கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 28, 2022
பார்வையிட்டோர்: 2,981 
 
 

(1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வேலாயுதம்

“பரமசாது, நம்ம தோட்டக்காரன். கோபம், துளி கூட இடையாது. எனக்குச் சற்று முன்கோபம் வருமல்லவா, அதனாலே ஒவ்வொரு நாள் அவனைக் கண்டபடி திட்டி விடுவேன், கழுதே, நாயே, கட்டிவைத்து உதைக்கிறேன் பார், என்றெல்லாம். கோபிக்கவே மாட்டான். அவ்வளவு சாது. தலையைக் குனிந்தபடி நிற்பான். எதிர்த்து ஒரு பேச்சும் பேசவே மாட்டான், ஒருநாள், என்னமோ மனக்கஷ்டம் எனக்கு அந்தச் சமயத்திலே, அவன், ஏதோ தவறு செய்துவிட்டான், அதனாலே வந்த கோபத்தில், எதிரே இருந்த என் செருப்பைத் தூக்கி வீசினேன், பயல நல்லவேளை அவன் மீது படவில்லை. அப்போது கூட அவன் கோபித்துக் கொள்ளவில்லை. கீழே விழுந்த செருப்பை எடுத்து வந்து, பழையபடி, இருந்த இடத்திலேயே வைத்துவிட்டு தன் வேலையைக் கவனிக்கச் சென்றான். அவ்வளவு சாதுவான தோட்டக்காரன். நான் பார்த்ததேயில்லை, அப்படிப்பட்ட அபூர்வமான குணமுள்ளவனை. பரமசாது”

வள்ளி

“பூமாதேவி பொறுமைசாலி என்று சொல்கிறார்களே, அது தப்பு. நம்ம, பொட்டைக்கண்ணி போலச் சாது இந்தப் பூலோகத்திலே வேறு யாரும் இருக்கமாட்டார்கள். அவளுடைய புருஷன், அவளைப் படுத்துகிற பாடு, அட்டா! தெயங்கூடச் சகிக்காது. நின்னா உதை, குனிந்தாக் குத்து. ஒரு காரணமுமில்லாமல் சண்டை போட்டு, அவளை, நாயைப் பேசுகிற மாதிரியாப் பேசி, கையிலே கிடைச்சதை எடுத்து வீசி, நாசம் செய்கிறான். குழம்பிலே ஏண்டி காய் இல்லை. காயிலே ஏண்டி ருசி இல்லை, மாடத்திலே ஏண்டி காசு இல்லை – பிள்ளை ஏண்டி தூங்கவில்லை. பேசினா ஏண்டி பதிலில்லே, என்று, இப்படி விநாடிக்கு விநாடி ‘டி’ போட்டுத் திட்டியபடி இருப்பான். இவ்வளவு உதையையும் பட்டுக்கொண்டு, அந்தப் புண்ணியவதி, பாவம், வாய் திறந்து ஒரு பேச்சு பேச மாட்டா பதிலுக்கு. அவவளவு சாது – அவ்வளவு பொறுமைசாலி, நான் எவ்வளவோ பேரைப் பார்த்திருக்கிறேன், அவளைப்போல, அடக்க ஒடுக்கமானவளைக் கண்டதே இல்லை. கோணல் சேட்டை ஆடுகிறதைப் பொறுத்துக்கொண்டு, எப்படியோ, குடித்தனம் செய்கிறா, அந்தப் புண்யவதி. சாது. பரமசாது.”

செல்லி

“பொம்பளையா இவ! பஜாரி! கிணற்றுக்கு வந்தாப் போதும், ஒரே ஆர்ப்பாட்டம். ஒரு சொல்லுச் சொல்வதற் குள்ளே , ஓஹோன்னு கூவிக்கொண்டு, சண்டைக்குக் கிளம்பி விடுகிறா. ஒரு காரணமும் இல்லாவிட்டாக்கூட, சண்டை போடுகிறா. அப்பப்பா! என்னென்னதான் பேசுறா தெரியுமா! சபிச்சிக் கொட்றா! வாயிலே வரத்தகாத பேச்செல்லாம், பேசுவா. பேச்சோடு விடுகிறாளா! குடத்தாலே இடிப்பா, கூந்தலைப் பிடித்து இழுக்கிறா, சிலசமயம் அடிக் கவே வந்துவிடுகிறா. அடங்காப்பிடாரி! வம்புச் சண்டைக் காரி! வாய்க்கொழுப்புக்காரி. அவ கிணற்றண்டை வருகிறான்னு தெரிந்தாலே, நான் போகமாட்டேன், செ! அந்த வாயாடி, போக்கிரிக் கழுதை போய்த் தொலைக்கட்டும்னு வீட்டிலே இருப்பது. அப்பா! நானும் எத்தனையோ பொம்பளைகளைப் பார்த்தேண்டியம்மா, இவளைப்போல், பஜாரியைக் கண்டதில்லை. சனியன்! ஒழியுதாம், புருஷன் வீட்டுக்கு, நாளைக்கு. போய்த் தொலைக்கட்டும். நம்ம ஊர் க்ஷேமப்படும். கிணற்றுப்பக்கம், தாராளமாகப் போய் வரலாம் இனி.


பரமசாது என்று எஜமானரால் பாராட்டப்பட்ட தோட்டக்காரனே தான், நின்னா உதை குனிந்தா குத்து கொடுக்கும் கணவன்!

அந்தக் கணவனுடைய கோணல் சேட்டைகளைப் பொறுத்துக்கொண்டு ‘பூமாதேவியைவிடச் சாது’ வாக இருக்கும் பொட்டைக்கண்ணிதான், கிணற்றருகே போனால் வாயாடி வம்புச்சண்டை பிடிக்கும் பஜாரி!

பரமசாது, கொடிய கணவனாவதும், அடக்கமான மனைவி அடங்காப்பிடாரியானதும், ஏன்?

எஜமானரிடம் அவன் படும் கொடுமைகள், அந்தப் பரமசாதுவின் மனதிலே கிளப்பிவிடும் கோபம் இருக்கிறதே, அங்கு அவர் எதிரே அடங்கிக் கிடக்கிறது; வீட்டில், அபலையின் முன்னே, வெளிவருகிறது – பரமசாது, கோபம் தலைக்கேறிய கொடியவனாகிறான்.

அவனுடைய கொடுமைகளைச் சகித்துக்கொண்டு, பரம சாதுவாகப், பொறுமைசாலியாக இருக்கும் அந்த மனைவியின் மனதிலே, அந்தச் சமயங்களிலே மூண்டுவரும் கோபம், அப்போது அடங்கிக் கிடக்கிறது, புற்றுக்குள் இருக்கும் பாம்பு போல. தாய் வீட்டில், கிணற்றருகே, வேறு பெண்கள் எதிரே, அந்தப் பாம்பு, படமெடுத்தாடுகிறது. அப்போது, பரமசாது, பஜாரியாகிறாள்!

வேலை செய்யுமிடத்திலே சாது! வீட்டிலே கோடக்காரன்!

புருஷன் எதிரிலே பொறுமைசாலி, அவளே பிறகு பஜாரி, வேறு பெண்கள் எதிரில்!

சேலம் ‘ஒகயனக்கல’ அருகே, ஆடு தாண்டும் அளவுள்ள காவேரி, பிறகு அகண்ட காவேரியாகிறதே வேறு ஜில்லாவில், அதுபோல . இடபேதம், இயலபு பேதத்துக் குள்ள பல காரணங்களிலே ஒன்று. ஒரு இடத்திலே, கோபத்தைக் காட்டமுடிவதில்லை. ஆனால், கோபமே ஏற்படவில்லை என்று பொருள் அல்ல. அது கொதித்துக் கிளம்புகிறது, வேறோர் இடத்தில்.

தோட்டக்காரன் பரம சாதுவாகத்தான் இருந்து தீர வேண்டி நேரிடுகிறது. இடம் அப்படி.

பொட்டைக்கண்ணி, பொறுமைசாலியாகத்தான் இருக்க வேண்டி நேரிடுகிறது – புருஷன் எதிரில்.

வீட்டில் அவன், தன் கோபத்தைக் காட்ட முடிகிறது தாராளமாக – ஆகவே, வேலை செய்யுமிடத்திலே, கட்டிப் போடப்பட்டிருந்த கோபம், கட்டுகளை அறுத்துக்கொண்டு, காட்டுமிருகம் போலாக்கிவிடுகிறது, பரமசாதுவை. அவள் நிலையும் அதுதான், தாய் வீட்டிலே, கிணற்றருகே, புருஷன் இல்லாத இடத்திலே.

அவர்கள் மட்டுந்தானா! நாம்? எத்தனையோ சம்பவம் இப்போது நினைவிற்குக் கொண்டுவந்தால், தெரியும் – பரம் சாதுவாக இருப்போம் சிலசமயம், கோபம் கொப்பளித் தெழும் சில சமயம் – இடபேதம் இயல்பைப் பேதப்படுத்தி இருக்கும். உளப் பண்பின் நுட்பமறிந்தவர்கள், கூறுகின்ற னர், ஒரு சமயத்தில், எக்காரணம் கொண்டோ, ஏதோ ஓரிடத்தில் மூண்டு, இடபேதம் காரணமாக அடக்கப்பட்ட மாட்டே – அவ்வளவு அடக்க ஒடுக்கமா, சாதுவாக இருந்தவன், இப்படி, ஒரு சொல் சொல்லாத முன்பு, கோபம் தலைக்கு ஏறி, கொக்கரிக்கிறயே, என்னடா சங்கதி?


அந்தச் சங்கதி இது

இருப்பது இதுதான்.

என்ன கழுதே ! கேட்டா, இதுதான்னு , கத்தறே. எனக்கு வெண்டைக்கா பிடிக்காதுன்னு உனக்குத் தெரியாதா கழுதே !

தா! சும்மா கழுதே மேய்க்காதே!……..

அடி, நாயே! என்னடி என்னமோ எதிர்த்து எதிர்த்துப் பேசறே.

உள்ளதைச் சொன்னா, எதிர்க்கிறதுன்னு பேரா? நீ, காரணமில்லாமே, கண்டபடி பேசுவே, கல்லா, நானு? காலமெல்லாம் இந்தக் கதிதானா எனக்கு? உன் மனசு என்ன இரும்பா!

அடடே! உபதேசம் செய்யக் கத்துகிட்டாயா? கழுதே!

மறுபடியும், மறுபடியும் ……….
சொன்னா, என்னவாம்! பதில் பேசினே, உதைதான்.
உதைச்சித்தான் பாரேன்.
உதைச்சித்தான், பாரேன் ……….


எழுந்தான் , உதைத்தான் – ஆனால் அவன் தான் வீழ்ந்தான். பொட்டைக்கண்ணி, அந்தக் காலைப் பலமாகப் பிடித்து ஒரு பக்கம் திருப்பிவிட்டாள்.

அதுதான் நடந்த சங்கதி. அவனைச் சிந்திக்க வைத்தது. நெடுநேரம் யோசித்தான் – பலப்பல – புதுப் புது விதமாக யோசனை உதித்தது. புது ஆளானான்.

வேலாயுதத்துக்கு, அந்தச் சங்கதியும், அந்தச சூடசமமும் தெரியாது. அவன் ஆச்சரியப்பட்டான், பரமசாது, ஏன் இப்படி எதிர்த்துப் பேசுகிறான் என்று.


சரி! வாயை மூடுடி, உனக்குத்தான் பேசத்தெரியும்னு எண்ணமா?

பேசண்டி, பேசு. பேயாட்டம் ஆடண்டி ஆடு.

சரி, கிட்டி கழுதே முண்டே .

யாருடி கழுதே!

நீ , தாண்டி நாயே!


கிணற்றங்கரை அமளி! பொட்டைக்கண்ணியின் ஏக சக்ராதிபத்யம், உடைந்தது, செல்லியின் எதிர்ப்பால்.

உடைந்தது மட்டுமல்ல, பொட்டைக்கண்ணிக்கும் புதுப் புது எண்ணம் உதித்தது. அதன் விளைவு தான். புருஷனிடம் அவள், எதிர்த்துப் பேசியது. அதன் பலன் தான், அவள் கணவன் தன் சர்வாதிகாரம் சரியக் கண்டது. அதன் தொடர்ச்சிதான், வேலாயுதம், பழையபடி தோட் டக்காரனை எவ்வளவு கண்டித்தாலும், அவன் பரம சாது வாக இருப்பது இனி நடைபெறாது என்பதைத் தெரிந்து கொண்டது.

வேலாயுதமும், சிந்திக்கலானான், தோட்டக்காரனைப் போலவே, பொட்டைக்கண்ணி, போலவே. அவனும் அவர்களைப் போலவே, முறையையும் இயல்பையும் மாற்றிக்கொண்டான். முன்கோபம் இல்லை.

அதோ பேசுகிறான், கேளுங்கள். “ஏண்டாப்பா,… அடா புடான்னு கூப்பிடுவானேன் ……. துரைசாமி! தோட்டத்துக்குத் தண்ணி பூரா பாய்ச்சியாச்சா?”

“ஆச்சிங்க”

“அப்பொ, வீட்டுக்கு போய்ட்டு, வாப்பா.”


“குழம்பிலே, உப்பு குறைவு குப்பி”

“ஆமாங்க. கவனிக்கலே”

“கொஞ்சம் போடு”

“அதோ மேல்சட்டியிலே இருக்கு பாரு; எடுத்து போட்டுக்கோ. நான் குழந்தைக்கு பால் கொடுக்கறேன்.”

“ஆமாம். நீ இரு. நான் எடுத்துக்கொள்றேன்”


மாறிவிட்டது, சுபாவம்! அளவுக்கு மீறித், தண்ணீர் வந்தால், ஆற்றிலிருந்து, வாய்க்காலில் திருப்பிவிட்டு, வெள்ளத்தின் வேகத்தைக் குறைக்கிறோமல்லவா! உள்ள உணர்ச்சியும் அப்படித்தான். அடக்கியே வைத்திருக்க வைத்திருக்க, எங்கெங்கோ பாயும் – மேயும்; கட்டுக்குக் கொண்டு வந்து, பக்கம் பார்த்துத் திருப்பிக் , கொதிப்பேறாதபடி குறைத்து முறைப்படுத்தினால், மோதுதலும் தாக்குதலும் குறையும். இது, நிகழும் போது தெரிவதில்லை. ஆனால் இந்த ‘ரசாயனம்’ வெற்றிபெற்று, நிலைமை மாறின பிற்கு, நாம் கூறிவிடுகிறோம், சூட்சமத்தைத் தெரிந்து கொள்ளாமல், அவன் நல்லவன், இவன் நல்லவன் என்று. இயல்பு, அவ்விதம், பொதுவான இலக்கணத்துக்கு உட்படுவதில்லை. இடம், காலம், முறை, சம்பவங்கள், பயிற்சி, மற்றவருடன் கொள்ளும் தொடர்பு, ஆகியவைகளாலே, உருவாக்கப்பட்டும், வளர்ந்தும், மாறியும், வேறு உருப்பெற்றும், ஒவ்வொரு விநாடியும், வளருகிறது. அதன் தன்மையை, அறுதியிட்டுக் கூறிவிடமுடியாது – கூறவும் கூடாது.

– அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் – சாது முதலிய 3 சிறுகதைகள், முதல் பதிப்பு: மே 1950, பரிமளம் பதிப்பகம், காஞ்சீபுரம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *