மாநில அரசாங்கத்தின் அந்த வாரியத்தில் அவனுக்கு இளநிலை எழுத்தர் வேலைக்கான ஆர்டர் வந்ததும் அவன் மிகவும் மகிழ்ந்து போனான். நிரந்தரமான வேலை. மேற் கொண்டு படித்து அலுவலகத் தேர்வுகள் எழுதினால் மேல்நிலை எழுத்தர், கண்காணிப்பாளர், மேலாளர் என்ற நிலைக்கு உயரலாம் என்கிற நியாயமான ஆசைகளைத் தன்னுள் வளர்த்துக்கொண்டான்.
அவன் வித்தியாசமானவன், இருபத்தி மூன்று வயதுதான். காந்தியைப் பார்த்திராவிடினும், அவரது கொள்கைகளான நேர்மை, அஹிம்சை போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடு உண்டு. பெண்களைக் கண்களாலேயே அளந்து கணித்து மார்க் போடும் இன்றைய இளைஞர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவன்.
ஒரு நல்ல நாளில் பாட்டி அவனது நெற்றியில் திருமண் இட, அவளை விழுந்து நமஸ்கரித்து, பின்பு தன் அம்மாவையும் நமஸ்கரித்துவிட்டு, தன் தங்கைகள் வாழ்த்துக் கூற, மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் அந்த அலுவலகத்தில் சேர்ந்தான்.
சேர்ந்த முதல் நாள் நிர்வாகப் பொறியாளர், கண்காணிப்பாளர், மேலாளர் போன்ற அலுவலகப் பெரியவர்களை நோ¢ல் பார்த்து வாழ்த்துக்கள் பெற்றுக் கொண்டான். அலுவலக சக ஊழியர்கள் அவனிடம் கல கலப்பாக பேசினார்கள்.
மேஜையின் மேலும் கீழுமாக இரைந்து கிடக்கும் கோப்புகளும், அவற்றினூடே செருகப் பட்டிருக்கும் சிவப்பு நிற ‘அவசர’க் கொடிகளும், அந்தக் கோப்புகளின் பழமையான வெளவால் வாசனையும், அலுவலகப் பெண்களைப் பற்றி வாய் கூசாமல் செக்ஸியாகப் பேசும் சக ஆண் ஊழியர்களும், மாலை ஆறு மணிக்கு மேலும் அலுவலகத்திலேயே தங்கி மேஜைகளை
இழுத்துப் போட்டுக் கொண்டு இரவு பத்தரை மணி வரை ரம்மி விளையாடும் ஊழியர்களும்… பார்க்கும்போது இவனுக்கு எல்லாமே புதுமையாக இருந்தன.
இவன் சேர்ந்து இரண்டு வாரங்களாகியிருக்கும். ஒரு நாள், மல் வேஷ்டி, ஜிப்பா அணிந்து, கை விரல்களில் மோதிரங்கள் மினுமினுக்க உயரமாக ஒரு ஆசாமி இவன் இருக்கும் செக்ஷனில் நுழைந்தார். உடனே மற்ற சக ஊழியர்கள் அவரைப் பார்த்து இளித்தபடி, “வாங்க ராமசாமி அண்ணே வாங்க” என்று பலமாக உபசரித்து ஸ்டூலை இழுத்துப் போட்டு அமர
வைத்தார்கள். அந்த ஆசாமியும், புன் சிரிப்புடன் சுவாதீனமாக அவர்களிடம் குசலம் விசாரித்து ஊர்க் கதைகள் பேசிக் கொண்டிருந்தார். பின்பு அருகே குழைந்தபடி தயாராய் நின்றிருந்த பியூனை அனுப்பி அனவருக்கும் கா•பி வரவழைத்துக் கொடுத்தார்.
இவனைச் சற்று உற்றுப் பார்த்துவிட்டு, “சார் யாரு? புதுசா?” என்று பொதுவாக வினவினார். உடனே மற்ற ஊழியர்கள் போட்டி போட்டுக் கொண்டு, “ஆமாண்ணே, நம்ம ‘ரம்மி’ ரத்தினம் பிரமோசன்ல போயிட்டாருல்ல…அவரு இடத்தில்தான் நம்ம சார் வந்திருக்காரு. உங்க பில்களெல்லாம் இனிமே இவருதான்..” என்றனர்.
வந்தவர் ஒரு கான்ட்ராக்டர் என்பது புரிய இவனுக்கு வெகு நேரமாகவில்லை. பத்து நிமிடங்கள் சென்றன. அந்த ஆசாமி இவனருகேயுள்ள ஸ்டூலில் வந்து அமர்ந்தார். இவனுடைய சொந்த ஊர், படிப்பு, பெயர் விவரங்களைக் கேட்டுத் தொ¢ந்து கொண்டார்.
பின்பு, குரலில் அன்பொழுக, “சார், பம்பு முதல் சுற்று போட்டாச்சு. அதுக்கு பில் நாளை அல்லது நாளன்றைக்கு உங்களிடம் வரும்.
வந்தா கொஞ்சம் சீக்கிரம் பாஸ் பண்ணிடுங்க” என்றார்.
இவனும் ஒரு நாகா£கம் கருதி, “அதனாலென்ன செய்துட்டாப் போச்சு” என்றான்.
‘பில் வந்தால் நாம் ஆடிட் செய்து பாஸ் பண்ணுவது நம்ம கடமைதானே… அதை என்ன ஒரு கான்ட்ராக்டர் தம்மிடம் வந்து சொல்லிவிட்டுப் போவது’ என்று நினைத்துக் கொண்டான். ஏற்கனவே இவனுடைய இடத்தில் வேலை பார்த்த ‘ரம்மி’ ரத்தினம், வேறு சிறு தொகைக்கான பில்கள் ஏகப்பட்டவற்றைப் பெண்டிங் வைத்துவிட்டுப் போயிருந்தான். அவற்றை தேதிவாரியாக அடுக்கி, ஞாயிற்றுக்கிழமை அலுவலகத்திற்கு வந்து கணிசமான அளவில் பல பில்களைக் குறைத்தான்.
அடுத்த வாரத்தில், குறிப்பிட்ட அந்த பில் இவனிடம் வந்தது. அதைத் தொடர்ந்து அன்று மாலையே கான்ட்ராக்டர் ரமசாமி இவனிடம் வந்து விட்டார். கொஞ்சம் சீக்கிரமாக அன்றே பில்லை பாஸ் பண்ணும்படி இவனிடம் முறையிட்டார்.
அவருக்குத் தான் ரொம்ப இடம் கொடுக்கக்கூடாது என்று நினைத்த இவன், அவரிடம் கண்டிப்பான குரலில், “சார், ஏற்கனவே வந்த பில்களை நான் முதலில் ஆடிட் செய்து பாஸ் பண்ண வேண்டும். பின்பு உங்களது பில்லை எடுக்கிறேன். நாளை அல்லது நாளன்றைக்கு பாஸ் பண்ணி விடலாம்” என்றான்.
அவர் இவனைப் பார்த்து ஜாடையாகச் சிரித்துவிட்டு, இவனுடைய அனுமதியில்லாமலேயே இரண்டு இருபது ரூபாய் நோட்டுக்களை அவனது மேஜையின் முதல் டிராயரைத் திறந்து உள்ளே போட்டார். இவனுக்கு முணுக்கென்று கோபம் வந்தது. ரூபாய்களை உடனே எடுத்து அவரது கையில் திணித்து, “முதலில் இங்கிருந்து எழுந்து போங்க” என்று கத்தினான். சக ஊழியர்களின் கவனம் இவன் மேல் திரும்பியது. சீனியர் எழுத்தரான தங்கசாமி இவர்களை நோக்கி வந்து, “என்ன ராமசாமி அண்ணே, என்ன ஆச்சு? தம்பி என்ன சொல்லுது?” என்றான்.
அவர் மிகவும் இயல்பாக, “இல்ல தங்கம், இன்னிக்கு நம்ம பில்லு ஒண்ணு வந்திருக்கு, சார் இன்னிக்கு பாஸ் பண்ண மாட்டேங்காரு” என்றார்.
உடனே தங்கசாமி, “தம்பிக்கு வேலை ரொம்ப இருக்கு போலிருக்கு, கொண்டாங்க தம்பி, அந்த பில்லை நான் பாஸ் பண்ணிடுறேன்” என்றான். இவன் தங்கசாமியிடம் நல்ல வார்த்தைகள் சொல்லி, அதைத் தான் பாஸ் செய்யப் போவதாயும், அது தன்னுடைய கடமை என்பதையும் எடுத்துச் சொன்னான். தங்கசாமி அடங்கி விட்டான். கான்ட்ராக்டர் முறைப்பாக அந்த செக்ஷனிலிருந்து வெளியேறினார்.
பத்து நிமிடங்கள் ஓடியிருக்கும்…
பியூன் இசக்கி இவனிடம் வந்து, “சார், உங்கள மானேஜர் கூப்பிடுறாரு” என்றான்.
எழுந்து சென்று மேலாளரின் அறையை அடைந்தான். அங்கு மேலாளருக்கு எதிரில் கான்ட்ராக்டர் ராமசாமி அமர்ந்திருந்தார்.
மேலாளர், “மத்த வேலைகளை தள்ளி வச்சுட்டு, முதல்ல இவரு பில்லை பாஸ் பண்ணிடுங்க” என்றார் அழுத்தமாக. ஒரு கான்ட்ராக்டர் முன்னால் தன்னை இவ்விதம் பேசியது குறித்து இவனுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. சற்று ¨தா¢யத்துடன் மேலாளரை நோக்கி,
“சார், மத்த பில்களையெல்லாம் இன்னிக்கு முடிச்சுட்டு, நாளைக்கு காலையில் இந்த பில்லை பாஸ் பண்ணி விடுகிறேன்” என்று பணிவாகச் சொன்னான்.
“நான் சொன்னதை முதல்ல செய்யுமய்யா… இன்னிக்கு அந்த பில்லை பாஸ் பண்ணிட்டுத்தான் நீர் வீட்டுக்குப் போகணும்..வளர்ற பையன், முதல்ல ஒபீடியன்டா இருக்கக் கத்துக்கிடணும்” என்று மேலாளர் இரைந்தார்.
தலை குனிந்து, முகம் சுருங்கிப் போய் இவன் தன் இடத்தை அடைந்தான்.
இவனது முகத்தைப் பார்த்தே, மேலாளர் அறையில் என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்த அனுபவஸ்தனான தங்கசாமி இவனருகே உரிமையுடன் வந்து ‘அந்த’ பில்லை எடுத்து ஆடிட் செய்ய ஆரம்பித்தான்.
கான்ட்ராக்டர் ராமசாமி மறுபடியும் இவன் செக்ஷனுக்குள் வந்தார். “அண்ணே உங்க பில்லை நான் தான் இப்ப பாஸ் பண்ணப் போறேன், இப்ப முடிச்சுடுவேன்” என்றான் தங்கசாமி. அவனருகே ஒரு ஸ்டூலை இழித்துப் போட்டுக் கொண்டு வாஞ்சையுடன் அமர்ந்தார்.
பணம் கை மாறியது. பில் பாஸானது.
இவனுக்கு மனம் கசந்தது.
அன்று மாலை ஆறரை மணியிருக்கும். தங்கசாமி இவனருகே வந்தமர்ந்தான். தனக்குக் கிடைத்த இருபது ரூபாய்த் தாளை அவனிடம் காட்டி, தம்பி நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க… கான்ட்ராக்டர்கள் அடிக்கடி இங்கு வருவாங்க. பில் உடனே பாஸ் பண்ண வேணும்பாங்க. அவனுங்க ஏற்கனவே மேலதிகாரிங்களுக்கு ஆயிரக் கணக்கில் தள்ளியிருப்பானுங்க. நம்மகிட்ட இந்த மாதிரி பில் வரும் சமயங்களில் நாற்பது, ஐம்பது கொடுப்பான். நாம்பளும் வளைந்து கொடுத்திரணும். இன்னிக்கி இல்லேன்னா, என்னிக்காவது நாமதான் அதைப் பாஸ் பண்ணப் போறோம். அதை உடனே செய்தால், பணத்துக்குப் பணமுமாச்சு, நல்ல பெயருமாச்சு, யாரையும் முறைச்சுக்க வேண்டாம் பாருங்க” என்றான்.
அப்போது அங்கு வந்து சேர்ந்து கொண்ட இன்னொருவர், “வீணா வம்பை ஏன் சார் விலை கொடுத்து வாங்கறீங்க? மத்த வேலைகளையெல்லாம் அப்படியே ‘பென்டிங்’ போடுங்க. ‘வெயிட்’ வரக்கூடிய பில்களையெல்லாம் மட்டும், பட்டும் படாமல் ஆடிட் செய்து ரெடியா வச்சிடுங்க. கான்ட்ராக்டர் தலை தொ¢ஞ்சதும் நிறைய வேலை இருக்கற மாதிரி அவன் கிட்ட அலட்டிக்குங்க. அவன் தர்றதை வாங்கிக்கிட்டு பாஸ் பண்ணிடுங்க.
புத்தியிருந்தா பொளச்சுக்குங்க…” என்று தங்கசாமிக்கு ஒத்துப் பாடிவிட்டு நகர்ந்தார்.
அன்று இரவு தூக்கம் வராது படுக்கையில் புரண்டான்.
மறு நாள் மேலாளர் இவனைக் கூப்பிட்டு அனுப்பினார்.
“என்னய்யா, நேத்து கான்ட்ராக்டர் ராமசாமியை வச்சுகிட்டே என்னிடம் முறைப்பாகப் பேசறீரே? வேற சப்-டிவிஷனுக்கு உன்ன ட்ரான்ஸ்பர் பண்ணட்டுமா? என்று நக்கலாகக் கேட்டார். இவன் அமைதியாக நின்றான். “சரி சரி…போய் வேலையைப் பாரும்” என்று அதட்டினர்.
இவன் வெளியே வந்து தன் இருக்கையில் அமர்ந்தான். சத்தியத்திற்காகவும், நேர்மைக்காகவும் போராடிய காந்தியை நினைத்துக் கொண்டான்.
‘மிஞ்சி மிஞ்சிப் போனால் தண்ணியில்லாத காட்டுக்கு மாற்றுவான். மாற்றிவிட்டுப் போகிறான்’ என்று நினைத்தான். ஆனால் அடுத்த கணமே, தந்தையில்லாத தன்னுடைய பொறுப்புள்ள நிலையையும், வயதான பட்டியையும், தாயாரையும், பள்ளியில் பயிலும் தனது தங்கைகளையும் நினைத்துக் கொண்டான்.
கண்களில் மல்கிய நீரைக் கூட்டி விழுங்கினான்.
மாதங்கள் ஓடின.
இவனிடமுள்ள நாணயம் மறைந்து, வருகின்ற கான்ட்ராக்டர்களிடம் சாதுர்யமாகப் பேசும் ‘நா’ நயம் அதிகரித்தது. புத்திசாலித்தனம், வளைந்து கொடுத்தல், கண்டுகொள்ளாதிருத்தல் என்ற போர்வைகளில் தன்னைப் பொய்யுடன் சமரசம் செய்து கொண்டான்.
பல கான்ட்ராக்டர்களுடன் இவனுக்கு நெருக்கம் அதிகமாயிற்று. அவர்கள் வரும்போது ஸ்டூலை இழுத்துப் போட்டு அருகில் அமர்த்தி, லாகவமாக மேஜையின் முதல் டிராயரைத் திறந்து வைத்து, பணத்தைப் போட்டவுடன் மூடிவிட்டு, பாஸ் ஆர்டர் போடும் பரத்தைத்தனம் இவனிடம் வளர்ந்து விட்டது.
‘எங்கே அலுவலகத் தேர்வுகள் எழுதிப் பாஸ் செய்துவிட்டால் தன்னை வேறு ‘சீட்’ டில் போட்டு விடுவார்களோ? அப்படி ஏதேனும் நடந்து விட்டால் தனக்கு வரும்படி வராதோ?’ என்ற பயத்தில் தேர்வுகள் எழுதும் ஆசையையும் குழி தோண்டிப் புதைத்து விட்டான்.
சேரும்போது எவ்வளவோ எதிர் பார்ப்புகளுடன் இந்த அலுவலகத்தில் சேர்ந்தவன், தற்போது கான்ட்ராக்டர்களை எதிர்பார்க்கலானான்.
இவனுக்கு இப்போது வயது இருபத்தி நான்கு. முன்னேற வேண்டும் என்ற ஆசை அறவே மறைந்து, சக ஊழியர்களின் அசட்டைத்தனம் இவனிடமும் தொற்றிக் கொண்டது.
நாளடைவில், மேஜைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு அலுவலகத்தில் ரம்மி விளையாடும் சோம்பேறிகளுடன் இவனும் கலந்தான்.
முன்னுக்கு வந்திருக்கக்கூடிய ஒரு இளைஞனின் கைகளும், மனமும் இப்போது கறைபட்டுக் கிடக்கின்றன.
இனி அவனை மீட்க முடியாது.
ஏனெனில் அவனது எண்ணங்கள் திசைமாறி விட்டன.
– ஆனந்த விகடன் (19-10-1980)