நடுச்சாமம். கொட்டத்தில் அமர்ந்திருந்த மட்டையனுக்கு எதிரே சிறுமலையில் எரிந்த தீயின் ஜுவாலைகள் தெரிந்தன. உலகின் மௌனத்தில் தீயெழுப்பும் சடசட ஓசையும் கேட்டது. எத்தனை உயிர்கள் சிக்குண்டனவோ என்று மட்டையனுக்குத் யோசனை வந்தது. தீயில் சிக்குண்ட மட்டையனின் மனநிலையை மலை காட்டுவதாக மட்டையனுக்குத் தோன்றியது.
மட்டையனுக்கு வயது அறுபதுக்குக் கீழே இருக்கும். அவரின் வயது என்ன என்று அவருக்கும் தெரியாது. உத்தேசமாக ஒரு கணக்குப் போட்டு வயது அறுபது என்று சொல்லி வருகிறார்.
அவரின் பெயர் கூட மட்டையன் இல்லை. அந்த ஊரில் எல்லோருக்கும் ஓர் இடுபெயர் இருக்கும். சுருக்கன், சீக்கான் என்றெல்லாம் கூட பெயர் வைப்பார்கள். இவருக்கு ஏன் இந்த பெயரைச் சூட்டினார்கள் என்று யாருக்கும் தெரியாது, இருந்தபோதும் மட்டையன் என்பதே பெயராகிவிட்டது.
அவரின் ஊர் செம்மினிபட்டி. செம்மண்பட்டி என்பதுதான் செம்மினிப்பட்டியாகச் மறுகிவிட்டது என்று மட்டையன் கேள்விப்பட்டிருக்கிறார். ஆனால், மட்டையனின் கவலை ஐம்பது சென்ட் பரப்புள்ள அவரின் செம்மண் பூமி பற்றியதுதான்.
செவலை மண் வளம் கொழிக்கும். மழை பெய்து ஈரம் பிடித்துவிட்டால் விவசாயம் ஆரம்பிக்கும். ஊரைச் சுற்றி பசுமைதான். வசதியுள்ள விவசாயிகள் முன்னமே தென்னைக்குப் போய்விட்டார்கள். அப்புறம் நிலத்தடி நீர் கீழே போய்விட மதுரையின் புதுப்பணக்காரர்களுக்கு நிலத்தை விற்று விட்டார்கள்.
மட்டையனால் தென்னைக்குப் போக முடியவில்லை. தன்னுடைய பங்கில் கிணற்றோரத்தில் சில தென்னைகளை மட்டும் நட முடிந்தது. அவரின் அப்பாவுக்கு இருந்த நிலத்தை எட்டு அண்ணன் தம்பிகளுக்குப் பிரித்தபோது இவருக்கு அரை ஏக்கர் கிடைத்தது. கிணறு பொதுக்கிணறு. இந்த நாற்பது ஆண்டுகளில் அண்ணன் தம்பிக்குள் பிரச்சனை வந்து என்னென்னவோ ஆகி, பங்காளிகள் நிலமெல்லாம் தரிசாகி, கடைசியில் கிணறு பயனற்றது ஆகிவிட்டது. கிணற்றில் நீரும் ஊறுவதில்லை. அப்புறம் வானம் பார்த்த விவசாயம்தான். மட்டையன் விடுவதாயில்லை.
சிறுமலையில் இருந்து வரும் ஓடைகள் ஊரின் இரண்டு பக்கமும் உண்டு. மேற்கு ஓடையின் கரையில்தான் அவரின் நிலம். ஓடை கரையில் ஓங்கி உயர்ந்த மரங்கள் இருக்கும். இவர் சிறு பிள்ளையாக இருந்தபோது, ஓடையில் ஒன்பது மாதத்துக்குமேல் நீரோட்டம் இருக்கும். சமயத்தில் கவலைபோட்டு நீரைப் பாய்ச்சியிருக்கிறார்கள். ஆனால், அதெல்லாம் அந்தக் காலம். அப்புறம் கவலையும் காணாமற்போய்விட்டது. இப்போது கவலை மட்டும்தான் மிச்சமாகியிருக்கிறது.
மலை வறண்டுபோய்விட்டது என்பது மட்டையனின் மதிப்பீடு. இளைஞனாக இருந்தபோது கருப்புக்கோவில் வரை மலையேறி, அதற்கு அந்தப்பக்கம் உள்ள அரளிக்காடெல்லாம் போயிருக்கிறார். சிறுமலை என்ற பெயர் தப்பு என்று அவருக்குத் தோன்றும். வானுயர்ந்த மலைகளுடன், மடங்கி மடங்கி அடுக்கு அடுக்கென நீளும் சிறுமலை உண்மையிலேயே பெரிய மலை என்பது மட்டையனின் அபிப்ராயம்.
அப்போதெல்லாம், கற்றாழை செழிப்பாக இரண்டு ஆள் உயரக் குத்தாக வளர்ந்திருக்கும். ஆள் தெரியாத உயரத்துக்குப் போதை புல் எழுந்து நிற்கும். கடம்ப மரங்கள் நிறைந்திருக்கும். ஓடைகளில் நீர் எப்போதும் கசிந்துகொண்டிருக்கும். ஆங்காங்கே சுனைகள் இருக்கும். பள்ளக் கிடங்குகளில் நீர் தேங்கிநிற்கும். மயில் அகவும் சப்தம் கேட்டபடியே இருக்கும். மிருகங்களுக்கும் கால்நடைகளுக்கும் வளமான மலையும், மங்காத நீர்வளமும் வேறு எந்த சொர்க்கத்தில் கிடைக்கும்?
ஆனால் மட்டையன் பார்த்துக்கொண்டிருக்கவே எல்லாமும் போயிற்று. மரங்களை வெட்டுகிறார்கள் என்று மட்டையன் கேள்விப்பட்டிருக்கிறார். வனத்துறை ஒவ்வொரு ஆண்டும் மரம் வெட்டுபவர்களைப் பிடித்து கேஸ் போடும். ஆனால், மரம் வெட்டிய திருடர்களை விட்டுவிட்டு புலையர்கள் மீதுதான் கேஸ் போடுவார்கள்.
அப்புறம் வனம் திடீர் திடீரென்று தீப்பிடித்துக்கொள்ளும். இன்றும் அப்படித்தான் தீப்பிடித்துகொண்டுள்ளது. யார் வனத்தைப் பற்றவைக்கிறார்கள்? இயற்கையான தீயென்றால், கீழ்ச்சரிவுகளில் பிடித்து மேல் நோக்கி எப்படிச் செல்கிறது? மனிதர்கள் வேலைதானோ?
ஆனால், இயற்கை கேள்வியெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கவில்லை. மலை வறண்டுவிட்டது. நீர்த் தேங்கி நிற்கும் பள்ளக் குண்டுகளில் கூட கோடையில் நீரில்லை. அதுதான் மட்டையனுக்குத் தீம்பாக முடிந்தது.
இந்த ஆண்டு நல்ல மழை. சரியான பருவம் பார்த்து அரை ஏக்கரிலும் வெங்காயம் போட்டுவைத்தார். தளதளவென்று வளர்ந்தபோது அவரின் மனம் கணக்கு போட்டது. ‘எப்புடியும் பதினைஞ்சாயிரம் வந்துடும். ஆனா, வெல குறையாமல் இருக்கனும்.’
அந்த பதினைந்தாயிரத்திற்கான செலவையும் யோசித்து வைத்திருந்தார். ‘வாங்கியக் கடன கட்டிப்புடலாம்.. அப்புறம் பத்து நிக்கும்’ என்று மனக்கணக்கு போட்டார்.
முதல் பிரசவத்திற்கு வரும் பேத்திக்கான செலவு என்று அதை ஒதுக்கி வைத்திருந்தார். அவருக்கு வேறு யாரும் இல்லை. இந்த கொட்டமும் நிலமும்தான் அவரின் உலகம். விவசாய வேலைக்குப் போவார். விவசாயம் இல்லாதபோது 100 நாள் வேலைக்குப் போவார். வேறு வழியில்லை என்றால் மண் அள்ளும் டிராக்டர்காரன் அழைத்தால் போவார்.
அனைத்துக் கணக்குகளும் போன வாரம் தவிடுபொடியாகிவிட்டன. அவர் போட்டிருந்த வெங்காயம் அனைத்தையும் காட்டுப் பன்றிகள் நோண்டி எடுத்துச் சாப்பிட்டுவிட்டுப் போய்விட்டன. அவரின் வாழ்க்கையில் அத்தனை பன்றிகளை அவர் கண்டதில்லை.
பத்துப் பதினைந்து வருடமாகவே விருகம், காட்டு எறுமை என்று மிருகங்கள் மலையைவிட்டு இறங்க ஆரம்பித்துவிட்டன. காட்டோரத்துத் தோட்டங்களில் உள்ள வாழை துவங்கி கிழங்கு வரை அனைத்தையும் அழிக்கத் துவங்கின. மோட்டார் அறைகளில் உள்ள தண்ணீரும், தோட்டத்தில் கிடைக்கும் தீனியும் கோடை தோறும் அவற்றைக் கீழிறக்குகின்றன.
மட்டையன் வெங்காயம் கொட்டை பிடித்தது முதல் இரவில் தூங்கியதில்லை. காட்டுப் பன்றிகள் இறங்கினால், விரட்டியடிப்பார். அன்று அத்தனைப் பன்றிகளும் கூட்டமாக வர, இவர் கண் முன்னே நிலவு வெளிச்சத்தில் வெங்காயம் எல்லாம் காற்றோடு போனதுபோல ஆயிற்று.
அன்று முதல் மட்டையன் வேலையெதற்கும் போகவில்லை. கொட்டத்திலேயே அமர்ந்திருந்தார். கல்லடுக்கு அடுப்பில் ஒரு நாள்விட்டு ஒரு நாள் கஞ்சி காய்ச்சிக் கொண்டார். ‘அஞ்சாயிரம் கடனாச்ச.. எப்புடி கொடுக்கிறது? பேத்தி ஜோதியப் போயி அழைச்சிட்டு வரணுமே? என்னத்தச் செய்யிறது?’, இந்தக் கேள்விகள்தான் அவர் மனதில் திரும்ப திரும்ப எழுந்துகொண்டிருந்தன.
ஜோதி இவரின் ஒரே மகன் வயிற்றுப் பேத்தி. ‘மதுரக்கிப் போயிட்டு வரோம்’ என்று மகன் குடும்பத்தோடு புறப்பட்டுப் போனான். பேத்தி மட்டும்தான் திரும்பி வந்தாள். ஆண்டிப்பட்டி பிரிவில் நடந்த பேருந்து விபத்தில் மகனும் மருமகளும் போய் சேர்ந்துவிட்டார்கள். கிழவி கொஞ்சநாள் பார்த்தாள். அப்புறம் அவளும் போய் சேர்ந்தாள். மட்டையன்தான் பேத்திக்கு எல்லாம்.
‘வூட்ல பொம்பளன்னு இல்லன்னாலும் தலைப்பிரசவத்துக்கு தாய்வீடுதானே’, என்று பேத்தியின் புருஷன்காரன் சொன்னதை மட்டையனால் மறுக்க முடியவில்லை.
மட்டையன் பேய் போல கொட்டத்தில் உட்கார்ந்திருக்க, மலையில் பிடித்த தீ சிகரம் நோக்கி எகிறிக்கொண்டிருந்தது.
இவர் கொட்டத்திலேயே முடங்கிக் கிடப்பது தெரிந்து அன்று மாலை மணி வந்திருந்தார். ஊரின் பெரிய மனுஷன்… வயதில். உள்ளூரில் அனைத்துக்கும் அவர்தான் புரோக்கர். மனுஷன் தலையில் ஆரம்பித்து கால் வரை நரைத்த முடிதான். சுருங்கிக் கிடந்த கண்கள் உலகத்தையே அளந்துகொண்டிருக்கும்.
வெங்காயத்தால் வெந்துபோன மட்டையனின் கதையை, இப்போதுதான் கேட்டுக்கொள்வது போல, கேட்டுக்கொண்ட மணி, ‘சரி.. உடு.. எல்லாம் நல்லதுக்குத்தான்…. இந்தக் காட்ட எதுக்குத் தூக்சிச் செமக்கிற.. வித்திடு..’
திடுக்கென்றது மட்டையனுக்கு… இந்த காட்டையா? அவரின் பார்வை ஓடைக்கரை மரங்களைப் பார்த்தது… பழைய கிணற்றின் அருகே தப்பித்து உயர்ந்து நின்ற ஒற்றைத் தென்னையைப் பார்த்தது.. இவைதான் மிச்சம். ஓடையிருக்கிறது தண்ணீர் இல்லை.. தென்னையிருக்கிறது.. அதன் காயிலும் இளநீர் இல்லை..
நைந்துபோன கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்திருந்த அவர், முட்டிகளில் தலையைப் பொதித்துக்கொண்டார். பின்மாலையின் இருட்டில் கண்ணீரை மறைத்துக்கொண்டார்.
‘வேணா.. மணி.. இதுதான் நா பொறந்த பூமி’
‘இங்க வா மட்டையா… நீ பொறந்த பூமிதான்.. நீ போனப்புறம் யாரு இருக்கா, இந்த பூமியப் பார்க்க..?’, என்று மணி கொக்கி போட்டார்.
உண்மைதான் என்று மட்டையனுக்குப் பட்டது. ’ஆனா..?’ என்று யோசித்தார். ஓடையில் மீன்பிடித்து வந்து இந்த நிலத்தில்தான் அவர் சுட்டுச் சாப்பிட்டார். பட்டாம்பூச்சிகளை விரட்டிக்கொண்டு சென்றதும் இந்த காட்டில்தான். பழனியம்மாவோடு பாடுபட்டதும் இந்த பூமியில்தான்..
‘என்னடா மட்டையா..? சரி பூமியை விக்க வேணாம்.. மண்ணை வித்திடு.. ஒரு லோடுக்கு எரநூறு ரூபா இப்ப’, மணி விடுவதாக இல்லை.
மட்டையனின் தலை முட்டிகளிலிருந்து எழவேயில்லை. ‘மண்ணையா விக்கிறது.. எங்கம்மாவான மண்ணையா..?’
‘டேய்.. ஒரு லோடு எரநூறு ரூபான்னா, ஒரடிக்கு மண்ண எடுத்தா கூட நூறு லோடு போவும்.. வெங்காயத்துல விட்டத மண்ணுல பிடிச்சுடு’
மட்டையனிடமிருந்து பதிலில்லை.
‘டேய் முட்டாப் பயல.. ஒரடிக்கு எடுத்துடு.. அவனவன் ஆறு –ஏழு அடிக்கு எடுக்கிறானுங்க.. அப்புறந்தான் பாறை வருது… கஞ்சி ஊத்தாத மண்ணை வச்சிகிட்டு இன்னா பன்ன போற?’
மணியின் வார்த்தைகள் ஆசையூட்டின. ‘ஓரடிக்கு மண்ண வித்திட்டு அப்புறம் மரக்கண்ணு வைச்சுப் பார்க்கலாம்..’, என்று மட்டையனுக்குத் தோன்றியது. ஆனாலும் மனம் ஒப்பவில்லை.
‘பொழைக்கத் தெரியாதவன்டா நீ.. காளாக்காரனுங்க மண்ணு கெடக்காம திரியறானுங்க.. நீ மண்ணு மேல பொணமா ஒக்காந்திருக்க..’
‘சரி மணி… மண்ண விக்கிறது குத்தமிலியா?’ நிமிர்ந்த மட்டையனின் கண்களில் நீர் வழிந்தது.
‘என்ன குத்தம்..? டிராக்டர்காரன் ஒவ்வொருத்தனும் ஆர்ஐக்கு மாசம் மூவாயிரம் கட்டுறானுங்க.. பணம் தாசில்தார் வரைக்கும் போவுது.. இருபது டிராக்டர் ஓடுது.. அப்புறம் யாரு புடிப்பா?’ என்றார் மணி.
‘சட்டம் புடிக்காது மணி… எனக்கு நல்லாத் தெரியும்.. மனசு? அது குத்துத.. இத்தனை நாளு சோறு போட்ட தாய பொளந்து அள்ளி விக்க முடியுமா மணி..’
‘போடப்போ’, என்றவாறு மணி எழுந்தார்.
இருந்தாலும் மணியின் மனசு கணக்குப் போட்டது.. ‘சரிடா.. நீ சரின்னு நெனச்சா காலைல வூட்டுக்கு வா.. காளாக்காரங்கிட்ட அழைச்சுட்டுப்போயி மும்பணம் வாங்கித்தாரேன்’ என்றவாறு கொட்டத்தை விட்டு அகன்றார். மட்டையன் எப்பிடியும் மடங்குவார் என்பது அவர் கணக்கு. திரும்பிப் பார்க்காமல் நடந்தார்.
மட்டையன் எந்தப் பதிலும் பேசவில்லை.
பொழுது விடிவதற்கு முன்பே மட்டையன் கட்டிலை விட்டு எழுந்தார். ‘சாய்ங்காலம் மாப்பிள்ளய பேத்தியோட அழைச்சிட்டு வரனும்.. மாசமா இருக்கிற பொண்ணுக்கு கஞ்சியா குடுக்க முடியும்?’
அவருக்கு நிலைகொள்ளவில்லை.. குதறிப்போடப்பட்ட செம்மண் பூமி இவரைப்போல கிடந்தது. “சரி.. மண்ணையா சாப்பிடக் கொடுக்கிறது?’
வேட்டியை எடுத்துக் கட்டிக்கொண்டவர், மேல் துண்டையும் எடுத்துக் கொண்டார். ‘அதாஞ்சரி ஒரடிக்கு மண்ணை விப்போம்.. அப்புறம் மரத்தை வச்சி தோட்டமாக்கிடலாம்’, என்று உறுதிபூண்டவராக மணியின் வீட்டுக்கு நடந்தார்..
மணியை அழைத்துக்கொண்டு காளாக்காரர் வீட்டுக்கு நடந்தபோது, வாடிப்பட்டியின் உயரமான வீடுகள் தெரிந்தன. அந்தக் காலத்தில் வாடிப்பட்டியின் பெரிய வீடு கூட ஓட்டு வீடுதான். ஊரைச்சுற்றி மரங்கள்தான் முதலில் தெரியும். இப்போது மாடமாளிகைகள் தெரிந்தன.
‘அதுசரி மண்ணெல்லாம் மாட மாளிக ஆயிட்டா.. மாட மாளிகைக்கு சோறு எங்கேந்து வரும்?’, என்று மட்டையன் தனக்குள் கேட்டுக்கொண்டவராக ‘பைத்தியக்கார ஒலகம்’ என்று தானே சிரித்துக்கொண்டார்.