கதை ஆசிரியர்: அமரர் கல்கி
1
இருவரும் ஏழைக் குடியானவர்கள். ஏழைகளானாலும் சந்தோஷத்திற்குக் குறைவில்லை. எவ்வளவு மகிழ்ச்சியோடு அவர்கள் சிரித்துக் கொண்டும் பேசிக் கொண்டும் போகிறார்கள் பாருங்கள்! அதிலும் மறுநாள் பொங்கல் பண்டிகை. ஆதலால் குதூகலம் அதிகம். ஆனால் சந்தோஷம், சிரிப்பு, குதூகலம் எல்லாம் கடைக்குள் நுழையும் வரையில்தான். கடையில் நுழைந்து இரண்டு புட்டி குடித்துவிட்டால்?
2
சந்தோஷமாய்ப் பேசிச் சிரித்துக்கொண்டு கடைக்குச் சென்றவர்கள் திரும்பி வருகையில் விரோதிகளானார்கள். குடிவெறி ஏறியதும் காரணமில்லாமல் திடீர் திடீரென்று கோபம் வந்தது. பேச்சு வலுத்துக் கூச்சலாயிற்று. முகங்கள் கோரமாயின. வாய்ச் சண்டை முற்றிக் கைச் சண்டையாக முடிந்தது. சிறியதோர் கலவரம். ஆனால் இது இவ்வளவுடன் போகுமா?
சில சமயம் பெரிய சண்டையும் ஆகும். குடி வெறியில் தலைகால் தெரியாது. கத்தியோ, அரிவாளோ, மண்வெட்டியோ கையில் அகப்பட்டதை எடுத்துக் கொள்வார்கள். கொலை நடப்பதும் உண்டு.
4
போலீஸார் சும்மா இருப்பார்களா? சர்க்கார் லைஸென்சு பெற்ற கள்ளுக்கடையில்தானே குடித்தான் என்று அவர்கள் தாட்சண்யம் காட்டுவதில்லை. கலகம் செய்தவனைப் பிடித்துக் கையில் விலங்கு பூட்டிக் கொண்டு போகிறார்கள். இப்போது குடிவெறி கொஞ்சம் தணிந்தது. ஆனால் என்ன செய்யலாம்? ‘ஐயோ! கெட்டேனே!’ என்று கண்ணீர்விட்டு அழுவதைத் தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை. வீட்டையும் மனைவி மக்களையும் நினைக்கும்போது துக்கம் அதிகமாகிறது.
நன்றி: சென்னைநூலகம்.காம் (அமரர் கல்கியின் படைப்புகள்), அமரர் கல்கி, எழுத்தாளர், பத்திரிக்கையாளர்.