சாருமதி (என் காதல் மனைவி) குசினிக்குள் இருந்துகொண்டு நேற்றே வெதுப்பிவைத்த கேக்கை அழகாக ஐசிங் செய்வதற்காகச் செதுக்கியபடி மூன்றாவதுதடவையாக வாக்குறுதி தந்தாள்
“இன்னும் ஐந்து நிமிஷத்திலே கோப்பிவரும்.”
அடுத்த தடவையும் கண்ணம்மா வாக்குத்தவறுவாளாயின் பியரிடமே தஞ்சம் புகுவதென்று தீர்மானித்தபடி அன்றைய மாலைப்பத்திரிகையை எடுத்துப் புரட்டினேன்.
முழுப்பக்கக் கட்டுரையொன்றின் நடுவே பிரசுரிக்கப்பட்டிருந்த நடுத்தரவயது மனிதரின் புகைப்படத்தைப் பார்க்கப்பார்க்க அவர் ஏதோ பலவருடகாலம் நெருங்கி வாழ்ந்து பழகிய ஒருவரைப் பார்ப்பது போலிருந்தது. சராசரி ஐரோப்பியர்களைப் போலல்லாது சற்றே கறுத்த கண்களும் மூக்குக்குமேலே பொருந்துகின்ற அடர்த்தியான புருவங்களும் என் ஞாபகசக்திதான் ஏதோ சதி செய்கிறது. இம்மனிதனை நிச்சயமாய் நான் எங்கேயோ மிக அணுக்கமாக நின்று தரிசித்திருக்கிறேன்., எங்கேயென்று தெரியாதது தவிப்பாயிருந்தது.
கட்டுரையை மேலோட்டமாகப்படித்தேன். J.J.Karl Murphy, 1916.Dresden நகரை அண்மித்த Chemnitz இl ஒரு விவசாயக்குடும்பத்தில் பிறந்தவர், இளம்வயதிலேயே பலதரப்பட்ட இசைக்கருவிகளையும் வாசிப்பதில் வல்லவராய் இருந்ததோடு புதுஇசைவடிவங்களை ஆக்கும் ஆற்றலும் பெற்றிருந்தார். தன் 24 வயதினிலே Leipzig இசைப்பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பதவியேற்றார். அங்கே அவர் இசைபற்றிச்செய்த ஆய்வுகளும் அமைத்த இசைக்கோர்வைகளும்(Compositions) ஏராளம். இரண்டாம் உலக மகா யுத்தத்துக்கு முன்னால் உலகநாடுகளின் இசையரங்குககள் அனைத்தும் இவரின் பிரசன்னத்துக்காகக் காத்துக்கிடந்தன.
அமெரிக்காவில் கலிஃபோர்ணியாவிலும், ஜப்பானிலும் சிலமாதங்கள் தங்கியிருந்து Music Cencert க்களும் பல Opras களும் நடத்தியுள்ளார்.
கேக் செய்ய ஓர்டர் தந்த பிறந்ததினக் கொண்டாட்டக்காரர்கள் வரப்போகிறார்கள் என்று அவசரமாக ஐஸிங் செய்துகொண்டிருந்த மனைவியிடமும் எனது வியப்பை விபரித்தேன்.
“40 வருஷத்துக்கு முன்ன எடுத்த படத்தைப்போட்டிருப்பாங்கள்…… உதை வைச்சுக்கொண்டு மூளையை உடையாமல் உருப்படியாய் ஏதாவது செய்யப்பாருங்கோ……. மனுஷன் டிவியிலொருமூலையில் நின்று அங்ஙின Jazz ஊதியிருக்கும்.”
“வேறேதாவது டிப்ஸ் தரமுடியுமாப்பா……..”
“ஒரு நாள் ஊ-பாணில் ( சுரங்கத்தொடரி) ஒல்லியாய் ஒடிசலா உயரமாய் நெடுங்கழுத்தோடு ஓவல் முகமும் சாம்பல் கண்ணுயிமாருந்த ஜெர்மன்காரியைப்பார்த்து, குண்டாய், உருண்டைத்தலையும், பாரைக்கட்டையுமாய் தொண்டையே இல்லாமலிருக்கும் உங்களுடைய அம்மாவைப்போலிருக்கிறாள் என்றனீங்களல்லே……”
“Please be serious dear”
“இரண்டு வருடங்களுக்குமுன்ன என்னைத் தனிய வீட்டிட்டு பாரீஸ் போனீங்களல்லே….. அப்போ உங்களுக்கு எதிர்ச்சீட்டிலயிருந்து பயணம் செய்த மனுஷன்”
“பெரிய உலகமகா இசைமேதையென்று போட்டிருக்கு…….. என்னுடன் செகென்ட் கிளாஸ் டிக்கெட்டில் பயணம் செய்திருக்கச்சான்ஸ் கிடையாது……. ஊஹூம்..”
“Musician என்றால் போன வின்டரிலே யூனிவேர்ஸிடி ஹோல்ல பர்வீன் சுல்தானாவின் கஜல் கச்சேரியில அவவோட சேர்ந்து நீங்களும் பாடினீங்களல்லோ…. அந்தக்கச்சேரிக்கு வந்து முன் சீட்டில் உட்கார்ந்திருப்பார்
என்னை நிமிர்ந்து பாரமலே கிண்டலடித்துவிட்டுத் தொடர்ந்து ஐஸிங்கில் கவனமானாள்.
“எங்காலும் பஸ்ஸிலயோ, ஊ-பாணிலோ சூப்பர் மார்க்கெட்டிலோ கண்டிருக்கக்கூடியவர்களையெல்லாம் ஞாபகம் வைத்திருக்க முடியவில்லையே என்று கவலைப்படாதிங்கோ…….. இதே பிரச்சனை ஐசாக் நியூட்டனுக்கும் இருந்தது.”
ஊ-பாண் என்றதும் என் மூளையில் ஒரு மின்னலடித்தது. அம்மின்னல் கீற்றின் பொன்னொளி என் ஞாபக ஏடுகளின் சரியான பக்கத்தில் விழுந்தது.
பெர்லின் சுரங்கத்தொடரிகளின் ( ஊ- பாண் ) தடங்களும், (எஸ்- பாண் ) எனப்படும் விரைவுத்தொடரிகளின் தடங்களும் தரைமேலான நகரவிரைவுத்தொடரிகளின் தடங்களும் பின்னிய சிலந்திவலையில் ஒரு தடத்துடன் இன்னொன்று தற்செயலாகச்சந்தித்ததைபோல அமைந்த Gesundbrunnen சந்தி, தொடரிகள் நிலையமுன்பாக அமைந்திருக்கிறது நான் வேலை செய்யும் White Wedding எனும் மியூஸிக் கஃபே.
இங்கு ஏனைய டிஸ்கோதேக்குகளைப்போன்று டான்ஸ் ஆட விஷேட மேடைகள் எதுவும் கிடையாது. ஆனால் அங்குவரும் இளசுகள் ‘கிக்’ ஏறியதும் வைக்கப்படும் இசையில் துள்ளலுக்கேற்ப ஜோடிஜோடியாக இணைந்தும் பிணைந்தும் ஆடத்தொடங்கிவிடுவர். நேற்று கலிஃபோர்ணியாவில் ஒரு புது CD யோ, LP யோ வெளியானால் இன்று அவ்விசை வைட் White Wedding இன் 500 Watts Sound System த்தில் அதிரும். புது இசை வெளியீடுகளைக்கேட்க ஈர்க்கப்படும் கூட்டத்தால் கஃபே எப்போதும் ஜே ஜே என்றிருக்கும், கோடை, குளிர்காலம் என்ற பாகுபாடின்றி பியர், ஷாம்பேன், விஸ்கி, வொட்கா, சம்பூகா, கொக்டெயிலுகள் ஆறாக ஓடும். இரவு இரண்டு மணியானாலும் விருந்தினர்கள் அனைவரையும் வெளியனுப்பி கதைவைச் சாத்துவதென்பது மிகவும் வல்லையான காரியம்.
எனக்கு மாலைமுழுவதும் காப்பிக்கோப்பைகளும், சாப்பாட்டுத்தட்டுக்களும் கழுவும் விளையாட்டு. பின் இடையிடையே சலாட் போடுதல், பௌகெட், ஹவாய் றோஸ்ட் போன்ற எளிமையான சாப்பாடுகள் / கடிக்க / கொறிக்க (Bites) தாயாரித்தல், நிலங்கீழறையில் பியரைமேல்த்தள்ளுவதற்கான வாயு தீர்ந்துபோனால் புதிய (சிலிண்டர்) கலனைப்பொருத்துவது போன்றனவற்றைச் செய்வேன். பின் கஃபே பூட்டியதும் தரையைக்கூட்டி, அதை ‘மொப்’பண்ணி விடுவதும் என் பணிக்குள் அடக்கம்.
மிக அதிகமாக வியாபாரம் நடைபெறும்வேளைகளில் எனக்கும் பாரில் பியர் வார்த்துக்கொடுக்க வேண்டியிருக்கும்.
அநேகமான விருந்தினர்கள் ஏதோ பாலைவனத்திலிருந்து நேராகவரும் ஒட்டகம்போன்று வந்தவுடன் ஒன்றன்பின் ஒன்றாக நாலைந்து பெரிய பெக் பியர்களை உறிஞ்சுவார்கள், பின் ஹவாய் றோஸ்டையோ, இறால் வறுவலையோ கடித்தபடி விஸ்கி, ரம், கோனியாக், அஸ்பாஃக் போன்ற ஹொட் டிறிங்ஸ் சாப்பிடத்தொடங்குவார்கள். இவர்கள் பேசிக்கொண்டே விஸ்கியில் தோய 9:00 மணிக்குமேல் நிக்கல் முலாம் பூசிய இரும்பாணிகள், றிவேட்டுகள், சங்கிலிகள் பொருத்தப்பட்ட தோலாடைகள், முரடான சப்பாத்துக்களைக் கௌபோய் பாணியில் அணிந்து Harley Davidson, Red Indian போன்ற ராக்ஷத அமெரிக்க விசையுந்துகளில் பிறிதொரு கோஷ்டி வந்திறங்கும். பணமும் லாகிரி வஷ்துக்களும் வேகமாகக் கைமாறும். கஃபேமுதலாளியே இவர்களிடம் சரக்கை மொத்தமாக வாங்கிப்பின் சில்லறையாக வியாபாரம் செய்வதுமுண்டு.
பாரில் நான் வேகமாக பியர்வார்த்துக்கொண்டிருந்த ஒரு மாலை, என் எதிரில் உட்கார்ந்திருந்தவன் ஒரு தாளில் வெள்ளைப்பௌடர் ஒன்றைக் கொட்டிவைத்து அடிக்கொருதரம் அதை மூக்குப்பொடிபோல் உறிஞ்சிக்கொண்டிருந்தான். எனக்கும் கொஞ்சம் கொஞ்சமாக புவியீர்ப்பு எதுவுமற்ற ஒரு கிரகத்துள் பிரவேசிப்பதைப் போலிருந்தது. அதுவே இதமான ஒரு கனவைப்போல சுகமாகவுமிருந்தது. தொடர்ந்து பியர்வார்க்க முடியவில்லை. அலுவலக அறையுள் போய்ப்படுத்துவிட்டேன். காற்றில் வந்த கொகொயினின் மகத்துவம் அறிந்தது அதுதான் முன்முறை.
அஞ்சலகமெழுகுமாதிரியான பிறௌவுன்நிற ஹஷீஷ் துண்டுகளை சிகரெட் லைட்டரினால் சூடுபண்ணிவிட்டு அது ஆறிக்கெட்டியானதும் பொடிபண்ணிச் சிகரெட்புகையிலையுடன் கலந்து புகைப்பார். ஒவ்வொரு வஷ்துக்கும் ஒவ்வொருவகையான லாகிரிபோதையுண்டு, ஹஷீஸைப் புகைக்கப்புகைக்க செவிகள் அடைபடும். டமாரத்தைத்தான் வைத்து அடித்தாலும் புறக்காதில் சும்மா ஒரு கொசுமாமிவந்து கொஞ்சினாப் போலிருக்கும். போதியேறிய விருந்தினர்கள்
இசையைச் சத்தமாக வைக்கச்சொல்லிக் கூச்சலிடுவர். பின்னர் இனிப்புச்செறிவு அதிகமுள்ள பழரசங்களையோ, கொட்டெயில் வகைகளையுமே அதிகம் விரும்பி ஓர்டர் பண்ணுவார். சிலர் பெர்லினர்வைஸ் எனப்படும் பியரினுள் இனிப்புச்செறிவு அதிகமான கரமல்களையோ, கோர்டியல்களையோ கலந்தும் குடிப்பார்கள்.
பெண்களுக்கு Baccardia தூக்கலான கொக்டெயில்கள் குடித்தால் நடப்புப் பிரச்சனைகள் எல்லாம் முண்டியடித்துக்கொண்டு பழையசோகங்கள் மேல்வந்து விடுகின்றனபோலும், ஏற்றியது முறியும்வரை நிறையவே அழுவார்கள். வேடிக்கையாகவிருக்கும்.
ஹஷீஷ் புகைப்பவர்கள் அதிகமாக அதிகமாக பாவட்டையிலையைப் பச்சையாக எரியூட்டுவதைப்போல எல்லா இடமும் மணம்கமழும், கலியாணஹோமம் வளர்த்ததைப்போல கஃபேயின் ‘ட்’வடிவ அரங்க்ம் முழுவதும் ஒரே புகைமண்டலம் நிறைந்துவிடும். காவால்த்துறை பாயுமென கதவுகளையும் திறக்கவே மாட்டார்கள். எனக்கும் விரும்பியோ விரும்பாமலோ அப்புகைமண்டலத்தையே திரும்பத்திரும்பச் சுவாசிக்கவேண்டிய தொழில் நிர்ப்பந்தம்.
ஹஷீஷ்புகைமண்டலச்செறிவு அதிகமாகி சாதாசிகரெட்புகையுடன் மூச்சு முட்டிக்கொண்டிருந்த ஒரு சமயம் நான் பியர் வார்த்துக்கொண்டிருக்க பாரின் மேசைக்கு வலப்பக்கமாக இருக்கும் ஐஸ்கட்டியுண்டுபண்ணும் சாதனத்துக்கிடையிலிருக்கும் சிறு தட்டில் சுண்டெலியொன்று நிதானமாக வந்து அணில்பிள்ளையைப்போல குத்துக்காலிட்டு உட்கார்ந்து என்னைப்பார்க்கின்றது. ‘ஏதோ வருத்தமாக்கும் ஓடமுடியவில்லை’ என்ற நினைப்பில் நான் எனது வேலையில் மூழகிவிட்டேன். அரைமணிநேரம் கழித்துத் தற்செயலாகப்பார்க்கிறேன். என்னிடம் பியருக்கு ஓர்டர் பண்ணிவிட்டுக்காத்திருக்கும் பாவனையில் அது இன்னும் அங்கேயே உட்கார்ந்திருக்கிறது. சற்று நேரம் செல்ல கஃபே முழுவதும் ஏழெட்டுட்டுண்டெலிகள் எல்லாம் பாதிக்கண்களை மாத்திரம் திறந்துவைத்துக்கொண்டு கால்களைப் பரவிப்பரவிவைத்து யாருக்கும் கிஞ்சித்தும் பயமின்றி குறுக்கும் மறுக்குமாக உலாவரத்தொடங்கின. ஹஷீஷ்புகை சுண்டெலிகளுக்குமட்டும் போதைதரப்படாதா என்ன…..? ‘இரண்டு சிகரெட்டுக்களிலுள்ள நிகொட்டீனைத் தனியே பிரித்தெடுத்து ஒரு சுண்டெலிக்கு ஒரு ஊசிமூலம் ஏற்றினால் அது இறந்துவிடும்’ என்றகூற்றை முதமுதலாக நம்பினேன்.
கஃபேபூட்டும் வேளை அறிவிக்கப்பட்டதும் பிரக்ஞையுடன் வெளியேறுபவர்களுக்கு மனம் நன்றிசொல்லும். ஊசியேற்றிக்கொள்ள டாயிலெட்டினுள் பதுங்குபவர்களையும், ஏற்றிமுடியத் அங்கேயே தூங்கிவிடுபவர்களையும், ஸ்டூல்களில் அசௌகரியமாக உட்கார்ந்துகொண்டு வீட்டுக்குப்போக மனமில்லாது மைந்துபவர்களையும், கதிரையில் உட்கார்ந்தபடியே தூங்கிக்கொண்டிருப்பவர்களையும், இன்னும் கொஞ்சம் பியர் தாவென்று பாரைச்சுத்தம்பண்ணிய பின்னாலும் யாசிப்பவர்களையும் செஃப் (முதலாளி)பும், இதர சிப்பந்திகளும் நிற்கையிலேயே வெளியேற்றிவிடவேண்டும். அல்லது அவர்களுடன் ‘லோல்’ப்படவேண்டிவரும்.
“ஹலோ… தயவுசெய்து எழுந்திருப்பீர்களா?”
கண்கள் குறாவ மொய்த்துக்கொண்டிருப்பவன் ‘ குட்டன் ஆபென்ட்’. மாலை வணக்கம் சொல்வான் மறுபடியும் அப்போதுதான் சந்திப்பவனைப்போல.
“குட்டன் ஆபென்ட்…. தயவுசெய்து எழுந்திரும்”
“எதுக்கு?”
“கஃபேயைப் பூட்டவேண்டும் நேரமாச்சு”
“அதுக்குள்ளயா…….. எத்தனை மணி இப்போ?”
“இரண்டுமணி”
“இரவா பகலா….?”
“அதிகாலை”
“ஷைச “(வசவு வார்த்தை)
சிலரை ஒரு கதவினால் வெளியேற்றினால் மறுகதவால் மறுபடியும் நுழைந்து விடுவார்கள்.
ஜோடி ஜோடியாயிருக்கும் விருந்தினர்கள், யாருடன் வந்தேன் என்பது மறந்துபோயிருக்கும் தனியன்கள், எவனுடனோவந்து எவனுடனோ போகவிழையும் புறம்போக்குகள், யாராவது இரண்டு தம் ஹஷீஷ் கொடுப்பவர்களுடனேபோய் இரவுமுழுவதையும் கழிக்கக்காத்திருக்கும் விடலைப்பெண்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டுக் கதவுகளையும் ஜன்னல்களையும் அகலத்திறந்துவைத்துப் புதியகாற்றை உள்ளே வரவிடுவேன்.
மழைவிட்டதுப்போல் இரைச்சல் ஆரவாரம் அத்தனையும் ஓய்ந்தபின்வரும் அமைதி அனுபவித்தற்குரியது. சூடாக புதிய கோப்பியோ தேநீரோ தயாரித்துக்குடித்தபின்னால் நிதானமாக எனது பணியின் மறுபடலத்தை ஆரம்பிப்பேன்.
BON JOVI யும், IDOL BILLYயும் அதிர்ந்து பிளிறிய சவுண்ட் சிஸ்டத்தில் இப்போழுது மகராஜபுரம் சந்தானமும், ஜி. என். பாலசுப்பிரமணியமும், முசிரி சுப்பிரமணிய அய்யரும், எம். டி. இராமநாதனும், பர்வீன் சுல்தானாவும், பிம்ஷன் ஜொஷியும், ரிஷிட் கானும், வெங்கடேஷ் குமாரும் வரிசையில்வந்து தாழ்தொனியில் எந்நேரங்கெட்ட நேரத்திலும் எனக்காக இத்தனியொருவனுக்காக வந்திருந்து கச்சேரி செய்வார்கள். கர்நாடக சங்கீதமும், இந்துஸ்தானி சங்கீதமும், கஜல் இசையும் நிரம்பிவழியும் White Wedding ஐக்காண என்னுள் சிரிப்புச்சிரிப்பாய் குமிழும்.
முதலாளிகளின் தொந்தரவுகளற்ற பணிச்சுதந்திரம், சம்பளம் முதலிய காரணிகள் என்னை சிகரெட் புகைமண்டலம், அகாலவேலை போன்ற வியாகூலங்களையும் மீறி இவ்வேலையில் ஒட்டி வைக்கின்றன.
அதிகாலை நாலுமணிக்குச் சுரங்கத்தொடரிகளின் வேலை ஆரம்பித்துவிடும். படிப்படியாக வீதியில் ஜனநடமாட்டம் அதிகரிக்கும்ம் உற்சாகமாக வேலைக்குப்போவோர் முனங்கிக்கொண்டுபோவோர், வின்டர்காலமெனில் ஏழுமணிக்குமேலும் புலராதபொழுதுகளில் பனிமழைபெய்தாலும் தவ்விக்கொண்டு பள்ளிசெல்லும் பாலர்கள், மாணவர்கள் இவர்களைப் பராக்குப்பார்ப்பதும் எனக்கு நல்ல பொழுதுபோக்குத்தான்.
பெர்லின் சுவர் வீழ்ந்தபின்………………………………
வெளிவெப்பநிலை பூஜ்ஜியத்துக்கும் கீழிருந்த ஒருநாள் தரையைச் சூடான சோப்நீரில் தடித்த மொப் துணியை அமுக்கிப்பிழிந்து ‘மொப்’பண்ணிக்கொண்டிருக்கிறேன்.
கடைவாசலில் நீளக்கோட்டுப்போட்ட ஒரு கிழவன் நின்றுகொண்டிருந்தான்.
அவனை தொடருந்து நிலையத்தின் ’கியோஸ்க்’ மற்றும் சிற்றுண்டிச்சாலை மருங்கில் முன்னரும் பலதடவைகள் பார்த்திருக்கிறேன். பனியும் தூவிக்கொண்டிருக்கிறது. அரை மணிக்கு மேலாகியும் மனிதன் நின்றவிடத்தைவிட்டு அசைவதாகக் காணோம். பின்லாந்து வொட்கா அதிகம் குடித்தாலும் கால்தூக்கிவைக்க முடியாமல்ப்போகும், அப்படிப்போதையில் சும்மா சுவரைத்தொட்டுக்கொண்டு மணிக்கணக்கில் நிற்கும்பேர்வழிகளைக் கண்டிருக்கிறேன்.
கே.ஜே. ஜேசுதாஸ் கனகாங்கிராக கீர்த்தனை ஒன்றுமுடிய தாளவாத்தியக்காரர்களுக்கு தனிவாசிப்புக்குப் போதிய இடங்கொடுத்திருந்தார். கசெட் ஒருபக்கம் ஓடிவிட்டிருந்தது, மறுபக்கம் புரட்டிவிடபோனபோது கிழவன் மெல்ல அசைந்தான். மீள்வார்ப்புக்காகக்கொண்டுசெல்லப்படும் வெற்றுப்போத்தல்களை கிளாஸ்களுக்கான கொண்டெயினருக்குள் வீசுவதற்காக நான் கதவுக்கு வெளிப்புறமாக வைத்திருந்த வெற்று விஸ்கிப்போத்தல்களில் கிடந்த ஊறல்களை ஒவ்வொரு போத்தலாகத் தலைகீழாகக் கவிழ்த்து நாவில் துளித்துளியாக விழவிட்டுச் சுவைத்துக்கொண்டிருந்தான், பரிதாபமாக இருந்தது. கதவைத்திறந்து”ஹலோ…..” என்றேன். ’எங்கேவிரட்டிவிடுவேனோ’ என்பதைப்போலக் கலவரத்துடன் என்னைப்பார்த்தான்
“இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்….?”
“உள்ளேயிருந்து ஒரு புதுவகைச்சங்கீதம் வந்தது, அதைக்கேட்டுக்கொண்டிருந்தேன்.”
“உண்மையாகவா………..?”
எனக்குச் சர்வதேகமும் புல்லரித்தது. எனது சாஸ்திரிய சங்கீதத்தை ஒரு ஐரோப்பியன் கேட்டு இரசித்துள்ளான்…..வாவ்!
“உள்ளே வாருங்கள் பேசலாம்.”
கிண்டல்பண்ணுறேனோவென்று என்னைச்சந்தேகத்துடன் பார்த்தான். பின் தயங்கித்தயங்கி உள்ளே வந்தான். அவனை ஒரு நாற்காலியில் அமரவைத்தேன். பத்துநாட்தாடியில் பூத்திருந்த பனிப்பூக்கள் லைட் வெளிச்சத்தில் மின்னின.
“இந்தவகையிலான சங்கீதத்தை முன்னர் நீங்கள் கேட்டதில்லையா…..?”
“நான் இதுவரை பிறநாட்டவர் எவரதும் இசையைக்கேட்க முடியாத ஒரு உலகில் வாழ்ந்துவிட்டேன்…………..” என்றபடி கிழக்கே கையைக்காட்டினான்.”அங்கிருந்து மீண்டுகொஞ்சக்காலந்தான்.”
“மிகவும் உறைந்துபோயுள்ளீர்கள்…… சூடாக ஒரு கோப்பி தயாரிக்கவா?”
“நன்றி………மிகவும் நன்றி.”
“கொஞ்சம் Ameretto வும் (மதுவகை) சேர்க்கவா?”
“Net von dir ” ( என்னே…. தாராளமான மனது)
பெருமையுடன் கசெட்டைத்தொடர்ந்து ஓடவிட்டுவிட்டு கோப்பியைத் தயாரித்தேன்.
“கேட்பதற்கு மன்னியுங்கள். இது அராபிய இசையா அல்லது இந்திய இசையா?”
“இதுதான் இந்திய சாஸ்திரிய சங்கீதம், இது கர்நாடகம் எனும் வகைக்குரியது.”
“நன்றி…….அருமையாகவுள்ளது, இதன் இலக்கணங்கள் எப்படியென்று அறியேன். கேட்பதற்குப்பரவசமூட்டுவதாயுள்ளது.”
“கர்நாடகம் என்றால் என்ன?”
“கர்ணம் என்பது காது, அடகம் என்பதற்கு அடங்குதல், இன்பமளித்தல் என இரு பொருட்கள் உள்ளன. அதாவது செவிப்புலனின் மேல் கீழ் ஸ்ருதி எல்லைகளுக்கும் அமையும் அனைத்து இசையும் என்றே அர்த்தம்.”
“ரொம்பத்தான் பேராசை என்றுவிட்டுச்சிரித்தான்”
சாஹித்தியத்தின் ஒவ்வொரு வாக்கியத்தைப்பற்றியும் கேட்டான், எனக்குத்தெரிந்தவரையில் எம் இசையின் அடிப்படைகள், ஸ்வரங்களின் மாறுபட்ட விதத்திலான சங்கமத்தில் எவ்வாறு இராகங்கள் உருவாகின்றன என்பதையும், தாளங்கள்பற்றியும் சுருக்கமாகச் சொன்னேன். இன்னும் கஞ்சிரா ஒருகையால் வாசிக்கபடுவது என்பதை நம்பமறுத்தான்.
“இவ்வளவு இசைபற்றிப்பேசுகிறீர்களே உங்களுக்கு நுட்பமான இசை அனுபவங்கள் எப்படி ஏற்பட்டன?”
காப்பிக்கோப்பையைக் கீழேவைத்துவிட்டுச் லேசாகச்சிரித்தான்.
“ஆரம்பத்தில் Dresden இல் ஒரு தேவாலயம் ஒன்றில் பியானோ வாசித்தேன், அப்போது நான் இளைஞன், அது அந்தக்காலம்.” மீண்டும் மௌனம்.
” உங்களை மிகவும் கவர்ந்த கொம்போஸர் யார்?”
நான் J.S. Bach, Beethoven , Mozart என்று யாரையாவது சொல்வானென்று எதிர்பார்க்க நான் என்றுமே கேளிவிப்பட்டிராத Kowski என்று முடியும் ஒருவரது பெயரைச்சொன்னான், ரஷ்யனாகவோ, போலந்துக்காரனாகவோ, ஒஸ்திரியனாகவோ இருக்கலாம்.
“இன்னுமொரு கோப்பை காப்பி குடிக்கிறீங்களா Ameretto சேர்த்து?”
நன்றியுடன் என்னைப்பார்த்தான் ஆமோதித்து.
இம்முறை மதுவைச்சற்று அதிகமாகவே கலந்துவிட்டேன். காப்பிக்கோப்பையைக் கையில் எடுத்துக்கொஞ்சம் குடித்ததும் வாயால் மியூஸிக் ஒன்றைத்தானே போட்டபடி சுழன்று நடனமாடத்தொடங்கினான்.
கோப்பிக்கோப்பையுடன் அதையும் போட்டுடைத்துத் தரையை மீண்டும் சுத்தம் செய்யவைத்துவிடுவானோ கிழவன் என்று பயந்தேன்.
“தோழனே பயந்துவிடாதே ……… ஓ லலல்லா லலல்லா ஜீகபம் ஜீகபம் ஜீகபம்….ஓ….., பம்ஜிக பம்ஜிக பம். “என்றபடி ஆட்டம் வேகம் பிடித்தது. ஒரு துளியும் கோப்பி சிந்திவிடாதபடி கோப்பையைக்கைகளுக்குள் மாற்றி மாற்றிச்சுழன்று சுழன்று ஆடினான்.
ஒருவாறு ஆட்டம் முடிந்தபின் சொன்னான்: “எனக்கு kelner (பரிசாரகர்) வேலையிலும் 12 வருடங்கள் அனுபவமிருக்கிறது…….. ஒரு கோப்பையையும் உடைக்கமாட்டேன். உமது அன்பான உபசரிப்புக்கு நன்றி, சென்று வரவா…..?”
“சென்றுவாருங்கள்……. நாம் அடிக்கடி சந்திக்கலாம். ஒரேயொரு சந்தேகம், நீங்கள் ஏன் இசைத்துறையில் தொடர்ந்து சேவை செய்யவில்லை?”
“இசையென்பது மனோவியல் வெளிப்பாட்டின் விளையாட்டு. அதில் கற்பனைகளைக் கலந்து கலந்து அதையாருமே ஆடலாம். இரசிக்கலாம். சாஸ்திரியஇசை செல்வந்தர்களுக்காகவும் பிரபுகளுக்காகவும் போடப்பட்டது, பாட்டாளி மக்களுக்குரியதல்ல என்று நவயுக மார்க்ஸிய சித்தாந்திகள் நவிலுகின்றனர், வர்க்கமுரண்பாடுகளுக்கும் கலையுணர்வுகளுக்கும் சம்பந்தமே கிடையாது. கலையில் தணிக்கைக்குழு என்றொரு Non – Sense இப்படி மியூஸிக்போடு, இப்போ தூங்கு, இப்போ எழுந்திரு, இப்போ மூச்சாபோ…… என்று கட்டளையிடுறாங்க Quatsch (பித்துக்குளித்தனம்)”
“நீங்கள் பார்த்த வரையில் மேற்கு ஜெர்மனிபற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன….?”
„ முன்பு எனக்கு மேற்கு ஜெர்மனிக்குள் ஓடிவந்துவிடவேண்டுமென்ற துடிப்பும் ஆவலும் இருந்தன, அவர்கள் அனுமதிக்கவில்ல, இப்போதுவரமுடிகிறது, எதையும் பார்க்கும் ஆர்வந்தான் போய்விட்டது.”
“நன்றி (Schon Tag noch – வந்தனம்)”புறப்பட்டுவிட்டான்.
அதன்பின் அவனை நான் காணவில்லை.
*
இந்தப்படத்திலிருப்பது அன்று என்னிடம் கோப்பியருந்திய மாமேதையேதான். சாருமதி சொன்னதைப்போல் அவரது நடுவயதுப்படந்தான் பத்திரிகைக்குக் கிடைத்துள்ளது. மற்றப்படி அந்த நெற்றியும் நாசியும் கண்களும் ஒருசேர சாட்ஷாத் அவரேதான்.
ரஷ்யாவின் கட்டுப்பட்டினுள் கிழக்கு ஜெர்மன் ஜனநாயகக் (? )குடியரசு மக்களுக்கிடையே சர்வாதிகாரத்தைப் பிரயோகித்தவேளைகளிலெல்லாம் அரசைப்பகிரங்கமாககக் கண்டித்தார். அதனால் ஆத்திரமடைந்த அரசு இவரைப் பல்கலைக்கழகத்திலிருந்து இராணுவத்தின் இசைப்பிரிவு ஆலோசகராக நியமித்தது. 1950 இல் Murphy தனது பதவியை இராஜினாமா செய்தார். Leipzig Thomas தேவாலயலயக்கோரஸில் சேர்ந்து பல Ballet நாட்டியநிகழ்வுகளையும் (Melodrama) இசையமைத்து இயக்கினார்.
இவர் தன் இசைஆய்வுகளையும் கையெழுத்துப்பிரதிகளாயிருந்த நூல்களையும் Amterdam இல் ஒரு பிரசுரக்கொம்பனிக்கு அரசின் அனுமதியின்றி விற்றார் என்றும் அவற்றை அவர் வேறொருபெயரின் வெளிக்கொணர்ந்தார் என்ற குற்றச்சாட்டுகளின்மேல் அரசு இவர்மேல் வழக்குத்தொடர்ந்தது, இதனால் இவர் சில வருடங்கள் சிறையனுபவிக்கவும் நேர்ந்தது.
இவர் சிறை அனுபவித்த காலத்தில் இவர்மனைவி வேறொருவருடன் வாழத்தலைப்பட்டதில் மணவாழ்வில் முறிவையே சந்தித்தவர். விடுதலையானபின் மனநோய்வாய்ப்பட்டிருந்ததாக ஊர்ஜிதமற்ற தகவல்கள் உள்ளன.
தன் அந்திமகாலம்வரையில் இசைத்துறையிலிருந்து அஞ்ஞாதவாசம் செய்த இவர் ஜீவனோபாயத்துக்கு Potsdam நகரின் விருந்தினர்மாளிகையொன்றில் பரிசாரகராகப் பணியாற்றினார். தனது 34 வயதுக்குள்ளேயே இசையுலகச்சாதனைகள் பலவற்றின் சிகரங்களையுந்தொட்டு இந்நூற்றாண்டின் தலைசிறந்த இசைச்சித்தர்களில் ஒருவராக மதிக்கப்பட்ட திருவாளர் J. J. . Karl Murphy, அவர்கள் Berlin Rudolf Virchow மருத்துவமனையில் நேற்றுமாலை தன் 77 வயதில் மாரடைப்பால் காலமானார்.
“ணங் ணொங்…..ணங் ணொங் ”
கதவுமணி அடிபட்டது.
“கேக் எடுத்துப்போக ஆட்கள் வந்திட்டினம்……… கதவைத்திறவுங்கோப்பா. ”
சாருமதியின் கூவலில் என் அமைதி மீண்டும் அறுபட்டது.
– ‘அ ஆ இ’ – நெதர்லாந்து. ஜூலை – 1993