சுத்தமான மனசு !

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 4, 2016
பார்வையிட்டோர்: 6,136 
 
 

ராஜேந்திரனுக்குப் பதட்டமாக இருந்தது. முதல் இன்டர்வியூ என்றால் யாருக்குத்தான் பதட்டம் இருக்காது. காலையில் வழமையை விட நேரத்துக்கே எழும்பி ட்ரெட் மில்லை ஓடவிட்டு அதில் எறி நின்றுகொண்டு ஓடத்தொடங்கினான்.

ட்ரெட் மில்லில் ஓடிக்கொன்டிருந்தாலும் அவன் மனது எங்கேயோ ஓடிக்கொண்டிருந்தது.

கையில் தேநீர்க்கோப்பையுடன் வந்தாள் மனைவி பிரியதர்சனி .

“என்னங்க இதுக்குப்போய் எவ்வளவு டென்சனா இருக்கீங்க,இரவு பூரா தூங்கவும் இல்ல ,இப்போ என்னாவென்றா நாலுமணிக்கே வந்து ட்ரெட் மில்லில ஓடிக்கொண்டு இருக்கீங்க?”

“என்ன பிரியா இப்படிக்கேட்கிறாய்? முதல் இன்டர்வியூ அதுதான் எந்தத் தப்பும் நடந்துவிடக்கூடாது சரியாச் செய்து முடித்துவிடவேண்டுமென்று ஒரே டென்சனா இருக்கு.”

” உங்களுக்கு இன்டர்வியூ மாதிரி டென்சனா இருக்கீங்க, முதல் இன்டர்வியூதான் ஆனா இந்த இன்டர்வியூ உங்களுக்கில்ல, நீங்க வைக்கப்போகின்ற முதல் இன்டர்வியூ இதுக்கேன் இவ்வளவு டென்சன்…”

பிரியாவின் பேச்சில் ஆச்சரியம் இருந்தது, சரியாக‌ப் பத்து வருசத்துக்கு முன்பு வேலை தேடிக்கொண்டிருந்த காலத்தில் அவனுடைய இன்டர்வியூவுக்கே தில்லாக போய்வந்த ராஜேந்திரன் ,இன்று அலுவலகத்தில் உயர்ந்து சீனியர் மனேஜராகி இன்டர்வியூவில் ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் நிலைக்கு வந்தபிறகு இப்படி டென்சனாக இருப்பதைப் பார்த்தால் யாருக்குத்தான் ஆச்சரியமாக இருக்காது?

“பிரியா, மொத்தமா பதினைந்துபேர் இன்டர்வியூக்கு வரப்போறாங்க அதில ஒருவரைத்தான் செலக்ட் பண்ணவேண்டும் , பதினைந்து பேருக்கும் எடியுகேஷனல் குயாலிபிகேஷன், எக்ஸ்ரா கரிகுயுலர் அக்டிவிட்டியில பெரிய வித்யாசம் இல்ல ,இன்டர்வியூயிலதான் திறமையான அந்த ஒருவரை தேர்ந்தெடுக்கவேண்டும். இதில் எந்தத்தவறும் வந்து இந்த வேலைக்கு தகுதியான ஒருவரை விட்டுவிட்டு திறமை குறைந்த ஒருவரைத் தேர்வு செய்துவிடக்கூடாதல்லவா அதுதான் ஒரே டென்சன்.”

திறமையான ஒருவர் நிராகரிக்கப்பட்டு அந்த வேலை திறமை இல்லாத ஒருவருக்குக் கொடுக்கப்படும்போது அந்தத் திற‌மையானவருக்கு ஏற்படும் வலி மரணவலியைவிடக்கொடுமையானது. அந்த வலியை பலமுறை அனுபவித்து இருக்கிறான் ராஜேந்திரன். அதுதான் அந்த வலியினை இன்னொருவருக்குக் கொடுத்துவிடக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக‌ இருக்கான். அவனையும் தாண்டி தவறு நேர்ந்துவிடக்கூடாது என்பதால்தான் இவ்வளவு டென்சன்.

பத்து வருஷத்துக்கு முன் அவன் நிறைய இன்டர்வியூக்களுக்குப்போயிருக்கான். எல்லா இன்டர்வியூவையும் நேர்த்தியாக எதிர்கொள்ளுவான், எப்படியும் வேலை கிடைத்துவிடும் என்று நம்பிக்கொண்டிருக்கும்போது “மன்னிக்கவும் ,அடுத்தமுறை முயற்சி செய்யுங்கள்” என்றுமட்டுமே பதில் வரும். கடைசியில் அவனைவிட திறமை / தகுதி குறைந்த ஒருவருக்கே அந்த வேலை போய்ச்சேரும். சிலர் அவனுக்கு போதிய அனுபவம் இல்லை என்று காரணம் சொன்னாலும் ,உண்மையான காரணம் தெரிவு செய்யப்பட்டவருக்கு இருக்கும் யாரோ ஒரு பெரிய மனிசனின் செல்வாக்கோ,பண பலமோதான் காரணம் என்று ராஜேந்திரனுக்குத் தெரியும்.

இறுதியில் வேறு வழியில்லாம பட்டதாரியான ராஜேந்திரன் ஒரு பியூனாகத்தான் இப்போது வேலை செய்யும் இந்த அலுவலகத்தில் சேர்ந்துகொண்டான்.

இது ஒரு எலக்ட்ரோனிக் பொருட்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் நிறுவனம். இதில் அவன் பியூனாக சேர்ந்து ரெண்டு மாசத்திலேயே அந்த நிறுவனம் பெரிய சிக்கலை எதிர்கொண்டது.சீனாவுடன் அரசு ஒரு வியாபார ஒப்பந்தத்தைச் செய்து இறக்குமதி வரியைக்குறைத்துவிட அவன் வேலை செய்த நிறுவனம் ஏற்கனவே இறக்குமதிசெய்த பொருட்களை நட்டத்தில் விற்கவேண்டிவந்தது. அப்படி விற்றால் பல கோடிகள் நட்டமாகி அந்த நிறுவனத்தையே மூடிவிடவேண்டிய நிலை ஏற்படலாம். அந்த நேரத்தில்தான் பியூனாக இருந்த ராஜேந்திரன் அந்த நிறுவனத்தின் எம்.டிக்கு அந்த ஐடியாவைச் சொன்னான்.

“நம்மட நாடுதான் வரியைக்குறைத்து இருக்கு சேர் ஆனா பக்கத்து நாடு சீனாவுடன் ஏற்பட்ட முறுகளினால் சீனப்பொருடக்ளுக்கு வரியை ரெண்டு மடங்காக்கி இருக்கு. இந்த நேரத்தில் நாம் இறக்குமதி செய்து வைத்திருக்கிற பொருட்களில் இருக்கும் மேட் இன் சீனா என்ற லேபிலை எடுத்துவிட்டு நம்ம நாட்டு உற்பத்திபோல பக்கத்துநாட்டுக் கொம்பனி ஒன்றுக்கு ஏற்றுமதி செய்துவிட்டால் நமக்கு ஒருசதம்கூட நட்டம் வராது.”

அந்த அபாரமான ஐடியாதான் அந்தக்கொம்பனியை காப்பாற்றியது.அதிலிருந்து பியூனாக இருந்த ராஜேந்திரன் மனேஜராகி இன்று சீனியர் மனேஜர் ஆகிவிட்டான்.

இந்த இன்டர்வியூவில் வேலைக்கான ஆளைத் தெரிந்தெடுக்கும் பொறுப்பை முழுவதுமாக ராஜேந்திரனிடம் கொடுத்திருந்தார் கம்பனி எம்.டி. முதன் முதலாக தனித்து ஒருவரை வேலைக்குத் தெரிவு செய்யப்போகின்றான். விளம்பரம் கொடுக்கும்போதே முன் அனுபவத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாது என்று குறிப்பிட்டிருந்தான்.

அனுபவ சாலியைவிட திறமைசாலிதான் இந்த வேலைக்குப் பொறுத்தமாக இருக்கும் என்பதில் உறுதியாக இருந்தான் திறமைசாலிக்கு கொஞ்சநாளில் அனுபவம் வந்துவிடும் ஆனால் அனுபவம் மட்டும் இருப்பவருக்கு திறமையை வர வைப்பது சாத்தியமில்லை என்று நம்பினான் ராஜேந்திரன்.

வந்த நூற்றுக்கணக்கான விண்ணப்பங்களில் திறமை அடிப்படையில் பதினைந்து பேர்களை இன்டர்வியூக்கு அழைத்திருந்தான் .

கடந்த ஒரு வாரமா நிறைய வாசித்து என்னென்ன கேள்விகள்கேட்கவேண்டுமென்று தயார் செய்திருந்தான்.

மும்தாஜ் சாஜகானின் எத்தனையாவது மனைவி என்பதுபோன்ற அபத்தமான கேள்விகளையெல்லாம் விட்டுவிட்டு நுண்ணறிவுடன் சிந்தித்துப் பதில் அளிக்கக்கூடியவிதமான கேள்விகளையும்,வேலைக்குச் சம்பந்தமான சில கேள்விகளை மட்டுமே தயார் செய்திருந்தான்.

அலுவலகம் போகும்போது அவனின் ஒரு கைத்தொலைபேசிக்கு ஒரு அமைச்சர் அழைத்திருந்தார். “உறவுக்கார பெண் ஒருத்தி இன்டர்வியூக்கு வருகின்றாள் பார்த்துச் செய்துவிடுங்க” என்று பவ்யமாக கேட்டுவிட்டு வைத்தார்.

இன்டர்வியூ சரியாக ஒன்பதுமணிக்குத் தொடங்கியது.

முதலாவதாக வந்தாள் ஸ்ருதி. பார்க்க நல்ல மொடர்னாக இருந்தாள். விலையுயர்ந்த சட்டை போட்டிருந்தாள்.கொஞ்சம் தூக்கலாக மேக்கப் போட்டிருந்தாள்.அவளோடு அதிக நேரம் வீணாக்கவில்லை ராஜேந்திரன். அவள் பைலை வாங்கிவைத்துக்கொண்டு போங்க போன் பண்ணி இன்டர்வியூ முடிவைச் சொல்லுறம் என்று அனுப்பி வைத்தான்.அவள் சென்றபின்னும் அவள் போட்டிருந்த விலையுயர்ந்த வாசனை அறையில் வியாபித்திருந்தது.

ஸ்ருதியும் அமைச்சர் சொன்னதாலதான் தன்னை பெரிதாக கேள்விகூட கேட்கவில்லை, வேலை நிச்சயம் என்ற சந்தோஷத்துடன் அலுவலகத்தைவிட்டு வெளியேறினாள். அவள் வெளியேறிய அடுத்த நிமிஷமே அவள் பைல் குப்பைத் தொட்டிக்குப்போனது.

ஸ்ருதிக்காக மட்டும்தான் ஒருவர் அழைப்பெடுத்திருந்தார். அடுத்துவந்தவர்களுக்காக
யாரும் தொலைபேசிதான் எடுக்கவில்லை, ஆனாலும் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு ரெக்கமென்டேஷனுடன்தான் வந்திருந்தார்கள். சிலர் எம்பியின் கடிதம், சிலர் அமைச்சரின் கடிதம், சிலர் அமைச்சரின் பீ ஏ வின் கடிதம், ஒருவன் அமைச்சர் ஒருவரின் மனைவியின் கடிதத்தைக்கூட கொண்டுவந்திருந்தான்.

உண்மையில் இப்படிக்கடிதத்தோடு வந்திருந்தவர்களில் நிறையப்பேர் நல்ல திறமையானவர்களாக இருந்தார்கள். ஆனாலும் ரெக்கமென்டேசன் லெட்டரைப்பார்த்த அடுத்தகணமே ராஜேந்திரனின் மனதில் அவர் நிராகரிக்கப்பட்டார்

கடசியாக வந்திருந்த பையன் எந்த லெட்டரும் கொண்டுவரவில்லை,யாரும் அழைத்தும் சொல்லவில்லை. ஓரளவுக்கு திறமையானவராகவும் இருக்கிறானென்று நினைத்துக்கொன்டிருக்கும்போதுதான் உள்ளே வந்தார் அந்தக் கம்பனியில் வேலைசெய்யும் ஒரு மேனேஜர்.

“சேர் என் சொந்தக்காரப் பையன் தான் நல்ல கெட்டிக்காரன். நீங்கதான் மனசு வைத்து உதவி பண்ண வேண்டும்” என்றுவிட்டுப்போனார். எதிரே அந்தப்பையன் சிரித்துக்கொன்டிருந்தான்.இவை எல்லாவற்றாலும் வெறுத்துப்போய் இருந்தான் ராஜேந்திரன்.

இன்டர்வியூக்கு வந்ததில் கடைசியாக ஒரே ஒரு பெண்தன் மிஞ்சியிருந்தாள். எப்படியும் இவளும் ஒரு ரெக்கமென்டேஷன் லெட்டரோடுதான் வருவாள் . இந்த இன்டர்வியூ வைக்கின்ற வேலையே நமக்குச் சரிவராது ,பேசாம எம்.டியையே இன்டர்வியூ வைக்கச்சொல்லுவோம் என நினைத்துக்கொன்டிருக்கும்போதுதான் “எக்ஸ்கியூஸ் மீ சேர்” என வந்து நின்றாள் அந்தப்பெண்.

இருங்க என சைகையாள் காட்டினான்.

பார்ப்பதற்கு வசதியான பெண் போலத் தெரியவில்லை. அழகாக லட்சனமாக இருந்தாலும் சாதாரண ஒரு சட்டையே போட்டிருந்தாள். பேச்சு நேர்த்தியாக இருந்தது. ஆங்கிலத்தில் தெளிவாக சரளமாகப்பேசினாள்.அந்த வேலைக்கு வெளிநாட்டுக்காரரோடெல்லாம் பேசவேண்டியிருக்கும் என்பதால் ஆங்கிலம் கட்டாயமாக தேவைப்பட்டது.
பைலை வாங்கிப்பார்த்தான். வேலைக்குத் தேவையான தகுதிகள் அத்தனையும் இருந்தன.முக்கியமா ரெக்கமென்டேஷன் லெட்டர் இருக்கவில்லை.

ஆச்சரியமாக இருந்தது.

“சொல்லுங்க உங்களுக்கு இங்கே வேலை செய்யும் யாரையும் தெரியாதா?”

“தெரியும் சேர்…”

அதானே பார்த்தன் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டான். யாரோ ஒருவர் உள்ளே வந்து சேர்த்துக்கொள்ளச் சொல்லிக் கேட்கப்போறார் என நினைத்துக்கொண்டே,

“யார் ?”

“என் அம்மா சாந்தி ,இங்கேதான் வேலை செய்கிறா”

சாந்தி இந்தக்கம்பெனி தொடங்கிய நாளில் இருந்து துப்பரவுத்தொழிலாளியாக வேலை செய்பவள். தன் மகளுக்கு இன்று இன்டர்வியூ இருப்பதால் கோயிலுக்கு நேர்த்தி வைத்து பூஜை செய்வதற்கு லீவு வேண்டும் என்று நேற்றே லீவு போட்டிருந்தாள். ஆனா தன் மகள் இங்கேதன் இன்டர்வியூக்காக வருகிறாள் உதவி செய்யுங்க என்று ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை!

இன்டர்வியூ முடிந்து வெளியே வந்து பார்த்தான் ராஜேந்திரன்,சாந்தி நேற்று சுத்தப்படுத்தியிருந்தது இன்றும் சுத்தமாக இருந்தது.

அவன் மனசும் சுத்தமாக இருந்தது!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *