கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 28, 2022
பார்வையிட்டோர்: 3,110 
 

(1976ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘அவரை இன்று காணவில்லை. அவர்’ என்றுதான் சொல்ல வேண்டும் போலிருக்கிறது. வேறுவிதமாகச் சொல்ல என்னால் முடியவில்லை. வேறு எப்படிச் சொல்வதாம்? அவன்’ இல்லாவிட்டால் அவர்தானே! ஒரு சாதாரண இளம் வாலிபன். அந்த எளிமையையும் குறுகுறுக்கும் கண்களையும் தவிர குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எதுவுமில்லை. கொஞ்ச கூச்ச ஸ்பாவமும் கூட.

அவர் வருகின்ற நேரம் கடந்துவிட்டது. இனி அவரை எதிர்பார்க்க முடியாது தான் என்றாலும் மனதில் ஒரு அங் கலாய்ப்பு. கைகளை விசுக்கிக் கொண்டு அந்த அலை பாயும் கண்களுடன் அவர் திடீரெனத் தோன்ற மாட்டாரோ வென்று…

என்றுமில்லாதபடி நான் போகவேண்டிய பஸ்கள் இன்று அடுக்கடுக்காக வருகின்றன. ஒன்றுக்குப் பின்னால் ஒன்றாக. எரிச்சலாக இருக்கிறது. எத்தனை நாட்கள், எவ்வளவு நேரமாக இந்த பஸ்ஸுக்குத் தவிப்புடன் காத்திருக்கிறேன். இன்றும் காத்திருக்கிறேன். தவிப்புடன் தான் காத்திருக்கிறேன். ஆனால் அவர் வரமாட்டார்.

“ஏன் ரதினி எல்லாவற்றையும் விட்டுக் கொண் டிருக்கிறாய்?” தோழி காதில் கிசுகிசுத்தாள்.

“உந்த நெரிசல்களுக்கே எப்பிடியடி ஏறிகிறது?” என்று சமாளிக்கிறேன்.

தோழி புன்னகைக்கிறாள். எல்லாம் தெரியுமென்ற பாவத்தில். அவளுக்கும் சாடை மாடையாகத் தெரியு மென்று எனக்குத் தெரியும். ஆனால் எனக்கு எதுவுமே தெரியாதென்ற பாவத்தில் நான் அபிநயிக்கின்றேன்.

பஸ் நிலையத்திலும் சனங்கள் கூடிவிட்டார்கள். பல விதமான மனிதர்கள் – விதம் விதமான ஆடையணிகள் – விதம் விதமான உணர்ச்சி பாவங்கள் – இரண்டு மூன்று மொழிகள். மாலை நேரத்துக் கலகலப்பு வீதியை ஆக் கிரமிக்கத் தொடங்கிவிட்டது. வாகனங்கள் உறுமத் தொடங்கிவிட்டன. சோடி சோடியாக கும்பல் கும்பல் களாக அபூர்வமான தனி மனிதர்களாக – எங்கும் விரைவாய், எதிலும் பதட்டமாய், ஒரே அவசரமாய்…

மாலை நேரத்து மஞ்சள் வெய்யில் கண்களை கூச வைக்கிறது. எங்கும் ஒரு சோகச் சாயை படர்ந்திருப் பது போல…கண்களைத் திருப்புகிறேன். வடக்கே சனங் களுக்கு மத்தியில் ஊடுருவுகின்றேன்; தெற்கே ஊடுருவு கிக்றேன்; பெருமூச்சு விடுகின்றேன். ஏதோ தவிப்புடன் கூடிய சோர்வு நெஞ்சை அமுக்குவது போல….

அவரை எதிர்பார்த்துக் காத்திருப்பதில் பிரயோசன மில்லை. அவர் வரமாட்டார். நான் அன்று அப்படி நடந்துகொண்டதன் பின்னும் எப்படி அவர் வருவாரென எதிர்பார்க்க முடியும்?…

பஸ்ஸில் நெரிந்து, குமைந்து பிதுங்கும் கூட்டம். எனக்குப் பின்னால் அவர் கண்டும் காணாதவளாகக் கடைக்கண்ணால் அவரை அளவிடுகின்றேன். ஒரு கம்பீரமான ஆண்மை ; அரும்பு மீசை, காதுக்கு அருகில் சிலும்பி நிற்கும் கன்னத்து மயிர். எங்கோ ஆழத்தில் கனவு காண்கின்ற, வசிகரிக்கின்ற புன்னகை பூக்கும் கண்கள்…

புன்னகை பூக்கும் கண்கள்…

“நீங்கள் இதிலை இருக்கலாந்தானே!”

எனது பார்வைத் தவம் கலைகிறது. குரலும் எடுப்பாகத்தான் இருக்கிறது. நான் அந்தக் காலியான இடத்தில் இருந்துகொள்கிறேன். ஏதோ இனம் புரியாத இன்பம் மனதில் சுரந்த மாதிரி இருக்கின்றது. அந்த இனிய பாடலை முணுமுணுக்க வேண்டும் போலிருக்கிறது. கண்களை மூடிக் கொண்டு எதையும் நினையாமலே, அப்படியே லயிக்க வேண்டும் போலிருக்கிறது.

எனது அந்த லயம் கலைய, பக்கத்தில் இருந்தவர் எழும்புகின்றார். ஒரு கணநேரத் தயக்கத்தில் அவர் என் னருகில் அமர்கின்றார். என் மனம் டக்டக்கென்று அடித்துக் கொள்கிறது. ஏதோ இனம்புரியாத பீதி என்னைக் கவ்விக்கொள்கிறது. எனது அம்மாவின் – ஐயாவின் – அண்ணாவின் முகங்கள் மனதில் பளிச்சிடுகின்றன. வலது கையின் சுட்டுவிரலை வாயில் வைத்து கடித்துக் கொள்கின்றேன்.

அவர் பார்வை என்பக்கம் திரும்பிற்று. சற்று நிதானிப்பது போல என்னைப் பார்த்தார்.

உங்கள் பெயர் ரதினி தானே?’

‘ஏன்’ என்றேன் நான். அப்படிக் கேட்கத்தான் என்னால் முடிந்தது.

‘என்னை உங்களுக்கு ஞாபகமிருக்கின்றதா?’ என்றார் அவர்.

‘இல்லையே’ என்று தலையசைத்தேன்.

ஏன் அப்படிச் செய்தேனென்று எனக்குத் தெரியாது. நாலு வருடங்களுக்கு முன்னர் எனது பதினாலாவது வயதில் ஒரு றெயில் பயணத்தில் அவரைச் சந்தித்ததை என்னால் மறக்கமுடியாது. வாலிபத்தின் தொடக்கத்தில் அவரின் முகம் கனவில் மிதப்பதாய் வேதனை தந்த அந்த நாட்களை என்னால் ஒருபோதும் மறக்கவே முடி யாது.

அன்று நான் ஏன் அப்படி நடந்துகொண்டேனென்று இப்போது நினைக்கும் போது எனக்கு ஆச்சரியமாகத் தானிருக்கிறது. அப்படி நடந்து கொண்டதற்கு ஏதோ காரணங்கள் இருப்பது போலவும் எனக்குப் படுகின்றது. என்னைப் பற்றிய எனது பெற்றோரின் நல்லபிப்பிராயங் களையும், எதிர்பார்ப்புகளையும் பெய்யாக்காமல் இருப் பதற்காக நான் அப்படி நடந்து கொண்டிருக்கலாம். நான் ஒரு டாக்டராகி, எனது பெற்றோரின் துன்பங்களை யும் கவலைகளையும் போக்கி அவர்களுக்கு ஒரு சமூக அந்தஸ்த்தைத் தேடிக் கொடுக்க வேண்டுமென்ற எனது கனவுகள் கலையாமல் இருப்பதற்காக நான் அப்படி நடந்து கொண்டிருக்கலாம். அல்லது அவரைப்போலவே அவர் பாணியில் கதைக்க முயன்று அவர் மனதைத் நான் புண்படுத்தியிருக்கலாம்.

“என்னடி கனக்க யோசிக்கிறாய்? இந்த பஸ்ஸில் சனமில்லை. ஏறடி” என்று என்னைப் பிடித்துத் தள்ளி விடு கிறாள் தோழி. ஏறிக் கொள்கிறேன். ‘சீயு’ என்று கை யசைக்கிறாள் அவள். எனது கையையும் தூக்கி அசைத்துக் கொள்கிறேன்.

இன்றைக்கு ஒரே சோர்வாக இருக்கிறது; தவிப்பாக இருக்கிறது; மூலையிலிருந்து அழ வேண்டும் போலிருக்கிறது. எவர் மேலும் ஆத்திரம் ஆத்திரமாக வருகின்றது. “இன்றைக்கு ஏனப்பா சிடுசிடுக்கிறீர்?” என்று இரஞ்சனி கூட வகுப்பில் கேட்டாள். நான் என்ன செய்ய…என்னால் என்னையே நிதானிக்க முடியவில்லை.

வெறுமையாய் இருந்த சீற்றில் அமர்கிறேன்.

கொஞ்சநேரம் அவர் ஒன்றும் பேசாமல் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருப்பவர் போல் இருந்தார். பிறகு என்னை முழுமையாகத் திரும்பிப் பார்த்துக் கொண்டே சொன்னார்.

“என்னைப் பற்றி ஞாபகம் உங்களிடம் இல்லாவிட்டாலும் உங்களைப்பற்றிய ஞாபகம் என் மனதில் பசுமையாக இருக்கிறது. ‘மனம்’ என்ற பத்திரிகையில் ‘தென்றல்’ என்ற பெயரில் நீங்கள் எழுதிய கவிதையைக் கூட நான் வாசித்திருக்கிறேன்.”

ஒரு கவிதையின் அழகுடன் மிக்க நளினத்துடன் அவர் இதைச் சொன்னபோதும் நான் “எனக்கு ஞாபகமில்லை” என்றே சொன்னேன்.

“உங்கள் கவிதையைப் பற்றித்தான் சொல்கிறேன்” என்றார் அவர்.

“அதைத்தான் நானும் சொல்கிறேன்” என்றேன் நான்.

“அப்படியா” என்றவரின் முகம் கறுத்து இருண்டது. அந்த முகத்தில் பொங்கி நின்ற சோபையின் ஒளி மங்கு வது எனக்குத் தெரிந்தது. அப்படியெல்லாவற்றையும் மறந்து, என்னை முழுமையாக அவரிடம் ஒப்படைக்க வேண்டுமென்று என் மனம் தவித்தாலும் என்னால் அப்படிச் செய்ய முடியவில்லை.

இப்போதும் கூட , அவர் என் முன்னால் எதிர்ப் பட்டால் நான் அப்படிச் செய்வேன் என்று திடமாகச் சொல்லமுடியாதென்றே நினைக்கின்றேன்.

அவரைக் காண வேண்டுமென்று எனக்குத் தவிப் பாகத்தான் இருக்கிறது. அவருடன் வாழ வேண்டுமென்று, அந்த மார்பில் முகம் புதைத்து அழ வேண்டு மென்று – கையுடன் கைகோர்த்து இணையாகத் திரிய வேண்டுமென்று – அவர் தலையை வருடி ஆறுதல் சொல்ல வேண்டுமென்று…என்றாலும்…என்றாலும், என்னால் அப்படிச் செய்ய முடியாது. கூண்டுப்பறவைபோல, ஏதோ, தளைகளினால் காலம் காலமாகப் பிணைக்கப்பட்டவள் போல…

பிறகு அவர் ஒன்றுமே பேசவில்லை. ஏதோவொரு தரிப்பில் இவ்வளவும் கதைத்ததற்கு நன்றி’ என்றி சொல்லிவிட்டு இறங்கிவிட்டார்.

என்னுள் ஏதோ மகத்தானதொன்று கிளர்ந்து அமுக் கியது போலிருந்தது. அன்றோடு எனது கலகலப்பும் சிரிப்பும் என்னிடமிருந்து விடைபெற்றுக் கொண்டன. நான் என்னுள் அழுது எனக்குள் தவிக்கிறேன்.

இண்டைக்கு பஸ் வலு கெதியாய் வந்துவிட்டது போல.

நான் இறங்கி நடக்கிறேன். அப்போதுதான் இருண்டதென்றாலும் தெருவில் சனநடமாட்டம் இல்லை. வீதி விளக்குகள் அழுது வழிகின்றன. அம்மா என்னை எதிர்பார்த்துப் படலையில் காத்திருக்கிறாள். அப்பா “ஓவர் டைம்” செய்து விட்டு இன்னும் வந்திருக்கமாட்டார். அண்ணா வழக்கம் போலவே, வேலையில்லையே என்ற கவலையில் மெகட்டைப் பார்த்துக்கொண்டிருக்கிறான்.

“நான் டாக்டராகத்தான் வேண்டும்” என்று நினைக்கிறேன்.

– 1976, சாதாரணங்களும் அசாதாரணங்களும், முதற் பதிப்பு: அக்டோபர் 1983, நர்மதா பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

விடியல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2023

சோதனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2023

யார் முதல்வன்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)