கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 1, 2024
பார்வையிட்டோர்: 2,843 
 
 

அத்தியாயம்-2 | அத்தியாயம்-3 | அத்தியாயம்-4

தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் தமிழ் மண்ணில் அகிம்சை நிலைப் போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டேயிருந்தது. அப்பாவும் இது போல பலதடவைகள் அகிம்சை முறைப்போராட்டத்தில் பங்கு பற்றினார். ஓவ்வொரு முறையும் தடியடி வாங்குவது, ஜெயிலுக்குப் போவது என்று ஒழுங்காக நடந்ததே தவிர இவர்களின் கோரிக்கை ஒன்றுமே ஆட்சியாளரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஆட்சியாளர்கள் எதிர்க்கட்சியாவதும் எதிர்க்கட்சி ஆட்சியாளராவதும் மாறிமாறி நடந்ததே தவிர யாரும் சிறுபான்மை இனத்தவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாக இல்லை. ஜனநாயக நாடு என்று சொல்லப்பட்டாலும் பெரும்பான்மை இனத்தவரே எப்பொழுதும் ஆட்சியாளராக இருந்தார்கள். ஜனநாயக நாடுகளில் அதுதானே நடக்கிறது. அப்பாவின் அகிம்சை முறையிலான போராட்டத் தோல்விகள் மாலதியை மனதளவில் பாதித்திருக்க வேண்டும். தோல்விகள் எல்லாம் தோல்விகள் அல்ல என்று அப்பா அடிக்கடி எங்களுக்கு நினைவு படுத்தினாலும், எந்த ஒரு பலனும் தராத இத்தகைய அகிம்சை முறைப் போராட்டங்களை மாலதியின் இளம் இரத்தம் ஏற்றுக் கொள்வதாக இல்லை.

அகிம்சை பற்றி அப்பா போதனை செய்யும் போதெல்லாம் அவள் அப்பாவின் நெற்றித் தழும்பைத்தான் பார்ப்பாள். அவளது பார்வையை அப்பா புரிந்து கொண்டு மௌனமாகி விடுவார். ஆனாலும் அவள் அப்பாவை அடிக்கடி சீண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பாள்.

‘கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வந்தது..

நெற்றி மேலே காயமொன்று வைத்துவிட்டுப் போனது’

என்று அவள் வாய்க்குள் முணுமுணுப்பதிலிருந்து அப்பாவிற்குப் புரிந்து விடும்.

‘அகிம்சை என்றால் என்ன என்று உனக்கு இப்போ புரியாதம்மா, என்றாவது ஒருநாள் இரத்தம் சிந்தும் போது நீ புரிஞ்சு கொள்வாய், அப்போது காலம் கடந்துவிடும்’ அப்பா அதற்கும் சாந்தமாய்ப் பதில் சொல்வார்.

‘இந்தக் காலத்திற்கு இதெல்லாம் சரிவராதப்பா’ என்பாள் மாலதி.

மாலதி வளரவளர அவளது போக்கில் மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தன. அப்பா அதைக் கவனித்தாரோ தெரியவில்லை, ஆனால் நான் அவதானித்தேன். அப்பாவின் அகிம்சைக் கோட்பாட்டோடு தங்கை மாலதிக்கு ஒத்துப் போகவில்லை என்பதை நான் மெல்ல மெல்லப் புரிந்து கொண்டேன்.

அப்பா எப்படி இராசராச சோழனைப் (கி.பி 985 – 1014) பற்றிப் புகழ்ந்து கொண்டிருந்தாரோ அதேபோல தங்கை மாலதி எல்லாள மன்னன் பற்றிப் புகழ்ந்து கொண்டிருப்பாள். ஈழத்தின் பல கிராமங்களைத் தஞ்சைக் கோயிலுக்குத் தானமாகக் கொடுத்தது பற்றியும், திருவாலங்காட்டுப் பட்டயங்கள் பற்றியும் அப்பா சொல்லிக் காட்டுவார். எல்லாள மன்னன்மீது (கிமு 145 – 101) தங்கைக்கு ஒரு வித பக்தி இருந்தது. அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு இலங்கையை நேர்மையாக ஆண்ட தமிழ் மன்னன் என்பதால் அந்த மன்னனை வீரகாவியம் படைத்ததாக தங்கை பெருமைப்பட்டுக் கொள்வாள். அனுராதபுர ஆட்சிக் காலத்தின் போது எட்டுத் தமிழ் மன்னர்கள் 81 வருடங்களுக்குமேல் இலங்கையில் ஆட்சி புரிந்ததைச் சொல்லிக்காட்டுவாள். 22 வருடங்கள் ஆட்சி செய்த ஈழசேனனையும், 44 வருடங்கள் ஆட்சி செய்த அவனது மகன் எல்லாளனைப் பற்றியும் புகழ்வாள்.

‘அண்ணா, எல்லாள மன்னன் வஞ்சனையால்தான் தோற்கடிக்கப்பட்டான் என்பது உனக்குத் தெரியுமா?’ என்றாள் ஒரு நாள்.

‘துட்டகைமுனுவால் தோற்கடிக்கப்பட்டது தெரியும் ஆனால் வஞ்சனையால் தோற்கடிக்கப்பட்டான் என்பது எனக்குத் தெரியாது.’ என்றேன்.

‘எல்லாள மன்னன் குதிரைச்சமர் யானைச்சமர் எல்லாவற்றிலுமே சிறந்த வீரன். எனவேதான் அவற்றைத் தவிர்த்து உண்மையான வீரன் என்றால் தரையிலே நின்று சண்டை பிடிப்போமா என்று துட்டகைமுணு சவால் விட்டான். தள்ளாத வயதிலும் விட்டுக் கொடுக்காது இளைஞனான துட்டகைமுணுவோடு தரையிலே நின்று சண்டை போட்டதால்தான் எல்லாள மன்னன் தோல்வியைத் தழுவிக் கொண்டான். சுருங்கச் சொன்னால் வஞ்சக நோக்கம் கொண்ட ஒருவனால், அவனது வஞ்சக வாரத்தையை நம்பியதால் ஏமாற்றப்பட்டான்’ என்றாள் மாலதி.

‘எல்லாள மன்னன் இறந்தபோது நாட்டு மக்கள் அவனுக்குக் கோயில் கட்டிக் கும்பிட்டதாக வரலாறு கூறுகிறது. அனுராதபுரத்தில் தூர்ந்துபோன அந்தக் கோயில் இப்பொழுதும் இருக்கிறது. எல்லாள மன்னன் இறந்தபோது ஈழத்தமிழனின் சரித்திரமும் முடிந்து விட்டதாகவே பேசப்பட்டது. தமிழன் பாரம்பரியமாய் பரம்பரையாய் வாழ்ந்த மண்ணின் சரித்திரம் முடியவில்லை. முடியப்போவதும் இல்லை. அதன்பின் பல தமிழ் மன்னர்கள் வந்து போய்விட்டார்கள். வருவதும் போவதும் தொடரத்தான் செய்யும்’ என்று அப்பாவோடு வாதாடுவாள்.

ஈழத்து தமிழ் மன்னர்கள் பற்றி நிறையவே தெரிந்து வைத்திருந்தாள். தகுந்த ஆதாரங்களோடு அவர்கள் ஆண்ட காலங்களை ஆவணப்படுத்தியிருந்தாள். தொன்று தொட்டு பாரம்பரியமாய் வாழ்ந்த எங்கள் இனம் எந்தக் காரணம் கொண்டும் அழிந்து போகக்கூடாது, மொழி அழிந்தால் நம் இனம் அழிந்துவிடும் என்று மொழிக்கு முதன்மை கொடுத்து வாதாடுவாள்.

பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த மண் என்பதால் அப்பா அந்த மண்ணைவிட்டு வெளியே வர விரும்பவில்லை. அம்மா ஒரு சங்கீத ஆசிரியையாக இருந்தாள். அப்பா ஒரு சங்கீதப் பிரியர். அதனால் சங்கீத ஞானம் அம்மாவிடம் மட்டுமல்ல மாலதியிடமும் அந்த இசை ஞானம் இருந்தது.

‘எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி

இருந்ததும் இந்நாடே’

என்று பாரதி பாடலைத் தங்கை மாலதி எப்போதாவது பாடும்போது அப்பாவும் சேர்ந்து பாட ஆரம்பித்து விடுவார். ‘எங்கள் அன்னையர் தோன்றி  மழலைகள் கூறி அறிந்தது மிந்நாடே.. அவர் கன்னியராகி நிலவினிலாடி களித்தது மிந்நாடே..’ திடீரென அம்மாவின் நினைவுகளில் மூழ்கி உணர்ச்சி வசப்பட்டு அவர் கண்களில் கண்ணீர் துளிர்க்கும். அப்போதெல்லாம் மாலதிதான் அவருக்கு ஆறுதல் சொல்வாள்.

‘அப்பா இப்படியே பாடிப்பாடி எத்தனை நாளைக்கு அழுதிட்டே இருப்பீங்க?’

‘என்னம்மா செய்யிறது, உன்னுடைய அம்மா பிறந்து, தவழ்ந்து, வளர்ந்து வாழ்ந்த வீடு இது, இதை எல்லாம் விட்டிட்டு எப்படியம்மா நாங்க தனியே போறது. அம்மாவின் நினைவுகளைத் தூக்கி எறிஞ்சிட முடியுமாம்மா?’ சொந்த வீட்டை விட்டுப் பிரிந்து செல்ல அவரால் முடியவில்லை.

‘இங்கே இருந்தாக் கொன்று போடுவாங்கப்பா, இந்தப் பக்கம் இன்னும் செல் வந்து விழவில்லை. இராணுவம் நெருங்கீட்டு இருக்கிறாங்களப்பா, எந்தநேரமும் அவங்க இந்தப் பக்கம் நகரலாமப்பா.’

‘எனக்கு என்னைப்பற்றிப் பயமில்லையம்மா, அண்ணாதான் வளர்ந்திட்டான். அவன் இங்கே இருந்தால் அவனது உயிருக்கு ஆபத்து’

‘என்னப்பா சொல்லுறீங்க, என்னோட கூட்டாளிங்க எல்லாம் இங்கேதானே இருக்கிறாங்கப்பா’ என்றேன்.

‘யாருக்கு எப்ப என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது மகனே, அதனால நான் ஒரு முடிவு எடுத்திருக்கிறேன்.’ என்றார் அப்பா தீர்க்கமாக.

‘என்னப்பா?’ என்றே அவசரமாக.

‘அம்மாவின் கடைசி ஆசையை நீதான் நிறைவேற்றி வைக்க வேண்டும்’

‘சொல்லுங்கப்பா!’

‘நீ படிச்சு நல்லாய் வரவேணும்.  சமுதாயம் மதிக்கக்கூடிய பொறுப்புள்ளவனாக வாழவேண்டும்.’

‘நான் படிச்சுக் கொண்டுதானே இருக்கிறேன்.’

‘நாட்டு நிலைமை சரியில்லை. இங்கே இருந்து படிக்கச் சரிவராது, அதனாலே நீ வெளிநாடு போகவேண்டும்.’

‘வெளிநாட்டிற்கா? நானா, என்னப்பா சொல்லுறீங்க?’

‘நீ வெளிநாடு போய்ப் படிச்சால்தான்  மாலதியையும் அங்கே கூப்பிடலாம். இரண்டு பேரையும் கரை சேர்த்திட்டால் நான் நிம்மதியாய் கண் மூடிடுவேன்’

அப்பாவின் கனவுகள் எல்லாம் இப்படித்தான் தொடர்ந்தன. எங்களைக் கரை சேர்ப்பதிலேயே அவர் கண்ணும் கருத்துமாய் இருந்தார். இறுதி யுத்தம் தொடங்கு முன்பாகவே என்னை வெளிநாட்டிற்குப் படிப்பதற்காக அனுப்பிவிட்டார்.

அப்பாவின் விருப்பப்படியே மேற்படிப்பிற்காக நான் வெளிநாடு சென்றாலும் என்னால் கவனம் செலுத்திப் படிக்க முடியவில்லை. என் கவனம் எல்லாம் ஊரிலேயே இருந்தது. அப்பாவைப்பற்றிய, தங்கையைப் பற்றிய கவலையோடும் ஏக்கத்தோடும் தினம் தினம் காலம் கழிந்தது.

தினசரி வரும் அவலச் செய்திகள், அவர்களை அங்கே தனியே விட்டு விட்டு நான் மட்டும் கோழை போல இங்கே ஓடி வந்திருக்கக்கூடாதோ என்று நினைத்துப் பார்க்கவும் வைத்தது. எங்கள் குடும்பம் போலவே அந்த மண்ணில் பல்லாயிரக் கணக்கான குடும்பங்களின் நிலைமையும் கவலைக்குரியதாகவே இருந்தது. வெளிநாட்டில் இருந்து இப்படிப் பதட்டப் படுவதால் என்ன பலன் கிடைத்து விடப்போகிறது. தொடக்கத்தில் எங்கேயாவது குண்டு வெடித்தால் பதட்டப்பட்ட மனசு தினம் தினம் அங்கே குண்டு வெடிப்பதும், அப்பாவி மக்கள் இறப்பதும் ஒரு நிகழ்ச்சியான பிறகு எனக்கும் அது தினசரி நடக்கும் ஒரு சாதாரண நிகழ்வாய்ப் போய்விட்டது.

இனிமேலும் அங்கே தங்க முடியாது என்ற நிலையில், சொந்த வீட்டைவிட்டுப் பிரியும் கடைசி நேரத்தில் ‘போய்வருகிறேன்’ என்றபடி அப்பா வாசற்படியைத் தொட்டுக் கண்ணில் ஒற்றித் தேம்பி அழுத காட்சி மாலதியை நிறையவே பாதித்திருந்தது. மண்ணை, மரத்தை, ஆடுமாட்டை என்று ஒன்றையுமே மிச்சம் விடாமல் அவர் பிரிவுத் துயரோடு விடை பெற்ற கடைசி நாட்களில்கூட ‘போய் வருகிறேன்’ என்று நம்பிக்கையோடுதான் புறப்பட்டாராம். அந்த நம்பிக்கை அவரிடம் கடைசிவரை இருந்தாலும், பிறந்து வளர்ந்த சொந்த மண்ணிலேயே அகதியாக்கப்பட்டபோது அவர் துடித்துப் போய்விட்டார். வீட்டை விட்டுப் பிரிந்தாலும் தாய்மண்ணை விட்டுப் பிரிய அவர் மறுத்து விட்டார்.

– தொடரும்…

– தமிழகத்திலிருந்து வெளிவரும் மூத்த இதழான கலைமகள் ராமரத்தினம் குறுநாவல் போட்டி – 2011ல் பரிசு பெற்ற கதை. நன்றி: கலைமகள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *