செல்லரம்மான்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 7, 2017
பார்வையிட்டோர்: 21,038 
 

(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நாங்கள் சிறு பிள்ளைகளாக இருந்த போது அவரை ‘செல்லரம்மான்’ என்று தான் கூப்பிடுவோம். அவருடைய இயற்பெயர் செல்லத்தம்பி. அப்போதெல்லாம் ‘சாண்டோ செல்லர்’ என்றால்தான் எல்லோருக்கும் தெரியும்; அவ்வளவு பிரபலமாக இருந்தார்.

அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவார். வந்ததும் நாங்கள் அவரைப் போய் மொய்த்துக் கொள்வோம். என்ன அவசரமாயிருந்தாலும் எங்களுக்கெல்லாம் கதைகள் சொல்லாமல் போகவே மாட்டார்.

அவருக்கு ‘கோடா’ காய்ச்சுவதுதான் தொழில். காய்ச்சி அதைப் பல சுருட்டுக் கொட்டில்களுக்கும் வினியோகம் செய்வார். அந்தத் தொழிலில் அவருக்கு வெறுப்பு. ஆனால் என்ன செய்வது? வேறு வழியின்றித்தான் அதைச் செய்து வந்தார்.

அவர் இளவயதாக இருந்தபோது மல்யுத்தம், தடியடி, சிலம்பம் என்று எல்லாவற்றிலும் தேர்ச்சி பெற்று இருந்தாராம். எத்தனையோ போட்டிகளில் பங்கெடுத்து வெற்றியும் பெற்றிருக்கிறார். பின்னால் தெருக்கூத்துகளிலும், நாடகங்களிலும் கூட நடித்து வந்தார்; ஆனால் அவருக்கு நிரந்தரமான வருவாய் என்று மட்டும் இருந்ததில்லை.

அவருடைய தேகம் அந்த வயதிலும் கல்லுப்போல இருக்கும். நாங்கள் தொட்டுத் தொட்டுப் பார்ப்போம். அவர் இருபது வயதாயிருந்த போது அவர் ‘கையாலேயே’ தென்னை மரத்தை அடித்து தேங்காய் வீழ்த்தியதாகச் சொல்லுவார்கள்; அவ்வளவு பலசாலியாம்.

அந்தக் காலத்தில், தான் நடித்த நாடகங்களை சில நேரங்களில் எங்களக்கு நடித்துக் காட்டுவார். பாடுவதென்றால் நல்ல பிரியம். எப்பவும் ஒரு ராகத்தை முணுமுணுத்த படியேதான் இருப்பார்.

கதை சொல்லும் போது மிகவும் விஸ்தாரமாகவும் சுவை படவும் கூறுவார். அங்கங்கே ஹாஸ்யம் மிளிரும். அவருடைய கதைகளை சிறு பிள்ளைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் ஆர்வமுடன் கேட்பார்கள். அந்தக் கதைகள் அநேகமாக அவரைப் பற்றியதாகவே இருக்கும். நாங்கள் சில கதைகளை அவரிடம் சொல்லும் படி திருப்பித்திருப்பிக் கேட்போம். அவரும் சளைக்காமல் சொல்லுவார். அவருடைய அந்த ‘இளநீர்க்’ கதைகள் மிகவும் பிரசித்தமானவை.

* * *

அம்மன் கோவில் திருவிழா முடிந்து இந்த நாலுபேரும் வீட்டுக்கு போய்க் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சில மணி நேரத்தில் பலபலவென்று விடிந்து விடும். இவர்கள் ‘உடையார்’ வீட்டு வளவைக் கடந்துதான் போக வேண்டும். திருவிழா முடிந்து வீட்டுக்குப் போகும் போது இளநீர் குடிக்காமல் போனால் அதில் ஒரு திருப்தியே கிடைக்காது.

அதிலும் உடையார் வீட்டு தென்னை இளநீர் பிரசித்தமானது. எந்த மரத்தில் எந்த இளநீர் சுவையானது என்ற புள்ளி விவரங்கள் சோதிநாதனுக்கு மனப்பாடம். அவன் “அந்த நெட்டை மரம் கன நாளாக ஏமாத்திக் கொண்டு வருகுது. அந்த இளநீர் ருசியே தனி. இந்த ஜன்பத்திலேயே கிடைக்காது” என்பான் அடிக்கடி.

எல்லோருக்கும் ஆசைதான். ஆனால் உடையார் வீட்டுப் பயம். உடையார் என்றால் யார்? அந்த ஊரிலேயே மூன்று சால்வை போடுபவர் அவர் ஒருவர்தான்; இடுப்பில் ஒன்று, தோளிலே ஒன்று, தலையிலே ஒன்று தலைப்பாகையாக. ஊரே அவரைப் பார்த்தால் ஒரு மரியாதை.

“எங்களிலே செல்லத்தம்பியைப் போல மரம் ஏற ஆர் இருக்கினம்?” என்று ‘சட்டி’ போட்டான் கனகு. உடனே செல்லத்தம்பி வற வறவென்று மரத்தில் ஏறத் தொடங்கினான்.

செல்லத்தம்பி உடம்பை வளர்த்த அளவுக்கு மூளையை வளர்க்கவில்லை. அரை நிமிடம் கூட யோசிக்காமல் உச்சிக்கு போய் விட்டான். இரவிலே களவாக இளநீர் பிடுங்குவதில் ஒரு கஷ்டம் இருக்கிறது. தேங்காய் ‘பொத்’ தென்று தரையில் விழுந்தால் வீட்டுக்காரர் எழும்பி விடுவார். ஆகையினால் நைஸாகத் தான் இளநீரைக் கீழே இறக்க வேண்டும்.

அதனால் ‘வட்டுக்குள்ளே’ செல்லத்தம்பி, ஒரு கொஞ்சம் கீழே சோதினாதன், பிறகு சண்முகம், நிலத்திலே கனகு என்று ‘அசெம்பளி லைன்’ போல அணி வகுத்துக கொண்டார்கள். செல்லத்தம்பி ஒவ்வொரு தேங்காயாக பறித்து கீழே கொடுக்க, மற்றவன் அதைக் கீழே கொடுக்க தேங்காய் அலுங்காமல் நலுங்காமல்’ கீழே வந்து சேர்கிறது.

பத்துத் தேங்காயுடன் நிறுத்தியிருக்கலாம். ஆனால் ஆசை ஆரை விட்டது? அடுத்த தேங்காய் கைதவறி விட்டது; ‘தொம்’ என்ற சத்தத்துடன் கீழே விழுந்தது.

ஆரடா?’ என்று உள்ளே இருந்து ஒரு சத்தம். சோதினாதனும், மற்றவர்களும் ‘பொத், பொத்’ என்று குதித்து வேலி பாய்ந்து கண நேரத்தில் மறைந்து விட்டார்கள். செல்லத்தம்பி பாவம் வட்டுக்குள்ளே; குதிக்க முடியுமா அவ்வளவு உயரத்தில் இருந்து? வருவது வரட்டும்’ என்று கண்ணை மூடிக் கொண்டு இருக்கிறான்.

கொக்குவிலில் முதன் முதலில் ‘டார்ச் லைட்’ வைத்திருந்ததே உடையார் தான். உடையார் வெளியே வந்தார். லைட்டை அப்படியும் இப்படியும் அடித்து விட்டு மேலே உயர்த்திப் பார்த்தார். அங்கே செல்லத்தம்பி சிலந்தி போல வட்டைக் கட்டிப் பிடித்தபடி இருந்தான். “ஆரடா அது, இறங்கு” என்றார் உடையார், உரத்த குரலில்.

பல பல என்று விடிந்து விட்டது. ஆட்களம் சேர்ந்து விட்டார்கள். இளம் பெண்டுகள் எல்லாம் மறைவாக நின்று எட்டி எட்டிப் பார்க்கிறார்கள். செல்லத்தம்பிக்கு உயிர் போனால் கூட பரவாயில்லை என்று பட்டது.

இளநீரையெல்லாம் ஒரு கடகத்தில் போட்டு இவன் தலையில் ஏற்றி வைத்தார், உடையார். ஒரு குடையை எடுத்துக் கொண்டார். தலைக்கு மேல் அதை விரித்தபடி ‘சரி, நட விதானையார் வீட்டுக்கு’ என்றார்.

செல்லத்தம்பி “முருகா, இந்த இக்காட்டில் இருந்து என்னைக் காப்பாற்றினால் உனக்கு இளநீர் அபிஷேகம் செய்கிறேன்” என்று வேண்டிக் கொண்டான். பிறகு “இளநீர் என்றால் என சொந்தக் காசில் வாங்கிய இளநீர், களவெடுத்ததல்ல” என்பதையும் சேர்த்துக் கொண்டான்.

“இளநீர் குடிச்சவன் குடிச்சிட்டு போக கோம்பை திண்டவனுக்கு அடி” என்றது என் விஷயத்தில் பலித்துவிட்டதே என்று தன்னைத்தானே நொந்து கொண்டான்.

இப்ப சாடையாக மழை தூறத் தொடங்கி விட்டது. உடையார் பின்னால் குடை பிடித்த பிடி. அப்ப பார்த்து உடையாருக்கு ஒண்ணுக்கு நெருங்குகிறது. ‘கொஞ்சம் நில்’ என்று விட்டு குடையையும் படி வேலி ஓரத்தில் குந்தினார்.

செல்லத்தம்பி இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் திரும்பிப் பார்க்கிறான். ஆரெண்டாலும் பெண்டுகள் பார்க்கினமோ என்ற பயம்.

“என்னடா பார்க்கிறாய்? ஓடப் போறியோ?”

செல்லத்தம்பிக்கு அந்த எண்ணமே வரவில்லை. ஆனால் இப்ப முழித்து முழித்து விட்டான். கடகத்தில் இருந்த தேங்காயெல்லாவற்றையும் உடையார் தலை மேல் கொட்டி விட்டு எடுத்தான் ஓட்டம். நேரே தண்டவாளத்தில் எறி அதன் வழியாக ஓரேடியாக ஓடி தப்பி விட்டான்.

உடையார் என்ன செய்வார்? ஒண்ணுக்கு போறதை பாதியிலே நிற்பாட்டுகிற வித்தையை இன்னும் அவர் கற்கவில்லை; ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டே இருந்தார்.

* * *

இது நடந்து கொஞ்ச நாள் ஊர் முழுக்க இதே பேச்சுத்தான். ஆனால் இதையும் தோற்கடிக்கும் ஒரு சம்பவம் வெகு சீக்கிரத்திலேயே அங்கே நடந்தது. அது சோதினாதன் ‘அட்டாளை முருகேசரிடம்’ தனிமையில் போய் இளநீர் திருடி மாட்டிக் கொண்டது தான்.

அட்டாளை முருகேசர் விதானையாரிடம் போய் மினக்கெடும் ஆளில்லை. சோதினாதனைக் கையும் களவுமாகப் பிடித்தவுடன் அப்படியே மரத்தோடு கட்டிக் வைத்து சவுக்கினால் விளாசி விட்டார். நண்பர்கள் எல்லோருக்கம் சரியான துக்கம்; இப்படிப் போய் அநியாயமாக மாட்டிக் கொண்டானே என்று.

‘அட்டாளை’ என்றால் கனபேருக்கு என்னவென்று தெரியாது. இது கால் உயரமான காட்டில்; கால்கள் ஒரு ஆள் உயரத்துக்கு இருக்கும். இதைச் சுற்றி தட்டி கட்டிமேலே கூரை வேய்ந்திருக்கும். இந்த அட்டாளையைத் தூகக நாலு பேர் வேண்டும். தூக்கிக் கொண்டு போய் எந்த இடத்திலும் வைத்துக் கொள்ளலாம்.

இரவிலே இப்படியே அட்டாளைக்குள் படுத்திருந்து தோட்டத்தை காவல் காப்பார்கள். மழையோ, பனியோ அட்டாளைக்குள் சுகமாக இருக்கலாம். இன்னும் சொல்லப் போனால் ஒரு நடமாடும் குடிசை (portable Cottage).

முருகேசர் எப்பவும் இந்த அட்டாளையில் தான் படுப்பார். அவர் வீட்டுத் தோட்டத்தில் களவு போனதென்பதே கிடையாது. அவ்வளவு கெடுபிடியான ஆள்.

அவருடைய தோட்டத்து இளநீர் அவ்வளவு ருசியானதல்ல. இருந்தும் அங்கே களவெடுத்ததென்று சொன்னால் இளவட்டங்களுக்கிடயில் ஒரு மவுசு வந்து விடும். முருகேசர் வீட்டுத் தோட்டத்தில் திருடுவதற்கு எப்படி ஒரு தைரியம் வேண்டும். மனிதர் தான் கண் கொத்திப் பாம்பாக இருப்பாரே?

இப்படிப்பட்ட அட்டாளை முருகேசனுடைய தோட்டத்தில் தான் சோதினாதன் திருடப் போய் வகையாக மாட்டிக் கொண்டான்; அடியும் வாங்கினான்.

நண்பர்கள் நாலு பேரும் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டினார்கள். எப்படியும் முருகேசரைப் பழி வாங்கி விடவேண்டும் என்பது தான் அது. அதற்கு வேண்டிய சமயம் பார்த்திருந்தார்கள்.

கச்சான் காற்று வீசும் காலத்தில் ஒரு அமாவாசை இருட்டு நாளைத் தேர்ந்து எடுத்தார்கள். விடிகாலை மூன்று மணிக்கு நண்பர்கள் நாலு பேரும் தோட்டத்துக்குள் களவாக நுழைந்தார்கள். பதுங்கி பதுங்கி அட்டாளைக்கு கிட்ட போனால் முருகேசர் அயர்ந்து குறட்டை விடும் சத்தம் கேட்கிறது.

முதல் வேலையாக அட்டாளையின் கீழ் தொங்கும் அரிக்கன் லாம்பை அணைக்கிறார்கள். பிறகு அவர்கள் முன்பே பேசி வைத்த படி, நாலு பேருமாக அட்டாளையின் நாலு கால் பக்கமும் போய் நின்று கொண்டார்கள். ஒருவன் கைகை கொடுக்க, அலுங்காமல், அசையாமல் அட்டாளையைத் தூக்கிக் கொண்டு அப்படியே நடந்து போய் பத்தடிதள்ளி இருக்கும் கிணற்றுப் பக்கம் மெதுவாக வைக்கிறார்கள். இப்போது அட்டாளையின் வாசல் கிணற்றுப் பக்கமாக இருக்கிறது.

நாலு பேரும் தங்களை கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டார்கள். பின் மெதுவாக வேலிப்பக்கம் போய் நின்று பலமாகச் சத்தம் போடத் தொடங்கினார்கள்:

“போடு, போடு”

“எடு, எடு”

“ஓடு, ஓடு”

அயர்ந்து போய் தூங்கிக் கொண்டிருந்த முருகேசர் பக்கென்று விழித்துக் கொண்டார். “ஆரது, ஆரது?” என்று தூக்கக் கலக்கத்தில் கத்திக் கொண்டே கீழே குதித்தார். நேரே கிணற்றுத் தண்­ருக்குள் தான் போய் விழுந்தார். உடனே நண்பர்கள் நாலு பேரும் வேலி பாய்ந்து ஓடத் தொடங்கினார்கள்.

கிணற்றிலோ தண்­ர் சரியாண ஆழம். முருகேசருக்கோ நீந்தத் தெரியாது. கத்தோ கத்தென்று கத்தினார். ஊர் சனங்கள் விழித்துக் கொண்டார்கள். எப்படியோ அவரைக் கிணற்றில் இருந்து காப்பாற்றி கரை சேர்த்து விட்டார்கள்.

(பின்னொரு காலத்தில் முருகேசர் பழி வாங்கியதை விவரித்தால் இந்தக் கதை இன்னும் விரிந்து விடும்; அது இன்னொரிடத்தில் வரும்)

* * *

ஒரு நாள் செல்லரம்மாள் என்னை அவர் வீட்டுக்கு வரும்படி அழைத்தார். இது பெரிய கௌரவமான விஷயம். ஏனென்றால், அவர் ‘என்னைமட்டும்’ தான் வரச் சொல்லியிருந்தார்.

எனக்குத் தேனீரும் பனங்கட்டியும் கொடுத்தார். அவருடைய மூன்று வயது மகள் மழலைக் குரலில் இவர் சொல்லிக் கொடுத்த தேவாரம் ஒன்றைப் பாடினாள்.

இது தவிர, எனக்கு ஞாபகம் வருவது அவர் குடிசையைச் சுற்றி இருந்த தென்னை மரங்கள் தான். அந்த மரங்கள் எல்லாவற்றிலும் ‘தாரினால்’ பாம்புப் படம் கீறியிருக்கிறது; பாம்பின் தலை மேலும், வால் கீழுமாக. நான் ‘ஏன் அப்படி?’ என்று கேட்கிறேன். அதற்கு அவர் “இந்த மரங்களில் எல்லாம் நல்ல தேங்காய்; அணில் அரிச்சுப் போடும். இந்த பாம்பு படம் கீறினால் அணில் பயந்து மரம் ஏறாது. தேங்காய் தப்பிவிடும்.” என்றார்.

செல்லரம்மான் ஏறாத தென்னை மரம் இல்லை. ஆனால் தன் வீட்டு மரத்தில் அணில் கூட ஏறுவதைப் பொறுக்காதது எனக்குப் புதுமையாக இருந்தது. இந்த அணில் சாத்திரம் விஞ்ஞான ரீதியாக உண்மையா என்று பின் காலத்தில் நான் பல முறை யோசித்ததுண்டு.

ஒரேயொரு முறை அவர் தன் மனைவியை எங்கள் வீட்டுக்கு கூட்டி வந்திருக்கிறார். எனக்கு ஞாபகமிருப்பதெல்லாம் அவர் மனைவி நல்ல சிவப்பாய் இருந்தது தான்.

அவருக்கு பத்தொன்பது வயது நடக்கும் போதே கல்யாணம் நடந்து விட்டதாம். அது ‘பேசி வைத்த’ கல்யாணமென்றாலும் இவர் காதல் வயப்பட்டு பல வீரப்பிரதாபங்களைச் செய்திருக்கிறார். இதை அவரே பலதரம் சுவைப்படக் கூறியிருக்கிறார்.

முதலில் இவருடைய தாயாரும் தமக்கையாரும் தான் போய் பெண் பார்த்தார்கள். பெண் வீடு அச்சுவேலியில். இவருக்கோ பெண்ணைப் பற்றிய விபரங்களை அறிய ஒரு துடிப்பு. ஆனால் அவர்களோ ஒன்றும் சொல்வதாகத் தெரியவில்லை. கடைசியில் தமக்கையாரை மடக்கி கேட்டுவிட்டார். அதற்கு அவருடைய அக்கா அந்த பெண்ணின் தலைமயிரைத் தான் வர்ணித்தாள். ஒரு பெண் இன்னொரு பெண்ணைப் பார்க்கும் போது முதலில் பார்ப்பது தலைமயிரைத் தான் போலும்.

எங்கள் தந்தையார் ஒரு கணக்கு வைத்திருந்தார். ஒரு பெண்ணின் தலைமயிர் ஆரோக்கியமாக இருந்தால் பெண்ணும் ஆரோக்கியமாக இருப்பாளாம்.

இவருடைய தமக்கையார் அந்தத் தலைமயிரின் நீளத்தை வர்ணித்தாள், பிறகு அதன் அடர்த்தியைப் பற்றி சொன்னாள்; பிறக அதன் கருமையைச் சொல்லிச் சொல்லி மாய்ந்தாள். தலைமயிரை அவிழ்த்து விட்டால் அது பிருஷ்டத்தின் கீழ் வந்து நிற்குமாம்; ஆஹா! ஆஹா!

தலைமயிரை வைத்து அவர் என்ன செய்வார். அவருக்க பெண் என்ன நிறம், அவள் கண்கள், அவள் வதனம், அவள் இடை, நடை எல்லாவற்றையும் பற்றி அறிய ஆசை. அக்காவைத் துளைத்தும் பயனில்லை. அவளுக்கு தலைமயிரைத் தவிர வேறு ஒன்றும் ஞாபகமில்லை.

செல்லத்தம்பிக்கு தவிப்பாக இருந்தது. எப்படியும் அந்தப் பெண்ணைப் பார்த்து விட வேண்டும் என்று துடித்தார். அந்தக் காலத்தில் அவ்வளவு தூரம் துணிந்து போய், ஒரு பெண்ணை அவள் அறியாமல், பார்ப்பது என்பது என்ன லேசான காரியமா?

அவருடைய அக்காதான் ஒரு யோசனை சொன்னாள். நந்தாவில் அம்மன் கோவில் திருவிழாவுக்கு அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த சவுந்தரவலில்யின் சதிர் கச்சேரி ஏற்பாடாகியிருக்கிறது. சவுந்தரவல்லியென்றால் அது இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட பேர் போன சதி ‘செட்’. அவள் ஆட்டம் இல்லாத திருவிழா ஒரு திருவிழாவா?

“இந்த திருவிழாவைப் பார்க்க எப்படியும் பெண் வீட்டார் வருவார்கள். அப்ப நீ பார்த்துக் கொள்ளலாம்.” என்றாள் அக்கா.

திருவிழாவும் வந்தது. பெண் வீட்டார் அச்சுவேலியில் இருந்து ஒற்றை மாட்டு வண்டி கட்டி வந்திறங்கனார்கள்.

பெரிய பந்தல் போட்டு, சிகரம் எல்லாம் வைத்து கோயிலை அலங்கரித்திருந்தார்கள். பச்சை, சிவப்பு, நீலம், மஞ்சள் என்று விளக்குகள் எங்கும் ஜகஜோதியாக எரிந்து கொண்டிருந்தது. பெண்கள் எல்லாம் ஒரு பக்கம்; ஆண்கள் மறுபக்கம்.

மேளச்சமா முடிந்ததும் சதிர் ஆட்டத்திற்கு பெண்கள் வந்து குவிவது வழக்கம். கொஞ்சம் கொஞ்சமாக இப்போது பெண்கள் பகுதியும் நிரம்பி விட்டது. செல்லத் தம்பி முன்பே இடம் பிடித்து வசதியான ஒரு எல்லையில் நின்று கொண்டிருந்தார். அந்த இடத்தில் இருந்து பெண்கள் பகுதியை எல்லாக் கோணத்திலும் பார்க்க முடியும்.

சவுந்தரவல்லியின் ஆட்டம் தொடங்கியது. இவர் கண்கள் பெண்கள் பக்கம் துழாவிய படியே இருந்தது. தலைமயிரை மட்டுமே வைத்து பெண்ணைக் கண்டு பிடிப்பது எப்படி? ஒவ்வொரு பெண்ணிடமும் போய் ‘உன்னுடைய மயிரை அவிழ்த்து விடு, பிருஷ்டத்தை தொடுகிறதா பார்ப்போம்’ என்று கேட்க முடியுமா? இவர் பயமெல்லாம் தவறான பெண்ணின்மேல் காதல் வயப்பட்டு விடக்கூடாதே என்பது தான்.

செல்லத்தம்பியின் அக்கா தன் மூன்று வயதுப் பெண் குழந்தையிடம் ஒரு பூவைக் கொடுத்து அதைக் கொண்டு போய் அந்தப் பெண்ணிடம் கொடுக்கும்படி அனுப்பினாள். இது முன் கூட்டியே செல்லத்தம்பியிடம் பேசி வைத்த ஒரு சமிக்ஞை. அந்தப் பெண் குழந்தையும் வெகு உஷாராக வெளிக்கிட்டது. ஆனால் பாதி வழியிலேயே மறந்து போய் நின்று ‘திரு திர’ வென்று விழித்தது. பிறகு திரும்பி வந்து தாய் மடியில் பொத்தென்று குந்தி விட்டது. செல்லத்தம்பியின் ஆசையில் மண் விழுந்தது.

அப்போதுதான் அவன் தமக்கையார் அவன் மேல் மனம் இரங்கி, ஒவ்வொரு அடியாக வைத்துப் போய் அந்தப் பெண்ணிடம் ஏதோ பேசி விட்டுத் திரும்பவும் வந்து உட்கார்ந்தாள்.

செல்லத்தம்பியின் பார்வையை ஒரு தூண் மறைத்தது. தலைநிறைய பூ, சிவப்பு பாவாடை, சருகை வைத்த பச்சை சட்டை. செல்லத்தம்பியின் நெஞ்சு படு வேகத்தில் அடிக்கத் தொடங்கியது. தனக்காகப் பிறந்த அந்தப் பெண்ணை முழுமையாகப் பார்க்க முடியாமல் அவஸ்தைப் பட்டார். இந்தப் பக்கம் பார்த்தால் தலையும், பூவும், மறுபக்கம் பார்த்தால் தோளும், பாவாடையும். தவணை முறையில் அவளைப் பார்த்து மனதைத் திருப்திப் படுத்திக் கொண்டார்.

ஒரு முறை அவள் தலை திரும்பிய போது அவள் கண்களையும், பல்வரிசைகளையும் பார்த்தார். ஆஹா! அப்படியே மோகித்து விட்டார்.

சவுந்தரவல்லியின் சதிர் ஆட்டம் முடிந்து பெண்கள் கூட்டம் கலையத் தொடங்கியது. அந்தப் பெண்ணும் பெற்றோருடன் வண்டியில் ஏறிக் கொண்டாள். செல்லத்தம்பி ஒரு நண்பனின் காலில் விழுந்து சைக்கிளை எடுத்துக் கொண்டு வண்டியைத் தொடர்ந்தார்.

சாக்கு படுதா போட்டு மூடியபடி வண்டி முன்னே போகிறது. அரிக்கன் லாந்தர் கீழே கட்டியிருக்கிறது. செல்லத்தம்பி பின்னாலே சைக்கிளில் போகிறார். வெகு கிட்டப் போனால் கண்டு கொள்வார்கள்; தூரத்தில் தொடர்ந்தாலோ ஒரு பிரணோசனமும் இல்லை.

ஒரு வண்டி மாட்டை சைக்கிளில் பின் தொடருவதென்பது மிகவும் கஷ்டமான காரியம். செல்லத்தம்பி மிக்க கவனமாக கண் பார்க்கும் தொலைவில் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார். இவர் சைக்கிளை மிதித்தாலும் உண்மையிலே ஆகாயத்தில் தான்போய்க் கொண்டிருந்தார்.

அந்த மயக்கமான வேளையில், வளையல் அணிந்த சிவந்த கரம் ஒன்று படுதாவை சிறிது நீக்கியது போன்ற பிரமை. இவர் நேரே சைக்கிளை விட்டார். அந்த நேரம் பார்த்து ரோட்டு ஓரத்தில் ‘கல்லு கும்பி’ ஒன்று இருந்தது. இவர் அதைப் பார்க்கவில்லை. கல்லுக் கும்பியும் இவரைக் கவனிக்கவில்லை. சைக்கிள் மோதி இவர் கீழே விழுந்தார்; சைக்கிளும் விழுந்தது; செல்லத்தம்பியுடைய காதல் சாம்ராஜ்யமும் சரிந்தது.

இதன் விளைவு? செல்லத்தம்பி ‘ஒட்டகப்பிலத்தில்’ கையுக்கு பத்துப் போட்டு கொண்டது தான். அநியாயமாக இவருடைய கல்யாணம் இரண்டு மாதத்துக்கு தள்ளிப் போடப்பட்டது.

செல்லரம்மான் விஸ்தாரமாக இந்தக் கதையைச் சொல்லக் கேட்டுக் கொண்டிருந்த சுப்பிரமணியம் பிள்ளை தான் கேட்டார்: “அது சரி, நேரமோ இருட்டு; பெண்ணோ படுதாவுக்குள் இருக்கிறாள். நீ என்ன நினைவோடு சைக்கிளில் தொடர்ந்து போனாய்? என்னதான் சாதிப்பதற்கு கிளம்பினாய்?”

செல்லரம்மான் சொன்னார்; “காதல் பிரதாபத்தில் மயங்கி நிற்கும் ஒருவன் தர்க்க சாஸ்திரத்தையா பார்ப்பான்? அவள் சுவாசிக்கும் காற்றைத் தான் நானும் சுவாசிக்க வேணும் என்று பட்டது. அவளிடமிருந்து பத்தடிக்கு மேல் தள்ளி நிற்க என்னால் தாக்குப் பிடிக்க முடியவில்லை, அந்த நேரம்.”

* * *

சங்கீதத்தில் அவருக்கு இருந்த காதலும் அப்படிப்பட்டதுதான். ஒரு குருவிடம் முறைப்படி கற்கவில்லையென்றாலும் அவருடைய சங்கீத ஞானமானது அசரவைக்கும். ஒரு ராகத்தைப் பாடி “இது என்ன ராகம்?” என்று கேட்பார். நான் ஒவ்வொரு ராகத்துக்கும் ஒரு பாட்டு முடிச்சுப் போட்டு வைத்திருப்பேன்; படக்கென்று சொல்லி விடுவேன். பத்துக்கு ஒன்பது சரிவரும்.

அப்போதுதான் காபி ராகத்தில் பி.எஸ்.ராஜா ஐயங்காருடைய ‘ஜகதோ தாரண’ இசைத் தட்டு வந்திருந்தது. அதை யார் வீட்டிலோ அடிக்கடி கேட்பார் போலும். அதைப் பற்றியே பேசுவார். அது தவிர, மலைக்கோட்டை கோவிந்தசாமி பிள்ளையின் வயலினிலும் அவருக்கு ஒரு பக்தி.

ஒரு நாள் ‘யெவரிக அவதாரமு’ என்ற தியாகராயர் கிருதியை அவர் தேவமனோஹரி ராகத்தில் பாடியது ஞாபகமிருக்கிறது. அன்று அவருக்கு என்ன சங்கடமோ? அவர் கண்களில் கண்­ர் பொல பொல வென்று கொட்டியது. அவர் கூறினார்;

“ஒரு ராக தேவதை தன்னுடைய முழு சௌந்தர்யத்தையும் இலகுவில் காட்டி விட மாட்டாள். மெள்ள மெள்ளத்தான் உன் சாமர்த்தியத்தை பிரயோகித்து அவள் பூரண அழகையும் வெளியே கொண்டுவர வேண்டும்.”

எப்படியான வார்த்தை?

சங்கீதம் என்றால் அந்தக் காலத்து விவகாரமே வேறு. இந்தக் காலத்தில் என்றால் சங்கீத வித்வானும் பக்கவாத்தியக் காரர்களுமாகச் சேர்ந்து ரஸ’கர்களை திருப்திப்படுத்தும் நோக்கத்தோடு ஒரு உயர்ந்த சங்கீதத்தை அளிப்பார்கள்.

செல்லரம்மான் காலத்தில் சங்கீத வித்வான், பக்கவாத்தியக்காரன் அசந்திருக்கும் சமயத்தில் அவனைக் குழிதோண்டிப் புதைக்ப் பார்ப்பான். பக்க வாத்தியக்காரன் என்ன சாமான்யப்பட்டவனா? அவனும், தன்னுடைய வித்தை எல்லாத்தையும் காட்டி வித்துவானை மட்டந்தட்ட சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருப்பான்.

சபையோரும் இரண்டு பக்கமாகப் பிரிந்து தங்கள் தங்கள் வித்வான்களை ஆதரிப்பார்கள்; சில வேளைகளில் இது பெரிய அடிதடியில் கொண்டு போய் விடும்.

அப்போது யாழ்ப்பாணத்தில் ‘சின்னமேனை, சின்ன மேனை’ என்று ஒரு பெரிய வித்துவான் இருந்தார். பல்லவி பாடுவதில் இவரை விழுத்த இனி மேல் தான் ஒருவர் பிறக்க வேணும். அப்படி ஒரு பேர். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவருக்கு. செல்லரம்மான் அதில் முதன்மையானவர்.

அப்போதுதான் இந்தியாவில் இருந்து ஒரு பிரபல வயலின் வித்துவான் வந்திருந்தார். சின்னமேனைக்க அவரை எப்படியும் மட்டந்தட்ட வேண்டும் என்று ஒரு உத்வேகம். அந்தக் காலத்தில் அப்படிச் செய்தால்தான் ஒருவன் தன் புகழை நிலை நாட்ட முடியும். சின்னமேனையின் ரசிகர்களுக்கு உற்சாகம் தலைக்கு மேல் போய்விட்டது. செல்லரம்மாள் அவருடைய பிரதம ரசிகர்.

சின்னமேனைக்கு அந்த இந்திய வித்வான் வயலின் வாசிக்கும் படியாக ஒரு கச்சேரி ஒழுங்கு பண்ணினார்கள். சின்னமேனை முன்பின் கேள்விப்படாத ஒரு தாளத்தில் ஒரு புதுப் பல்லவியை உருவாக்கினார். அதை இரவு பகலென்று பாராமல் ரகஸ்யமாக ஆயிரம் தடவை சாதகம் செய்து வைத்துக் கொண்டார்.

கச்சேரி வழக்கம் போலத் தொடங்கி களைகட்டிக் கொண்டே வந்தது. வயலின்காரரும் ஈடு கொடுத்து வாசித்துக் கொண்டே வந்தார். கடைசியில் பல்லவி பாடும் நேரம். சபையில் மூச்சுவிடக் கூட ஒருதரும் துணியவில்லை.

சின்னமேனை, அங்கவஸ்திரத்தை இழுத்து தாளம் போடும் கையை மறைத்தவாறு, ஆரம்பிக்கிறார். சபையிலே அப்படி ஒரு நிசப்தம்.

“மா….மரமும்….நிழலும்….குயிலும் மருவி அணையத் தருணமிதுவே.

இது தான் பல்லவி; இதைத் திருப்பித் திருப்பித் தன் வித்தை எல்லாத்தையும் காட்டி பாடுகிறார்; வயலின் காரரும் சளைக்காமல் பக்கத்து பக்கத்தில் நெருக்கிக் கொண்டே வருகிறார். இவர் பாட, அவர் வாசிக்க, சபையோர் ஆனந்த பரவசத்தில் மூழ்கி இருக்கிறார்கள். என்ன நடக்குமோ என்ன நடக்குமோ, என்ற ஆவல்?

இப்போது பாடகர் சமயம் பார்த்து “குயிலும்….. நிழலும், குயிலும்”

என்று பாடுகிறார் துரித காலத்தில், வயலின் காரரும் தாளத்துடன் ஒத்துப்போக படக்கென்று கையை இழுக்கிறார். ஆனால், ஈடு கொடுக்க முடியாமல் வயலின் கம்பி அறுந்து விடுகிறது.

அவ்வளவு தான். சபையோரின் கரகோஷம் வானைப் பிளக்கிறது. அன்றிலிருந்து வித்துவானுக்கு ஒரு புதுப்பெயர், ‘வயலின் அறுத்த சின்னமேனை’. சின்னமேனை இறக்கும் வரை சங்கீதத்தில் ஒரு முடிசூடா மன்னனாகவே இருந்தார்.

* * *

ஒரு நாள் நாங்கள் எதிர்பார்க்காத நேரத்தில் செல்லரம்மான் திடீரென்று வந்து விட்டார். அப்போதுதான் அழுது கொண்டிருந்தேன். எனக்கு பதினொரு வயது. பரீட்சைக்கு மிகவும் கஷ்டப்பட்டுத்தான் படித்தேன். பெரிய பள்ளிக்கூடம் போக வேண்டும் என்று அப்படி ஒரு ஆசை. ஆனால் பூபாலன் ஒரு ‘மார்க்’ வித்தியாசத்தில் என்னை முந்திவிட்டான். எனக்கு அந்த சான்ஸ் போய் விட்டது.

அன்றுதான் எனக்கு அபிமன்யு கதையைச் சொன்னார். அது நான் மறக்க முடியாத நாள்; அதுதான் நான் மறக்க முடியாத கதையும் கூட

“பதின்மூன்றாம் நாள் போர். துரோணர் பத்மவியூகம் வகுத்து சேனைகளை எல்லாம் அணி வகுத்து நிற்கிறார். அர்ஜுனனோ தெற்குத் திசையில் மும்முரமாக யுத்தம் செய்கிறான். பாண்டவ சேனையில் பெரிய சேதம்; ஆயிரக் கணக்கில் மடிகிறார்கள்.”

“பதினாறு வயதுப் பாலகன் அபிமன்யுவுக்கு பத்ம வியூகத்தை உடைக்கத் தெரியும்; ஆனால் திரும்பி வரும் வித்தையை இன்னும் கற்றுக் கொள்ளவில்லை. தருமர் சொற்படி பத்மவியூகத்தை உடைத்து உள்ளே போய் விடுகிறான். கொடுத்த வாக்குப் பிரகாரம் தருமரும், வீமனும் மற்ற பாண்டவ சேனையும் தொடர்ந்து போக முயற்சிக்கிறார்கள்; ஆனால் ஜயந்திரதன் தடுத்து விட்டான்; எப்படி முயன்றும் அவர்களால் அபிமன்யுவைத் தொடர்ந்து உள்ளே போக முடியவில்லை.”

“பாவம், அபிமன்யு! சூரியனைப் போல ஒளி வீசிக் கொண்டு யுத்தம் புரிகிறான். கௌரவ சைனியங்களையெல்லாம் துவம்சம் செய்கிறான். அவனுக்குத் துணை அவனுடைய வீரம் மட்டும்தான்.”

“அப்போது, கௌரவ சேனையின் ஆறு மகாரதர்களும் ஒன்று சேர்ந்து கொண்டு, கர்ணன் உட்பட, சதிசெய்து அபிமன்யுவைக் கொன்று விடுகிறார்கள்.”

இதைக் கேட்டு நான் கண் கலங்குகிறேன், அப்ப செல்லரம்மான் சொல்கிறார்:

“சில நேரங்களில், பெரிய வெற்றியைத் தேடிப் போகும் போது சில சிறிய தோல்விகளை நாங்கள் சந்திக்கத் தான் வேணும். உள் பெரிய வெற்றியிலே இது ஒரு சிறு தோல்வி”

இந்த அறிவுரை எனக்கு அன்று மாத்திரமல்ல பிறகும் எத்தனையோ சந்தர்ப்பங்களில் என் நினைவுக்கு வந்திருக்கிறது.

* * *

இவ்வளவு கூறிய நான் செல்லரம்மானுடைய இறுதிக் காலத்தைப் பற்றியும் சொல்லத்தானே வேண்டும்.

சில சாவுகள் தவிர்க்க முடியாதவை. வருத்தம் வந்து சாகிறான்; படுக்கையில் படுத்து சாகிறான்; நித்திரையில் சாகிறான்; மரம் வெட்டும் போது மரம் விழுந்து சாகிறான். ஆனால் செல்லரம்மானுடைய சாவு அநியாயச் சாவு; தவிர்க்கக் கூடிய சாவு.

யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டம் இருந்த காலம் அது. ஒரு நாள் மாலை நேரம். இவர் வேலையை முடித்து விட்டு ஒட்டமும் நடையுமாக வீட்டுக்கப் போகிறார்.

பட்டாளத்துக்காரன் இவரைப் பார்த்து ‘நில்’ என்று சொல்கிறான். இவருக்கு கேட்கவில்லை. அந்த நேரத்தில் இவருடைய வாய் காவி ராகத்தில் ஒரு பாட்டை முணுமுணுத்திருக்குமோ, என்னவோ? அவன் இன்னொரு முறை சத்தம் போடுகிறான். இவருக்கு அதுவும் கேட்கவில்லை. மூன்று தரம் சுடுகிறான். மூன்று குண்டுகளும் தவறாமல் இவர் முதுகைத் துளைத்தபடி போகிறது.

கேட்பாரற்று, அநியாயமாகக் கீழே விழுந்தார் செல்லரம்மான். அவருடைய கடைசி சுவாசம் என்ன கதையைச் சொல்லிக் கொண்டு வெளியே போனதுவோ!

* * *

முப்பது வருடங்களுக்கு பிறகு நான் செல்லரம்மானைத் தேடிப் போன போது அவரைத் தெரிந்தவர்கள் இந்த விபரங்களைச் சொன்னார்கள். அவருடைய மனைவியும், மகளும் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. மகள் வளர்ந்து, பெரியவளாகி அவளுக்கும் பிள்ளைகள் இருந்திருக்க வேண்டுமே?

என்னுடைய வாழ்க்கையில் எத்தனையோ இக்கட்டான சந்தர்ப்பங்களில் அவரை நினைவு கூர்ந்திருக்கிறேன். சந்தோஷமான நேரங்களிலும் அவரை நான் மறக்கவில்லை. அப்படியான அவருடைய ஒரு தாக்கம் என் வாழ்க்கையில் இருந்தாலும் அவர் இறப்பதற்கு முன்னர் ஒரு முறை கூட என்னால் அவரைச் சந்திப்பதற்கு முடிய வில்லையே!

சிறு வயதில் ஒரே ஒரு முறை போன ஞாபகத்தை வைத்துக் கொண்டு அவர் வீடு தேடிப் போகிறேன். அங்கே உள்ள குடிசைகள் எல்லாம் சிதைந்து போய் கேட்பாரற்று கிடந்தன. ஒருவரையும் காணவில்லை. எல்லாம் பட்டாளத்துக்காரர்களினால் ஏற்பட்ட அழிவு தான். எது அவர் வீடாக இருக்கும் என்று ஞாபகப் படுத்தி தேடித் தேடிப் பார்க்கிறேன்.

அப்போது பாம்பு கீறிய தென்னை மரமொன்று என் கண்ணிலே படுகிறது. கிட்டப்போய் அந்தப் பாம்பையே பார்த்தபடி நிற்கிறேன்.

– திகடசக்கரம், முதற் பதிப்பு: ஆனி 1995, காந்தாளகம், மறவன்புலவு, சாவகச்சேரி

– அ.முத்துலிங்கம் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2003, தமிழினி, சென்னை.

Print Friendly, PDF & Email

1 thought on “செல்லரம்மான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *