துறவி பரமானந்தருக்கு மிகவும் கோபம். ‘முட்டாள் ஜனங்கள்! பூத உடலுடனேயே பேரின்பத்தை அடைய குறுக்கு வழியைக் காட்டுகிறேன் என்றால் ஒருவராவது வர வில்லையே!’ அவர் கங்கையாற்றைத் தம் கையினால் துழாவினார். அமைதியைக் கிழித்துத் தண்ணீர் சலசலத்தது.
லட்சுமண் ஜுலா எவ்வளவு ரம்மியமான இடம்! இந்த இடத்தில்தான் அவரால் உலகத்துக்கு உபதேசம் செய்வதற்கான மாபெரும் உண்மையைக் கண்டுபிடிக்க முடிந்தது! ‘பதினைந்தே நிமிஷங்களில் பரம நிலையை அடையலாம். கால் மணி நேரத்தில் கடவுள் தரிசனம்….! எப்பேர்ப்பட்ட உண்மையைக் கண்டு பிடித்திருக்கிறோம். ஒருவராவது உள்ளொளி பெறுவதற்குத் தம்மிடம் வரவில்லையே’
தொலைவில் கீதா பவனில் மணி ஒலித்தது. மரத்தில் உட்கார்ந்திருந்த குருவிகள் சத்தமிட்டுக் கொண்டு பறந்து சென்றன.
“கிளிக்……”
பரமானந்தர் திரும்பிப் பார்த்தார். அயல்நாட்டைச் சேர்ந்தவன் போலிருக்கிறது. அவரைப் புகைப்படம் எடுத்து விட்டான்!
“குட்மார்னிங்!” என்றார் பரமானந்தர்.
அவருக்குத் தெரியாமல் புகைப்படம் எடுத்ததற்குக் கோபித்துக் கொள்ளப் போகிறார் என்று அவன் எதிர்பார்த்ததற்குப் பதிலாக. அந்த வரவேற்பு அவனை வியப்பிலாழ்த்தியது.
“குட்மார்னிங்…!” அவன் தயங்கிக் கொண்டே சொன்னான்.
“நான் பரமானந்தன். இந்தியத் துறவி. சொல்லப்போனால். ஜெட் உலகத்துறவி” என்றார் புன்சிரிப்புடன்.
“ஜெட் உலகத் துறவி? அப்படியென்றால்?” அவன் ‘காமிரா’வைத் தோள்களில் மாட்டிக்கொண்டான்.
“பதினைந்து நிமிஷங்களில் உங்களுக்கு சொர்க்கத்துக்கு வழிகாட்ட முடியும். வருஷக் கணக்கில் தியானம். நியமம். அநுஷ்டானம் ஒன்றும் வேண்டாம்… ஏன், மனக் கட்டுப்பாடே தேவையில்லை .”
அவன் அவரை மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்தான்.
“என் பெயர் ஹரால்ட் ராபின்ஸ். அமெரிக்கப் பத்திரிகை நிருபன்… நீங்கள் சொல்வது உண்மையா?”
“வேண்டுமென்றால் பரீட்சித்துப் பார்க்கலாம்…!”
“இப்பொழுதேவா?”
“மனசு இருந்தால் போதும். இடம் காலம் ஆகியவற்றைப் பற்றி கவலை வேண்டாம்.”
ராபின்ஸ் கீழே உட்கார்ந்தான். “தொடங்கலாமா?” என்று கேட்டார் பரமானந்தர்.
ராபின்ஸ் சொர்க்கத்தைத் தேடித்தான் கண்டம் கண்டமாக அலைந்து கொண்டிருக்கிறான். அமெரிக்காவில் அவன் காதலி அவனைக் கைவிட்டு ஒரு பெரிய பணக்காரனை மணந்து கொண்டு விட்டாள். மனம் உடைந்து அவன் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றான். அங்கும் அவனுக்கு நிம்மதி கிடைக்கவில்லை. தென்னாப்பிரிக் காவிலே சில ஆண்டுகள் இருந்தான். வயிறு பசித்தபோது பத்திரிகை நிருபர் வேலையை மேற்கொண்டான். அமைதியை நாடி அலைந்த அவனிடம் பரமானந்தர் தாமாகவே, “சொர்க்கத்துக்கு வழி காட்டுகிறேன்” என்றதும் அவனுக்கு மிகவும் சந்தோஷம். மதுவிலும், அபினிலும், சொர்க்கத்தைத் தேடித் திரிந்த அவனுக்கு துறவியின் வார்த்தைகள் ஒரு புதிய நம்பிக்கையையும் தெம்பையும் ஊட்டின.
“தொடங்கலாம்” என்றான் ராபின்ஸ்.
“ஒவ்வொருவருக்கும் ஏற்ற, அவருக்குகந்ததான சப்தம் உண்டு. அதைத் தான் மந்திரம் என்கிறோம். அந்த மந்திரத்தைச் சொல்லி, சப்தத்தை நாம் ரத்தத்தில் ஜீவ ஓட்டத்தில் கரைத்துவிட்டால் சப்தம் முதற்படியாகக் கொண்டு வெவ்வேறு நிலைகளைக் கடந்து எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட ஒரு தியான நிலையை அடைகிறோம்… அதற்கு முன்பு உங்களைச் சில கேள்விகளை கேட்க வேண்டும்.”
“கேளுங்கள்.”
“உங்களை மிகவும் கவர்ந்த பெயரைச் சொல்லுங்கள்.”
“டெய்ஸி .”
“உங்கள் மனைவியா?”
“இல்லை, காதலி.”
“அவள் உருவத்தைச் சித்தரித்துச் சொல்லுங்கள்.”
ஓர் உபாசகனுக்குரிய தீவிரத்துடன் ஆரம்பித்தான் ராபின்ஸ். சொல்லி முடித்தவுடன், அவன் முன்னே டெய்ஸி நிற்பது போன்ற ஒரு பிரமை.
“டெய்ஸி, டெய்ஸி! என்று சொல்லிக் கொண்டே இருங்கள்.”
‘டெய்ஸி… டெய்ஸி….’ என்று சொல்லத் தொடங்கினான் ராபின்ஸ். அவன் கண்கள் தாமாகவே மூடிக்கொண்டன.
பரமானந்தர் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார். பாரதத்து ‘முட்டாள் ஜனங்கள்’ மீது அவருக்கு இருந்த கோபம் மாறி இப்பொழுது அநுதாபம் ஏற்பட்டது. அவருக்கு எல்லையற்ற குதூகலம். ஓர் அமெரிக்கன் அவருடைய முதல் சிஷ்யனாகப் போகிறான்! அதுவும் ஒரு பத்திரிகை நிருபன்! அமெரிக்கப் பத்திரிகைகள் இந்தச் செய்தியை பிரமாதப்படுத்தப் போகின்றன…
ராபின்ஸ் கண்களைத் திறந்தான். அவன் முகம் பிரகாசமாக இருந்தது. |
“பேரின்பத்தை அடைந்து விட்டேன். நீங்கள் ஜெட் உலகத் துறவி தான். சந்தேகமில்லை … சப்தத்தில் என்னைக் கரைத்து, சப்தம் என்னில் கரைய, ஒன்றோடொன்று வேறுபாடு ஒழிந்து, நிரந்தரத்துவத்தின் கோடான கோடி வண்ண ஜாலங்களிலே பரத்துவத்தின் தனித்துவம் கண்டு, தனித்துவம் இசைந்த பரத்துவம் தெளிந்து…!”
“போதும்… சொல்ல முயற்சி செய்யாதீர்கள். சொல்லச் சொல்ல வார்த்தைகளின் குறைபாடுகள் தெரியும்…!” என்றார் துறவி. – “உங்களைப் பற்றி உலகம் தெரிந்து கொள்ள வேண்டும்.”
பரமானந்தர் புன்னகை செய்தார். ”நீங்கள் இதற்காக என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம்… எனக்கு ஆட்சேபணை இல்லை. ‘காஸ்மிக்’ யுகத்தில் ‘கால்மணி நேரத்தில் முக்திப் பேரின்பம்’ என்ற தலைப்புக் கொடுத்தும் எழுதலாம். உலகத்தை உய்விக்க வேண்டும். அது தான் என் விருப்பம்.”
“நீங்கள்தாம் மெஸ்ஸயா?”
தமக்கே அந்தச் சந்தேகம் உண்டு போல் துறவி குறுநகை செய்தார்.
“என் அனுபவத்தை என்னுடைய பத்திரிகைக்கு எழுதி அனுப்பப் போகிறேன்.”
“ஸிண்டிகேட் கட்டுரையாக இருக்கட்டும். பணத்துக்குப் பணம். எல்லாரும் தெரிந்து கொள்ளட்டும்!” என்றார் பரமானந்தர்.
“நீங்கள் என்னுடன் டில்லிக்கு வாருங்கள். நீங்கள் பத்திரிகை நிருபர்களைச் சந்தித்துப் பேச வேண்டும்.”
“இப்பொழுது வேண்டாம். முதலில் அமெரிக்கப் பத்திரிகை களில் என்னைப் பற்றிய செய்திகள் வரட்டும். பிறகு இந்தியப் பத்திரிகை நிருபர்கள் தாமாகவே என்னைச் சந்திக்க வருவார்கள்.”
பரமானந்தர் கூறியது உண்மையாகப் போயிற்று. வியட்நாம் போர்ச் செய்திகளைப் பற்றிப் படித்து அலுத்துப் போன அமெரிக்க மக்களுக்கு ‘ஜெட் உலக துறவி யைப் பற்றிய செய்தி கற்கண்டாக இருந்தது. ராபின்ஸ் அவரை ‘மெஸ்ஸயா’ என்றே குறிப்பிட்டு, வியட்நாம் போரை நிறுத்துவதற்கான ஆற்றல் அவருக்கு இருப்பதாக எழுதியிருந்தான். பென்டகனில் கூட இதுபற்றி விவாதிப்பதாக அமெரிக்கப் பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. அவ்வளவு தான்; இந்தியப் பத்திரிகைகள் லட்சுமண்ஜுலாவுக்கு நிருபர்களை அனுப்பின. ராபின்ஸ் குறிப்பிட்ட துறவியை அவர்களால் சந்திக்க முடியவில்லை. ரிஷிகேசத்திலிருந்த ஒரிரண்டு சாமியார்கள் ராபின்ஸ் தங்களைத்தாம் சந்தித்ததாகக் கூறினார்கள். ஆனால் குட்டு வெளிப்பட்டவுடன் அவர்களையும் காணவில்லை.
தில்லியில் ராபின்ஸின் ‘ஏர்-கண்டிஷன்’ வீட்டில் தாடியைப் பரிவுடன் தடவிக் கொண்டு உட்கார்ந்திருந்தார் பரமானந்தர்.
“பார்த்தீர்களா? இத்தனை நாட்கள்வரை நான் அவர்களுடைய கண்ணில் படவில்லை. நீங்கள் எழுதியவுடன் தேடிக்கொண்டு அலைகிறார்கள்…!” என்றார் துறவி.
“அமெரிக்காவில் உங்களுக்கு நிறைய சிஷ்யர்கள் ஏற்பட்டு விட்டார்கள். பிராட்வேயிலும் ஹாலிவுட்டிலுமே நூற்றுக்கணக்கான நடிகர்களும், நடிகைகளும் உங்களைக் காண துடித்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் அமெரிக்கச் சுற்றுப்பிரயாணத்தை விரைவில் மேற்கொள்ள வேண்டும்.”
பரமானந்தர் பதில் சொல்லவில்லை; சிந்தித்துக் கொண் டிருந்தார்.
“மனக்கட்டுப்பாடு இல்லாமலேயே தெய்வ தரிசனம் என்பது எல்லாரையும் கவர்ந்துள்ளது. கஷ்டமான புத்தகங்களைப் படித்து மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டாம். இயற்கை சபலங்களை அடக்கி ஒடுக்கி அவஸ்தைப்பட வேண்டாம். மது, மங்கையுடன் கூடவே பேரின்பம் என்றால் யார்தான் வேண்டாம் என்பார்கள்? குருவே நீங்கள்தான் ஜனநாயக உலகுக்கு ஏற்ற தலைவர்….” என்று பாராட்டினான் ராபின்ஸ். ப “சரி… நான் அமெரிக்கப் பிரயாணத்தை மேற்கொள்ளுகிறேன். அதற்கு முன்பு இந்தியப் பத்திரிகை நிருபர்களையும் சந்தித்து விடுகிறேன். நான் உங்களுடன் தங்கியிருக்கும் செய்தியை நீங்கள் வெளியிடலாம்” என்றார் பரமானந்தர்.
பரமானந்தருக்குத் தில்லியில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்துக்கு போலீஸ் பந்தோபஸ்து தேவைப்பட்டது. ஸப்ரூ ஹால் பொங்கி வழிந்தது. மத்திய மந்திரிகளில் இரண்டொருவர் கலந்து கொண்டு பரமானந்தரின் பெருமையை எடுத்துக் கூறினார்கள். பாரகம்ப ரோட் முழுதும் கார் மயம். மிஸ் இந்தியா போட்டி நடப்பதாக எண்ணி ஸப்ரூ ஹாலுக்குச் சென்ற சிலருக்கு பிறகுதான் தெரிந்தது, பரமானந்தர் பேசப்போவது…
அமெரிக்காவுக்குப் பயணமானார் பரமானந்தர். அமெரிக்காவில் அவருக்கு அமோக வரவேற்பு. பிராட்வேயும், ஹாலிவுட்டும் அவர் காலடியில் விழுந்தன. “எல். எஸ். டி. யும் தியானமும்.” ”விவாகரத்தும் தியானமும்” என்ற தலைப்புகளின் கீழ் அவர் ஆற்றிய பிரசங்கங்கள் அமெரிக்காவை ஒரு கலக்குக் கலக்கிவிட்டன. “பாரதத்துக்கு வாருங்கள். தியானத்தைப் பற்றிச் சொல்லித் தருகிறேன். பதினைந்தே நிமிஷங்களில் உள்ளொளி காணலாம். இது உத்தரவாதம்” என்றார் பரமானந்தர். விசாவுக்காக ‘க்யூ’ வரிசைகள் நீண்டன. பாரத அரசாங்கத்தின் சார்பாக நிதி இலாகா துறவிக்கு பாராட்டுக் கடிதம் அனுப்பிற்று. அயல்நாட்டு யாத்ரீகர்களை வரவேற்க தில்லித் தெருக்கள் செப்பனிடப்பட்டன.
ராபின்ஸ் பத்திரிகை நிருபர் வேலையை ராஜினாமா செய்து விட்டு பரமானந்தருடைய பிரதம காரியதரிசி ஆனான். லட்சுமண்ஜுலாவில் அவர் ஏற்படுத்தவிருந்த ஆசிரமத்துக்காக டாலர்கள் வந்து குவிந்தன. இதை நிர்வகிக்க ஒரு காரியாலயம் உருவாயிற்று.
அமெரிக்காவின் தலைசிறந்த ஒரு ‘ஆர்க்கிடெக்ட்’ போட்டுத் தந்த திட்டத்தின்படி லட்சுமண் ஜுலாவில் தியானம் செய்வதற்கான ஆசிரமங்களும், மற்றைய சௌகரியங்களும் கங்கையாற்றில் நீராட இயலாதென்பதற்காக அழகான நீச்சல் குளங்கள் தாமரை மலர் வடிவத்திலும், நவீன கலை பாணி வடிவங்களிலும் கட்டப்பட்டன. கட்டடங்களிலெல்லாம் தினுசு தினுசாக வண்ணக் கண்ணாடிகள். மரங்கள் செறிந்த இமய மலைக் காடுகளில் உட்காருவதற்கு மேடைகளும், செயற்கை நீரருவிகளும் உண்டாயின. பரமானந்த ருடைய புதிய தியான ஏற்பாட்டின்படி மது அருந்துவதோ, அதை ஒட்டிய மற்றைய விஷயங்களோ தவறில்லை என்ற காரணத்தால் அவற்றுக்கும் இடமளிக்கும் வகையில் பரமானந்தருடைய ‘ஜெட் உலக ஆசிரமம்’ எழுந்தது. படுக்கை அறைகளெல்லாம் ‘ஏர் கண்டிஷன்’ செய்யப்பட்டிருந்தன.
அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் ஆறு மாதங்கள் சுற்றுப்பிரயாணம் செய்தார் பரமானந்தர். உலகத்தின் எல்லா பிரதம நகரங்களிலும் அவர் தியான ஏற்பாட்டுக்கு கிளைகள் ஏற்பட்டன. அவர் பாரதம் திரும்பியபோது, அவருடன் அமெரிக்காவிலிருந்தும், பிரிட்டனிலிருந்தும் ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே வந்தது.
‘பாரதப் பண்பாட்டை’ வேற்று நாடுகளில் கொடிகட்டி பறக்கச் செய்த பரமானந்தருக்கு தில்லிப் பிரமுகர்கள் ஒரு பெரிய வரவேற்பு அளித்தனர். ஒளிவு மறைவு இல்லாமல் ஆடை தரித்துத் திரைப்படங்களில் நடித்த ஹாலிவுட் நடிகைகள் இப்பொழுது பைஜாமா, குர்த்தா அணிந்து மேடையில் தோன்றியது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அவர்கள் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தார்கள். என்னவென்று விசாரித்த போது ‘இராம நாமம்’ என்று தெரியவந்தது. ‘வெளிநாடுகளில் இராம நாமம் விற்றேன்’ என்றார் பரமானந்தர், தமக்கென்றே உரிய இயல்பான ஹாஸ்யத்துடன்.
அவ்வளவுதான். அடுத்தநாள் பார்லிமெண்டில் கம்யூனிஸ்ட் அங்கத்தினர் ஒருவர் ‘இராம நாமம்’ விற்கும் தொழிலை தேசிய மயமாக்க வேண்டும் என்ற தீர்மானம் கொண்டு வந்தார். பரமானந்தரையே ஒரு தேசிய ஸ்தாபமாகக் கருதி, அவருடைய சிஷ்யர்களுக்கும் ராஷ்டிர பாஷையாகிய ஹிந்தியை கற்றுக்கொடுக்க வேண்டும் என்று சம்யுக்த சோஷலிஸ்ட் அங்கத்தினர் ஒருவர் திருத்தம் கொண்டு வந்தார்.
லட்சுமண்ஜுலா அமளிப்பட்டது. நட்சத்திர தரிசனத்துக்காக பத்திரிகை நிருபர்களும் இளைஞர் சேனையும் அங்கு குழுமியிருந்தன. இன்னின்ன மரத்தடியில் யார் யார் உட்கார்ந்து ‘தியானம்’ செய்ய வேண்டும் என்பது வரையறுக்கப்பட்டு பெயர்களை ‘டைப் அடித்து ஒட்டியிருந்தார்கள். அவரவர்களுக்குரிய ‘சப்த’த்தை திரும்பத் திரும்ப சொல்ல அலுக்கும் சில ‘பெரிய நட்சத்திரங்களின்’ சௌகரியத்துக்காக ‘டேப் ரிக்கார்டுகள்’ வைக்கப்பட்டிருந்தன.
புதிய தியான ஏற்பாட்டை தொடங்கி வைத்து பரமானந்தர் பேசினார்: ‘தியானம் என்றால் புலன்களை அடக்க வேண்டும். அது இதுவென்று இதுவரை ஏமாற்றி வந்திருக்கிறார்கள். தேவையில்லை. அவரவர்கள் தங்கள் தங்களுக்கு இஷ்டமான காரியத்தைச் செய்யலாம். மது அருந்தலாம். மாமிசம் சாப்பிடலாம், மங்கையை நாடலாம். பதினைந்து நிமிஷங்கள் தியானம் செய்தால் போதும். ஒவ்வொருவருக்கும் ஒரு மந்திரம் உண்டு. ராம நாமமாக இருக்கலாம். கிருஷ்ண சப்தமாக இருக்கலாம். ஏன், ‘டாலர், டாலர்’ என்றுகூடச் சொல்லலாம். ஒலி என்பது தியான ஏணியின் முதல்படி. ஏறிச்சென்றால் சொர்க்கத்தின் வாசலை அடைவோம். தியானத்துக்குப் பிறகு புதிய உத்வேகத்தைப் பெற்று இஷ்டப்படி நீங்கள் செயலாற்றலாம். பாவபுண்ணியத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை .’
இதையொட்டி, ஹாலிவுட்டின் பிரதம இசை அமைப்பாள ராகிய வாலாடி விஸ்கி அமைத்துத் தந்த ‘ட்யூ’னில் கீதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஸ்லோகங்கள் பாடப்பட்டன. நட்சத்திரங்கள் காமிரா முன் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தார்கள். ஒரு புதிய உலகத்தையே உண்டாக்கி விட்ட உற்சாகம் எங்கும் பொங்கி வழிந்தது.
ஒவ்வொரு சிஷ்யரையும் தனித்தனியாக அழைத்து புதிய தியான முறையைச் சொல்லித் தந்தார் பரமானந்தர். எல்லாரும் தங்கள் தங்கள் மரங்களை நாடிச் சென்றார்கள்.
ஓங்கி வளர்ந்த குன்றுகள் அடங்கிய இமயமலைச் சாரல். அமைதியின் பெருமூச்சாடும் ஓடும் கங்கையாறு. பல வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் மரங்கள். தியானத்தில் ஆழ்ந்த அரம்பையர் போன்ற ஹாலிவுட் நங்கைகள்… நீச்சல் குளங்கள், கண்கவர் கட்டடங்கள், எல்லாவற்றுக்கும் சிகரமாக பேரொளியை உலகுக்குத் தந்த இருபதாம் நூற்றாண்டு மெஸ்ஸயா பரமானந்தர். இவரை வைத்துக் கொண்டு ஒரு திரைப்படம் தயாரித்தால் என்ன என்று தோன்றிற்று. தியானத்தை நாடி வந்த ஹாலிவுட் தயாரிப்பாளர் டி. ஸ்மித்துக்கு. சொல்லப் போனால் தியானம் செய்யும் போது தான் அவருக்கு இந்த எண்ணம் உண்டாகியது.
உடனே அவர் ராபின்ஸைக் கண்டு விவாதித்தார். முதலில் ராபின்ஸ் இந்த யோசனைக்கு மதிப்புத் தரவில்லை. ஆனால் பரமானந்தர் படத்தில் நடித்தால் வசூலாகும் தொகையில் பாதிக்கு மேல் ஆசிரமத்துக்குத் தருவதாக டி. ஸ்மித் வாக்குறுதி அளித்த பிறகு, இருவரும் பரமானந்தரிடம் சென்றார்கள்.
பரமானந்தர் வெகு நேரம் தீவிரமாகச் சிந்தித்தார். கடைசியில் அவர் முகத்தில் புன்னகை தோன்றியது.
“வண்ணப் படமா?” என்று கேட்டார். “ஆமாம், சினிமாஸ்கோப்!” என்றார் டி. ஸ்மித்.
“சரி…. இங்கு இவ்வளவு பேர் வந்திருக்கிறார்களே, இவர்களை பாதியில் இப்படியே விட்டுச் செல்வதா?” என்று கேட்டார்.
“ராபின்ஸ் பார்த்துக் கொள்வார்.”
பரமானந்தர் ராபின்ஸை நோக்கினார். அவன் உடனே பதில் சொல்லவில்லை. சிறிது நேரம் பேசாமல் இருந்தான்.
“என்ன சொல்லுகிறீர்கள்?” என்று ராபின்ஸைக் கேட்டார் டி. ஸ்மித்.
“எனக்கும் படத்தில் நடிக்க வேண்டுமென்ற ஆசை. ஆசை உண்டாகி விட்டால் அதைக் கட்டுப்படுத்திக்கொண்டு குருவாக நடிப்பது கஷ்டம்…” என்றான் ராபின்ஸ்.
“ஒரு வருஷம் கழித்து பார்க்கலாமே?” என்றார் பரமானந்தர்.
“ஒரு வருஷம் கழித்து இது ஆறிப் போய்விடக்கூடும்” என்றார் தயாரிப்பாளர் டி. ஸ்மித்.
“சரி, சாயந்திரம் யோசித்துச் சொல்லுகிறேன். நான் எல்லோருக்கும் தியானம் சொல்லிக் கொடுத்து சில நாட்களாக நானே தியானம் செய்யவில்லை” என்றார் பரமானந்தர்.
“மிஸ் ஹாரியட் நடிப்பாளா?” என்று ஆவலோடு கேட்டான் ராபின்ஸ். மிஸ் ஹாரியட்டுக்கும் டி. ஸ்மித்துக்கும் உள்ள தொடர்பு அவனுக்குத் தெரியாத விஷயமல்ல. அவர்கள் இருவருடைய ஆசிரமங்களும் ஒன்றுக்கொன்று பக்கத்தில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன்தான் டி.ஸ்மித் லட்சுமண்ஜுலாவுக்கு வந்திருந்தார்.
“குருவை கேட்ட பிறகுதான் நடிகைத் தேர்தல் செய்ய வேண்டும்” என்றார் டி. ஸ்மித்.
அன்று சாயந்திரம் மீண்டும் இருவரும் பரமானந்தரை சந்தித்தார்கள். அவர் முகம் பிரகாசமாக இருந்தது
“வழி கண்டுபிடித்துவிட்டேன்” என்றார் குரு. டி.ஸ்மித் தாம் அடையப் போகும் லாபத்தை மானசீகமாகப் பங்கீடு செய்தார்.
“என்ன வழி?” என்று கேட்டான் ராபின்ஸ்.
“நான் இந்த ஆசிரமத்தில் எதற்காக இருக்கவேண்டும்? ஒவ்வொருவருக்கும் அவரவருடைய மந்திரத்தைக் கண்டு பிடித்து சொல்லித் தரத்தானே! ஒருவர் சொல்லித் தந்து விட்டால் தியானம் செய்வது அவர்களுடைய பொறுப்பு தானே? ஆகவே…”
பரமானந்தர்தமது திட்டத்தை விவரித்தார். டி.ஸ்மித் திகைத்துப் போனார்! துறவிக்கு எவ்வளவு கூர்மையான அறிவு! ஜெட் உலகத்துக்கு ஏற்ற தலைவர் அல்லவா?
“ராபின்ஸ் தாமும் நடிக்க விரும்புகிறார் என்ற காரணத்தால் அவரும் நடிக்கலாம். எனக்கு ஆட்சேபமில்லை.”
அடுத்த நாள் பத்திரிகைகளில் பரமானந்தர் ஹாலிவுட் படத்தில் நடிக்கப் போகும் செய்தி கொட்டை எழுத்துகளில் தலைப்பு கட்டிப் பிரசுரமாகியது.
அதே சமயத்தில் நியூயார்க்கிலிருந்து குருவின் ஸ்தானத்திலிருந்து சிஷ்யர்களுக்கு உபதேசம் செய்ய ஏற்றுமதியாகியது, ஒரு கம்ப்யூட்டர். பரமானந்தரின் ‘காஸ்மிக்’ மூளையை மெச்சாதவர்கள் இல்லை.