தணிகாசலம்…!

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 21, 2019
பார்வையிட்டோர்: 6,050 
 
 

தலைமை ஆசிரியர் சுந்தரராமன் பேச்சு, போக்கு… மனசுக்குள் கஷ்டமாக இருந்தது தணிகாசலத்திற்கு.

இரவு 8. 00. மணிக்கு மேல் வீட்டை வீட்டுக் கிளம்பி… ஊரின் ஒதுக்குப்புறமாய் இருக்கும் காமராசர் உயர்நிலைப்பள்ளி கட்டிட வளாகம் காம்பவுண்ட் சுவருக்குப் பக்கத்தில் அமர்ந்தார்.

இந்தப் பள்ளி மென்மேலும் நல்லப் பெயர் எடுக்க வேண்டுமென்கின்ற எண்ணத்தில் இந்தப்பள்ளிக்கு மூத்தவன், முதலாமானவன் என்கிற முறையில் தலைமை ஆசிரியர் அறையில் நுழைந்து…

” சுந்தரராமன் சார். ஒரு சின்ன யோசனை. அறிவியல் பாடம் நடத்துற சிவசுப்ரமணியமும், கணக்கு வாத்தியார் கனகலிங்கமும் புள்ளைங்களுக்குப் பாடம் நடத்துற விதம் சரியில்லே. சிவசுப்ரமணியத்தைப் பழையபடி கணக்கும், கனகலிங்கத்தை அறிவியலும் எடுக்கச் சொன்னால் பசங்களுக்கு நல்லா நடத்துவாங்க என்கிறது என் கணிப்பு. அவுங்க அந்தந்த பாடத்துலதான் படிச்சு பட்டம் வாங்கி இருக்காங்க. அவுங்களை மாத்தி எடுக்கச் சொன்னதுதான் குழப்படி, தப்பு.! ”

சொல்லி முடித்த அடுத்த வினாடி. ..

” மிஸ்டர் தணிகாசலம் ! ” சுந்தரராமன் குரல் கொஞ்சம் கோபமாக வெளி வந்தது.

தன் வயசுக்குக் கூட மரியாதை கொடுக்காமல் இப்படி பேர் சொல்லி அழைப்பான் என்று இவர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

ஏன். …?….. இந்த கிராமத்தில் இவரை எவரும் இப்படி பெயர் சொல்லி அழைத்ததில்லை. அந்த அளவிற்கு அவருக்கு இங்கே மதிப்பு மரியாதை.

” வாத்தியார் ஐயா ! ” தான். – இங்குள்ள மக்கள் அனைவருக்கும் ஒரே குரல்.

அப்படி இவரும் நடந்து கொண்டார்.

ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு… ஆனா ஒரு ஓலைக்குடிசைப் பள்ளிக்கு இவர் வேலைக்கு வரும்போது வயசு 22.

வகுப்பில் பத்தும் பத்தும் இருபதே பிள்ளைகள். ஊருக்கு ஒதுக்குப் புறம் பெரிய ஆலமரத்தருகில் கொட்டகை. அது என்னவோ புதிதாதகத்தானிருந்தது. இவர் நல்ல விதமாய் பாடம் நடத்தி, பிள்ளைகள் ஆர்வமாய் படிக்கும் அழகைப் பார்த்ததும் பத்து நாட்களில் வீட்டிற்கு ஒரு பிள்ளையாய் வந்து ஐம்பத்தைத் தொட்டுவிட்டார்கள்.

மக்களின் படிப்பு ஆர்வத்தைப் பார்த்து இவர் மனசுக்குள் ஆடிப்போனார்.

இவர்… இனி சமாளிக்க முடியாது என்கிற நினைப்பில் பள்ளியை இன்னும் விரிவாக்க ஏற்பாடுகள் செய்தார். ஊர் மக்களிடம் பள்ளியின் குறை, கஷ்டத்தைச் சொல்லி, ஊர் பெரிய மனிதர்கள் நாலு பேர்களை அழைத்துக் கொண்டு கல்வி உயர் அதிகாரிகள், அமைச்சர்களைப் பார்த்தார். அவர்கள் வகுப்புகளை ஒன்றிரண்டு உயர்த்தவும், கட்டிடம் ஒன்று கட்டவும் அனுமதி அளித்தார்கள்.

தணிகாசலத்திற்குத் திருப்தி இல்லை.

அக்கம் பக்கம் ,அசலூர்…. பெரிய மனிதர்களையெல்லாம் பார்த்து நன்கொடை வசூல் செய்தார். வசூல் தொகையில் கட்டிடங்களை அரசாங்க அனுமதியுடன் காட்டினார்.

பள்ளி வளர வளர….. அவரும் இந்த ஊரில் வேரூன்றி, கல்யாணம் காட்சி முடித்து, ஒரே ஒரு மகனுக்கும் தகப்பனானார். அவன் இன்றைக்கு சென்னையில் பெரிய வேலையிலிருக்கிறான்.

ஊரின் படிப்பாளி, பள்ளி முன்னேற்றத்திற்கு நல்ல உழைப்பாளி என்பதால் ஊரார் மதித்தார்கள். நல்லது கெட்டததெற்கெல்லாம் கலந்து ஆலோசித்தார்கள். ஏன். . இந்த பள்ளிக்கூடத்திற்கு அவர் பெயரை வைப்பதற்கும் எல்லோருக்கும் விருப்பம். இவர்தான் மறுத்து காமராசர் பெயரை முன் மொழிந்தார்.

வகுப்புகள் ஐந்து, ஆசிரியருக்கு ஐந்து என்கிற அளவிருக்கும்வரை வகுப்புகளுக்குப் பாடம் எடுத்துக் கொண்டு தலைமை ஆசிரியராய் இருந்து நிர்வாக வேலைகளையும் சரிவர செய்தார். உயர்நிலையைத் தொட்டதும் அதற்குத் தகுந்த ஆளான சுந்தர்ராமன் வர கழன்றார்.

பள்ளி விளம்பரத்தைப் பார்த்து எங்கிருந்தோ வந்து தலைமை பொறுப்பை ஏற்றவன் நடவடிக்கைகள் சரி இல்லை. தனக்கு நிர்வாகம் தெரியும் என்கிற இறுமாப்பில் கணக்கு அறிவியல் பாடங்களை எடுத்துக் கொண்டிருந்த சிவசுப்ரணியம், கனகலிங்கத்தை மாற்றி மாற்றி எடுக்கச் செய்தான். அப்புறம் நிவாகத்தில் கோளாறு. தணிகாசத்திடமும் மதிப்பு மரியாதை இல்லை. அதோடு விட்டாலும் பரவாயில்லை.

” இவர் பள்ளிக்கூடத்திற்கு பழைய ஆள், ஊர்ல மதிப்பு, மரியாதை உள்ளவர் என்கிறதுக்காக தலையில் தூக்கி வச்சு ஆடணுமா, எனக்குன்னு சுய புத்தி இருக்கு. அதன்படி வேலை செய்வேன். பள்ளிக்கூடத்தைப் பொறுத்தவரைக்கும் நான் தலைமை. அவர் எனக்கு கீழ் வேலை செய்யற சகா தொழிலாளி.”

இந்த கிழவனுக்குப் பொண்டாட்டி போய் சேர்ந்தாச்சு. புள்ளையும் பெரிய படிப்பு படிச்சு நல்ல உத்தியோகத்தோட சென்னையில் குடும்பமாகிட்டான். மகனுக்குத் துணையாய் போய் நிம்மதியாய்க் காலம் கழிக்காம எதுக்கு இந்த ஊர்ல அனாதையாய்க் கிடந்தது கஷ்டப்படனும்..? மனுசர் இந்த ஊர்ல மதிப்பு மரியாதையில் மயங்கி கிடக்கார். புகழ் போதை மனுசனை போக விடமாட்டேன்குது. ”

பள்ளியில் யார் யாரிடமோ இதே பேச்சு. எவர் வந்து சொல்லாமலிருப்பார்கள். .? !

தணிகாசலத்திற்கு மகனுடன் இருக்க ஆசையே இல்லை. இவ்வளவிற்கும் அவன். …

” கிராமத்துல யார் துணையுமில்லாம் ஏம்ப்பா கஷ்டப்படுறீங்க. .? இங்கே மருமகள் சமைச்சுப் போட. .. பேரன், பேத்திகளைப் பார்த்துக்கிட்டு நிம்மதியாய் எல்லோரும் ஒண்ணா இருக்கலாம். வாங்க. ..” – என்றுதான் அழைக்கிறான்.

இவருக்கு இஷ்டம் இருந்தால்தானே போகமுடியும். .?

கிராமம், பிறந்த மண் மாதிரி இவரை ஒட்டிக்கொண்டுவிட்டது. இந்த மக்கள் சகோதர சகோதரிகளாய் மாறி விட்டார்கள்.

‘ உயிரை இங்கே விட்டுவிட்டு உடலை அங்கு கொண்டு போவானேன். .? ! மேலும் தெரியாத இடத்தில் முகமறியாமல் எவருக்கும் உபயோகமில்லாமல் செத்துப் போவதில் என்ன லாபம். .?! ‘ விட்டு விட்டார்.

அப்படிப்பட்டவரை பெயர் சொல்லி அழைத்தால் எப்படித் தாங்கும். .?

சுந்தரராமனுக்கு ஏன் நம்மைக் கண்டால் பிடிக்கவில்லை. .? இந்த ஊர் மக்களுக்குப் பிடித்த முகம், குணம் அவனுக்கு மட்டும் பிடிக்காமல் போகக் காரணம். .?! தன்னை ஊர் கொண்டாடுவது அவனுக்குப் பிடிக்கவில்லையா. .? அதனால் வெறுக்கின்றானா. .?!

” நீங்க என் நிர்வாகத்துல தலையிட வேணாம். எனக்கு கீழதான் நீங்களே தவிர உங்களுக்குக் கீழே நான் இல்லே. இந்த பள்ளியை வளர்த்தத்துக்காக நான் உங்களைக் கொண்டாட முடியாது. அது என் வேலையுமில்லே. ஊர்ல உங்களுக்கு மதிப்பு மரியாதைன்னா. . அது வெளி விசயம். இங்கே தலை நீட்ட வேணாம். ” கறாரான பேச்சு.

இது புகழ் பொறாமைதான் ! – தணிகாசலத்திற்குத் தெளிவாகத் தெரிந்தது.

” மன்னிச்சுக்கோங்க சார். ஏதோ நான் வயசானவன் சொன்ன நீங்க கேட்பீங்கன்னு நெனைச்சு உங்ககிட்ட அளவுக்கு அதிகமா உரிமை எடுத்து பேசிட்டேன் தப்பு. ” வெளியே வந்தார்.

இப்படித்தானே வரமுடியும். .? வேற வழி. .? சண்டை போட்டால் அசிங்கம். வயதில் மகன் மாதிரி இருந்தாலும் அதிகாரி அதிகாரிதான்.!!

” புதுசா வந்த வாத்தி உங்களை மதிக்காம என்னென்னெமோ பேசிக்கிட்டிருக்கானாமே. .நிசம்ன்னா சொல்லுங்க அவனை உதைக்கிற உதையில் ஓட வைக்கிறோம். அஸ்திவாரம் தெரியாம ஆட்டம் போடுறவனை சும்மா விடலாமா. .? நீங்க இந்த பள்ளிக்கூடத்தை இந்த அளவுக்கு வளர்த்து விடலைன்னா. .. அவனால் இங்கே பெரிய வாத்தியாராக வந்து உட்கார முடியுமா. .?” – மக்கள் இவன் சொன்னதை அரசல் புரசலாக காதில் வாங்கிக் கொண்டு கொதிப்பிலிருக்கிறார்கள்.

இதுவும் தெரிந்தால் எரிகிற தீயில் எண்ணெய். தணிகாசலத்திற்கு நினைக்க நெஞ்சு நடுங்கியது.

இது அவர் சொந்த வீடு. ஒட்டு வீடுதான். ஒரு புருஷன், பெஞ்சாதி, பிள்ளை வாழ்கிற அளவிற்கு சின்ன வீடு. உழைப்பில் செங்கல் செங்கல்லாகக் காட்டியது. இதில் ஊர் மக்கள் உற்சாகம் உழைப்பும் ஏராளம்.

” எங்க வாத்தியார் வீடு ! ” உரிமையுடன் வந்து கூலி வாங்காமல் உழைத்தவர்கள் அநேகம். அவர்கள் அன்புக்கு முன்னெல்லாம் இந்த மான அவமானங்கள் தூசு !’

என்ன செய்யலாம். .? வேண்டாத இடத்தில் விருந்தாளியாகக் கூட எப்படி இருக்க முடியும். .?

‘ என்னதான் பெற்று வளர்த்து ஆளாக்கி விட்டாலும் மகன் மருமகள் குடும்பத்தில் போய் அது சரி இல்லை, இது சரி இல்லை என்று தலையிடுவது எப்படி முறை. .? எந்த விதத்தில் நியாயம். .? பிள்ளை தவறைப் பார்த்து பெற்றவர் பார்த்து மனம் துடிக்கத்தான் செய்யும். சொல்லி ஏற்றுக் கொண்டு புத்தி கற்றுக் கொள்ளும் பிள்ளையாய் இருந்தால் சரி. பிரச்சனை இல்லை. என் வீடு, நான் அப்படித்தான் இருப்பேன், செய்வேன்! என்று கேட்காத பிள்ளையாய் இருந்தால் பிரச்சனை. அடிபட்டுதான் புத்திக் கற்றுக் கொள்ள வேண்டும். !

முதல் நாள் எடுத்த முடிவின்படி தன் ராஜினாமாக் கடிதத்தைச் சுந்தர்ராமனிடம் கொடுத்தார்.

வாங்கிப் படித்தவன் முகத்தில் அதிர்ச்சி இல்லை . மாறாக மெல்ல புன்னகை புரிந்து….

” சரி ! ” சொல்லி மேசை மீது வைத்தான்.

‘ எந்த அளவிற்கு தன்மீது ஆத்திரமிருந்தால் கொஞ்சம் கூட வருத்தப்படாமல் புன்னகை புரிந்து அங்கீகரிப்பான் ! ‘ – தணிகாசலத்திற்கு அந்த இடத்தில் வினாடி நேரம் நிற்க சம்மதமில்லை. உடனே வெளியேறினார்.

சத்தம் போடாமல் வந்து சென்னைக்குச் செல்ல வேண்டிய ஏற்பாடுகள் செய்தார்.

” வாத்தியார் ஐயா! நாங்க கேள்வி பட்டது நிசமா. .? ” ஆத்திரமாய் ஏழெட்டுப் பேர்கள் வீட்டிற்குள் நுழைந்து விட்டார்கள்.

” அப்படியெல்லாம் ஒண்ணுமில்லே. மகன் வரச் சொல்லி ரொம்ப வற்புறுத்துறான். பெத்த புள்ளைக்கு வருத்தம் வரக்கூடாதுன்னு கிளம்புறேன் ! இந்த வீட்டை நான் இந்த கிராமத்துக்கேத் தர்றேன். வாத்தியாரைக் குடி வச்சு வாத்தியார் வீடு வாத்தியார் வீடாய் இருக்கனும் ” சொன்னார்.

வந்தவர்களுக்குப் பேச நாயெழவில்லை.

வாத்தியார் இரண்டு நாள் கழித்து முட்டை முடிச்சுகளுடன் ரயில் நிலையம் வந்தார். அவரை வழியனுக்குப் ஊரே திரண்டிருந்தது.

ரயில் புறப்பட இருக்கும் கொஞ்ச நேரத்திற்கு முன்தான் அந்த அதிசயம் நடந்தது.

எங்கிருந்தோ வந்து சுந்தரராமன் அவர் முன் தோன்றினான்.

” ஐயா ! நானும் உங்க மகனும் கல்லூரி நண்பர்கள். வேலையில சேர்ந்த புதுசுல நான் சென்னையில அவனை சந்திச்சேன். ‘அப்பா ஊரை நினைச்சு என்னை மறந்துட்டார். இந்த தீபாவளிக்காவது அப்பா சென்னைக்கு வருவார்னு என் குடும்பமே எதிர்பார்த்துக்கிட்டிருக்கு. ஆனா வருவாரா என்பதுதான் கேள்வி குறியாய் இருக்கு !’ சொல்லி வருத்தப்பட்டான். உங்களை அவனிடம் அனுப்பத்தான் உங்களை மதிக்காதது மாதிரி தப்பு தப்பா நடந்துக்கிட்டேன். என்னை மன்னிச்சுங்கைய்ய்யா ! ” சொல்லி காலில் விழுந்தான்.

கூட்டம் வியக்க. .. தணிகாசலம் ஒரு வினாடி திகைத்து பின் சுதாரித்து சுந்தரராமனை. ..

” மகனே. ..! ” என்று வாரி எடுத்தார்.

அனைவரின் முகங்களிலும் மலர்ச்சி !

Print Friendly, PDF & Email

1 thought on “தணிகாசலம்…!

  1. நல்ல முடிவுதான். ஆனால் ஒரு அப்பாவின் உண்மையான விருப்பங்களை நிறைவேற்றுவதுதான் ஒரு பிள்ளையின் கடமையெ தவிர, குறுக்கு வழிகளைக் கையாண்டு தம் விருப்பங்களை நிறைவேற்றுவது நல்லதல்ல!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *