ஜாதிகள் இருக்குதடி பாப்பா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 11, 2018
பார்வையிட்டோர்: 4,332 
 
 

திருநெல்வேலி ஆல் இண்டியா ரேடியோவில் ஏதோவொரு நிகழ்ச்சி மெதுவாக ஒலி பரப்பாகிக் கொண்டிருந்தது…

“வணக்கங்க அண்ணாச்சி…”

வீட்டில் அமர்ந்து கணக்குப் பார்த்துக் கொண்டிருந்த கோட்டைசாமி நிமிர்ந்து பார்த்தார்

“அடடே ஏகாம்பர அண்ணாச்சியா…வாங்க. சொகமா இருக்கீயளா? மொபைல்ல வாரேன்னு ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்லா…”

“நம்ம ஜாதி சங்கம் ஜோலியா தூத்துக்குடி வரை வந்தேன்…வந்த வேலை சீக்கிரம் முடிஞ்சிருச்சு.. உடனே உங்க ஞாபகம் வந்திச்சு.. அப்படியே கிளம்பி இங்கன வாரேன்.”

எதிரே அமர்ந்தார் ஏகாம்பரம்.

“நம்ம சங்கத்து சமாச்சாரம் எல்லாம் எப்படி இருக்கு?” கோட்டைசாமி கேட்டார்.

“எல்லாம் சூப்பரா இருக்கு…”

கோட்டைசாமி மூக்குப்பொடியை எடுத்து நாசித்துவாரத்தின் உள்ளே திணித்துக்கொண்டு, “அதுல பாருங்க, இந்த ஒலகம் பூராவும் ஒவ்வொரு கவர்ன்மென்டுக்கும் ஒவ்வொரு கொடி இருக்கு. அதேமாதிரி ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொடி இருக்கு… சரிதான?”

“சரிதான் அண்ணாச்சி…”

“இன்னும் சொல்லப்போனா சாமிகளுக்கேகூட கொடியிருக்கு… முருகன் சேவல்கொடி அதனாலதான வச்சிருக்காரு…”

“ஆமா அண்ணாச்சி….”

“ஏன் நாமும் அந்தமாதிரி தனியா நம்ம ஜாதிக்குன்னு ஒரு கொடியை வச்சிக்கக் கூடாது?”

“ரொம்ப நியாயமான கேள்விதான்….”

“நாம ஒண்ணும் எதோ நாலஞ்சி ஊர்ல மட்டும் இருக்கிற மைனாரிட்டி ஜாதி கிடையாதே. இன்னி தேதிக்கு தொண்ணுத்தாறு லச்சம்பேருக்கு மேல இருப்பம் போலிருக்கே…!”

“ஒரு கட்சி ஆரம்பிச்சோம்னா இந்த கவர்ன்மென்ட்டையே புடிச்சிடலாம் அண்ணாச்சி…”

“மதச் சார்பற்ற நாடுன்னு மேடைக்கு மேடை பேசுவானுக அயோக்கியப் பயலுவ. ஆனா ரத யாத்திரை விடுவாணுவ; லிங்காயத் ஜாதியை ஓட்டுக்காக மதமா மாத்துவாணுவ; இப்ப கர்நாடகத்துல பாத்தீக இல்ல… உலகத்துலேயே ஜாதி, மதத்தை வைத்து அரசியல் பண்ணுவது இந்தியாவுல மட்டும்தான். அதுக்குதான் சொல்றேன்.. நம்ம ஜாதிக்குன்னு லச்சணமா ஒரு கொடி வேணும்…

“கண்டிப்பா பண்ணிரலாம். நீங்களே இதை நம்ம அடுத்த மீட்டிங்ல சொல்லுங்க. எவனெவனோ என்னவெல்லாமோ செய்துகிட்டிருக்கான். தமிழக அரசியல்ல ஏதோ இப்ப வெற்றிடமாம்ல…சொல்லுதாய்ங்க.”

“நம்ம கொடியை, நம்ம ஜாதிக்காரன் எல்லோரும் அவனவன் வீட்டுக் கூரையில கட்டாயமா பறக்க விடணும்…”

“அதோட நாம கட்டியிருக்கிற ஸ்கூலு; காலேஜ்; பாலிடெக்னிக்லேயும் நம்ம ஜாதிக்கொடியை பறக்கவிடனும் அண்ணாச்சி…”

“அதயெல்லாம் பாத்தாத்தான் மத்த ஜாதிக்காரனுங்க கொஞ்சம் அடங்கி ஒடுங்கி இருப்பானுங்க. ஏன்னா நாடு போற போக்கு ஒண்ணும் சரியில்ல. தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரனா ஆயிட்டு வரான். அதனால இப்பத்துலேருந்தே நாமெல்லோரும் ஒருகொடியின் கீழ் வந்திரணும். அப்பிடி வந்தாத்தான் தப்பிச்சோம். இல்லேன்னா துண்டைக் காணோம்; தோளைக் காணோம்னு ஓடத்தான் வேண்டியிருக்கும்…”

“நாம எதுக்குங்க அண்ணாச்சி ஓடப் போறோம்? நம்ம கிட்ட ஜனம் இல்லையா; பணம் இல்லையா…எது இல்லை நம்மகிட்ட? வருமானவரி ஜாஸ்தி கட்டற ஜாதி யார்ரான்னா நாமதான்னு சொல்றான்…நாமெல்லாம் கடையை ஒரு நாலு நாளைக்கு இழுத்துப் பூட்டினோம்னா… அவ்வளவுதான் காலி இந்த ஜனங்க.”

“கடைன்னு சொன்னதும் ஞாபகம் வருது… நீங்க தென்காசியில ஒருகடை போடப்போறதா சொன்னீயளே… ஆரமிச்சீயளா இல்லையா?” – கோட்டைசாமி கேட்டார்.

“ஓ சித்திரை ஒண்ணுலையே ஆரம்பிச்சிட்டேனே…”

“யாரு அந்தக் கடையை பாத்துக்கறது?”

“என் தங்கச்சி மவன்தான்.”

“எனக்குகூட ஒரு நல்ல நாணயமான பையன் வேணும்…”

“எந்த ஊரு கடைக்கு?”

“சாத்தான்குளம் கடைக்கு.”

“என்னங்க அண்ணாச்சி புதுசா சொல்லுதீக… சாத்தான்குளத்துலேயா கடை தொறந்திருக்கீங்க? சொல்லவேயில்ல. போதலையாக்கும் சம்பாரிச்சிருக்கிற பணம்? – ஏகாம்பரம் வியந்தார்.

“என்ன அண்ணாச்சி இப்படிக் கேக்கீங்க. இருக்கிற பணம் போதும்னு இந்தக் காலத்துல எவனாவது சொல்வானா?”

அப்போது வாசலை ஒட்டிய தாழ்வாரத்தில் “நமஸ்காரம் முதலாளி” என்ற குரல் கேட்டது. கோட்டைசாமி திரும்பிப் பார்த்தார்.

பிள்ளையார் கோவில் குருக்கள் விஸ்வநாத ஐயர் நின்று கொண்டிருந்தார்.

“என்ன ஐயரே?” கோட்டைசாமி உரத்த குரலில் கேட்டார்.

விஸ்வநாத ஐயர் தலையைச் சொறிந்தபடி தயக்கத்துடன் நின்றார்.

“மொதல்ல இப்படி உள்ளார வந்து நில்லும்… என்ன விசயம்?”

ஐயர் மெதுவாக உள்ளே வந்து ஓரமாக நின்றவுடன், “முதலாளி எனக்கு ஒரு உபகாரம் பண்ணனும்.” என்றார்.

“என்ன உபகாரம்?”

“என் ரெண்டாவது பையனுக்கு படிப்பு ஏறவே மாட்டேங்குது. ஏதாவது வேலைக்குப் போகிறேன்னு அடம் புடிக்கான்… முதலாளிதான் உங்களோட ஏதாவது ஒரு கடையில வேலை போட்டுத்தரணும்.”

“அதான பாத்தேன்… சோழியன் குடுமி சும்மா ஆடுமாண்ணு… சும்மா நீ வரமாட்டியே…”

“சின்ன எடுபிடி வேலை போட்டுக் கொடுத்தாகூடப் போதும்… பொழச்சிப்பான்.”

“நான் வேலை போட்டுக் கொடுக்கலைன்னா உன் மவன் பொழைச்சுக்க மாட்டானா? இந்தக் காது குத்தற சோலிதான் வேண்டாங்கிறேன்…” கோட்டைசாமி இடக்காகச் சொன்னார்.

“மொதலாளி சரின்னு சொன்னா.. நான் அவனை இப்பவே இங்க அழைச்சிண்டு வரேன். நீங்களும் ஒருதடவை அவனைப் பார்த்துட்டேள்னா நல்லது…”

“அவனுக்கு நான் வேலை குடுக்கறதா இருந்தாத்தானே நல்லது?”

“மொதலாளி அப்படிச் சொல்லப்படாது. நாப்பது ஐம்பது ஊர்ல கடை வெச்சிருக்கேள்… எந்த ஊர்க் கடையாக இருந்தாலும் பரவாயில்ல. நீங்கதான் அவனுக்கு ஒருவழி செய்யணும். உங்களை நம்பி வந்துட்டேன். தயவுபண்ணி முடியாதுன்னு மட்டும் சொல்லிடாதீங்கோ.”

“அது மட்டும் என்னால முடியாது ஐயரே…”

“என்ன வேலையா இருந்தாலும் பரவாயில்லை குடுங்கோ. மாடா ஒழச்சிக் காட்டுவான்.”

“மாடா ஒழைக்கிறதுக்கு என் ஜாதிக்காரனே எங்கிட்ட ஆயிரம் பேர் இருக்கான் ஐயரே…”

“அந்த ஆயிரத்துல இவனும் ஒருத்தனா இருந்துட்டுப் போகட்டும்… தயவு பண்ணி என் பிள்ளைக்கு ஒரு வேலை போட்டுக் கொடுங்கோ…”

அப்போது தோளில் கிடந்த துண்டை எடுத்து அக்குளின் இடுக்கில் வைத்துக்கொண்டு சுப்பையா பணிவுடன் உள்ளே வருவதைப் பார்த்தார் கோட்டைசாமி.

“சுப்பையா அப்படிப் போயி நில்லு. ஐயரை அனுப்பிட்டு ஒன்கூடப் பேசுதேன்.”

சுப்பையா உடனே தள்ளிப்போய் நின்றுகொண்டான்.

“விசயம் அதில்லை ஐயரே… வேற ஜாதிக்காரன் எவனுக்கும் என் கடையில நான் வேலை தர்றது இல்ல. என் பாலிசி அது.”

“ஸ்கூல் கட்டியிருக்கேள்; காலேஜ் கட்டியிருக்கேள். நீங்கள் சொல்லக்கூடாது இந்த வார்த்தையை….”

“ஆமாம் அதெல்லாம் எங்க ஜாதிக்காரனுக்கு கட்டியிருக்கேன். நீயும் ஒங்க ஜாதிக்காரனை சேத்து அந்தமாதிரி கட்டு. நானா வேண்டாங்கறேன்?”

“ஐயா மனசு வச்சா இந்த உபகாரத்தை என் பிள்ளைக்கு செய்யலாம்…”

“மனசு இல்லேன்னுதான் சொல்லிட்டேனே. வேத்து ஜாதிக்காரன் எவனுக்கும் நான் வேலை குடுக்கறதா இல்லை….மொதல்ல இடத்தைக் காலி பண்ணு.”

விஸ்வநாத ஐயர் சோகத்துடன் தலை குனிந்தபடி வெளியேறினார்.

சில நிமிடங்கள் அங்கு மெளனம் நிலவியது.

“என்னடா சுப்பையா நாலஞ்சி நாளாவே உன்னை எதிர்பாத்திட்டு இருக்கேன்… அர்ஜன்ஸி புரியாம ஆடி அசைஞ்சி நிதானமா வரே கோட்டிக்காரப் பயலே…”

“என் சொந்த ஜோலியா ரெண்டு நாள் சாத்தூருக்கு போயிட்டேன் எசமான். அதான் வர முடியல.”

“சரி, நான் சொன்ன விவரம் என்னாச்சு?”

சுப்பையா அங்கிருந்த ஏகாம்பரத்தைப் பார்த்துத் தயங்கினான்.

“சும்மா சொல்றா… அவரு நம்ம அண்ணாச்சிதான்.”

“ஒரு அம்சமான செவத்த புள்ளையா பாத்துப் பேசி வெச்சிருக்கேங்க எசமான்…”

“நான் சொன்னாப்லதான?”

“இல்லீங்க எசமான். இது வேறங்க. ரொம்ப நல்ல குடும்பம். ஊரு பொட்டல். கல்யாணமாகி ஒரு வருஷத்துல புருசன்காரன் செத்துப் போயிட்டானாம். ரொம்ப நல்ல புள்ளைங்க எசமான்.. நீங்க பாத்து சரின்னு சொன்னா முடிச்சிரலாம். பொட்டல்லயே ஒரு வீடு பாத்து வச்சிக்கிட்டீங்கன்னா அது பாட்டுக்கு இருக்கும். ஓரு தொந்திரவும் இருக்காது…”

“ஏண்டா கோட்டிக்காரப் பயலே… ஒனக்கு நான் என்ன சொன்னேன்?”

சுப்பையா ஒரு நிமிஷம் திருதிருவென முழித்தான்.

“போச்சி போ… நான் என்ன சொன்னேங்கறதையே மறந்துட்டீயா?”

“அய்யய்யோ மறக்கலீங்க எஜமான். இந்தப் புள்ளை ரொம்ப அளகா இருக்கேன்னு ஓங்ககிட்ட சொல்ல ஓடிவந்தேன்…”

“எவ்வளவு அழகா இருந்தாலும் வேண்டாம். புரியுதா? நான் சொன்ன மாதிரி ஒருத்தி இருந்தா பேசி முடி; முடியலைன்னா இப்பவே சொல்லிடு. நான் வேற யாரையாவது வச்சி ஏற்பாடு பண்ணிக்கிறேன்…”

“நானே முடிச்சுத்தாரேன் எசமான்… ஒரு பத்துநாள் டைம் குடுங்க.”

“”சரி. ஆனா நான் சொன்ன மாதிரிதான் எனக்கு வேணும்…”

“சரிங்க எசமான்… அப்படியே பாத்து ஏற்பாடு பண்ணுதேன். இப்ப உத்தரவு வாங்கிக்கிறேன்.”

சுப்பையா சரேலென வெளியேறினான்.

ஏகாம்பரம் பொம்மை போல அமர்ந்திருந்தார்.

“அது வேற ஒண்ணுமில்லீங்க அண்ணாச்சி, எனக்கு எப்பவுமே சைடுல ஒண்ணு வச்சிக்கிற பழக்கம் உண்டுண்ணு ஒங்களுக்கும் நல்லா தெரிஞ்ச விஷயம்தானே… இப்பக் கொஞ்ச நாளா எனக்குன்னு யாரும் இல்ல.”

“ஏன் அந்த கோவில்பட்டிக்காரி சரோஜா என்ன ஆச்சு?”

“அய்யய்ய… அந்தக் களுதைய அடிச்சி வெரட்டிட்டேன்.”

“ஓ… அதுக்குத்தான் இந்த சுப்பையா வந்துட்டுப் போனானா?”

“அதுல பாருங்க, நானும் பல ஜாதிப் பொம்பளைங்கள இதுவரைக்கும் வச்சிப் பாத்துட்டேன்… ஆனா இந்தப் பாப்பாரப் பொம்பளைங்களைத்தான் இதுவரைக்கும் நான் வச்சிப் பாக்கவே இல்லை. அதான் இந்தத் தடவை அதையும் வச்சிப் பாத்திரலாம்னு முடிவுசெஞ்சு, இந்தப் பயலிடம் படிச்சு படிச்சு சொல்லி அனுப்பிச்சா, வேற எவளையோ பேசி முடிவு பண்ணிட்டு வந்து நிக்கான்… சனியன் பிடிச்சவன். அதான் தொரத்தினேன்… என்ன சொல்லுதீய?”

“அது சரி அண்ணாச்சி, பணம் எக்கச்சக்கமா இருக்கு, அனுபவிக்க வேண்டியதுதானே? வேற என்னத்தைக் காணப்போறோம் நாமும் வாழ்க்கையில்…” ஏகாம்பரம் ஒத்துப் பாடினார்.

திருநெல்வேலி ஆல் இண்டியா ரேடியோவில் பாரதியாரின் ‘ஜாதிகள் இல்லையடி பாப்பா’ பாடல் ஒலி பரப்பாகிக் கொண்டிருந்தது.

Print Friendly, PDF & Email
என் பெயர் எஸ்.கண்ணன். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். முதல் நான்கு கதைகள் ஆனந்தவிகடனில் வெளிவந்தது. இவரது 'தாக்கம்' சிறுகதை கலைமகள் நடத்திய அமரர் கா.கா.ஸ்ரீ.ஸ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டியில் 2003 ம் ஆண்டிற்கான முதல் பரிசை பெற்றது. 'புலன் விசாரணை' 1990 ம் ஆண்டிற்கான அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் பிரசுரமானது. ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம் 2015ம் ஆண்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது 'மனிதர்களில் ஒரு மனிதன்'…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *