சல்யூட்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 6,043 
 

நான் என் வண்டியை நிறுத்திவிட்டுத் திரும்ப, அவன் எப்போதும்போல் என்னை நெருங்கி, விறைப்பாய் ஒரு சல்யூட் வைத்தான்.

காரணமில்லாத அனிச்சையாய் என் தலை கவிழ்ந்துகொண்டது. இனம்புரியாத குற்றவுணர்ச்சி மனதினுள் நிரம்ப, கொஞ்சமும் நிமிர்ந்து பார்க்காமல் விறுவிறுவென்று உள்ளே நடந்தேன்.

இந்த ஹோட்டலில் சாப்பிடத் துவங்கிய நாள்முதலாகவே, இது அன்றாட நடவடிக்கையாகிவிட்டது – வண்டி நிறுத்துமிடத்தில் அந்த அவன் எனக்கு வணக்கம் போடுவதும், பதிலுக்குக் காசு எதிர்பார்ப்பதும், அதைத் தரமுடியாது என்று நான் பிடிவாதமாயிருப்பதும் !

இத்தனைக்கும், இந்த ஹோட்டலில் வண்டி நிறுத்துவதற்குக் கட்டணம் ஏதும் கிடையாது – அதைத் தெளிவாக வாசல் பலகையில் எழுதிப்போட்டிருக்கிறார்கள். என்றாலும், இந்த ஆள் எல்லோரிடமும் வணக்கம் போட்டுக் காசு வசூலித்துக்கொண்டிருக்கிறான் ! அநேகமாய், நான் ஒருவன்தான் அவனுக்குக் காசு தராமல் புரட்சி செய்துகொண்டிருப்பது.

அது புரட்சியா, அல்லது வீம்பா, அல்லது கஞ்சத்தனமா, அல்லது ஏழையை அலட்சியப்படுத்தும் பணக்காரத் திமிரா என்றெல்லாம் எனக்குத் தெரியாது – வெறும் சல்யூட்டுக்காக அவனுக்குக் காசு தரவேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை. அவ்வளவே.

பொதுவாக, இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கான இடங்களில், அதற்கென்றே சில பணியாளர்களோ, ஆர்வலர்களோ இருப்பது வழக்கம்தான். ஆனால், அவர்கள் இவனைப்போல் சும்மா நின்றிருக்கமாட்டார்கள் – நீளமாய்த் தொடரும் வரிசையில், நமது வண்டியை நிறுத்துவதற்கான வெற்றிடங்கள் எங்குள்ளன என்று சரியாக துப்புத் தருவார்கள், நாம் வண்டியை நிறுத்த முயற்சி செய்யும்போது, பக்கத்திலிருக்கும் வாகனங்களை நகர்த்தி, நமக்கு வழிசெய்துதருவார்கள், மீண்டும் வெளியே எடுக்கும்போதும் இப்படி உதவுவார்கள்.

இப்படிச் செய்கிறவர்களுக்கெல்லாம், மறு பேச்சில்லாமல் (அதுவும் தாராளமாகவே) காசு கொடுக்கிற பழக்கம் எனக்கு உண்டு – பெருநகரங்களில் இதுபோன்ற சிறு உதவிகளும், ஞாலத்தின் மாணப் பெரியவைதான் !

ஆனால், இந்த ஆள், இப்படி எந்த உதவியும் எனக்குச் செய்வதில்லை – நானாக இடம் தேடி வண்டியை நிறுத்துகிறேன், வரிசை மிகவும் நெருக்கமாய் அடர்ந்திருக்கும்போது, கையில், காலில் பிற வாகனங்களின் கம்பிகளும், தூசும் சிராய்க்க, நானாகவே சிரமப்பட்டு வண்டியை உள்நுழைக்கிறேன், வெளியிலெடுக்கிறேன்.

வண்டியை நிறுத்திய மறுகணம், எப்படிதான் மூக்கில் வியர்க்கிறதோ, இவன் வந்து சல்யூட் அடிக்கிறான் – அதேபோல், வண்டியை வெளியிலெடுக்கும்போதும், எங்கிருந்தோ சட்டென்று பிரத்யட்சமாகி, இன்னொரு சல்யூட் வைக்கிறான்.

இந்த இரண்டு சல்யூட்களுக்காக, நான் இவனுக்குக் காசு தரவேண்டுமா ? இது நல்ல கதையாய் இருக்கிறதே !

பட்டணத்தில் இதுபோல் நோகாமல் நோன்பு கும்பிடுகிறவர்கள் அதிகமாகிவிட்டார்கள். போக்குவரத்து சிக்னல்களில் கையேந்துகிறவர்களுக்கும், இவனைப்போன்றவர்களுக்கும் என்ன வித்தியாசம் ?

– இப்படி மடக்கிப் பேசினாலும், இந்த விஷயத்தில் எனக்கொரு சிறிய குற்றவுணர்ச்சியும் இருக்கிறதுதான். அதற்குக் காரணம் – அந்த அவனின் தோற்றம்.

அவனுடைய உடம்பில் எந்தக் குறைபாடும் இருப்பதாகத் தோன்றவில்லை. அவன் அணிந்திருக்கும் பச்சை ராணுவ உடை, பல வருடத் துவைத்தல்களால் நிறம் மங்கியிருக்கிறது. தலையில், அந்த உடைக்குப் பொருத்தமில்லாமல் ஒரு நீள் சதுரத் தொப்பி, கம்பீரமான பெரிய மீசை, ஆனால், அதற்கு நேரெதிராக, முகத்தில் படர்ந்திருக்கும் பரிதாப பாவனை, கெஞ்சல்.

யார் இவன் ? ஏன் இப்படி கௌரவப் பிச்சை எடுக்கிறான் – இந்தக் கேள்விகள்தான் சில மாதங்களாய் என்னை என்னவோ செய்துகொண்டிருக்கின்றன.

ஒருவேளை, ஓய்வு பெற்ற ராணுவச் சிப்பாயாக இருப்பானோ ? அப்படியானால் அவனுக்குப் பென்ஷனெல்லாம் வருமே, அதை வைத்துக் குடும்பத்தைக் காப்பாற்றமுடியாதா ? ஏன் இப்படிக் கையேந்தவேண்டும் ?

என்ன காரணமோ, இப்படிப் பரிதாபமாய்க் கையேந்துகிறான். அவனுக்குக் காசு போட்டுத்தொலைப்பதில் எனக்கென்ன நஷ்டம் ? மாதம் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கிறவன், இந்த ஒற்றை ரூபாயிலா சொத்தைத் தொலைத்துவிடப்போகிறேன் ?

இப்படி ஒரு மனது யோசிக்கையில், இன்னொரு பக்கம், ஏன் அவனுக்குக் காசு தரவேண்டும் என்ற நியாயமான கேள்வியும் இருக்கிறது. கையும், காலும் நன்றாகதானே இருக்கிறது ? உழைத்துப் பிழைக்கக்கூடாதா ? ரொம்ப தூரம் வேண்டாம், என் வண்டியைச் சரியாய் நிறுத்த உதவினால், நானே முன்வந்து காசு தரமாட்டேனா ? ஏன் இப்படி அநாவசியமாய் வெற்று சல்யூட்டில் காசு சேர்க்க நினைக்கவேண்டும் ?

இப்படி இரண்டு பக்கமும் நியாயமிருப்பதாக வாதிடுகிற புத்தியின் கேள்விகளால்தான், அவனைத் தவிர்க்கவும் முடியாமல், ஆதரிக்கவும் மனமில்லாமல் தடுமாறுகிறேன்.

பல நாள்கள், வண்டியை வெளியிலெடுக்கும்போது, அவனுடைய நேர்த்தியான சல்யூட்டில் தெறிக்கும் நேர்மையான மரியாதையைப் பார்க்கும்போது, அவனுக்குக் காசு தந்துவிடவேண்டும் என்று தோன்றும். ஆனால், அந்தக் குறுகுறுப்பை மறுத்து, வேண்டுமென்றே பைக்கை வேகமாய் உதைத்துக் கிளப்பி, வெளியேறிவிடுகிறேன்.

சிறிது தூரம் சாலையில் பயணித்தபின், திடீரென்று மனம் சுருங்கிப்போகும். பாவம் ! இல்லாதவன், கேட்கிறான். இருப்பவன், கொடுப்பதுதானே நியாயம் ? – இப்படி நினைக்கையில், அவனுடைய ஒற்றை ரூபாயை நான் திருடிக்கொண்டுவிட்டதுபோல் கூசிப்போகிறேன்.

ஆனால், அந்த ஒரு ரூபாய் சில்லறையை அவனுக்கு ‘சும்மா’க் கொடுத்துவிடவும் நான் விரும்பவில்லை. அதுதான் பிரச்சனை. அதற்குரிய எதையும் அவன் எனக்குச் செய்துவிடவில்லை என்று இன்னொரு பக்கம் உறுத்திக்கொண்டேயிருக்கிறது. ஏற்கெனவே சோம்பேறிகளால் நிறைந்திருக்கிற நம் தேசத்தில், வெறும் சல்யூட்களுக்குக் காசா ? அப்படிக் கொடுத்து அவனை ஊக்குவிப்பது நியாயம்தானா ?

அப்படியானால், நான் அவனுடைய வணக்கத்தையும், மரியாதையையும் ஒரு மறைமுக கர்வத்துடன் ஏற்றுக்கொள்வதுமட்டும் நியாயத்தில் சேர்த்தியா ?

பதிலில்லாத இந்தத் தொடர் கேள்விகள் என்னைக் குத்திக் கிழித்துக்கொண்டிருக்க, அப்போதிலிருந்து, அவனைப் பார்க்கும்போதெல்லாம், அவனுடைய சல்யூட்டை ஏற்கும்போதெல்லாம், என் தலை தானாய்க் கவிழ்ந்துகொள்கிறது. பர்ஸை எடுப்பதா, வேண்டாமா என்று மனம் ஊசலாடித் தளர்கிறது.

ooOoo

பல மாதங்களாய்த் தொடர்ந்துகொண்டிருந்த இந்தப் பிரச்சனைக்கு, சென்ற வாரத்தின் ஒரு உற்சாகமான காலைப் பொழுதில் தீர்வு கண்டேன் – நான் எப்போதும் நினைத்துக் குழம்பிக்கொண்டிருந்த கணக்கை நேர் செய்துவிடுகிற, எந்தவிதத்திலும் எனது குற்றவுணர்ச்சியை அதிகப்படுத்திவிடாத, நியாயவுணர்ச்சியை பாதித்துவிடாத, இரு பக்கமும் சம அளவு நீதி தரும் ஒரு தீர்வு !

பெரிதாய் ஒன்றுமில்லை – இப்போதெல்லாம், அவன் எனக்கு சல்யூட் வைக்கும்போது, நானும் அதே அளவு மரியாதையுடன், விறைப்பாக அவனுக்கொரு பதில் சல்யூட் வைத்துவிடுகிறேன் !

நன்றி :கல்கி

– என். சொக்கன் [nchokkan@gmail.com] (நவம்பர் 2007)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *