கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: December 28, 2022
பார்வையிட்டோர்: 2,744 
 

(1978ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கல்யாணப் பத்திரிகை, கருமாதிக் கார்டு, கோயில் பிட்நோட்டீஸ் இப்படி எதையாவது அச்சடிக்க வேண்டிய கட்டாயம் உங்களுக்கு ஏற்பட்டுவிட்டது என்றால் நெகிரி செம்பிலானின் எந்த மூலையில் இருந்தாலும் சரி, நீங்கள் சிரம்பானுக்குத்தான் வந்தாக வேண்டும்.

சிரம்பானிலும் கலைவாணி பிரஸ்ஸுக்குத்தான் நீங்கள் போக வேண்டும். அது என்ன, கலைவாணி பிரஸ் ஒன்றுதானா சிரம்பானில் இருக்கிறது என்று கேட்கத் தோன்றலாம். எத்தனையோ உண்டு. ஆனால் கலைவாணி பிரஸ்ஸில் பல வசதிகள் உண்டு.

கல்யாணத் தேதியைச் சொன்னால் போதும். நாள் நட்சத்திரம் இத்யாதி எல்லாம் குறித்து, “நிகழும் மங்களகரமான என்று தொடங்கி, இக்கண் தங்கள் நல்வரவை எதிர்பார்க்கும்” என்பது வரை எல்லாமே அவர்களே தயாரித்து ஒரு மாதிரிப் பத்திகையை உடனே காட்டிவிடுவார்கள். இதெல்லாம் மற்ற பிரஸ்களில் நடக்குமா?

சரி, பஸ்ஸில் வந்து இறங்கி விட்டீர்கள், கலைவாணி பிரஸ்ஸைக் கண்டுபிடிப்பது அப்படியொன்றும் கம்பச்சித்திர மில்லை. என்றாலும் நீங்கள் சிரம்பானுக்குப் புதியவர் என்றால் கொஞ்சம் வழிகாட்ட வேண்டியது அவசியமாகிறது.

நீங்கள் நிற்குமிடத்தில் வடக்குத் தெற்காக ஓடுகிறதே அது லெமன் ஸ்திரீட். அங்கிருந்து கிழக்கு மேற்காகப் போகும் சாலையில் இப்படி அப்படித் திரும்பாமல் நேராக நடந்தால் கையைப் பிடித்துக் கொண்டு போனது போலக் கலைவாணி பிரஸ்ஸுக்குச் சரியாகப் போய்ச் சேர்ந்துவிடுவீர்கள்.

சிரம்பானை இரண்டு கூறாகக் கிழித்துப் போட்ட ஆரவாரத்தில் கிடக்கும் பெர்ச் ரோட்டைக் கவனமாகக் கடக்க வேண்டும். தெற்கு சிங்கப்பூர், வடக்கே கோலாலம்பூர், பினாங்கு இரண்டு பக்கமும் போகின்ற வண்டிகளுக்குத் தப்பினால் தொடர்ந்து முன்னேற வேண்டும்.

‘அச்சாபீஸ் அண்ணாமலைச் செட்டியார்’ என்று 1947-இல் பெயர் பூண்டிருந்தவர்தான் இப்போது ‘பிரஸ் செட்டியார்’ ஆகியிருக்கிறார்.

அந்தக் காலத்து ஹைடல்பேர்க் இரண்டு சிலிண்டர் மெஷின் ஒன்றை வைத்துக் கொண்டு தொழிலைத் தொடங்கியவர் இன்று லைனோ, ஆப் செட், லிதோ என்று தொழில் நவீனமான போது அதனோடு சேர்ந்து பெயரும் நவீனமாகிவிட்டதில் செட்டியாருக்கு நேரடிப் பொறுப்பில்லை.

பேரத்தை முடித்துவிட்டுப் பில் போடும் போது நாசுக்காகச் செட்டியார் இப்படிச் சொல்வார்.

“இந்தத் தையற்காரனையும், பத்தனையும் – நம்ம தமிழர்கள்ல சொல்லறேன், எப்பவும் நம்பவே கூடாது. வேலையைக் கொடுத்திட்டு எப்பப் போனாலும் சரி, இதோ உங்க வேலையைத்தான் செய்யறேன்பாங்க. ஆனா, “ச்சீ”ன்னு போகும் வரை இழுத்தடிப்பாங்க. அந்த லிஸ்டுலே பிரஸ்காரங்களையும் சேர்த்துக்கிறது ஞாயம்தான். ஆனா, நம்ம சமாசாரம் அப்படியில்லை. குறிப்பிட்ட டயத்திற்கு அரை நாள், ஒரு நாள் முந்தி வந்தாலும் வேலை ரெடியா இருக்கும். உங்களுக்கு அலைச்சல் மிச்சம். எங்களுக்குச் சால்ஜாப்பு சொல்ற நேரம் மிச்சம்…”

செட்டியாருக்குக் காசு மட்டுமல்ல, நேரமும் முக்கியம். நன்கொடைக்கென்று நோட்டை நீட்ட வேண்டியது, பெயர், தொகை, கையெழுத்து என்று மூன்று ‘காலம்’ போட்ட நோட்டில் கலைவாணி பிரஸ் பத்து வெள்ளி என்று எழுதிப் பக்கத்தில் இனிஷியலைப் போட்டுவிட்டு கல்லாவிலிருந்து நோட்டை எடுத்துக் கொடுத்து விட்டு, செலவுச் சிட்டையில் குறித்துவிட்டு…., இத்தனையும் கஸ்டமரிடம் பேசிக்கொண்டே அவர் செய்து முடிக்கும்போது நன்கொடை வாங்கியவர்கள் நன்றியை அவர்களே சொல்லிக் கொண்டு புறப்பட வேண்டியது!

சில வேளைகளில் நன்கொடையில் மேலே – கீழே சில சில்லரை மாற்றங்கள் ஏற்படலாம். அதெல்லாம் வருகிறவர்கள் சார்ந்திருக்கும் சங்கமோ, எதுவோ, எந்த அளவுக்கு அவருடைய தொழிலோடு சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதைப் பொறுத்தது.

ஆச்சு, நீங்கள் நடந்து வந்த கிழக்கு மேற்குச் சாலை முடிந்துவிட்டது. உங்கள் முன் கிடப்பது பவுல் ஸ்திரீட், ஒரு காலத்தில் பவுன் ஸ்திரீட்டாகத்தான் இருந்தது என்று நமது செட்டியார் சொல்லக் கேட்டிருக்கிறேன். தமிழர்களின் ஐந்தாறு நகைக் கடைகள், எவர்சில்வர், துணிமணிக் கடைகள் எல்லாம் இதில் உண்டு. இவற்றை வாங்க வழி இல்லையென்றாலும் கவலையில்லை. வட்டிக்குப் பணம்தரும் கிட்டங்கிகளும் பக்கத்திலேயே உண்டு.

ஒரு காலத்தில் இந்தத் தெருவே தமிழருக்குச் சொந்தமானதாம். இதுவும் பிரஸ் செட்டியாரின் வசனம்தான். அவர் வாக்குமூலத்தை நம்பலாம். ஏனென்றால் தடயங்கள் இப்போதும் இருக்கின்றன.

என்னதான் கிழக்கு மேற்குச் சாலை உங்களைக் கையைப் பிடித்துக் கலைவாணி பிரஸ் பக்கம் கூட்டிக்கொண்டு வந்தாலும் பவுல் தெருவைப் பார்த்ததும் கொஞ்சம் குழப்பம் ஏற்படுவதற்குக் காரணம் உண்டு. ஏனென்றால் எல்லா போர்டுகளும் தமிழில் இருக்கும். அதில் என்ன ஆபத்தென்றால் எல்லா போர்டுகளுமே சிரஞ்சீவியாகச் சாயம் மங்கிப் போயிருக்கும். கன்னங் கரேலென்று மரத்தாலான கடை வாசல்களில் காய்ந்துபோன தென்னங் கூந்தலோ, மாவிலைத் தோரணமோ அடுத்தத் திருநாள் வரை தொங்கிக் கொண்டிருக்கும். இதில் கலைவாணி பிரஸைக் கண்டுபிடிப்பது எப்படி?

வாசலில் தெரிகின்ற தலைகளைப் பாருங்கள்.

குளித்த கையோடு திருநீற்றில் “பட்டும் படாமலும் ஈரம் சேர்த்து ரூலர் வைத்துப் போட்டது போல் நேராக மூன்று பட்டைகள்; இரண்டு புருவங்களைத் தொட்டும் தொடாமல் பளிச்சென்று செல்லும் அடிக்கோட்டின் நட்ட நடுவில் ‘காம்பஸ்’ வைத்து வரைந்தது போல் நல்ல வட்டத்தில் ஒரு சந்தனப் பொட்டு; மூன்று கோடுகளில் மேல் கோடு பிரஸ்தாப மனிதரின் உண்மையான நெற்றி எங்கே முடிகிறது என்பதைக் காட்டும் எல்லைக் கோடாகவும் அமைந்திருக்கும். அந்தக் கோடு மட்டும் இல்லாவிட்டால் அவருடைய நெற்றி உச்சந்தலை வரை பரவியது போலிருக்கும்.

மேற்படி நெற்றியழகோடு “பானா” வடிவத்தில் அமைந்த மூன்று மேசைகளில் நடுவில் ஒருவர் உட்கார்ந்திருந்தால் அவர்தான் பிரஸ் செட்டியார். அதுதான் கலைவாணி பிரஸ். வலப்பக்கம் கணக்குப்பிள்ளை, இடப்பக்கம் ஆர்டர் + டிஸ்பேட்ச் கிளார்க். இவர்களும் கூட அழ, பழ, முரு, கரு வகைதான். என்றாலும் வயதிலும் உடையிலும் மூன்று பேரும் மூன்று தலைமுறைகளைப் பிரதிநிதிப்பது போல் இருப்பார்கள்.

“வாங்க தம்பி…”

கொஞ்சம் பொறுங்கள்!

என்ன, செட்டியாரின் குரலா அது? “வாங்க தம்பி” என்பதில் பழைய சுருதியைக் காணோமே…..பட்டையும் பொட்டும் கூட உற்றுப் பார்த்தால் ஒரு மாதிரியாகத் தோன்றுகிறது. மேசை மேல் கிடப்பதையெல்லாம் ஒரு பக்கமாக ஏறக்கட்டி வைத்துவிட்டு….

“டேய் ராஜா, இந்த புரூப்பைக் கொண்டு போய் குடு, ஓடி யாடா…, நம்ம பையனுங்களை நம்பினா…”

“எலே, அங்க என்ன பேசிக்கிட்டு…., அந்தப் பேப்பரை வெட்டிக் கொண்டு போட அவ்வளவு நேரமா? அங்க, சீப் ஆப்பரேட்டர் காத்துக்கிட்டு நிக்கிறார் பார்….. நம்ம பையனுங்கள…”

இப்படி எட்டு மணி நேரமோ, ஓவர் டயமோ, ஒவ்வொரு நிமிஷத்திலேயும் பிரஸ்ஸைத் தன்னுடைய கட்டுப்பாட்டிலேயே வைத்திருப்பார் செட்டியார்.

அப்படிப்பட்டவருக்கு, இன்று….

முந்தி மாதிரி ஏதாவது நடந்துவிட்டதா?

அச்சும் கலரும்தான் கண்ணுக்குத் தெரிகின்றன என்று அவை சம்பந்தப்பட்ட மெஷின்களை மட்டும் நவீனப்படுத்திக் கொண்டிருந்த செட்டியார், கட்டிங் மெஷின் விஷயத்தில் மட்டும் ரொம்ப செட்டாக இருந்தார்.

பழைய மோடல் சைனா கட்டரைத்தான் இன்னும் பயன் படுத்துவதாகக் கேள்வி. அதை இயக்க ஒரு பட்டனை அமுக்கினால் போதும். அப்போது இன்னொரு கையை எங்கே வேண்டு மானாலும் வைத்துக் கொள்ளலாம். அதில் வேலை செய்த “நம்ம” பையன் ஒருவன் கத்தியை இறக்கும் பட்டனை அழுத்திக் கொண்டே சுருங்கிய கடுதாசியை கடுதாசியை நேராக்கக் கையை விட்டிருக்கிறான். கடுதாசியோடு கையும் துண்டாகிவிட்டது.

செட்டியார் ஆடிப்போய்விட்டார். தொழிலாளர் நலனை அப்பழுக்கில்லாமல் பாதுகாக்கும் தொழிலாளர் இலாகா அதிகாரிகள் ஒருவர் பின் ஒருவராக வந்து சட்டத்தைக் காட்டி உலுக்கு உலுக்கென்று உலுக்கிவிட்டார்கள். இரண்டு மூன்று ஆயிரங்கள் உதிர்ந்தன. இது சென்ற ஆண்டு நடந்தது.

அப்படி ஏதாவது நடந்திருந்தால் செட்டியார் இப்படிப் பிள்ளையார் கணக்காய் உட்கார்ந்து கொண்டிருக்கமாட்டார். குதிக்கிற குதியில் அப்பன் குதிருக்குள் இல்லையென்று காட்டிக் கொடுத்துவிடுவார்.

எதிரே யார் நின்று பேசினாலும் சரி. அவர்களுக்கும் ஒரு பிடி மேலே போய்தான் செட்டியார் பேசுவார். பையன்களோடு பேசாதபோது கூட பழக்கதோஷத்தால் “நம்ம பையனுங்கள நம்பினா…” என்று முடித்துவிட்டுப் பின் சடக்கென்று திரும்பி பையன்களைத் தேடுவார். அப்படிப்பட்டவர், மீசையும் கிருதாவும் முட்டிக் கொண்டிருக்கும் ஒரு முப்பது முப்பத்திரண்டு வயது முகத்திடம் இறங்கிப் பேசிக்கொண்டிருக்கும்படி என்னதான் நடந்திருக்கும்?

“செட்டியாரே, எனக்குக்கீழே மூணு பேரை ட்ரெயிண்ட் பண்ணி வச்சிருக்கேன். மூணு பேரும் நம்ப பையனுங்கதான். அதில நடேசன்னு ஒருத்தன். பிரஸ்ல உள்ள அத்தனை வேலையும் அவனுக்கு அத்துப்படி. ஒரு டைப்பை எடுத்துக் கீழே போடுங்க, வர்ற சத்தத்த வைச்சிச் சொல்லுவான் அது எத்தனை பாயிண்டுன்னு. ஆப்செட் மெஷினைக் கொடுங்க, மெஷினுக்கும் பழுதில்லாம, வேலையிலேயும் குறையில்லாம மணிக்கு ஐயாயிரம் காப்பியை அடிச்செறிவான். கொஞ்சம் அவசர வேலைன்னா மாக்சிமம் ஐயாயிரத்திநூறும் அடிப்பான்.”

சிஷ்யனே இப்படியென்றால் குரு எப்படியிருப்பான்? செட்டியாரின் கண்கள் விரிந்து குவிந்தன.

“பையன்களுக்கு ட்ரெய்னிங் குடுக்கிறது அப்படியொன்னும் கஷ்டமில்லைங்க, ஜெர்மன்ல மிஷின் விக்கிறவங்களே எத்தனை பேருக்கு வேணுமானாலும் இலவசமா ட்ரெய்னிங் கொடுத்து அனுப்புறாங்க, நம்ப பையனுங்கள அனுப்ப வேண்டியது, மிஷின்களோடு ஆப்பரேட்டரா திரும்பிடுவாங்க…நாமே நம்ப பையனுங்கள நம்பாட்டி…”

“பின்னே என்னங்க, கல்யாணப் பத்திரிகை, கோயில் பத்திரிகை, நம்மவங்க பொதுக்கூட்ட அறிக்கை இதுகளே உங்கிட்டே நெறைய வருது. அதுக்கு மேல அரசாங்க டெண்டர்கள் வேற எடுத்துக்கிறீங்க. என்னதான் மெஷின் வசதி இருந்தாலும்…”

“இதா பாரு கண்ணன்…”

என்ன, கண்ணனா? ஏழு வருஷத்திற்கு முன் “ஏதாவது” வேலை கேட்டு வந்தனை “நம்ப பையனுங்கள நம்பினா…” என்று சொல்லி விரட்டி அடித்தாரே அந்தக் கண்ணனா இவன்? செட்டியாரைப் பெட்டிப் பாம்பாய் உட்கார வைத்து பிரிண்டிங் டெக்னாலஜி பற்றி அவருக்கே உபதேசம் பண்ணும்படி இவன் எப்படி வளர்ந்தான்? இவனுக்கு முன் செட்டியார் கூனிக் குறுகும்படி என்னதான் நடந்துவிட்டது?

“சரி, சரி, இப்ப நான் ஏதாச்சும் செய்யட்டுங்களா?” என்று எழுந்தான் கண்ணன்.

செட்டியாரின் கண்கள் மறுபடி விரிந்தன. ஆனால் குவியவில்லை.

“என்ன அப்படிப் பார்க்கிறீங்க…”

“ஆங்…வாங்க தம்பி, வாங்க, வாங்க…” என்று தடுமாறியபடி எழுந்து முன்னே போனார் செட்டியார்.

பிரஸ்ஸின் “நம்ம பையனுங்க”ளெல்லாம் ஒவ்வொருவராய் வந்து கண்ணனைச் சூழ்ந்து கொண்டார்கள். கண்ணன் ஒவ்வொருவரோடும் ஏதேதோ கேட்டான். அவர்களும் செட்டியாரை ஒரு கண்ணால் பார்த்தபடியே பதில் கூறினார்கள்.

அவர்களில் ஒருவனை மட்டும் அழைத்துக் கொண்டு ஆப்செட் மெஷினிடம் போனான் கண்ணன். அன்றைய பிரிண்டிங்குக்கு வேண்டிய பிளேட்டுகள் தயாராய் இருந்தன. இரண்டே நிமிடங்களில் லூப்ரி கேஷன் “செக்-அப்பை” முடித்துக் கொண்டு பிளேட்டை எடுத்துப் பொருத்தினான் கண்ணன்.

உடன் இருந்தவன் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். கண்ணன் இடையிடையே அவனையும் இதைச் செய் அதைச் செய் என்று இயக்கிக் கொண்டிருந்தான்.

கலர், ‘காப்பி’ விவரங்களைச் செட்டியாரிடம் கேட்டுக் கொண்டான். அடுத்த நிமிடம் ஆப்செட் மெஷின் ஓடியது. முதல் ‘காப்பி’யை எடுத்துக் கொண்டு மெஷினை நிறுத்தினான். கலர் ‘பார்டர்ஸ்பேஸ்’ இவற்றைச் சரிபார்த்துக் கொண்டு மீண்டும் மெஷினை ஓட்டினான். அடுத்து வந்த முதல் ‘காப்பி’ சரியாக இருந்தது. அதைச் செட்டியாரிடம் காண்பித்தான்.

ஆச்சரியத்தோடு செட்டியார் ‘ஓ.கே.’ கொடுத்தார். பிரதிகளை எண்ணும் கல்குலேட்டரை செட் பண்ணிவிட்டு மெஷினை ஓட்டினான்.

மெஷின் ஓடும்போது எதையெதையெல்லாம் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று உதவிப் பையனிடம் சொல்லிவிட்டு, மற்றொரு சிறிய ஹெடல்பேர்க் மெஷினில் ஒரு கல்யாணக் கார்டை அச்சடிக்கும் வேலையைத் தொடக்கி வைத்து அதையும் ஒரு பையனிடம் விட்டு விட்டுச் செட்டியாரை நிமிர்ந்து பார்த்தான் கண்ணன்.

செட்டியாரின் முகம் விவரிக்கத் தக்கதாய் இல்லை.

‘பயப்படாதீர்கள்’ என்பதுபோல் கையைக் காட்டி விட்டு செட்டியாரைக் கூட்டிக் கொண்டு வெளியே வந்தான்.

“செட்டியாரே, பிரிண்டிங் தொழில் நம்மவங்களுக்குக் கைவந்த கலை. இந்தியாவிலே சிவகாசி இருக்குங்களே, அங்கே இது குடிசைத் தொழில். வெயில்ல காயப்போட்டு புளோக் செய்யுற வித்தைகள் தெருவுக்குத் தெரு பார்க்கலாம். இப்ப மலேசியாவில கலர் பிரிண்டிங் எக்ஸ்பேர்ட்னு மூணு பேரைச் சொல்லுவாங்க. அதில ரெண்டு பேர் சிவகாசியில பயிற்சி பெற்றவங்க. ஒருத்தர் ஸட்ரெயிட்ஸ் டைம்சில ஆயிரத்தெண்ணூறு வெள்ளி சம்பளத்தில் இருக்கார். இன்னொருத்தர் யார் தெரியுங்களா?

திடீரென்று ஆப்செட் மெஷின் நின்றுவிட்டது.

செட்டியாருக்கு நாடியே நின்றுவிட்டது போலாகிவிட்டது. விருட்டென எழுந்து கண்ணாடி வழியாய்ப் பார்த்தார். கண்ணனும் எழுந்து பார்த்தான்.

உதவி ஆப்பரேட்டர் தியாகு மெஷின் உருளைகளுக் கிடையில் சிக்கிக் கொண்ட ஒரு கடுதாசியை உருளையை மெதுவாக உருட்டிவாறு வெளியே எடுத்துக் கொண்டிருந்தான். மீண்டும் வெற்றிகரமாக அவனே மெஷினை இயக்கியபோது கட்டைவிரலை உயர்த்திக் காட்டி அவனைப் பாராட்டினான் கண்ணன்.

செட்டியாரின் முகம் கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிந்து கொண்டே வந்தது.

“நேத்து சாயங்காலம் வேலை முடிஞ்சி போறப்போ, அந்தலாய் பய வந்து போட்டானே ஒரு குண்டு, மனுசனுக்குக் கர்ப்பம் கலங்கிப் போயிடுச்சிப் போ…,”

இதைச் சொல்லும்போது செட்டியாரின் முகம் கருமேகத்துள் புகுந்து வந்த நிலவு போல திடீரென இருண்டுப் பின் தெளிந்தது.

செட்டியாரின் மண்டையில் ஓங்கியடித்தாற்போல் லாய் திடுதிடுப்பென்று வேலையை விட்டு விலகிக் கொண்டான்.

“அது சரி கண்ணன், திடீர்னு வேலையை விட்டு விலகி என் பிஸினஸையே முறிக்கப் பாத்தான்னு சீப் ஆப்ரேட்டர் லாய் மேல நாம நடவடிக்கை எடுக்க முடியாதா?”

“முடியாதுங்க செட்டியார். ஒரு மாதச் சம்பளத்தை விட்டு கொடுத்திட்டு ஒரு நாள் நோட்டீஸில வேலைய விட்டுட்டுப் போக எந்தத் தொழிலாளிக்கும் உரிமை இருக்கு. சட்டப்படி லாய் செய்தது சரி. ஆனால் லட்சக்கணக்கான வெள்ளி முதல் போட்ட தொழிலையும், உங்க தொழில் நாணயத்தையும், ஏன் உங்க வாழ்க்கையையே மற்ற யாரையும் நம்பாம ஒருத்தன் தோள் மேலேயே ஏற்றி வச்சிட்டு இருந்தீங்களே, நீங்க செஞ்சதுதான்…’

செட்டியாரின் முகம் பரிதாபமாய் மாறிவிட்டதால்

கண்ணன் வாக்கியத்தை முடிக்கவில்லை.

“சொந்தமா தொழில் தொடங்க நான் வேலையை விட்டுட்டு வந்த மாதிரி அவனும் போயிருக்கலாம்…”

இப்போதுதான் செட்டியாருக்கு ஒவ்வொன்றாகப் புரிந்து கொண்டு வந்தது போல, திறந்த வாயை மூடாமல் கண்ணன் சொல் வதை ஆங்….., ஆங்……ஙென்று கேட்டுக் கொண்டிருந்தார்.

“மெஷின்களுக்கு ஆர்டர் கொடுத்திட்டேன் வந்து சேர மூணு மாசமாகும். அதுக்கிடையில அடிப்படை வேலைகளெல்லாம் பார்க்கணும்…”

“தம்பி, நம்ப பையனுங்கள்ல ஒருத்தனை ட்ரெய்னிங்குக்கு அனுப்புவமே…”

‘அப்படி வாங்க வழிக்கு’ என்று நினைத்துக் கொண்டானோ என்னவோ, கண்ணன் சிரித்துக் கொண்டான்.

“ஏற்கெனவே நான் ரெண்டு பையனுங்கள அனுப்பிட்டேன்”

“இந்தப் பையனுங்களுக்கு பீஸ் எதுவும் கட்டணும்னாலும் கட்டிப்புடுவம்..” செட்டியார் குரலில் உறுதியும் துடிப்பும் முறுக்கிக் கொண்டு எழுந்தன.

“அப்படியொன்னும் இல்லைங்க, போக்குவரத்து மட்டும்தான் நம்முடையது”

திடீரென்று மீண்டும் ஆப்செட் மெஷின் நின்றுவிட்டது.

செட்டியார் விருட்டென எழுந்தார். கண்ணன் எழவில்லை.

கண்ணாடிக் கதவைத் திறந்துகொண்டு தியாகு புன்னகையோடு எட்டிப் பார்த்தான்.

“வாப்பா சீப் ஆப்ரேட்டர் தியாகு…” என்றான் கண்ணன்.

“என்னப்பா முழிக்கிற, இனிமே நீதான் சீப் ஆப்ரேட்டர், அடுத்த வாரமே ஜெர்மனுக்கு நீ பயிற்சிக்குப் போகணும்… தெரியுமா? நம்ப பையனுங்கள நம்…”

செட்டியார் நாக்கைக் கடித்துக் கொண்டார்.

வழக்கமான அந்தக் கடைசி முடிச்சு அவர் கண்டத்திற்குள்ளேயே அடங்கிப் போய்விட்டது.

“அந்தப் பஞ்சாங்கத்தை எடுத்துப் போடுங்க…”

அப்பாடா, செட்டியார் குரலில் பழைய சுருதி ஏறிவிட்டது!

– 1978 இல் டாக்டர் இரா.தண்டாயுதம் மலாயாப்பல்கலைக் கழகத்தில் நடத்திய தமிழ் மாணவர்களுக்கிடையிலான சிறுகதைப் போட்டியில் முதல்நிலை பெற்றது.

– கம்பி மேல் நடக்கிறார்கள், முதற் பதிப்பு: 2006,சிவா எண்டர்பிரைஸ், கோலாலம்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *