கதையாசிரியர்:
தின/வார இதழ்: சுபமங்களா
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 11, 2022
பார்வையிட்டோர்: 8,812 
 
 

(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ராத்திரிக்கு ஒரு வாசனையுண்டு. தாழம்பூ. அணைத்த காடா விளக்கு. ‘சரட் சரட்’ என்று வார்ச் செருப்பு ஒலிக்க, அரவம் ஒழிந்த தெருவில் யாரோ குடித்துக்கொண்டு போகிற சுருட்டு …

தெரு விளக்கு மட்டும் எரிகிறது. வீட்டில் விளக்குப் போய் ஒரு மணி நேரமாகிறது. எல்லாச் சத்தத்தையும் பெருக்கி எடுத்துப் பூதம் காட்டுகிற ராத்திரி… சைக்கிள் ரிக்ஷா வந்து நிற்கிற சத்தம்…தடதடவென்று யாரோ இறங்குகிற சத்தம்…

பக்கத்து பிரஸ்காரர் வீட்டுக்கு யாராவது வருவார்கள். அர்த்த ராத் திரியில் வந்து சேர்கிற ரயிலும் பஸ்ஸும் கூட யாரையாவது அங்கே கொண்டு சேர்த்து விட்டு போகின்றன. கண்ணன் பதிப்பகத்துக்கு இந்தப்பக்கவீடு, எதிர்வீடு என்றுதான் தெருக்காரர்கள் வீட்டு அடையாளம் சொல்கிறார்கள்.

“எவனும்..கேட்டுக்கடா…எவனும் என்னை ஏமாத்த முடியாது…முழிச்சிட்டு இருக்கும்போதே தொடையிலே கயிறு திரிக்க வரான் அவனவன்….என்ன ஊருடா இது”

“பாத்துப் பேசுங்க சாமி… நான் எதுக்கு உங்களை ஏமாத்தணும்…இனாமாவா தரச் சொல்றேன்…ரயில்வே ஸ்டேஷன்லேருந்து ரிக்ஷா மிதிச்சுட்டு வந்துதானே கேக்கறேன்…”

“வழக்கமா நாலு ரூபா தானேடா….என் மூஞ்சியைப் பாத்ததும் எட்டாயிடுத்தா…”

“திரும்பத் திரும்ப டா போட்டுப் பேசாதீங்க….இஷ்டமில்லாட்டா ஒரு நயா பைசா கூடத் தர வேண்டாம்…தருமத்துக்கு சவாரி அடிச்சதா நினைச்சுக்கறேன்…”

“நீ என்னடா தருமம் பண்றது…அவனவன் என்னை ஏமாத்தி வீடும் காருமா அமக்களமா இருக்கான்…உனக்கு எட்டு ரூபா தானே..எட்டு என்னடா கணக்கு…பத்தாவே வச்சுக்க…இந்தா…போய் நல்லா இரு…”

“பத்து ரூபான்னு சொல்லி நூறு ரூபா நோட்டைத் தறீங்களே… நான் உழைச்சுப் பிழைக்கறவன்…கிடைச்சதைச் சுருட்டிக்கிட்டு ஓடறவன் இல்லே…”

சத்தம் ஏறிக்கொண்டே போகிறது. வாசலுக்கு வந்தேன். இந்த இரைச்சல் தணியாமல் இனிமேல் தூக்கம் கிடையாது.

விளக்குக் கம்பத்துக்கு கீழே சாய்ந்து நின்றிருக்கிற மனிதனைப் பார்க்கவே கொஞ்சம் வினோதமாக இருந்தது. நல்ல ஆறடி உயரம். பெரிய போலீஸ் மீசை…நரை பாய்ந்தது. புழுக்கமான ராத்திரியில் ஸ்வெட்டர். மோட்டார் சைக்கிள் ரேசுக்கு இறங்கிய மாதிரி ஸ்வெட்டருக்கு மேல் ஒரு பிளேசர். கசங்கிய ஆலிவ் பச்சை பேண்டும் கான்வாஸ் ஷூவுமாக ஒரு லாட்டின் அமெரிக்கன் பர்சனாலிட்டி.

ரிக்ஷாக்காரன் என்னைப்பார்த்து சலாம் செய்தான். வங்கிக் கடனில் வாங்கிய ரிக்ஷா. என் முன்னோர் காலத்தில் கொடுத்து இன்னும் கடன் அடைக்கப்படாதது.

“என்னப்பா ராத்திரி தூங்க விட மாட்டியா?”

நான் அவனைப்பார்த்துக் கேட்டாலும் அந்த ஓங்கி உலகளந்த வரையும் கேள்வியின் வரம்பில் அடக்கு வதற்காக அவரையும் பார்த்தேன்.

அவர் தலைமுடியை ஆழமாகக் கோதிக்கொண்டே என்னை முறைத்தார். தாடி இருந்தால் காஸ்ட்ரோ மாதிரி இருப்பார்.

“என் கிட்டே நூறு ரூபாய்க்கு சில்லரை இல்லை” பனிப்புயலில் அகப்பட்டுக்கொண்டது போல பிளேசரின் ஸிப்பை தெஞ்சு வரை இழுத்து மூடிக்கொண்டார்.

“சார்கிட்டே கேளுங்க சாமி…பாங்குக்கார ஐயா…”

மவுனமாக என்னண்டை வந்து நூறு ரூபாய்த்தாளை நீட்டினார்..பாங்க் மேனேஜர் என்றால் நடுராத்திரியில் சட்டை கூட போடாது முண்டா பனியனுடன் இருந்தாலும் சில்லரை எடுத்துத்தர வேண்டும்…

உள்ளே போய் முதலில் நோட்டைத் திருப்பிப் பார்த்தேன். கட் நோட் இல்லை. பத்து ரூபாய்த் தாள்களாக எடுத்துக்கொண்டு வெளியே வந்தபோது, ரிக்ஷாக்காரன் பீடி பற்ற வைத்துக்கொண்டு அதே குச்சியில் அவர் சிகரெட்டையும் ஏற்றிக்கொண்டிருந்தது ஏதோ இரண்டு ஆத்ம சிநேகிதர்களை பார்க்கிறது போல இருந்தது.

“தாங்க்ஸ் மை சன்…” அவர் இப்போது பாதிரியார் போல் தெரிந்தார்.

பத்து ரூபாய்த்தாளை ரிக்ஷாக்காரன் கையில் வைத்து மூடினார்.

“வேணாம் சாமி”

“இப்ப எடுத்துட்டுப் போறே. ஆமா….”

அவன் கிளம்பிப்போகிறதைப் பார்த்தபடி நின்றார். அமைதியை நிலைநாட்டிய திருப்தியோடு நான் உள்ளே போகும் போது பின்னாலிருந்து திரும்பவும் சத்தமாக ஒலிக்கிற குரல்.

“கண்ணப்பன் வெளியூர் போயிருக்கானா…!” ‘பதில் சொல்லா விட்டால் முட்டியைப் பெயர்த்து விடுவேன் படுவா’ என்ற பாவம் தெறிக்கிறது.

கண்ணப்பன், கண்ணன் பதிப்பக உரிமையாளர். பக்கத்து வீட்டுக்காரர் என்றாலும் வெளியே இறங்கும் போதெல்லாம் என்னிடம் சொல்லிக்கொண்டு போகவேண்டிய நிர்பந்தம் இல்லாதவர்.

“தெரியலியே சார்…”

அவர் இன்னொரு சிகரெட் பற்ற வைத்துக் கொண்டார்.

“டு யூ நோ மீ?” திடீரென்று மிடுக்கான ஆங்கிலத்தில் கேட்டார். ரேடியோவில் ஒன்பது மணிக்கு இங்கிலீஷ் நியூஸ் வாசித்து விட்டுப் போன மெல்வில்டிமெல்லோவின் குரலின் மிச்ச சொச்சங்களாக உதிர்கிற வார்த்தைகள்…

அவர் யாராகவும் இருக்கலாம்…பட்டாளக்காரர். ரிடையர் ஆன போலீஸ்காரர்.

“நான்தான் ராஜராஜன்…ஏஎச் ராஜராஜன்….”

இனிஷியல்களோடு சொன்னாலும் அடையாளம் தெரியவில்லை.

“ஐ யாம் எ ரைட்டர்” என் கையைப் பற்றிக்குலுக்கினார். “தமிழில் முதல் சோதனை நாவல் என்னுடையது…இந்த வினாடி இல்லை அடுத்த வினாடி..”

எந்தப் பத்திரிகையில் வந்தது என்று கேட்க நினைத்து அடக்கிக் கொண்டேன். இவரே சோதனை நாவல் என்கிறார். சோதனை நாவல்களைத் தொடர்கதைகளாகப் பத் திரிகைகளில் போடுவதில்லை. அதாவது எங்கள் ஆபீஸ் மனமகிழ்மன்றத்தில் வாங்குகிற பத்திரிகைகளில். அதைப்புரட்டவே நேரம் இல்லாமல் ஆயிரத்தெட்டு பிக்கல் பிடுங்கல்…

ஏ.எச். ராஜராஜன் இடம் போனாலென்ன வலம் போனாலென்ன, இங்கே இருந்து கிளம்பினால் போதும்…

“மை சன்….” இல்லை கிளம்புகிறதாக இல்லை .

“மிஸ்டர் பேங்க் ஏஜெண்ட் சார்…..” இதுவும் என்னைத்தான். புராண காலத்து மனிதர். பேங்குகளில் ஏஜெண்டுகள் போய் மேனேஜர்கள் வந்து இரண்டு மாமாங்கமாகிறது.

“நான் நேரடியாப் பேசிப் பழகினவன்… இந்தக் கண்ணப்பனோட சண்டை போட வந்தேன்… ஆளு இல்லை… அவனைத்தவிர இங்கே யாரையும் தெரியாது எனக்கு…நான் என்ன பண்றேன்…உங்க வீட்டு வாசல் திண்ணையிலே படுத்து இருந்துட்டு ராத்திரி விடிஞ்சதும் போயிடறேன்… சரியா…”

என் தோளில் பலமாக ஒரு தட்டு. நான் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே சிகரெட்டை அணைத்து விட்டுத் தடதடவென்று திண்ணையில் படி ஏறி கான்வாஸ் பேக்கை தொப்பென்று போட்டார். உள்ளே இருந்து ஒரு டர்க்கி டவலை எடுத்து டொக்டொக்கென்று தும்மலுக்கு இடையே தூசி தட்டினார். அப்புறம் ஒரு பிரவுன் பேப்பர் கவரை எடுத்து வெளியே வைத்தார். மங்கலான தெரு விளக்கு வெளிச்சத்தில் உள்ளே வக்கீல் குமாஸ்தாக்கள் மடித்து எடுத்துப் போகிற காகிதக் கட்டுகள் போல ஏதோ திணித்திருந்தது தெரிந்தது. டர்க்கி டவலை சுருக்கம் போக உதறி விரித்துக்கொண்டு முகப்பில் பேக்கை நிறுத்தினார். படுக்கையும், தலையணையும் ரெடி என்பது போல என்னை ஒரு பார்வை. ஷூவைக் கழற்றிக் கொண்டு, “உள்ளே போய் சமாதானமா உறங்குங்க…குட் நைட் மை சன்…”

என் அப்பா ஷூ போடுவதில்லை. ஆங்கிலம் பேசுவதில்லை. கிராமத்தைத்தாண்டி வெளியே போவது இல்லை. இப்போது ஒரு வினாடி அவரை இங்கே பார்த்தேன். ‘பனி விழறது….உள்ளே போய் படுத்துக்கப்பா’

“போர்வை தரட்டா சார்….”

“வேணாம்… குளிரினா இதை எடுத்துப் போத்திக்குவேன்…ஆல் பர்ப்ப ஸ் டவல்…”

துண்டு அவர் இடுப்பு வரை கூட வராது.

“ஜில்லுனு பானைத் தண்ணி இருந்தா கொடு மை சன்… கத்திக் கத்தி தொண்டை வரண்டு போச்சு…”

மீசையை நீவிக்கொண்டே கடகட வென்று இடிச்சிரிப்பு.

‘சரிதான் போய்யா…’ என்று ஏனோ சொல்ல முடியவில்லை. உள்ளே போய்க்கொண்டு வந்து பக்கத்தில் வைத்துவிட்டு எதிர்திண்ணையில் உட்கார்ந்தேன். ஒரு ஐந்து நிமிடம் மரியாதைக்கு வார்த்தை சொல்லிக்கொண்டிருந்துவிட்டு உள்ளே போய்விட வேண்டியதுதான்.

“மானாமதுரை மண்பாண்டம் இல்லே இது…என்ன அழகான வேலைப்பாடு பாருங்க அன்னப் பறவை மாதிரி…. பழைய கிரேக்க ரோமானியர்களோடு போட்டி போடற அழகுணர்ச்சி – அசாத்திய திறமை…”

கூஜாவை அப்படியும் இப்படியும் திருப்பி ரசித்துக் கொண்டே இருந்தார்.

“திறமான புலமையெனில்…”

திடிரென்று சத்தம் உயர்த்திக் கவிதை சொல்ல ஆரம்பிக்கிறவர்…

‘தூக்கிப் போட்டு மிதிக்கணும்…’ முடித்துவிட்டு ஓவென்று சிரித்தார். இரைச்சல் கேட்டு பக்கத்தில் யாரும் சண்டைக்கு வரக்கூடிய சூழ்நிலை .

“மானாமதுரைப் பக்கமா நீங்க?”

இந்தக்கேள்வியைத் தண்ணீர் கொண்டு வரும்பொழுதே எதிர்பார்த்தேன். ஏன் என்று தெரியவில்லை .

அமர்த்தலாகத் தலையாட்டினேன். ஆமாம் இல்லை என்று அரை வார்த்தை பேசினாலும் அதைப் பிடித்துக் கொண்டு இவர் வேறு ஏதாவது ஆரம்பித்து விடலாம்.

கவிழ்ந்து படுத்துக்கொண்டார். வாட்ச் உறுத்தியதோ என்னவோ, கழற்றி பேண்ட் பையில் போட்டுக் கொண்டார்.

“நான் கூட தெக்கத்தியான் தான்…மதுரைப்பக்கம்…..”

ஏதோ கிராமப்பெயரைச் சொன்னார். அவர் இனிஷியலில் இருக்கிற ‘ஏ’ அதிலிருந்து வந்ததாக இருக்கும்.

“பதினைந்து வருஷம் காலேஜ்ல மேத்தமெடிக்ஸ் லெக்சரரா குப்பை கொட்டினேன்”

அவரை ஒரு புது மரியாதையோடு பார்த்தேன். பொய் சொல்லக்கூடியவராகத்தெரியவில்லை . என் மனதில் இருக்கிற கணிதப் பேராசிரியர் பிம்பத்தோடு ஒத்துப் போகிற ஒரே விஷயம் இவர் உயரம் தான்.

“புரபசர் போஸ்ட் தரமாட்டேன்னான்… பிரைவேட் காலேஜ்… கண்டவனும் அதிகாரம் பண்ற எடம்… போடா நாயேன்னு வந்துட்டேன்… நம்ப டைப்புக்கு அத்தனை வருஷம் ஓட்டினதே ஜாஸ்தி… பொல்லாத மொரட்டுப் பயபுள்ளே…’

செல்லமாகத்தோளில் தட்டிக் கொள்ள வாகாக சுவரில் சாய்ந்து உட்கார்ந்தார். இவரை எப்படி வகைப்படுத்த? இலக்கியவாதி, கணிதப்பேராசிரியர், தெருவில் வம்பு வலிக்கும் முரடர், முன்பின் தெரியாதவர்களின் ராத்தூக்கத்தைக்கெடுத்து மகிழ்கிறவர்…

“பத்து வருஷம் வேலை பாத்த இடத்துலே புத்தகம் விக்கப் போன போது உள்ளே விட மாட்டேனுட்டான்….”

வேலையை விட்டுவிட்டு கணக்குப்புத்தகமோ வாய்ப்பாடோ விற்க பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் அலைந்து திரிகிறவராக இருக்கும்… வயிறு இருக்கிறதே…

“கண்ணப்பன்தான் பப்ளிஷ் பண்ணினான்… என் முதல் நாவல்…. சொன்னேனே…. சோதனை நாவல்… மலையாளத்திலே கூட டிரான்ஸ்லேட் ஆகியிருக்கு… தமிழ்லேதான் விலை போகலே….”

நான் வேண்டுமானால் ஒரு காப்பி வாங்கிக்கொள்வதாகச்சொன்னால் சமாதானமாகத் தூங்குவாரா? திறமான புலமையை சிலாகிக்க முடியாமல் எனக்கும் கண்ணைச் சுழற்றுகிறது.

“புத்தகம் விக்காட்டாக் கவலைப் படாதே கண்ணப்பா…என்கிட்டே கொடு…ஒவ்வொரு காலேஜா ஏறி வித்துத்தரேன்… தெருத்தெருவாப் போய் பிளாட்பாரத்துல உக்காந்து கடை பரத்தக்கூடத் தயார்…. மூட்டையைக் கட்டிக்கொண்டான்னு கிளம்பிட்டேன்… என்னோட புத்தகம் மட்டும் இல்லே… கண்ணப்பன் போட்ட எல்லாப்புத்தகத்திலும் பத்து பத்து காப்பி…பத்து பெர்சண்ட் டிஸ்கவுண்ட்…”

“வா சார் வா… எந்தப் புத்தகம் எடுத்தாலும் பத்து ரூபா….” அடுத்து கவிகிற பிம்பம்.

“எத்தனை வித்துக்கொடுத்து என்ன பிரயோஜனம்… ஒரு ஆயிரம் ரூபா கொடுன்னு நாலு லெட்டர் போட்டுட்டேன்…. இவன் பதிலே போடலை. சும்மாவா கேக்கறேன்… ராயல்டி தரனும் இல்லியா?”

எனக்கு இதெல்லாம் எந்த விதத்திலும் தேவையில்லாத சமாசாரம். என் கழுத்தை அறுக்க இப்படி ராத்திரியில் ஒரு பிரகிருதியா….

தெருவில் பெருத்த இரைச்சலுடன் லாரி போனது. யார் வீட்டிலோ குழந்தை அழுகிற சத்தம்.

“வீட்டிலே தனியாத்தான் இருக்காப்பலியா?” அதிகாரமாக வருகிற குரல்.

தலையை ஆட்டினேன்.

“ஸ்டில் அன் மேரிட்” லில் ஒரு அழுத்தம்.

“ஊருக்குப் போயிருக்காங்க…”

“நான் கல்யாணமே செய் கலை… என்னைப் பாத்து பய. ஒரு பொண்ணும் கழுத்தை நீட்ட மாட்டேனுட்டா… போறது போ.. இப்படி இங்கே சுதந்திரமா படுத்தும் கிடக்க முடியறது… டீயும் பன்னுமா சமாளிச்சுட்டு சுத்த முடியுது… ஏவாளுக்கு நன்றி… புரண்டு படுத்தார். நான் இதுதான் சமயமென்று உள்ளே போகத் தயாரானேன்.

“கண்ணப்பன் நாளைக்கு வந்துடுவானில்லியா… அவனுக்காச்சு… எனக்காச்சு… பணம் வாங்கிட்டுக் தான் புறப்படணும்…”

தெருப் புழுதியில் கட்டிப்புரண்டு இவரும் கண்ணப்பனும் சண்டை போடுகிற காட்சி… விடிந்ததும் கண்ணப்பன் வராவிட்டால் இவரை எப்படி வாசல் திண்ணையிலிருந்து இறக்குவது?

இவரை வாசலில் விட்டுவிட்டுப் போகத்தயக்கமாக இருந்தது. உள்ளே படி ஏற்றவும் பயம்.

உள்ளேதான் மின்சாரம் இல்லையே… நானும் எதிர்த்திண்ணையிலேயே படுத்தால்… கொஞ்சம் கொசுக்கடி… தூங்கினால் தெரியவா போகிறது?

தூங்கினது எப்போது என்று தெரியாது. லொட் லொட் என்று யாரோ சிமெண்ட் தரையில் பிரம்பால் அடிக்கிற சத்தம் கேட்டு விழித்தேன். சத்தமான பேச்சு. இருப்பும் சூழ்நிலையும் புலப்படவில்லை. ஆபீஸில் கேஷ் கவுண்டர் பின்புறம் தரையில் படுத்துக்கொண்டிருக்கிற மாதிரி ஒரு தோணல்….

“நீ யாராயிருந்தாலும் சரி… நட ஸ்டேஷனுக்கு…”

யாரோ யாரையோ மிரட்டுகிறார்கள்.

எழுந்து உட்கார்ந்தேன். எதிர்த்திண்ணை காலியாக இருந்தது. வாசலில் இரண்டு போலீஸ்காரர்கள். முன்னால் கூனிக்குறுகி நிற்கிற உருவம்…என் நடுராத்திரி விருந்தாளிதான்…..

நான் தூங்கிக் கொண்டிருக்கும் போது இவர் என்ன செய்து போலீஸ் வந்திருக்கும்? இவரை படியேற்றினதே தப்புதானோ…வாசலுக்குப் போனேன்.

“உங்க கெஸ்ட்டா சார்…” ஒரு போலீஸ்காரர் என்னைப்பார்த்து சிநேகமாக விசாரித்தார். போன வாரம் நகைக்கடன் வாங்க வந்ததாக ஞாபகம்.

“விருந்தாளிதான்….” யாருக்கென்று சொல்லவில்லை. இவரைப் பார்த்தேன். கைகள் லொடலொட வென்று ஆடிக்கொண்டிருப்பதைக் கவனித்தேன். கண்ணில் அப்படி ஒரு பயம்.

“நடுராத்திரியில் விளக்குக்கம்பத்துக்கு கீழே குத்த வச்சு ஒண்ணுக்குப்போயிட்டிருந்தார்”

“நின்னுட்டுப் போனார்யா… பேண்ட் போட்டுக்கிட்டு எப்படிக் குத்த வைக்கிறது?” இன்னொரு போலீஸ்காரர் பெரிய ஜோக் அடித்த திருப்தியில் சிரித்தது ரசிக்கவில்லை .

“தெருவிலே எல்லாம் அசுத்தம் பண்ணாதீங்க… மனுஷன் நடமாடுற ரோடில்லையா… வெளியூர்க்காரர்….. சாரோட கெஸ்ட்னு விடறேன்… கவனிச்சு நடத்துக்கனும்…. தெரியுதா?” – இது இவருக்கு.

நீதி போதனை கேட்கிற பள்ளிக் கூடப்பையன் போல இந்த நெடி யவர் பலமாகத்தலையசைத்த போது தான் சிரிப்பு வந்தது.

“சார்! புது சைக்கிள் வாங்கணும்… பேங்க்லே லோன் தருவீங்களா”

சைக்கிளில் ஏறும்போது போலீஸ்காரர் கேட்டார்.

பேங்க் மேனேஜர் இருபத்து நாலுமணி நேரமும் பேங்க் மானேஜர் தான்.

“வாங்க… பாக்கலாம்” விரைப்பாக சல்யூட் அடித்து விட்டுப்போகிறவரை ஆச்சரியமாகப் பார்த்தபடி நின்றார் உலக மகா முரடர், கண்ணில் பயம் தெளியவில்லை .

“சாரி…. என்னாலே உங்களுக்கு கஷ்டம்” தர்மசங்கடமான ஒரு சிரிப்போடு சொன்னார். கண்கள் தரையைப் பெருக்கின.

“அதெல்லாம் ஒண்ணும் இல்லே.”

இவரை உள்ளே விடாமல் திண்ணையில் கிடத்தியது நான். என் மேலேயே கோபமாக வந்தது.

“கண்ணப்பன் கிட்டே இதெல்லாம் சொல்லவேண்டாம்….” யாசிக்கிற குரலில் தழுதழுப்பு கவிந்து கம்மியது.

காலையில் விழிப்புத்தட்டிய போது எதிர்த்திண்ணை காலியாக இருந்தது. ஏ.எச். ராஜராஜன் என்ன ஆனார்? அவசரமாகத்தலைமாட்டில் வாசல் சாவியைத் தேடினேன். பத்திரமாக இருந்தது. சே…என்ன மனிதன் நான்…

ராஜராஜன் அந்த பிரவுன் பேப்பர் கவரைத்தூணோரம் விட்டுவிட்டு போயிருந்தார். இருட்டில் பார்க்க வில்லையா?

எடுத்துப்பார்த்தேன். கையெழுத்துப்பிரதி. ‘நமனை அஞ்சோம்’ நாவல் போல இருந்தது. கண்ணப்பனுக்குக் கொடுக்க எடுத்து வந்ததா?

சுவரோடு உள்ளே போகும் போது கண்ணப்பன் வீட்டைப் பார்த்தேன். பூட்டித்தான் இருந்தது.

– நவம்பர் 1993

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *