ஜீவ தரிசனம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 10, 2024
பார்வையிட்டோர்: 335 
 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வீட்டிலிருந்து கடிதம் வந்து ஓர் இரவும் ஒரு பகலும் பிந்திவிட்டது. எதிர்வரும் வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு நாட்கள் லீவு கோரி ரெயில்வே வரண்டுக்கும் சேர்த்து விண்ணப்பம் எழுதிக் கொடுத்தேன் ஊருக்குப் போய் ஞாயிற்றுக் கிழமை நைட் மெயில் ஏறினால் திங்கள் காலை ஏழுமணிக்குக் கடமைக்குத் திரும்பிவிடலாம் என்ற திட்டத்துடன்.

லீவுக்கான காரணத்தை விளக்கமாகச் சொல்லத் தேவையில்லை. அது என் தனிப்பட்ட விடயம். எனினும் கேட்டதற்காகச் சொன்னேன். அதிபரின் இதழ்கடையில் ஒரு வகையான சிரிப்பு…….. “என்ன மாஸ்ரர் சமரா ஒரு சாதாரண சிங்கள ஆள். அவருக்குப் போய் லீவையும் வரன்டையும் வீணாக்குறீங்களே……!” அதிபரின் சொற்கள் என் இதயத்தைக் கிழித்தது. இவர் கிட்டே போய் ஏன் சொன்னோம் என்றிருந்தது.

வாக்குவாதப் பட்டு கசப்புணர்வுகளுக்கு ஆளாகிவிட்டால் நிச்சயமாக கஷ்டப் பிரதேசத்தில் இதை விட மோசமான ஒரு பாடசாலைக்கு மாற்றம் வந்துவிடும். ஏன் இந்த வம்பெல்லாம்…..

சமரா ஒரு சிங்கள பௌத்தர் என்று மட்டுந்தானே தெரியும். அதற்கு மேல் சமராவைப் பற்றி இவருக்கு என்ன தெரியும்……? என்று மனம் ஓயாது குமுறிக் கொண்டிருந்தது. “அப்படி இல்ல சேர்…இது முக்கியம்…” என்று விளக்கம் கூறினேன். புண் பட்ட மனதை ஆற்றிக் கொள்ள. பாடசாலை வேலியில் நின்ற உயரமான தென்னை மரத்திலிருந்து, காய்ந்த தொன்னோலையொன்று சரேலென்று தரையில் விழுந்ததும் அதிபரின் சிந்தனை திசை..திரும்பியது. “சரி..சரி..உங்கட லீவு உங்கட விருப்பம்” என்று கூறி அனுமதி வழங்கினார்.

வயதான பின்னும் மீண்டும் ஒரு குழந்தையின் தன்மையைக் காட்டும் சமராவின் அந்தப் பால் வடியும் முகமும், பொன்னிற வெற்றிலை உரலும் தான் மனக் கண்முன் வட்டமிட்டது. அது ஓர் அலாதியான முகம். கறுப்பில் வெள்ளை கண்டு விட்ட தலைமயிர் எண்ணையின் மினுமினுப்புடன் பின்னால் வலித்து வாரிவிடப்பட்டிருக்கிறது. முழுக்கை பெனியன் மாதிரியே இளஞ்சிவப்பு நிறச் சேர்ட். பெல்ட்டின் கட்டுப்பாட்டில் இடுப்போடு ஒட்டியிருக்கும் பிஜாமா சாரத்திற்கு வெளியே விடப்பட்டிருக்கிறது. ஐந்தடி நான்கு அங்குலம் மதிக்கலாம். முதுகில் இலேசான கூன். பொது நிறம். ஆழ்ந்த அனுபவம் பளிச்சிடும் பார்வை. வயதை மீறிய சுறுசுறுப்பு. ஆரம்பத்தில் ஒரு தொழிற்சங்கவாதி. அப்புறம் ஒன்றிலுமே இல்லை.

சமராவைப் பற்றிய சிந்தனையிலேயே சிறிது நேரம் மூழ்கிவிட்டிருந்த போது –

பாடசாலை விட மணி ஒலித்தது.

விடுதி வசதிகள் இல்லாத பாடசாலைக்கு முன்னாலேயே ஒரு பெரியவரின் வீட்டில் வசதியான தனி அறையும் வேளா வேளைக்கு உணவும் கிடைத்தது.

பாடசாலை விட்டதும், அறைக்குச் சென்று கெரியரில் வைத்திருந்த பகலுணவை அவசரமாகச் சாப்பிட்டு விட்டு, தயாராக வைத்திருந்த பிரயாணப் பையைத் தோளில் மாட்டிக் கொண்டு. வீட்டுச் சொந்தக்காரரிடம் ஒரு வார்த்தை சொல்லி விட்டு விறு விறுவென்று பறந்தேன்.

இனம், மதம், மொழி இவற்றிகு அப்பாலிருந்து தான் நாம் இன்றைய சமுதாயத்தை நோக்க வேண்டும் என்பதை அதிபர்களாலேயே ஜீரணித்துக் கொள்ள முடியாமல் இருக்கிறதே!

சரியாகப் பதினைந்து நிமிட நடைக்குப் பிறகு ‘ஆனைக்கட்டி’ சிங்கள கிராமத்துக் கடையைத் தரிசித்தேன். முதலாளியின் மகன். முத்து பண்டாவும், விகாரையின் இளம் பௌத்த பிக்குவும் உரையாடிக் கொண்டிருந்தனர்.

“ஹதிசி கமனக்த..?” என்ற கேள்வியுடன் என்னை வரவேற்றார்கள். பிக்கு சரளமாக ஆங்கிலம் பேசத் தொடங்கியிருந்தார்.

“…நான் முந்தி சமராவைப் பற்றிச் சொல்லியிருந்தேனே…” என்று தொடங்கி விபரமாகச் சொல்லி விட்டு –

“உங்கட ஆங்கில டியூஷன் வகுப்பை வீட்டுக்குப் போய் வந்த பிறகு…….”

“ஓ! அதுக்குப் பரவாயில்லை…நீங்க கட்டாயம் போகத்தான் வேணும்…” என்று இருவருமே ஆறுதல் கூறினர்.

“உங்கட சம்பள செக்?” முத்துபண்டா வினவ, “பேஷீட் இன்னும் வரல்ல….” என்று நான் முடிக்கும் முன்பே…”மாஸ்டர் தூரந் தொலைக்குப் போற பயணத்தோட. இந்தாங்க…சம்பளப் பணத்தைக் கொண்டு போய்க் கொடுங்க….நீங்க போய் வந்த பிறகு பார்த்துக் கொள்வோம்”

இவையெல்லாம் நான் கேட்காமலே செய்யும் மகத்தான உதவிகள். இவற்றிற்கெல்லாம் எவ்வளவு விசாலமான மனப்பான்மை வேண்டும். என்று நான் வியந்தேன்.

“முதலாளி காரை எடுத்துக் கொண்டு மதவாச்சிக்கு அலுவலாய்ப் போயிருக்கிறார். சாதுவும் நானும் அனுராதபுரத்துக்குப் போகத்தான் காத்துக் கொண்டிருக்கிறோம்…பத்து நிமிடங்களில் வந்தால் நாங்கள் எல்லோருமே போகலாம்….”

“எனக்காகக் கரைச்சல் படாதீங்க மல்லி. சந்திக்குப் போனால். எக்ஸ்பிரஸ் பஸ் வண்டிகள் கிடைக்குந்தானே…எப்படியும் விடிவதற்குள் வீட்டில் நிற்க வேண்டும்…”

“நீங்க சமராவைப் பார்க்கப் பதட்டப் பட்டுக் கொண்டிருக்கிறது தெரீது…”

முத்துப் பண்டா கடைப் பையனைக் கூப்பிட்டு சைக்கிளில் கொண்டு போய் விடுமாறு பணித்தான். நான் அவர்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டேன்.

சந்திக்குப் போனதும் எதிர்பாராத விதமாக ஒரு பஸ் வந்து நின்றது. ஒரு மணித்தியாலத்தில் அநுராதபுர ஸ்டேசனைச் சென்றடைந்தேன். சனத்திற்குக் குறைவிருக்கவில்லை. நிலையம் கலகலப்பாகத் தான் இருந்தது.

டிக்கட் எடுத்ததும் முன் பக்கம் சென்று காலியாகக் கிடந்த ஆசனத்தில் இருந்து புதினம் பார்த்துக் கொண்டிருந்தேன்.

வழக்கத்திற்கு மாறாக ‘எக்ஸ்பிரஸ்’ குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னரேயே வந்து விட்டது. –

சனக் கும்பலோடு பதறியடித்துக் கொண்டு சீற் பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. ‘ஸ்லீப் ரெட்ஸ்’ புக் பண்ணி இருக்கையின் இலக்கத்தைப் பெற்று விட்டேனே!

நான் அவசரமாகச் செல்ல வேண்டும் என்பதற்காகவோ என்னவோ. புகைவண்டி சற்று நேரத்திற்கெல்லாம் ஒரு ஓங்கார ஊதலுடன் நிதானமாகப் பயணத்தை ஆரம்பித்து. வேங்கையைப் போல் போய்க் கொண்டிருந்தது. அந்த வேகத்துடன் போட்டி போட்டுக் கொண்டு எனது நினைவலைகள் சமராவைச் சுற்றிச் சுழன்று கொண்டிருந்தன.

முதன் முதல் சமராவைச் சந்தித்த நாள் எனக்கு ஞாபகம் வந்தது. அது மிகவும் ரம்மியமான கால கட்டம்.

நிம்மதியாகப் பெருமூச்சு விடலாம். நினைத்ததும் எங்கு வேண்டுமானாலும் பிரயாணம் செய்யலாம். பிறந்த இடம். பிறந்த திகதி புகைப்பட அத்தாட்சி ஒன்றுமே தேவையில்லை.

நாட்டின் வரலாற்றில் அது பொற்காலம். தோட்டப் பாடசாலைக் கல்வி முடிந்ததும் நகரப் பகுதிகளிலுள்ள கல்லூரிகளில் கல்வியைத் தொடர இருபத்தைந்து மைல்களுக்கு அப்பால், ஒரு பெரிய ரோமன் கத்தோலிக்கப் பாடசாலையில் எங்களுக்கு அனுமதி கிடைத்தது. இங்கு கல்வியைத் தொடர வேண்டுமென்றால் சுற்று வட்டாரத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுப்பது தான் பொருத்தமாக இருக்கும். இந்தச் சந்தர்ப்பத்தில், தான் தகப்பனாருக்கு கான்ட்டிராக்டர் அஸீஸின் உதவி கிடைத்தது. நகரின் மிகச் செழிப்பும் காற்றோட்டமும் உள்ள ஓர் அழகான பகுதியில் அவர் கட்டியிருந்த வீட்டை வாடகைக்குக் கொடுத்தார் விரும்பினால் எதிர்காலத்தில் சொந்தத்திற்கும் வாங்கிக் கொள்ளலாம் என்ற நிபந்தனையில்..

எங்கள் வாழ்க்கையின் அந்த ரம்மியமான நாட்கள எஸ்டேட் குவார்ட்டஸிலும் இந்த அழகான வாடகை வீட்டிலும் ஓடிக் கொண்டிருந்த போதுதான் –

தகப்பனாரும் தேயிலைத் தோட்டத்தில் தமது நாற்பது வருட கிளரிக்கல் சேவையிலிந்து ஓய்வு பெற்றுக் கொண்டார். நட்புக் காரணமாக அஸீஸ் கன்ட்டிராக்டர் வீட்டை மிகவும் குறைந்த விலைக்கே கொடுத்திருந்தார்.

வீட்டின் முன் வாசலுக்கும் அறுபதடி தூரத்திலுள்ள ரோட்டுக்குமுள்ள நடுப்பகுதியான இடைவெளி ஒரு சிறு பள்ளத் தாக்கு. படிகள் இறங்கி. ஏறி ரோட்டுக்குச் செல்ல வேண்டிய அமைப்பு

இந்த அமைப்பை மாற்றலாம் என்று அஸீஸ் கன்ட்டிராடர் யோசனை கூறிக் கொண்டிருந்த போது தான் –

அவ்வழியே நாட்சம் பளத் திற்கு வேலை தேடிச் சென்று கொண்டிருந்த சமரா, ‘ஓ…இந்த இடத்தில் வேலைத் திட்டம் ஒன்று உருவாகிறது’ என்பதை ஊகித்து வந்து நிற்கிறாரோ என்னவோ?

வந்தவரின் நோக்கத்தை அறிந்து அளவளாவி விட்டு அஸீஸ் கேட்டார் “இந்த அமைப்பை மாற்ற என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்?”

சமரா நீண்ட நேரம் தனது ஆழ்ந்த பார்வையைத் தோட்டம் முழுக்கச் செலுத்திவிட்டுச் சொன்னார்.

“இதுக்கு இவ்வளவு யோசிக்க வேண்டி அவசியம் இல்லை ……. அதோ பின் புறம் தெரிகிற மேட்டை இடித்து முன்பக்கத்துக்கு ரோட்டுக்கு ஸ்லோப் வைத்து மண்ணை நிரப்பிவிட்டால் அழகாக இருக்கும்” என்றார் சமரா. கான்ட்ரெக்டர் அஸீஸுக்குத் தூக்கிவாரிப் போட்டது. “வெரிகுட்…அருமையான யோசனை…அதைத் தான் நானும் யோசித்துக் கொண்டிருந்தேன்…இந்த வேலையில் உங்களையும் சேர்த்துக் கொண்டால் வேலை செய்ய முடியுமா…?”

“ஓ…… மண் சுமக்கத்தான் வேண்டும். இது பசுமையான செம்மண். மேட்டை இடித்து பள்ளத்தை மூடி…சமப்படுத்தி முன் பக்கத்தில் பல வண்ணப் பூக்கள் நிரம்பிய ஒரு பூந்தோட்டத்தை அமைக்கலாம் மிக அழகாக இருக்குமல்லவா?”

சமரா ஒரு திட்டத்தை வெளிப்படுத்தினார். “நிறைய செலவாகுமா?” என்று தகப்பனார் கேட்டார்.

“அப்படி ஒன்றும் செலவாகாது என்னிடம் இரண்டு வீல்பெரோ கிடக்குது. வேலை செய்யும் ஒரு கூலி ஆளையும் மண் சுமக்க இரண்டு பெண் பிள்ளைகளையும் தருகிறேன்…அப்புறம் இவரை – மேஸ்திரியாகச் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் மகன்மாரும் பொழுது போக்குக்காக உதவுவார்கள். மிகவிரைவில் மேடும் பள்ளமும் சமமாகிவிடும்” என்றார் அஸீஸ். கடைசியில் அவரின் இன்ஜினியரிங் மூளை வென்றது. மேமாதம் முதலாம் திகதி வேலையைத் தொடங்கத் திட்டமிட்டோம்.

“ஐம்பதுக்குப் பிந்திய வயதில் உங்களால் மண் வெட்ட முடியுமா..? மண் சுமக்க முடியுமா..?” என்று பரிதாபப் பட்டு நேரடியாகவே கேட்டு விட்டோம் சமராவிடம்.

வாழ்க்கையில் நான் எத்தனையோ மேடு பள்ளங்களைக் கண்டவன் என்று உள்ளூர நினைத்துக் கொண்டாரோ என்னவோ……

“ஒவ், மட்ட மேக்க அழுத்தெயக் நெமை…” என்றார். சுட்டெரிக்கும் வறுமையே அப்படிச் சொல்ல வைத்ததென ஊகித்து மௌனமானேன். அஸீஸ் கன்ட்டிராக்டர் போனதும் சமரா பின்னால் அவுட்டோர் பக்கமாகச் சென்று படிக்கட்டில் இருந்து கொண்டார்.

எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென்று ஸ்தம்பித்து. மெல்லமாக நகர்ந்து ஒரு பெரிய ஸ்டேஷனில் நின்றது.

நான் மூன்றாவது முறையாகச் சிற்றுண்டிச் சாலைக்குச் சென்று வந்து, சற்று கண் அயரத் தொடங்கினேன். வண்டி மீண்டும் அசைந்து. வேகத்தைக் கூட்டிக் கொண்டிருந்தது.

நான் தூங்குவதும், விழிப்பதும், விழித்திருப்பதும், தூங்குவதுமாக..

வண்டி பிரயாணிகளையும், பொதிகளையும் மட்டுமல்ல. ஒவ்வொருவரது எண்ணச் சுமைகளையும் சுமந்து இழுத்துக் கொண்டிருந்தது. இரைச்சல்களுடன்.

மீண்டும் சமராவின் முகம் என் மகன் கண்களுக்கு முன்னால்…. ஒரேயொரு முறை அந்த முகத்தை நேரடியாகப் பார்த்து விட்டால் தான் என் மனப்பாரம் நீங்கும். சமராவைக் கவனிக்கும் பொறுப்பை என்னிடமே விட்டிருந்தார் தகப்பனார்.

நான் அவருடன் உரையாடினேன்.

“உங்க ள் பெயர்….?”

“முதியான்சளாகே சமரா…”

“நீங்க வயசாளி. நாங்க எப்படி உங்களைப் பெயர் சொல்லி அழைப்பது…”

அவர் மௌனமாகச் சிரித்தார். “லொக்கு உன்னஹே என்று கூப்பிடவா…?” அவர் மீண்டும் சிரித்தார்.

“அப்ப சுருக்கமாக ‘லொக்கா’ என்று….?”

அதற்கும் விருப்பத்தைக் காணவில்லை. மௌனம் நிலவியது. அவரே சொன்னார்

“நீங்க இவ்வளவு அன்பாகப் பேசுறீங்களே! ஏன் ‘சீயா’ என்று கூப்பிட்டால் என்ன….?” அவ்வார்த்தை செவிகளுக்குச் சுவையாக இருந்தது.

‘சீயா அப்படி என்றால் பாட்டன். ஆம்! ஓர் உன்னதமான உறவு முறையும் வந்து விடுகிறதே. நாங்களும் அவ்வாறே அழைத்தோம். முதன் முதலில் நான் கேட்டேன்

“சீயா’ சாப்பிட்டீங்களா…….?”

ஒரு பெரிய பேரனைக் கண்டுவிட்ட திருப்தி அவர் முகத்தில்,

“ஓவ் மம காலாய் ஆவே புத்தா…..”

“தே வத்துர…..?”

“ஆங்…… காட்ட தென்ன…..”

சற்று நேரத்தில் ஒரு கிளாஸ் நிரம்ப பிளேன்டி கொடுத்தேன்.

சுடச் சுட எப்படித்தான் குடித்தாரோ, தாகமாக இருந்திருக்க வேண்டும். குடித்து விட்டு கிளாசை வெளிக் குழாயில் அலம்பிக் கொண்டு வந்து கொடுத்தார்.

மீண்டும் படியில் குந்தி. இடுப்பில் செருகி வைத்திருந்த ‘ஓமலை’ எடுத்து. கையை விட்டுத் துழாவி பச்சைப் பாக்கொன்றை பாக்கு வெட்டியால் இரண்டாகப் பிளந்து. உரித்துப் பக்குவமாக, சிறு துண்டுகளாக நறுக்கி. வெற்றிலை மீது வைத்து. துண்டுப் புகையிலை. காசுக்கட்டி, சுண்ணாம்பு முதலியன சேர்த்துக் கொண்டார்.

அப்புறம் தான் அந்தப் புதினம் நிகழ்ந்தது. பையிலிருந்து ஒரு வினோதப் பொருளை இழுத்தெடுத்தார்.

என் கண்கள் இமையாமல் மிகுந்த ஆர்வத்துடன் அதனை நோக்கின.

பொன்னிறமாகப் பளபளவென்று மின்னிக் கொண்டிருந்த அது ஒரு சிறு வெற்றிலை உரல். அழகாக பித்தளையினால் உருவாக்கப் பட்டிருந்தது. தயாராக வைத்திருந்த வெற்றிலைப் பாக்கையெல்லாம் அதற்குள் திணித்து இடது கையால் தரையில் ஊன்றிப் பிடித்துக் கொண்டு அதன் மேல் புற மூடிப் பகுதியை. வலது கையால் மேலும் கீழுமாக இழுத்திழுத்து இடிக்கத் தொடங்கினார். டங் டங் என்ற நாதம் கேட்பதற்கு ரசனையாக இருந்தது. இடித்த வெற்றிலையை உள்ளங்கையில் கொட்டிய போது, சிவப்பு நிறமாக மாறியிருந்தது. சற்று அண்ணாந்து வாயில் கொட்டி, மெதுவாக மென்று கொண்டே என்னைப் பார்த்து முறுவலித்தார்.

முகமெல்லாம் அரும்பிய வியர்வையைத் துடைத்துக் கொண்டே ‘கோடரி இருக்கா’ என்று கேட்டார். ‘கோடரி எதுக்கு’ என்று நான் சற்றுத் தாமதித்து விட்டு, உள்ளே சென்று. கொண்டு வந்து கொடுத்தேன்.

‘அவுட்டோரை’ ஒட்டி அடுக்கி வைக்கப் பட்டிருந்த விறகு கட்டைகளில் இருந்து சிலவற்றை எடுத்துப் பிளக்கத் தொடங்கினார். கொஞ்ச நேரத்தில் சிறு சிறு துண்டுகளாகக் குவிந்தன. சற்று ஓய்வெடுத்தபோது, கோடரியைப் பாராட்டினார். அடிக்கடி கல்லில் தேய்த்துப் பக்கங்களைக் கூராக்கிக் கொண்டார். ஆள் வேலைக்காரன் தான்!

எனக்கு ஒரேயொரு ஆசை அந்த மினுமினுப்பான பித்தளை உரலை எடுத்து மீண்டும் ஒரு முறை பார்க்கத் தூண்டியது. அவர் மீண்டும் எப்பொழுது வெற்றிலை இடிப்பாரோ……… காத்திருந்து படிகளில் இளைப்பாறிய போது எனது விருப்பத்தை வெளியிட்டேன்.

அவர் சப்தமிட்டுச் சிரித்தார். அப்புறம் உடனே பையிலிருந்து எடுத்துக் கொடுத்தார். உற்று உற்றுப் பார்த்தேன். ஒரு விளையாட்டுப் பொருள் மாதிரியே எனக்கிருந்தது. மிக அழகான வேலைப்பாடு.

அவர் செய்தது போல் முதலில் பாக்குத் துண்டை உரலில் போட்டு இடித்து. பின்பு மற்றவற்றையும் சேர்த்து இலேசாக இடித்தேன்.

பச்சை, வெள்ளை . காவி நிறங்கள் எல்லாம் இடிபட்டதும் சிவப்பாக மாறுகிறதே, வாயில் உமிழ் நீர் கலந்ததும் இரத்தச் சிவப்பாக மாறிவிடுமோ…..! என்ன அற்புதம்.

“சீயா இது எப்படி…?”

“புத்தா….எனக்கு விஞ்ஞானம் தெரியாது…ஆனால் என் மனதிலே ஒரு கருத்து படுகிறது. இன்னொரு நாளக்கி சொல்றேன்…” என்றார்.

சிறிது மௌனம்…மீண்டும் சொன்னார். ‘பல் இல்லாதவர்கள் தான் இப்படி இடித்துப் போடுவார்கள். பழக்கமில்லாதவர்கள் புகையிலை கலந்து போட்டால் தலை சுற்றும். நீங்கள் வெற்றிலை போட வேண்டாம்…பற்களில் கறை படியும். கறைபடிஞ்சா எந்தப் பொண்ணும் உங்களிட்ட வரமாட்டா..’ என்றார் நகைச்சுவையாக. நானும் சிரித்து விட்டேன்.

பல வருடங்களுக்கு முன் வெற்றிலை உரலை சந்தையில் வாங்கினாராம்.

“எனக்கு இப்படி ஒன்று வாங்கிக் கொண்டு வாருங்கள்” என்றேன். சமராவுக்குச் சிரிப்பு அடங்க நீண்ட நேரமாயிற்று. “கல்யாணம் கட்டுற வயசிலே உங்களுக்கு எதுக்கு?”

வேகமாகப் போய்க் கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் வண்டி டங் என்ற பயங்கர இரைச்சலுடன் மெதுவாக ஊர்ந்து டப்’ என்று அடங்கி விட்டது. பத்து நிமிட மௌனாஞ்சலிக்குப் பிறகு ‘சிக்னல்’ விழுந்து விட்டது போல் தெரிகிறது. சோகமாகப் போய் கொண்டிருந்தது.

அன்று சமராவின் சிரிப்பு அடங்கிச் சற்று நேர ஓய்வு எடுத்துக் கொண்ட பின். நான் இடித்து வைத்திருந்த வெற்றிலையை வாயில் போட்டுக் குதப்பிக் கொண்டிருந்து விட்டு மீண்டும் விறகு வெட்டத் தொடங்கினார்.

கணிசமான அளவு வெட்டிக் குவித்து விட்டிருந்தார். நீண்ட உழைப்பிற்கு பின். வேலை முடிந்து தேநீர் அருந்தி, இளைப்பாறி. மீண்டும் அந்தச் சதங்கை ஒலி….

சமராவை எங்களுக்குப் பிடித்திருந்தது. அவுட்டோர் அறையைத் தங்கக் கொடுத்து தொழிலாளியாக வைத்துக் கொள்ள விரும்பினோம். அன்றைய நாட் கூலியைக் கொடுத்து விட்டு எங்கள் தீர்மானத்தை வெளியிட்டோம்.

அப்படியே அசந்து போனார். அரசாங்க நியமனம் கிடைத்தது போல துள்ளி மகிழ்ந்தார்.

அவருடன் தொடர்பு கொள்வதிலிருந்து வேலைகளைக் கண் காணிப்பது. மாதச் சம்பள அடிப்படையில் பேசித் தீர்த்துக் கொள்வதிலிருந்து அனைத்துப் பொறுப்புக்களும் என்னிடமே ஒப்படைக்கப் பட்டது. .

நான் அவருடன் விரிவாகப் பேசி அவுட்டோர் அறையை ஒழுங்கு செய்து கொடுத்தேன்.

“நாளைக்கு உடுப்புப் பெட்டியுடன் வருகிறேன்.”

“சரி வாங்க….. வெற்றிலை உரலை மறந்து விடாதீங்க….” என்றேன்.

அவர் சிரித்துக் கொண்டே “உங்களுக்கு அந்த உரலில் தான் ஒரு கண்……… ஒரு நாளைக்கு சந்தைக்குப் போய் தேடிப்பார்க்கிறேன். ஆனால், நீங்கள் வெற்றிலை போடக் கூடாது. ஒரு ஞாபகப் பொருளாக வைத்துக் கொள்ளலாம். அதுதான் நல்லது” ஆழ்ந்த சிந்தனையுடன் அப்படிக் கூறினார்.

ஆனால் “புத்தா எனக்கு விஞ்ஞானம் தெரியா. ஆனால் என் மனதிலே ஒரு கருத்துப் படுகிறது. இன்னொரு நாளக்கி சொல்றேன்…” என்று சொன்னாரே! அது என்னவாக இருக்கும்……? தாம்பூலம் போட்டதும் உதடுகள் சிவப்பேறிப் போகும் அந்த அற்புதத்தைப் பற்றிச் சொல்ல நினைத்தாரோ…..! –

சமரா வேலைக்குச் சேர்ந்த நாள் தொடக்கம். அவருக்குக் கொடுக்கப் பட்ட பொறுப்புக்களில் ஒரு புதுப் பொலிவு காணப்பட்டது. பின் புறத் தோட்டத்தை பளிச்சென்று கூட்டிப் பெருக்குவார். கண்ணுக்குத் தெரியும் சிறு சிறு புல் பூண்டுகளை வேருடன் பிடுங்கிவிடுவார். பூச்செடிகளின் தாகத்தைத் தீர்த்து வைப்பார். கடைகளுக்குப் போய் வருவார். இப்படிப் பல பொறுப்புக்களைத் தாமே ஏற்றுச் சுமை தாங்கியானார்.

அதற்கிடையில் மண் வெட்டும் வேலை தொடங்கியது. அஸீஸ் கன்ட்டிராக்டர் அனுப்பிய ஆட்கள் தள்ளுவண்டி, கூடை. மண்வெட்டி. அலவாங்குகளுடன் வந்து இயந்திரமாக இயங்கிக் கொண்டிருந்தனர். இடைக்கிடை சமராவும் உதவினார். சொல்லப் போனால் திட்டம் அவருடையது தான்.

செவ்வக வடிவப் பூந் தோட்டத்தின் இடது பக்கத்திற்கு. அடியிலிருந்து அத்திவாரம் போட்டு மண் நிரப்பும் மட்டத்திற்கு மதில் சுவர் ஒன்றைக் கட்டி குரோட்டன் வேலி போட வேண்டும் என்பதில் சமரா மிகக் கவனமாக இருந்தார். அதிகாலையில் வெயில் ஏறுவதற்கு முன் கணிசமான அளவு மண்ணை இடித்துக் குவித்து வைத்திருப்பார்.

அவுட்டோர் அறையில் ஒரு சாக்குக் கட்டில் போடப் பட்டிருந்தது. சுவரில் சிறு கண்ணாடி. ஒரு சிறு மேசை. அதில் சில பொருட்கள். ஒரு மண்ணெண்ணெய் அடுப்பு. கேத்தல் இத்தியாதி… தேவையான நேரத்தில் தேநீர் தயாரித்துக் கொள்ளலாம். அப்போதும் அந்த உரலுக்குத் தான் மேசையில் முக்கிய இடம். ஞாயிற்றுக் கிழமை முழு நாள் லீவு. காலையில் வீட்டுக்குப் போய் மாலை இரவாக மாறும் போது திரும்பி விடுவார். வந்ததும். எல்லோருக்கும் தேநீர் கித்துல் கருப்பட்டித் துண்டைக் கடித்து மிடறு மிடறுகளாகச் சாயத்தை உறிஞ்சுவார்.

விளையாட்டாகத் தொடங்கி, நாட்கள் சுறுசுறுப்பாக ஓடி, ஒரு மாதமும் பிந்தி மீண்டும் பதினைந்து நாட்கள்….

வீட்டின் முன்றில், ஓர் அழகிய நீள் சதுரமாகக் காட்சியளித்தது. மேடு இடிப்பட்டதும் பின் புறமும் பளிச்சென அமைந்திருந்தது.

பட்’ செய்யப் பட்ட சில கனிவர்க்கக் கன்றுகள். மா, பலா, வாழை என்று பல மரக் கன்றுகளை வேலியோரமாகக் குழிகளை வெட்டி நாட்டினார்.

எந்த வேலையைச் செய்தாலும் முறையாக, பார்வைக்குக் கவர்ச்சியாகச் செய்து முடிப்பதில் சமர்த்தர் சமரா.

அஸீஸ் கன்ட்டிராக்டர் வந்து பார்வையிட்ட போது பிரமித்துப் போய்ச் சமராவைப் பாராட்டினார்.

முன்பக்கம் புற்றரையும் பூந்தோட்டமும் போட்ட பிறகு வந்து பார்க்கும் படி பணித்தார் சமரா.

எக்ஸ்பிரஸ் வண்டி இப்பொழுது எங்கே நின்று சுகதுக்கங்களை விசாரித்து. சுமைகளை இறக்கி ஏற்றிக் கொண்டிருக்கிறது என்று எட்டிப் பார்த்தேன். அநுராதபுர வெப்பத்தில் வெம்பிப் போய் வரும் எனக்காக சுகந்தமான தென்றல் காற்று வீசியது. சந்தேகமில்லை மலையகக் காற்றுத் தான்!

தூக்கக் கலக்கம் முற்றாகக் கலைந்து. இனி விழிப்பாக இருந்து கொள்ள வேண்டும்.

ரெயில் மீண்டும் புறப்பட்ட போது சமரா என் உள்ளத்தில் பதித்து வைத்திருக்கும் எண்ணச் சுவடுகளும் உயிர் பெற்றன.

இரண்டு வருடங்களுக்கு முன் அநுராதபுர மாவட்டத்தில் எனக்கு ஆசிரிய நியமனம் கிடைத்த போது எல்லோருடனும் சேர்ந்து மட்டற்ற மகிழ்ச்சியடைந்தார் சமரா…….

ஒரு பக்கம் மகிழ்ச்சி மறுபக்கம் பிரிவுத் துயர். “மேடு பள்ளங்களை நீக்கி கவர்ச்சியான தோட்டங்களை உருவாக்கிய சிற்பி நீங்கள். இனியும் இதைக் கட்டிக் காக்க வேண்டிய பொறுப்பு உங்களுடையது. தான்……..” என்று முதற் பயணத்தின் போது சிங்கள மொழியில் சொன்ன ஞாபகம். அதற்குப் பின் ஒவ்வொரு மாதமும் விடுமுறையில் வந்து தங்கி விட்டுச் செல்வேன்.

பூந்தோட்டம் நாளுக்கு நாள் அபிவிருத்தியடைந்து எழில் தோற்றம் பெற்றுக் கொண்டிருந்தது. முற்றத்தில் குடைபோன்ற ஒரு ஜேம் காய் மரம் நிழல் பரப்பிக் கொண்டிருந்தது.

புற்றரையைச் சரியாக நடுப்பகுதிக்கு மையப்படுத்தி ஓர் எழிற் கோலமாய் – பச்சைக் கம்பளம் விரித்தாற் போல உருவாக்குவதில் பலப்பல நுணுக்கங்களைக் கையாண்டுள்ளார். அவ்வாறே பூம் பாத்திகள். குரோட்டன் வரிசைகள், கனாஸ் செடிகள்……. இப்படியாகத் தாவரங்கள். நடுவதிலும் பராமரிப்பதிலும் அவருக்குரிய அனுபவங்கள் விசாலமானவைதான்.

சமரா ஒரு நாள் என்னை அழைத்து “……. புத்தா அங்க பாருங்க….. வயசான காலத்தில் உங்கட அப்பா மிகவும் சந்தோஷமாக ஜேம்காய் மரத்தடியில் இருந்து பத்திரிகை படித்துக் கொண்டிருக்கிறார். யார் எதைச் சொன்னாலும் பூந்தோட்டங்கள் கண்களுக்குக் குளிர்ச்சியாகவும்…… மனதிற்கு மகிழ்ச்சியையும் தான் தரும்…… பிரச்சினைகளையும் கவலைகளையும் மறந்திருக்க இது ஓர் அழகான சூழல்.

சமராவும் ஒவ்வொரு நாள் மாலையிலும் முகம் கை கால்கள் அலம்பி உடைமாற்றிக் கொண்டு பூந்தோட்டக் கேற்றில் அமர்ந்து ஓய்வெடுப்பார். இல்லாவிட்டால் தகப்பனாருடன் உரையாடிக் கொண்டிருப்பார். உதடுகளில் வெற்றிலைச் சிவப்பேறியிருக்கும். அவுட்டோரும். வீடும் தோட்டம் அவருக்குப் பிடித்துப் போய் விட்டிருந்தது. அவர் கையில் தஞ்சமடைந்திருக்கும் வெற்றிலை உரல் என்னைப் பார்த்துச் சிரிக்கும். சமரா எங்கள் வீட்டில் ஒருவராகி ‘சீயா’ என்னும் மகத்தான உறவை வித்திட்டு விருட்சமான பின் அவருக்கு இன்னின்ன வேலைகள் என்று பொறுப்பில்லை. எல்லாவற்றிலும் அவரது பங்களிப்பும், கண்காணிப்பும் மேற்பார்வையும் இருந்தது.

எங்கள் வீட்டிலிருந்து ஒன்றரை கிலோமீற்றர் தூரத்தில் ‘கரஹன்துங்கல’ என்னும் இடத்தில் சமராவுக்குச் சொந்தமாக ஒரு சிறு வீடு பரம்பரைச் சொத்து. மனைவியும் மகனும் மகளும் தான் அதில் குடியிருப்பாளர்கள் மகன் தச்சு வேலை. திருமணத்திற்குப் பின். தனி வீடும் வளவும் கிடைத்தது. அதனால், சமராவின் வீடு குடும்பமாக வாழும் மக்களுக்கே உரிமையாக்கப் பட்டது. சமராவுக்குக் குடும்பப் பிரச்சினைகள் இல்லை .

எக்ஸ்பிரஸ் ரயில் மீண்டும் வேகத்தைக் குறைத்த போது,

கைக் கடிகாரத்தைப் பார்த்து விட்டு அடிக்கடி இடது கையை ஜன்னலினூடாக வெளியே நீட்டினேன். எங்கே சாடையாக மழைத் துளிகள் பட்டுத் தெறிக்கின்றனவா என்று பரீட்சித்துப் பார்ப்பதில் எனக்கு மிகுந்த ஆர்வம். மழைத்துளிகள் பட்டுத் தெறித்து ஊர்ந்து சென்று ஒரு நிலையத்தில் நின்றால் சந்தேகமில்லை. அது எங்கள் ஊர் ‘ரயில்வே நகரம் தான்’

மழைக்குணம் விரவிக் கிடந்தது. குளிர் காற்று வேறு.

வண்டி நின்றதும் ஸ்டேஷனை விட்டு வெளியேறி……. கால் மணி நேரத்திற்குள் நடந்து விடலாம் தான் – ஆனால், வெளியில் பழக்கமான ஆட்டாக்கார பையனின் வரவேற்பை நிராகரிக்க முடியாது. பரவாயில்லை’ என்று ஆட்டாவில் ஏறினேன். தெருக்கள் சந்தடியின்றி வெறிச்சோடிக் கிடந்தன. வீடடை அடைந்தபோது ஆர்வம் கிளர்ந்தெழுந்தது. அழைப்பு மணியின் விசையை அழுத்திய சில நிமிடங்களில் முன் வாசல் முன் விளக்கு எரிந்தது.

அந்த மின்னொளியில் பூந்தோட்டம் பளிச்சென்று சமராவின் கைவண்ணத்தைப் பறைசாற்றிக் கொண்டிருந்தது.

உள்ளே சென்றதும் தான் அந்தச் சோகம் நெஞ்சை உலுக்கியது.

கடிதம் கிடைத்துத் தான் நான் புறப்பட்டேன். அதற்குப் பின் அனுப்பிய தந்தி? நான் லீவு முடிந்து கடமைக்குத் திரும்பிய பிறகுதான் கிடைக்குமோ?

இரண்டு நாட்களுக்கு முன் நகரத்தின் ஆதார மருத்து மனையின் அவசரப் பிரிவில் அனுமதித்திருக்கிறார்கள். ஒவ்வொரு கணமும் என்னை எதிர்பார்த்து. நான் இல்லாத குறைபாட்டை நிறைவு செய்வதற்கு தகப்பனார் தான் ஓடியோடி ஆட்களைப் பிடித்து. ஒரு குறையும் இல்லாமல் சகலவற்றிற்கும் முன்னின்று கவனித்து. விதியோடு போராடி. தோற்றுக் களைத்துப் போயிருந்தார்.

அவுட்டோர் இருள் சூழ்ந்து கிடந்தது.

‘சீயா’ என்ற அந்த உன் னதமான பாசத்தை விதைத்து. விருட்சமாக்கி. அனைவரது உள்ளங்களையும் ஆக்கிரமித்திருந்தார். இருளடைந்து போயிருக்கும் அவுட்டோருக்கு ஒளியேற்ற இனி சீயா வரமாட்டார். அவர் உருவாக்கிய மகத்தான பூந்தோட்டம் முன் மாதிரியாகக் கிடக்கிறது. எங்கிருந தோ வந்த புதுப்புது விருந்தாளியாகப் பறவைகள் எல்லாம் சோகத்தில் மூழ்கி அந்த ஜேம் காய் மரத்தில் தஞ்சமடைந்து கீச் கீச் என்று சோக கீதம் இசைத்து கண்ணீர் அஞ்சலி’ செலுத்திக் கொண்டிருக்கின்றன.

காலை பத்து மணிக்கு சமராவின் வீட்டிற்குச் சென்றிருந்தேன்.

மகனும் மகளும் வந்து கண்கலங்கி நின்றார்கள். “உங்களைத் தான் ஞாபகப் படுத்திக் கொண்டிருந்தார்…….” என்றாள் மகள்.

என் கண்களும் கண்ணீரால் நிரம்பின. சற்று நேரத்தில் உள்ளே சென்றவர் ஒரு சிறு பொட்டலத்தைக் கொண்டு வந்து –

“இதை உங்களிடம் ஒப்படைக்கும் படி கூறியிருந்தார்……..” என்றாள்.

நான் கண்களைத் துடைத்துக் கொண்டு அவசரமாக அந்த பார்சலைப் பிரித்தேன். உள்ளே கபில நிறத்தில் ஒரு பை. கையை விட்டுத் துழாவி வெளியே இழுத்தெடுத்தேன்.

பளபளவென்று மின்னும் அந்தப் பித்தளை வெற்றிலை உரல் என் இதயத்தை குத்தியது. அத்துடன் ஒரு குறிப்பு.

“புத்தா! வெற்றிலை உரலில் வெற்றிலை. பாக்கு. சுண்ணாம்பு, புகையிலை என்று பல நிறப் பொருட்களைப் போட்டு இடிக்கும் போது இரத்தச் சிவப்பாக மாறுகிறதே….! இது எதனைக் காட்டுகிறது…? நான் சற்று நிறுத்தி கண்களைத் துடைத்து விட்டு மீண்டும் தொடர்ந்தேன்.

மானுடப் பிறவி உலகமெங்கும் பரந்து கறுப்பு வெள்ளை நிறத்தவர்களாக…பல இனத்தவர்களாகப் பல தேசத்தவர்களாக வாழ்ந்தாலும்…அவர்களது உடம்புகளில் ஓடும் இரத்தம் ஒரே சிவப்பு நிறம் என்பதைத் தானே இது உணர்த்துகிறது…”

சமராவின் இந்தக் குறிப்பைப் படித்ததும் வெறும் கவர்ச்சிப் பொருளாகக் காட்சியளித்த அந்த வெற்றிலை உரல் மீது எனக்கிருந்த மோகம் என்னும் இறுக ஆரம்பித்தது.

– தினகரன் 1999.

– நாம் பயணித்த புகைவண்டி (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: 2003, மல்லிகைப் பந்தல் வெளியீடு, கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *