செல்வாக்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 3, 2017
பார்வையிட்டோர்: 5,685 
 
 

“நட, ஸ்டேஷனுக்கு!

பெருமாள்சாமி முதலியாருக்கு அவமானமும் வேதனையும் தின்றன. “காலையில் யாருடைய முகத்தில் முழிச்சேன்?” யோசித்துப் பார்த்தார்.

“இன்னாய்யா நா சொல்றேன், நின்னுகிட்டே இருக்கே? பொடரியில நாலு உட்டு இழுத்துட்டுப் போகணுமா?” போலீஸ்காரர் உறுமினார்.

அந்த உறுமலில் முதலியார் அதிர்ந்து போனார். உள்ளூருக்கு அவர் ராஜா. புதிய ஊரில், வந்த இடத்தில்…?

“நா அசலூருங்க ஸார். என்னை உட்டுடுங்க. தெரியாத்தனமா..” அழாத குறையாகக் கெஞ்சினார்.

அவர் கெஞ்சக் கெஞ்சப் போலீஸ்காரர் மிஞ்சினார். “என்னய்யா தெரியாது? வாயில் விரலை வெச்சாக் கடிக்கத் தெரியாதா? வா, வா! சப்-இன்ஸ்பெக்டர் எஜமான்கிட்டே வந்து
எல்லாம் சொல்லிக்க. அவரு படுகோவக்கார ஆளு… பின்னி எடுத்துடப் போறாரு!”

“ஐயையோ! ஸார், ஸார்!..”

பெருமாள்சாமிக்குக் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது; “ஸார், இந்த ஒருதடவை மட்டும் விட்டுடுங்க! இனிமே ஒண்ணுக்கு வந்தா பஸ் ஸ்டாண்டுல ஒரு ரூவாக் கொடுத்துப்
போறேன் ஸார். ரோட்டோரம் ஒக்கார மாட்டேன் ஸார்!”

காவல் நிலையக் கட்டிடத்தின் சிவப்பு நிறத்தைப் பார்த்ததுமே, குலை நடுங்கியது பெருமாள்சாமிக்கு.

“இப்பிடி ஓரமா வந்து நில்லுய்யா! அங்கே பார்த்தியா, சப்-இன்ஸ்பெக்டர் எஜமான் என்னாக் கோவமா உக்காந்திருக்காருன்னு! கைல பிரம்பை எடுத்தார்னா உன் கால் முட்டி
பேர்ந்தப்புறம்தான் கீழே போடுவார்!..”

“ஸார், ஸார்!”

“என்னாய்யா, பச்சைக் கொழந்த மாதிரி அழுவறே? இங்கியே இரு. நான் போய் பக்குவமா எஜமான்கிட்டே சொல்லி உன்னை விட்டுடலாமா, இல்லை, கேஸ் புக் பண்ணி உள்ளே தள்றதான்னு கேட்டுட்டு வந்துடறேன்!”

“ஸார், ஒங்களுக்குக் கோடி புண்ணியம் உண்டு ஸார். என்னை விட்டுடச் சொல்லுங்க ஸார். நான் ஒரு மரியாதைப்பட்ட குடும்பத்து ஆளு. புவனகிரியில முதலாளின்னா அழுத குழந்தை
கூட வாயை மூடிக்கும். அத்தினி பயம், மரியாதை! அடி கிடி வாங்கி இந்த உடம்புக்குப் பழக்கமில்லே. போலீஸ் ஸ்டேஷனுக்குள்ளே எங்க பரம்பரையில யாரும் நுழைஞ்சது கிடையாது ஸார்!..”

“இப்ப நுழைஞ்சுட்டேயில்ல, ரொம்பச் சரி!, நீ ஒண்ணு செய். எதிர்த்தாப்புல இருக்கு பாரு டீக்கடை. அங்கே போய்… உம், ஸ்டேஷன் ரைட்டர் ஒண்ணு, ஏட்டய்யா ஒண்ணு, செண்ட்ரி
போலீஸ்.. எல்லாம் மொத்தம் பதிமூணு டீ ஸ்பெஷனா, மலாயெல்லாம் போட்டு வாங்கிட்டு வா!”

“இதோ நிமிசத்துல வந்துடறேன் ஸார்!” பெருமாள்சாமி எதிர்ச்சாரி டீக்கடையை நோக்கி வேகமாக நடந்தார்.

“மலாய் போட்டுப் பதிமூணு ஸ்பெஷல் டீ போடுப்பா, ஸ்டேஷனுக்கு!” என்று குரலை உயர்த்திச் சொன்னவர், ஜிப்பாவுக்குள் கைவிட்டுப் பணத்தை எடுத்தார். கிளம்பும்போது
பீரோவில் இருந்து ஐநூறு ரூபாயை எடுத்துப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டுதான் ஊரிலிருந்து கிளம்பியிருந்தார். நூற்றுக்குப் பத்து வட்டிக்கு ஐயாயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்த
ராமுக் கோனார் முந்தின நாள் தான் கொண்டுவந்து கொடுத்த வட்டிப் பணம் அது.

ஐந்து வருடங்களாக அவரால் வட்டி மட்டுமே கொடுக்க முடிகிறது. ஒரு மாதம் வட்டி கட்டாவிட்டால் கூட கோனார், அந்த ஊரில் மானத்தோடு இருக்க முடியாது…

அப்படி மிரட்டி உருட்டி வாங்கிய பணம் இப்படிப் போகிறதே என்று பெருமாள்சாமி மனவேதனைப் பட்டார்.

சிதம்பரம் ஆதாரப் பாடசாலை ஆசிரியர் கனகராஜ் தினமும் புவனகிரியிலிருந்து டூ வீலரில் சிதம்பரம் போய்த் திரும்பும் ஆசாமி. சிதம்பரம் சினிமா தியேட்டர்களில் என்னென்ன
திரைப்படங்கள் ஓடுகின்றன என்று பெருமாள்சாமி கனகராஜிடம் விசாரிப்பது வழக்கம்.

“முதலாளி, சேதி தெரியுமா? சிதம்பரம் லேனா தியேட்டரில நமீதா நடிச்ச படம் ஒண்ணு வந்திருக்கு. அதுல ஒரு டான்ஸ் ஆடுது பாருங்க, அது ஒண்ணுக்கே காசு செரிச்சுப் போகுது முதலாளி!”

பெருமாள்சாமிக்கு நாவில் நீர் சொட்டியது. பணத்தை எடுத்துக் கொண்டார். டவுன் பஸ் பிடித்து சிதம்பரம் போனார். மேட்னி காட்சி ஐந்து மணிக்கு முடிந்தது. திருப்தியுடன் மனசில்
சினிமாவின் காட்சிகளை அசை போட்டபடி பஸ் நிலையத்துக்குப் போனார். போகும் வழியில் அவருக்கு இயற்கையின் உந்துதல் ஏற்பட்டது.

ஓரமாக சாக்கடைப் பக்கம் உட்கார்ந்து எழுந்தபோது அவர் கையை உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டார் அந்தக் கான்ஸ்டபிள்.

“வாய்யா, இதான் எடமா? வா, ஸ்டேஷனுக்கு. உள்ளே தள்ளிடறேன். முட்டிக்கு முட்டி பேர்த்துப்புடறேன்… சட்டம் தெரியுமா உனக்கு? எதுக்குய்யா பஸ் ஸ்டாண்டுக்குப் பஸ் ஸ்டாண்டு, வீதிக்கு வீதி முனிசிபாலிட்டி கக்கூஸ் கட்டி வெச்சிருக்கு?” என்று சத்தம் போட்டார்.

தன் தவறு அப்போதுதான் பெருமாள்சாமி முதலியாருக்குப் புரிந்தது. தன் ஊரில் அதுதான் அவருக்குப் பழக்கம். அவருக்கு மட்டுமல்ல, அவருடைய ஊரில் அனைவருக்கும் அதுதான்
பழக்கம், நியதி எல்லாம். இங்கே, டவுனில், அதுவே சட்டத்தை மீறிய செயலாகப் போனது விந்தையாக இருந்தது அவருக்கு.

ஆனாலும்… இப்போது என்ன செய்வது?

***

“பையன் இல்லியே..” என்று டீக்கடைக்காரர் சொன்னார்.

“பரவால்லே… கொடுப்பா! ”என்று விதியை நொந்தவண்ணம் கம்பி வலையில் வைத்துக் கொடுத்த டீ கிளாஸ்களை வாங்கிப் போய் ஸ்டேஷனில் ஒவொரு மேசையாக வைத்தார்.

ஒரு கான்ஸ்டபிள் “யாரது? டீ ஏது?” என்று விறைப்புட்ன் கேட்க, பணிவாக வாசல் பக்கம் கையை நீட்டி, “ஐயா அனுப்பினாருங்க ஸார்!” என்று பவ்யமாகச் சொன்னார்.

பதின்மூன்று டீயையும் கொடுத்து முடித்ததும்தான் பெருமாள்சாமிக்கு சந்தேகம் வந்தது. சப்-இன்ஸ்பெக்டருக்கு?

“இதோ பார்யா நாமம்! எஜமான் டீயெல்லாம் குடிக்க மாட்டார். அதோ ஜூஸ் கடை இருக்குல்ல, போய் எஜமானுக்குன்னு சொல்லி ஸ்பெஷல் லஸ்ஸி ஒண்ணு வாங்கிட்டு வா, சீக்கிரம் வரணும், ஓடுய்யா!”

“ஒரு நிமிசத்துல வாங்கிட்டு வந்துடறேன் ஸார்!” என்றபடி ஓடினார் அவர்.

அவர் வாங்கி வந்த லஸ்ஸி நிறைந்த கண்ணாடித் தம்ளரை வாசலிலேயே வாங்கிக் கொண்டார் அந்த கான்ஸ்டபிள்.

“இங்கியே நில்லுய்யா, உன் விஷயத்தைப் பக்குவமா எஜமான்கிட்டே சொல்லி, உன்னைத் தப்ப வைக்கப் பாக்கிறேன்!” என்று உள்ளே போனார்.

தான் தப்பிவிடுவோம் என்ற நம்பிக்கை ஒரு வழியாக வந்தது பெருமாள்சாமிக்கு.

உள்ளே போன கான்ஸ்டபிள், சப்-இன்ஸ்பெக்டர் முன் குனிந்து பவ்யமாக, “ஒரே வெய்யில் எஜமான்!” என்றார்.

“ஆமாய்யா, என்னாது லஸ்ஸியா?”

“ஆமாம் எஜமான், நீங்க வெய்யில்ல மோட்டார் சைக்கிள்ல வந்ததைப் பார்த்தேன். லஸ்ஸின்னாப் பிரியமாச் சாப்பிடுவீங்க ளேன்னு..”

“கொண்டாய்யா!”

சப்-இன்ஸ்பெக்டரிடம் கான்ஸ்டபிள் வெய்யிலைப் பற்றிப் பேசியதை எட்டிப் பார்த்த பெருமால்சாமி, தன்னைப் பற்றித்தான் சிபாரிசு நடக்கிறது என்று நினைத்துக்கொண்டு நின்றார். திரும்பி வந்த கான்ஸ்டபிள், “யோவ் நாமக்காரரே! நீ இன்னிக்கு நரி மொகத்துல முழிச்சிருக்கேய்யா. எஜமான்கிட்டே உனக்காக ரிக்வெஸ்ட் பண்ணிக்கிட்டேன். மன்னிச்சு உட்டுடுங்கன்னேன்.சரின்னு ஒத்துக்கிட்டார். இந்தா கிளாஸ், லஸ்ஸி கடையில கொடுத்துடு!”

பெருமாள்சாமிக்கு நல்ல மூச்சு வந்தது. மகிழ்வில் வாயெல்லாம் பல்லானார். “ரொம்ப நன்றிங்க ஸார்!”

“யோவ், ஒன் நன்றி யாருக்குய்யா வேணும்? போய் கிளாசைக் கொடுத்துட்டு, வரும்போது பெட்டிக் கடையில் ஒரு பாக்கெட் ஃபில்டர் கிங்ஸ் சிகரெட்டும் ஒரு மேட்ச் பாக்ஸும் வாங்கிக்
கொணாந்து கொடுத்துடு!”

பெருமாள்சாமி வேகமாக ஓடி, சிகரெட் பாக்கெட்டும் தீப்பெட்டியும் வாங்கிக் கொண்டு திரும்பினார். பணிவோடு கான்ஸ்டபிளிடம் சமர்ப்பித்தார்.

“யோவ் நாமக்காரரே, முதல் தடவையாச்சே, போனாப் போகுதுன்னு உன்னை விடறேன். இன்னொரு தரம் எங்கேயாச்சும் ரோட்டோரம் நீ உட்கார்ந்ததைப் பார்த்தேன்… தொலைச்சுப்புடுவேன்! உன் முட்டியெல்லாம் கழட்டி, கேஸ் புக் பண்ணி உள்ளே தள்ளிப்புடுவேன்… ஜாக்கிரதை, திரும்பிப் பார்க்காம ஓடு!”

விட்டால் போதும் என்று கிளம்பி, கொஞ்ச தூரம் நடந்து, பின் திரும்பிப் பார்த்துக்கொண்டே ஓடி, பஸ் நிறுத்தத்துக்கு வந்து சேர்ந்தார் பெருமாள்சாமி.

***

மறுநாள்.

புவனகிரி.

தன்னைப் பார்க்க வந்த ஒருவர் விடாமலும், தானே வலியப் போயும், சந்து பொந்துகளில் நுழைந்து யாரைப் பார்த்தாலும் பெருமாள்சாமி முதலியார் சாங்கோபாங்கமாக, தன் முந்தின
தினத்து அனுபவங்களைப் பெருமிதத்துடன் அலுப்பின்றி திரும்பத் திரும்ப விவரித்ததாவது:

“வா ஸ்டேஷனுக்குன்னு போலீஸ்காரர் கூப்பிட்டாரா, வர்றேன், எனக்கென்ன பயமான்னு கேட்டுக்கிட்டுப் போனேன். உள்ளே சப்-இன்ஸ்பெக்டர் இருந்தாரா, போய் அவர் எதிர்த்தாபுல
இருந்த நாற்காலியில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தேன். அட, புவனகிரி முதலியாரா, வாங்க வாங்க! எங்கே இவ்வளவு தூரம்னு சப்-இன்ஸ்பெக்டர் கேட்டார். அப்புறம் லஸ்ஸி
சாப்பிடறீங்களா முதலியார்?னு கேட்டார். எனக்கு வேணாம். நீங்க வேணாச் சாப்பிடுங்க!ன்னு சொல்லி, சப்-இன்ஸ்பெக்டருக்கு லஸ்ஸி, அங்கேயிருந்த போலீஸ்காரங்க எல்லோருக்கும்
ஸ்பெஷல் டீ வாங்கியாரச் சொல்லி, துட்டை வீசினேன் பாரு, அப்படியே அசந்துப்புட்டாங்க! சப்-இன்ஸ்பெக்டர் என்னை அழைச்சுகிட்டுப் போன போலீஸ்காரரை, “ஏன்யா, புவனகிரி
முதலாளியையா பிடிச்சுகிட்டு வந்தே? அவரு ஊருல பெரிய மனுசனாச்சேய்யா!”ன்னு திட்டினார். “போலீஸ்காரரைத் திட்டாதீங்க, பாவம்! எனக்கு ஒண்ணும் கோவமில்லே”ன்னு நான்
சொல்லிட்டேன். திரும்பறப்ப வாசல்கிட்டே நின்ன அந்தப் போலீஸ்காரர், “ஐயா யாருன்னு எனக்குத் தெரியாது. மன்னிக்கணும்!”னு கேட்டுகிட்டாரு. அவருக்கு “இந்தா சிகரெட்
பொட்டி வாங்கிக்கோ”ன்னு காசை விசிறியடிச்சேன். எனக்கு சலாம் போட்டு போயிட்டு வாங்க முதலியார்னு வழியனுப்பிச்சாரு! நீ நம்பினா நம்பு, நம்பாட்டிப் போ, இப்ப சிதம்பரம் போலீஸ் ஸ்டேஷன்ல நமக்கு ரொம்பச் செல்வாக்கு…தெரியுமா?

பெருமாள்சாமி முதலியார் கம்பீரமாகவும் அலட்சியமாகவும் சொன்னதைக் கேட்ட புவனகிரிவாசிகள் உண்மையாக இருந்தாலும் இருக்கும் என்று நினைத்து அவரைப் பெருமையாகப்
பார்க்கத் தொடங்கினார்கள்!

(தாமரை மாத இதழ்)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *