கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 28, 2021
பார்வையிட்டோர்: 3,177 
 

சாமியார், இது அவரது பெயரல்ல..ஊரவர் அவரை அப்படித்தான் அழைக்கிறார்கள்..

ஒற்றைக் கூரை போட்ட குடில் ..அவர் வாசஸ்தலம்… குடிலைச் சுற்றிப் பரந்து கிடக்கிறது விளைநிலம்.. கொட்டிலின் கிழக்குப் பக்கத்தில் பெரிய காய்கறித் தோட்டம்…கால்வாயைக் கடந்தால் பெரிய வயல் நிலம்…

சாமியாரின் தந்தைவழி முதுசமாய் அவரை வந்தடைந்தவை…

அவர் ஒரு இயற்கை விவசாயி…அவரது இடைவிடாத உழைப்பில் செழித்து இருக்கிறது பூமி..

சாமியார் விளைந்தவற்றில் தமக்கு உயிர்வாழ சிறிதளவு எடுத்துவிட்டு மிகுதி அனைத்தையும் ஊர்ப்பாடசாலை மாணவருக்கு மதிய உணவுக்காய் வழங்கிவிடுவார்..அவர் தயவால் ஏழை மாணவர்களுக்கு மட்டுமன்றி அனைத்து மாணவர்களுக்கும் ஆரோக்கியமான உணவு கிடைத்து வருகிறது.

எளிமையில் அவர் காந்தியவாதிபோலும். அவரிடம் உபயோகத்துக்கு மிக அவசியமான பொருட்கள் மட்டுமே இருந்தன. உடைகள்கூட இரண்டு மட்டுமே இருந்தன..உழைப்பதில் அவருக்கு அலாதியான பிரியம் இருந்தது. பொருள் எதிலும் அவர் ஆசை கொள்ளாத அதிசய மனிதராய் இருந்தார்..

இவர் இறை வழிபாட்டில் ஈடுபட்டதையோ, தமது கடவுட் கொள்கை இது என எடுத்துரைத்ததையோ எவரும் பார்த்ததில்லை…கேட்டதில்லை. இவரும் காவி அணிந்ததுமில்லை. தம்மைத் துறவி என்று கூறியதுமில்லை.ஆனாலும்

இவரது நடத்தையைப் பார்த்த பொதுமக்கள் இவரைச் சாமியார் என்றே அழைத்தனர்.

காலைமுதல் மாலைவரை விவசாயத்தில் ஈடுபடுவது , தனக்கான உணவை தானே தயாரிப்பது. …மாலையில் கால் நடையாக இரண்டு மணிநேரமளவில் ஊரைச் சுற்றிவருவது இரவில் ஏழைமாணவருக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது , படுக்க முன் நூலகத்தில் பெற்றுவந்த புத்தகத்தைப் படிப்பது இவைதான் இவரது நாளாந்த செயற்பாடுகளாக இருந்து வருகின்றன. இவர் இந்த ஊருக்கு வந்த காலம் தொடக்கம் கடந்த பத்து வருடங்களாக இவ்வாறே இவரது பொழுதுகள் கழிகின்றன.

இவரது கடந்தகாலத்தை அறிந்திட ஊரவர் விரும்பினார்கள் இவரிடமே நேரடியாகச் சிலர் கேட்டும் பார்த்தார்கள் . ஒரு புன்னகயால் அக்கேள்விகளை அவர் கடந்து சென்றுவிடுவார்.

ஊரவர் தமக்குக் கிடைத்த தகவல் துணுக்குகளைக் கொண்டு அவரது வாழ்க்கைபற்றி ஊகித்து சில கதைகளை கட்டினார்கள். பின்பு ரிஷி மூலம் நதிமூலம் அறியமுடியாது என நினைத்தார்களோ என்னவோ தமது ஆராய்ச்சியைக் கைவிட்டுவிட்டார்கள்.

ஆனாலும் அவரிடமும் ஒருகதை புதையுண்டுதான் இருந்தது. கரிகரன் தான் அவரது பெயர். அவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோதுதான் தயானிதியைச் சந்தித்தார். முதலில் நண்பர்களாகத்தான் இருந்தார்கள். நட்பு காதலாகியது. ஐந்து வருடங்கள் காத்திருந்து இரு வீட்டாரதும் சம்மத்தத்துடன் திருமணம் செய்துகொண்டார்கள்.

திருமண வாழ்க்கை மிக மகிழ்ச்சியாகப் போய்கொண்டிருந்தது. ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு வாழ்ந்தார்கள். ஆனாலும் அந்த வாழ்விலும் ஒர் இழையாக குழந்தை இல்லை என்ற சோகம் இல்லாமல் இருக்கவில்லை. கரியின் பெற்றோர் பேரப்பிள்ளைகளை கொஞ்சமுடியவில்லையே என்ற ஏக்கத்தோடேய ஒருவர் பின் ஒருவர் இறந்து போனது வேறு தம்மபதியினரை வாட்டியது என்னவோ உண்மைதான். ஆனாலும் அந்தத் துயரில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டு இருவரும் தம் மனதால் நெருங்கினார்கள். அந்த வாழ்விலும் இனிமையை அனுபவித்தார்கள்.

ஆறு வருடங்களின் பின் தயானிதி கருவுற்ற போது மகிழ்ச்சியில் திழைத்தார்கள். குழந்தை பிறந்து ஒருவருடம்வரையிலான காலம் மட்டுமே அவர்கள் வாழ்வில் வசந்தம் நீடித்தது…

அந்தக் கொடிய நாள் கரிகரனின் வாழ்வையே புரட்டிப்போட்டுவிட்டது..

தயாநிதியின் பெற்றோர் கடல் கரைக்கு மிக அருகில் இருந்த வீட்டில் குடியிருந்தனர் . தாய் நோய்வாய்ப்பட்டிருந்ததால் அவருக்கு உதவுவதற்காக குழந்தையோடு தயாநிதி பெற்றோரின் வீட்டுக்கு சென்றிருந்தபோது தான் சுனாமி இலங்கை இந்திய கடற்கரையத்தாக்கியது . ஒரு கணப் பொழுதில் அவர்கள் குடும்பமே சுனாமிக்குப் பலியாகிப் போனது.

கரிகரன் தனிமரமானார்,இருவரது இழப்பையும் தாங்கமுடியாது இரண்டு வருடங்கள் நிம்மதியின்றி எங்கெங்கோ அலைந்தார். காலம் அவர் மனப் புண்ணை சிறிது ஆற்றிய போது அவர் சிந்தையில் ஆழ்ந்தார்.

ஒரு பயித்தியம்போல மனதை வருத்திக்கொண்டு வாழ்வதைவிட பிறருக்காவது பயனாக வாழ்ந்துவிட்டுப் போகலாமே என்று எண்ணியதன் பயன் தான் அவரது இன்றைய வாழ்வு.

கரிகரன் தனது மனைவியின் நேசத்தை தமது உள்ளத்துக்குள் பூட்டிக்கொண்டார். அந்த நேசம் வளர்ந்து அவர் உயிரெங்கும் பரவியது. மனைவியை ஸ்தூல நிலையிலேயே அவரால் காதல் கொள்ள முடிகிறது,

பாவனைதானே உறவுகள் எல்லாம். அவர் குழந்தையின் விம்மத்தை எல்லாக் குழந்தையிலும் காணும் அற்புத மனநிலையைத் திருஷ்டித்துக்கொண்டார். அவர் மதிய உணவை மாணவருக்கு வழங்குவதையோ தம்மிடம் நாடிவரும் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதையே தானமாகக் கருதவில்லை. தமது கட்டாயக் கடமையாகக் கருதினார்.

அவர் மற்றவர்கள் தம்மை எப்படிப் பார்கிறார்கள் என்று சிறிதும் கவலைப்படவில்லை. மக்களின் புகழ்ச்சியோ இகழ்ச்சியோ அவரை பாதிக்கவில்லை.

அவர் மனம் குறுகிய வட்டத்துக்குள் சுழழாது சிறிது சிறிதாக பரந்து உலகலாவி வியாபித்ததுவந்தது.

இதுதான் உண்மை ஞானியிம் மனநிலையோ?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *