‘டை’ அணிந்தவன் கணேசன் இல்லை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 24, 2014
பார்வையிட்டோர்: 12,137 
 
 

என் கைப்பேசியின் பெயர் பட்டியலைத் திறந்து ‘ G ’ எழுத்தைத் தட்டினால் மூன்று கணேசன்கள் வந்து வரிசை பிடித்து நிற்கின்றனர். முதலாவது கணேசன் என் மகளின் டியூசன் ஆசிரியர். ‘வாவாசான் இன்டெலெக்’ டியூசன் சென்டரை நிர்வகிக்கிறார். இரண்டாவது கணேசன் என் பழைய தோழன். ஆரம்ப பள்ளியில் இருந்து பழக்கமானவன். மூன்றாவது கணேசன் யாரென்று தெரியவில்லை. எப்போதோ பதிவு செய்த அந்த நபரை ஞாபகப்படுத்த முடியவில்லை.

இன்று காலை நான் பக்சன் பேரங்காடியில் நீண்ட இடைவெளிக்குப் பின் திடீர் என்று சந்தித்தது இரண்டாவது கணேசனை. அதாவது என் பள்ளித் தோழனை.

அப்போதைய அவன் தோற்றம் சட்டென மனதில் வந்து நிற்கிறது. தலையில் முடி குறைந்து இடுப்பின் விட்டம் கூடி காணப்பட்டான். தனியாகத்தான் இருந்தான். டைகள் விற்கப்படும் பகுதியில் அவன் நின்றிருந்தான். நான் அவனை சட்டென நெருங்காமல் தவிர்க்கவும் அதுவே காரணம் ஆனது. ஒவ்வொரு டையாக எடுத்து நீவி தடவிக்கொடுத்து ரசித்துக் கொண்டிருந்தான். ஒரு விற்பனைப் பணிப்பெண் அவனுக்கு உதவி செய்து கொண்டிருந்தாள்.

தூரத்தில் நின்று கணேசனின் அசைவுகளை மட்டுமே பார்த்தபடி இருந்தேன். கணேசன் எனக்கு முதுகைக் காட்டிக் கொண்டு டைகளை தேர்வு செய்யும் பணியில் தீவிரம் காட்டிக் கொண்டிருந்தான். அவனது தீவிரம் சட்டென, பல ஆண்டுகளுக்கு முன் என் கண்களைப் பார்த்து தீவிரமாக பேசும் கணேசனை ஞாபகத்திற்கு கொண்டுவந்தது. அவன் பேசிய காட்சிகள் குபீரென பொங்கிய புணலாக பெருகிக் கொண்டு இருந்தன.

அதே நொடியில் பக்சன் பேரங்காடி மெழுகாய் உருகி கரைந்துபோனது. பேரங்காடி மறைந்த வெறுமையில் சீன இடுகாடுகாட்டிற்கு பின்புறம் சாயம் வெளுத்த சிறிய தமிழ்ப்பள்ளி ஒன்று எழுந்து நின்றது.

நான்காம் வகுப்பு ஆரம்பமாகி சுறுசுறுப்பாக போய்க்கொண்டிருந்த போது இரண்டு திடீர் சம்பவங்கள் நிகழ்ந்தன. முதலாவதாக, பிப்ரவரி மாதம் கணேசன் புதிய மாணவனாக வகுப்பில் சேர்ந்தான். தெலோக் இந்தானில் இருந்து மாற்றலாகி வந்திருந்த அவன் என்னை விட கெட்டிக்காரனாக இருந்தான். அடுத்தது, மார்சு மாதம் திரு.ராஜேந்திரன் பள்ளியின் புதிய தலைமையாசிரியராக நியமிக்கப்பட்டார்.

வழக்கமான ஈர்ப்புகளை விட திரு. ராஜேந்திரன் மேல் மாணவர்களாகிய எங்களுக்கு அதிகப்படி ஈர்ப்பை உண்டாக்கியது அவர் கட்டி வரும் அழகிய டைகள்தாம். அவர் ஒரே நிற டைகளை கட்டுவதில்லை. அதேப்போல் கட்டம், கோடுகள், சிறிய புள்ளிகள், வட்டங்கள் போன்ற டிசைன்கள் உள்ள டைகளையே அவர் அணிவது எங்களைக் கவர்ந்தது. அதற்கு முன் டை கட்டிய மனிதரை அவ்வளவு நெருக்கத்தில் நாங்கள் பார்த்ததில்லை.

ஓரிரு மாதங்களிலேயே பள்ளியின் நான்கு ஆண் ஆசிரியர்களும் டை கட்டி வர ஆரம்பித்தனர். எங்களுக்கு டை மீதான ஈடுபாடு அதிகரித்தது. அதற்கு ஏதுவாக தலைமையாசிரியர் பள்ளியின் சட்டாம்பிள்ளைகள் கருநீள நிற டை கட்ட வேண்டும் என்னும் புதிய விதிமுறையைக் கொண்டு வந்தார். அவ்வகையில் பள்ளிக்குள் புதிய பண்பாட்டு புரட்சி ஒன்றைக் கொண்டுவந்தவர் தலைமையாசிரியர் ராஜேந்திரன் என்று துணிந்து கூறலாம்.

டை அணியும் முறை தெரியாமல் நாங்கள் விழித்த போது, ராஜேந்திரன் சாரே, எங்களுக்கு டை அணியும் முறைகளைச் சொல்லிக் கொடுத்தார். சாதாரண முறை தொடங்கி, வின்சர், ஹாஃவ் வின்சர், ஃபோர்-இன்-ஹென், கெல்வின் போன்ற பல டை அணியும் விதங்களை விளக்கினார். ஆனாலும் நாங்கள் எந்த பாணியும் பிடிபடாமல் பல முறை டையை தூக்கு கயிறு போல் முறுக்கி கட்டிக் கொண்டு மூச்சு விட சிரமப் பட்டோம்.

நானும் மற்ற மாணவர்களும் டை கட்டுவதற்காகவே அடித்து பிடித்து சட்டாம்பிள்ளைகளாக எங்களை முன்னிருத்த முயன்ற போது, கணேசன் சற்றே முரணாக ‘டை வேண்டாம்’ என்று கூறியது எனக்கு ஆச்சரியமாகவும் வெறுப்பாகவும் இருந்தது.

“ஏன் டை வேண்டாம்?” என்று நான் கேட்ட போது ஏதேதோ சொன்னான்… எனக்கு முழுவதுமாக புரிய வில்லை. “என் தாத்தா டையை வெள்ளைக்காரன் வீசிய கோவணத்துணி என்று கூறுவார்” என அவன் கூறியது மட்டும் ஓரளவு மனதில் உறைத்தது. ஒரு தீவிர தொழிற்சங்க வாதியாக செயல்பட்ட கணேசனின் தாத்தாவுக்கு டையின் மேல் ஏன் அவ்வளவு கோபம் என்று என்னால் அப்போது புரிந்து கொள்ள முடியவில்லை.

வீட்டுக்கு வந்ததும் அக்காவிடம் கோவணம் என்றால் என்ன என்று கேட்டேன். அக்கா ஒரு மாதிரி சிரித்து விட்டு அம்மாவிடம் கேள் என்று கூறிவிட்டார். அம்மாவிடம் கேட்ட போது ஓரளவு புரியும் படி சொன்னார். அது அந்த காலத்து ‘அண்டர் வேர்’ என்று புரிந்ததும் வெள்ளைகாரன் கோவணம் கட்டுவானா? என்று கேட்டேன். அம்மா ‘தெரியாது’ என்று கூறிவிட்டு வேறு வேலையைப் பார்க்கப் போய்விட்டார்.

கணேசன் டையை வெள்ளைகாரன் கோவணம் என்று கிண்டலடித்தை ஆசிரியரிடம் கூறிவிடலாமா என்று யோசித்தாலும் ஏனோ அப்படி செய்யவில்லை. ஆனால் அவன் டை கட்ட விரும்பாதது எனக்கு உருத்தலாகவே இருந்தது. ஒரு விசித்திர விலங்கை கூர்ந்து பார்ப்பது போல் நான் கணேசனின் செயல்களை கவனிக்கத் தொடங்கினேன்.

***

கணேசனின் கையில் மூன்று டைகள் இருந்தன. விற்பனை பணிப்பெண் இன்னும் அங்கேயே இருந்தாள். அவன் தனக்கான டையை தேர்வு செய்வதில் குழப்பத்தில் இருப்பதாக தோன்றியது. மூன்று டைகளும் வெவ்வேறு நிறங்களில் வெவ்வேறு வடிவமைப்பில் இருந்தன. ‘ஃவிட்டிங்’ அறையை நோக்கி அவன் நகர்வது தெரிந்தது. டைகளை கழுத்தில் மாட்டி கண்ணாடி முன் நின்று சரி பார்க்கப் போகிறான் என்பது புரிந்தது. கண்ணாடியில் தெரியப்போகும் பிம்பம் அவன் கண்களுக்குத் திருப்தியாக இருக்க வேண்டும். பிம்பத்தை அவன் நம்பியாக வேண்டும். அதோடு, அவன் கண்களில் குடியிருக்கும் சில நூறு பேர்களின் கண்களுக்கும் திருப்தியாக இருக்க வேண்டும். அவன் தேர்வு செய்யப்போகும் டை சிலரை பணியச் செய்யவும் சிலரை படியச் செய்யவும் வல்லமை பெற்றதாக இருக்க வேண்டும்

***

நாங்கள் ஒன்றாக அருகாமையில் இருக்கும் இடைநிலைப்பள்ளியில் ரிமூவ் வகுப்பில் சேர்ந்தோம் (அப்போதெல்லாம் தேசிய பள்ளி அல்லாத மாணவர்கள் அனைவரும் ரிமூவ் என்கிற புகுமுக வகுப்புக்கு கட்டாயம் செல்ல வேண்டும்)

இடைநிலை பள்ளியில் சூழல் வேறாக இருந்தது. பள்ளியில் அனைத்து மாணவர்களும் பள்ளியின் சின்னம் பொறித்த வெளிர் நீல நிற டை அணியவேண்டியது பள்ளி விதிமுறையாக இருந்தது. பாஜு கூரோங் அணியும் (முஸ்லீம்) மாணவிகளுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு. மாணவர் தலைவர்கள் கருநீல நிற கோட்டும் மெரூன் நிற டையும் அணிந்து நாடக நடிகர்கள் போல் இருந்தனர்.

கணேசனுக்கு அங்கும் டை அலர்ஜி தொடர்ந்தது. சபை கூடல் போன்ற தவிற்க முடியாத சூழலில் மட்டுமே அவன் கழுத்தில் டை வேண்டா வெறுப்பாக தொங்கும். மற்ற நேரங்களில் டையை சுருட்டி பள்ளிப் பையில் வைத்திருப்பான். பல முறை கட்டொழுங்கு ஆசிரியர்களிடம் மாட்டிக் கொண்டு திண்டாடுவதை பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் என் மனதில் ஒரு குரூர மகிழ்ச்சி மின்னலாய் பளிச்சிட்டு மறையும். ‘சரியா மாட்டிக்கிட்டான்’ என்கிற எக்களிப்போடு நான் என் டையை சரி செய்து கொண்டு நடப்பேன். இருந்தபோதும் அவன் போக்கு மாறவில்லை

நான் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் டையை மிக நேர்த்தியாக அணிந்து கொண்டு நல்ல பிள்ளையாக இருந்தேன். வெய்யிலோ மழையோ, உள்ளே புழுங்கினாலும் டை அழுத்தமாக கழுத்தை மூடியிருக்கும் படி பார்த்துக் கொண்டேன். பள்ளி விதிமுறையும் அதைத்தானே வலியுறுத்துகிறது. விதிமுறைகளுக்கு அடங்கி நடப்பதில் எனக்கு எந்தச் சங்கடமும் இல்லை.

அதோடு ஒன்றாம் படிவம் போனதும் மாணவர் தலைவனாகவும் மாறி விட்டேன். அப்பாவை நச்சரித்து பணம் வாங்கி கோட்டும் வாங்கிக் கொண்டேன். தையல்கார சீன மாது பள்ளிக்கே வந்து அளவெடுத்து தைத்து கொடுத்தாள். டையும் கோட்டும் எனக்கு புது தோற்ற மதிப்பை தந்தன. கண்ணாடி முன் நின்று நான் என்னை பார்த்து பலமுறை பெருமை பட்டுக் கொண்டேன். மயிலுக்கு அதன் தோகையில் இருக்கும் கர்வத்தை விட எனக்கு என் டையும் கோட்டும் கூடுதல் கர்வத்தைக் கொடுத்தன.

கணேசனின் போக்கில் எந்த மாற்றமும் இல்லை. மேலும் தீவிரமாகிக் கொண்டுதான் இருந்தது. ஆனாலும் கணிதம் அறிவியல் ஆங்கிலம் போன்ற பாடங்களில் அவனின் அபார ஆற்றல் ஆசிரியர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஓட்டப்பந்தைய போட்டிகளிலும் அவனால் பள்ளிக்கு பேர் வாங்கித்தர முடிந்தது. திடகாத்திரமான உடலும் கூர்மதியும் கொண்ட கணேசனை ஆசிரியர்களால் அவ்வளவு எளிதில் வெறுக்க முடியவில்லை. எப்போதும் கண்களில் கனவுகள் மின்ன உறுதியாக பேசும் அவன் பாணியும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆசிரியர்களுக்குள் அவனைப் பற்றி நல்லதும் கெட்டதுமாக பல கருத்துகள் இருந்தன.

பள்ளி தமிழ் மொழிக் கழகம் ஒரு முறை கவிதை போட்டி ஒன்றை நடத்தியது. நாட்டு சுதந்திரம் தொடர்பான கருப்பொருளில் மாணவர்கள் கவிதை எழுதினார்கள் என்பது ஞாபகம் இருக்கிறது. அப்போட்டியில் நானும் கலந்து கொண்டேன். ஆனால் நான் எழுதிய கவிதை ஞாபகத்தில் இல்லை. ஏனோ கணேசன் எழுதிய கவிதை இன்னும் நினைவில் இருக்கிறது.

வெள்ளைக்காரன்

கழற்றி வீசிய

கோவணம்,

ஆசியாக்காரன்

கழுத்தில் தொங்குகிறது

அழகிய டையாக…!!

இக்கவிதையை கணேசனே மேடையில் உரத்த குரலில் மிடுக்காக வாசித்தான். கவிதையை கேட்ட நாங்கள் எல்லோரும் வாய்விட்டு சிரித்தோம். மாணவிகள் வாயை மூடிக் கொண்டு சிரித்தார்கள். ‘கோவணம்’ என்ற சொல் அவர்களை நாணி கோணச்செய்தது. ஆசிரியை கனகவள்ளி ஒன்றும் சொல்லாமல் கவிதையை நிராகரித்து விட்டார். அவனுக்குப் பரிசு கிடைக்க வில்லை. யாருக்குப் பரிசு கிடைத்தது என்பதும் இப்போது மறந்துவிட்டது.

ஐந்தாம் படிவ சோதனையில் கணேசன் மிகச் சிறப்பாக தேர்ச்சி பெற்றான். நானும் நன்முறையில்தான் தேர்ச்சி பெற்றேன் என்றாலும் எனக்குள் கணேசனின் தேர்ச்சி மிகப்பெரிய சவாலாக இருந்தது. பண்ணையில் வளரும் முட்டைக் கோழிக்கு, காட்டுக் கோழியும் சத்தான முட்டை இடும் என்பது அதிர்ச்சியான தகவலாக இருக்கக் கூடும். நான் அந்த நிலையிலேயே இருந்தேன். என் ஆழ்மனம், விக்ரமாதித்தன் சுமந்த வேதாளமாக பல கேள்விகளைக் கேட்டு நச்சரிக்கத் தொடங்கியது. கணேசன் என்கிற உருவம் எனக்குள் முரண்களின் குறியீடாக பதிவாகி இருப்பதை உணரமுடிந்தது.

அச்சமயத்தில் நான், கணேசன், தினகரன் போன்ற நண்பர்கள் அடிக்கடி பொது திடலிலும் சம்சூடின் நாசி காண்டாரிலும் சந்தித்துக் கொள்வோம். ஏதாவது ஒரு சினிமா பாடலைப் மெல்லப் பாடிக் கொண்டே, மேலும் கீழும் இழுத்து இழுத்து தேத்தாரேக் போடும் மதுரை சம்சூடின் அவ்வப்போது எங்களுடன் கலந்து கொள்வார். கோயில், அரசியல், உள்ளூர் அடிதடிகள், சினிமா, பாடல்கள், பெண்கள், காதல் சிசு சிசுப்புகள் என்று பல தலைப்புகளில் புகுந்து துள்ளி வரும் எங்கள் அரட்டை. ஒரு முறை ஒரு நண்பன் ( டேவிட் என்று நினைக்கிறேன் ) குறள் வடிவில் ஒரு வாசகத்தை நகைச்சுவைக்காக சொன்னான். அவன் அதை சொந்தமாக தயாரித்ததாக கூறிக் கொண்டான். நான் நம்பவில்லை. அந்த வாசகம் இப்படி அமைந்தது;

“டை கட்டி வாழ்வாரே வாழ்வார்; மற்றெல்லாம்

கை கட்டி பின் செல்வார்”

என்னை இந்த வாசகம் மிகவும் கவர்ந்து விட்டபடியாலும் என் உள் எரிச்சலுக்கு சற்றே இதமூட்டுவதாக இருந்தபடியாலும் அதை பலமாக வலியுறுத்தி கணேசனிடம் பேசினேன். அந்த வாசகத்தையே வாசலாகக் கொண்டு எனக்குத் தெரிந்த உலக நடப்புகளுக்குள், இயல்புகளுக்குள் புகுந்து அவனோடு வாதிட்டேன்.

கண்களில் கனவுகள் மின்ன “எனக்கு டை கட்டவும் பிடிக்காது, கை கட்டவும் பிடிக்காது” என்று அவன் காட்டமாகவே சொன்னான். அப்போது அவன் ஒரு தேர்ந்த போராளி போல் எனக்கு தோன்றவே, நான் மிகுந்த அச்சதிற்குள்ளானேன்.

ஆனால் வாழ்க்கைப் பெருவெள்ளம் வேறு திசைக்கு சுழித்துக் கொண்டு ஓடியது. கணேசனின் அப்பா மாரடைப்பில் இறந்துபோனார். கணேசனின் உயர்க்கல்விச் செலவை அவனது அம்மாவால் ஈடுகட்ட முடியாது என்பது தெளிவானதால், அவனுக்கு கிடைத்த பல்கலைக்கழக வாய்ப்பை ஒதுக்கி விட்டு, ஒரு தமிழ்ப்பள்ளியில் தற்கால ஆசிரியராக பணியாற்ற போய்விட்டான். பிறகு அவன் குடும்பத்தோடு வீடு மாற்றலாகி தெலோக் இந்தானுக்கே சென்று விட்டான். நான் பல்கலைக்கழகம் சென்றேன்.

அதோடு எங்கள் வாழ்க்கை இரு வேறு தடங்களில் பயணப்பட்டது. விடுமுறையில் வீட்டுக்கு வரும்போதும் அவ்வப்போது பழைய நண்பர்களைச் சந்திக்கும் போதும் கணேசனைப் பற்றி அறிந்து கொள்வேன்.

அவன் தம்பி தங்கைகளை கவனிக்கும் முழு பொறுப்பும் அவனிடம் வந்து சேர்ந்து விட்டது. ரவாங்கில் அவனுக்கு தொழிற்சாலையில் வேலை கிடைத்ததும் பணி நேரம் போக டியூஷன் வகுப்புகள், நேரடி வியாபாரம் காப்புறுதி முகவர் என்று பல்வேறு வடிவங்கள் எடுத்து பணம் தேடும் போராட்டத்தில் தீவிரமாக ஈடுப தொடங்கி விட்டான் என்பதை அறிந்தேன்.

சில ஆண்டுகளுக்கு முன் பினாங்கில் ஒரு விடுதியில் கணேசனைச் சந்தித்த போது, அவன் ஒரு கூட்டதில் கலந்து கொள்ளச் செல்லும் பரபரப்பில் இருந்தான். ஒரு கையில் கோப்பும் இன்னொரு கையில் டையும் இருப்பதை நான் கவனித்தேன். நான் அவனது டையை கூர்ந்து கவனிப்பதை உணர்ந்த அவன் சட்டென அதனை தன் பாக்கேட்டுக்குள் திணித்துக் கொண்டான். உடனடியாக அவனுக்குள் சென்று டை கட்ட மறுக்கும் கணேசனை பிடித்து வெளியே இழுத்து வந்து நிருத்தவேண்டும் என்று என் மனம் பரபரத்தது.

டை கட்ட விரும்பாத கணேசனால் இந்த சமுதாய இண்டு இடுக்குகளில் இலகுவாக நுழைந்து வர முடியாது என்பதை அவனே உணர்திருப்பான். அவனுக்கு தரும் மரியாதையை விட அவன் கழுத்தை அலங்கரிக்கும் டையிற்கு மக்கள் தரும் மரியாதை அவன் மனதை மெல்ல மாற்றி இருக்கும். அவன் கழுத்தில் தொங்கும் டை அவனுக்கும் சக மனிதனுக்கும் இடையே நம்பிக்கையையும் எதிர்கால கனவுகளையும் பரிமாற்றும் பாலமாகவும் சில சமயங்களில் பல உண்மைகளை மறைக்க உதவும் திரையாகவும் இருப்பதையும் அனுபவம் அவனுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கும். டை அவனுக்கு சட்டென மேல் ஏறி நின்று கீழ் நோக்கி பேசும் வித்தையை கற்றுத் தந்திருக்கும். கணேசனும் வெய்யிலோ மழையோ, இறுக்கமாக டை அணிய பழகிக்கொண்டிருப்பான். காலம் அவன் கழுத்தில் டையை மாட்டி தன் போக்கிற்கு எந்த தயவுதாட்சன்யமும் இன்றி இழுத்துச் செல்ல துவங்கி இருக்கும்.

நான் அவனை சில பொது இடங்களில் டையோடு பார்க்கும் துரதஷ்டம் அவ்வப்போது ஏற்பட்டுவிடுகிறது., பேரங்காடியில் பார்த்தது போல. அப்போதெல்லாம் நான் அவனை அறியாதவன் போல விலகிச் செல்லவே விரும்புகிறேன். கணேசன் கழுத்திலும் ‘கோவணத்துணி’ தொங்குவதை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. நான் பழகிய கணேசன் டை கட்ட விரும்பாதவன் என்பதாகவே இருந்து விட்டு போகட்டும். டை அணிய மறுக்கும் கணேசனையே நான் எப்போதும் தேடுகிறேன். ஆனால் அந்த கணேசன் கொஞ்சம் கொஞ்சமாக கால வெளியில் கரைந்து காணாமல் போய்க் கொண்டிருந்தான். இதோ இப்போது என் கண் முன்னே முழுதுமாக தீர்ந்து போன வேறு ஒரு கணேசனின் அசைவுகளையே பார்க்கிறேன்.

கணேசன் தன்னைக் கவர்ந்த டையை முடிவு செய்திருக்கக் கூடும். வண்ண வண்ண டைகளுக்கு மத்தியில் கணேசனின் உயிர்ப்பு மிக்க அசல் வண்ணம் நீர்த்து போய்விட்டிருந்தது. பணத்தோடு அவன் முன்னோக்கி நகர்ந்து முகப்பிடம் செல்வது தெரிந்தது. அவன் நடையின் வேகம் எதையோ துரத்திக் கொண்டு ஓடுவது போல் இருந்தது. அங்கு நடந்து போவது கணேசனின் நிழல் என்றே நான் நினைத்துக் கொண்டேன். நன்கு வளர்ந்த மலாயா புலி ஒன்று ஒரு கட்டு கீரையை மோப்பம் பிடித்து ரசித்து திளைப்பது போல் அவலக் காட்சி ஒன்று மிக அழுத்தமாக கண்முன்னே தோன்றி மறைந்தது. குழப்பமான மனநிலையோடு அவசர அவசரமாக பேரங்காடியை விட்டு நான் வெளியேறினேன்.

– மே 2014 (நன்றி: ம.நவீன் – வல்லினம் இலக்கிய இதழ் – http://vallinam.com.my)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *