”பறந்துபோன கிளி திரும்பி வரும்னு இன்னுமாடா நம்பற நீ?’ என்று ஏளனமாகக் கேட்டார் செல்லமுத்து சித்தப்பா. நெருப்பில் வைத்த இரும்புவலைக் கரண்டியின் உள்குழியிலேயே என் கவனம் பதிந்திருந்தது. முதலில் ஒவ்வொரு கம்பியாகச் சிவக்கத் தொடங்கி, பிறகு அந்தக் கரண்டியே நெருப்பில் பூத்த மலர் போல மாறியது. பக்கத்தில் வைத்திருந்த கூடையில் இருந்து உலர்ந்த எருக்கம்பூ ஒன்றை எடுத்து கரண்டியில் போட்டேன். மறுகணமே, அது புகைவிட்டு எரிந்து, சிவந்து, பிறகு சுற்றியும் அடர்த்தியான நெடி பரவ, கருகிச் சுருண்டு அடங்கியது. உடனே, சாம்பலை முறத்தில் கவிழ்த்துவிட்டு அடுத்த பூவை எடுத்துப் போட்டேன்.
‘வந்துடுவாரு சித்தப்பா. எங்கனா வண்டி கெடைக்காம தடுமாறிக்கெடக்கறாரோ என்னமோ’ – கரண்டியின் மீது வைத்த கண்களை விலக்காமல் பதில் சொன்னேன். அடுத்தடுத்து பூக்களைப் போட்டுக்கொண்டே இருந்தேன்.
நீ ஒரு பைத்தியம்; ஒங்க தாத்தா ஒரு பைத்தியம். மணி என்ன தெரியுமா இப்ப? ஒம்போது மணி சங்கு ஊதிட்டான்’ என்றபடி பீடியைப் பற்றவைத்து இழுத்தார் சித்தப்பா. பதில் சொல்லாமல் அவரை ஓரக்கண்ணால் பார்த்தபடி என் வேலையில் மூழ்கினேன்.
நோயாளிகளின் கொட்டகையில் இருந்து வெளியே வந்த முருகேசன் மாமா, நேராக எங்களிடம் வந்தார். ‘மாணிக்கம் வந்துட்டானா?’ என்று கேட்டபடியே ஒரு கீற்றை இழுத்துப்போட்டு உட்கார்ந்தார்.
‘அவன் கதையைத்தான் பேசிட்டிருக்கேன்’ என்றபடி புகையை இழுத்தார் சித்தப்பா. ‘இங்க இருக்கிற குறிஞ்சிப்பாடிக்குப் போய் வர, ஒரு ஆளுக்கு எவ்ளோ நேரமாவும்? போவ மூணு மணி நேரம், வர மூணு மணி நேரம். பணத்தைக் கொடுத்து சரக்கு வாங்க ரெண்டு மணி நேரம். காலையில எட்டு மணிக்குக் கௌம்பின ஆளு, நாலு மணிக்கே திரும்பியிருக்கணும். ஆனா, மணி ஒம்போது தாண்டியும் போன ஆளு வரலைனா என்ன அர்த்தம்? கம்பி நீட்டிட்டான்னுதான?’
முருகேசன் மாமா, சிறிது நேரம் எதுவும் பேசாமல் நெருப்பையே பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு, ‘காலையில கௌம்பும்போதே பெரியவரு சொன்னது ஞாபகம் இருக்குதில்ல? திரும்பி வந்தா அவனுக்குச் கடைசி வரைக்கும் இங்க இடம் உண்டு. வரலைனா அவன் வழிச்செலவுக்குக் குடுத்த பணம்னு நெனச் சிக்குவோம்னாரு. அதுக்கு மேல பேச என்ன இருக்குது?’ என்றார். மாமாவின் கேள்விக்கு யாரும் பதில் சொல்லவில்லை. பூ கருகுவதையே பார்த்துக்கொண்டிருந்தேன் நான்.
உள்வீட்டின் கதவைத் திறந்துகொண்டு பெரிய தாத்தா வந்தார். முற்றத்தைக் கடந்து மெதுவாக அடுப்பின் பக்கமாக வந்தார். குனிந்து முறத்தில் இருந்த சாம்பலை, குச்சியால் கிளறிப் பார்த்துவிட்டு திருப்தியோடு தலையசைத்தார். பிறகு, ‘பூ மட்டும்தானா… எல?’ என்று மெதுவாகக் கேட்டார்.
‘இருக்குது தாத்தா. இன்னொரு கூடையில வெச்சிருக்கேன். இந்த வேல முடிஞ்சதும் அதை ஆரம்பிச்சிடுவேன்.’
காதில் வாங்கியபடி வாசல் வரைக்கும் சென்ற தாத்தா, படலை ஒட்டிநின்று தெருவைப் பார்த்தார். சில நிமிடங்களுக்குப் பிறகு திரும்பி வந்து, ‘ஏன்டா அவன இன்னும் காணம்?’ என்று முனகியபடி விலகிச் சென்றார். வீட்டுக்குள் செல்வதற்காக கதவு வரை சென்றவர், திரும்பி வந்து சுவர் ஓரமாகப் போட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்து வெற்றிலை போடத் தொடங்கினார்.
ஓரக்கண்ணால் பார்த்தபடியே, உலர்ந்த எருக்கம் இலைகள் வைக்கப்பட்டிருந்த கூடையை அடுப்புக்கு அருகில் இழுத்தேன். முருகேசன் மாமா பக்கத்தில் வந்து, ஒவ்வோர் இலையாக எடுத்து, தாள்போல மடித்து, இரண்டாகவும் நாலாகவும் சின்னச்சின்னத் துண்டுகளாகக் கிழித்து ஒரு தட்டில் வைத்தார். எடுத்து கரண்டியில் போட்டதும், மறுகணமே சுருண்டு கருகியது. செல்லமுத்து சித்தப்பா, ஒரு கிடுக்கியை எடுத்துவந்து, எரிவதற்கு எளிதாக இலைச்சுருளை விலக்கிப் பிடித்தார்.
”வருவான்னு நெனைக்கறியா நீ?’ – முருகேசன் மாமா கேள்வியோடு ரகசியக் குரலில் பேச்சைத் தொடங்கினார்.
‘நெனப்புதான் பொழப்பைக் கெடுக்குது’ என்று குத்தலாகப் பதில் சொன்னார் சித்தப்பா. ”நாய குளிப்பாட்டி நடு ஊட்டுல வெச்சாலும், அது வாலக் கொழச்சிக்கினு போற எடத்துக்குத்தான் போவுமாம். பணத்த கண்ணால பார்த்ததும் மாணிக்கம் பயலுக்குப் பழைய ஞாபகம் வந்திருக்கும். தண்ணியடிச்சிட்டு எங்கனாச்சும் ரோட்டுல உழுந்து கெடப்பான்.’
அந்தக் குத்தலும் கிண்டலும் ஆறு மாதங்களுக்கு முந்தைய ஓர் இரவுக்கு நினைவை இழுத்துச் சென்றது.
வைத்தியசாலைக்கு வழக்கமாக வரக்கூடிய ஒரு ரிக்ஷாக்காரர், ஓர் இரவு நேரத்தில் அடிபட்டு சுயஉணர்வு இல்லாத நிலையில் மாணிக்கம் மாமாவை ஏற்றிவந்து இறக்கியது நினைவில் படம்படமாக விரிந்தது.
‘யாருடா அது?’ – உள்ளே இருந்து வந்த பெரிய தாத்தா, ரிக்ஷாக்காரரிடம் கேட்டார்.
‘வெளியூரு ஆளு தாத்தா. யாருனு தெரியலை. பிராந்திக் கடைக்குப் பக்கத்துல உழுந்து கெடந்தான். காசில்லாம கடையில பூந்து பிராந்தி வேணும்னு கேட்டான் போல. அவனுங்க வெரட்டுனதும், அங்க குடிச்சிகினு இருக்கவனுங்ககிட்ட போய் கை நீட்டியிருக்கான். அவனுங்களும் திட்டி, தள்ளி உட்டானுங்க. என்னமோ வேகத்துல, யாரோ ஒருத்தன் கையிலிருந்த எச்சில் பிராந்தியைப் புடுங்கிக் குடிச்சிட்டானாம். உடனே வந்தவன் போனவன்லாம் சேந்து, ஆடு-மாட்டை அடிக்கறாப்புல அடிச்சி, ரோட்டோரமா உருட்டி உட்டுட்டானுங்க. பாக்கவே பாவமா இருந்துச்சு. கிட்ட போயி மூக்குல கைய வெச்சுப் பார்த்தேன். மூச்சு இருந்துச்சு. சரி, என்ன ஆனாலும் ஆவட்டும்னு நான்தான் இங்க ஏத்திக்கினு வந்தேன்.’
அவரை இறக்கி, மரக் கட்டிலில் கிடத்தும்படி சொன்னார் தாத்தா. மாமாவும் சித்தப்பாவும் மற்றும் இருந்த வைத்தியசாலை ஆட்களும் ரிக்ஷாக்காரரோடு சேர்ந்து அவரை இறக்கினார்கள். எலும்புக்கூடு போல இருந்தார். முறுக்கிய துணிபோல குச்சியான கைகள். ஒட்டிய வயிறு. முழங்காலுக்குக் கீழே ஓர் ஆல இலை அளவுக்கு கொதகொதவென புண் இருந்தது. கறுப்பும் நரையும் கலந்த தலைமுடி, காதுகளை மூடியபடி வளர்ந்திருந்தது. சித்தப்பாவும் மாமாவும் அவர் மீது தண்ணீர் ஊற்றிக் கழுவி, கிழிந்த துணிகளை அகற்றிவிட்டு வேறொரு வேட்டியைச் சுற்றினார்கள். மூச்சின் ஏற்ற-இறக்கத்துக்கு ஏற்ப அவருடைய எலும்பு மார்பு உயர்ந்து தாழ்ந்தது. தலை மட்டும் தொங்கி, தனியாக ஆடியது. திடீரெனக் கால்களை முறுக்கினார். இடுப்பு வளைந்து அடங்கியது.
தாத்தா, அவர் கையைத் தொட்டு நாடி பார்த்தார். பிறகு வீட்டுக்குள் சென்று சின்ன சீசா ஒன்றைக் கொண்டுவந்தார். சித்தப்பா, அவர் முகவாயைத் தூக்கிப்பிடிக்க மூக்கின் வழியாக ஒரு சொட்டு மருந்தைப் புகட்டினார் தாத்தா. அவர் முகத்தில் தெரியும் மாற்றங்களை எல்லாம் கொஞ்ச நேரம் அசையாமல் பார்த்தார். பிறகு, ”அறைக்குள்ளாற குடத்துல கருங்காலிக்கட்டைத் தண்ணி இருக்கும். அதுல கொஞ்சம் எடுத்து அந்தக் கால்புண்ணைக் கழுவி உடுடா. அதுபோதும். மத்ததையெல்லாம் விடிஞ்ச பிறகு பார்த்துக்கலாம்’ என்று என்னிடம் சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார்.
விடிந்து வெகுநேரத்துக்குப் பிறகுதான் அவர் கண் விழித்தார். அப்போது அவர் போட்ட சத்தத்தில், வைத்தியசாலையில் இருந்த வர்கள் எல்லோரும் ஒரு கணம் அவர் பக்கம் திரும்பிப் பார்த்தார்கள். நாலைந்து அலறலுக்குப் பிறகு, அவர் கூச்சல் தானாகவே அடங்கியது. நாங்கள் அவரை நெருங்குவதற்குள் அவர் எழுந்து உட்கார்ந்திருந்தார். மிரட்சியோடு நான்கு பக்கங்களையும் சுற்றிப் பார்த்தார்.
‘போய் பல் விளக்கிட்டு வா. சுக்குக்காபி தயாரா இருக்கு’ என்றார் சித்தப்பா.
அவர் வாய், எதையோ முனகியது தெளிவாகக் கேட்கவில்லை. அதனால் சித்தப்பா சொன்னதையே மீண்டும் சொன்னார்.
அவர், தன் சக்தியை எல்லாம் திரட்டி மறுபடியும் எதையோ யாசிப்பது போல கேட்டார். சித்தப்பாவுக்கு எதுவும் புரியவில்லை. டீயா, பாலா, நீராகாரமா, தண்ணியா என்று எதை எதையோ கேட்டு, அவர் விருப்பத்தை அறிய சித்தப்பா முயற்சி செய்தார்.
அவர் உதடுகளின் அசைவை வைத்து, ஓர் ஊகத்தில் ”பிராந்தியா?’ என்று கேட்டார் மாமா. ”ம்ம்’ என்று தலையசைத்தார். அப்போது அவர் கண்களில் தெரிந்த வெளிச்சத்தைப் பார்க்க ஆச்சர்யமாக இருந்தது.
குளித்து, வேட்டி மாற்றி, திருநீறு துலங்க வெளியே வந்த தாத்தாவிடம், ‘பிராந்தி வேணுமாம்’ என்று தெரியப்படுத்தினார் மாமா.
தாத்தா சிரித்தார். ‘அவனா கேக்கிறான்? அவன் நரம்பு வலி கேக்கவெக்குது. நல்லா முத்தின குடிகாரன்போல. எத்தன வருஷமாக் குடிக்கிறானோ என்னமோ! ரத்தக்குழாய்ல சூடு ஏறி ஏறி உள்பக்கத்துல கபப்பூச்சே காஞ்சுப் போயிடுச்சு. ஈரமே இல்லாத பாலைவனமாக் கெடக்கு அவன் ஒடம்பு. இவன மொதல்ல மனுஷனாக்கணும். அதுக்கு அப்புறம்தான் வியாதிக்கு மருந்து தரணும்…’ என்றபடி பரிதாபமாக அவரைப் பார்த்தார்.
‘நமக்கு எதுக்கு வம்பு? யாரு, எந்த ஊருனுகூட தெரியாது. கையில பத்தோ இருவதோ குடுத்து அனுப்பிவெச்சிரலாமே…’ – பேசத் தொடங்கிய வேகத்திலேயே தாத்தாவின் பார்வையைப் பார்த்ததும் அடங்கிவிட்டார் சித்தப்பா.
‘இந்த வேலியைத் தாண்டி உள்ள வந்துட்டா, அது யாரா இருந்தாலும் அவுங்க நோயாளிங்க. அவுங்க நோய்க்கு மருந்து குடுக்கறது நம்ம கடமை, புரிஞ்சிதா?’ என்று சொன்னார் தாத்தா. பிறகு, அவரிடம் பணத்தைக் கொடுத்து, ‘யாரையாவது அனுப்பி ஒரு பாட்டில் பிராந்தி வாங்கியாரச் சொல்லு’ என்றார்.
தாத்தாவின் அணுகுமுறையில் எப்போதும் ஒரு விசித்திரம் இருக்கும். பிராந்தி வந்தது. உள்ளே போய் ஒரு சின்ன கோப்பையை எடுத்துவரச் சொன்னார் தாத்தா. பிறகு, 50 மில்லி அளவுக்குக் கோப்பையில் ஊற்றச் சொன்னார். கைநடுங்க கட்டிலில் உட்கார்ந்திருந்தவரிடம் கொடுப்பதற்காகச் சென்றபோது, ‘அப்பிடியே தராதடா… ஒரு தம்ளர் தண்ணில கலக்கிக் குடு’ என்றார். அதை வாங்கிக் குடித்தப் பிறகுதான் அவர் கண்கள் அலைபாய்வது நின்றன. சில நிமிடங்களுக்குப் பிறகு, தாத்தா அவரை நெருங்கிவந்து கையைச் சோதித்தார். இடது கை, இடது கால் இரண்டுமே முடங்கியிருந்தன. அவரைக் குனியவைத்து தோள் பக்கம் தட்டிப் பார்த்தார்.
‘எந்த ஊரு?’
‘காட்டுமன்னார்கோவில்.’
‘இங்க எப்பிடி வந்த?’
” ‘பெரியாஸ்பத்திரியில பக்கவாதத்துக்கு மருந்து குடுக்கறாங்க’னு சொல்லி பெரியவன்தான் அழைச்சிட்டு வந்தான். நெறயா டெஸ்ட் எடுக்கணும்னு பெரிய டாக்டரு எழுதிக் குடுத்தாரு. ஆஸ்பத்திரி மெஷின் கெட்டுப்போச்சு. வெளியில போயி எடுத்துட்டு வாங்கனு சொல்லி அனுப்பிவெச்சிட்டாரு. பையன்கிட்ட அந்த அளவுக்குப் பணம் இல்லை. அது எனக்கும் தெரியும். ‘டெஸ்ட்டும் வேணாம், கிஸ்ட்டும் வேணாம், வாடா’னு சொன்னேன். ரெண்டு பேரும் வெளிய வந்து பூங்காவுல உக்காந்தோம். பையன் ரொம்ப யோசனையாவே இருந்தான். அப்பறமா ‘இங்கயே இரு, ஒரு டீ குடிச்சிட்டு வரேன்’னு சொல்லிட்டு எழுந்தான். ‘எனக்கு ஒரு குவார்ட்டர் பிராந்தி வாங்கியாறியாடா?’னு வெக்கமில்லாம அவன்கிட்டயே கேட்டேன். ‘ம்ம்…’னு தலையாட்டிக்கினே போனான்…’
பேச்சை நிறுத்தி மூச்சு வாங்கினார். மறுகணம் அடர்த்தியான புருவங்களுக்குக் கீழே, ஒடுங்கி இருந்த கண்களிலிருந்து நீர் வழிந்தது. பற்களைக் கடித்து வேதனையை விழுங்குவது தெரிந்தது.
‘ரொம்ப நேரம் கழிச்சித்தான் அவன் இனி மேல வரமாட்டான்னு புரிஞ்சிது. அந்தக் காலத்துப் பட்டாளத்துக்காரன் நான். பனி கொட்டுற மலையில தனியாக் காவலுக்கு நிக்கறதுதான் என் வேலை. காட்டுல நின்னிருக்கேன். ஆத்தோரமா நின்னிருக்கேன். தனிமை எனக்கு எப்பவுமே புதுசு இல்லை. ஆனா, அந்த நிமிஷம் புதுசாத் தெரிஞ்சிது. யாருக்குமே தேவையில்லாதவனா போயிட்டமேனு அவமானத்துல குன்னிக் குறுகிப்போயிட்டேன்.
‘சம்சாரம், மத்த புள்ளைங்க..?’
‘எல்லாரும் சேர்ந்துதான முடிவு எடுத்திருப்பாங்க.’
‘அப்பிடிக் கசந்துபோற அளவுக்கு என்ன காரணம்?’
அவர் ஒரு கணம் தரையையே வெறித்துப் பார்த்தபடி இருந்தார். பிறகு, ‘பாழாப்போன குடிதான், வேற என்ன?’ என்றார்.
பேச்சை நிறுத்திவிட்டு முற்றத்துக்கு வெளியே இருந்த பப்பாளி மரத்தையே சில கணங்கள் வெறித்தார். அவரைப் பற்றி தாத்தா என்ன நினைக்கிறார் என்பதை, அவர் பார்வையில் இருந்து புரிந்துகொள்ள முடியவில்லை. பேச்சை நிறுத்திவிட்டு தரையை வெறித்தபடியே உட்கார்ந்திருந்தார் அவர். தாத்தா அவரைப் பார்த்து, ”உன்னைக் குணமாக்கறதோ, உன் குடியை மறக்கவெக்கிறதோ ஒண்ணும் பெரிய விஷயமே இல்லை. எல்லாத்துக்கும் மருந்து இருக்குது’ என்று பொறுமையாகச் சொன்னார்.
மறுகணம் தாத்தாவை நிமிர்ந்து பார்த்து கெஞ்சு வதுபோல, ‘ஐயா, எனக்கு மருந்தே வேணாங்க. ஒரே நிமிஷத்துல என் உயிர் போயிரணும். அப்பிடி ஒரு மருந்து இருந்தா குடுங்க. அதுபோதும்’ என்றார்.
தாத்தா சிரித்தார். ‘ஏதோ ஒரு வெறுப்புல பேசற நீ. நான் சொல்ற மாதிரி கேளு. அது போதும். ஆறு மாசத்துல நீ ஆளே மாறிடுவ!’
அவர் தாத்தாவை நம்பமுடியாமல் பார்த்தார்.
”என்ன அப்படிப் பாக்குற? உன் பேரு என்ன?’
‘மாணிக்கம்.’
தாத்தா என்னை அழைத்து, ‘இப்ப குடுத்தமில்ல, அதே அளவுல காலையிலயும் ராத்திரியிலயும் இந்த மாணிக்கத்துக்கு மருந்தா நெனச்சுக் குடுக்கணும். அது உன் வேல, புரியுதா?’ என்றார். நான் வேகமாகத் தலையை அசைத்தேன்.
”முருகேசா’ என்று மாமாவை அழைத்தார் தாத்தா. உரலில் மருந்தை இடித்துக்கொண்டிருந்த மாமா எழுந்து வந்தார். ”இங்க பாரு, மூக்குல இந்தச் சொட்டுமருந்து மட்டும் வேளாவேளைக்குப் போடு. பட்டைத் தண்ணியால அப்பப்ப கழுவிக்கிட்டே இரு. ஈ மொய்க்காமப் பார்த்துக்கோ…’
அதற்குப் பிறகு மூன்று நாட்களுக்கு தாத்தா வேறு வேலைகளில் மூழ்கியிருந்தார். நான்காவது நாள் காலையில், பிராந்தி தரவேண்டிய நேரத்தில் தாத்தா, நோயாளிக் கொட்டகைக்குள் வந்தார். மாணிக்கம் அவரை வணங்கினார்.
‘மாணிக்கம், இன்னையிலேருந்துதான் உனக்கு மருந்து. உனக்காகவே தயார் செஞ்சது’ என்றபடி ஒரு சீசாவை எடுத்து என்னிடம் கொடுத்தார் தாத்தா. ”இது ஆஸவாரிஷ்டம். இவனுக்கு பிராந்தி குடுக்கும்போது, குப்பியில இருக்கற பிராந்தியிலேருந்து ஒரே ஒரு கரண்டி எடுத்து கீழ ஊத்திரு. அதுக்கு பதிலா இந்த ஆஸவாரிஷ்ட மருந்துலேருந்து ஒரு கரண்டிய எடுத்து கலக்கிக் குடு’ என்றார்.
அவர் சொன்னதுபோலவே செய்து மாணிக்கத்திடம் கொடுத்தேன். அவர் மெதுவாக அதை அருந்தி முடித்தார். அதுவரை பொறுமையாக எங்களைப் பார்த்துக்கொண்டே இருந்த தாத்தா, ”இன்னிக்கு ஒரு கரண்டின்னா, நாளைக்கு ரெண்டு கரண்டி, அப்புறம் மூணு கரண்டி. அஞ்சாவது நாள் பிராந்தியும் ஆஸவாரிஷ்டமும் பாதிப் பாதியா இருக்கும். பத்தாவது நாள் பிராந்தியே இருக்காது. ஆஸவாரிஷ்டம் மட்டும்தான் இருக்கும். புரியுதா?’ என்றார். தாத்தாவின் திட்டத்தைக் கேட்டு குதிக்கவேண்டும்போல இருந்தது. பூரிப்போடு தலையை ஆட்டினேன்.
பத்து நாட்களில் நிகழ்ந்த மாற்றத்தை ஓர் அதிசயம் என்றே சொல்லவேண்டும். மாணிக்கம் மெள்ள மெள்ளத் தெளிவு பெற்றார். அவர் பார்வையில் பழைய பதற்றம் சுத்தமாக இல்லை. கூர்மை ஏறியிருந்தது. எல்லாவற்றையும்விட முக்கியமான விஷயம், பிராந்தி பாட்டிலை என்னமோ ஒரு மருந்து பாட்டில் என்ற சாதாரணப் பார்வையோடு மாணிக்கம் கடந்துபோனார். காலில் உறுதி ஏறியதும், இழுத்து இழுத்து வைத்தியசாலையைச் சுற்றி நடக்க ஆரம்பித்தார். உட்கார்ந்தபடி களைக்கொத்தியால் வேலி ஓரமாக இருந்த புல்லையெல்லாம் செதுக்கிச் சீராக்கி, படல் கட்டி ஒழுங்குபடுத்தினார். ”சுந்தரம் சுந்தரம்’ என்று என்னை வாய் ஓயாமல் கூப்பிட்டு பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு பழைய பட்டாளத்துக் கதையைச் சொன்னார்.
அடுத்த 20 நாட்களும் ஆஸவாரிஷ்டம் மட்டுமே கொடுக்கச் சொன்னார் தாத்தா. அதற்குப் பிறகு அதையும் நிறுத்திவிட்டார். அதை அடுத்து, இரண்டு மாத காலம் வாதத்தை நீக்கும் மருந்துகளைக் கொடுக்கச் சொன்னார். காலையிலும் மாலையிலும் மூலிகைக் குளியல்; எண்ணெய் தடவுதல். ஒவ்வொரு விரலாகப் பிடித்து எண்ணெய் தடவும் சமயத்தில் மாணிக்கம் எனக்கு பல கதைகளைச் சொன்னார். காட்டுவிலங்குகள் பற்றி ஏராளமான கதைகளை அவர் தெரிந்துவைத்திருந்தார்.
நான்காவது மாதத்தில் இழுத்து நடப்பது தானாகவே நின்றது. நேராகவே காலை மடித்து அடியெடுத்துவைத்தார். பிறகு, ஒரு கோலை ஊன்றி நடக்கப் பழகினார். தினமும் மாலையில் நான், அவரை வீட்டுக்கு அருகில் இருந்த கோயில் வரை அழைத்துச் சென்று திரும்பினேன். ஆறாவது மாதத்தில், அவருக்கு அந்த ஊன்றுகோலும் தேவைப்படவில்லை. வழக்கமான நடையை அவரால் இயல்பாகவே நடக்க முடிந்தது. காலையிலும் மாலையிலும் சங்கராபரணி ஆற்றுப்பாலம் வரை அவரை அழைத்துச் சென்று திரும்பினேன்.
ஒருநாள் காலையில் மாணிக்கம், தாத்தாவின் காலில் விழுந்து அழுதார். ‘நீங்க கடவுள் அவதாரம்’ என்றார்.
‘அப்படில்லாம் பெரிய பேச்சுப் பேசாத. மொதல்ல ஏந்துரு.’
தாத்தா அவர் தோளைத் தட்டி, ‘நீ ஊருக்குப் போறதுனா, தாராளமாப் போலாம். இனிமே உனக்கு மருந்து தேவைப்படாது’ என்றார். அதைக் கேட்டு அவர் அழுதுவிட்டார். சில கணங்களுக்குப் பிறகு கண்ணீரைத் துடைத்தபடியே, புன்னகையோடு ‘நான் போகலைங்க ஐயா’ என்றார். தாத்தா அவரைக் கேள்விக்குறியோடு பார்த்தார். ‘ஆமாங்க. உங்க நிழல்லயே என் மிச்சக் காலத்த கழிச்சிடறேன்யா. நாலு பேருக்கு பிரயோஜனமா இருக்கறதுக்கு எனக்கும் ஒரு வாய்ப்பு குடுக்கணும்’ என்று கெஞ்சினார் மாணிக்கம். தாத்தா அவரையே சில நிமிடங்கள் பார்த்தார். பிறகு, ‘அதுதான் உன் விருப்பம்னா, அப்படியே ஆகட்டும்’ என்று சொல்லிவிட்டுப் போனார்.
ஏம்பலம் பக்கத்தில் எங்களுக்குச் சொந்தமாக ஒரு மூலிகைத் தோட்டம் இருந்தது. வைத்தியசாலைக்குத் தேவையான மூலிகைகளை அங்கிருந்துதான் கொண்டுவர வேண்டும். என்னோடு வந்து மாணிக்கம் மாமாவும் மூலிகைகளைப் பற்றி தெரிந்துகொண்டார். திடீர் திடீரென எழும் தேவைகளையட்டி மருந்து, வேர், பட்டைகள் வாங்கிவர வேலூர், செங்கல்பட்டு, குறிஞ்சிப்பாடி, மரக்காணம் என பல இடங்களுக்கு தாத்தா என்னை அனுப்பிவைத்தார். அப்போது அவரும் துணைக்கு வந்து இடங்களைத் தெரிந்துகொண்டார்.
ஒரு சமயம் நந்தியாவட்டைப்பால் வாங்கிவர குறிஞ்சிப்பாடிக்குப் புறப்பட்ட சமயத்தில், ‘ஒரே எடத்துக்கு எதுக்குடா ரெண்டு பேராப் போறீங்க? அவனுக்குத்தான் எல்லா எடங்களும் பழகிடுச்சில்ல. அவனே போவட்டும் அனுப்பு’ என்றார் தாத்தா.
நான் தயக்கத்தோடு அவரைப் பார்த்தேன்.
‘இந்த எடத்து ஆளா இருக்கணும்னு அவனுக்குள்ள ஒரு எண்ணம் உழுந்திரிச்சு. ஒண்ணொண்ணா சொந்தமாக் கத்துக்க நாமதான வாய்ப்பு குடுக்கணும்’. ஐந்து நூறு ரூபாய் நோட்டுகளை மாணிக்கம் மாமாவிடம் எண்ணிக்கொடுத்தார் தாத்தா.
நோயாளிகளுக்கு மருந்து கொடுக்கும் வேலைகள் எல்லாம் முடித்த பிறகு, ‘எதுக்கு இந்த விஷப்பரீட்சை?’ என்று தாத்தாவிடம் கேட்டார் முருகேசன் மாமா. ஒரு கணம் அவரைப் பார்த்துவிட்டு, மடியிலிருந்த வெற்றிலையை எடுத்து, காம்பைக் கிள்ளிவிட்டு, மடிப்பை நீவியபடியே அடங்கிய குரலில் சொன்ன சொற்கள் என் காதிலும் விழுந்தன.
”திரும்பி வந்தா அவனுக்கு கடைசி வரைக்கும் இங்க இடம் உண்டு. வரலைன்னா, அவன் வழிச்செலவுக்கு குடுத்த பணம்னு நெனச்சிக்குவோம். சரியா?” – சொல்லிக்கொண்டே பக்கத்தில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தார். மெதுவாக வெற்றிலையின் பின்னால் சுண்ணாம்பைத் தடவி மடித்து வாய்க்குள் வைத்தார்.
கருக்கும் வேலை முடிந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு சூடு அடங்காத கரண்டியை ஓரமாக வைத்தேன். சாம்பல் முறங்களை எடுத்துச் சென்று நோயாளிக் கொட்டகைக்குள் வைத்துவிட்டு திண்ணையில் வந்து உட்கார்ந்தேன். மரங்கள், மேகங்கள், வானம், நிலா… என அங்கிருந்து பார்க்க அழகாக இருந்தன. மாமாவும் சித்தப்பாவும் பேசாமல் அருகருகில் அமர்ந்திருந்தார்கள். மதில் ஓரமாகக் குதித்து வந்த ஒரு பூனை, இருள் படர்ந்திருந்த பகுதியில் ஓடி மறைந்தது. எல்லோருடைய பார்வையும் ஏதாவது ஒரு கணத்தில் வாசல் வரை சென்று மீண்டது.
வெகுநேரம் கழித்து தாத்தா எழுந்து குழாயடிப் பக்கமாகச் சென்று வெற்றிலைச் சக்கையைத் துப்பிவிட்டு, வாயைக் கழுவிக்கொண்டு திரும்பினார். கை ஈரத்தை தோளில் இருந்த துண்டில் துடைத்தபடியே, ‘சரி, போய் நேரத்தோட படுங்க” என்றபடி கதவை நோக்கி நடந்தார்.
வாசல் படல் திறக்கும் சத்தம் கேட்டு எல்லோரும் ஒரே நேரத்தில் திரும்பினோம். ‘ஐயா’ என்று சத்தம் கொடுத்தபடி மாணிக்கம் மாமா வந்துகொண்டிருந்தார். முதுகுப்பக்கம் அவர் சட்டை கிழிந்திருந்தது. வேட்டியில் மண் அப்பிய அழுக்கு. தாத்தா நின்று அவரைத் திரும்பிப் பார்த்தார். ”ஐயா” என்றபடி அதற்குள் மாணிக்கம் மாமாவே தாத்தாவின் பக்கத்தில் வந்துவிட்டார். என்னைப் பார்த்துச் சிரித்தபடி பால் பாத்திரம் வைத்திருந்த பையைக் கொடுத்தார். ”என்னாச்சி மாமா?” என்று நான்தான் பேச்சை ஆரம்பித்தேன்.
”கடலூர் நெருங்கற சமயத்துல ஒரு கூட்டம் வண்டிய மறிச்சி நிறுத்திட்டுது ஐயா. திமிங்கலம் ரவினு யாரோ ஒரு ரவுடி செத்துட்டான்னு ரகள. வண்டிக் கண்ணாடியலாம் ஒடச்சிட்டாங்க. எல்லாரயும் ஓடஓட வெரட்டியடிச்சானுங்க. கும்பலோட கும்பலா உழுந்து பொரண்டு சமாளிச்சி ஓடும்போது என் சட்டயப் புடிச்சிக் கிழிச்சிட்டான் ஒருத்தன். பக்கத்துல ஒரு ரைஸ்மில்லுல போய் பூந்துக்கிட்டோம். நாலஞ்சி மணி நேரம் வெளியிலயே வர முடியலை. ஒரே கலவரம்… அடிதடி. ஒரு பஸ்கூட ஓடலை. ஏழு, எட்டு மணிக்கு மேல கும்பகோணத்து லாரி ஒண்ண நிறுத்தி போலீஸ்காரனே பத்து, பாஞ்சி பேர ஏத்தி அனுப்பிவெச்சான். நெல்லித்தோப்புல எறங்கி பஸ் புடிச்சி ஓடியாந்தேன்.’
தாத்தா அவரைப் பார்த்து தலையசைத்தபடி என் பக்கமாகத் திரும்பி, ‘சரி, போய் அத்தைய எழுப்பி அவனுக்கு சோறு போடச் சொல்லு” என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் போகத் திரும்பினார். ”ஐயா” என்று அவரை மறுபடியும் நிறுத்தினார் மாமா.
”குறிஞ்சிப்பாடிக்கார ஐயா பாலுக்கு பணம் வாங்கிக்க மாட்டேன்னுட்டாரு. போன தரம் குடுத்த பணமே போதும்னு சொல்லச் சொன்னாரு” என்றபடி பைக்குள் மடித்து வைத்திருந்த ரூபாய்த் தாள்களை எடுத்து நீட்டினார். சில கணங்கள் யாரும் பேசவில்லை. எல்லோருடைய பார்வையும் பணத்தின் மீது பதிந்திருந்தது. ”அத வாங்கிப் போய் அத்தைகிட்ட குடு” என்று என்னைப் பார்த்துச் சொன்னார் தாத்தா.
– டிசம்பர் 2013