கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 12, 2024
பார்வையிட்டோர்: 391 
 
 

(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காலை மணி ஆறு அடித்து ஓய்ந்தது. ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாள்தான்; என்றாலும்; மேசையில் குவிந்து கிடந்தவற்றைப் பார்க்கும்போது கண்கள் என்னைக் கேலி செய்வதுபோல் தோன்றியது. மனம் கட்டளையிட கைகள் பறந்தன. எல்லாம் இருக்க வேண்டிய இடத்தில் சற்று நேரத்தில் அழகாய் அமர்ந்து கொண்டன.

என்னே இறைவனின் படைப்பு! கண்கள் கவலைப்பட… மனம் ஆணையிட… கைகள் பணிகளை முடித்து வைக்க… அடடா… மூளையின் தலைமைத்துவ தன்மையில் வியந்தவராய் கண்சிமிட்டும் அந்த விழாக் கார்டு கால்களைத் திரும்பச் சொன்னது. மறுபடியும் கைகள் தன்பணியைத் தொடங்குகின்றன. கண்கள் அந்த அழைப்புக் காட்டில் பதிகின்றன. நெஞ்சில் ‘சுருக்’ கென்று ஓர் தைப்பு!

நண்பர் ராஜசேகரன் வீட்டுக் காதணி விழாவுக்கான அழைப்பிதழ்தான் அது! நிகழ்வுக் கொத்து அழகாய் அமைந்திருந்தது. ஒன்பதரை மணியிலிருந்து பத்துக்குள் விழா முடிவு பெறும் என்ற அறிவிப்பு என்னைத் துரிதப்படுத்தியது. குளித்து முடித்துக் கிளம்புகிறேன்.

ஜோகூரில் இராஜமாரியம்மன் ஆலயத்தில் விழா என்பதால் எனது வண்டியிலேயே கிளம்பினேன். மறக்காமல் குழந்தைகளுக்கான அன்பளிப்புத் தொகை நிரப்பப்பட்ட உறைகளைச் சட்டைப் பைக்குள் பத்திரப்படுத்திக்கொண்டு மோகன் எதிரே வந்தார்.

தொலைபேசி இலாக்காவில் பணிபுரியும் முப்பது வயது இளைஞர்; நல்ல முற்போக்கு சிந்தனை வாதி! அழகிய புன்முறுவலுடன் கை குவித்தார். தன் வண்டியிலிருந்து ஒரு கட்டுக் காகிதத்தை எடுத்து அதிலிருந்து ஒன்றை என்னிடம் நீட்டினார். “நீங்களெல்லாம் கட்டாயம் வரணும் ஸார்.. நம்முடைய இளைஞர்களுக்கு நல்ல விஷயங்களைப் பக்குவமாய் சொல்லித்தர உங்கமாதிரி பெரியவுங்களோட உதவி எங்களுக்குத் தேவைப்படுகிறது. இன்னும் பத்தாம் பசலித்தனமும் பழைய பஞ்சாங்கமுமா நம்ம சனங்கள்ல ரொம்ப பேர் இருக்காங்க. அவங்களால நல்ல வழிகாட்டியா இருந்து பிள்ளைகள வழி நடத்த முடியல… எது கலாச்சாரம்? எது பண்பாடு? எது பாரம்பரியம்னு தெரியாமலேயே காலத்தைக் கடத்திட்டு.

சொல்லவே கஷ்டமா இருக்குது ஸார். பழையன போற்றி.. புதியன புகுத்தி, காலத்தோட மாறுதலுக்கு ஏற்ப நாமும் நம்ம பழக்கவழக்கங்களை மாத்திக்கணும்கிறது தெரியமாட்டேங்குது இவுங்களுக்கு… இதுக்காகத்தான் புதிய தொடக்கம்னு சொல்லி கருத்தரங்கு ஏற்பாடு பண்ணியிருக்கோம்.

மழைபோல் பொழிகிறார் தன் மன உணர்வுகளை.. அவரின் தோளைத்தட்டிக் கொடுத்துக் கையைப் பற்றிக் குலுக்கி விடை பெற்றுப் புறப்படுகிறேன். வண்டி ஜோகூரை நோக்கிப் பறக்கின்றது. மனம் முப்பது வயது இளையர் மோகனையும்… அறுபது வயது ஆத்ம நண்பர் ராஜாசேகரனையும் அசை போட்டுக் கொண்டிருந்தது. இரண்டையும் எடைபோட்டு முடிக்கவும் ஆலையத்தை அடையவும் சரியாக இருந்தது.

ராஜசேகரன் ஓடிவந்து கையைப்பற்றி ஆரத்தழுவிக்கொண்டார்; தன் பிள்ளைகள் இருவரையும் அழைத்து அறிமுகப்படுத்தினார். அவர்கள் வெளிநாட்டில் படித்துப் பட்டம் பெற்றுப் பணிபுரிந்தபோதும் பணிவும் மரியாதையும தமிழ்ப்பண்பாடும் நிறைந்தவர்களாய்க் காட்சி தந்தனர். எனக்கென்று இருக்கையைக் காட்டிவிட்டுத் தன் அடுத்த வேலையைக் கவனிக்கப் போனார் ராஜசேகரன்.

ஆலய பொதுமண்டபம் நிரம்பி வழிந்தது. பக்கத்து இருக்கையில் பெண்கள். பட்டிலும் பொன்னிலும் கோயில் விக்ரகங்களுக்கு இணையாக அலங்காரத்தில் அமர்ந்திருந்தார்கள். அவர்களின் பேச்செல்லாம் புதிதாய் வந்துள்ள சேலைகளைப் பற்றியும் தாங்கள் வாங்கி அணிந்துள்ள தங்க வைர நகைகளைப் பற்றியும் இருந்தன.

ராஜசேகரன் தன்னுடன் இரு இளமங்கையரைக் கூட்டி வந்தார். பாப் செய்த முடியும் காட்டன் புடவையும்கழுத்தில் மெல்லிய சங்கிலியும் காதில் கம்மலும் கையில் கடிகாரமும் அணிந்து மிக எளிமையாய்ப் பெண்கள் காட்சி தந்தார்கள்.

“இவர்கள் என் மருமகள்கள். இது மூத்தவன் குணாவின் மனைவி. டாக்டராக இருக்கு. குழந்தைகள் மருத்துவத்தில் சிறப்பு தேர்ச்சி. இது இளையவன் ஜெகாவோட மனைவி. வழக்கறிஞரா இருக்கு. எல்லாருமே வெளிநாட்டுல இருக்கிறப்ப பிள்ளைங்க அங்கேயே பொறந்து வளர்ந்துடுச்சிங்க. அவுங்களுக்கு இப்பத்தான் ஓய்வு கெடைச்சி வந்துருக்காங்க..”

ராஜசேகரன் பெருமையுடன் சொல்லிக்கொள்வதில் அர்த்தம் இல்லாமல் இல்லை. அவர் எப்படி பழைய பண்பாடுகளைக் கட்டிக்காத்து வந்திருந்தாரோ அப்படியே பிள்ளைகளும் அவர்களின் மனைவிமார்களும் இருப்பதும் நவநாகரீக காலத்தில் அதுவும் ஆங்கிலேயே கலாச்சாரமும் கொண்ட நாட்டில் வாழ்ந்தபோதும் தங்கள் வாரிசுகளுக்குக் காதணிவிழா நடத்திப் பார்ப்பதற்கு தாய்மண்ணுக்கு வந்திருப்பதும் பார்க்க நன்றாகத்தான் இருந்தது.

“கண்காணாத தூரத்தில் பிள்ளைங்க இருந்தப்ப ராத்திரிபகலா ஆத்தாளைத்தான் நம்பியிருந்தோம். எந்தக் கொறையும் இல்லாம பிள்ளைங்க பொறந்து நல்லபடியா வந்து சேர்ந்தா அவ சன்னிதானத்தில் முடியெடுத்துக் காதுகுத்தி நூறுபேருக்கு அன்னதானம் போடுறதா வேண்டிக்கிட்டேன்.. ஆத்தாளே பக்கத்தில இருந்து என் பிள்ளைகளைக் காப்பாத்திகிட்டு வந்திருக்கா.. இப்ப எங்க வேண்டுதலை நிறைவேத்ததான் இந்த விழாவும் அன்னதானமும்”.

ராஜசேகரன் சொல்லிக் கொண்டிருக்க அந்த இரண்டு பெண்களும் விடை பெற்று நகர்ந்தார்கள். குழந்தைகள் அழகாய் உடுத்தி அலங்காரமாய் வந்தார்கள். தாய்மாமன் மடியில் வைத்துக் காது குத்தப்பட்டது. குழந்தைகளுக்கு அன்பளிப்புகள் வழங்கப்பட்டன. ஆசீர்வாதமும் வாழ்த்தும் கூறப்பட்டு அவர்கள் பெயருக்குச் சிறப்பு அர்ச்சனையும் செய்யப்பட்டது. கற்பூர ஒளியில் கர்ப்பக்கிருகத்தில் அம்பாள் கம்பீரமாய் காட்சியளித்துக் கொண்டிருந்தாள்.

விருந்து தொடங்கியது. பட்டிலும் பொன்னிலும் மின்னிய பாவையர் கூட்டம் மைனர் செயின் கை செயின் மின்னிய ஆடவரும் அமர்ந்தார்கள். எல்லாம் மேல்மட்ட மக்கள். அவர்களின் தோற்றமே ராஜசேகரனின் வசதியான வாழ்க்கையையும் அது தேடிப் பிடித்து வைத்திருக்கும் உறவுகளைம் நட்பையும் அடையாளம் காட்டியது. ஓரமாய் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த என்னிடம் வந்து கையைப் பிடித்து அழைத்துப் போய்ச் சாப்பிட அமர்த்துகிறார். கண்ணாடிபோல் துடைக்கப்பட்ட வாழையிலை போடப்படுகிறது.

“முதல்ல இனிப்பைச் சாப்பிடுங்க. அதுதான் சம்பிரதாயம்” சொல்லிக் கொண்டே ஒரு ஜிலேபியை இலையில் வைக்கிறார் நண்பர். அதைப் பார்த்ததுமே வெளியூரில் வாழ்ந்து கொண்டிருக்கும் மகளின் முகமும் குரலும் நினைவுக்கு வருகிறது.

“தனியா இருக்கிறோம்னு இனிப்பை அதிகமாகத் தின்னு உடம்பைக் கெடுத்துக்காதீங்கப்பா. அப்புறம் உடம்புக்கு வந்து படுத்துக்கிட்டா நல்லா இருக்காது…!”

நண்பர் நகர்ந்ததும் அதை மெல்ல நகர்த்துகிறேன். வகை வகையான பச்சடிகள்.. பொரியல் கூட்டுவகைகள் விருந்து ஆரம்பமாகிறது. சாதத்தில் சாம்பாரை ஊற்றி கொஞ்சம் நெய்யைப் போடச் சொல்லி மெல்ல பிசைந்து வாயில் ஒரு உருண்டை போட்டிருப்பேன். வாசலில் ஏதோ கசமுசா வென்ற சப்தம்.. தொடர்ந்து சில குழந்தைகளின் அவலக்குரல்.

“அய்யா ரொம்பப் பசிக்குதுங்க.. கொஞ்சம் சோறு குடுங்கையா..”

தீனமாய்க் குரல் வந்த பக்கம் நான் பார்க்க மற்றவர் பார்வையும் அங்கே பாய்கின்றன. இரு சிறுமிகள் வெயிலில் வடிய பூஞ்செடிகள் போல் நின்றுகொண்டு கண்ணில் நீர் மல்கக் கையேந்திக் கெஞ்சிக் கொண்டிருந்தார்கள். இரண்டு பெரியமனிதர்கள் அவர்களை அப்புறப்படுத்துவதில் குறியாய் நின்றார்கள். நேரம் சென்று கொண்டிருந்தது. என் தொண்டையில இறங்கிய சாதம் அப்படியே நிற்பது போன்ற பிரமை! அக்கம் பக்கம் பார்க்கிறேன்.

வைரமோதிரங்கள் பளபளக்கும் கைகள் பிசைந்து ஒதுக்கிய சாதத்துடன் பாயாசத்துடன் இலைகள் வாளியில் சேகரிக்கப்படுகின்றன. வேண்டாம் என்றும் போதும் போதும் என்றும் மறுக்கும் கைகள் சமாதானம் செய்யப்பட்டு பதார்த்தங்கள் வைக்கப்படுகின்றன. அறுசுவை உணவே வேம்பாக வெளியே வருவது போன்ற உணர்வு! மெல்ல எழுகிறேன்.

“பாருங்கய்யா.. எல்லாம் நல்ல விதமா முடியப்போற நேரத்தில இந்த பஞ்சப் பிசாசுங்க வந்து காரியத்தைக் கெடுத்துடுச்சுங்க.. சாப்பாட்டு நேரம் நல்லா அமையாமப் போச்சு, பாதிபேர் திருப்தியா சாப்பிடாமா எழும்பிட்டாங்க. அடடா.. நீங்களும் எழும்பி வந்துட்டீங்களே..”

வருத்தமாய்ச் சொல்லிக் கொண்டே வந்தார் ராஜசேகரன். எங்கோ விழுந்து போயிருந்த என் மனம் இப்போது வந்து ஒட்டிக் கொண்டது மாதிரி சுற்றும் முற்றும் வந்து உள்ளே உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும். அந்த அந்த ஆயிரம் கண்ணுடையாளையும் பார்க்கிறேன். எப்போதும்போல் அந்த முகம் சாந்தமாகத்தான் இருந்தது. நடந்து வெளியே வருகிறேன். சாலையோரமாய் அந்தப் பச்சைக் கொடிகள். நெஞ்சில் லேசாக ஓர் வலி! அது அக்குழந்தைகளின் கண்களில் கண்ட ஏக்கத்தின் தாக்குதலோ..

திரும்பிப் பார்க்கிறேன். நண்பர் வெளியே வந்து நண்பர்களை உறவினர்களை நன்றி கூறி வழியனுப்பிக்கொண்டிருந்தார். என்மேல் அவர் பார்வை விழுகிறது. அருகில் வருகிறார். தோளில் தொட்டு.

“நீங்கள்லாம் வந்தது எனக்கு ரொம்ப பெருமையாக இருந்துச்சு. சிரமம் பாரமா வந்து கலந்து குழந்தைகளை ஆசீர்வாதம் பண்ணினதுக்கு ரொம்ப நன்றி” என்று கனிவுடன் கை கூப்புகிறார். அவரிடம் விடை பெற்றுச் சுவற்றிலே சித்திரமாய் ஒட்டி நிற்கும் சிறுமிகளைப் பார்க்கின்றேன். உண்மையிலேயே பசியின் தாக்குதல் முகத்தில் தெரிகிறது. அருகில் சென்று பேச விரும்பி இரண்டடி நகர்கிறேன்.

“வேணாங்க ஐயா.. எங்களை வெரட்டாதீங்க.. எங்களுக்குப் பசியா இருந்துச்சு. அதுதான் சாப்பிடலாம்னு வந்தோம்.. குரலில் பயம் தெரிகின்றது. நான் பரிவுடன் அவர்களை என் கைகளில் அணைத்துக் கொள்கிறேன்.

“வாங்க போய் சாப்பிடலாம்…” என்னோடு உற்சாகமாய் அவர்கள் பின் தொடர்கிறார்கள். எதிர் முனையிலே இருந்த தாவூது ரெஸ்டாரண்டு கடையில் புகுந்து அவர்களுக்கு ஆளுக்கு இரண்டு ரொட்டியை வாங்கிக் கொடுக்கிறேன். ஆவலாய் சாப்பிட்டு முடிக்கிறார்கள்.

குடிப்பதற்கு மைலோ ஆடர் செய்கிறேன். ஊதி ஊதிக் குடிக்கிறார்கள். முகத்தில் தெளிவும் உடம்பில் தெம்பும் தெரிகிறது. அவர்களையே பார்த்துக் கொண்டிருக்கும் என்னைப் பார்த்த கடை முதலாளி ஷலிம்கான் என் அருகில் வருகிறார்.

“உங்களுக்கு இந்த பிள்ளைங்க தெரிஞ்சவுங்களா ஸார்!” ஆவலுடன் கேட்கிறார். நான் மெல்ல சிரிக்கின்றேன். விபரம் புரிந்ததுபோல் அருகில் அமர்கிறார்.

“நாலைஞ்சு நாளா இங்கேதான் சுத்திக்கிட்டு நிக்குதுங்க.. யாருமில்லேன்னா இதுகள நானே எடுத்து வளர்க்கலாம்னு நெனைக்கிறேன், உங்களுக்கு ஆட்சேபணை இல்லேன்னா.

எனக்குள் எதிர்பாராத அதிர்ச்சி! நான் அவரையே பார்க்கிறேன்.

“தப்பா நெனைக்காதீங்க ஸார்! எனக்கும் நாலு பிள்ளைங்க இருக்கிறாங்க..அவுங்கள்லாம் அல்லாவின் கிருபையால வளர்ந்து பெரியவுங்களாயிட்டாங்க.. நானும் என் பெஞ்சாதியும்தான் வீட்ல இருக்கோம்.. இதுங்களும் எங்களோட இருந்தா வெறிச்சுன்னு கிடக்கிற வீட்ல புதுமழைபெய்தாப்பல இருக்குமேன்னுதான்…”

அவர்கைகளைப் பற்றிக் கண்ணில் ஒற்றிக் கொள்ளவேண்டும் போல் இருந்தது. ஒரு சாதாரண மனிதர்..! அன்றாட உழைப்பில் பணத்தைத் தேடுபவர்! அவரையும் வசதிமிக்க ராஜகேரனையும் மனத்தராசு எடைபோடுகிறது.

வயிறு நிரம்பி ஜீரணமாகாமல் தவிக்கும் நபர்களுக்கு விருந்து வைத்து புண்ணியத்தையும் புகழையும் தேடிக் கொள்ளத் துடிக்கும் அந்த வசதிமிக்க மனிதர் எங்கே…?

வாடிய வயிறும் சோர்ந்த உடம்புமாய் திக்கற்று கிடக்கும் அனாதைகளுக்கு எதிர் காலத்தையே அள்ளி வழங்கத் துடிக்கும் இந்த சாதாரண ஷலீம்பாய் எங்கே…?

“என்ன ஸார் யோசீக்கிங்க… யாருமில்லாத பிள்ளைங்கன்னு வேலைவாங்கிடுவேன்னு நெனைக்கிறீங்களா… அப்படிப்பட்ட முட்டாள் தனமெல்லாம் நான் செய்ய மாட்டேன் ஸார்… முறைப்படி சட்டப்படி செய்ய வேண்டியதைச் செய்து என் பிள்ளைகளாக்கி இவங்கள படிக்கவெச்சு ஆளாக்குவேன்.. என்னை நம்புங்க ஸார்”

மின்னலாய் உடம்பைத் தாக்கும் பேரின்ப வரிகள்! அவரைப் பார்க்கின்றேன். உழைப்பில் படிந்த அழுக்கும் வியர்வையும் சேர்ந்து கசங்கிய ஆடைகள்! காய்ப்பேறிய கையில் பிடித்த கரண்டி… என் பதிலுக்குக் காத்திருக்கும் கருணை நிரம்பிய கண்கள்!

இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்.
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்,
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்.”

அன்று பாடிய அந்த அமர கவியைக் காண்கிறேன்: அந்த கண்களில்.

குழந்தைகளைப் பார்த்துக் கேட்கிறேன். அவரது ஆசையை அவர்களிடம் சொல்கிறேன். புரியாமல் பார்க்கிறார்கள். தன் மனைவியை அழைத்து வருகிறார். இருவரும் பேசுகிறார்கள். ஒரு இரண்டு வெள்ளிக்குச் சாப்பாடு வாங்கித் தந்த என்னையே அவர்களின் சொந்தமாய் நினைத்து என் அனுமதியைக் கேட்பதுபோல் அவர்கள் என்னைப் பார்க்கிறார்கள்.

மறுநாள் வருவதாகக் கூறிவிடை பெறுகிறேன். மலர்ந்த முகத்தோடு கையசைக்கிறார்கள். எனது மனம் இறைவனுக்கு நன்றி சொல்ல, கைகள் என் வண்டியை எடுக்கின்றன. ஜோகூரிலிருந்து பயணம் சிங்கப்பூரை நோக்கி…

– செவ்வந்திப் பூக்கள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2007, வெளியீடு: சிங்கை தமிழ்ச்செல்வம், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email
நூலாசிரியர் பற்றி... - மனங்கவர் மலர்கள், முதற் பதிப்பு: ஜூன் 2005 இலக்கிய வடிவங்களில் சிறுகதை. புதினம், கட்டுரை, உரைவீச்சு போன்ற அனைத்து நிலைகளிலும் சிந்தனையை வெளிப்படுத்துகின்ற ஆற்றல் மிக்கவராக மதிக்கப்படுகின்ற சிங்கை. தமிழ்ச்செல்வம் அவர்களை 1995-ம் ஆண்டு முதல் நான் நன்கு அறிந்து வைத்து உள்ளேன். சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தில் உறுப்பியம் பெற்றுத் தொண்டாற்றினார். துணைச் செயலாளர் பொறுப்பேற்றுத் துணை நின்றார். கழகத்தின் வாழ்நாள் உறுப்பினராய்த் தொடர்ந்து…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *