“அந்த வில்லேஜ்ஜுல எதுக்கு தினமும் இவ்வளவு இறப்பு நிகழுது?.. அவ்வளவு வீரியமா அங்க கொரோனா இருக்கு?”
“தெரியல சார்.. நான் நம்ம டாக்டர் டீம அங்க அனுப்பி வைக்கறேன்… அது நம்ம மாவட்டத்து எல்லையில ரொம்ப தூரம் தள்ளி ஒதுக்குப்புறமா இருக்கற வில்லேஜ்கறதால, இதுவரைக்கும் யாரு கண்ணுலேயும் படமா இருந்துச்சு.. ஆனா… கடந்த அஞ்சு நாளா.. அஞ்சு, பத்து, இருபது, நாப்பது, அம்பதுனு இறந்தவங்க எண்ணிக்கை கூட கூட இப்ப கவர்ன்மென்ட் கவனத்துக்கு வந்திருச்சு…
“ஓக்கே.. நீங்களும் அங்க போங்க.. என்ன ஏதுனு விசாரிச்சுட்டு சீக்கிரம் எனக்கும் அப்டேட் பண்ணுங்க..”
“ஓகே சார்..”
இன்ஸ்பெக்டர் சிவசங்கர் போகும் முன்னே.. விஷயம் கசிந்து அங்கு பல டெலிவிஷன் சேனல்கள் வந்துவிட்டன..
அவர்களிடம் ஒரு பெரியவர் பேசிக்கொண்டிருந்தார்..
“ஆமாங்க.. நாங்கெல்லாம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தான்.. கிட்டத்தட்ட ஐநூறு பேருகிட்ட இருக்கோம்.. மேற்கொண்டு உங்களுக்கு ஏதாவது தகவல் வேணும்னா.. ஒரு பத்து நாளைக்கு தேவையான உணவ எங்களுக்கு கொடுத்துட்டு அப்பறம் உங்க கேள்வி கேட்கலாம்..”
பொட்டில் அடித்தது போல இருந்தது இன்ஸ்பெக்டருக்கு..
சேனல் காரர்களை அப்புறப்படுத்திவிட்டு, அந்த கிராமத்தாரின் உணவிற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தார் இன்ஸ்பெக்டர்..
– திருச்சி தினமலர் வாரமலர் – 17.05.2020