கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 22, 2023
பார்வையிட்டோர்: 2,807 
 
 

எம்.ஜி.ராமச்சந்திரன் இறந்த பதினெட்டாவது நாளின் சாயங்காலம் முதன் முதலில் அந்தக் கடைக்குள் நுழைந்தேன். புகழ் பெற்ற கடிகாரக் கம்பெனி ஒன்றின் சர்வீஸ் சென்டர் அது. அதில் அப்போது நான் நுழைந்தது வார் (ஸ்ட்ராப்) மாற்றுவதற்குத்தான். கடிகாரம் நல்ல கடிகாரம்தான். கண்ணதாசன், ரஷ்ய அதிபர் பிரஸ்னேவ். இலக்கம் பதினொன்று, குப்புசாமி ரெட்டி தெருவில் வாழ்ந்த காத்தமுத்து இப்படி உள்ளூர் முதல் உலகம் வரை பாதித்த மரணங்கள் பற்றி கவலைப்படாமல் அது ஓடிக்கொண்டு வந்தது. 

அதன் வார் நைந்து இற்றுப்போய் உள்ளிருக்கும் ‘சல்லடை வெள்ளை’ தெரிய ஆரம்பித்து விட்டிருந்தது. இடுப்புக்கு ‘பெல்ட்’ மாதிரி அது கடிகாரத்துக்கு ‘பெல்ட்’.

பெல்ட் அறுந்து விழுந்தால் அதிகபட்ச ஆபத்து ஏதுமில்லை. உடுக்கை இழந்த கை பேண்ட்டை இழுத்துப் பிடித்துக் கொள்ளும். இரண்டு பாக்கெட்டிலும் கைகளை விட்டுக் கொண்டு இழுத்துப் பிடித்தவாறு ஒருவிதமாகச் சமாளிக்கவும் செய்யலாம். கொஞ்சம் கணுக்கால் தெரியும் அவ்வளவுதான். கடிகார வார் அறுந்தால் கடிகாரம் கீழே விழுந்து விடும். செலவு வைத்து விடும். கடிகாரத்தில் மூன்று முட்களும், பன்னிரெண்டு எண்கள் பொருந்திய தட்டமும்தான் தன்னளவில் பழுதாகாத ஐட்டங்கள். அதே நேரம் கடிகாரம் பழுது என்பதை அறுதியிட்டு உறுதி செய்யவும் மேல்படி ஐட்டங்களே உதவியும் புரிகின்றன. 

இந்த வகைமை ‘அனலாக்’கிற்கே பொருந்தும். டிஜிட்டலின் விசித்திரங்களும் உபத்திரவங்களும் வேறு மாதிரியானவை. கடைக்குள் நான் போன காலத்தில் ஓர் ஒல்லிப் பெண் ஒரு குண்டுப் பெண் அவளுக்குச் சற்றும் சளைக்காத ஓர் ஆண் ஆகியோர் வாடிக்கையாளர்களை எதிர்கொள்ளும் பிரிவில் இருந்தனர். ஒரு கண்ணாடித் தடுப்புக்கு அப்பால் ‘செம்மைப் பிரிவில்’ ஆண் ஒருத்தரும் பெண் ஒருத்தரும் இருந்தார்கள். 

கடை ரம்மியமானதாகவும் குளிர்க்கட்டு செய்யப்பட்டதாகவும் இருந்தது. குறிப்பான சங்கதி என்னவெனில் மங்கிய ட்யூப்லைட் வெளிச்சத்தில் கடையில் காலம் உறைந்திருந்தது. இரவு பகல் கங்குல், மூவந்தி எல்லாம் ஒன்றே போல் இருந்தன அங்கு. ஒல்லிப்பெண் பிரதான நிர்வாகியாகத் தென்பட்டாள். எனக்கு அடுத்து வந்த நபருக்கு குண்டுப்பெண்ணோ, ஆணோ பிரதான நிர்வாகியாகத் தென்பட்டிருக்கக்கூடும். மனம் உடனடியாக ‘பாஸ்’ களைத் தேடிக்கொண்டேதான் இருக்கிறது. 

ஒல்லிப்பெண் எனக்கு அவ்விதம் தோன்றியதற்கு ‘முகப்பு’ போல் தோற்றமளித்த அவள் நின்ற இடம் காரணமாய் இருந்திருக்கக்கூடும். நல்ல கடிகாரத்துக்கும் நைந்த வாருக்கும் சொந்தக்காரனான எனது பெயரை வினவினாள். வாழ்வில் எத்தனைக் கெத்தனாவது முறையோ என் பெயரைச் சொன்னேன். பேரைச் சொல்லாமல் வாழ ஊமைகளால் மட்டுமே முடிகிறது. 

‘அங்கே அமருமின்’ என்கிற குறிப்பாய் புருவங்களால் சோபாவைக் காட்டினாள். 

கடன்காரர்களுக்கே கூட ஆசுவாசம் தந்து விடக் கூடிய சோபா அது. ஆனால் பெரிய முள் ஓர் எண்ணிலிருந்து மறு எண்ணிற்கு நகரும் நேரம் கூட அதில் நிம்மதியாய் உட்கார விட மாட்டார்கள் போலிருந்தது. சந்தேகங்கள்.-சந்தேக நிவர்த்திகள். 

“எக்ஸ்கியூஸ்மி மிஸ்டர் -ஓ-தேங்க்ஸ் ஸிட்டவுன் ப்ளீஸ்” ஒவ்வொரு தலையையும் குறைந்தது ஐந்தாறு முறைகளாகிலும் எழுப்பி நடக்கடித்துக் கொண்டிருந்தனர். கடிகாரத்தின் ஒவ்வோர் பாகமும் ஏதாவது ஐயத்திற்கு இடமளிப்பதாகவே இருக்கிறது. ஆனாலும் பாதகமில்லை. கடிகாரத்தைத் திருப்தியுறக் கட்டுவது காலத்தையே நிர்வகிப்பது போலாகுமல்லவா? ஆதலினால் அறைக்குள் சில கிலோ மீட்டர்கள் நடப்பது தவறொன்றும் ஆகாது. சோபாவும் வீரச்சுவரும் நெருங்குகிற பகுதியில் சிறிய மேஜை வட்டக் கண்ணாடிமேல் ‘வைத்தெழுதும் அட்டை’ (Writing Pad) கிடந்தது. இரண்டு அடிக்கு ஒன்றரை அடிச் செவ்வகம் அது. அதன் பிரத்யேகப் பயன்பாடு அப்போதைக்குத் தெரியவில்லை. அதன்மீது மூன்று ஆங்கில இரு தமிழ்ப் புத்தகங்கள் கிடந்தன. 

நான் அவற்றைப் புரட்ட ஆரம்பித்த மறுநிமிடம் குண்டுப் பெண் வந்து வைத்தெழுதும் அட்டை மேல் புத்தகங்களை வாரிப் போட்டு உள்ளே எடுத்துச் சென்று விட்டாள். எனக்கு ஓர் ‘எக்ஸ்கியூஸ்மி’ கிடைத்தது. 

அப்போது அட்டையின் பிரத்யேகப் பயன்பாடு புரிந்து விட்டது. வெற்றிலைக்கு தாம்பூலத் தட்டு போல புத்தகத்துக்கு வைத்தெழுதும் அட்டைபோல. அவள் என் அறிவு விருத்தியை அனுமதித்திருக்கலாம். தவிர தமிழ்த்திரைக்கு நடிக்க வந்த லடுக்குகிகளின் லாவண்யத்தைக் கண்டு மகிழ்ந்திருக்கும் குதூகலத்திற்கு குந்தகம் விளைந்து விட்டது. 

அன்று கடைசியாக தொண்ணுறு ரூபாய் மதிப்புக்கு நான் விரும்பிய தோல் வாரினை அணிவித்து எனக்கு கடிகாரத்தைக் கொடுத்தனர். தொண்ணுறு என்பது பத்தின் ஜாதியல்ல. நூறின் ஜாதி. பாப்கார்ன் தின்று பான்பராக் போட்டு தொண்ணுறை நூறாக்கி விட்டு வீடு வந்து சேர்ந்தேன். கடையில் ‘ஸ்ட்ராப்’ புக்கான பில்லுடன் கூப்பன் ஒன்றையும் கொடுத்தனுப்பியிருந்தார்கள். அதில், நிறுவன வளர்ச்சிக்குத் தோதான திட்டங்களைத் தெரிவித்தால் பரிசாக ரூ500-க்கான காசோலை வழங்குவோம் என்றிருந்தது. நான் அக்கால கட்டங்களில் திட்டங்களால் நுரைத்துக் கொண்டிருந்தேன். சென்னைக் குடிநீர் முதல் ஜெனிவாவிலுள்ள நிலுவைகள் வரை சகலத்துக்கும் மசோதா நிலையில் தீர்வுகளை வைத்திருந்தேன். 

நான் அனுப்பின ஆலோசனைகளிலொன்று நிறுவனத்துக்குப் பிடித்துப் போய்விட ஐநூத்தியொரு ரூபாய்க்கு காசோலை வந்தது. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. கொஞ்சம் கூடுதலாக நடந்தது. ஐநூறு என்றவர்கள் ஐநூற்றியொன்றுக்கு செக் தந்தனர். சொல்வது ‘ஒன்று’ செய்வது ‘ஒன்று’ம் இதை வகைமிக்கலாம். ஏனெனில் இதில் ஐநூற்றியொன்று என வந்ததாலோ என்னவோ ஒரு ‘மொய்’த்தன்மையும் இதில் சேர்ந்திருந்தது. அதன் நிர்ப்பந்தம் அல்லது ஒப்பந்தம் என்னவோவெனில் அந்தத் தொகையுடன் மேலும் கொஞ்சமோ அதிகமோ காசைப் போட்டு அதே நிறுவனத்தின் கடிகாரத்தை நான் வாங்க வேண்டுமாம். நமக்கு வாட்ச்’ச பரிசு இப்படியா வாய்க்க வேணும்? என்று நான் முதலில் முனகினாலும் பிறகு கடிகாரம் வாங்கிவிட ஆயத்தமானேன். 

கடிகார வடிவாகக் கண்ணன் கனவில் வந்தது ‘செக்’ வந்த அதே இரவில்தான். 

குருஅக்ஷத்ரக்களம் 

கண்ணன் குதிரைகளைப் பிடித்தவாறு தேரில் உள்ளே அர்ஜுனன் கூப்பனைப் பார்த்தவாறு திகைத்து அமர்ந்திருக்கிறான். அவனது அம்பறாத் தூணியில் ஸ்ட்ராப், செயின் மற்றும் கடிகார உதிரிபாகங்கள். கண்ணன் திருவாய் மலர்கிறான். 

“அறுந்த வாட்சைத் தவிர எதைக் கொண்டு போனாய். சும்மா உனக்கு ஐநூறு தருவதற்கு, பிறக்கும்போது கூப்பாட்டுடன் பிறந்தாய். கூப்பன்களுடன் வளர்ந்தாய். அங்கிருந்து பெற்றதை அங்கேயே கொடு. கடிகாரத்தை வாங்கு, காலம் நான். கடிகாரம் நான்” 

பதறாமல் காலையில் விழித்தவன் ஐந்தாவது வேலையாகக் கடிகாரத்தை வாங்கக் கடைக்குக் கிளம்பினேன். அந்தக் கடிகாரத்தை வாங்கி அண்ணனுக்குக் கொடுத்துவிட வேண்டும். அண்ணன். என் அண்ணன். 

பிறந்து இருபத்தைந்து வருஷங்களாகக் கடிகாரமே கட்டாதவன். செம்மீன் படம் வந்தபோது, வால்ட் டிஸ்னி இறந்தபோது, ஸ்டெஃபிகிராப் பிறந்தபோது, பி.டி.உஷா ஆசியா விளையாட்டில் தங்கங் கொய்த போதென பலசமயங்களில் கடிகாரம் கட்டாது வாழ்ந்து விட்டவன். 

கையிலிருந்த காசோலையுடன் மேலும் ஐநூறு ரூபாய் இட்டு அவனுக்கு புதுசு வாங்கிக் கொடுத்தேன். பாகிஸ்தான் அதிபர் ஜியாவுல்ஹக் விமான (விப)த்தில் மரித்த மூன்றாம் நாள் அது. 

அந்தக் கடிகாரத்தின் வாரை மாற்றுவதற்குத்தான் கடைக்குள் போனேன். பழைய ஒல்லிப் பெண்ணைக் காணவில்லை. அவளது இடத்துக்கு குண்டுப் பெண் வந்து விட்டாள். அப்படியொன்றும் குண்டல்ல அவள். என்னுடன் ஒப்பிடும்போது கொஞ்சம் குண்டு அவ்வளவுதான். 

கடிகாரத்தை வாங்கியவள் ‘செம்மை அறை’யில் கொண்டு போய்க் காட்டி விட்டு வந்தாள். 

வார் மட்டுமல்லாத சட்டி (CASE)யையும் இதே சூட்டில் மாற்றிவிடுவது சாலச்சிறந்தது என்று எனக்கு உரைத்தாள். கடிகாரத்துக்கு ஆகும் செலவு என்று கடிகார விலையின் முக்கால் பங்கைக் கூறினாள். நான் ஒப்புக் கொண்டேன். புதிதே கூட வாங்கலாம்தான் ஆனால் இந்தக் கடிகாரத்தை விட மனசில்லை. வி.பி.சிங்கின் அரசு வீழ்ந்தது. கமலின் தேவர் மகன். ம.தி.மு.க. துவக்கம். சலீம் அலியின் தபால்தலை. சரோஜாவின் கல்யாணம் என்று பலவற்றை அது பார்த்திருந்தது. 

அந்தப் பெண் ரசீது எழுதிக் கொடுத்து விட்டு “நாலு நாள் கழிச்சு வாங்க” என்று ஆங்கிலத்தில் ஆணையிட்டாள். யார் கையில் கடிகாரம் இல்லாவிட்டாலும் நான்கு நாட்கள் போய்த்தான் விடுகின்றன. 

இன்றைக்கு காலை பத்து மணிக்கே கடைக்குள் நுழைந்து விட்டேன். உள்ளே நுழைந்தவுடன் ‘காலைப் பிறழ்வு’ ஆட்கொண்டு மந்தாரமான சூழ்நிலை. குளிர்க்கட்டுக்குள் இருப்பது திரண்டு கறுத்த மேகங்களின் கீழ் மழைக்கு முன்பு நிற்பது போலவே தோன்றுகிறது. 

ரசீதை வாங்கியவள் என்னிடம் தமிழில் பேச வெளிக்கிட்டுவிட்டாள். 

“நீங்க அங்க உக்காரு” என்று சோபாவைக் காட்டினாள். நெற்றியின் சந்தனக்கீற்றும் மொழியின் சன்னத் தெற்றும் எனிக்கு அவளுடெ பூர்வீகத்தெ அறியிக்குகயாயிருன்னு. 

புன்சிரியோடே சோபாவில் போய் அமர்ந்து கொண்டேன். எத்தனை தொழிலதிபர்கள் அவளரு ஒருமைக்கு இலக்காகப் போகிறார்களோ? என்று யோசிப்பதே எனக்குப் பரவசமாயிருந்தது. 

எனது இருக்கையிலிருந்து கைக்கெட்டும் தூரத்தில் கண்ணாடி மேஜை மீது புத்தகங்கள். இம்முறை யாரும் புத்தகங்களைப் பறித்துப் போக வாய்ப்புத் தரப் போவதில்லை. ஏன் புத்தகத்தைத் தொடவே போவதில்லை. 

தெலுகு நடிகர் கிருஷ்ணம் ராஜு போல மீசை வைத்த ஒருவர் அதே பெண்ணிடம் ஏதோ கேட்டுப் பதில் பெற்றுவிட்டு எனக்கெதிர்ப்புற சோபாவில் உட்கார்ந்தார். 

கிருஷ்ணம் ராஜு அந்தப் பெண்ணை சைட் அடித்தார் என எழுதுவது அவரது வயதுக்கு இழுக்கு. நான் ராஜுவை ரசித்துக் கொண்டு இருக்கும்போதே அந்தப் பெண் என் பெயர் கூறி அழைத்தாள். 

அவள் வழிவதற்கான வாய்ப்பே கிஞ்சித்தும் இல்லை. பவ்யமும் அற்ற பகிஷ்கரிப்பும் அற்ற நடுவாந்தர தோரணையில் அவள் ஆட்களை நிர்வகித்து அனுப்பிக் கொண்டிருந்தாள். 

‘கேஸ்’ மாற்றப்பட்ட என் கடிகாரத்துக்கு, 

“செயின் போட்டுக் கொள்கிறீர்களா?” என்று கேட்டவாறே செம்மை அறை நோக்கிச் சென்று வந்தவளின் கையில் கடிகாரம் இருந்தது. 

அது மிகவும் நீளமாக இருந்தது. டயலை மையமாக வைத்து நெக்லஸாகப் போட்டுக் கொள்ளலாம்- அல்லது ராட்சசர்களின் கடிகாரம். அதுவும் இல்லையேல் தொடைக் கடிகாரம். 

தனது கண்ணாடி மேஜை மேல் அதை வைத்தாள். 

“இவ்வளவு நீளத்தை எப்படிங்க கட்டறது?” 

“அய்யே..இது ரெண்டு செயினானு” என்று ரெண்டு பக்கவாடுகளை அவள் தொட்டுக் காட்டியபோதுதான் அது செயின் அல்ல அவை செயின்கள் என்று புரிந்தது. ஒளியின் பளீருள்ள மஞ் செள் அரளியின் நிறம் அவை. விலை, தங்கத்தை விட சில மாற்றுக்களே குறைவாகச் சொன்னாள். நான். 

“லெதர் ஸ்ட்ராப்பே போதும்” என்றும் சுழலும் அறுகோண அடுக்கிலிருந்து பிரவுன் கலருள்ள வாரை எடுத்துக் கொடுத்து என்னவோ பிரவுன் என்று பெயர் சொன்னாள் பிரவுனில் இத்தனை விதங்களா? என வியந்து நிற்கையில் “ரொம்ப சென்ஸிட்டிவ்வான லெதர்” என்றாள். 

“எவ்வளவு சென்ஸிட்டிவ்?” எனக் கேட்காமல் “எவ்வளவு?” என்று மட்டும் கேட்டேன். 

விலையைச் சொன்னாள். ஒப்புக் கொள்ளும் தரமாயிருந்தது. 

தலை அசைத்தேன். 

பில் எழுதினாள். காசு வாங்கினாள். வாருடனான எனது கடிகாரத்தைத் தந்தாள். பழைய உதிரிகைப் பாலித்தீன் பையில் போட்டுக் கொடுத்தாள். பில் கேரண்டி கார்டு-திட்டம் நுரைக்கும் கூப்பன் – புன்னகை..புன்னகை -திரும்பினேன். இப்போது கிருஷ்ணராஜு அந்தப் பெண் எதிரில் நின்று கொண்டிருந்தார். விடுபட நேரமாகும். 

கடைக்கு வெளியில் வந்தேன். நண்பகல் வெய்யில் மண்டையைப் பிளக்காவிட்டாலும் முடியையாவது பிளந்து விடும் போலிருந்தது. காற்று வெப்பம் காணலாக ஓடிக்கொண்டிருந்தது. எத்தனை டிகிரி வெய்யிலிருக்கும் என யோசித்தேன். எண்களிடப்பட்ட இன்னொரு உபகரணத்தை நினைக்கவும் தயக்கமாயிருந்தது. 

மணிக்கட்டைக் கவ்விய தோல் நாளத்தையும் காலத்தையும் கவ்வ முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தது. கடிகாரம் பழுதில்லாமல் ஓடினாலும் வார்களை மாற்றித்தான் ஆக வேண்டும் போலிருக்கிறது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *