சுழல் கதைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 17, 2023
பார்வையிட்டோர்: 1,712 
 
 

டிஸ்கி: இந்த பதிவுல மொத்தம் 5 சின்னக்கதைகள் இருக்கு. ஒவ்வொரு கதையும் தனித்தனி. அதனால போர் அடிச்சா அப்படியே மீதியை விட்டுட்டு பின்னூட்டம் போட போயிடலாம். ஒவ்வொரு கதையோட முடிவும் அடுத்த கதையோட ஆரம்பம் அப்படின்ற மாதிரி எழுதியிருக்கேன். நல்லாயிருக்கான்னு படிச்சிட்டு சொல்லுங்க.


இதயத்திற்குள் நுழைந்த துப்பாக்கி குண்டை கைகளால் அழுந்தியபடி சரிந்த சரவணபாண்டியன் நம்ப முடியாமல் எதிரில் இருந்தவனைப் பார்த்தான்.

“என்னடா பாக்குற? பி.ஏ.கிட்ட மினிஸ்டரு பணம் குடுத்துவிட்டதா சொன்னாரு, ஆனா இவன் சுட்டுட்டானேன்னா!! ஹா..ஹா..ஹா.. எதிர்க்கட்சியில இருந்து இங்க வந்து நீ சேந்ததே ஏதாவது ஆதாயம் கிடைக்குமுன்னுதான். அதே மாதிரி உன்னால என்ன ஆதாயம் கிடைக்குமுன்னு எங்க மினிஸ்டரும் யோசிக்க மாட்டாரா? நீ இங்க வந்து சேந்தது இப்ப மொத்த தமிழ்நாட்டுக்கும் தெரியும், இப்ப உன்னை கொன்னது எதிர்கட்சிக்காரன்னுதான் எல்லாரும் நெனப்பாங்க. அது எங்களுக்கு வரப்போற தேர்தல்ல உதவப்போகுது. வரட்டா?”

என்றவாறே கிளம்பி சென்றவனை பார்த்தவாறே கண்களை மூடினார் சரவணபாண்டியன்.

அமைச்சருக்காக அரைமணி நேரம் காத்திருந்து அவர் வந்தவுடன் நடந்ததை விளக்கி பணம் வாங்கிக் கொண்டு கிளம்பும்போது கதவு தட்டப்பட்டது. திற‌ந்த அமைச்சர் இன்ஸ்பெக்டரை பார்த்து அதிர்ந்தார்.

“ஆளுங்கட்சி பணம் கொடுத்து ஆளுங்களை இழுக்குறத நிரூபிக்கறதுக்காக எதிர்கட்சிக்காரங்க ஏற்பாடு பண்ணின ஸ்டிங் ஆபரேசன்தான் சரவணபாண்டியன் உங்க கட்சிக்கு வந்து சேர்ந்தது. நீங்க பணம் குடுக்குறத படம் புடிக்க உங்களுக்கே தெரியாம வெச்சிருந்த வீடியோ கேமிரால உங்க பி.ஏ. சுட்டதும், பேசுனதும் தெளிவா பதிவாயிடுச்சி. சி.எம் உங்களை அமைச்சர் போஸ்ட்ல இருந்தும், கட்சியில இருந்தும் நீக்கிட்டாரு. போலாமா சார்?”

என்றவாறே கை விலங்கை காட்டியவரை அதிர்ச்சியுடன் பார்த்தார் முன்னாள் அமைச்சர்.


கை விலங்குடன் அழைத்து வரப்பட்ட அவனை பயத்துடன் பார்த்தனர் கோர்ட் வளாகத்தில் இருந்த அனைவரும். அவன் பீட்டர் சக்திவேல். தென்னிந்தியாவின் மிகக் கொடூரமான தீவிரவாதி. 2003ல் முத்துநகர் எக்ஸ்பிரஸிலும், 2004ல் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸிலும், 2005ல் சென்னை வடபழனி பேருந்திலும் நடந்த குண்டுவெடிப்புகளைப் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்குமே. அதன் சூத்திரதாரி.

கடந்த மாதம் அரிசிக் கடத்தலை தடுக்க நடந்த இரவு நேர சோதனையில் காவல்துறையே நம்பமுடியாத வகையில் மாட்டியவன். எதற்காக அவன் சென்னைக்கு வந்து கொண்டிருந்தான் என்பது புரியாமல் காவல்துறை பெருந்தலைகள் இல்லாத முடியை பிய்த்துக்கொண்டிருப்பது அறிந்ததே.

இதோ ஒரு வழக்கு விசாரணைக்காக மதுரை வந்துவிட்டு சென்னை திரும்பும் காவல் வாகனத்தில் 5 காவலர்கள் புடை சூழ வந்து கொண்டிருந்தவன் மனதிற்குள் சிரித்துக் கொண்டிருந்தான்.

‘இன்னிக்கு மதுரையில அழகர் ஆத்துல இறங்கப்போறாரு. அந்த இடத்துல வெக்கிறதுக்காக நான் பாம் செஞ்சு குடுத்துட்டு வர்றப்பதான் என்னை புடிச்சிட்டீங்க. இதோ நான் மதுரையில இருந்து கிள‌ம்பிட்டேன். இன்னும் 2 ம‌ணி நேர‌த்துல‌ வெடிக்க‌ப்போகுது. போங்க‌டா போக்க‌த்த‌வ‌னுங்க‌ளா’

என்று நினைத்துக் கொண்டிருந்த‌ அதே வேளையில், அவ‌ன் போலீஸில் சிக்கிய‌தும், போலீஸுக்கு பயந்த அவன் கூட்டாளி வெடிகுண்டை ஒரு பப்ளிக் டாய்லெட்டில் வீசிவிட்டு சென்றதும், அடுத்த பத்து நிமிடத்தில் உணவகத்தில் நிற்கும்போது டாய்லெட் செல்லும் அவன் வெடித்து சிதறப்போவதும் தெரியாம‌ல் ச‌ந்தோச‌ப்ப‌டும் அவ‌னை நினைத்து அழ‌க‌ர் சிரித்துக் கொண்டிருந்தார்.


“ஐயா.. எதுக்குயா சிரிக்கிறீங்க?”

“என்னா சோலை.. வறட்சி நிவாரணம் பணம் முழுசும் உனக்கே குடுத்துட்டா அப்புறம் எங்களுக்கு நிவாரணம் யாரு குடுக்குறது? ஒனக்கு ஏக்கருக்கு ரெண்டாயிரம்னு மொத்தம் பத்தாயிரம் சாங்ஷன் ஆகியிருக்கு, வெளியில போயி முருகன் இருப்பான், அவன்கிட்ட ஆயிரம் ரூபா குடுத்துட்டு வா, ஒனக்கு நான் டோக்கன் குடுக்குறேன்”

வெளியில் வந்த சோலை “படுபாவிங்க, 6 மாசமா மழையே இல்லாம கடவுள்தான் கழுத்தறுக்குறாருன்னா, கவர்மென்டு குடுக்குற வறட்சி நிவாரணத்தைக் குடுக்குறதுக்கு இவனுங்களும் கழுத்தறுக்கிறானுங்க” என்று நினைத்தவாறே, கடன் வாங்கி வந்திருந்த ஆயிரம் ரூபாயை ஆபிசர் சொல்லியவனிடம் கொடுத்து, பின் டோக்கன் வாங்கி, வரிசையில் காத்திருந்து பணம் வாங்கிக் கொண்டு வெளியே வந்தான். சைக்கிளை எடுத்து மிதிக்க ஆரம்பித்தான்.

‘இன்னும் அஞ்சு கிலோமீட்டர் போகணும். ஆண்டவனே! எவ்ளோ நல்லா விவசாயம் நடந்துட்டு இருந்த கிராமம். மழை சரியா பேஞ்சு முப்போகமும் வெளஞ்சி கிராமமே பச்சப் பசேல்னு இருக்குமே! கொஞ்சம் கொஞ்சமா மழை கொறஞ்சி இந்த வருசம் சுத்தமா இல்லாம போச்சே.. ஏன் எங்கள இப்படி சோதிக்கிற’ என்று புலம்பியவாறே வறண்டு கிடந்த ஏரிக்குள் நுழைந்தான்.

லேசாக வானம் கறுக்க ஆரம்பித்திருந்தது, அவன் அணிந்திருந்த அழுக்கான மெல்லிய சட்டையைத் தாண்டி லேசான குளிர் தெரிய ஆரம்பித்தது. த‌லையைத் தூக்கி வான‌த்தைப் பார்த்த‌வ‌ன் ஆண்ட‌வ‌னை வேண்ட‌ ஆர‌ம்பித்தான்..

‘ஆண்ட‌வா! இன்னும் ரெண்டு கிலோமீட்ட‌ர் ஊருக்கு போக‌ணும். இந்த பணத்தை நம்பிதான்யா எங்க எதிர்காலமே இருக்கு. ஏரியைத் தாண்டி வூட்டுக்கு போற‌ வ‌ரைக்கும் ம‌ழை வ‌ராம‌ நீதாம்பா காப்பாத்துணும்’


“என்னாது நான் உன்ன காப்பாதுறதா? நான் என்னைய‌ காப்பாத்திக்கவே போராடிட்டு இருக்கேன்” என்றான் மாணிக்கம்.

“அதில்ல மச்சான்.. உனக்குதான் தெரியுமே நான் அந்த சீட்டு கம்பெனியில வேலைக்கு சேந்தது. எங்க குப்பத்துல என்னைய எல்லாருக்கும் நல்லா தெரியும்ன்றதால எல்லார்கிட்டயும் பேசி சீட்டு சேத்து விட்டேன். எனக்கும் கமிஷன் கிடைச்சிது. அந்த நாதாரி இப்படி ஒரே நைட்ல எல்லா பணத்தையும் எடுத்துட்டு ஓடுவான்னு எனக்கென்னா தெரியும்?”

“சரி.. சரி.. அழுவாத.. அதுக்குதான் நான் மொதல்லயே சொன்னேன். இப்பல்லாம் ஏமாத்துறவனுங்க டைரக்டா செய்யுறதில்ல, இப்படி அந்த ஏரியாவுல நல்ல பேர் இருக்குறவனா பாத்து புடிச்சு போடுறானுங்க.. நீயும் அதுக்கு பலிகடா ஆயிட்ட”

“ஆமா மச்சான்”

“சரி.. ஒண்ணு பண்ணு.. சாப்டுட்டு போய் நம்ம போட்டாண்ட நில்லு, கபாலி வருவான், இன்னிக்கு அவன் மட்டும்தான் கடலுக்கு போறான். நீயும் அவன் கூட போயிட்டு வா. தரையில இருக்குறது ஒனக்கு இப்ப சேஃப் இல்ல”

ஒரு மணிநேரம் கழித்து கபாலி வந்தான். அவனிடம் விவரம் எதுவும் சொல்லாமல் ஒரு சிறிய பிரச்சினை என்று மட்டும் சொல்லி, அவனுடன் படகில் கிளம்பினான்.

கபாலியும், மச்சானும்தான் சேர்ந்து இந்த படகை வாங்கினார்கள். கபாலி ரொம்ப நல்லவன். 15 வருசமாக இருவரும் சேர்ந்து தொழில் செய்தாலும் இதுவரை தகராறு எதுவும் வந்ததில்லை. ஆனால் அவன் ஒரு வாயாடி.. பேசிக்கொண்டே வந்தான். 2 மணிநேரத்திற்கு பிறகு மெதுவாக கபாலி கேட்டான்..

“ஏன் முத்து.. நமக்கு தெரிஞ்ச ஆள் ஒருத்தர் புதுசா சீட்டு கம்பெனி ஆரம்பிச்சிருக்காரு.. நல்ல மனுசந்தான்.. நானே சேத்து உடறேன்.. நீ வேணா ஒரு அம்பதாயிரம் ரூபா சீட்டு போடேன்”


“என்னது? இன்னொரு சீட்டு போடுறதா? என்னடா விளையாடுறியா?” என்று மெதுவான குரலில் கேட்டான் கிருஷ். அவர்கள் இருந்தது நகரின் பிரபலமான காஸினோவின் ப்ளாக் ஜாக் டேபிளில்..

“விளையாண்டுட்டுதானேடா இருக்கோம்” சிரித்தான் சித்தார்த்.

“ஏற்கனவே 18 இருக்கு, இன்னும் கார்டு கேக்குற, ரெண்டு, மூணு இல்லை ஏஸ் வரலைன்னா நீ தோத்துடுவ”

“பரவாயில்ல, டிரை பண்ணுவோம், லைஃப்ல ரிஸ்க் எடுக்க பயப்படக் கூடாதுடா. அதுவும் இது என்னா சுண்டைக்கா, ரெண்டாயிரம் டாலர்தான, போயிட்டு போவுது”

அடுத்த சீட்டு 2 வந்தது. சித்தார்த் ஜெயித்தான். அவன், அமெரிக்க ராணுவத்திற்கு தளவாடம் சப்ளை செய்யும் மிக முக்கியமான நிறுவனத்தின் ஆர் & டி பிரிவின் மிக மிக முக்கியமான நபர். மறுநாள் ராணுவ உயர் அதிகாரிகளுக்கு நடக்க இருக்கும் ரகசிய டெமோவிற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு ரிலாக்ஸேஷனுக்காக காஸினோ வந்திருந்தனர்.

“என்னமோ போடா.. உன்னை பாராட்டுறதா திட்டுறதான்னு தெரியல. ஒரு விசயம், எல்லா நேரத்திலயும் அதிர்ஷ்டம் கை குடுக்காது. பாத்து நடந்துக்க”

“கம்முனு இருடா.. சும்மா பாட்டி மாதிரி புத்தி சொல்லிட்டு” சிரித்துக் கொண்டே காரை கிளப்பினான்.

மறுநாள், புதிதாக வடிவமைக்கப்பட்ட குறைந்த எடையுடைய ஆனால் அதி நவீன துப்பாக்கியிலிருந்து வரும் தோட்டாவையும் தடுக்கக்கூடிய கவச உடை டொமோ. கடந்த ஒரு மாதமாக எல்லா விதமாக டெஸ்டிங்கும் செய்து அறிக்கை அளித்திருந்த அவனது டீமிற்கு நன்றி சொல்லிவிட்டு டெமோ பீஸுடன் கான்ஃபரன்ஸ் ஹாலுக்குள் நுழைந்தான் சித்.

“ஹாய் சித்.. ஏன் இந்த டெமோவை வெளியில வெச்சிக்கக் கூடாது. ஏன்னா ரியல் டைம் டெமோவா இருக்கணும்னு பார்க்குறோம்”

“ஷ்யூர்.. வாங்க போகலாம்” வெளியே வந்தான். மே மாத வெயில் 98 டிகிரியில் கொளுத்திக்கொண்டிருந்தது. லேசாக வியர்க்க ஆரம்பித்தது.

“இப்போ நானே இதை போட்டுக்கிறேன்.”

“ஏன் வேற யாராவது…”

“அப்படி பண்ணினா, இந்த ப்ராடக்ட் மேல எனக்கே நம்பிக்கை இல்லைன்னு அர்த்தம்” ட்ரேட் மார்க் சிரிப்பை உதிர்த்தான் சித்.

“நீங்க என் உடம்பை குறி பாத்து சுடுங்க ஜாக்..”

“நீங்க ரொம்ப ரிஸ்க் எடுக்குறீங்க சித்” என்று கூறியவாறே குறி பார்த்து சுட்டான் ஜாக்.

அவன் டிரிக்கரை அழுத்திய வினாடி, சித்தார்த்திற்கு முதல் நாள் டெஸ்ட் ரிப்போர்டில் படித்த ஃபெய்லியர் கேஸஸ் லிஸ்ட் நினைவுக்கு வந்தது.

‘வெப்பநிலை 95 டிகிரிக்கு அதிகமாகவும் ஈரப்பதம் 30%க்கு அதிகமாகவும் செல்லும்போது கவச உடையில் உள்ள ஃபைபர் நெகிழ்ந்து துப்பாக்கி குண்டை தடுக்கும் சக்தியை இழக்கிறது. 116க்கு 1 முறை இந்த நிகழ்வு காணப்பட்டது’

வெப்பநிலை கிட்டதட்ட 100 இருக்கும். தன் வேர்வையில் ஏற்கனவே உடை முழுதும் நனைந்துள்ளது. அதிர்ந்து போய் பார்த்தான். துப்பாக்கி குண்டு அவன் நெஞ்சுக்கு நேராக வந்துகொண்டிருந்தது.

(இப்போ முதல் கதையை படிக்க ஆரம்பிங்க)

– அக்டோபர் 2008

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *