தங்கராசு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 26, 2012
பார்வையிட்டோர்: 6,384 
 

தங்கராசு மூச்சிறைக்க ஓடிவந்தான். உலையில் போடுவதற்கு அரிசியைத்தேடிக்கொண்டிருந்த அஞ்சலை மகனின் குதூகலத்தைக் கண்டு, “இன்னாடா தங்கராசு… இம்புட்டு குத்தாட்டம் போட்டுட்டு வரே சீமான் வூட்டூப்புள்ளமாதிரி கண் ரண்டும் பளபளக்குது?’ என்று கேட்டாள்.

மேல்மூச்சு வாங்க தங்கராசு தன் நிஜாரின் பட்டியை சரசெய்தபடி, “அம்மா உனக்கு விஷயமே தெரியாதா? குடிசைய விட்டு வெளில வாம்மா…. வானத்தப்பாரு… வா! வா!” என்றான் உரத்தகுரலில் மகிழ்ச்சி கொப்பளிக்க.

“தங்கராசு…. வானம்பாத்தபூமியா நம்ம ஊருதான் பலவருஷமா கிடக்குதே… இதுல நான் வேற அதப் பாக்கணுமா? சம்பாதிக்க துப்பில்லாம குடிச்சி குடிசை ஓரமா படுத்துக்கிடக்குற உங்கப்பனை அழைச்சிட்டுப்போயி அந்த வானத்தக்காட்டு…இந்த ஆளைக் கட்டிக்கிட்ட நாளுமுதலா என் தல குனிஞ்சிபோச்சிப்பா…அது நீ தல எடுத்துதான் நிமிரணும்”

“அம்மா! நம்மஊருக்கு விடிவுகாலம் வந்திடிச்சிம்மா… வூரு வாழ்ந்தா நாம வாழலாம்னு பள்ளிக்கூட வாத்தியார் சொல்வாரு. ஆமாம்மா… சீக்கிரம் வெளிலவந்து வானத்தப்பாரு.. கருத்திட்டு வருதும்மா வானம்!”

“மெய்யாலுமா சொல்ற தங்கராசு? அடி ஆத்தீ! மகமாயீ! மனசு வச்சியாடிதாயே? மள பொளிய மனசுவச்சியா மகராசீ?” உற்சாகக்குரலோடு அஞ்சலை வாசலுக்கு வந்தாள்.

என்ன அதிசயம்! ஏழுவருஷத்துக்கு மேலாய் மாலைப்பொழுதுகளில் நிறம்மாறாத நீலவானம் இன்று கருத்துக்கிடக்கிறதே! இடிச்சத்தம் வேற… வானத்தின் புருவ நெறிப்பாய் மின்னல் வந்துவந்து போனது!

பகலிலும் இரவிலும் உஷ்ணக்காற்ரையே வீசிக்கொண்டிருந்த தெருவில் லேசான குளிர்மிதந்துவரவும் சேரித் தெருகுடிசை ஜனங்கள் மொத்தமும் வாசலுக்கு வந்துவிட்டது.

“மாரியாத்தா இந்தவாட்டி ஏமாத்திடாதிடிமா… பெருமளை பெஞ்சி ஊரையும் எங்கமனசையும் குளிர்வைக்கணும்தாயே” எதிர்க்குடிசை ராக்காயிகிழவி வாய்விட்டுக்கத்தினாள்

“வயலு கிணறு எல்லாம் வறண்டுகிடக்கு..மரம் செடியெல்லாம் வாடிவதங்கிக் கிடக்கு குடிக்கத்தண்ணி இல்லாம ஊரே நாறிட்டு கிடக்குறதுக்கு விமோசனம் வந்திடிச்சா?”

“மளை வந்தா மண்மட்டுமில்ல எங்க நெஞ்சும் நனையும்! ”

ஆளாளுக்கு குரல்கொடுத்தபோது ஊரில் ஒரே ஒருவன் மட்டும் மழையை சபித்தான். வானத்தை நோக்கி இடியாய் உறுமினான். அவனுடைய நிலத்துக்கிணற்றில் மட்டும் வற்றாத நீர் உண்டு. ஆனால் அதை அவன் விலைக்கு விற்பான், அதுவும் ஏழைபாழை என்று பார்க்காமல் அதட்டி உருட்டிக்காசு கேட்பான். ஒரு குடத்துக்கு ஒரு ரூபாய். தவிச்சவாய்க்கு இலவசமாய் தண்ணீர் தராத பாதகன். நவரத்தினங்களில் உயர்ந்த மாணிக்கம் என்கிற பெயரைவைத்துக்கொண்டு கீழ்த்தரமான புத்தியோடு அலைபவன். பணம், பணம், பணம். அது ஒன்றே அவன் குறிக்கோள்! இப்போது மழைபெய்து ஊருக்கு நன்மை செய்ய இருப்பதைப்பார்க்க பற்றிக்கொண்டுவந்தது மாணிக்கத்துக்கு.

தப் தப்..

நீர்ச்சொட்டுக்கள் சாலையில் விழுவதை சேரிக்கூட்டம் முழுவதும் ஆனந்தமாய் பார்த்தது.

“யே சாமி! ஈர மண்ணு வாசம் ! ஹ்ம்ம்… எத்தினி நாளாச்சு அனுபவிச்சி?”

அஞ்சலை மூக்கை இழுத்து சுவாசித்தாள்.

“அம்மா! நான் இந்த மளைல நனைஞ்சிகிட்டே நம்ம ஊரை ஒரு சுத்து சுத்திட்டுவரப்போறேன்”. தங்கராசு மேல்சட்டை அணியாத எலும்பு துருத்தி நிற்கும்திறந்த மார்போடு தெருவில் நடக்க ஆரம்பித்தான்.

“பாத்துடா மகனே! சளிபிடிக்கபோவுது…. சீக்கிரமா வீடுதிரும்பிவா… நான்போயி அரிசி தேடி இந்னிக்கு அரிசிசோறுவச்சி மளையக்கொண்டாடறேன்”

‘அஞ்சலை! இனிமேட்டு நாம மணிக்கம் வீட்டுக்கிணறுக்கு காசுகொடுத்து தண்ணீ சேந்தப்போகவேணாம்… ஓடைலநீரு வந்திடும் வெள்ளமா வந்திடும்”

“ஆமாடீ பெரமாயி!… இந்தமழை வலுத்து பெஞ்சா நம்ம ஊரு வாய்க்காலு – அதான் – காஞ்சிகிடக்கிற – ஓடையும் நீரை உறிஞ்சிக்கிட்டு நெரம்பிடும்…. ஒருமளை வந்தா தொடர்ந்து பருவமளை வந்திடுமாமுல்ல?”

“அந்த படுபாவி மாணிக்கம் அதர்மமா காசு பிடுங்கறான்… முன்னே குடத்துக்கு எட்டணா வசூலிச்சவன் இப்போ என்னடான்னா ஒத்தரூபா ஆக்கிட்டான்… பத்து ருபா ஆகுது குடிக்க குளிக்க கொள்ள ஒருநாளுக்கு… நமக்கெல்லாம் இது கட்டுப்படி ஆவுதா?.. அவன் நெஞ்சுல ஈரம் இருந்தா இந்த அக்குரமம் நடக்குமா?அவன் கொட்டத்த அடக்கத்தான் வருணபகவான் வந்துருக்கணூம்”

“நாசமாப்போறவன்… நெஞ்சுல ஈரம் இல்லாத அவன் மண்ணுலமட்டும் அபூர்வமா ஈரம்.. அவன்கிணறுலமட்டும் தண்ணருண.. அதான் ஆணவம் அவனுக்கு…. இனி அது நடக்காது,”

அஞ்சலையும் பெரமாயியும்பெருமுச்சு விட்டு நகர்ந்தனர்.

மாரிமுத்து வாயில் நுரைதள்ளும் மாடுகளை ஓட்டியபடியே. “ஏ சின்னாத்தா! அருக்கஞ்சட்டிய எடுத்தா…மளைநீரப்புடிக்கலாம்… மாடுகன்னுங்க நல்லா குடிக்கட்டும் பாவம்” என்றான்.

“ஐஸ்வர்யாகுட்டி.. மளை பாக்கணும்னியே பாரு பாரு…சின்ன தூறலாஆரம்பிச்சி பெருசாயிட்டெ போவுதுபாரு இதான் மளை” செண்பகம் தன் மூணுவயது மகளுக்கு மழையை அறிமுகப்படுத்தினாள்.

“காத்தான் மளைத்தண்ணில கப்பல் விடலமாடா?” சிறுவர்கள் தொப்பலாய் நனைந்தபடி ஆட்டமாடத் தயாரானார்கள்.

சேரி முழுதும் களிப்பில் மிதக்க கடுப்பில் தவித்தான் மாணிக்கம்.

மேலத்தெருவில் அவன் வீட்டில் வெறிபிடித்தவன் போல குறுக்கும் நெடுக்குமாய் நடந்தான்.

எது நடக்காது என்று நினைத்தானோ அது நடந்துவிட்டதே? இனி யாரும் தன் கிணறுக்கு தண்ணீருக்குக் கை ஏந்திவரமட்டார்கள் என நினைக்கும்போதே எரிச்சலானது.

அதட்டி உருட்டி அதிகாரமாய் அவர்களிடம் காசுபெற்றதெல்லாம் இனி கனவாகிவிடுமா?

“அப்பா” கூவிக்கொண்டு வந்தாள் அவன்செல்லமகள் வசந்தராணி.

“என்னம்மா ராணி?”

“அப்பா… மழைநீர்ல கப்பல் விடணும்….காகிதக்கப்பல் செஞ்சிதாங்கப்பா”

“என்ராணிக்கு நெசக்கப்பலே தருவேன் கண்ணு”

“இப்பொ கப்பலு வேணுமே?” மேலே விழாத குறையாய் அவனிடம் இழைந்து நின்று கெஞ்சினாள் ராணி.

“இரும்மா கொஞ்சம்,,இடி மழை மின்னலுன்னு வானம் என்னவோ கொக்கரிக்குது… சனியன், கிணறுபக்கம் போய்வரணும். அதை கவனிச்சிட்டுவரேன்..” என்று மகளை உதறிவிட்டு வெளியேவந்தான்.

வெளியே வந்ததும் சிறிது தொலைவில் இருந்தஓடையைப்பார்த்தான் .இதுநாள்வரை காய்ந்தமண்ணாய் கிடந்தது, இப்போது மழைநீரில் மிதக்க ஆரம்பிப்பதை பார்த்தான். சாடை சாட்டையாய் மழைக்கொத்துகள் நிலத்தில்விழுந்து தெறித்தன.

“ஐயோ… ஓடைல தண்ணி மிகுந்துபோயிட்டா ஊர்சனம் எல்லாம் அங்கபோயிடும்…ஒருபயகாசு கொண்டு நீர்வாங்கமாட்டானுக. நல்லவேளையா என் கிணறு ஓடைபக்கம்தான் இருக்கு.. ஓடைக்குவர்ர நீரெல்லாம் என்கிணறுக்கு வர்ரமாதிரி திருப்பி விட்டுடணும். முதல்ல இதைசெய்யணும்..”

மறுபடி விடுவந்து மண்வெட்டியை தூக்கி தோளில் போட்டுக்கொண்டான். தலைமீது பெரிய கோணிசாக்கினை பரப்பிக்கொண்டு சொட்டசொட்ட நனைந்தபடி திரும்ப ஓடைநோக்கிநடந்தான்.

“அப்பா காகிதக்கப்பலூஊஉ” ராணி கூவலாய் கேட்டதை காதில் வாங்காமல் நடந்தான்.

அவன் மனைவி வேறு ஊரிலில்லை. இருந்தால் அவள், நீதிதர்மம் நியாயம் என புலம்புவாள். அவள் இல்லாததும் நல்லதாயிற்று என நினைத்தபடி நடையை துரிதமாக்கினான்.

‘மழை பொதுதானே அது ஓடைலபெய்தா அதை என்கிணறு பக்கம் திருப்பிவிட்டுக்கிட்டா யாரு என்னசொல்லுறது ஆங்? ஓடையே என் நிலத்துலதான் அடக்கம்… இவ்வளோநாளா காஞ்சிகிடந்ததால அது ஓடைனு யாருக்கும் தெரியல… இப்போ என்னவோ பருவப்பொண்ணு மாதிரி துள்ளிக்கிட்டு சிலுப்பி வருது… விடுவேனாநான்?’

“அப்பா! கப்பலு செய்துதராம போயிட்டீங்கப்பா” சிணுங்கினாள் ராணி திண்ணைக்குவந்து உட்கார்ந்துகொண்டாள்.

அப்போது தெருவில் மழையில்நனைந்தபடி நடந்த தங்கராசுவைப்பார்த்தாள்.

“தங்கராசு?”

அவன் சட்டென் நின்றான்.

“தங்கராசு எனக்கு கப்பலு செஞ்சிதரியா?”

தங்கராசு பெருமையாய் தலை ஆட்டினான்.

“காகிதம் இருக்குதா? நான் இப்படி உங்கவீட்டுதிண்ணைல உக்காந்திட்டு செய்துதரலாமா? உங்கப்பாரு பார்த்தாருன்னா சத்தம்போடுவாருல்ல?” என்றான் தங்கராசு பயந்த குரலில்.

“அப்பாரு கிணறுபகம்போயிருக்காரு… வர நேரமாகும்… அதுக்குள்ள நீ செஞ்சிடு தங்கராசு… இந்தா பேப்பரு”

“சரி கத்திக்கப்பலா சாதாகப்பலா?”

“கத்திக்கப்பலுதான்”

தங்கராசு தாளை சதுரமாய் கிழித்தபடி அவளிடம், “ஆமா… நீ இப்போ டவுன் பள்ளிக்கூடமா போவற ராணி?” எனக்கேட்டான்

“ஆமா இங்கிலீஷ் மீடியம்.. அஞ்சுகிளாஸ் வந்திட்டேன்னு அப்பா அங்க கொண்டு சேர்த்துட்டாரு. ஆனா எனக்கு நம்ம ஊரு பள்ளிக்கூடம்தான் இன்னமும் பிடிச்சிருக்கு… நீயி, சுந்தரி, செந்திலு, லதா, சுமதி எல்லாரும் இங்கதான் இருக்கீங்க… நாமல்லாம் பள்ளிக்கூடத்துல நல்லா விளையாடுவோமே”

“ஆமா… இப்போவும் நாங்கள்ளாம் வெளயாடறோம்” சதுரத்தாளைமடித்து திருப்பி செருகி மறுபடி இழுத்து கத்திக்கப்பல் செய்துமுடித்தான் தங்கராசு.

“தாங்க்ஸ் தங்கராசு” ராணி முகமெல்லாம் பூரிக்க கப்பலை வாங்கிகொண்டாள்.

தங்கராசு தெருவில் இறங்கி மழையில் குளித்தபடி நடந்தான்.

தங்கராசு, பெரிய அந்தக்கிணறு அருகே வந்தபோது திடுக்கிட்டு நின்றான். அங்கே மாணிக்கம் மண்வெட்டியால் ஓடைநீரின் பாதையை முற்றிலும் கிணறு நோக்கித்திருப்பிக்கொண்டிருந்தான்.

“ஐயா… ஓடைநீரை ஏன் திருப்றீங்க. அது இருந்தா ஊருமக்களுக்கு குடிநீருக்கு ஆகுமில்ல? அதை நம்பி நாங்க எல்லாரும் இருக்கோம். நீங்க இப்போ அதை உங்க கிணறுபக்கம் தள்ளறது நியாயாமாங்க?”

கதறினான் தங்கராசு.

மழைநீர் நெற்றியிலிருந்து கன்னம் வழியே உடம்பில் வெள்ளமாய் வழிவதை அலட்சியமாய் விரல் நுனியில் தள்ளியபடி நிமிர்ந்த மாணிக்கம் தங்கராசுவை புழுவைப்பார்ப்பதுப்போல ஏறிட்டான். பிறகு, நியாய அநியாயமெல்லாம் எனக்குத் தெரியும் போடா போக்கத்தப்பயலே… ஒரு வார்த்த பேசினே மகனே மம்முட்டில தலைல ஒரே போடு.. ஆம்மா?” என்று சீறினான்.

தங்கராசு பயந்து ஓடிவிட்டான்.

இடியும் மின்னலும் அதிகரித்தன. சதக் சதக் என்று மழைநீர்பாய்ந்த மண்ணை மண்வெட்டியில் கூறு போட்டு பாதை அமைத்து தன் கிணறு நோக்கி நீர் ஓடுகிறமாதிரி செய்தான். வெற்றிக்களிப்பில் சிரிப்பு வர “ஹஹ்ஹா முடிச்சிட்டேன்” என்று கூவினான். அப்போது இடிஒலியினூடேநெளிந்த ஒளியில் மின்னல் ஒன்று கிணறைஒட்டிய ஒருபச்சைமரத்தின்மீது வந்துவிழுந்து அதைத்தாக்கியது

சிலீர் என் கன்ணாடிஉடைந்த ஒலி.

“அப்பாஆஆஆஆஆஆஆ”

தீனமான அலறல்கேட்டு மண்வெட்டியை அப்படியே கிழேபோட்டு ஓடினான் மாணிக்கம். அங்கே கரிக்கட்டையாய் கிடந்த உருவம் பார்த்து

“ராணீஈஈஈ” என வீறிட்டான்.

மழைநீரில் காகிதக்கப்பல் ஒன்று திசை தெரியாமல் ஓடிக்கொண்டிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *