அம் மெய்யப்பன்

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 23, 2012
பார்வையிட்டோர்: 10,197 
 

நியூயார்க்கின் வானளாவிய கட்டிடங்கள் நிறைந்த டவுண்டவுன் பகுதியில் வேலை எனக்கு. பத்தாவது மாடியில், தனி அலுவலக அறையில், ஆறு இலக்கத்தில் சம்பளம் வாங்கும் மார்கெடிங் எக்சிகியூடிவ் வேலை. பெயர் நரேன்னு வைச்சுக்குவோமே.

அதென்னவோ தெரியவில்லை. நேரில் யார் முன்னும் விலாவாரியாக வெளுத்துக்கட்டும் எனக்குத் தொலைபேசியில் பேசுவதென்றால் ஒரு சிறிய நடுக்கம். எதிரே இருப்பவரைப் பார்க்க முடியாவிடில் அது அமானுஷ்யம் தானே? நான் லேசாகப் பயந்ததில் அர்த்தமுண்டு இல்லையா?

வழக்கம் போல் அன்றும் பலருடன் போனில் பேசவேண்டியிருந்தது. எனது நீளமான லிஸ்ட்டில் முதல் பெயர் டிரேசி. மனதில் இறைவனை வேண்டியபடி நம்பரைச் சுழற்றினேன். மூன்று ரிங்கில் டிரேசி கிட்டினாள்.

“ஹலோ…டிரேசி ஸ்பீக்கிங்”. சாக்லேட் வழியும் ஐஸ்கிரீம் போன்ற குரல். எனக்கு நடுக்கம் போய் குளிர் காய்ச்சல் வந்தது.

டிரேசி மறுபடியும் ஹலோ சொன்னாள். எங்கே வைத்துவிடுவாளோ என்ற பயத்தில் சம்பாஷணையை ஆரம்பித்தேன்.

கண்டதும் காதல் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. உங்களுக்கு எப்படியோ? ஆனால் டிரேசியை பார்த்தவுடன் தெளிந்தேன். இனி இவள்தான் வாழ்வின் துணையென்று.

முதன் முதலில் நாங்கள் அலுவல் நிமித்தமாய்தான் சந்தித்தோம். பின்னர் ஏதோ காரணம் காட்டி அடிக்கடி டிரேசியை சந்திக்க ஆரம்பித்தேன். விளையாட்டான எங்கள் சந்திப்புகள் பின்னர் நட்பாக மாறி, காதலாக கனிந்தும் விட்டது. ஒரே ஒரு பிரச்சினை என்னவென்றால் டிரேசி ஒரு ரோமன் கத்தோலிக்கர். நானோ புலம் பெயர்ந்த இந்து. அப்பிரச்சினையும் எங்களைப் பெற்றவர்களுக்குத்தான் பெரிதாகத் தெரிந்தது.

நான்கு வருடங்கள் நன்கு பழகிய பிறகு ஒரு அதிகாலை வேலையில் முயங்கிக் கிடந்த நேரத்தே கல்யாணப் பேச்செடுத்தேன். உடனே சம்மதித்தாள். தேர்ந்தெடுத்த நல்ல நாளில், அருகிலிருந்த சர்ச்சில் மோதிரம் மாற்றி மேன் & வைப் ஆனோம்.

உலகிலேயே பொருத்தமான ஜோடி நாங்கள்தான் என்றால் அது மிகையாகாது. ஐந்து வருடங்கள் உருண்டோடியது. ஜான் அஜீத் பிறந்தான். கூடவே சிறு சிறு பிரச்சினைகளும்.

O

குழந்தை பிறந்தபின் டிரேசி சிறிது சிறிதாக என்னிடமிருந்து விலகுவதாய்ப் பட்டது. ஒருவேளை ஜான் மீது அதிக அக்கறை எடுக்கிறாளோ என்றால் அதுவுமில்லை. தாய்ப் பால் கொடுப்பதை முதல் மாதத்திலேயே நிறுத்தியதில் எனக்கு முழு உடன்பாடில்லை. என்னதான் அலுவலகம் சென்றாலும் பிரெஸ்ட் பம்ப் போன்ற கருவிகள் தாம் உள்ளனவே? என்னமோ சரியில்லையெனப் பட்டது.

எதுவாகிலும் இன்று இரவு பேசிவிட வேண்டுமென முடிவெடுத்தேன். ஆனால் டிரேசியோ காஸ்டியூம் பார்ட்டி செல்வதாகக் கூறிவிட்டாள். கூடவே ஜானை கவனித்துக் கொள்ள முடியுமா என்று அவள் கேட்டது வேதனையின் உச்ச கட்டம். மகனைப் பார்த்துக்கொள்வது தந்தைக்கு சிரமமா? ஓ…ஒருவேளை இதுதான் கலாச்சார வேறுபாடோ? நானும் ஒரு சராசரி குழப்பத்தில் உள்ள அமெரிக்க இந்தியனோ? கேள்விகள் அரித்தது.

நள்ளிரவு வரை விழித்திருந்தேன். டிரேசி வரவில்லை. செல்போனும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. உள்ளத்தில் கவலை மேகங்கள் கருக் கொண்டன. சோபாவிலேயே எப்போது உறங்கினேன் என்று எனக்கே தெரியவில்லை. ஜானின் அழுகுரல் கேட்டு திடுக்கிட்டு விழித்தேன். மணி காலை எட்டு. டிரேசி வீட்டிற்கு இன்னும் வரவில்லை.

ஜானின் டயப்பர் மாற்றி, புட்டிப் பால் கொடுத்து சமாதானப் படுத்தினேன். சூடான காப்பி குடித்தால் தேவலாம் போலிருந்தது. ஆனால் உடல் சோம்பலாக இருந்தது. டிவி முன்னே அமர்ந்து மனம் போன போக்கில் சேனல் மாற்றிக்கொண்டு இருந்தேன்.

சுமார் பத்து மணியளவில் டிரேசியின் கார் போர்டிகோவில் பார்க் செய்யப்படும் சப்தம் கேட்டது. சிறிய கோபப்பந்து வயிற்றிலிருந்து மேலெழும்பியதை சிரமப்பட்டு அடக்கினேன். உற்சாகத் துள்ளலாய் காஸ்ட்யூம் டிரெஸ்ஸில் சென்றவள், தொள தொளா பனியன் மற்றும் ஜீன்ஸில் தளர்வுடன் வீட்டில் நுழைந்தாள்.

“ஹாய் நரேன்”. கண்கள் என்னை நேராகச் சந்திக்கவில்லை. முகம் லேசாக உப்பியிருந்தது.

“ஹேய்”. கேள்விகளால் துளைக்க நினைத்தவன் அமைதியாய் ட்ரேசியை ஏறிட்டேன்.

நேராக பாத்ரூம் சென்றவள் ஒரு மணி நேரம் வெளியே வரவில்லை. குளித்து, உடை மாற்றி வேளியே வந்தவள் நேராக படுக்கை அறை சென்றபோது தான் நான் எரிமலையாக வெடித்தேன். கேட்க வந்த கேள்விகள் எல்லாவற்றையும் சுருக்கி,” நீயெல்லாம் ஒரு பொம்பளையா? என்ன ஒரு தாய் நீ ?”

ஒன்றும் நடக்காதது போல் ஏறிட்ட டிரேசி,”நரேன். அமைதியாய் நான் சொல்வதைக் கேளுங்கள். நான் உங்களை நேசிக்கிறேன். ஆனால் எனது ஆத்மார்த்தமானவரை நேற்றுதான் சந்தித்தேன். அவரது வீட்டில்தான் நான் தங்கினேன். புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்”

என்னையுமறியாமல் வெறுப்புடன் வெளிவந்த வார்த்தைகள்,”யூ பிட்ச்”. ஆணை இடுப்புக்கு கீழே அடிக்கும் வார்த்தைகளை மிக எளிதாய், சுலபமாக வீசினாள்.

“நீ மட்டும் ஒழுங்கானவனா? பெரிய யோக்கியன் மாதிரி பேசுற? உன் பிறந்த நாளின் போது வேகாஸில் இரண்டு ஸ்ட்ரிப்பர்ஸ் கூடப் படுத்து எழுந்தவன்தானே நீ”, சீறினாள் டிரேசி.

அடிப்பாவி. கல்யாணத்திற்கு முன்னர் இளமை வேகத்தில் செய்த தவறை, அதுவும் நானே தவறென்று மன்னிப்புக் கேட்ட விஷயத்தை வம்புக்கிழுக்கிறாளே. நொந்து போனேன்.

“கல்யாணத்திற்கு முன்னால் நான் செஞ்சதையும், மனைவியாய், ஒரு குழந்தைக்குத் தாயாய் நீ செய்ததையும் கம்பேர் பண்றியா?”. கோபத்தின் உச்ச கட்டம். உடல் லேசாக நடுங்கியது.

சிறிய மௌனத்திற்கு பின், “நரேன், நான் கல்யாணத்திற்கு அவசரப்பட்டுடேனோன்னு இப்ப தோணுது. சுதந்திரமாய் வாழப் பழக்கப்பட்டவள் நான். இப்போ மூச்சு திணறலா இருக்கு”

இனி ஒழுங்காகப் பேசி பிரயோஜனமில்லை. ஆங்கில அகராதியில் இல்லாத அனைத்து கெட்ட வார்த்தைகளையும் பயன்படுத்தி திட்டினேன். சிறிதே ஆசுவாசம் தேவைப்பட்டது. குளிக்கப் போனேன்.

அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றை எடுத்துக் கொண்டு காரைக் கிளப்பினேன். இலக்கின்றி அலைந்தபின் இரவில் தங்குவதற்காக ஒரு மோட்டல் சென்றேன். கிட்டத்தட்ட ஒரு வாரம் பைத்தியமாய், என்ன செய்வதென்று அறியாமல், கண்ணைக் கட்டி காட்டில் விட்டவன் நிலையிலிருந்தேன். ஜான் எப்படி இருக்கிறானோ? அதீத குடி, தூக்கமின்மை, உடலின் செயல்பாட்டை மட்டுமல்லாமல் மனதையும் பாதிக்க ஆரம்பித்தது.

பத்து நாட்கள் கடந்திருக்கலாம். காலை நேரத்தில் மோட்டலின் ஜன்னல் வழியே வெறித்து நோக்கினேன். அருகிலிருந்த மரத்தில் சிறிய பறவையொன்று தன் குஞ்சுக்கு லாவகமாக உணவூட்டிக் கொண்டிருந்தது. அப்பறவை ஆணா பெண்ணா? தெரியவில்லை. பளீரென்று மின்னல் அடித்தது.

புயலாய் வீட்டில் நுழைந்த என்னை கண்டிப்பாய் டிரேசி எதிர் பார்க்கவில்லை.

“சுதந்திரம் வேண்டியவள் நீ. குடும்பம் வேண்டியவன் நான். ஆகவே நீ வீட்டை விட்டு வெளியேறுவதுதான் நல்லது. ஜானை நான் பார்த்துக் கொள்கிறேன்”.

O

இதோ, எனது முன்னாள் மனைவி விட்டுச் சென்று சுமார் மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டன. ஜான் “மம்மி-டாடி” என்று என்னை அழைக்கும் போது என்னையும் அறியாமல் ஆனந்தமாய் கண்ணீர் எட்டிப் பார்க்கும். இந்நிலையைத்தான் தாயும் ஆனவன் என்கிறார்களோ? இலக்கியம் படிக்க முடிவு செய்தேன்.

சிவப்பு விளக்கில் எங்கள் கார் எங்காவது நிற்கும் போது என்னையும், கார் சீட்டிலுள்ள ஜானையும் பார்த்தபின், மனைவியைக் கண்ணால் தேடுவார்கள். பச்சை விளக்கு வந்ததும், காரை முன்னோக்கி செலுத்தும்போது முகத்தில் உற்சாகமாய் தீண்டும் காற்று…ஆஹா எங்கள் சுதந்திரத்தை சொல்லாமல் சொல்லும்.

– ஜூலை 22, 2004

Print Friendly, PDF & Email

2 thoughts on “அம் மெய்யப்பன்

  1. மிக மிக இயல்பான ஒரு கதை. முடிவு நம் கலாச்சாரத்தையொட்டி amainthullathu

  2. கலாசார மாற்றங்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கும் சூழலில் நடை பெறும் வாழ்க்கை. இயல்பாய் அழகாய் வர்ணிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *