இது நிஜமா…?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 2, 2013
பார்வையிட்டோர்: 9,163 
 

நாய் குரைக்கும் சத்தம் கேட்டு சுந்தருக்கு தூக்கம் தொலைந்தது. நாக்கு வறண்டது தண்ணீர் குடிக்கலாம் என்று கதவை திறந்தான். தாத்தா ஹாலில் மெதுவாக நடந்து பாட்டி ரூமிற்கு போவதை பார்த்து அதிர்ந்தான். அறைக்குள் தாத்தாவும், பாட்டியும் பேசி கொண்டது தெளிவாக கேட்டது. பாட்டி அழுது கொண்டிருந்தாள்.

சுந்தருக்கு வியர்த்தது.. தாத்தா இறந்து ஒரு வாரமாகிவிட்டது. மனசுக்குள் கிலி பரவியது. மெல்ல அறைக்குள் திரும்பி அப்பாவை எழுப்பினான்… “

அப்பா..” கை கால் நடுங்க உதற தாத்தா நடந்து போனதை சொல்வதற்குள் வியர்த்து கொட்டியது.

“ ஹேய்.. கனவு எதாவது கண்டிருப்ப.. பேசாம படு..” திரும்பி கொண்டார்.
அம்மாவையும் எழுப்ப.. இருவரும் பாட்டியின் அறையில் பேச்சு குரலை கேட்டதும் மொத்தமாய் அதிர்ந்தார்கள். மெதுவாக எழுந்து வெளியில் வந்து நின்று கொண்டார்கள். அம்மா கையில் சாமி படமும், விபூதியும் வைத்திருந்தாள்.

“ ஹேய்… பயப்படாதடா.. தாத்தா எல்லாருக்கும் நல்லதுதான நினைப்பார் உன்ன என்ன செய்ய போறார்.. “ அப்பா சுந்தருக்கு விபூதியை நெற்றியில் வைத்து விட்டார்.

“ கமலா அப்பா வந்த அடையாளத்தை தெரிஞ்சிக்கலாம்.. இரு..” என்றவர் ஓரமாய் மூட்டையில் இருந்த மணலை வாசல் படி முழுதும் நிரப்பினார். கொஞ்ச நேரம் கழிந்தது.. பாட்டி அறையில் மௌனம். மூன்று பேரும் அமைதியாய் வாசலில் காலடி தடம் பதிகிறதா என்று பார்த்து கொண்டிருந்தார்கள்.

திடிரென்று ஒரு பாகம் மட்டும் மழை பொழிவது போல் ஈரமாகி கொண்டே ஒரு பாதை போயிற்று… அப்படியே தெரு முனை வரை. பிறகு
எந்த சுவடும் இல்லாமல் மறைந்து போயிற்று.

“ கமலா நான் சொல்லலே அப்பா இங்கேதான் இருப்பாருன்னு.. சரி வாங்க உள்ளே போகலாம்..”

குமார் பயத்தில் வர மறுக்க.. நாங்க பக்கத்திலதான இருக்கோம்.. பயப்படாம தூங்கு..

அம்மா குமாரை அணைத்து கொண்டு தூங்க வைத்தாள்.

மறுபடியும் பாட்டியின் பேச்சுக்குரல்…

குமார் அலறி எழுந்தான். “ அப்பா.. மறுபடியும் தாத்தா வந்திருக்கிறாரா..?”

அவன் அலறலை கேட்டு எழுந்தவர்கள் “ ஏய்.. என்னடா ஆச்சி கனவு எதாவது கண்டியா..? “ உலுக்கினார்கள்.

“ அம்மா.. பாட்டி.. பேசிட்டிருக்காங்க…தாத்தா… “ உதடுகள் உலர்ந்தது.
தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தி “ இப்ப டைம் பார்த்தியா.. நாலு மணி.. கொஞ்ச நேரம் போனா பொழுது விடிஞ்சுடும்..”

“ அப்ப பாட்டி யார் கூட பேசிட்டிருக்காங்க?”

“ வா.. பாரு..’ பாட்டி அறை திறந்தேதான் இருந்தது.. தூக்கம் வராமல் பாட்டி

தாத்தாவின் போட்டோ முன்பு அழுது பேசி கொண்டிருந்தாள்.

“ கமலா சின்ன புள்ளைய கூட வச்சிகிட்டு டி.வி யில ஆத்மா, முன் ஜென்மம்னு கண்ட கண்ட நிகழ்ச்சியை பார்க்காதன்னு எத்தனை தடவை சொன்னேன். பாரு அவன் கனவுல எதோ பயந்து போயிருக்கான்..”

“ சுந்தர் கண்ணா நீ தாத்தாவையே நினைச்சிகிட்டு தூங்கியிருப்ப அதான் இப்படி கனவு … ஒண்ணுமில்லடா”

“ அப்ப கனவா..? கனவுல கிராபிக்ஸ்லாம் நல்லா வருதுப்பா… தாத்தா நடந்த போன எடமெல்லாம் மழை மாதிரி கூடவே போச்சுப்பா…” சுந்தர் கண்களை விரித்து கைகளை பரப்பி சொல்ல.. பாட்டி அழுவதை நிறுத்தி சிரித்து விட்டாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *