவா! கொடுக்கலைங்களே!”
“அப்படியானால் இரு; அம்மா வந்ததும் போகலாம்.”
“அவங்க வர மணி பத்துக்கு மேலே ஆகுங்களே!”
“அதற்குக்கூட என்னை என்னடா செய்யச் சொல்கிறாய்? பணம் வேண்டுமானால் இருந்துதான் தீர வேண்டும்.”
“சரிங்க!”
கன்னையா வெளியே போய்விட்டான். ஜம்பு குழந்தைகளுக் கெல்லாம் சோற்றைப் போட்டுவிட்டு, படுக்க வைத்து விட்டு தானும் படுத்துக் கொண்டான்.
ஹரனை அவன் சாப்பிடக் கூப்பிடவில்லை. ஏனெனில் அம்மா வராமல் அவர் சாப்பிடமாட்டார் என்பது அவனுக்குத் தெரியும்!
மணி பத்து இருக்கும்; வாசலில் ‘டாக்ஸி’ வந்து நிற்கும் சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து, “குட்நைட்” என்று இரு குரல்கள் ஒலித்தன. ‘டாக்ஸி’ கிளம்பியது. அம்மா உள்ளே வந்தாள்.
“ஏன் சுஜாதா, வெளியே உங்களை யாரும் பார்க்க வில்லையே?” என்று அவள் காதோடு காதாகக் கேட்டார் ஹரன்.
அவள் பேசாமல் இருந்தாள்.
“சரி, சாப்பிடப் போவோமா?” என்றார் அவர்.
இம்முறை அவள் பேசாமல் இருக்கவில்லை; “அது எனக்குத் தெரியும்; நீங்கள் ஒன்றும் என்னை அழைக்க வேண்டாம்!” என்றாள்.
இந்தச்சமயத்தில் உள்ளே தலைநீட்டியபடி, “எஜமான்!” என்று குரல் கொடுத்தான் கன்னையா.
அவன் குரலைக் கேட்டதும், “இன்னொன்று சொல்ல மறந்து விட்டேனே…..!” என்று ஆரம்பித்தார் அவர்.
“என்ன சொல்லித் தொலையுங்கள்!” என்று கேட்டாள் மிஸஸ் ஹரன்.
“கன்னையாவுக்கு….”
“என்ன, காலராவா?”
“இல்லை, சம்பளம்…..”
“ஒ, அந்த ‘டாங்கி’ நான் சம்பளம் கொடுக்க வில்லை என்று சொல்லி விட்டானா? அவனை முதலில் வீட்டுக்கு அனுப்புங்கள்.”
“இல்லை, நான்தானே கேட்டேன்…..”
“அப்படியானால் என்மீது உங்களுக்கு நம்பிக்கையில்லை என்று அர்த்தமாகிறது….!”
“ஐயய்யோ, இது என்ன அநியாயம்! உன்மீதாவது எனக்கு நம்பிக்கையில்லையாவது ? நல்லாச் சொன்னே!….. ஹிஹிஹி…..நல்லாச் சொன்னே!”
“இளித்தது போதும், நிறுத்துங்கள்!”
“இல்லை…..”
“என்ன இல்லை…?”
“இளிக்கவில்லை!”
அதற்குமேல் சுஜாதா அங்கே நிற்கவில்லை; ‘விர்ரென்று கன்னையாவை நோக்கி வந்து, “டேய் நாளையிலிருந்து நீ இங்கே தலைகாட்டக் கூடாது. ஆமாம் சொல்லி விட்டேன்” என்றாள்.
“நான் ஒரு குற்றமும் செய்யலைங்களே!” என்றான் கன்னையா.
“நீ ஒரு குற்றமும் செய்யவில்லையல்லவா? அதுதான் குற்றம்; போய் வா;”
“ஏழை மேலே தயவு வையுங்க, அம்மா!”
“அது என் வேலையல்ல; கடவுளின் வேலை!”
“அவருதான் உங்களைவிட மோசமாயிருக்காருங்களே” அவ்வளவுதான்; சுஜாதா சட்டென்று திரும்பி, “மிஸ்டர் ஹரன்! இவன் சொல்வதைக் கேட்டீர்களா. நான் ரொம்ப மோசமாம்!” என்று இரைந்தாள்.
கன்னையாவுக்கு தான் செய்து விட்ட தவறு இப்போது தான் புரிந்தது. நிலைமையைச் சமாளிப்பதற்காக, “உங்களைச் சொல்லலை, அம்மா….!” என்று அவன் ஏதோ சமாதானம் சொல்ல ஆரம்பித்தான்.
“போடா, ராஸ்கல்! இனிமேல் நீ இங்கே ஒரு நிமிஷங் கூட இருக்கக்கூடாது…கெட்அவுட்….ம், கெட் அவுட்……!”
கன்னையாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவன் திருதிரு வென்று விழித்தபடி, “எஜமான்” என்று மீண்டும் குரல் கொடுத்தான்.
அவர் உள்ளே இருந்தபடி, “அம்மா சொன்னால் சொன்னதுதான், போடா வெளியே!” என்று உறுமினார்.
கன்னையாவின் கண்களில் நீர் சுரந்துவிட்டது. இருவரும் கைவிட்ட பிறகு அவன் என்ன செய்வான்? “நாம் கொடுத்துவைத்தது அவ்வளவுதான்!” என்று எண்ணி, “சம்பளம்?” என்றான் அழாக் குறையாக.
“மிஸ்டர் ஹரன், இவனுக்குச் சம்பளத்தைக் கொடுத் தனுப்புங்கள்” என்றாள் சுஜாதா.
“அதைத்தான் உன்னிடம் கொடுத்திருந்தேனே” என்றார் ஹரன்.
“ஓ, அதுவா? அந்தப் பணத்துக்கு ஒரு பார்க்கர் பேனா வாங்கி என் ‘ப்ரெண்’டுக்குக் கிறிஸ்துமஸ் பரிசாகக் கொடுத்துவிட்டேன்; இப்போது என்னிடம் பணமில்லை. இதற்குத்தான் பாங்கில் போடும் பணத்தை என் பேரால் போடுங்கள், என் பேரால் போடுங்கள் என்று நான் படித்துப் படித்துச் சொல்கிறேன், கேட்டால்தானே?” என்றாள் அவள்.
“அது ஒன்றுதானே சுஜாதா, உன்னையும் என்னையும் இன்று வரை பிணைத்து வைத்திருக்கிறது!” என்று பரிதாபத்துடன் சொல்லிக்கொண்டே, தம் சட்டைப் பையிலிருந்த நாற்பது ரூபாயை எடுத்து கன்னையாவிடம் கொடுத்தார். அதைப் பெற்றுக்கொண்டு அவன்தன் வீட்டை நோக்கி நடந்தான்-நடந்தானா!-இல்லை; நகர்ந்தான்.
அன்றிரவு ‘கன்னையா தொலைந்தால் தொலைகிறான்- காதலுக்குத் தடையாயிருந்த ஊடல் தொலைந்ததே, அதைச் சொல்லு!’ என்ற சந்தோஷத்தில் கட்டிலை நெருங்கிச் சுஜாதாவின் கன்னத்தை லேசாகத் தடவினார் ஹரன்.
அவ்வளவுதான் புற்றிலிருந்து கிளம்பும் ஈசல் போல அவள் ‘புஸ்’ என்று கிளம்பி, அவருடைய கையைத் தட்டி விட்டு, “என்ன தைரியம் உங்களுக்கு! ‘அலோ’ பண்ணுவதற்கு முன்னால் என் கன்னத்தில் நீங்கள் எப்படித் தொடலாம்? மனைவியென்றால் உங்கள் வீட்டுப் பொம்மையென்று நினைத்துக் கொண்டீர்களா, இஷ்டப்பட்ட போதெல்லாம் விளையாட? ஜாக்கிரதை” என்று உறுமினாள்.
தேள் கொட்டிய திருடனைப் போல், “இதென்னடா வம்பு! மழைவிட்டும் துவானம் விடவில்லையே?” என்று எண்ணியவராய் கையைப் பிசையும்போது அதிலிருந்த வைர மோதிரத்தைக் காணாமல் அவர் திடுக்கிட்டார். அடுத்த நிமிஷம் காலையில் ஸ்நானம் செய்யும்போது அதைக் கழற்றி அலமாரியில் வைத்த ஞாபகம் அவருக்கு வந்தது. ஒடிப்போய்ப் பார்த்தார். காணவில்லை. காணவேயில்லை!
திரும்பி வந்து, “ஏன் சுஜாதா, என் வைரமோதிரத்தைப் பார்த்தாயா?” என்றார்.
“அதைவிட வேறு என்ன வேலை, எனக்கு? மிஸ்டர் ஹரன். என்னை இன்னொருமுறை அப்படிக் கேட்காதீர்கள், ஆமாம்.” என்று ஒரு முத்தாய்ப்பு வைத்துவிட்டாள் அவள்.
“சரி, எதற்கும் போலீஸுக்காவது போன் பண்ணி வைப்போம்” என்று அவர் ‘ரெஸ்டை’ நெருங்கினார்.
“இந்நேரத்தில் போன் எதற்கு!” என்று அதட்டிக் கேட்டாள் வள்ளி.
“வைர மோதிரம் காணாமற் போனதைப் பற்றி……”
“அவமானம்; இந்த அற்ப விஷயத்திற்காக இந்நேரத்தில் நீங்கள் போன் பண்ணப் பார்ப்பது அவமானத்திலும் அவமானம்!”
“அதனாலென்ன, போகிற மானம் இப்படியும் கொஞ்சம் போகத்தான் போகட்டுமே!” என்று அவர் பண்ணவேண்டிய போனைப் பண்ணிவிட்டு வெளியே சென்றார்.
அடுத்தாற்போல் தன் ‘ப்ரெண்’டைச் சுஜாதா போனில் அழைப்பது ஹரனின் காதில் விழுந்தது. “கர்மம், கர்மம்!” என்று தலையில் அடித்துக்கொண்டே, ரேடியோவை திருப்பி வைத்துக் கொண்டு ஹாலில் உட்கார்ந்தார்.
“அப்பா!”
“………..”
“அப்பா!”
“…………”
“அப்பா!”
“ஏண்டா, ‘தொப்பா, தொப்பா’ன்னு அடிச்சுக்கிறே?”
“பொங்கல், அப்பா!”
“பொங்கலா! அது நம்ம வீட்டுக்கு வராது: அப்புறம்?”
“நிஜமாகவா? அப்பா?”
“ஆமாண்டா, ஆமாம்!”
இவ்வாறு சொல்லித் தன் பையனை விரட்டிவிட்டு கன்னையா சட்டையைக் கழற்றி கொடிமேல் வீசி எறிந்தான்.
“வந்ததும் வராததுமா குழந்தை மேலே ஏன் அப்படி எறிஞ்சி விழறீங்க?” என்றாள் அவர் மனைவி.
“எறிஞ்சி விழாம எடுத்து வைச்சிக்கிட்டு கொஞ்சவா சொல்றே?” “குழந்தைன்னா கொஞ்சத்தான் வேணும், நீங்க எறிஞ்சு விழறதுக்கா இம்மூட்டு நேரம் அப்பா வரட்டும், அப்பா வரட்டும்’னு அவன் முழுச்சிக்கிட்டு இருந்தான்!”
“ஆமாம், போ! வயிறு சோத்துக்குக் கெஞ்சறப்போ நான் எங்கே குழந்தைக்கிட்டே கொஞ்சறது”
“அப்படின்னா, நீங்க இன்னும் ஒண்ணுமே சாப்பிடலையா?”
“இல்லை, ஏன் நீ ஒன்னுமே பண்ணலையா?”
“கையிலே காசில்லாம என்னத்தைப் பண்றது? பொழுது விடிஞ்சா, பொழுது போனா அந்தப் பலசரக்குக் கடைக்காரன் வந்து கழுத்தை அறுக்கிறான்…..”
“சரி, அவனுக்கு என்ன தரணும்?”
“இருவது ரூவா?”
“இந்தா, இருவது ரூவா…..”
“ட்டுக்காரர் வேறே வந்து…..”
“அவருக்கு பத்து ரூவாதானே கொடுக்கணும்? இந்தா…..!”
“அதில்லாம அரிசிக்காரிக்கு நாலு ரூவா தரணும்; நான் வேறே இங்கேயும், அங்கேயுமா அஞ்சாறு ரூவா வரையிலே சில்லறைக் கடன் வாங்கியிருக்கேன்…..”
“அப்போ சரியாப் போச்சு!-என் கையிலும் இன்னும் பத்து ரூவாதான் இருக்கிறது. இந்தா இதையும் நீயே வைச்சுக்கோ!”
“நல்ல நாளும் அதுவுமாக் குழந்தைக்கு ஒரு சட்டையாச்சும் தச்சுப் போடமாட்டீங்களா?”
“குழந்தைக்குச்சட்டை மட்டுமா? உனக்கு ஒரு புடவை, எனக்கு ஒரு வேட்டி – எல்லாம் வாங்க வேண்டியதுதான்”
“எப்போ வாங்கறது? பொங்கலுக்கு இன்னும் ரெண்டு நாள்தானே இருக்குது!”
“அதுக்குள்ளே எங்கேயாச்சும் கன்னம் வைக்கணும்….”
“எதுக்கு?”
“திருடத்தான்!”
“ரொம்ப நல்லாத்தான் இருக்குது, போங்க!” என்றாள் அவள்.
“இனிமே எங்கே போறது?-பழைய பாயை விரிச்சுப் போட்டுப் படுக்க வேண்டியதுதான்!” என்று சொல்லிக் கொண்டே, அவன் மூலையில் இருந்த பாயை எடுத்து விரித்துப் படுத்தான்.
வேலை போன விஷயத்தை மட்டும் அவன் மனைவியிடம் சொல்லவில்லை. “அவளுக்கு இருக்கிற கஷ்டமே போதும்” என்று நினைத்தானோ, என்னமோ!
பசித்தவன் பழங் கணக்குப் பார்ப்பதுபோல் அன்றிரவு கன்னையா தன்னுடைய பழங்காலத்தைப் பற்றி, யோசித்தான்.
அவனுக்கு கல்யாணமாகிப்பத்து வருடங்களுக்கு மேலிருக்கும். நல்ல வேளையாகப் பிறந்த குழந்தைகள் அத்தனையும் உயிருடன் இருக்கவில்லை; எல்லாம் போக ஒன்றே ஒன்றுதான் எஞ்சியிருந்தது. அதற்கும் அவன் வருடத்திற்கு ஒரு முறைதான்-அதாவது பொங்கலுக்குப் பொங்கல்தான்-புதுச் சட்டை தைப்பது வழக்கம். அந்தச் சட்டைக்கும் இந்த வருடம் வழியில்லை!
இதுவரை அவன் எத்தனையோ இடங்களில் வேலை பார்த்தாகிவிட்டது. ஒவ்வொரு இடத்திலும் ஏதாவது ஒர் அக்கப்போர்-அதன் பயனாக அவனுடைய சீட்டைக் கிழித்தல்-அப்புறம் வேலை இல்லாமல் திண்டாடுதல்!
வேலை இருக்கும்போதாவது திண்டாட்டம் இல்லாமலிருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. இருந்தாலும் திண்டாட்டம்; இல்லாவிட்டாலும் திண்டாட்டம்.
இப்படியே அவனுடைய வாழ்க்கையில் பெரும் பகுதி கழிந்துவிட்டது. இதுவரை அமைதி என்பதையே அவன் தன் வாழ்நாட்களில் கண்டதில்லை. ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு போராட்டம், போராட்டம், போராட்டம்!
இந்தப் போராட்டத்திற்குத் துணையாயிருந்ததைத் தவிர தன் மனைவி தன்னிடம் என்ன சுகத்தைக் கண்டாள்? நகை நட்டுக்கள் இல்லாவிட்டாலும், மாற்றிக் கட்ட அவளுக்கு இரண்டு புடவைகளாவது உண்டா? பொங்கலுக்குப் பொங்கல் ஒரு புதுப் புடவை எடுத்துக் கொடுக்கக்கூடத் தன்னால் முடியவில்லையே? இந்த லட்சணத்தில், தான் அவளுக்குச் சர்வ வல்லமையுள்ள புருஷன்!-சொல்லிக் கொள்ளவே வெட்கமாயில்லையா, இது?
கேவலம், ஒரு சாத்துக்குடிப் பழம் தின்ன வேண்டுமென்றால் அதற்காக அவளுக்கு ஜூரம் வரவேண்டியிருக்கிறது; வைத்தியர் சிபாரிசு செய்யவேண்டியிருக்கிறது!? மிக மிகப் பரிதாபமாக அல்லவா இருக்கிறது இது?
இன்னும் எத்தனை வருடங்கள்தான் அவள் தன்னைக் கல்லாகவும் புல்லாகவும் கருதி ‘பக்தி’ செலுத்துவது? என்றைக்காவது ஒரு நாள் அவள் தன்னைக் கணவன் என்ற உருவில் பார்த்துக் ‘காதல்’ கொள்ள வேண்டாமா? அந்தக் கணவனுக்குரிய கடமைகளைத் தான் செய்ய வேண்டாமா?
குழந்தை-அதனிடம் ஒரு தனி இன்பம் இருக்கிறது என்கிறார்கள். எங்கே அந்தப் பாழும் இன்பத்தைத் தன் வீட்டில் காணோமே!- பிறந்தாலும் கஷ்டமாக யிருக்கிறது; இறந்தாலும் கஷ்டமாயிருக்கிறதே!
இந்தக் கஷ்டங்களுக்கெல்லாம் ஒரு முடிவே கிடையாதா?-உண்டு; நிச்சயம் உண்டு.
எப்பொழுது? மரணத்திலா?
சீசீ, அதுவரை இனி பொறுத்திருக்கக்கூடாது.அதற்கு முன்னால் ஒருநாள்-ஆம், ஒரே ஒரு நாளாவது மனைவி மக்களுடன் சுகமாயிருக்க ஏதாவது ஒரு வழி கண்டுபிடித்தே யாகவேண்டும்-அதற்குள்ள ஒரே வழி திருடுவதுதான்!
அதையும் இப்போதே, இன்றே செய்துவிட வேண்டும். அப்போதுதான் வரப்போகும் பொங்கலைக் குதுகலமாகக் கொண்டாட முடியும்…!
எங்கே, யாருடைய வீட்டில் திருடுவது?
மிஸ்டர் ஹரன்…..மிஸ்டர் ஹரன்…..
ஆம், அவருடைய வீட்டில்தான் திருட வேண்டும். தலை முறை தலைமுறையாக வல்லவா அவர்கள் நகத்தில் மண்படாமல் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்!
அவர்கள் வேலைக்குப் போவதும் கிடையாது; அவர்களை யாரும் வீட்டுக்கு அனுப்புவதும் கிடையாது- அதிசயமாயில்லையா, இது? நாமும் பொங்கலுக்குத் தானே செலவழிக்கப் போகிறோம்?
அப்புறம் கேட்கவேண்டுமா?-அந்த வருடம் கன்னையாவின் வீட்டில் பொங்கல் திருநாள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
தான் நினைத்தபடி, தன் வாழ்நாட்களிலேயே ஒரு நாள்-ஒரே ஒரு நாள்-அவன் சந்தோஷமாக இருந்து விட்டான்.
ஆனால் அந்த சந்தோஷத்தைப் பரிபூரணமாக அனுபவிக்க அவனை விடவில்லை அவன் மனைவி. இடையிடையே “இவ்வளவு பணம் உங்களுக்கு ஏது?” என்று அவள் கேட்டுக்கொண்டே இருந்தாள். “எல்லாம் இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரியும்!” “எல்லாம் இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரியும்!” என்று அவன் அதையும் சந்தோஷமாகவே சொல்லிக் கொண்டிருந்தான்.
அதற்குள் போலீஸார் வந்து அவனைக் கைது செய்தார்கள்; முகமலர்ச்சியுடன் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றான்.
கோர்ட்டில் வழக்கு நடந்தது; ஆனால் தீர்ப்பு-அது தான் கன்னையாவுக்கு அதிசயமாயிருந்தது!
நீதிபதி சொன்னார்:
“கன்னையா திருடியது உண்மைதான். ஆனால் அவன் குற்றவாளி அல்ல!”
சர்க்கார் வக்கீல் கேட்டார்:
“உங்கள் தீர்ப்பு எனக்குப் புரியவில்லை; நீங்கள் சொல்வதைப் பார்த்தால் மிஸ்டர் ஹரன் குற்றவாளியா?”
“இல்லை……”
“பின் யார் குற்றவாளி?”
“மிஸ்டர் ஹரன் போன்றவர்களை இஷ்டம்போல் பணம் சேர்த்துக்கொள்ள அனுமதித்து, கன்னையாவைப் போன்றவர்களை என்றும் கஷ்டத்தில் ஆழ்த்துகிறதே சர்க்கார், அந்தச் சர்க்கார்தான் குற்றவாளி!”
நீதிபதி இவ்வாறு சொல்லக் கேட்டதும், “எஜமான். நான் இந்த உலகத்திலேயே இல்லைங்களா?’ என்று கேட்டான் கன்னையா.
நீதிபதி சிரித்தார்.
கன்னையா அவருடைய கால்கள் பூமியில் பதிந்திருக்கின்றனவா என்று பார்த்தான்.
பிறகு தன்னையும், தன்னைச் சுற்றி இருப்பவர்களையும் ஒருமுறை கண்ணை கசக்கி விட்டுக்கொண்டு கவனித்தான். சந்தேகம் தீரவில்லை அவனுக்கு!
“தம்பி நீ நிரபராதி; உனக்கு விடுதலை!” என்றார் நீதிபதி.
“விடுதலை; திருடனுக்கு விடுதலை!” என்று வியப்பின் மிகுதியால் கன்னையா கத்தினான்.
அவன் மனைவி அவனைத் தட்டி எழுப்பி “என்ன விஷயம்?” என்று விசாரித்தாள்.
கன்னையா திடுக்கிட்டு எழுந்து சுற்றுமுற்றும் பார்த்தான். கரிய உருவம் ஒன்று சுவர் ஏறிக் குதித்து வெளியே செல்வதுபோல் இருந்தது.
“யார் அது?” என்று அதட்டினான் அவன்.
பதில் இல்லை. அதற்குள் அந்த உருவம் அவன் பார்வையிலிருந்து மறைந்துவிட்டது!
“எல்லாம் வெறும் பிரமை!” என்று சொல்லிக் கொண்டே அவன் படுத்தான்; அவன் மனைவியும் அந்த நேரத்தில் அவனை மேலும் தொந்தரவு செய்ய விரும்பாமல் படுத்துக் கொண்டாள்.
மறுநாள் பொழுது விடிந்ததும் போலீஸார் வந்து அவன் வீட்டுத் கதவை தட்டினார்கள்!
கன்னையா அலறிப் புடைத்துக்கொண்டு எழுந்து போய்க் கதவைத் திறந்தான்: போலீஸார் உள்ளே நுழைந்தனர்.
வீடு சோதனை யிடப்பட்டது. அன்றைக்கு முதல் நாள் இரவு அவன் கொடிமேல் அலுப்புடன் சுழற்றி எறிந்த சட்டைப்பை யிலிருந்து எஜமான் வீட்டில் காணாமற் போன வைரம் கண்டெடுக்கப் பட்டது.
அப்புறம் கேட்க வேண்டுமா? கட்டிய மனைவியும், பெற்று வளர்த்த பிள்ளையும் கதறக் கதறக் கன்னையா கைது செய்யப்பட்டான்.
பாவம் தங்கள் கெளரவத்தை காப்பாற்றிக் கொள்வதற்காகச் சுஜாதாவின் யோசனையின் பேரில் அவளுடைய ‘ப்ரெண்ட்’ செய்த வேலை இதெல்லாம் என்று அவனுக்கு எப்படித் தெரியும்?போலீஸாருக்கே தெரியாதே!
– விந்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, கலைஞன் பதிப்பகம், சென்னை.