போலி வாழ்க்கை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 6, 2021
பார்வையிட்டோர்: 3,212 
 

‘அப்பா!’

கூப்பிட்ட தொனி கோபமா அல்லது அப்பாவின் இயலாமை மீதான கழிவிரக்கமா?

மௌனமாக திரும்பினேன்.

விழிகளை அகலத்திறந்து அவளைப் பார்க்கையில்.. என் கேள்வியின் அர்த்தம் பார்வையில் தெரிந்திருக்கவேண்டும்.

சொன்னாள்.

‘ஏனப்பா..உங்களைப் போல நானும் எழுத வேண்டும்..என்னை என் பாட்டில் விட்டுவிடுங்களேன்’

அதற்கு..?

அருகில் வந்து அமர்ந்தேன்.அவள் ஏதோ சொல்ல நினைக்கிறாள். சொல்லட்டுமே.

அவளின் குரல் வரட்டுமே.

எத்தனை நாள் பூட்டிவைத்திருக்கும் கேள்வியும் அது எனில் கேட்டுவிட்டுப்போகட்டுமே. ‘உங்கள் விருப்பபடியே படித்தேன்.பட்டமும் பெற்றாயிற்று..உங்கள் விருப்பப்படியே நூல் எழுதியும் தந்தேன். போதுமே…நாம் வாழும் சூழலினைப் பாருங்கள்.எப்படி தெளிவாகச் சிந்திருக்கிறார்கள். செயல்படுகிறார்கள்.நூலை வாங்க நிறுவனம்..வாசிக்கவென வாசகர்கள்…நாம் காணும் அனைவரின் கைகளைப் பாருங்கள்…ஏதாவது வாங்கி வாசித்தபடியே நிற்கிறார்கள். வயது வித்தியாசம் என்றிலை.. மடிக்கணினி, கைத்தொலைபேசி, கைக்கடக்கமான கின்டில் என…அவர்களின் உலகம் தனி..

நீங்கள் சொல்லும் உங்களின் உலகம் எப்படி என்று சொல்லுங்கள். உங்களை பார்க்கவே பரிதாபமாக இருக்கும்..நண்பர்களும் சொல்கிறார்கள்…உங்களின் உலகம் வேறு…வாசிக்கும் மக்கள் தொகை குறைவு…அதற்குள் போட்டி..பொறாமை…மற்றவர்களின் வளர்ச்சியில் மூக்கு நுளைத்து தட்டிப்பறித்தல் அல்லது இல்லாமல் ஒழித்தல்… ஏனப்பா?

சரி விடுங்கள்..உங்களுக்கு ஆத்ம திருப்தி என்று தப்பிவிடுகின்றீர்கள். காலம் ஒருநாள் திரும்பும் என்பதும் சரி என்றே வைத்துக்கொள்ளுங்கள்.பிறகு நீங்கள் இருப்பீர்களா?

உங்களின் நூல்கள் அப்படியே அச்சிட்டு வீட்டில் தூங்குகின்றனவே..எனது நூலை வெளியீடு செய்தீர்கள்.எத்தனை பேர் வாங்கினார்கள்.உங்கள் மனச்சாட்சியினைத் தொட்டு சொல்லுங்கள்.இலவசமாக வாங்கிச் சென்றவர்கள் எத்தனை பேர்.நீங்களே சொல்கிறீர்கள்.இதெல்லாம் கடன் திருப்பிக்கொடுக்கவேண்டும் என்று..பிறகு தேவையா?ஏன் உங்கட சனம் இப்படி?

நாட்டுக்கு என்றும் தப்பிவிடுகிறீர்கள்.எல்லாரும் மறந்திருக்க நீங்கள் மட்டும்…சொல்லுங்கள் அப்பா!எல்லாரும் இப்படி தப்பிவிடுவதனால் தான் எல்லாமே தோல்வி..தோல்வி மனப்பான்மை தான் எங்களையும் இப்ப அழிக்கிறது.

வேண்டாம்..விட்டுவிடுங்கள். போலியாய் வாழ்வதில் பலன் இல்லை.உங்களுக்காவேனும் வாழுங்கள். போலிகளுடன் வாழ்கிறோம் என்பதை உணருங்கள். வாழலாம்..’

மகள் சொல்லிவிட்டு திரும்பி பார்க்காமலேயே உள்ளே சென்றாள்.

எச்சிலை என் முகத்தில் எறிந்து செல்கிறாளா?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *