சிவனணைந்த பெருமாளின் சிக்கல்கள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 7, 2022
பார்வையிட்டோர்: 9,943 
 
 

நகருக்குப் பன்னிரண்டு கல் வெளியே இருந்தது அந்த வீடு. கிழமைக்கு இரண்டு மூன்று நாட்கள் சின்னஞ்சிறு வேலைகள் ஏற்படுத்திக்கொண்டு நகருக்குப் போவார். அந்த வேலைகளை அவர் குடியிருக்கும் புறநகர்ப் பகுதியிலேயே செய்யலாம். கொஞ்சம் புதிய காற்று, புதிய முகங்கள், புதுப்புது அனுபவங்கள். பணி ஓய்வு பெற்றுவிட்டார். பணி என்ன பெரிய பணி, லஞ்சம் வாங்க வாய்ப்பே இல்லாத தபால் நிலைய எழுத்தர் பணி. சக ஊழியர் பலரின் மனக்குறை அவர் அறிவார். ஆங்கு ஒரு கல்லை அம்மன் சிலையாக வடிக்கிறான் சிற்பி. இன்னொரு கல் கோயில் வாசற்படியாகக் கிடக்கிறது. பஞ்சப்படி, பயணப்படி போல இலஞ்சம் வாங்க இயலாத் துறை உழியருக்கு லஞ்சப்படி வழங்கலாம் அரசாங்கம்.

வீட்டுக்குள் அடைந்து கிடப்பதன் மூச்சு முட்டலில் இருந்து தப்பித்தலே இந்த நகர்வலம். அவருக்கு பெரிய வாசிப்புப் பழக்கம் இல்லை. தினசரிகள், வாராந்தரிகள் வாங்குவதில்லை. பாட்டுக் கேட்பது என்பது பேருந்துப் பயணத்தின் போது கேட்கும் திரை இசைப் புண்மொழிப் பாடல்களே. எந்த மெகா தொடரிலும் அவருக்கு ஈடுபாடு இல்லை. சொல்லப்போனால் ஒருவகை கேஸ் சிலிண்டர் வாழ்க்கை.
நகருக்குப் போக வர அதிக பட்சம் பயணக்கட்டணம் முப்பத்தி நான்கு பணம். குறைந்தபட்சம் பதினாறு பணம். அஃதெப்படி என்று அரசாங்கத்தையே கேட்க வேண்டும். அதிகக் கட்டணப் பேருந்துகள், எல்லா நிறுத்தங்களிலும் நிற்கும், நிற்கத் தேவையில்லாத இடங்களிலும் நிற்கும், லொடக்கு தாள் தள சொகுசுப் பேருந்து. குறைந்த கட்டணப் பேருந்துகள் வெறும் லொடக்குப் பேருந்து. பேருந்தின் முன் கண்ணாடியில் சாதாரணக் கட்டணம், விரைவுப் பேருந்து, சொகுசுப் பேருந்து என்று வெள்ளைத் தாளில் அச்சிட்டு ஒட்டி இருப்பார்கள். அரசாங்கங்கள் தமது சொந்தக் குடிமக்களையே வஞ்சிப்பது என்றும். வஞ்சிக்க காசை அதிகாார இனம் தத்தம் வீடுகளுக்கு வாரிக்கொண்டு போவது என்றும் தீர்மானித்து எழுபது ஆண்டுகள் ஆகிவிட்டன. நீதிச்சாலைகள் இல்லையா தட்டிக் கேட்க என்றால் தேசப் பிதாக்கள் தத்தம் குஞ்சாமணிகளை ஆட்டிக்கொண்டு நடந்த பிள்ளைப் பிராயத்து வழக்குகளே இலட்சக்கணக்கில் இன்னும் நிலுவையில் உண்டு. பிறகு என்னதான் வழி? சும்மா இருப்பதே ஆரோக்கியத்துக்கு நல்லது என்பதைப் பழம்பெரும் பாரத நாட்டுக் குடிமக்கள் அறிவார்கள்.

பயணக் கட்டணம் மட்டும்தான் செலவா? சிவனணைந்த பெருமாள் தனது சிந்தனை ஓட்டத்தைக் குறுக்கு வெட்டினார். நகரின் ஓட்டல் கண்ணி ஒன்றில் அரைச்சீனி போட்டு ஸ்ட்ராங் காப்பியொன்று பருக வேண்டும். ஏன் பாதிச் சர்க்கரை என்பீர்கள்! நியாயமாக இனிப்பே விலக்கப்படவேண்டும், மருத்துவ ஆலோசனைப்படி புகைக்காதே என்றால் கேட்கிறார்களா, குடிக்காதே என்றால் கேட்கிறார்களா, லஞ்சம் கொடுக்காதே வாங்காதே என்றால் கேட்கிறார்களா? அரைச்சீனி என்பது அவர் தமக்குத் தாமே வழங்கிக்கொள்ளும் சலுகை. பேலியோ டயட்காரர்கள் மொழியில் சொன்னால் சீட்டிங்.
ஜிஎஸ்டி வந்து இந்தியர்களைக் கடைத்தேற்ற முயன்ற முதல் நாள். ஜிஎஸ்டி வந்தவுடன் தானே விலைகள் சரிந்து போகும் என்றார்கள். முந்திய தினம் இருப்பத்தேழு ரூபாயாக இருந்த காப்பி, முதல் தினமே முப்பது ரூபாயாகிவிட்டது. சிவனணைந்த பெருமானுக்கு சலிப்பாகிவிட்டது. அவரது ஒரு நகர்வலச் செலவு 64 என்பது 67 ஆகிப்போயிற்று. என்ன செய்ய? ஆனால் நல்ல காப்பியும் குடிக்கவேண்டியது உள்ளதே! வாரம் மூன்று நகர்வலம் கணக்கு அவருக்கு. வேறு எந்தக் கேணையனும் ஒரு காப்பி குடிக்க அறுபத்தேழு ரூபாயும் இரண்டு மூன்று மணி நேரமும் தொலைப்பானா?

பெரும்பாலும் அவர் நகர்வலம் காலை பதினொன்றுக்குத் துவங்கி, மதியம் இரண்டுக்குள் முடிவுபெறும். அஃதென்ன கணக்கு, இராகு காலம், எமகண்டம், குளிகை சமாச்சாரமா? இல்லை. அந்த நேரங்களில்தான் கூட்டம் இல்லாத பேருந்தில், இருவர் அமரும் இருக்கையில் ஒருவராக அமர்ந்து செல்ல இயலும். மற்ற நேரங்களில் மாணவர் கூட்டம், அலுவலகம் செல்வோர், கடைச் சிப்பந்திகள் கூட்டம் இருக்கும். அவர் பயணம் செய்யும் பாதையில், ஓடைப்பாலம் அருகில் மதுச்சாலை ஒன்றுண்டு. அவர்கள் கடை திறப்பு நடுப்பகல் என்பதால், பதினொன்றரை தாண்டிவிட்டால் அந்த மார்க்கத்தில் வரும் அனைத்துப் பேருந்துகளிலும் பத்துப் பன்னிரண்டு பேர், மூத்த குடிமகன்கள் இருப்பார்கள். எவர் ஆண்டாலும் மதுபானம் வருவது ஆளுங்கட்சி – எதிர்க்கட்சி – உதிரிக்கட்சி முதலாளிகளின் கூட்டுத் தாபனங்களில் இருந்துதான். மூத்த குடிமகன்களில் உடல்மொழி, உடல் மணம் தவிர்க்க, நமது கதாநாயகர் ‘சற்று முன்பாகவே பேருந்து பிடித்துவிடுவார்.

சில தவிர்க்க முடியாத நாட்களில் கொஞ்சம் இளம்பசி எடுத்தாலோ, இரத்தத்தில் சர்க்கரை பாதாளத்துக்குப் பாய்ந்து விடும் எனும் தன்னப்பயம் காரணமாகவோ அல்லது போன வேலை முடிய நேரமாகும் என்பதாலோ, அவர் வழக்கமாகக் காப்பி குடிக்கும் அதே ஓட்டலில் ஒரு சாம்பார் சாதம், ஒரு அரைச்சீனி ஸ்ட்ராங் காப்பி. என்ன வேலை இருந்தாலும், மதிய உணவுக்கு வீடு சேர வாய்க்காது என்றாலும் மீல்ஸ் டிக்கெட் வாங்கி, கூட்டு, பொரியல், ஊறுகாய், அப்பளம், பருப்பு, சாம்பார், மோர்க்குழம்பு அல்லது புளிக்குழம்பு, ரசம், மோர், இனிப்புக் கஞ்சி போல் ஒரு கிண்ணம் பாயாசம் என ஒப்புக்கொடுப்பது அவர்க்கு வழக்கம் இல்லை .

அவரது தேர்வு, என்றுமே, ஒரு சாம்பார் சாதம், ஒரு காப்பி. ஜி.எஸ்.டிக்குப் பிறகு இரண்டின் விலை எண்பத்து மூன்று ரூபாய். காசைப் பார்த்தால் முடியுமா? சம்பவ தினத்தன்று, நகர்மன்ற மூத்திரப்புரையில் ஒன்றுக்குப் போக அவர் சீசன் டிக்கட் வைத்திருந்த படியால், சீசன் டிக்கெட்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியதிருந்தது. நல்ல நோக்கம்தான். தீவிரவாதிகள், குண்டு வெடிப்புக்கு முன்பு, மூத்திரம் பெய்ய வந்தால் பிடித்து விடலாம். வரிசையில் காத்து நின்றதில் நேரம் நீண்டு விட்டது. மேலும் அன்று அவருக்கு நூறடிச் சாலையில் கல்யாண் சில்க்ஸ் பக்கம் ஒரு வேலையும் இருந்தது.

வழக்கமான உணவு விடுதி. வழக்கமான இருக்கை. வழக்கமான தனது ஆர்டரை அறிவித்தார். ஏன் சாம்பார் சாதம், சாம்பார் சோறு என்று சொல்லக்கூடாது என்று தோன்றியது சிவனணைந்த பெருமாளுக்கு. சாம்பார் சாதம் என்று சொன்னால் நமக்கு வடமொழி வெறுப்பு இல்லை என்று தெரிந்து கொள்வார்கள். சாம்பார் சோறு என்றால், ஏதோ மொழித் தீவிரவாதி என்று சுட்டுக்கொன்றுவிடவும் வாய்ப்பு உண்டு. நமது நாயகருக்கு அவ்விதம் சாகப் பிரியம் இல்லை .

சாப்பிட்ட பின்பு, பில் கொண்டு வந்த ஊழியர், “சார்! எய்ட்டி ஃபோர் ருப்பீஸ்” என்றார் தூய தமிழில். எப்படியும் உயிர் தமிழுக்கும் உடல் மண்ணுக்கும் தானே!

சிவனணைந்த பெருமாள் கேட்டார், “ஏந் தம்பி! முந்தா நாள் இதே ஓட்டல்லே, இதே ஐட்டம் சாப்பிட்டேன். 83 தானே பில் வந்தது?” என்றார்.

“இல்ல சார்! சாம்பார் சாதத்துக்கும் காப்பிக்கும் தணித்தனியா பில் போட்டுட்டாங்க சார்! அதான்!”

“எதுக்குத் தம்பி தனித்தனியா பில் போடணும்? ஆதார் எண்ணோட இணைக்கவா?”

“இல்ல சார்! தப்பா போட்டுட்டான்!”

“அவுரு தப்பாப் போட்டா, நான் எதுக்குத் தம்பி ஒரு ரூவா தண்டம் கட்டணும்?”

“அதுல்ல சார்…”

“தற்செயலா தப்பாப் போட்டாரா? இல்ல தப்பாவே போடச்சொல்லி உத்தரவா?”

வழக்கமாகவே, மேல் வலிக்காமல் வேடிக்கை பார்ப்பது தமிழனின் பொதுப் புத்தி. சாலைவிபத்தில் எவரும் அடிபட்டுக் கிடந்தால் வேடிக்கை மட்டும் பார்ப்போமே அல்லால் சிறு துரும்பும் எடுத்துப்போட மாட்டோம். சிவனணைந்த பெருமாளின் வாக்குத் தர்க்கத்தை பக்கத்து டேபிள்காரர்கள் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர். சூபர்வைசர் விரைந்து வந்தார். “சார் நீங்க 83 ரூபாய் கொடுங்க போதும். ஒரு ரூபாய் என் கையிலேருந்து கொடுத்திர்றேன்” என்றார்.

“நீங்க எதுக்கு சார் கொடுக்கணும் கைக்காசு? நீங்க என்ன பல்கலைக்கழகப் பேராசிரியரா?” என்றார் சிவனணைந்த பெருமாள். அவர் நீட்டிய நூறு ரூபாய் நோட்டும் மூன்று ரூபாய் சில்லறையும் பெற்றுக்கொண்டு, காசாளர் இருபது ரூபாய் நோட்டு ஒன்றைத் தந்தார்.

வேலையை முடித்துக்கொண்டு, நடிகர் பிரபு விளம்பரத்தில் வரும் கடை வாசலில் இருந்த பேருந்துத் தரிப்பில் நின்றார். அங்கிருந்து, அவருக்கு காந்திபுரம் வந்து, கோவைப்புதூர் செல்லும் பேருந்து ஏறவேண்டும். நாளும் கோளும் நன்றாக இருந்தால், காந்திபுரம் போக, மூன்று ரூபாய் பயணக்கட்ணம் வாங்கும் லொடக்குப் பேருந்து வரும். இல்லாவிட்டல் ஏழு ரூபாய் பயணக்கட்டணம் வசூலிக்கும் தாழ்தள சொகுசு லொடக்குப் பேருந்து வரும். அது போலவே காந்திபுரத்தில் இருந்தும் எட்டு ரூபாய் பேருந்தோ பதினேழு ரூபாய் பேருந்தோ கிடைக்கும் கோவைப் புதூருக்கு. தமிழ்க்குலம் காக்க வந்த அம்மாக்கள், தமிழனின் இனமானத் தனிப்பெரும் ஐயாக்கள் எவருக்கும் பேருந்தில் ஒரு பயணம் எக்காலத்துக்கும் வாய்த்திருக்காது.

சிவனணைந்த பெருமாள் எப்போதும் பேருந்துகளில் சரியான சில்லறை கொடுப்பது வழக்கம். பாக்கி வாங்க மறந்துபோதல், நடத்துநர் திட்டமிட்டே பாக்கி கொடுக்க மறந்து போதல், நாலணா இல்லை என்பதால் நாயே பேயே என்று வசவு வாங்குதல், அடுத்த நிறுத்தத்தில் இறக்கிவிடப்படுதல், மீறிச் சில்லறை வரவேண்டுமே என்று இறங்கும் வரை பதற்றத்தில் இருந்து மூலக்கடுப்புக்கு ஏதுவாதல் எனும் சிக்கல்களுக்கு ஆட்பட விரும்பமாட்டார். தினமும் சில்லறைத் தேவைக்கு என வீட்டில் Print on Demand Mint ஏதும் வைத்திருப்பாரோ என்று தோன்றும். வங்கிகளில் நாலு தரம் கேட்டால் ஒரு தரமாவது தந்து விடுவார்கள். மேலும் நாணயம் அடிக்கும் இயந்திரம் வைத்துக்கொள்ள அவர் மாநில அமைச்சரா, மத்திய அமைச்சரா?

அரசாங்கத்தின் தந்திரம், ஏழு ரூபாய் பேருந்து அடிக்கடியும் மூன்று ரூபாய் பேருந்து எப்போதாவதும் அனுப்புவார்கள். எப்படியும் ஏழு ரூபாய்தான் என்று, பின்புற பாக்கெட்டில் கைவிட்டு ஏழு ரூபாய்க்கான நாணயங்கள் எடுத்து வைத்துக் கொண்டார். நிழற்குடையில் அமர்ந்திருந்த பயணி ஒருவர், நிதானமாக எழுந்து பக்கலில் வந்தார்.

“சார்! அஞ்சு ரூவாச் சில்லறை தருவீங்களா? உக்கடம் போகணும். காசைத் தொலச்சிட்டேன். உக்கடத்துக்கு உறவுக்காரரு வருவாரு… அவருட்டே காசு வாங்கி மடத்துக்குளம் போகணும்” என்றார்.
சிவனணைந்த பெருமாள் வைத்திருப்பதைப்போன்று சேரமான் பெருமாள் நாயனார் காலத்து செல்போன் வைத்திருந்தார். எளிய ஆடை எனினும் அழுக்கடைந்து இல்லை. யாசகம் பெறுவோரின் மிகை மெய்ப்பாடுகள் இல்லை. யதார்த்தமான மொழி. ‘முப்பது ரூபாய் கொடுத்து காப்பி குடிக்கத்தானே செய்கிறோம். அஞ்சு ரூவாயிலே என்ன ஆச்சு’ என்று உள்மனது உத்தரவிட… பின் பாக்கெட்டில் கைவிட்டு, ஐந்து ரூபாய் பித்தளைத் துட்டு ஒன்று எடுத்துக்கொடுத்தார்.

“உக்கடத்துக்கு நேரா இங்கேருந்து பஸ் வருமா சார்?” என்றார் காசு வாங்கிக்கொண்டு.

“அடிக்கடி இல்லீங்க… காந்திபுரம் போயிடுங்க… அங்கேருந்து நிறைய இருக்கு….”

“ஒரே பஸ்சுண்ணா டிக்கட் குறையுமேண்ணு பார்த்தேன்” “சொல்ல முடியாது. காத்துக் கெடக்கணும்… சரி! எதுக்கும் இன்னொரு பத்து ரூவா வச்சுக்குங்க…. காந்திபுரத்திலே மாறிப் போயிருங்க..” என்றார் சிவனணந்த பெருமாள்.

சொந்தக் காசை, எங்கே, எப்படி, எவ்வளவு இழந்தார் என்று கேட்கத் தோன்றவில்லை. அவரவர் பாடு அவரவர்க்கு, அனுதினமும்.

காந்திபுரத்துக்கு ஒரு லொடக்கு 5-ம் நம்பர் பேருந்து வந்தது. அதில் பயணச்சீட்டு மூன்று ரூபாய்தான்.

“ஏறுங்க தம்பி! டிக்கட் நானே வாங்கீருதேன்” என்றார் சிவனணைந்தார்.

பேருந்து காலியாகவே இருந்தது. முன்பக்க வாசல் வழியாக ஏறி, சன்னலோர இருக்கை பிடித்துக்கொண்டார். அமர்ந்தபின், “ரெண்டு காந்திபுரம்” என்றார் நடத்துநரிடம், மூன்று இரண்டு ரூபாய் நாணயங்கள் கொடுத்து.

பயணச்சீட்டும் வாங்கியபின் திரும்பித் திரும்பிப் பார்த்தார் அந்த நபர் பேருந்து உள்ளே இல்லை.

– தினமணி தீபாவளிமலர், 2017

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *