(இதற்கு முந்தைய ‘காமராஜ் மரணம்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது).
அவனுடைய தனிமை வாழ்க்கை அப்பாவுக்கு வேதனை தரக்கூடியதாக இருந்தது.
அவனுக்கு தான் எப்படியாவது திரைத் துறையில் நுழைந்து ஒரு கதாசிரியராக ஆகிவிட வேண்டும் என்கிற எண்ணம் தீயாய் மூண்டது. அதனால் வடபழனியில் ஏவிஎம் ஸ்டூடியோ பக்கத்திலேயே ஒரு அறை எடுத்துக் கொண்டான்.
தினமும் ஏவிஎம் ஸ்டூடியோ வாசலிலேயே கதை சொல்ல தவம் கிடந்தான். ஆனால் அவனை சில உப்புமா கம்பெனி டைரக்டர்கள் அசிஸ்டெண்ட் டைரக்டராக மட்டுமே சேர்த்துக் கொண்டார்கள். அவனும் சரி என்று எப்படியாவது தன் திறமையைக் காட்டி முன்னுக்கு வந்து விடலாம் என்று இசைந்தான்.
இரண்டொரு படங்கள் வெளி வந்ததும், அவன் அப்பா விருதுநகர் தியேட்டரில் மகனின் பெயர், மற்ற உதவி டைரக்டர்களுடன் சேர்த்து டைட்டில் கார்டில் வந்ததைப் பார்த்து சந்தோஷமடைந்தார்.
நாளடைவில் அவனுக்குப் புரிந்து போயிற்று, தன்னை எடுபிடி வேலைக்கு மட்டுமே உபயோகப் படுத்துகிறார்கள் என்று. மதிய உணவு ஏற்பாடு செய்வதற்கும்; ஆர்டிஸ்ட்களை ஒருங்கிணைப்பதற்கும்; கன்டினியுட்டி பார்த்துக் கொள்ளவும் என அட்மினிஸ்ட்ரேஷன் வேலையை மட்டுமே ஏவினார்கள். கற்பனை சாதுர்யங்களுக்கு அவனுக்கு இடமளிக்கப் படவில்லை. என்ன செய்ய? மனம் நொந்து சினிமாவிலேயே உழன்று கொண்டிருந்தான்.
அவன் அப்பாவின் சந்தோஷத்திற்கு வேறொரு காரணமும் இருந்தது. அவருடைய கல்லூரி நாட்களில் சின்னச் சின்ன கதைகளும் நாடகங்களும் ஆங்கிலத்தில் எழுதிப் பார்த்திருந்தார். அந்த நோட்டுப் புத்தகங்கள் வீட்டில் இருந்ததை அவனும் பார்த்திருக்கிறான். பழைய காலத்து ஆங்கில ஆர்வம் அவன் அப்பாவிடம் சலிக்காத வாசிப்பைக் கொடுத்திருந்தது. எந்தப் புள்ளியில் அவருடைய வாசிப்பு நின்று போனதோ, அந்தப் புள்ளியைத் தாண்டி அவன் வாசிப்பு நீண்டதை அப்பா கவனித்துக் கொண்டிருந்தார். ஒருவேளை இந்த வாசிப்பின் நீட்சிதான் அவனை கதையாசிரியராக சினிமாவில் காலூன்றி விடவேண்டும் என்கிற ஆசையைத் தூண்டியதோ என்னவோ?
அவன் வாழ்க்கையில் அவன் அப்பாவை மிகவும் திருப்திப் படுத்திய மற்றொரு முக்கியமான விஷயம், ஜே.கிருஷணமூர்த்தி (ஜேகே). இடையில் சில ஆண்டுகள் ஜேகே தவிர வேறு எதையுமே அவன் பொழுது போக்குக்காகக் கூட படித்ததில்லை. அவன் தனிமை வாழ்க்கையின் பெரும்பான்மையான நேரம் ஜேகேயின் புத்தகங்களை வாசிப்பதிலேயே கழிந்தது.
பொதுவாக மெட்ராஸில் டிசம்பரும், ஜனவரியும் ரம்மியமான மாதங்கள். ஒவ்வொரு வருடமும் அந்த மாதங்களில் கிருஷ்ணமூர்த்தியின் மெட்ராஸ் வருகை அம்மாதங்களின் ரம்மியத்தை மேலும் பல மடங்கு மிளிரச் செய்தது. கிட்டத்தட்ட பன்னிரெண்டு வருடங்கள் அவன் ஜேகேயின் புத்தகங்களை மட்டுமே வாசித்துக் கொண்டிருந்தான் விருதுநகர் போகிறபோதும் அவருடைய புத்தகம்தான் கையில் வைத்திருப்பான்.
அவனுடைய அப்பா மதுரை அமெரிக்கன் காலேஜில் படித்துக் கொண்டிருந்த காலங்களிலேயே 1929,1930,1931 கால கட்டங்களில் மாணவர்களின் மத்தியில் ஜேகே பெயர் பிரபலமாக இருந்தது. ‘அடையாறு ஆலமரம்’ அவராலேயே புகழ் பெற்றது. ஜேகே அணியும் மேலுடை ‘அடையார் ஜிப்பா’ என்றே மாணவர்கள் மத்தியில் பெயர் பெற்றிருந்தது.
கிருஷ்ணமூர்த்தியை அன்னிபெசன்ட் வளர்த்தார் என்ற செய்தி அவர்பால் அப்பாவை மிகுந்த மரியாதை கொள்ளச் செய்தது. அதனால் அப்பா சந்தோஷத்துடன் ஜேகே பற்றிய பல விஷயங்களை அவனிடம் பகிர்ந்து கொண்டார்.
மெட்ராஸில் 1979 ம் வருடம் ஜனவரி மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை ஜேகேயின் உரைக்கு அப்பாவையும் அம்மாவையும் அவன் அழைத்துப் போயிருந்தான். எப்போதும் முன் வரிசையில் அமர அவன் ஆசைப்பட மாட்டான். மூன்று அல்லது நான்கு வரிசைகளுக்குப் பிறகே அமர்வான்.
அன்று மிக சீக்கிரம் போய்விட்டதால் அவன் அப்பாவின் விருப்பத்திற்காக முதல் வரிசையில், ஜேகேவை நன்றாகப் பார்ப்பதற்கு வசதியாக உட்கார்ந்து கொண்டோம். ஜேகே அவருடைய நீண்ட உரையை ஆற்றி முடித்தார். உரை முடிந்து சில நிமிட அமைதிக்குப் பிறகு ஜேகே மேடையிலிருந்து கீழே இறங்கி நின்றார். மரியாதை நிமித்தம் கூடியிருந்த அனைவரும் எழுந்து நின்றார்கள். மெளனமாக ஒரு பரிவர்த்தனை சூழல் அங்கு நிகழ்ந்து கொண்டிருந்தது.
அவன் அப்பா வேகமாக அவரிடம் சென்றுவிட்டார். பரவசத்துடன் அவரின் இரண்டு கைகளையும் பற்றிக்கொண்டார். ஜேகே கனிவுடன் அப்பாவைப் பார்த்தார். அப்பா மிகவும் உணர்வு வயப்பட்டு தன் கைகளை தலைக்குமேல் உயர்த்தி அவரை கும்பிட்டார். திரும்பி வந்து அவன் அருகில் நின்றுகொண்டார். பரவசத்தில் அப்பாவின் உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது. சொற்கள் குழற அப்பா அவனிடம் “ஜேகேயின் கைகள் ஐஸ் மாதிரி ஜில்லுன்னு இருக்கு…” என்றார்.
இப்படி அவனால் அப்பாவிற்கு சில சந்தோஷங்களும் பெருமிதங்களும் கிடைத்துக் கொண்டிருந்தாலும், மண வாழ்க்கையை மேற்கொள்ளாத அவன் தனிமையும், வேலை எதிலும் அவனை ஆழ்த்திக் கொள்ளாத பற்றற்ற போக்கும், அவருக்குள் ஏற்படுத்தி இருந்த துயரத்தில் இருந்து மட்டும் அப்பாவுக்கு மீட்சி இல்லை.
அது மட்டுமில்லை, அவனுடைய வாழ்க்கையைப் பற்றி ஓயாமல் அப்பாவிடம் மாற்றி மாற்றி கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்த சொந்தங்கள் பலருக்கு அப்பா ஏதாவது பதில் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியிருந்தது. அது தர்மசங்கடமான விஷயம்தான். சில நேரங்களில் சொந்தங்கள் அவனைப்பற்றி வாய்க்கு வந்தபடி இகழ்ச்சியாகப் பேசிச்சிரித்த சம்பவங்களும் நடந்தன. ஒரு விதத்தில் பார்த்தால் அதெல்லாம் அவமானம்தான்.
அப்பா துக்கம்தான் பட்டிருக்கிறாரே தவிர, அவன் வாழ்க்கை முறைக்காக அவனை ஒருநாளும் கடிந்து கொண்டதில்லை. கல்யாணம் செய்து கொள்ளச் சொல்லி அவனை கட்டாயப்படுத்தியது கிடையாது. கேள்வி கேட்டதும் கிடையாது. ஒரு மிக முக்கியமான இழையில் அவனை அவரையும் அறியாமல் முழுமையாக ஏற்றுக் கொண்டிருந்தார், புரிந்து வைத்திருந்தார். வேறொரு சம்பவத்தை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
1986 ம் வருடம் பிப்ரவரி 16 ம் தேதி ஜேகே கலிபோர்னியாவில் காலமானார். அன்று அவன் விருதுநகரில் வீட்டில் இருந்தான். பொதுவாக அவன் காலை ஆறரை மணிக்கு மேல்தான் தூக்கம் கலைந்து எழுந்துகொள்வான். அப்பா ஆறு மணிக்கெல்லாம் எழுந்துவிடுவார். அன்றும் அதே மாதிரி எழுந்து வழக்கம்போல் ஹிண்டு பேப்பர் படித்திருக்கிறார். ஜேகே காலமான செய்தி ஹிண்டுவின் முதல் பக்கத்தில் வெளியாகியிருந்தது. இது பெரிய துயரமான செய்தி. செய்தியைப் படித்த அப்பா அவனை உடனே எழுப்பி பதட்டத்துடன் சொல்லியாக வேண்டிய செய்தி அது.
ஆனால் அப்பா அவனை எழுப்பவில்லை. அவன் எப்போதும்போல தூக்கம் கலைந்து எழுந்து குளித்தான். காலை டிபன் சாப்பிட்டான். சாவகாசமாக எட்டரை மணிவாக்கில் ஹிண்டு பேப்பரில் ஜேகேயின் மரணச் செய்தியைப் பார்த்ததும் அதிர்ந்தான். சில நிமிடங்கள் முழுவதுமாக அவன் அந்தச் செய்தியிலேயே ஆழ்ந்திருந்தான்.
சட்டென்று தலையை உயர்த்திப் பார்த்தபோது, அவன் அப்பா தூரத்தில் நின்றவாறு அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்.
“எவ்வளவு பெரிய துக்கமான நியூஸ்? என்னை ஏன் எழுப்பவில்லை? எந்திரிச்சப் பிறகும் என்னிடம் சொல்லலை….”
அப்பா மெல்லிய குரலில், “இந்தத் துக்கமான நியூஸை உங்கிட்ட என் வாயால சொல்லமுடியாது, அதான் சொல்லலை…” அப்பாவின் கண்களில் அவன் பார்த்த சோகமான உணர்வு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.