கதையாசிரியர்:
தின/வார இதழ்: தென்றல்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 3, 2014
பார்வையிட்டோர்: 15,574 
 
 

ஆனி மாத வெய்யிலுக்கு அவசரம் அதிகம் போலும். விடிந்தது தெரியுமுன்பே உச்சி அடைந்துவிட்டதோ என்னும்படி ரத்தகாயமாய் வானை ஆக்ரமித்துக் கொண்டு ராஜ்ய பாரம் செய்து கொண்டிருந்தார் சூர்ய பகவான். கீழே ஆளுக்கு ஆள் கட்டளைகளும் பதில்களுமாக ஒரே ஆர்ப்பாட்டமாக இருக்கிறது. கல்யாண வீட்டில் இருக்கும் கலாட்டா சந்தடி கர்மம் நடக்கும் வீட்டிலும் இருக்குமோ?

ஆனால் இது கல்யாணக் கருமம் தானே? யாருக்கும் துக்கம் துவண்டு போகவில்லை. ”தாத்தாவுக்கு அரவிந்த் மேல அலாதி ப்ரியம். அதனால்தான் அவன் வந்திருக்கும் சமயம் அவனோடவும் இருந்த மனசு நிறைவோட போய் சேர்ந்துட்டார்”. தாத்தா மறைவுக்குத் துக்கம் (பலவந்தமாக வரவழைத்துக் கொண்டது தான்) கேட்க வந்தவர்களுக்கெல்லாம் நாலு ஆண்டுகளுக்கபுறம் வந்திருக்கும் அமெரிக்க வாசி அரவிந்தைப் பார்த்து அளவளாவுவதற்குக் கிடைத்த சந்தர்ப்பமாகத் தான் இந்த மரணம் அமைந்துவிட்டதாக அவனுக்குத் தோன்றியது. அப்பா ”இன்னும் நாலு மாசம் கழித்து வரப்போகும் என் ஷஷ்டி அப்தபூர்த்தியைப் பார்க்கணும் என்று அப்பாவுக்கு ரொம்ப ஆசை. நான்கூட, ”அதெல்லாம் ஏதும் வேண்டாம்பா; சிம்பிளாய் கோவிலில் அபிஷேகம், பெருமாளுக்கு வஸ்திரம் என்று செய்தால் போதாதா என்றதற்கே ஒருநாள் சத்தம் போட்டுவிட்டார். அவர் இருந்து ஆசீர்வாதம் பண்ணலையேன்னு தான் எனக்குத் குறை” என்று அங்கலாய்த்துக் கொண்டி ருகிறார். மூன்றாம் நாளே ஆரம்பித்து சிரத்தையாக இதுவரை நடத்தி முடித்துவிட்டு தாத்தாவுக்கு பிண்டஸ்வரூபம் கொடுக்க வேண்டிய தினம் இன்று. அம்மாவும், சித்திகளும் அடுப்படியில் தளிகை பட்டப்பா க்ரூப்புக்கு வேண்டிய சாமான்களை எடுத்துக் கொடுத்துக் கொண்டும், உத்தரவுகள் கொடுத்துக் கொண்டும் அவரவர் ஊர் வர்த்தமானம் எல்லாம் அலசிக் கொண்டிருக்கிறார்கள்.

கூச்சல் கூப்பாடுகளினின்று சற்றே விடுப்பு (விடுதலையல்ல) எடுத்துக்கொண்டு மொட்டை மாடிக் கைப்பிடிச்சுவரருகில் நின்றவாறே தெருவை நோட்டம் விட்டான் அரவிந்த். நகரின் மேல்தட்டு வாழ்க்கையின் அடையாளமாக அவின்யூ ஒன்றில் அமைந்திருந்த அந்தத் தெருவில் ஒரு பிரபல அரசியல் கட்சித் தலைவரின் மாளிகையும் இருந்த காரணத்தால் கேட்காமலே எல்லா வசதிகளும் தேடி வந்துவிடும். இப்பொழுதுகூட தெருக்கோடியில் தார் உருக்கும் வண்டியும் கல கலவென்று ஆளும் படையுமாய் கூலியாட்களுடன் ரோடு போடும் வேலை ஆரம்பித்துவிட்டார்கள்.

வாட்டர் டாங்க்கின் மறுபுறம் பெரிய அத்தையும் சின்ன அத்தையும் இவன் இருப்பதைக் கவனிக் காமலே ஆறரை கட்டையில் பேசிக் கொண்டிருந் தார்கள். ”எங்க மாமியார் போனபோது குளிப் பாட்டினதுக்காக நாத்தனார்கள் மூணு பேருக்கும் வாட்டர் ஹீட்டர் வாங்கிக் கொடுத்தேன். இங்கே பார்த்தால் ஆளுக்கு ஐந்நூறு ரூபாயைத் தூக்கித் தாராளமாகக் கொடுத்து வேண்டிய பாத்திரம் வாங்கிக்கோ என்று பரிவு வேறு” என்று நொடித்தாள் சின்ன அத்தை.

”ஆமாம், ரத்னா ஸ்டோர்ஸையும் சரவணாவையும் ஒண்ணா வாங்கிக் குவிச்சுடலாம். புடவை வாங்கக் வட ஓரெட்டில் இருக்கிற என்னையோ உன்னையோ அழைக்காமல் ஓரகத்தார் ஓர்படிகளே போனதைக் கவனித்தாயா? எல்லாம் திரிசமன். ஏதோ அப்பா முகத்துக்காக வந்து போய்க்கொண்டிருந்தோம். இனி இங்கே நமக்கு என்ன வேலை?” என்று ஒத்துப் பாடினாள் பெரியத்தை. பேரன் பேத்தியெடுத்து ஆய்ந்து ஓய்ந்த வயதிலும்கூட இந்தப் பெண் பிள்ளைகளுக்கு மட்டும் பிறந்தகத்திலிருந்து எத்தனைதான் செய்தாலும் திருப்தியென்பதே வருவதில்லையோ?

மனவெறுப்பை மாற்றத் தெருவைப் பராக்குப் பார்க்க ஆரம்பித்தான் அரவிந்த்.

”அது சரி, உன் மச்சினர் பத்துக்கு வந்து தலையைக் காட்டிவிட்டு சாப்பிடக்கூட இல்லாமல் ஓடி விட்டாரே? ஓர்ப்படி வரவில்¨யா?” இது பெரியத்தை போடும் வம்புத் தூண்டில்.

”அரவிந்துக்கு என் ஓர்ப்படியின் தங்கை பெண்ணப் பேசலாம் என்று வந்தார்கள் போலிருக்கிறது. மன்னி பிடி கொடுக்கவில்லை என்று சற்றுத் தாங்கல். கல்லுகுண்டாட்டம் நான் இருக்க எனக்குத் தெரியாமலே பெரியதனம் பண்ணி மூக்கை உடைத்துக் கொண்டாள். அந்த ஆற்றாமை தான் அவள் வரவில்லை போலிருக்கு.”

”அவனுக்கு எத்தனையோ பெரிய பெரிய சம்பந்தமெல்லாம் வந்தும் இதுவரைக்கும் எதற்குமே பிடி கொடுக்கவில்லை. அவள் எதிர்பார்ப்பு என்னவோ? சரி, சரி, கீழே போகலாம் வா. ஆத்துக்கு ஒருநாள் வாயேன். இங்கிருக்கிற அடையாறுக்கும் ஆழ்வார்பேட்டைக்கும் கூட போக வர ஒழிவதில்லை. நம் காலம் முடிந்து கீழ்க்கிளைகள் எங்கே இனி உறவாடப் போகிறதுகள்” என்று ஒரு மாதிரியாகத் தங்கள் மீட்டிங்குக்கு முடிவு கட்டிவிட்டு இருவரும் கீழே சென்றுவிட்டனர்.

அரவிந்த் தன் தெரு சர்வேயைத் தொடர்ந்தான். ஆணும் பெண்ணுமாய் இருபது முப்பது கூலிகள் கலவை யந்திரத்தில் நிலக்கடலையைப் பாகுடன் பதமாக உருண்டை பிடிக்கக் கலப்பதுபோல் தாரும் ஜல்லியுமாகக் கலந்த கொதிக்கும் கலவையை வரண்டுச் சட்டியில் வாங்கி வீசிக் கொட்டிக் கொண்டிருந்தனர். சிலர் தரையைச் சுரண்டிப் பதப்படுத்திக் கொண்டிருந்தனர். வயிற்றுத் தீயை அணைக்கப் பாடுபடும் அவர்களுக்கு வானத்துத் தீயும் வண்டியில் தாரை உருக்கும் தீயும் ஏன், வடவைத்தீ கூட லட்சியமாகப் படாது போலும்! கொதிக்கும் காலுக்குப் பாதுகாப்பாகச் சிலர் கோணிக் கந்தைகளைச் சுற்றிக் கொண்டிருந்தனர். மீதி பேருக்கு அதுவும் இல்லை.

திரும்பவும் தடங்கல்.

ஸ்வாமிகள் இருவர் தங்கள் வேஷ்டிகளை உலர்த்திக் கொண்டே உரையாடிக் கொண்டி ருந்தனர். ”ராமதுரையும் (அப்பாதான்) தம்பிகளும் தோப்பனாரைப் பொத்திப் பொத்திக் காப்பாத் தினாள்; இப்பவும் கைங்கர்யங்களை சிறப்பாப் பண்ணறாள். சொம்பு, வெள்ளி தம்ளர், பவித்ர மோதிரம், கூட யாத்ரா தானமாக நல்ல ஒசத்திச் செருப்பும் வாங்கி வைச்சிருக்காள். அவாள் பசங்கள் அமோகமாக இருக்கக் கேட்பானேன்?” தன் கணக்குக்கு ஆயிரக்கணக்கில் கிடைக்கப் போகும் சந்தோஷமான எதிர்பார்ப்புடன் ஒருவர் சொல்ல.

”ஏன்? கிழவர் மட்டும் கொஞ்சமா வைத்துவிட்டுப் போனார்? நீலாங்கரையில் மூணு நாலு க்ரவுண்ட், பிள்ளைகள் ஒவ்வொருத்தருக்கும் நல்ல நல்ல ஏரியாவாகப் பார்த்து வீடுகள் பெண், மாட்டுப் பெண்களுக்கெல்லாம் கல்லும், வைரமுமாய் நகை நட்டுகள் என்று வாரி வாரிச் செய்திருக்கிறாரே? அவருக்குச் செய்வதில் என்ன ஆச்சரியம்?” இது மற்றவரின் பதில்.

ஆக, தாத்தா போகப்போகும் வழியில் தாகம் தணிக்கத் தீர்த்த பாத்திரங்கள், நடைக்குப் பாதுகாவலாக செருப்பு தானம்; அப்பாவும் சித்தப்பாக்களும் பார்த்துப் பார்த்துத் தான் தானங்கள் செய்கிறார்கள். அவர்களைப் பொறுத்த வரை பெற்றவரை உயிருடனிருந்த காலத்தில் கவனித்துக் கொண்டது போலவே அவருடைய மேலுலக யாத்திரைக்கும் வேண்டிய வசதிகளைச் செய்து கொடுப்பதில் மிகவும் கருத்தாகவே இருக்கிறார்கள்.

”என் மாட்டுப்பெண் இந்த மாதிரி வரும் வெள்ளி டம்ளர்களைச் சேர்த்தே பெண்ணுக்குப் பாத்திரம் செய்து வைத்திருக்கிறாள். என் வரைக்கும் கிடைக்கப் போவதென்னவோ தட்சணையும் ஜோடி செருப்பும்தான்” என்றார் முன்னவர்.

”ஏதோ, நம் காலட்சேபம் இப்படித்தான் என்று பகவான் எழுதிவிட்டான். கிடைத்தவரை லாபம் தானே?” என்று முடித்துவிட்டு உலர்ந்த வேஷ்டிகளை எடுத்துக் கொண்டு இருவரும் கீழே இறங்கிச் சென்றுவிட்டனர்.

மீண்டும் தெரு சர்வேயை ஆரம்பித்துவிட்டான் அரவிந்த்.
உழைக்க வந்தபிறகு ஆணென்ன பெண்ணென்ன என்று நிர்தாட்சண்யமாக ஏகத்துக்கும் வசை மாரி பொழிந்து கொண்டு விட்டு தர்பார் நடத்திக் கொண்டிருந்தார் மேஸ்திரி. பாவம், காண்ட்ராக்டர் வரும் போது வேலையைக் கராறாக நிறை வேற்றுவதாக காட்டிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு. இல்லாவிட்டாலும், ”உறவுகள் சிரிச்சுப் பேசிவிட்டால் எருதும் அத்தான் முறை கொண்டாடும். கண்டிப்புக் காட்டாவிட்டால் இந்தப் பசங்கள் தலைக்கு மேல் ஏறிவிடுவாங்க” என்பது அவருடைய மாறாத தத்துவம் போலும்!

அரவிந்தின் கண்களை உறைய வைத்தது அந்தக் காட்சி. நிறை கர்ப்பிணியான ஒரு பெண் தூக்க மாட்டாமல் வயிற்றையும் சுமந்து கொண்டு வெற்றுக் காலோடு தார்க் கலவையைக் கெண்டு கொட்டிக் கொண்டிருந்தாள். பாவம் வயிற்றுக் கொடுமை, பிறக்காத உயிரும் சேர்ந்து வெயிலில் வாடி உழைக்க வேண்டியிருக்கிறதே!

‘நம் பெரியக்காவும் இவளைப் போல்தான், இரண்டாவதைத் தாங்கிக் கொண்டிருக்கிறாள். அவளுக்குத்தான் எத்தனை உபசாரங்கள்? தாத்தா போன அன்றுகூட வீட்டில் இருந்தால் வருவோர் போவோர் சந்தடியில் போதிய ஓய்வு கிடைக்கா தென்று அத்தை வீட்டில் கொண்டு வைத்து விட்டார்கள். இப்போதும் மற்ற வேலைகள் எப்படி நடந்தாலும் அவளுக்கு மணிக்கு மணி ஜூஸ¤ம், பழங்களுமாய் நன்றாகவே கவனித்துக் கொள் கிறார்கள். பாவம் இந்தப் பெண், வேளைக்குப் படிசோறு கிடைத்தாலே பெரிது என்ற நிலையில் இருப்பாள். அளவுக்கு மீறிய உழைப்பு வேற. கொதிக்கும் வெயிலில் கொப்பளிக்கும் கால்கள். ஏழ்மையின் கொடுமைதான் என்னே! அரவிந்தின் மனம் ஒப்பிட்டுப் பார்ப்பதைத் தவிர்க்க முடியவில்லை.

கீழே ஹோமங்கள் ஆரம்பித்துவிட்டார்கள் போலிருக்கிறது. மந்திரகோஷம் உரக்க எழும்பியது. பரபரவென்று கீழே இறங்கி வந்தான் அரவிந்த். மாடிப்படி கூண்டுக்கருகே ஆறு ஜோடி புத்தம் புதிய செருப்புகள் வைக்கப்பட்டிருந்தன. விலை இரு நூறுக்குக் குறையாது. அருகிலேயே பெரியக்காவின் புத்தம்புது ஸ்லிப்பர்கள் ஒரு ஜோடி. வைதிகர்களுக்கு வாங்கும்போது சந்தடி சாக்கில் தனக்கும் வாங்கிவிட்டாள் சாமர்த்தியசாலி.

அரவிந்த் அந்த ஸ்லிப்பர் ஜோடியைப் பெட்டியுடன் ஒரு பையில் எடுத்துக் கொண்டான். விடுவிடுவென்று நடையைக் கட்டினான். வீட்டில் மிகுந்திருக்கும் சத்தத்திலும், சந்தடியிலும் இவனைக் கண்டு கொள்ளவில்லை.

தெருக்கோடியை அடைந்தவன் சற்றுத் தயங்கி விட்டு, வேலை செய்யும் பெண்மணிகளில் ஒருத்தியை, ”இங்கே பாருங்கம்மா” என்று சன்னக்குரலில் அழைத்தான். திரும்பிப் பார்த்த அவள் சற்று மிரட்சி கலந்த புதிர்ப் பார்வையுடன் அவனருகில் வந்தாள். அதே தயக்கம் மாறாது அந்த கர்ப்பிணிப் பெண்ணைக் காட்டி, ”அவர்களைக் கொஞ்சம் இங்கே வரச் சொல்லமுடியுமா?” என்று கேட்டான். பெரிய மனுசங்க எதுக்கோ கூப்புடுறாங்க; ஏதாவது வீட்டுவேலைக்குக் கூப்புடுறாங்களாயிருக்கும் என்னும் சம்சயத்துடனே அப்பெண்மணி, ”ஏ, வனமாலி, இவுங்க உன்னைக் கூப்புடுறாங்கடி” என்று குரல் கொடுத்துவிட்டுத் தன் வேலையைக் கவனிக்கப் போய்விட்டாள்.

இந்த மாதிரி கூலி வேலை செய்யும் பெண்பிள்ளைகளை, போன தலைமுறையானால் இசக்கி, முனியம்மா என்றோ, அடுத்த கட்ட ப்ரஜையானால், மீனா, கமலா, சரோஜா போலவோ, அதற்கும் பின்னால் சினிமா மோகத்தில் விஜயா, ரோஜா என்றோ ஒரு பெயருடன் தான் இணைத்துப் பார்க்க முடியும். இப்பெயர் சற்றே தனித்தன்மையுடன் அவனுக்குப் பட்டது. எப்படியோ அந்த வனமாலி அவனருகில் வந்து ”என்னங்கய்யா? ஏதாவது வீட்டு வேலைக்கு ஆள் வேணுங்களா? இன்னும் இரண்டு மூணு மாசம் போனல்தான் நான் வரமுடியும்” என்று தானாகவே யூகத்தில் பதில் சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்துவிட்டாள்.

”அப்படியெல்லாம் ஒண்ணுமில்லம்மா. வேகாத வெயிலில் வேலை செய்கிறீர்களே: என்னால் முடிந்தது, இந்தச் செருப்பைப் போட்டுக்கொண்டு வேலை செய்யுங்கம்மா” என்று சொல்லிவிட்டுத் தன் கையிலிருந்து ஸ்லிப்பர் பெட்டியைக் கொடுத்தான். வாங்குவதா வேண்டாமா என்று தயக்கத்தடன் பார்த்த அவள்- ”பார்க்கப் புதுசா இருக்கே, ஏதாவது பழசு, பிய்ஞ்சது இருந்தா கொடுங்கய்யா போதும்” என்றாள்.

”பரவாயில்லையம்மா. நீங்க புதுச் செருப்புப் போடக்கூடாதா? எடுத்துக்கோங்க” என்றான் அரவிந்த்.

”ஐயா மாவராசனா இருக்கணும். உங்க நல்ல மனசுக்கு ஒரு கொறையும் வராது” என வாழ்த்தி யபடியே நன்றிப் பெருக்கும் கண்ணீர்ப் பெருக்குமாக அப்பெண்மணி அச்செருப்புகளை வாங்கிக் கொண் டாள். அதற்குள்ளாகவே மேஸ்திரி ஐயாவின் குரல் பின்னாலிருந்து கர்ஜித்தது. ”ஏ வனமாலி அங்கே என்ன பேச்சு, பராக்கு?” ‘கூத்தாடி கிழக்கப் பார்ப்பான்; கூலிக்காரன் மேற்கே பார்ப்பாங்கற கணக்கா, இப்படி பேசி, அங்கே நின்னு, இங்கே நின்னு பொழுதைக் கழிச்சுடுவீங்களே”

புதுச் செருப்புகளை அணிந்த கால்களால் சற்று வினேதமாக நடந்தபடியே சென்று வேலையில் ஆழ்ந்துவிட்டாள் அப்பெண்மணி. மனநிறைவுடன் வீடு திரும்பினான் அரவிந்த்.

அன்று மாலை எதற்கோ ரங்கநாதன் தெருவுக்குப் போனான் அரவிந்த். எங்கேயோ பரிச்சயமான குரல் கேட்டுத் திரும்பினான். நடைபாதை செருப்பு வியாபாரி ஒருவரிடம், ”இரு நூத்தம்பது ரூபாய் செருப்புப்பா. எனக்கெதுக்கு இத்தனை ஒசத்தி செருப்பு? பாதி விலை போட்டு எடுத்துக்குவாயா?” என்று பேரம் பண்ணிக் கொண்டிருந்தார் காலை மாடியில் பேசிக் கொண்டிருந்த ஸ்வாதிகளில் ஒருவர். அரவிந்துக்கு வெறுத்துப் போய்விட்டது.

ஆயிரம் ஆயிரமாகக் கொட்டி அப்பா, சிற்றப் பாக்கள் செய்த தானங்களைவிடத் தான் அந்த ஏழைக்குச் செய்த தானம் தாத்தாவின் வழியை நன்றாகவே செப்பனிட்டு வைக்கும் என்ற திருப்தி யுடன் வீடு திரும்பினான் அரவிந்த்.

– செப்டம்பர் 2002

1 thought on “தானம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *