காந்தி பக்தன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 17, 2023
பார்வையிட்டோர்: 1,712 
 

(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நீண்ட இடைவெளிக்குப் பின்பு பஸ்ஸில் பயணஞ் செய்ய சந்தர்ப்பம் கிடைத்தமையால் டேவிட்டின் அறிமுகம் கிட்டியது.

பெரும்பாலும் காரிலேயே பயணங்களை மேற்கொண்டு வந்த எனக்கு மாரடைப்பு வந்ததன் பின்பு குறைந்தது மூன்று மாத காலத்திற்காவது காரைச் செலுத்தக்கூடாது என்று சிகிச்சை அளித்து, சத்திர சிகிச்சைக்கான நாளும் குறித்தனுப்பிய டாக்டரின் கண்டிப்பான உத்தரவு.

இந்த பஸ் பயணம்தான் எவ்வளவு இனிமையானது, சுவாரஸ்யம் நிரம்பியது. யன்னலருகே அமர்ந்து கடந்து செல்லும் காட்சிகளை ரசிக்கலாம். ஏறி இறங்கும் பயணிகளை, அவர்களின் உரையாடலை, சிரிப்பை, கோபத்தை, ஏன்… நவரசங்களையும் நேரில் தரிசிக்கலாம்.

கல்லூரிகளுக்குச் சென்று, திரும்பும் மாணவர்களின் அழகான நேர்த்தியான சீருடைகளை, பஸ்ஸினுள்ளே அவர்கள் உதிரும் அட்டகாசமான சிரிப்பலைகளை, கோமாளித்தனங்களை, சாரதியைச் சீண்டும் குறும்புத்தனங்களை ரசிப்பதோடு மேக்கப்புடன் பயணிக்கும் நங்கை யாரிடமிருந்து பரவும் ‘ஃபெர்பி யூம்’ வாசனையையும் நுகரலாம்.

இத்தகைய பரவசமான அனுபவங்களை நானே எனது காரைச் செலுத்திச் செல்லும்போது பெற முடியாதல்லவா?

வீதி ஒழுங்குகளையும், முன் – பின், அருகில் விரையும் இதர வாகனங்களையும் கண்ணாடிகளுடாக கவனித்தவாறு, கண்ணும் கருத்துமாக காரைச் செலுத்த வேண்டும்.

பஸ்ஸிலே இந்தத் துன்பங்கள் இல்லை.

சாரதி அனைத்தையும் சுமக்கிறார்.பாவம். அவுஸ்திரேலியாவில் தொடர்ச்சியான கார் பயணத்தால் நிறையவே இழந்துவிட்டேன். சரி. இனி ஆரம்பத்தில் குறிப்பிட்ட டேவிட் பற்றிச் சொல்ல வேண்டும்.

வீட்டுக்குத் திரும்புவதற்காக ஒருநாள் பஸ் தரிப்பிடத்தில் நின்றபோதுதான் அவன் அறிமுகமானான்.

மெலிந்த, குட்டையான தோற்றம். தலையின் பின்புறம் எத்தனை மயிர்கள் இருக்கின்றன?… எண்ணிவிடலாம். கையிலே சிறிய தோல் பேக்

அவனுக்கும் என்னைப் போல் எதிர்பாராத விதமாக ஏதோ நோய் வந்து டாக்டர்களின் உத்தரவு பிரகாரம் காரைச் செலுத்தாமல், அதனை வீட்டின் கராஜில் தரித்து வைத்துவிட்டுத்தான் பஸ் பயணங்களை மேற்கொள்கிறானோ என்று தான் முதலில் நினைத்தேன்.

பின்னர்தான், அவனிடம் காரே இல்லையென்பதை, அவன் மூலமாகவே அறிந்து கொண்டேன். கொடுத்து வைத்தவன். நிறைய ரசித்திருப்பான் பஸ், ரயில், டாக்ஸி பயணங்களில்.

அவுஸ்திரேலியாவில் பெரும்பாலானவர்களிடம் கார் இருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ஒரு கார் இருக்கலாம். சில வீடுகளில் மூன்றுக்கும் அதிகம். கணவனுக்கு, மனைவிக்கு, பிள்ளைக்கு. பல பல்கலைக்கழக மாணவர்கள் சொந்தமாக கார் வைத்திருக்கிறார்கள். பகுதிநேர வேலையை எங்காவது செய்து சம்பாதிப்பார்கள். விரிவுரைக்குச் செல்லவும், வேலைக்கு ஓடவும், வீடு திரும்பவும் பொதுப் போக்குவரத்து சேவைகளை நம்பியிருக்கமாட்டார்கள்.

ஆனால், இந்த டேவிட் அவுஸ்திரேலியாவுக்கு வந்தது முதல் கார் இல்லாமலேயே காலத்தைக் கடத்தியிருக்கிறான் என்பதை அவனுடனான உரையாடல்களில் அறிந்து கொண்டேன்.

பஸ் வந்தது. நடத்துனர் இல்லாத பஸ் சாரதியே டிக்கட் தருவார். இரண்டு மணிநேரப் முழுநாள் பயணம், முழுக்கட்டணம், சலுகைக் கட்டணம் ZONE 1-2-3 எனத் தரம் பிரிக்கப்பட்டு விலை மாற்றங்களுடன் விநியோகிக்கப்படுகிறது.

“இந்தியாவிலும் இந்த நடைமுறை அமுல் படுத்தப்பட்டால் நன்றாக இருக்கும் அல்லவா?” அவன் என்னையும் ஒரு இந்தியன் என நினைத்துக் கொண்டுதான் அப்படிச் சொல்லியிருக்க வேண்டும்.

அவனது ஆங்கில உச்சரிப்பிலிருந்து அவனை இந்தியன் என்று புரிந்து கொண்டேன். அவன் சொன்னதைக் கேட்டுச் சிரித்தேன். பதிலுக்கு ஒன்றும் சொல்லாமல் தலையாட்டினேன். பஸ்ஸினுள்ளே போதியளவு ஆசனங்கள் பயணிகள் இல்லாமல் காலியாக இருந்தன. இருப்பவர்களையும் இலகுவாக எண்ணிப்பார்த்து விடலாம். இங்கே பெரும்பாலானவர்கள் சொந்தமாக வாகனம் வைத்திருப்பதற்கு இந்தக் காட்சியே சிறந்த சாட்சி.

யன்னலோரமாக ஒரு ஆசனத்தில் அமர்ந்துவிட்ட குறையிலிருந்து புத்தகத்தை படிக்கலானேன். எனக்கு முன்புறமிருந்த ஆசனத்தில் வந்தமர்ந்த டேவிட், முகம் திரும்பி “தமிழரா?” எனக் கேட்டான்.

“ஆம்… ஸ்ரீலங்கா” என்றேன்.

“நான்… டேவிட்…கல்கத்தா” கையை நீட்டினான். நானும் நீட்டினேன். குலுக்கிக் கொண்டோம். அவன் முகம் திருப்பாமலேயே பேசத் தொடங்கினான்.

அவன் காலையிலேயே மது அருந்தியிருக்க வேண்டும். வாடை வீசியது. சகித்துக் கொண்டேன். மூக்கைச் செறியும் பாங்கில் நாகரீகமாக எனது மூக்கை தடவிக் கொண்டேன்.

அவனுக்குப் புரிந்திருக்க வேண்டும்.

“உங்களைத் தொந்தரவு செய்துவிட்டேன் போலத் தெரிகிறது… நீங்கள் படியுங்கள்” அவன் மறுபக்கம் முகம் திருப்பி சாரதியைப் பார்த்தான். விட்டது தொல்லை என்ற களிப்போடு புத்தகத்தில் மூழ்கினேன்.

பஸ் இன்னமும் புறப்படாமல் தாமதிக்கிறது.

எங்கள் ஊருக்குச் செல்லும் பஸ். அருகிலிருக்கும் ஒரே ஒரு மேடையைக் கொண்ட சிறிய ரயில் நிலையத்துக்கு தலைநகரம் மெல்பனிலிருந்து வரவேண்டிய ரயிலுக்காக இந்த பஸ் காத்து நிற்கிறது என நினைத்துக் கொண்டேன்.

சாரதியும், ரயிலை எதிர்பார்த்து, இந்த பஸ்ஸில் ஏறுவதற்கு வரவுள்ள எங்கள் ஊர் பயணிகளுக்காக காத்திருக்கின்றார்.

வெளியே ஈரம் கசியும் குளிர்காற்று.

சாரதிக்கு இந்த இடைவெளியில் புகைக்கத் தோன்றியிருக்க வேண்டும். பஸ்ஸினுள்ளே புகைக்க முடியாது. இங்கே சட்டத்தைப் பேணும் சாரதிகள்.

சாரதி இறங்கி, வெளியே பஸ் தரிப்பிடத்தில் நின்று சிகரட்டை புகைக்கத் தொடங்கினார். ரயிலின் தாமதம் அவரை சுகானுபவத்தில் திழைக்க வைத்தது. டேவிட்டுக்கும் அதில் திழைக்க விருப்பம் வந்திருக்கும்.

அவனும் எழுந்து சென்று சாரதியிடம் ஒரு சிகரட்டை வாங்கி பற்ற வைத்துக் கொண்டதை அவதானித்தேன். இருவரும் உரையாடினார்கள்.

டேவிட்டின் குரல்தான் உரத்துக் கேட்கிறது.

எவருடனுமாவது பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற பழக்கத்தை அவன் வழக்கமாக்கிக் கொண்டிருக்க வேண்டும்.

ரயில் வந்தது, சில பயணிகளும் வந்து பஸ்ஸில் ஏறினர்.

சாரதி, சிகரட்டை பாதியில் வீசிவிட்டு ஏறினார். டேவிட்டையும் ஏறுமாறு துரிதப்படுத்தினார். அவனுக்கோ அதனை வீச மனமின்றி பாதியில் எரிந்து கொண்டிருந்ததை இறுதியாகவும் ஒரு ‘தம்’ இழுத்துவிட்டு எறிந்த பின்புதான் ஏறினான்.

அவனது தோல் பேக் அவனுக்காக ஆசனத்தில் காத்திருந்தது.

பயணிகளைப் பார்த்து சுகம் விசாரித்துக் கொண்டே வந்தமர்ந்தான். பஸ்ஸில் பயணிக்கும் எவரும் அவனுக்குப் பரிச்சயமானவர்களாகத்தான் இருக்கிறார்கள். இல்லையெனில் ஏதாவது பேசி, பேச முயன்று பரிச்சயம் ஏற்படுத்திக் கொள்வான் போலும், நானும் இப்போது அவனுக்கு சிலநிமிட நேரத்துள் பரிச்சியமாகி விட்டேனாக்கும்.

பஸ் புறப்பட்டது.

“நல்ல சாரதி” என்றான் என்னைத் திரும்பிப் பார்த்து. சாரதி சிகரட் ஊதக் கொடுத்தமையால் இந்த நற்சான்றிதழாக்கும்.

ஆனால், என் கணிப்பு தவறானது என்பதை மறுகணமே அவன் உதிர்த்த வார்த்தைகள் சொல்லிக் கொண்டன.

“இந்த பஸ்… சற்றுத் தாமதமாகத்தான் புறப்படுகிறது. ரயில் வருவதற்குப் பிந்திவிட்டது. அதில் வந்த இந்தப் பயணிகளுக்காகவே சாரதி தாமதித்தார். உரிய நேரத்தில் புறப்பட்டிருந்தால், இவர்கள் மீண்டும் அடுத்த பஸ்ஸிற்காக முக்கால் மணி நேரம் குளிரில் காத்து நின்று கஷ்டப்பட்டிருப்பார்கள்” என்று உரத்த குரலில் சொன்னான்.

இவனைத் திரும்பிப் பார்த்த சிலர் முறுவலித்தனர். இவனும் அவர்கள் தனக்குத்தான் ஏதோ சொல்லத் திரும்புகிறார்கள் என நினைத்துக் கொண்டு, “சாரதிக்கு நன்றி சொல்லுங்கள்” என்றான்.

சுவாரஸ்யமான பேர்வழியை ரசிக்க விரும்பி புத்தகத்தை மூடிக் கொண்டேன். அதி அவனுக்கு வசதியாகப் போய்விட்டது. மீண்டும் என்னைப் பிடித்துக் கொண்டான்.

“மற்றவர்களுக்கு உதவவேண்டும், அவர்களின் கஷ்ட நஷ்டங்களை அறிய வேண்டும். மகாத்மா காந்திஜி அப்படித்தான் சொல்லியிருக்கிறார்.”

நான், இதனைக் கேட்டு சற்றுத் திகைத்து விட்டேன்.

பஸ் ஒரு சந்தியில் திரும்பிய போது, பின் புறம் ஒரு ஆசனத்தின் கீழிருந்து ஒரு வெற்று கொக்கா கோலா போத்தல் உருண்டு கொண்டு வந்தது. சில சோடிக் கண்கள் பார்த்தன. பஸ்ஸின் அசைவிற்கு ஏற்ப அது வலம் இடமாக உருண் டோடியது.

”முட்டாள்கள், குடித்தால்… வெற்றுப் போத்தலை எங்கே போடவேண்டும் எனத் தெரியாதவர்கள்” எனச் சொல்லிக் கொண்டே எழுந்து தட்டுத்தடுமாறியவாறு, நகர்ந்து கொண்டிருந்த போத்தலை எடுத்தான். சாரதிக்கு அருகிலிருந்த கழிவுப் பெட்டியில் அதனைப் போட்டான்.

சாரதி அவனைப் பார்த்து “நன்றி” சொன்னான்.

“கோலா குடிக்கத் தெரியும்… போத்தலை என்ன செய்ய வேண்டும் எனத் தெரியாத மடையர்கள்” முகமறியாத யாரையோ ஆசைத் தீர திட்டிக் கொண்டு அதே தடுமாற்றத்துடன் வந்து அமர்ந்தான்.

“என்ன சொன்னேன்…. மன்னிக்கவும். மகாத்மா காந்திஜி. அந்தப் போத்தல் பேச்சை குழப்பி விட்டுவிட்டது. அவர் ஹேராம் எனச் சொல்லிக் கொண்டுதான் இறந்தார். தன்னைச் சுட்டவனை அவர் கோபிக்கவேயில்லை. மகாத்மாஜி நல்ல மனிதர். இந்தியாவின் தந்தை, கடவுள். இந்த நாட்டில் அவரை எத்தனை பேருக்குத் தெரியும்? அதுதான் எனது கவலை”

“பெங்கிங்ஸ்லி நடித்த காந்தி படம் பார்த்திருப்பார்கள்” என்றேன்.

டேவிட் உதட்டைப் பிதுக்கினான்.

கண்களை சற்று மூடி, “ம்ஹும்… நான் நம்பவில்லை. என்னிடம் வீடியோ கஸட் உள்ளது. அடிக்கடி பார்ப்போன். உங்களுக்கு வேண்டுமா…?”

“நான் அதனை ஸ்ரீலாங்காவிலிருக்கும் போதே பார்த்து விட்டேன்.”

“எத்தனை தடவையும் பார்க்கலாம் அல்லவா? நல்ல படம். பல விருதுகளையும் பெற்றது.”

“நான் ஒரு தடவைதான் பார்த்தேன். அது போதும்” என்றேன்.

என்னை ஒருகணம் உற்றுப் பார்த்தான்.

“நல்ல விடயங்களை மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும். நான் பார்க்கிறேன். கெட்ட விடயங்களைப் பார்க்கக் கூடாது” எனச் சொல்லிவிட்டு முகத்தைத் திருப்பி தலையை உலுக்கியவாறு மீண்டும் என்பக்கம் திரும்பினான்.

“எனது மகன் நல்லவன். காந்தி படம் மீண்டும் மீண்டும் பார்ப்பது போன்று, எனது மகனையும் மீண்டும் மீண்டும் பார்ப்பதற்கு சிட்னிக்கு மாதம் ஒருதடவை போகின்றோன். ஆனால் அவனது தாய் கெட்டவள்.” டேவிட் திடீரென்று இப்படிச் சொன்னதும் துணுக்குற்றேன்.

பேச்சு காந்தியிலிருந்து அவனது மகனுக்கு தாவியது. கண்களை கணத்தில் மூடித் திறந்தான். தலையை ஆட்டினான். போதையில் முணு முணுத்தான்.

‘பிட்ச்’ என்ற சொல் தெளிவாகக் கேட்டது. மனைவியை வைது கொண்டிருக்கிறானோ என ஒருகணம் யோசித்தேன்.

பஸ எங்கள் ஊர் எல்லைக்குள் வந்து திரும்பியது. கடைத் தொகுதிகளுக்கு அருகே வந்ததும் இறங்கினேன். அவனுக்கு ‘பை’ சொல்ல வும் முடியவில்லை. உறக்கத்திலிருந்தான். பஸ்ஸின் குலுக்கத்திற்கு தக்கவாறு அவனது தலையும் ஆடியது.

அந்த பஸ் எங்கள் ஊரின் பிரதான வீதிகளுக் கூடாக ஓடி பயணிகளை இறக்கியும். ஏற்றியும் வலம் வரும். பத்து நிமிடத்தில் மீண்டும் கடைத் தொகுதிகள் அமைந்துள்ள பக்கம் வரும். அதனைத் தவறவிடாமல் ஏறினால் பத்து நிமிடத்தில் வீட்டை அடைந்து விடலாம். அந்த பஸ்ஸின் பயணத் திசை வழி அப்படி.

கடையில் வாங்கவேண்டிய சிலவற்றை மனைவி தந்துவிட்ட பட்டியல் பிரகாரம் வாங்கிக் கொண்டு பஸ் தரிப்பிடத்திற்கு விரைந்தேன். அதே பஸ் வந்தது. ஏறினேன். டேவிட் ஏதோ ஒரு தரிப்பிடத்தில் இறங்கியிருக்க வேண்டும்.

வீட்டுக்கு வந்ததும், மனைவியிடம் டேவிட் பற்றிச் சொன்னேன். ஆர்வத்துடன் கேட்டவள், டேவிட்டின் அடையாளம் சொன்னாள்.

“உமக்கு எப்படித் தெரியும்?” எனக் கேட்டேன்.

“அந்த ஆள் குடிகாரன். அடிக்கடி பஸ்ஸில் பார்த்திருக்கிறேன். யாருடனாவது ஏதாவது தொண தொணத்துக் கொண்டே வருவான். இன்று நீங்கள் அவனுக்குக் கிடைத்திருக்கிறீர்கள். ஒரு நாள் நான் கம்பியூட்டர் வகுப்புக்குப் போன போது… எனது நெற்றிக் குங்குமம் பார்த்துவிட்டு, “இந்தியாவா” எனக் கேட்டான். “இல்லை ஸ்ரீலங்கா” என்றேன். “இந்து நாகரீகத்திலிருந்து வருவதுதான் இந்தத் திலகம். இந்து நாகரீகம் இந்தியாவிலிருந்து வந்தது. அதனால் உங்கள் மூதாதையர்களும் இந்தியாதானே” என்று பேச்சை வளர்த்தான். ஒரு விடாக்கண்டன். சில பயணிகளுடன் அவன் விவாதம் செய்வதையும் பார்த்திருக்கிறேன். உரத்துப் போசுவான்.”

‘ஓகோ… நான் கண்ட நாய்கன் பிரபலமாகத் தான் இருக்கிறான்.’ எனக்குள் சிரித்தேன். எனினும் மனதில் இனம்புரியாத நெருடல் அவனுக்குள்ளும் ஏதோ ஒரு சோகம் படிந்திருக்க வேண்டும். அதிலிருந்து தப்பித்துக் கொள்ளத்தான் குடி காரனாகியிருக்க வேண்டும்.

அவனை மீண்டும் எப்போது சந்திப்பதற்கு வாய்ப்புக் கிடைக்கும்?

மற்றுமொரு பஸ் பிரயாணத்தில்தான் அது சாத்தியமாகலாம் என்றிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஒருநாள் கடைத் தொகுதியில் அமைந் துள்ள . மரக்கறிக் கடையில் டேவிட்டைச் சந்தித்தேன்.

என்னைக் கண்டதும் “ஹாய்” எனச் சொல்லிச் சிரித்தான்.

“ஹலோ” என்றேன்.

அவன் தனக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொண்டிருந்தான். அவனது செயல் இங்கும் விநோதமாகவே நிகழ்ந்தது. கடைக் கண்ணால் அவனை அவதானித்தவாறே என் வீட்டுக்குத் தேவைப்பட்டதை எடுத்தேன்.

இரண்டு கரட், மூன்று உருளைக்கிழங்கு, பெரிய பீட்ரூட், இரண்டு லீக்ஸ், பாதித் துண்டு கோவ… இவைதான் அவன் வாங்கியவை.

ஷொப்பிங் முடிந்து வெளியே வந்தோம். எனது பேக்கில் வெங்காயம் இரண்டு கிலோ இருந்தது. அதனை டேவிட் பார்த்துவிட்டான்.

“நீங்கள் வெங்காயம் அதிகம் சாப்பிடுபவரா?” எனக் கேட்டான்.

“சாப்பிடுவதில்லை, சமையலுக்குச் சேர்த்துக் கொள்வோம்” என்றேன்.

“அதிகம் சேர்க்காதீர்கள். இது உணர்ச்சிகளை அதிகரிக்கும். மகாத்மா காந்திஜி புலனடக்கம் பற்றியும் சொல்லியிருக்கிறார்.”

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.

‘சத்தியசோதனை படித்திருக்கிறானோ’

பஸ்தரிப்பில் நின்றோம்.

அவனே தொடர்ந்தான். “நான் ஒரு வெஜி டேரியன். சூப் வைத்துக் குடிப்பதற்குத்தான் இவற்றை வாங்கிப் போகின்றேன்.”

“இது போதுமா?”

அவன் சிரித்துவிட்டு “கொஞ்சம் பொறுங்கள்” எனச் சொல்லியவாறு சற்று அப்பால் பஸ்ஸிற்கு காத்துக் கொண்டு சிகரட் புகைத்தவாறு நிற்கும் இளைஞனிடம் சென்று திரும்பினான்.

இப்போது இவனது வாயிலும் ஒரு சிகரட்.

ஓசியிலேயே சிகரட் வாங்கி புகைக்கும் பழக்கத்தையும் இவன் வழக்கமாக்கிக் கொண்டிருக்க வேண்டும்.

இவனுக்கு சிகரட் கொடுத்த இளைஞன் பஸ் வரும் திசையைப் பார்த்தவாறு நின்றாலும் இடைக்கிடை டேவிட்டையும் பார்த்தான்.

அன்று பஸ் சாரதியிடம். இன்று இந்த இளைஞனிடம்.

“நீங்கள் சிகரட்… பழக்கமில்லையா?”

“இல்லை“

“நல்ல பழக்கம்”

“அடிக்கடி மகாத்மா காந்தியைப் பற்றிச் சொல்கிறீர்கள். ஆனால், அவரது போதனைகளைப் பின்பற்றுபவராகத் தெரியவில்லையே” என்றேன்.

“ஓ..கே… என்ன போதனை? மது அருந்தக் கூடாது, மாமிசம் உண்ணக் கூடாது, புகைத்தல் தகாது, அகிம்சை வழியில் வாழவேண்டும். இவற்றைத்தானே சொல்ல வருகிறீர்கள். நான் குடிக்கின்றேன், அதற்கு ஒரு காரணம் உண்டு, சிகரட் பழக்கமும் உண்டு. அதற்கும் காரணம் உண்டு. காந்திஜி. சொன்னபடி நான் மாமிசம் சாப்பிடுவதில்லை. அகிம்சை வழியிலும் நடக்கவில்லை. வேலைத்தலத்தில் முன்பு ஒருவனை சுத்தியலினால் அடித்துக் காயப்படுத்திவிட்டேன். அவன் மருத்துவமனையில் கிடந்தான். வேலையை அதனால் இழந்தேன். பொலிஸ் விசாரித்து வழக்கு நடந்து மூன்று மாதம் சிறையிலும் இருந்தேன். எல்லாம் அந்த மோசக்காரியினால்தான். அவள் எனக்குச் செய்த துரோகத்தினால் இன்று இப்படி ஆகிவிட்டேன்.”

டேவிட் சொன்னதைக் கேட்டுத் திடுக்கிட்டேன். தொடர்ச்சியாக அவன் என்னை அதிர்ச்சியூட்டிக் கொண்டிருக்கிறான்.

“நீங்கள் யாரைச் சொல்கிறீர்கள்?”

“அவள்தாள் எனது மகனின் தாய்.”

“உங்கள் மனைவி என்று சொல்லலாமே?”

“ஹும் மனைவி…” டேவிட் என்னை முறைத்துப் பார்த்தான்.

“அவள் ஒரு ‘பிட்ச்’. எனக்குத் தெரியாமல் ஒரு கள்ளக்காதலன் வைத்திருந்தாள். என்னை ஏமாற்றிவிட்டு அவனுடன் சிட்னிக்கு ஓடிவிட்டாள்.”

“அப்போ… மகன்….?” கவலையுடன் கேட்டேன்.

“மகன்… என் மகன்…” டேவிட்டின் உதடுகள் துடித்தன. கண்கள் கலங்கின.

“மன்னிக்கவும்” என்றேன்.

கண்களைத் துடைத்துக் கொண்டு, “ஓ..கே…நான் நல்ல தகப்பன் இல்லையென்றும், குடிக்கு அடிமையானவன் என்றும் நீதிமன்றத்தில் வழக்காடி மகனை தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டாள். மாதம் ஒரு தடவை மகனை சிட்னிக்குப் போய் பார்த்து வருகிறேன்.”

“வீண் செலவுதானே… நீங்களும் சிட்னியில் இருக்கலாமே.”

“ஆமாம்..ஆனால் இப்போது முடியாது. வீடு இருக்கிறது. அதனை விற்கவேண்டும். அந்த நாய்க்கும் அதில் பங்கு கொடுக்க வேண்டும். நல்ல விலைக்கு எவரும் வரவில்லை… தாமதமாகிறது”.

டேவிட்டை பரிதாபத்துடன் பார்த்தேன். பஸ் வந்தது. ஏறினோம்.

“ஹிட்லரைத் தெரியுமா?” எனக்கு முன் ஆசனத்தில் வழக்கம்போல அமர்ந்து முகம் திருப்பிக் கேட்டான்.

“எந்த ஹிட்லர்?”

“உலகில் ஒரு ஹிட்லர்தான், ஒரு மகாத்மா காந்திஜிதான். இரண்டு பேரிடமும் நல்ல பழக்கங்கள் இருந்தன. இருவரும் புகைப்பதில்லை, மதுப்பழக்கமும் இல்லை, மாமிசம் உண்பதில்லை. ஆனால் இருவரது சிந்தனைகளிலும் செயல்களிலும் நிறைய வேறுபாடுகள். இரண்டு பேருமே சூடுபட்டுத்தான் செத்தார்கள். ஹிட்லர் தற்கொலை, காந்திஜி கொலை. காந்திஜி ஹேராம் எனச் சொல்லிக் கொண்டு சரிந்தார். ஹிட்லர் என்ன சொன்னானோ தெரியவில்லை”

டேவிட்டிடமிருந்து மதுவாடை வீசியது. காலையில் தேநீருக்குப் பதிலாக விஸ்கி அருந்துவானோ?

அதுவும் சிகரட்டைப் போன்று ஓசியில் இருக்காது என்று நிச்சயமாக நம்பலாம்.

“காந்திஜி காந்திஜி என்று அடிக்கடி சொல்கிறீர்கள். ஆனால் அவரது போதனைகளுக்கு எதிராகத்தானே நடக்கிறீர்கள்?”

அவன் காவி படிந்த பற்கள் தெரியச் சிரித்தான். உமிழ்நீர் இதழ்க்கடையோரம் கசிந்தது.

துடைத்துக் கொண்டு மீண்டும் சிரித்தான்.

“கடவுளே… கடவுளே… என்று தினமும் பிரார்த்தனை செய்கிறோம். ஆனால் நாம் கடவுளாவது இல்லை. அது போலத்தான். காந்திஜி, யேசு, புத்தர்…இப்படி நிறையப் பேர் வருவாங்க போவாங்க. சதாம் ஹுசைன், ஜோர்ஜ் புஷ், ஒஸாமா பின்லேடன்…. இப்படியும் வருவாங்க போவாங்க… எல்லோருமே இவர்களின் போதனைகளைப் பின்பற்றுவதில்லை. நான் டேவிட். நீங்கள்…”

பெயரைச் சொன்னேன்.

“சரி… நான் டேவிட், டேவிட்தான்… நீங்கள் நீங்கள்தான். நான் எனக்குத் தெரிந்ததை சொல்வேன், செய்வேன், அவர்களும் அப்படித்தான். நான் அவர்களாகவோ… அவர்கள் நானாகவோ மாற முடியாது… எப்படி எனது தத்துவம்…?”

‘நீ கெட்ட கேட்டுக்கு உனக்கும் ஒரு தத்துவமா’ என மனதிற்குள் சொல்லிக் கொண்டேன்

அவன் இறங்க வேண்டிய இடம் வந்திருக்க வேண்டும். எழுந்து மணியை அழுத்தினான். காற்சட்டை கீழே இறங்கியது. அதனை ஒரு கையால் இழுத்துக் கொண்டு பேக்குடன் இறங்கினான்.

வீடு திரும்பியதும் மனைவியிடம் விபரங்கள் சொன்னேன். அவள் எரிச்சலுடன் கேட்டாள்.

“கவனம்… அவனுடன் உங்களுக்கு அப்படி யென்ன உரையாடல், விரக்தியில் பிதற்றிக் கொண்டு அலைகிறான். இனிமேல் அவனைக் கண்டால் பேசாதீங்க… பிறகு… உங்களுக்கும் அவன்ர புத்திதான் வரும்… கவனம்.”

“இல்லை வராது…. அவன் அவன்தான், நான் நான்தான்.”

“யார் சொன்னது?”

“இதுவும் டேவிட்தான் சொல்லித் தந்தான்” என்றேன் நிதானமாக.

– மல்லிகை, 34வது ஆண்டுமலர் – ஜனவரி 2004

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *