‘‘வந்திரா! முடிவாய் நீ என்னதான்சொல்கிறாய்?’’ _சீறினார் பாவணன்.
தந்தையின் சீற்றம் தன்னைத் தகர்த்துவிடமுடியாது என்று திமிரும் தேகம் வந்திராவுக்கு.
அவர் அவளிடம் அபிப்ராயம் கேட்கவில்லை!ஒப்புக்கொள் _ அடிபணி என்று கட்டளையிடுகிறார். அவளால் அதற்கு ஒப்ப முடியவில்லை.
‘‘தந்தையே! எனது முடிவை எப்போதோ சொல்லிவிட்டேன். அதில் எந்த மாற்றமுமில்லை.தயவுசெய்து என்னை நிர்ப்பந்திக்காதீர்கள்!’’
சொல்லிவிட்டு வீட்டு முற்றம் இறங்கினாள். மரத்தில் செடி கொடிகள் பின்னிபிணைந்திருக்க,அவற்றில் அணில்கள் தாவின.
அவள், கொலுசுகள் குலுங்கிக் குமுற ஓடிச் சென்று, பொய்கையை அடைந்தாள். தெளிந்த நீரில் அன்னங்கள் சிறகடித்து நீந்த, அந்தச் சுதந்திரம் கூட தனக்கில்லையே என்று மறுகினாள்.
எங்கிருந்தோ மகரந்தத்தைச் சுமந்து வந்த வண்ணத்துப்பூச்சிகள் ஒட்டி உறவாடியிருந்தன.
பொய்கையின் கரையோர மரத்தின் விழுதுகள் நீரோடு உறவாட, அதன்மேல் தாவிக்குதிக்கும்குரங்கினங்கள், பழத்திற்காக அலைமோதும் கிளிகள்.
தன்னைத்தவிர எல்லாமே சந்தோஷமாயிருப்பதாகத் தோன்றியது வந்திராவுக்கு.
அவளுக்கு அழுகை அழுகையாய் வந்தது. ‘எனக்கேன் இந்தத் துயரம்?’
‘அரண்மனை ஊழியனின் மகளாகப் பிறந்ததுதான் பாவமா? எனக்கென்று ஒரு மனம் கூடாதா?விருப்பம் கூடதா!
வானம்பாடியாய் பாடித் திரிந்தவளின் துயருக்கெல்லாம் காரணம், பெருவளநல்லூர் கோட்டமண்டலத்தின் இளவரசன்_ இளஞ்செயன். எங்கிருந்தோ வந்தான். எல்லை மீறி பிதற்றுகிறான்.
இன்பமே அவள் எனத் துரத்துகிறான்.அவனும்கூட சோழ பரம்பரைதான். ஆனால், சுத்த வீரன் என்று சொல்ல முடியாது. அரண்மனைசெல்வமும் செழிப்பும் அவனை இளம்பருவத்திலேயே பாழ்படுத்திவிட்டன.
அவனுக்கென்று அந்தப்புரசுந்தரிகள் உண்டென்றும் பழிச்சொல் உண்டு.அரண்மனை ஊழியர்களின் வீட்டில் பூப்பெய்திய பெண்கள் இருப்பின், அவர்களை அரண்மனைசேவகத்திற்கு அனுப்பவேண்டும். இது அரசகட்டளை! அவரவர்களின் தகுதி, வனப்பு, வசீகரம், வயது அடிப்படையில் சேவகம் பிரித்துத் தரப்படும்.
வந்திராவுக்கு அப்படி வந்ததுதான் இளவரசியின் தோழி பதவி!
ஊற்றத்தூர் கோட்டையின் ஒரேபெண் வாரிசு கயல்கன்னி. பெயருக்கு முற்றிலும் முரண்பட்ட தோற்றம்.விழிக்கும் நோக்கிற்கும் மிகுந்த இடைவெளி. அரண்மனையில் பிறந்துவிட்ட புண்ணியத்தால் எல்லாம்அவளுக்கு இருக்கிறது; கிடைக்கிறது. இல்லாததும்கூட இருப்பது போன்ற தோற்றம்ஏற்படுத்தப்படுகிறது.
அரசி என்பதால் இயல்பிலேயே இறுமாப்பு! தோழிகள் என்றால் அடிமைகள்! அவள் சொன்னதைச்செய்யவேண்டும்.
வந்திராவுக்கு வெறுப்பு மேலிடும்.
ஒருசமயம் _ கயல்கன்னிக்கு சுயம்வரம்.
இளவரசி புலித்தோல் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்க, தோழிகள் மயில் தோகையால் சாமரம் வீச _சண்ட மேளங்களும் _ யாழும், குழலும், சங்கும் ஒலிக்க, புஜம் உயர்த்தி களத்தில் நாலா தேசத்துசக்ரவர்த்திகளின் எதிர்காலவாரிசுகள். இளவரசியின் கரம் பிடிக்க நெஞ்சுரம் காட்டிய அந்தஇளஞ்சிங்கங்கள் அரண்மனை காளையை அடக்க முடியாமல் தோற்று ஓடினர்.
வில், அம்பு, யானைக்கல், கழுகு மரமேற்றம் என வெற்றி கொள்வார் யாருமில்லை.அவர்களில் ஒருவனாக வந்தவன்தான் பெருவளநல்லூர் பேரரசின் இளவரசன் இளஞ்செயன். அவனதுதந்தை படையெடுத்து வந்த பாண்டியர்களைப் புறமுதுகு காட்ட வைத்தவர். ஆனாலும் ஊற்றத்தூர்மன்னனின் படை பலத்தைப் பற்றிக் கொஞ்சம் பயமுண்டு. அவனிடமிருந்து தன் ராஜ்ஜியத்தைக்காத்துக்கொள்ள பலவழிகளிலும் சிந்தித்தான். அதில் ஒன்றுதான் மகனை ஊற்றத்தூர் இளவரசியின்சுயம்வரத்திற்கு அனுப்பியது.
ஆனால், இளஞ்செயன் நேர்எதிர். தன் வீரத்தையும் வலிமையையும் காட்டுவதெல்லாம் புள்ளிமான்களிடம்!
ஆனாலும் அவனுக்கு சுயம்வரத்தில் பங்குகொண்டு இளவரசியைக் கைபிடிக்க வேண்டும் என்கிறஆசையும் இல்லை. ஆர்ப்பரிப்புமில்லை. எல்லாம் தந்தையின் பேராசை! கயல்கன்னியை மகன்மணந்தால், ஊற்றத்தூர் சாம்ராஜ்யம் தன் கைக்கு வரும் என்று அவர் கணக்கு போட்டிருந்தார்.
இளஞ்செயனுக்கோ மண்ணாசையைவிட பெண்ணாசையே பெரிது. கயல்கன்னி போன்ற அழகற்றபெண்ணைத் துணையாகப் பெற்று துன்புறுவதைவிட, தேசமற்று தேசாந்திரியாய் அலைவதே மேல்என நினைத்தான். ஆயினும் தந்தையின் கட்டளையை மீறமுடியாது. சுயம்வரத்திற்குப் புறப்பட்டவன்,பாதிவழி கடந்தபோது துணைக்கு வந்த சேவகர்களை அனுப்பிவிட்டு, புரவியின் கால் ஒடித்துகட்டுப்போட்டான். நொண்டிப் புரவியில் தாமதமாய் சுயம்வரப் பந்தலை அடைவதற்குள் எல்லாம்முடிந்து இளவரசி கயல்கன்னி திரும்பிக்கொண்டிருந்தாள்…
அவளுடன் வந்திராவும்.
இளஞ்செயனின் மனதில் பற்றியது மோகத்தீ.
‘வந்திரா! வந்திரா! இவள் எனக்கு வேண்டும். யாரிவள்?’விசாரித்தான்.அன்றே பாவணனைக் கண்டு, ‘‘உன் பெண் என் உயிரைக் கவர்ந்துவிட்டாள். அவளை எனக்கு மணம்முடித்துவை!’’ என்று மிரட்டினான்.
‘வந்திரா _ சேவகி _ அரசியாகும் தகுதியில்லாதவள்’ என்று எத்தனை எடுத்துச் சொல்லியும்கூடஅவன் கேட்கவில்லை.
‘‘இன்றே என்னுடன் அவளை அனுப்பாவிட்டால், சரியான தருணத்தில்இளவரசியைக் கொன்று பழியை உன் மகள்மேல் போடுவேன். ஆண்டியின் சொல் அம்பலம்ஏறாதென்பது உமக்குத் தெரியும் என நினைக்கிறேன். பெருவள நல்லூர் இளவரசன் என்றஅதிகாரத்தில் என்னால் எதையும் செய்யமுடியும். உம்மகளுக்காக நான் இதுவும் செய்வேன்’’ என்றுகெக்கலித்தான் இளஞ்செயன்.
வந்திராவிடம் விபரம் சொல்ல, அவளோ ‘முடியவே முடியாது’ என்று மறுத்தாள். வெடித்தாள்.
‘‘வந்திரா! என் தவப்புதல்வியே! தாயே! உன் முன்னில் தர்க்கிக்கும் தெம்பு எனக்கில்லை. எதுஎப்படியாயினும் இந்தத் திருமணம் நடந்தாகவேண்டும். நீ மறுத்தால், இளவரசியின் உயிருக்கு ஆபத்து.அப்படிச் சம்பவித்தால் மறுகணமே நான் உயிர் துறப்பேன்! அது உறுதி!’’ கெஞ்சினார் பாவணன்.
நீண்ட யோசனைக்குப்பின் _வந்திரா, ‘‘சரி தந்தையே! உங்கள் கட்டளையை ஏற்க நான் தயார். ஆனால் ஒரு நிபந்தனை!’’ என்றுமுறுக்கினாள்.
‘‘என்ன?’’
‘‘என்னைக் கைபிடிக்க _ நான் வைக்கும் போட்டிகளில் அவன் வெல்லவேண்டும்.’’
‘‘என்ன சொல்கிறாய் நீ, உனக்கென்ன பைத்தியமா? இளவரசனுக்குப் போட்டி வைக்க நீ யார்?’’
‘‘இளவரசி சுயம்வரம் நடத்தலாம். நான் கூடாதா?’’
‘‘கூடாது. அதற்கு உனக்கு யோக்கியதை இல்லை. வீண் பிதற்றல்கள் வேண்டாம். வேண்டாதஆசைகள் வேண்டாம். என்ன சொல்கிறாய்?’’
_ இதுதான் வந்திரா இப்போது அவள் மனதைக் குடைந்து கொண்டிருக்கும் விஷயம். தந்தையின்கூற்றை அவளுக்கு ஜீரணிக்க முடியவில்லை. ‘எனக்கென்ன குறை? இளவரசியைவிட நான் அழகு.வேதம் கற்றவள். நாட்டியம், இசை தெரிந்தவள். அங்கங்களெல்லாம் அங்கங்கே சிறப்பாய் அமையப்பெற்றவள். ஏன் நான் மட்டும் போட்டி வைக்கக்கூடாதா?
என்னை மணமுடிப்பவன் வீரனாக இருக்கவேண்டும் என்று ஆசைப்படக்கூடாதா?
’தடாகத்தின் புல்வெளியில் அமர்ந்து தன் இயலாமையைத் தண்ணீரின்மேல் கற்களால் எறிய
_‘‘வந்திரா! வந்திரா!’’
மயக்கும் குரல் _ முதுகின்மேல் தாக்க, திரும்பிப் பார்த்தவளுக்கு அதிர்ச்சி.புரவியின் மேல் அவன்! இளஞ்செயன். தடித்த புஜமும், விரித்த மார்பும், அரையில் செருகின வாளுமாய்அவன் தரையில் குதிக்க பூமியிலும் அதிர்ச்சி.
‘‘வந்தி! என் பேரழகே! உன்னைக் கண்டநாள் முதல் நான் எனை மறந்தேன்’’ பசப்புகிறான் என்றுதெரிந்தது _ அவளுக்கும் புரிந்தது.
‘‘மன்னா! தாங்கள் வந்தது இளவரசியைக் கைபிடிக்கத்தானே?’’
‘‘இல்லை அன்பே! சென்ற பெளர்ணமி விழாவில் உன்னைக் காணும் பேறு பெற்றேன். அன்றேமுடிவெடுத்தேன். எனக்கு நீதான் என்று. என் இதயமே! நான் உன் மேல் கொண்டுள்ள பாசத்தை எப்படி வெளிப்படுத்தவேண்டும் சொல்! நீ என்ன சொன்னாலும் கேட்பேன்!’’
‘‘நான் என்ன சொன்னாலும் செய்வீர்களா?’’
‘‘நிச்சயமாக. என் தந்தையின் மேல் ஆணையாக!’’
வந்திராவின் உள்ளத்தில் திட்டம் ஓடியது.
இளவரசியின் உயிரையும் காப்பாற்ற வேண்டும்; இவனைத்திருமணம் செய்துகொண்டு தன் வாழ்க்கை பாழாவதையும் தடுக்க வேண்டும். அதற்கு இவன்சாகவேண்டும்.
‘‘என்ன யோசனை வந்திரா? என்ன வேண்டும் சொல்?’’
‘‘அதோ அங்கே தெரிகிறதே அரசமரம்…’’
‘‘ஆமாம். அதற்கென்ன. அதை வேரோடு சாய்க்க வேண்டுமா?’’
‘‘இல்லை. அதன் கிளைகளில் ஊஞ்சல் கட்டி நாம் ஒன்றாக ஆடவேண்டும்?’’
‘‘ப்பூ… இவ்வளவுதானா… இதோ இப்போதே ஊஞ்சல் கட்டுகிறேன்.’’ என்று இளஞ்செயன்அரசமரத்தின்மேல் தாவினான்.
ஆலவிழுதில் ஊஞ்சல் சரி. அரசமரக் கிளையில் எப்படி? சாத்தியமா என அவன் யோசிக்கவில்லை.வந்திராவின் மேல் கொண்டிருந்த மோகத்தில் ஆவேசம் கண்களை மறைக்க, புத்தி மழுங்கி சேனமிட்டபுரவியாய் செயல்பட _ இமைக்கும் நேரத்தில் கிளை ஒடிந்தது… அவன் கீழே விழ…
அந்தக் கிளைக்குக் கீழே தரையில், பெரிய புதைசேறு இருப்பது அவளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.