சுப விரயம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 11, 2019
பார்வையிட்டோர்: 8,653 
 
 

எச்சில் இலைகளின்மீது நாய்கள் இரண்டும் ஒன்றையொன்று அடித்துப் புரண்டு கொண்டிருந்தன. பந்தல் தடுப்பின் பின்னால் நடக்கும் அந்த அமளி, பந்தலின் உள்ளும் எதிரொலித்தது.

வசந்தவிழா (காதணிவிழா) வைபவம் முடிந்து மொய்ப்பணம் சாமியறைக்குள் வைத்து எண்ணப்பட்டுக் கொண்டிருந்தது, பத்து நிமிடத்துக்கொருமுறை மனோகரனின் மனைவி கௌசல்யா எனும் கௌசி சாமிபடத்துக்கு எதோ செய்வதுபோல அறைக்குள் போவதும் வருவதுமாய் இருந்தாள். கௌசியின் தம்பி செந்திவேலுக்கு மூக்கின்மேல் கோவம் வந்துவிட்டது. “நோட்டுல எழுதுனதத்தான் எண்ணிகிட்டிருக்கம். யாரும் வாய்க்குள்ள போட்டு, மென்டு முழுங்கீற மாட்டம்” என சுள்ளென சத்தம்போட, நடமாட்டத்தைக் குறைத்தாள். ஆனாலும் கவனம் முழுக்க சாமியறையிலேயே குடிகொண்டிருந்தது. இரண்டு வருசத்துக்கு ஒருதரம் இப்படியொரு விசேசம் வைத்தால்தான், ஊரில் செய்த மொய்ப்பணத்தை வசூலிக்க முடிகிறது. நாளானால் ஜனங்கள் மறந்து விடுகிறார்கள்

நாய்களின் முழக்கம் கௌசியை எரிச்சலூட்டியது. “வெளீல யாருமில்லியா, இந்தச் சனியன்கள அடிச்சுப்பத்திவிடாம என்ன பண்ணிட்டிருக்கீக” புருசனை கடித்துத் துப்ப வந்த கௌசி, அங்கே மனோகரனது போர்க்கோளம் கண்டு தன்னிலை மறந்தாள்.

பந்தலுக்கு வெளியே நின்றிருந்த லாரியில் சமையல் பாத்திரங்கள் சேர், மற்றும் டைனிங் டேபிள்கள் ஏற்றிக் கட்டப்பட்ட நிலையில் இருந்தது. சமையல் குழுவினர் ஆங்காங்கே சிதறித் திரிந்தனர். மாஸ்டர், மனோகரனிடம் ஏதோ வாது செய்து கொண்டிருந்தார். இன்னமும் சமையல் கணக்கு முடிக்கவில்லையோ ? மனோகரனின் அருகில் வந்தாள் கௌசி.

“கணக்கு வாங்க மாட்டெங்கிறார் டி” மனோகரனும் சுள்ளென விழுந்தான்.

“மொதல்ல எனக்கு – நா, எடுத்துவந்த பொருள ஒப்படைக்கணு ம்மா. ரெண்டாவதுதான் சம்பளம்” ஏதோ ஒன்றின் முடிச்சை இறுக்குவதுபோல பேச்சை, நறுக்கென முடித்தார் மாஸ்டர்.

கௌசிக்கு குழப்பம் அதிகரித்தது. அனேகமாய் லாரியில் மாஸ்டர் கொண்டுவந்த பொருட்கள் பூராமும் ஏற்றப்பட்டிருக்கிறது. ஷாமியானா, மைக்செட் வேறேவேறே ஆட்கள். வாழைமரம் . . கழட்டி வீசப்பட வேண்டிய அய்ட்டம். வேறே என்ன?

“கொண்டுவந்த பெஞ்சில அஞ்சு, ஒடஞ்சு போச்சுல்லங்மா. !” மாஸ்டர்

“அதுக்கு . . ?.”

“ஒடஞ்சு போகல, உள்ள வரும்போதே ஒடச்சுதான கொண்டுவந்தீக” மாஸ்டரை முடிக்கவிடாது முந்திக்கொண்டு பேசினான் மனோகரன்.

“சார், நாங்க கடைல ஏத்திவிடும்போது எப்பிடிசார் இருந்திச்சு. நீங்களும் வந்துதான ஏத்துனீங்க”

பாத்திரக்கடைப் பையன் போலிருக்கிறது. இளவயசாய் இருந்தான். பாண்ட் சட்டை இன் செய்து மரியாதையான வார்த்தைகளையே பயன்படுத்தினான்.

நேற்றைக்கு இதே நேரம் மனோகரன் நேரில்போய் பொருட்களை. ஏற்றிக்கொண்டு வந்தான். சில நேரங்களில் கடையில் இழவு வீடுகளுக்குப் போகும் சரக்குகளை அனுப்பி விடுகின்றனர் அதனால் சேர்களெல்லாம் புதுசாய் பார்த்து எடுத்தான்.

“வி,ஐ,பி க. நெறையா வருவாங்க அண்ணாச்சி”

கடைக்காரர் ஒன்றும் சொல்லவில்லை “கரெக்ட்டா எண்ணி எடுத்துக்க” என மாஸ்டருக்கு அறிவுறுத்தினார்.

வீட்டுக்கு வந்து முதலில் பாத்திரங்கள், அடுப்புகள் இறக்கிவிட்டு டைனிங் டேபிள்களைக் கட்டி இருந்த கயிறுகளை அவிழ்க்கும்போது டேபிள்கள் சரிந்ததில் அவைகளை அண்டி நின்றிருந்த சேர்கள், ஒட்டுமொத்தமாய் லாரியிலிருந்து தரைக்குத் தள்ளிவிடப்பட்டன. நல்லவேளையாய் சமையலாள் சமயோசிதமாய்க் குதித்துவிட்டான். டேபிளுக்கடியில் சிக்கியிருந்தால் அவனும் சிதறியிருப்பான். அச்சம்பவத்தில் ஐந்துசேர்கள் உடைந்து போயின.

“அது அம்ம பொறுப்பா ?” ஏதுமறியா பேதையைப் போல் கேட்டாள் கௌசி.

“கடையிலிருந்து வெளியேறிட்டாலே உங்கதுதானங்க” கடைப் பையன்.

“அதெப்பிடி, வீட்டுக்குள்ள வந்த பொருளுக்குத்தான், பொறுப்பு ஏத்துக்கலாம். பெஞ்சியக் கண்லகூடப் பாக்காம தெண்டம் கட்டணும்னா, கேணத்தனமாவுல்ல இருக்கு” உடைந்த சேர்களை வீட்டுக்குள் சேர்க்காமல் பக்கத்துவீட்டு மாட்டுத் தொழுவத்தின் நிழலில் தூக்கிப் போட்டிருந்தான் மனோகரன்.

“அதான ? எசகுபெசகா ஒக்காந்ததுல ஒடஞ்சுபோச்சு, இல்ல, சின்னப் பிள்ளைக ஏறி வெளாண்டு ஒடிச்சு விட்ருச்சுகன்னா சரித்தேன். இத எந்தக் கணக்குல சேக்க முடியும் ?” புருசனுக்கு இணக்கமாய்ப் பேசினாலும், இதுக்கும்கூட எதாச்சும் சுளீரென விழுந்து வைப்பான் என்பதால் மனோகரனை அண்டாமல் எட்டியே நின்று பேசினாள் கௌசி.

‘’நானும் அண்ணனும் போய்த்தே ஏத்திட்டுவந்தம். நீங்க முடியாதுன்னா கடக்காரருக்கு நாந்தே தெண்டம் கட்டணும்க்கா” ஏழெட்டுவயது சின்னவளாய் இருந்தாலும் தொழிலுக்காக மரியாதை குடுத்துப் பேசவேண்டியிருந்தது மாஸ்டருக்கு.

“அதுக்காக, வல்லடியா நீங்க ஆயிரம் ஐநூறு கேப்பீக ! குடுக்க முடியுமாண்ணே ?”

“ஆயிரம் ஐநூறா ? மூவாயிரம் கேக்கறார் டி”

கௌசிக்கு மயக்கம் வந்துவிட்டது. “முவ்வாயிரமா ?”

”புதுச்சேர் அறநூறு சில்லரக்கா. நாங்க மொத்தமா எடுத்ததால அறநூறுரூபா ; வெறும் அஞ்சுரூவா வாடகைக்கு வந்து, மூவாயிரத்த எழக்க முடியுமாக்கா” கடைக்கார பையன் பவ்யமாய் எடுத்துரைத்தான். கடைக்காரர் அப்படித்தான் பேசச் சொல்லியிருந்தார். கஸ்டமர்தான் நாம கும்பிடுற கடவுள்.

“ஒங்கவிட்டு விசேசத்துக்கு வந்துப்புட்டு ஊர்க்காரவக தெண்டம் குடுப்பாகளாக்கா” மாஸ்டரும் வழிமொழிய கூட்டுக்குள் சிக்கிய எலிபோல தவித்தான் மனோகரன்.

மொய்ப்பணம் எண்ணிமுடித்த குழு, அறையைத் திறந்து கொண்டு வெளியில் வந்தது. பணக்கட்டுகள் அடங்கிய பானையினை தோளில் ஏந்திவந்த செந்திவேல், பத்திரமாய் அக்காளிடம் தந்தான்.

வெளியிலிருந்த ஸ்பீக்கர்களை அவிழ்த்து முடித்தவர்கள். பந்தலுக்குள்ளிருந்த ட்யூப் லைட்கள் ஏனைய பொருட்களை சேகரிக்க ஆரம்பித்தனர்.

“இன்னிக்கி நைட் ஒருபொழுது பந்தல்ல ஒருலைட்டாச்சும் இருக்கட்டும்ப்பா. விசேச வீட்ட இருளடையப் போட்றாதீக” யாரோ ஒருநபர் குரல்விடுத்தபடி அவர்களோடு கலந்தார்.

அப்போது கலைந்த தலையும் கசங்கிய உடையுமாய் இரண்டு கிழவிகள் “சின்னப் பிள்ளைக்கி கொஞ்சம் சோறுகுடு தாயி” நெளிந்த பாத்திரங்களோடு வாசலில் வந்து நின்று கோரசாய் குரல் விடுத்தனர்.

வீட்டுக்குள் கசகசத்த கூட்டத்திலிருந்து யாரோ ஒருபெண், இத்தனை நேரம் ஏன் வரவில்லை என்றோ, எங்கே போனாய் எனவோ குறைபட்டுக் கொண்டே ’போட்டுவிடவா கௌசி’ என அனுமதியும் வாங்கி, நெளிந்த பாத்திரங்களை நிரப்பி அனுப்பினாள். ‘வேற யாராச்சும் இருந்தா, வெளக்குப் பொறுத்தங்குள்ள வரச் சொல்லு’ சாதமும் ரசமும் மீந்து கிடந்தன.

உடைந்த சேர்கள் சபைக்கு எடுத்து வரப்பட்டன.

“இப்பல்லா, கடக்காரவகளே வந்து எறக்கிப்போட்டு எண்ணி எடுத்துட்டுப் போயிர்றாக, உருப்படி தொலஞ்சு போனாத்தே வீட்டுக்காரவுக பொறுப்பு, ஒடஞ்சதுக்கெல்லா ஏத்துக்கணுங்கறது எனக்கு என்னமோ சரியாப்படல” பங்காளி ஒராள் நியாயம் பேசினான்.

“அது வேற கணக்குங்க. ஆன் காண்ட்ராக்ட்: சேருக்கு டபுள் வாடகை: நாங்களே ஆள்வச்சு ஏத்தி இறக்கிட்டுப் போயிருவம். அது ஐநூறுசேர் ஆயிரம் சேர்னு எடுத்தா அப்பிடி போடலாம் “ கடைப்பையன் அதற்கும் விளக்கம் தந்தான்.

“ண்ணே, விசேச வீட்ல இதெல்லா சகஜம். நெட்டையோ குட்டையோ பேசி முடிச்சு அடுத்த வேலையப்பாருங்க, லோடு ஏத்தின வண்டிய ரோட்ல நிறுத்திக்கிட்டு இப்பிடி வாதாடிக்கிருந்தா நாங்க வேற சவாரி போகவேணாமா” லாரி ஓட்டுநர் பீடிப்புகையோடு வந்தார்.

“காசு நான்ல குடுக்கணும்”

“ஆமாங்க, வாடகப் பொருள எடுத்து வந்தம்னா நாமதே பதனமா எடுத்து, பொறுப்பா கொண்டுக்குப் போய்ச் சேக்கணும்” லாரி ஓட்டுநர் மேலும் பேசினார்.

“எல்லாத்துக்கும் விசேச வீட்டுக்காரரே பூண் பிடிச்சு நிக்க முடியுமாய்யா, அவுக வீட்டுக்குவார ஜனங்களப் பாப்பாங்கள ? கொண்டுவந்த பொருளு எங்கன, ஒடையிது, ஓட்ட விழுகுதுன்னு உத்துப் பாத்துகிட்டு நிப்பாகளா ? அதுக்குத்தான வேலையாள்கள நியமிக்கிறது” செந்திவேல் மச்சானின் பக்கம் வந்து ஆவேசமாய்ப் பேசினான்.

“அப்பன்னா, ஒடஞ்ச பொருளுக்கு நாங்கதே சவாப்தாரியா ?” சமையல் மாஸ்டர் ஆற்றாமையுடன் கேட்டார். பொருள்களை கணக்குமுடித்து அனுப்பிவிட்டால் கூலியை வாங்கி ஆட்களுக்கு சம்பளத்தை தந்துவிட்டு வீட்டில்போய் குளியல்போட்டு உறக்கத்தில் விழலாம். வேலையின் அலுப்பில் புலன்கள் அனைத்தும் உள்ளுக்குள் அழுதுபுலம்பின.

“பின்னா ? வெறும் சோறாக்க, எட்டாயிரம், பத்தாயிரம் சம்பளமு வாங்கிப்புட்டு, போத மயிர்ல பொருள எறக்கத் தெரியாம ஒடச்சு வப்பீங்க, அதுக்கும் இளிச்சவாயெ வீட்டுக்காரெந்தே தெண்டம் குடுக்கணுமாக்கும் ?” சந்தடி சாக்கில் சமையல்காரரைச் சாடிய மச்சினனை பெருமிதத்தோடு பார்த்தான் மனோகரன்.

“நெனச்சேன், எளைச்சவெம் பொண்டாட்டி எல்லாருக்கும் வப்பாட்டி’ன்ன கணக்கா சத்திச்சுத்தி வந்து சமையல்க்காரெ கவடுதே நொழைவீங்கன்னு தெரியும். ஒங்கவீட்ல வந்து புழுக்க வேலை செஞ்சு, கஞ்சிகாச்சி ஊத்துனதும் மட்டுமில்லாம நீங்க பட்ட கடன் ஒடனெல்லா அடச்சிவிட்டும் போகணுமாக்கும். சொல்லுங்க வேற எந்த தெண்டத்த ஏத்துக்கணும்” மாஸ்டரும் நேரடியாய்க் களத்தில் இறங்கியது கண்டு அவரது உதவியாளர்களும் அருகில் வந்து நின்றனர்.

மாஸ்டரின் அந்தப்பேச்சு செந்திவேலுக்கு குவாட்டரை இழுத்ததுபோல சுர்ரென மண்டையில் ஏறியது. ஒருவார்த்தையில் குடும்பத்தைப் பூராவும் கேவலப்படுத்திட்டானே, “யே உங்காள் ஸ்டெடியா நிண்டு பொருள பிடிச்சி எறக்கியிருந்தா சேர் ஒடஞ்சிருக்காதில்லப்பா. . வேலைக்கி வரும்போதே ஊத்திக்கிட்டு வந்தா வேலையும் அப்பிடித்தான இருக்கும்.” நிஷ்டாந்தரமாய் பழியைப் போட்டான்.

“ஆரு ஊத்திக்கிட்டு வந்தாங்க. நீங்க பாத்தீகளா ?, இல்ல நீங்க எதும் ஊத்திக்குடுத்தீகளா !” அன்னைக்கி சுதாரிக்காம இருந்திருந்தா டேபிளும் சேரும் விழுந்து ஆளச்சாச்சிருக்கும். அப்பவும் இப்பிடித்தான பேசுவீக. ஒங்களுக்கென்னா ? நஷ்டம் எம்பொண்டாட்டி பிள்ளைகளுக்குத்தான.” என்ற ஒரு சமையல் ஆள், தொடர்ந்து மாஸ்டரிடம் போனான். “நமக்கு இது தேவையா ணே,? என்ன சொன்னாலும் கேக்க மாட்டேங்கிறீங்க. பொருளக்கொணாந்து போடு ! சமயலப் பாக்குறம்னு சொல்லீருக்க மாட்டாம, அம்புட்டு பொருளையும் ஏத்தி எறக்கி. லோடுமேன் வேலையும்பாத்து . !. செஞ்சும் பெலனில்லீல்ல”

சமையல் குரூப் ஒன்றுகூடுவதைக் கண்ட கௌசி, தம்பியை இழுத்துக்கொண்டு வீட்டுக்குள் போனாள்

கடைப்பையன் முதலாளிக்குப் போன் போட்டு வரச் சொன்னான். “ஒண்ணும் அடைய மாட்டேங்கிதுண்ணே”

இடையில் மொய்செய்வதற்கு நலைந்துபேர் வந்தனர். அவர்களை கௌசியும் செந்திவேலும் வளையமிட்டு வீட்டுக்குள் அழைத்துப் போய் உணவிட்டு மொய்ப்பணம் பெற்றனர். சமையலுக்கு வந்த பெண்கள் சலசலவென பேச ஆரம்பித்தனர். “நாங்க வீடு போயி எங்க பிள்ளகுட்டியளுக்கு கஞ்சிகாச்ச வேணாமாண்ணே !”

கௌசி மாஸ்டரைத் தனியே அழைத்து பேரம் பேசினாள். “சம்பளத்த வாங்கிட்டுப் ஆள்களக் கடத்தி விடுங்கண்ணே. காலைல வந்து சேர் பிரச்சனைய முடிச்சுக்கலாம். இன்னம் ஆள்க வந்துகிட்டிருக்காக.” தனது புருசனின் வெட்டிவீராப்பு குறித்தும் தணிந்த குரலில் சொன்னாள் .” . நானே பேசி முடிச்சு விடுறேன் ணே ! தங்கச்சிய நம்புங்க”

அந்த நேரம் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வண்ணம் ‘தடதட’ வென சப்தமெழுப்பியபடி பாத்திரக்கடைக்காரர் ’ராயல் என்ஃபீல்டில்’ வந்து இறங்கினார். வண்டிக்குப் பொருந்தினார் போல உடல்வாகு பெற்றிருந்தார். அவரைக்கண்டதும் சிதறிக்கிடந்த சமையல் ஆட்கள் மரியாதை செய்வது போல் எழுந்து நின்றனர்.

“என்னா வேலமுடிஞ்சு வீட்டுக்குப் போகணுங்கிற எண்ணமில்லியா? ஏங் கவுண்டரம்மா விசேச வீட்டுச்சாப்பாடு காலக்கட்டிப்போட்ருச்சோ !” என ஒவ்வொருவராய் விரட்டியவர் கடைப்பையனைக் கண்டு பேசிவிட்டு, மாஸ்டரைக் கூப்பிட்டார். “ ஒரு பங்சன் நடக்கிற எடத்தில எதுக்கு ஆளுகள நசநசன்னு நிறுத்தி வக்கிறீக, சட்டுபுட்டுன்னு அனுப்பிச்சு விடவேணாமா. அவகளுக்கும் நாளொருபேர் வந்துபோவாகள்ல.”

மனோகரனும், கௌசியும் வாசலுக்கு வந்து கும்பிட்டனர். “உள்ள வாங்கண்ணே” வீட்டுக்குள் அழைத்துச் சென்றனர். உள்ளே போய் சாமிகும்பிட்டு மொட்டை எடுத்த பையனுக்கு நூறுரூபாய் சட்டைப்பையில் வைத்துவிட்டு வெளியில் வந்தார்.

“சாப்பிடுங்கண்ணே” கௌசி கெஞ்சினாள்.

“நாங்க சாப்பிடுறது பூராம் ஒங்க சாப்பாடுதான்” என்றார்

லாரி டிரைவரை அழைத்து வண்டியைக் கிளப்பச் சொன்னார். ஆண்பெண் எல்லோரும் லாரியில் ஏறிக்கொள்ள மாஸ்டரை மட்டும் அருகில் வைத்துக்கொண்டார். “பில் வாங்கிட்டியா?” கடைப்பையனை கேட்ட தொனியில் செந்திவேல் பில்பணத்தைக் கொடுத்தான். “ நீ கெளம்பு, பொருள பாத்து பதனமா எறக்கச் சொல்லு” என்றவர், மனோகரனிடம் வந்தார்.

“எல்லா நல்லபடியா அமஞ்சதாண்ணே” கௌசியும் அருகில் வந்து நின்றாள். “என்னாங்மா, வாரவகெல்லா வந்து போய்ட்டாகளா ? வரவேண்டி இருக்கா”

“எங்கண்ணே ? புதுச் செய்மொறயாத்தே வந்துருக்கு. பழசத் தேடிப்பிடிக்கணும் போல”

“வரும் வரும்மா. வயித்துப் பிள்ளையும், வாங்கின கடனும் இல்லேன்னு போயிருமா” என்றவர், “சேர எறக்குறப்ப பாத்து பக்கத்தில நிண்டு எறக்க வேணாமா. அப்பளமா நொறுங்கிப் போயிருக்கு” என்றார்.

“எங்கண்ணே, கூடவேதே வாரே, கண்ணு முழிச்சு தெறக்கங்குள்ள மடமடன்னு சரிச்சு விட்டாங்களே”

“வேற யாருக்கும் எந்த சேதாரமும் இல்லீல்லம்மா. ஏன்னா வேலக்காரவக, அவகளுக்கு வேல சுளுவா முடியணும். அதனால நிட்டாந்தரமா செய்வாங்க. நட்டப்படுறது நாமதான.. சேருங்கப் போய்ச் சரியாப்போச்சு” சொல்லிவிட்டு உடைந்த சேர்களை எடுத்துப் பார்த்தார்.

“சரிண்ணே, காலம்பற இவர கடைக்கி அனுப்பிச்சு விடுறேன் இல்லன்னா மாஸ்டர்கூட வரட்டும். ஆள்க வந்து போய்க் கிட்டிருக்காங்க” கௌசி முந்திக்கொண்டு பேசினாள்.

“அப்பிடியாமா, சரிமா.” என்றவர், மாஸ்டரிடம், ”தொகையச் சொல்லிட்டியா ?” என்றார்.

“சேருக்கு ஐநூறு ரூவா சொல்லீருக்கேன்” என்றார்.

“ஓ ! பாக்கிய நீ குடுத்திரியா”

“பழய சேர்தான அண்ணாச்சி”

“கடைல போய் நா பழைய சேர் வாங்கமுடியாதில்ல தம்பி”

“நா எதாச்சும் எரநூறு எரநூத்தம்மப்து போடலாம்னு நெனச்சேன்.”

“புதுச் சேர்வெல அறநூத்தி அறுவத்தஞ்சு.”

அப்படியே மலைத்துப் போனவர்களை ஆசுவாசப்படுத்துவதுபோல, அடுத்த வார்த்தையினைப் பேசலானார்.

“நீங்க காசத்தேம் பாக்கறீங்க. பெரியவங்களக் கேளுங்க. ஒரு சுபகாரியம் நடக்கும்போது இந்தமாதிரி ஒரு சின்னச்சின்ன சம்பவம் நடக்குறது நல்லதும்பாக. இது ஒருதத்து. பெரிய அளவில நடக்கவேண்டியது. இப்பிடி சின்ன பொருள் நஷ்ட்டத்தோட நின்டுபோச்சேன்னு சந்தோசப்படணும். இதயெல்லா விரயமாப் பாக்கக்கூடாது. சுபவிரயம்னு சொல்வாங்க. மூவாயிரம் கைவிட்டுப் போகுதுன்னா, மூணுலட்சம், மூணுகோடி வந்தா எனக்கா தரப் போறீக ?”

பைக்கில் மாஸ்டரை ஏற்றிக்கொண்டு கடைக்கு வந்து சேர்ந்தார்.

“காத்தாடியப் போடுப்பா” என்ற கடைக்காரர், எதிரில் இருந்த மாஸ்டரைப் பார்த்து லேசாய்ச் சிரித்தார்.

“ஒரு காசப் பாக்க என்னவெல்லாம் பேசவேண்டியிருக்கு !”

காற்றின் சிலுசிலுப்பில் இமைகள் மூடிக்கொண்டன.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *