நேற்றைய மனிதர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 7, 2016
பார்வையிட்டோர்: 8,457 
 

லண்டன் 2002

நேரம் இரவு நடுச்சாமத்துக்கு மேலாகிவிட்டது என்று படுக்கைக்குப் பக்கத்து மேசையில் வைத்திருக்கும் மணிக்கூடு சொல்கிறது. வேதநாயகம் தூக்கம் வராமற் தவித்துக்கொண்டிருந்தார்.அந்தப்பக்கம் இந்தப் பக்கம் என்று புரண்டுபடுத்தாலும் அவரின் மனதில் அலைபாயும் உணர்வுகளைத் தடுக்க அவரால் முடியவில்லை.

மனதிலுள்ள பாரம் தொண்டையில் அடைபட்டு மூச்சுவிடக் கஷ்டமானதொரு உணர்வு. அவருக்கு வயது அறுபதாகிறது. வாழ்வின் மத்தியகாலத்தில் ஓரளவு மனத்திருப்தியுடன் வாழ்க்கையைக் கொண்டு நடத்தலாம் என்று கற்பனை செய்தவருக்கு,அவராற் தடுக்க முடியாத பல மாற்றங்கள் அவரைச் சுற்றி நடப்பதால்,ஏதோ ஒரு இனம் தெரியாத துக்கம் தொண்டையையடைக்கிறது.

ஓரு நல்ல,பொறுப்புள்ள, குடும்பத் தலைவனாக அவர் வாழ்ந்ததாக நினைத்துக்கொண்டிருந்தவருக்குக் கடந்த சில மாதங்களாக அவரின் வாழ்க்கையிற் சந்திக்கும் நிகழ்ச்சிகள், நான் நடந்து வந்த பாதை சரியானதுதானா என்று யோசிக்கப் பண்ணுகிறது.

அவர் இன்னொரு தரம் புரண்டுபடுத்தார். தூரத்தில் ட்ரெயின் ஓடுவது கேட்கிறது. அவர்களின் வீட்டுக்கு ஓரளவு தூரத்தில் லண்டன் பாதாள ட்ரெயின் ஒன்று ஓடுகிறது. நடுச்சாமம் தாண்டிவிட்டதால் அது அன்றைய கடைசி ட்ரெயினாகவிருக்கலாம்.வாழ்க்கையும் ஓடிக்கொண்டிருக்கிறது. போகும் வழியில் அடிக்கடி சில மாற்றங்கள் வந்துகொண்டிருக்கின்றன.

லண்டன் றெஸ்ட்டோரண்டுகளில் வேலை செய்பவர்கள், பாரிலும் கிளப்பிலும் குடித்து விட்டுத் தள்ளாடுபவர்கள், சினிமா,சங்கீத, நாடகக் கொட்டகைகளால் வரும் கலா ரசிகர்கள்,மற்றவர்களைக் கொள்ளையடிக்கும் திருடர்கள், உடலை விற்றுப் பிழைக்கும் விபச்சாரிகள், வேலையற்றோர், வீடற்றோர், என்று பல தரப்பட்ட மனிதக் கூட்டங்களால் அந்த ட்ரெயின் நிறைந்திருக்கும். முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் அவர் லண்டன் வந்தகாலத்தில், பார்ட் டைம் வேலை செய்து விட்டுக் கடைசி ட்ரெயின் எடுத்துக்கொண்டகாலம் ஞாபகத்தில் தட்டுப்பட்டு மறைகிறது. அப்போது அவர் தனது சகபிராணிகளை ஏறிட்டும் பார்க்கமுடியாத களைப்பில் வந்து தூங்கி வழிந்துகொண்டிருப்பார்.இன்று, தனது வாழ்க்கைப் பிரயாணத்தில் அருகில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளாதவராகத் தூங்கி வழிமுடியாது.;

அந்த ட்ரெயின் ஓரு பிரமாண்டமான நகரத்தின் பன்முகமான மக்களின் வாழ்க்கை நிலையைப் பிரதிநிதித்துவப் படுத்துவதை அந்தக் காலத்தில் அவர் உணரவில்லை. இன்று அவரின் வயதும் வாழ்க்கையனுபவங்களும் பழைய காட்சிகளைப் புதியவடிவில் ஆராய முனைகிறது. தனிப்பட்ட ஒரு தீவில் இதுவரை வாழ்ந்ததாகவும் இப்போது பல காரணங்களால் ஒரு பெரிய சமுதாய வட்டத்துக்குள் நுழைய வேண்டிய அவசியம் இருப்பதுபோலவும் அவர் உணர்ந்திருந்தாh.

‘எனது சதாரண வாழ்க்கையின், சீரான குடும்பத்தின்,பிரதிபலிப்பை எப்படிக் கணிப்பது?’

பட்டங்கள் ஒன்றிரண்டைப் பெற்று,ஒரு பெரிய உத்தியோகத்திலிருந்த வேதநாயகம் தன்னைத்தானே கேட்டுக்கொண்டார்.

அவர் தானாகக் கேட்கவில்லை. நேற்று வந்திருந்த நண்பர் குமாரவேல் அந்தக் கேள்வியை இவர் மனதில் விதைத்துவிட்டுப் போயிருந்தார்.

குமாரவேலும் வேதநாயகமும் கொழும்பில் வாழ்ந்தபோது சனேகிதர்கள். குமாரவேல் மிகவும் ஆசாரங்களைக் கடைப்பிடிக்கும் இறுக்கமான தமிழ்க் குடும்பங்களிலிருந்து வந்தவர். வேதநாயகத்தின் குடும்பம் அவ்வளவு பரவாயில்லை.அவரின் தாத்தா காலத்திலேயே கொழும்பு சீவியத்தில் ஊறிப்போன அவர் குடும்பம் ஓரளவுக்குக் குமாரவேலுவின் குடும்பத்தை விட வித்தியானமாகவிருந்தது. கொழும்பில் பலகலாச்சார மக்களுடன் பழகுபவர்களாக வாழ்ந்தார்கள்.

வேதநாயகத்தின் ஒன்றுவிட்ட சகோதரன்,பல்கலைக்கழகத்தில் தன்னுடன் படித்த சிங்களப் பெண்ணைத் திருமணம் கொண்டபோது குடும்பத்தில ஓரிருவருக்கு அது பிடிக்காமல் முணுமுணுத்துக் கொண்டாலும், காலகட்டத்தில அதைச் சமாளித்துப் பழகி விட்டார்கள். வேதநாயகத்தின் மைத்துனன் லண்டனுக்குப் படிக்கவந்து, தன்னுடன் படித்த ஆங்கிலப்பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு இலங்கை திரும்பியிருந்தான். அந்தப் பெண். ஐசவ சமயத்தில் பற்றுள்ளவளாகவும், மரக்கறி சாப்பிடுபவளாவும் இருந்து வேதநாயகத்தார் குடும்பத்தை அசத்தி விட்டாள்;,ஆங்கிலப் பெண்களில் வைத்திருக்கும் அபிப்பிராயத்தை ஒரேயடியாக மாற்றி விட்டாள்.

இதெல்லாம், அவர் இளைஞனாக வளர்ந்துகொண்டிருந்தபோது நடந்த விடயங்கள்.

இலங்கையில் அரசியல் மாற்றங்கள் வந்தபோது பாதிக்கப் பட்ட இளம் தமிழ்த் தலைமுறையினர். திருமதி பண்டாரநாயக்கா ஆட்சிக்கு வந்து, சிங்களத் தேசியவாதிகளைத்; திருப்திப் படுத்த,சிங்களத்தைப் பலவழிகளிலும் ஆளுமையான மொழியாக்கியபோது, ஆங்கிலம் படித்த தமிழ் சிங்கள வர்க்கமும், தமிழில் மட்டும் உயர்கல்வி படித்தவர்களும் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டபோது,ஆங்கிலம் படித்த சிங்கள, தமிழ் உயர் வர்க்கம் இலங்கையை விட்டு இங்கிலாந்துக்கும் அமெரிக்காவும் ஓடியபோது,ஆங்கிலம் படித்த குமாரவேலுவும், வேதநாயத்தாரும் லண்டனுக்கு,தங்களின் மேற்படிப்பைக் காரணம் காட்டி விரைந்து வந்தார்கள்.

இனவேறுபாடு இலங்கையில் மட்டுமல்ல,இங்கிலாந்திலும் படுமோசமாகவிருக்கிறது என்ற கசப்பான உண்மையுடன் வாழ்க்கைப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள்.
வாழ்க்கையில் எத்தனை எதிர்பார்ப்புக்கள்,ஏமாற்றங்கள்,திருப்பங்கள்,கஷ்டங்கள்??
ஒரு சந்தோசமான நிலைக்கு வாழ்க்கையைக் கொண்டுவர அவரின் தலைமுறை பல திருப்பங்களைச் சந்தித்தது.

இங்கிலாந்தின் ஆங்கிலேய வர்க்கத்தின் ஆதிக்க மேலாண்மை பல வழிகளாலும்,நிறபேதத்தைக் காட்டாமற் காட்டித் தனிமனித கவுரவத்தைச் சோதனை செய்ததை இன்றைய தலைமுறை ஒருநாளும் புரிந்து கொள்ள முடியாது.அதையெல்லாம் நின்று பிடிக்க உதவிய மன திடம்,’ நான் ஒரு தலைவணங்காத்(?) தமிழன்’,என்ற பிடிவாதம் என்று குமாரவேல் சொல்லிக் கொள்வார்.ஆனால் வாழ்க்கையின் அனுபவங்கள் எதையும் தாங்கும் மனசக்தியைத் தரும் என்பது வேதநாயகத்தாரின் கோட்பாடு.

அக்காலகட்டத்தில், பிரிட்டனிற் படிப்பு முடித்த தமிழ் இளைஞர்கள் இலங்கையில் நடக்கும் அரசியற் பிரச்சினைகளால் இலங்கைக்குத் திரும்பிப்போக முடியாதபடியால் லண்டனில்,ஆங்கிலேய,ஐரிஷ்,ஸ்கொட்டிஷ்,பெண்களை பிரிட்டிஷ் விசா எடுப்பதற்காகத்; திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களிற் பெரும்பான்மையினர்,சில கால கட்டத்தின்பின்,(பிரித்தானிய விசா கிடைத்ததும்) லண்டனிற் திருமணம் செய்த பெண்களை விவாகரத்துச் செய்து விட்டு இலங்கையிற்போய்க் கொழுத்த சீதனத்துடன் தங்கள் சாதிப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டார்கள். அது முதலாவது தலைமுறை இலங்கைத் தமிழர் சிலரின் திருமணவரலாறு.

இன்று, பிரிட்டனிற் பிறந்து வளர்ந்த சில தமிழ்க்குழந்தைகள் தங்களுக்குப் பிடித்த வேற்று இனத்தவரைச் செய்யும்போது குமாரவேல் போன்றவர்களாற் தாங்கமுடியாதிருக்கிறது.

‘வேதா, நாங்கள் என்னவென்று எங்கள் குழந்தைகளை எங்கள் கலாச்சாரத்திலிருந்து நழுவ விட்டம்’ பெருமூச்சுடன் கேட்டார் குமாரவேல்.அவரின் மகள் தன்னுடன் படித்த ‘ஸொராஷ்ட்;ரிய’சமயத்தைச் சேர்ந்த ஒரு வாலிபனைச் செய்யப் போகிறாள். அந்தச் சமயத்தின் அடி நுனி தெரியாதவர் குமாரவேல்;, அவர் ஒரு சைவவேளாளன்!; தங்கள் தெருவால் இன்னுமொரு சாதிக்காரர்களைப் (ஒதுக்கப் பட்ட) போகவிடாத தடித்த சாதியமைப்பிலிருந்த வந்தவர்.இன்று தனக்குப் புரியாத ஒரு வேற்றுச்சமயத்தைச் சேர்ந்த ‘ஸொராஸ்டரி;யனை’ மகள் திருமணம் செய்துகொள்ளப் போவதை அவராற் தாங்கமுடியாதிருக்கிறது.

ஓரிரு வருடங்களுக்கு முன், அவர்களின் சினேகிதனின் மகன் ஒருத்தன் மேற்கிந்திய தீவைச்சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்தபோது, பழைய ஆசாரமும், இனவெறியும் பிடித்த ஒருசில தமிழர் அந்தக் கல்யாணத்தை அரைகுறையாக ஆமோதித்தனர்.ஒரு வெள்ளைக் காரனைச் செய்தாலும் பரவாயில்லை. ஓரு ‘காப்பிலியை'(அதுதான் பெரும்பாலான தமிழர்கள் கறுப்பு இனத்தவர்களுக்கு வைத்திருக்கும் மிகவும் தாழ்த்தப்பட்ட பெயர்!-அமெரிக்காவில் கறுப்பு மக்களை ‘நீக்ரோ’என்று சொல்வது தடைப்பட்டிருக்கிறது) ஏற்றுக் கொள்வதா?

ஆனால் அந்தப் பெண்ணைச் செய்து கொண்ட தமிழ் வாலிபன்,தாய்தகப்பனோ,சொந்தக்காரரோ,அந்தப் பெண்ணைச் செய்ய வேண்டாம் என்று சொன்ன வார்த்தைகளை ஏற்றுக் கொள்ளவில்லை.அவளைச் செய்தால், தான் தற்கொலை செய்யப் போவதாகத் தாய் மிரட்டிப் பார்த்தாள். அவன் தாயின் சம்மதத்தைப் பெறச் சில வருடங்கள் காத்திருந்தான்.

அந்தப் பெண் கிம்மர்லி என்ற அழகான பெயருடைய அழகான மேற்கிந்தியப் பெண். அவனுடன் ஐந்து வயதிலிருந்து ஒன்றாகப் படித்தவள். இளவயதில்( 5-11 வயது வரை) நோஞ்சானாக இருந்தவனைப் பாடசாலை’வில்லன்’களுடன் போராடிக் காப்பாற்றியவள். அதற்குப் பிரதியுபகாரமாக அவன் அவளுக்குக் கணக்குச் சொல்லிக் கொடுத்து உதவினான். ஓன்றும் ஒன்றும் இரண்டு என்று தொடங்கிய உறவில்,காதல் தன்பாட்டுக்குச் சமமாக வந்திருக்கலாம்,(அது அவர்கள் சந்தித்துக் கொண்ட ஐந்து வயதில் நடந்திருக்கலாம்!).

இருவரும் ஒன்றாகப் படித்தார்கள், வளர்ந்தார்கள், பல்கலைக்கழகம் சென்றார்கள்.பாரிஸ்டர்களாகப் பட்டம் பெற்றார்கள். கல்யாணத்திற்காகப் பலவருடங்கள் அவனுடைய தாயின் சம்மதத்துக்காக் காத்திருந்தார்கள்.இன்று லண்டனே மெச்சும்படி ஒரு பிரசித்தமான சட்டத்துறை வல்லுனர்களாக வாழ்கிறார்கள்.

அக்கால கட்டத்தில்,’தமிழ் என்மூச்சு,தமிழ் என் பேச்சு தமிழ் எனது வாழ்க்கை’ என்று தம்பட்டம் அடித்துக் கொண்ட ஒரு தமிழ்ப் பிரமுகரின் குழந்தைகள் மூவரும் வெவ்வேறு இனத்தில் திருமணம் செய்தபோது அவரது தமிழ் பற்றிய ஆவேசப் பேச்சு அடங்கி விட்டது.அவரின் மூத்தமகள் ஆங்கிலேயனைத் திருமணம் செய்தாள்.இரண்டாவது மகன் இஸ்லாமியப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு தாய் தகப்பன் அவனுக்குச் சிவனின் ஞாபகமாக வைத்த அகிலன் என்ற பெயரை,இஸ்லாம் மதத்திற்கு மாறியதும் அஹமட் என்று மாற்றிக்கொண்டான்.மூன்றாவது மகள் ஒரு யூதனைச் செய்துகொண்டாள். அவன் பாலஸ்தீன மக்களின் உரிமைக்கான முற்போக்குக் கூட்டங்களுடன் லண்டனில் பிரசாரம் செய்பவன்.அவர், யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்கள் தமிழ்த் தேசியத்தால் விரட்டியடித்ததை நியாயப் படுத்தியவர். மூன்று குழந்தைகளும் முக்கோண திசைகளில் சென்றபின்,அவர்; தமிழ் அரசியலிலிருந்து அஞ்ஞாத வாசம் எடுத்துக் கொண்டாh.

‘எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஒரினம்'(??) என்ற தத்துவத்தின் அடிப்படையிலான பிரித்தானிய கல்வி படித்த இளம் தலைமுறை தங்களுக்குப் பிடித்த வாழ்க்கைத் துணையைத் தேடிக் கொண்டபோது, குமாரவேல் போன்றவர்களால் தங்கள் குழந்தைகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

‘ஸொராஸ்டியன் சமயம்; என்றால் என்ன என்று குமாரவேல் ‘கூகிளில்’ ஆராய்ச்சி செய்தார். அந்த,’ஸொராஸ்டியன்’ சமயம், உலகத்திலேயே மிக மிகப் பழைய கலாச்சாரச் சரித்திரத்தைக் கொண்டது. சூரிய தேவனைக் கடவுளாக வணங்குபவர்கள்-தீப வழிபாட்டை. புhரம்பரியமாகக் கொண்டவர்கள். இன்றைய ஈரான் (பழைய பேர்ஸியா-பாரசிகம்) அவர்களின் பிறப்பிடம். அங்கு வாழ்ந்த மக்கள் உலகத்தின் கலாச்சாரத்தை முன்னெடுத்த பழம் தலைமுறை,அவர்களின் சமயம் கலாச்சாரத்தை இஸ்லாமிய மதம் பெரும்பாலும் அழித்து விட்டாலும்,பழைய குடியினர் வாழ்ந்த இடங்களில் அவர்கள்pற் சிலர் தங்கள் கடவுளுக்கு ஏற்றிய தீபம் இன்னும் ஈரானில் இரண்டாயிரம் வருடங்களாக எரிகிறது என்ற பெருமையைக் கொண்வர்கள்.அவர்கள் ஆரிய பரம்பரையினர், அவர்களின் கலாச்சாரத்திலிருந்துதான் பிராமணிய வழிபாட்டுத் தோன்றுதல் வந்ததாக அறிஞர்கள் சொல்கிறார்கள்’ என்றெல்லாம் குமாரவேல் தெரிந்து கொண்டார்.

ஆனாலும் அவருக்குத் தன் மகள் ஒரு சைவ வேளாளத் தமிழனைக் கல்யாணம் செய்யவில்லை என்பது தாங்காத துயரைத் தந்தது என்றாலும் பழம் பெருமை நிறைந்த ஆரிய வம்சத்தில் சம்பந்தம் செய்து கொண்டதை மறைமுகமாகப் புழுகிக் கொண்டிருந்தார். இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியும் லண்டனிற் படித்துக் கொண்டிருந்த காலத்தில் பெராஸ் காந்தி; என்ற ஒரு (முற்போக்குவாதி) பாரசிகனை- பார்ஸியைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டதையும் அறிந்து கொண்டார்.
அவர் இந்து சமயத்தின் பண்பாடுகளில் முக்கியமான ஆரியவர்ணமுறைகளில் மக்களைத் தாழ்த்தப்படவர்களாக நடத்தும் கலாச்சாரத்தை மேன்படுத்துபவர். அதே நேரம்,தமிழர்களை அழிக்க 83ம்ஆண்டு கலவரத்தின் பின்னணியிலிருந்த சிங்கள இனவாத ஜனாதிபதியான அன்றைய இலங்கை ஜனாதிபதி,ஜே.ஆர் ஜெயவர்த்தனாவும் சிங்களவர்கள் விஜயனின் பரம்பரை, ஆரிய வம்சத்தினர் என்று சொன்னதையும், நாங்கள் ஆரிய வம்சத்தினர், ஆரிய வம்சத்திலல்லாதவர்கள் அழிக்கப் படவேண்டிவர்கள் என்று ஹிட்லர் செய்த கொடுமைகளையும் குமாரவேல்; ‘தற்செயலாக’மறந்து விட்டார்.

வேதநாயகத்தின் மகன் ஒரு ஆங்கிலேயப் பெண்ணை விரும்புகிறான். வேதநாயகத்தாரும் மனைவியும் அதை அவ்வளவாக எதிர்பார்க்கவில்லை. மிகவும் முக்கியமாக வேதநாயகத்தாரின் மனைவி அடியோடு விரும்பவில்லை. அவள் மிகவும் சமயவாதி. குழந்தைகள மிகவும் கவனமாகத் தங்கள் கலாச்சாரத்தை விட்டு நழுவாதபடி வளர்த்தவள் என்று நம்பிக் கொண்டிருப்பவள். அவளுக்குத் தன் மகன் விரும்பும் பெண்ணைக் கொஞ்சமும் பிடிக்கவில்லை.

அவர் மனைவி அடுத்த அறையில் படுத்திருக்கிறாள்.அவளுக்கும் நித்திரைவராது. இருவரும் வெவ்வேறு உலகத்தில் வாழ்பவர்கள். துமிழ்ச் சமுதாயத்தின் பரம்பரைப் பழக்கதோசமா அது? ஆணின் வேலை குடும்பத்தின் பொருளாதார நலனைப் பார்ப்பது, தாயின் கடமை தங்கள் குழந்தைகளின் நல்ல குணங்களை, தங்களின் கலாச்சார விதிமுறைகளைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்தல் என்ற மேலோட்டமான போக்குகளால், லண்டனில் பிறந்த, வளர்ந்த, பிரித்தானியக் கலாச்சாரத்தைப் பலவழிகளிலும் கிரகித்துக் கொண்ட எங்கள் குழந்தைகளின் புதிய கண்ணோட்டத்தைப் புரியத் தவறி விட்டோமா?

அவரின் மனைவி அடுத்த அறையில் படுத்திருப்பதற்குக் காரணம்,அவருக்கும் அவளுக்கும் இடையில் எந்தக் குடும்பப்; பிரச்சினையும் இருப்பதற்கு அடையாளமல்ல. அவர்கள் தங்கள் இளம் வயதில் அப்படித்தான வளர்ந்தார்கள். வாழ்ந்தார்கள். அப்பா ஒரு அறையிலும் அம்மா தனது குழந்தைகளுடன் இன்னொரு அறையில் படுப்பதும்தான் அவர்களுக்குத் தெரிந்த இலங்கை’மத்தியதரத் தமிழரின்’வாழ்க்கைமுறை.

அவர்களின் மகள் மாலதிக்கு,ஐந்து வயதாக இருக்கும்போது, அவளுக்கு,’அப்பெண்டிசைடிஸ்’ நோ வந்ததும் அதனால் சத்திரசிகிச்சை செய்து கொண்டதும்,அதைத் தொடர்ந்து,சத்திரசிகிச்சை செய்துகொண்ட சிறுபெண், அம்மா தன்னுடன் படுத்துக் கொள்ளவேண்டும் என்று பிடிவாதம் பிடித்தாள்.

அந்தப் பழக்கம்,மாலதிக்குப் பன்னிரண்டு வயதில் பெரிய பிள்ளையாகும் வரை தொடர்ந்தது.

தம்பதிகளின் ‘தேவைகளை’அவர் சைகைகளாற் தெரியப் படுத்த அவர் மனைவி விமலா அவர் அறைக்குள் வந்து போவாள்.அந்தப் பழக்கம் தொடர்ந்து விட்டது.அடுத்தது அவர் நீண்ட நேரம் புத்தகம் வாசிப்பதும் அல்லது டெலிவிஷன் பார்ப்பதும் விமலாவுக்குப் பிடிக்காத விடயங்கள். அவள் அதிகாலையில் எழுந்து கடவுள் வணக்கம் செய்பவள். அடிக்கடி விரதம் இருப்பவள்.அதனால் அவர்களின் பிரத்தியோக வாழ்க்கை தனிப்பட்ட விதத்திற் தொடர்கிறது.

லண்டனில்,ஆங்கிலேயர்கள்,; குழந்தைகள் பிறந்த ஒருசில நாட்களிலேயே தங்கள் குழந்தைகளைத் தனியறையில் (பேபி றூம்- நேர்ஸரி) படுக்கவிடுவார்கள். குழந்தையின் தனிமனித- சுய திறமைக்கு-சிந்தனை வளர்ச்சிக்கு அப்படியான வளர்ப்பு முறை மிக முக்கியமானதென்று சொல்வார்கள்.
ஆனாலும் அந்தக் காலத்தில் லண்டனுக்கு வந்த சில தமிழர்கள் அப்படியில்லாமல் தங்கள் குழந்தைகளுடன் பெரும்பாலும் படுப்பார்கள். அவ்வளவு அன்புடனும் நெருக்கமாகவும் வளர்த்த குழந்தைகள், இன்று ,எங்கள் கலாச்சாரத்தைத் தாண்டிப் போவது அவரின் மனைவி விமலாவுக்கும், சினேகிதர் குமாரவேலுவுக்கும் மிகவும் வேதனையான விடயமாகவிருக்கிறது.

அவரின் குடும்பத்தினர்,அவரின் இளவயதில், தங்கள் வீட்டுக்கு மருமகள்களாக வந்த வேற்றின, வேறு நிறப் பெண்களை,ஆரம்பத்தில் அவ்வளவாக விரும்பாவிட்டாலும்; காலகட்டத்தில் அவர்களைத் தங்களில் ஒருத்தராக ஏற்றுக் கொண்டவர்கள்.தனது மனைவியும் அவர்களின் மகன் விரும்பும் பெண்ணை காலக் கிரமத்தில் ஏற்றுக் கொள்வாள் என்று அவர் நம்புகிறார்.

அடுத்தநாள்க் காலை, காலைச் சாப்பாடு நேரம் மகள் மாலதி தாய்தகப்பனுடன் அதிகம் பேசாமல் தன்பாட்டுக்கு எதையோயோசித்துக் கொண்டிருந்தாள்.
அவள் மனதில் ஏதோ சிந்தனை அலைபாய்கிறது என்பது பெற்றோருக்குப் புரிந்தது. தமயனின் ஆங்கிலப் பெண்ணினுடைய காதல் விவகாரத்தால் பெற்றோர் குழம்பிப்போயிருப்பது அவளுக்குத் தெரியும்.

அவளின் முகத்திற் தெரியும் குழப்பத்திற்கு அதுமட்டுமா காரணம்?அவளும் யாரோ ஒரு வேற்று சமயத்தவனை அல்லது வேற்று இனத்தானைக் காதலிக்கிறாளா?

அவரின் மனதில் பல யோசனைகளுடன் வேலைக்குப்போனதும். ஆபிசில்,அவரது சினேகிதரான ஹார்வி றீட் மிகவும் சந்தோசமாகக் கணப்பட்டார். ஹார்விக்கு வேதநாயகத்தின் வயது. திருமணமாகி இரண்டு மகன்கள். .ஹார்வி அண்மையில் தனது மனைவியை, முப்பதைந்து வருடம் அவருடன் ஒன்றூக வாழ்ந்தவளை விவாகரத்துச் செய்து விட்டார்.

அவர் கொஞ்சநாள் மிகவும் சோகமாகக் காணப்பட்டார்.

‘நீP ஏன் விவாகரத்துச் செய்தாய்?’ என்று வேதநாயகம் அவரிடம் கேட்கவில்லை. ஹார்வியே சொல்லட்டும் என்று காத்திருந்தார்.

இருவரும் அதே இடத்தில் பதினைந்து வருடங்களுக்கு மேலாக ஒன்றாக வேலை செய்கிறார்கள். நெருங்கிய சினேகிதர்கள் என்று சொல்லாவிட்டாலும், தங்கள் டிப்பார்ட்மென்டில் நடக்கும் தங்களுக்குப் பிடிக்காத விடயங்களைத் திட்டித் தீர்ப்பதில் ஒன்றாகச் சேர்பவர்கள். எப்போதாவது இருந்து பாருக்குப் போவார்கள். ஹார்வி தனது விவாகரத்து பற்றி வேதநாயகத்திடம் மட்டு;ம்தான் சொன்னார்,அந்த அளவுக்கு அவர்கள் சினேகிதர்கள்.

ஆனால் கடந்த சில மாதங்களாக, டிப்பார்ட்மென்ட் ஆர்க்கிடெக்டாகவிருக்கும். மரியா லீ என்ற சீனாப் பெண்ணுடன் மிகவும் நெருங்கிப் பழகுகிறார்.அவளுக்கு நாற்பது வயது. இருபது வருட வித்தியாசம். இருவரும் மிகவும் அன்னியோன்யமாக இருப்பதை அந்த ஆபிசில் எல்லாரும் அவதானிக்கிறார்கள்.சிலக்கு வேடிக்கை,சிலருக்குப் பொறாமை,சிலருக்குச் சந்தோசம்.

மரியா லீ மிகவும் கெட்டிக்காரி.அவளில் எல்லோருக்கும் மிக மதிப்புண்டு. வயது நாற்பது என்றாலும் பார்ப்பவரின் மனதைக் கவரும் மலர்ச்சியான முகபாவத்துடன் வளையவருபவள்.அவளின் காதலில் ஹார்வி இருபது வயது இளம் வாலிபன்மாதிரி மலர்ச்சியாகத் தெரிகிறார்.

அவர்கள் வேலை செய்வது, உள்த்துறை அமைச்சின் புதிய வீட்டுத்திட்டங்கள் பற்றிய டிப்பார்ட்மென்ட். மிகவும் பிஸியான வேலை.வேதநாயகமும் ஹார்வியும் ஓரளவான மேலதிகாரிகள். இருவரும் ஓரேயடியாக மதிய உணவுக்கு ஒன்றாகப் போகமுடியாதளவு பிஸி.அப்படி இருவரும் சந்தித்துக்கொண்டால் தங்களைப் பற்றி ஓரளவு பேசிக் கொள்வார்கள்.

அன்று,ஹார்வி மத்தியானச் சாப்பாட்டு வேளையில் தன்னுடன் இணையமுடியுமா என்று வேதநாயகத்தாhரைக் கேட்டார். ஹார்வியின் மலர்ந்த முகமும் அவரது வேண்டுகோளும் அவர் ஏதோ முக்கிய விடயத்தைச் சொல்லப் போகிறார் என்று புரிந்தது.

மரியா லீயைத் திருமணம் செய்யப் போகிறாரா?

வேதநாயகமும் தனது மனப் பாரத்தை அவரிடம் சொல்லவேண்டுமென்றிருந்தார். அவரின் மகன் ஒரு வெள்ளைக்காரியை விரும்புவது வேதநாயகத்துக்குப் பிரச்சினையில்லை.ஆனால் அந்தப் பெண்ணின் தொழில்தான் வேதநாயகத்தாரின் மனைவி விமலாவுக்குப் பிரச்சினையாக இருக்கிறது.வரப்போகும் மருமகள் தலையலங்கார நிலையம் வைத்து நடத்துபவள் என்று கேள்விப் பட்டதும், விமலா திடுக்கிட்டு விட்டாள். ‘ அந்த வேலை எங்களூரில் அம்பட்டர்கள் செய்யும் வேலையல்லவா’? என்று அழாத குறையாக விமலா கேட்டாள்.

வேதநாயகத்தாரின் மகன் விரும்பும் பெண் ஒரு கலைப் பட்டதாரி என்றும்,அவளுக்குச் சிகையலங்காரத்தில் விருப்பம் என்ற படியால் அதைத் தனது தொழிலாகத் தேர்ந்தெடுத்திருக்கிறாள் என்றும் அவர் மகன் சொன்னபோது அவள் திடுக்கிட்டு விட்டாள். தமிழர்களுக்குள், டாக்டர், என்ஞினியர்,அக்கவுண்டன்ட்,கொம்பியுட்டர் ப்ரோக்கராமர் என்ற தகுதிகளுக்குள் சம்பந்தம் செய்துகொள்பவர்கள். தனது மருமகள் ஒரு தலையலங்கார சலூன்காரி என்று சொல்வதை விமலாவாற் தாங்கமுடியவில்லை.

அப்போதுதான் அவருக்குத் தெரிந்தது. வரப்போகும் மருமகள் வெள்ளைக்காரி என்பது விமலாவுக்குப் பிரச்சினையில்லை,ஆனால் அவள் சிகையலங்காரத் தொழில் செய்வதுதான் பிரச்சினை என்று!.வருங்கால மருமகளை,’உனது வேலையை மாற்றிக் கொள்’என்று சொல்லும் உரிமை அவளுக்கோ அவளது மகனுக்கோ கிடையாது.

அவரின் மகன் தனது காதல் ஒரு சிகையலங்காரப் பெண் என்று தெரிந்துதான் காதல் செய்தான்.அவன் ‘யுனி செக்ஸ்’ சலூனில் அவன் தனது தலைமுடி இறக்கப் போய்த்தான் தனது மனத்தை அவளிடம் இறக்கி விட்டான்!

அவன் கொம்பியுட்டர் புரொக்கராமர், அவள் அவனது தலையைத் தடவித் தன் தொழிலைச் செய்து கொண்டிருந்தபோது, இருவரும் தாங்கள் என்ன படித்தது, என்ன வேலை செய்வது என்பதைச் சம்பிரதாயமாகப் பேசிக்கொண்டார்கள். அப்போது அவள்,தான் ஒரு கலைப் பட்டதாரி என்றும், சிலை வடிப்பதிலும் சிற்பங்களை உருவாக்குவதிலும் சின்ன வயதில் மிக ஆசையிருந்ததாகவும் அதனால் கலைப் பகுதியில் பட்டம் பெற்றதாகவும், ஆனால் ஒரு மனிதனுக்குக் கடவுள் கொடுத்த தலை முடியை வைத்துக்கொண்டு எத்தனையழகான கலை வடிவங்கள் செய்யலாம் என்று தெரிந்தவுடன் (புரிந்தவுடன?),தான் சிகையலங்காரப் பயிற்சியைப் படித்துக்கொண்டு இப்போது சந்தோசமான வாழ்க்கை நடத்துவதாகவும் சொன்னாள்.

அதுதான் அவரின் மகனின் காதற்கதை. அது அவரின் மனைவி விமலாவுக்குப் பிடிக்கவில்லை.
வேதநாயகத்திற்குத் தனது மருமகளின் தொழில் பற்றி எந்தப் பிரச்சினையுமில்லை.ஆனால் அவரின் மனைவி, ஊர் என்ன சொல்லும் என்பதுதான் பிரச்சினை;.

அவர் தனது நண்பன்,ஹார்வியை எதிர்பார்த்துக்கொண்டு டைனிங் மேசையில் உட்கார்ந்திருந்தார்.
ஹார்வி வந்தாh.
;’என்ன வேதா, கொஞ்ச நாளாக ஏதோ யோசித்துக் கொண்டிருக்கிறாய் போல இருக்கு?’ ஹார்வி பேச்சை ஆரம்பித்தார்.

ஹார்வி றீட் மிகவும் உயர்ந்து வளர்ந்த ஆங்கிலேயன் ஆறடி மூன்றங்குலம். கிட்டத்தட்ட மொட்டை விழுந்த தோற்றம், கண்ணாடி போட்டிருப்பார். தனது பூனைக் கண்களால் மனிதர்களை உற்றுப் பார்ப்பார்

அவருக்குச் சற்று தூரத்தில் இருந்துகொண்டு வேலை செய்யும் வேதநாயகத்தார் கடந்த சில வாரங்களாகச் சரியான மனநிலையில் இல்லை என்பது தெரியும். ஆங்கிலேயர்கள் தாங்களாக வந்து எங்களின் பிரச்சினை என்று கேட்கமாட்டார்கள். நாங்களாகச் சொன்னால் கவனமாகக் கேட்பார்கள்.
‘ஆர் யு ஓகே?’ வந்தமர்ந்த சில வினாடிகளில் ஹார்வி கேட்டதும், வேதநாயகம் தர்மசங்கடத்துடன் சிரித்துக் கொண்டார்.

அதன்பின் இருவரும் சம்பிரதாயங்களுக்காகக் குடும்பங்களைப் பற்றிக் குசலம் விசாரித்துக் கொண்டார்கள். வேதநாயகத்திற்கு இன்னும் தனது மன பாரத்தை அடக்க முடியாதிருந்தது.

மெல்லமாகத் தனது குடும்பப் பிரச்சினையைச் சொல்ல வெளிக்கிட்டவர் மடைதிறந்தாற்போல் எல்லாவற்றையும் கொட்டிவிட்டார்.
பாவம் அந்த ஆங்கிலேயன்!

தமிழர்களின் சாதி, இன, வர்க்க அமைப்புக்களைத் தெரிந்து கொள்ளாதவர் ஹார்வி.

ஹார்வியின் முகத்திற் கோபம்.அக்கினியான கோபம்

‘வேதா இந்த உலகம் ஒவ்வோரு கணமும் கடந்த நான்கு பில்லியன் வருடங்கள் காணாத மாற்றத்தைக் கண்டுகொண்டிருக்கிறது. அமெரிக்கன் செவ்வாய்க் கிரகத்தில் மக்டோனால்ட் மாட்டிறைச்சிக் கடைபோடப்போகிறான், உலக முதலாளிகள் அங்கு எண்ணெய்க் கிணறு தோண்ட இயந்திரங்களுடன் போகப்போகிறார்கள். ஆயுதம் செய்பவர்கள் மனித இனத்தை ஒரு நொடியில் அழிக்கும் ஆயதங்களைச் செய்து அவசரப் புத்திக்காரர்கள் கையிற் கொடுத்து ஏழைகளையும் அநியாயத்திலிருந்து தப்ப முடியாதவர்களையும் கொன்று குவிக்கிறார்கள், மருந்து உற்பத்தியாளர்கள் ஆபிரிக்காவிலும் ஆசியாவிலும் தேவையற்ற மருந்துக்களளைக் கொடுத்து அதன் பலாபலனை ஆராய்ச்சி என்ற பெயரிற் செய்து அப்பாவிகளைக் கொல்கிறார்கள். உலகத்தில் ஒட்டுமொத்தமான ஒருவிகிதமான சனத் தொகையுள்ள முதலாளிகளின் தேவைகளுக்கு அரசியல்வாதிகள்,தொண்ணுர்ற்றி ஒன்பது விகிதமான மக்களின் வாழ்க்கையைப் பணயம் வைத்து அதிகார நாடகமாடுகிறார்கள் இதெல்லாவற்றையும் நானும் நீயும் கலந்துரையாடி ஒன்றும் பண்ண முடியாது….உனது மனைவிக்கு உனது மருமகள் சிகையலங்காரியாக இருப்பதா பிரச்சினை?’
.
வேதநாயகம் ஹார்வியின் கேள்விளாற் குன்றிப் போனார்.
‘பெண்களிற் பலர் பழமையான கலாச்சாரங்களைக் கடைப்படிப்பவர்கள்’ வேதா முணுமுணுது;தார்

‘அதுசரி இந்த விடயம் அதாவது இந்தக் காதல் விடயம் உனது மகனின் சொந்த விடயம்,அதில் ஏன் தேவையில்லாமல் நீங்கள் தலையிடுகிறீர்கள்?’ ஹார்வி தமிழர்களின் ‘பண்பாடு’-குழந்தைகள் தங்கள் உடமைகள் என்று நினைக்கும் தமிழ்க் கலாச்சாரம் தெரியாத அப்பாவித்தனத்துடன் கேட்டாh.

வேதநாயகம், தனது மனைவியின் சாதித்திமிரை அவரிடம் என்னவென்று சொல்வது? ஹார்விக்கு ஏதோ சொல்லி மழுப்பி விட்டார்.

‘அது சரி நீ என்ன வானத்தில பறக்கிற சந்தோசத்தில இருக்கிறாய்? மரியா லீயைக் கல்யாணம் பண்ணப் போகிறாயா?’ வேதநாயகம் பேச்சை மாற்ற ஹார்வியைச் சீண்டினார்.

ஹார்வி ஓஹோ என்று வாய்விட்டுச் சிரித்தார். அகத்தின் சந்தோசம் முகத்திற் தெரிந்தது. சிகையலங்கார மருமகள் பற்றிய விடயத்தால் அவர்முகத்தில் வந்த சீற்றும் வேதாவின் மரியா லீ பற்றிய காதல் விடயம் பற்றிப் பேசத் தொடங்கியது;, இருந்த இடம் தெரியாமற் பறந்துவிட்டது.

‘அது எப்போதோ முடிவுகட்டியாகி விட்டது.எனது கல்யாணத்திற்கு எனது முதல் மனைவியும் எனது ………’ ஏதோ சொல்ல வந்தவர் வேதநாயகத்தை ஆழமாகப் பார்த்தார்.

‘வேதா, குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு நாங்கள் ஆசிர்வாதம் கொடுக்கவேண்டும் இல்லையா?’ ஹார்வியின் குரல் சட்டென்று கரகரத்தது.
இன்னொரு தரம் ஹார்வி மனித உரிமை குழந்தைகளின் உரிமை பற்றிப் பிரசங்கத்தைத் தொடங்கப் போகிறாரா?

‘நான் இப்போது உன்னைச் சாப்பாட்டு மேசைக்குக் கூப்பிட்டது மரியாவுக்கும் எனக்கும் நடக்கப்போகும் திருமணத்தைப் பற்றிச் சொல்வதற்கு இல்லை….’
என்ன இந்த ஹார்வி,எதையோ சொல்லவந்து இழுத்தடித்துக் கொண்டிருக்கிறான?.

தனக்குள் நினைத்தார் வேதநாயகம்.

‘வேதா. எனது இளைய மகன் இருபத்தைந்து வருடங்களாக பட்ட துயரை இப்போது நீக்கி விட்டான்’ஹார்வியின் கண்களில் நீர் குளம் கட்டியிருந்தது.

வேதா நாயகத்துக்கு ஒன்றும் புரியவில்லை.
‘ ஹார்வி தனது நண்பனின் கைகைளைப் பற்றிக் கொண்டார்.
உணர்ச்சி மீறி அவர் முகம் சிவந்திருந்தது.

‘எனது மகன்……எனது மகளாவி விட்டான் தன்னை ஒரு பெண்ணாக மாற்றிக் கொண்டான்’ஹார்வி மனம் விட்டழுதார்.

வேதநாயகத்தின் அதிர்ச்சி அவரால் அளவிடமுடியாதிருந்தது.

என்ன சொல்கிறார் ஹார்வி? ஹார்வியின் மகன் மனநோய் ஏதும் பிடித்தவனா?

ஓன்றும் புரியாமற் தவித்தார் வேதநாயகம்.

‘எனது மகன் பிறக்கும்போது பாலுறப்புக்களின் குறைபாடுடன் பிறந்தான் பார்வைக்கு ஒரு ஆண்குழந்தைபோல் தோற்றம் இருந்தாலும் அவனின் உள்ளுறுப்புக்கள் பெண்ணாக இருப்பதாகவும் அதைச் சத்திரசிகிச்சை மூலம் சரி செய்யலாம் என்றும் வைத்தியர்கள் சொன்னதை எனது மனைவி ஏற்றுக் கொள்ளவில்லை.அவள் மிகவும் கடவுள் நம்பிக்கை கொண்டவள். கடவுள் கொடுத்த வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கவேண்டும் என்று பிடிவாதம் பிடித்தாள். எனது மகன் வளர்ந்து கொண்டு வந்தகாலத்தில் அவனது உடம்பின் குறைபாடு அவனுக்குத் தெரிந்தது. தாயின் அறிவுறுத்தல்களால் வளர்ந்தவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவன் படும் துன்பத்தைப் பார்த்து,நரகமான வாழ்க்கையைவிட மரணம் சிலவேளை சிறந்த விடயமென்றும் நினைத்திருக்கிறேன்.இதனால் எங்கள் குடும்பத்தில் ஓயாத தர்க்கங்கள் நடந்தன என்மனைவி கத்தோலிக்கப் பெண் அவளை விவாகரத்தும் செய்ய முடியவில்லை…’ அவர் கொஞ்ச நேரம் மவுனமாகவிருந்தார்

வேதநாயகம் நண்பன் மனம் விட்டுச் சொல்லட்டும் என்று பொறுத்திருந்தார்.

‘அவனுக்கு இருபத்தியொரு வயது வந்ததும், அவன் விரும்பினால் செக்ஸ் சேன்ஞ் சத்திரசிகிச்சை செய்து கொள்ள அவன் விரும்பினால் நான் பண உதவி செய்வதாகச் சொன்னேன். தன்னால் இனியும் எங்களைக் கட்டுப்பாடாக வைத்திருக்க முடியாது என்று நினைத்த என்மனைவி என்னை விட்டுப் பிரிந்தாள்.இருவருடங்கள் பிரிந்திருந்தால் விவாகரதது தன்பாட்டுக்கு வந்து சேர்ந்தது..என்மகனும் தான் விரும்பியபடி சத்திரசிகிச்சை செய்து கொண்டான். அவன் அனுபவித்த கொடுமையை எனது எதிரியின் குழந்தையும் அனுபவிக்கக் கூடாது என்று நினைக்கிறேன் ஆனால் தான் அவனின் தாய் என்ற ஆதிக்கத்தை வைத்துக்கொண்டு. சமயத்தைக் காரணம் காட்டி என்மனைவி என் மகனைத் தேவையில்லாமல் வதைத்துவிட்டாள் என்று நினைக்கிறேன்’ .

ஹார்வி பேசசு முடிந்ததும் மழை பெய்து ஓய்ந்தது போலிருந்தது. பெற்றோர் என்ற ஸ்தானத்தைத் தங்கள் சுயநலத்திற்குப் பாவிக்காமல் தங்களின் குழந்தைகளின் எதிர்கால சந்தோசத்திற்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறாரா?

மரியா லீ தன்னைத் திருமணம் சொல்லிக் கேட்டதாக ஹார்வி சொன்னபோது இளம் வாலிபன்போற் குதுகலித்தார். தனது இரண்டாவது திருமணத்திற்குத் தனது பழைய மனைவியும் புதிய ‘மகளும்’ வருவதாக அவர் சொல்லிச் சந்தோசப் பட்டார். அவர்கள் எங்கே ஹனிமூன் போவது என்பதை மரியா இரகசியமாக வைத்திருப்பதாகச் சொன்னபோது புது மண மாப்பிள்ளைபோற் சங்கடப்பட்டார்.;.மேற்கு நாடுகளில் மத்தியதர வயதினர் இரண்டாவது மூன்றாவது,திருமணங்கள் செய்வதும் தேனிலவுக்குப் போவதும் மிக மிகச் சாதாரணவிடயம்.

அன்று பின்னேரம் வீடுவரமுதல் தனது மகள் மாலதிக்குப் போன் பண்ணினார். அவள் காலையில் முகத்தைத் தொங்கப் போட்டிருந்ததின் காரணத்தை அறிய விரும்பினார். அந்தக் காரணம் அம்மாவுக்கு முன் அப்பாவிடம் சொல்ல முடியாத காரணமாகவிருக்கலாம். அவள் பருவம் அடையும்வரை அம்மாவின் முந்தானைக்குள் வளர்ந்தவள். ஆனாலும் இப்போது அம்மாவை அன்னியமாகப் பார்ப்பதை அவர் புரிந்து கொண்டார். அதற்குக் காரணமும் அவருக்குத் தெரியும்.

மாலதிக்கு,அப்பா ஏன் காப்பி பாரில் சந்திக்க வரச் சொல்லிக் கேடகிறார் என்று விளங்கவில்லை.

அவள் முகத்திற் குழப்பம். மகள் வந்து உட்கார்ந்ததும், ஒருகாலத்தில் தன்னை ஏறிட்டுப் பார்க்காமல் மணவறையில் வந்து உட்கார்ந்த அவரின் மனைவி விமலா ஞாபகத்திற்கு வந்தாள்.

இருவருக்கும் காப்பி ஆர்டர் பண்ணிவிட்டு, மகளை ஏற இறங்கப் பார்த்தார் அவள் முகம் பயத்தால் வெளிறியிருந்தது.

தன்னிடம் ஏதும் பேசவேண்டும் போலிருந்தால் வீட்டுக்குப்போய்ப் பேசலாமே? அதற்குள் அப்பாவுக்கு என்ன அவசரம்?
அவள் ஒரு டெலிவிஷன் புரடக்ஸன் கொம்பனியில் வேலை செய்கிறாள்.மிகவும் பிஸியானவள். பல இன மக்களுடன் வேலை செய்பவள்.அப்பாவின் டெலிபோனால் அவள் செய்த எடிட்டிங் வேலையை அரைகுறையில் விட்டு வந்திருக்கிறாள்.

‘ பையன் என்ன வேலை செய்கிறான்?’
அவர் ஆறுதலாக அவளைக் கேட்டார். அவர் பார்வை அவளில் ஒட்டிக் கிடந்தது. எனக்கு எல்லாம் தெரியும் இனியும் நீ மறைக்கத்; தேவையில்லை என்ற பாவம் அவர் முகத்திற் பரவிக் கிடந்தது.

தகப்பன் என்ன கேட்கிறார் என்பதைக் கிரகிக்க அவளுக்கு ஒருசில நிமிடங்கள் எடுத்தன.

அவன் பெயர் என்ன? வயதென்ன? எந்த இடம் என்றெல்லாம் அவர் கேட்கவில்வை.
என்ன செய்கிறான் என்ற கேள்வியில் அவன் உன்னை வைத்துக் காப்பாற்றுவானா என்று கேட்கிறாரா?

அவள் கைகள் நடுங்கின. லண்டனிற் பிறந்த பெண்களுக்கு அப்படிப் பயம் இருப்பதாக அவருக்குத் தெரியாது.
ஏன் இப்படிப் பயப்படுகிறாள்?

நான் காதலிப்பவன் ஏற்கனவே திருமணமானவன் என்று சொல்லப் போகிறாளா அல்லது நான் ஒரு ஆணைக் காலிக்கவில்லை ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன் நான் ஒரு லெஸ்பியன் என்று என்று சொல்லப் போகிறாளா?

அப்படியான அதிர்ச்சியான செய்திகளை அவள் சொன்னால் அவற்றிற்கு எப்படி முகம் கொடுப்பது என்று தற்போது அவருக்குத் தெரியாது. அவருக்குத் தர்மசங்கடமாகவிருந்தது.ஆனாலும் மகளை விசாரிக்க அழைத்திருக்கிறார் அவள் சாட்டுப்போக்குகள் சொல்லித் தட்டிக் கழிக்காமல் வந்திருக்கிறாள்.
அவர் எதற்கும் தயாரானார்

மகளைப் பாசத்துடன் பார்த்தார்.அவள் கைகைளை இறுக்கப் பிடித்தார்;. ‘மகளே நாங்கள் உன்னில் மிகவும் அன்பாக இருக்கிறோம்.உண்மையைச் சொல், நீ விரும்பாவிட்டால் தற்போதைக்கு உன் விடயம் பற்றி நான் அம்மாவுக்குச் சொல்லமாட்டன்’அவர் பாசத்துடன் சொன்னார்.
அவள் அழத் தொடங்கினாள்.அவரின் அன்பு அவளை நெகிழப் பண்ணியிருந்தது.

‘நானும் உனது தாயும் காதலித்துத் திருமணம் செய்து கொள்ளவில்லை..நாங்கள் பழைய காலத்து ..நேற்றைய காலத்து மனிதர்கள்…எங்களுக்கு எங்கள் பெற்றோர்,சொன்னவற்றை, செய்தவைகளை ஏற்றுக் கொண்டவர்கள்.அம்மா தனது பிள்ளைகளும் தங்களுக்குத் தெரிந்த இலங்கைத் தமிழர்களை நீங்கள் இருவரும் செய்யவேண்டும் என்று நினைக்கிறாள்.’ அவர் நிதானமாக வார்த்தைகளை வெளிவிட்டார்.

‘அதுதான் மச்சாள் அகிலாவுக்கு நாற்பத்தியிரண்டு வயதாகியும் இன்னும் இலங்கை மாப்பிள்ளைக்குக் காத்திருக்கிறாள்’ மாலதி சட்டென்று பொரிந்து விழுந்தாள். நீpங்கள் சொல்வதை நம்பி வாழ்க்கையைத் தவற விடத் தயாரில்லை என்ற வெடிப்பு அது

அவருக்கு ஏதோ குரலடைத்தது. தனக்கு என்ன தேவை என்று சொல்லமுடியாமற் தவித்த ஹார்வியின் மகன் ஞாபகத்தில் வந்து போனான். ‘என் குழந்தைகள் அவர்கள் தேடும் துணையுடன் வாழ ஆசிர்வதிப்பேன்’ அவர் அவளுக்குக் கேட்கக் கூடியதாக முணுமுணுத்துக் கொண்டார்.

கொஞ்ச நேர மௌனத்தின் பின், ‘அவன் பெயர்…..ராகுல்..இந்தியன்…தமிழன் இல்லை, ,இந்து சமயத்தில் ஓரளவு ஈடுபாடுள்ளவன், என்னுடன் இருவருடங்களாக வேலை செய்கிறான்.; தகப்பன் கிடையாது கார் விபத்தில் இறந்து விட்டார்.;…..ஒரு அக்கா அமெரிக்காவில் இருக்கிறாள்…..’
அவர் மேலதிகமாகக் கேட்கவேண்டிய கேள்விகளுக்கு அவள் பதில் சொல்லிவிட்டாள்.

‘அவனுடன் சந்தோசமாக இருப்பாய் என்று நினைக்கிறாயா?’ அவர் மகளை அன்புடன் பார்த்துக் கொண்டு கேட்டார்.

‘ஐ லவ் ஹிம் அப்பா,…ஹி லவ் மி டு..அவன் எனது பாஸ், நிறையக் கற்றுத் தந்து எனது உத்தியோக விடயத்தில் எவ்வளவோ முன்னேற உதவி செய்திருக்கிறான்..பெண்களைக் கவுரமாக நடத்துபவன் அவன்.ஆனால் அம்மா அவனொரு தமிழன் இல்லை,வடக்கத்தியான் என்று நிராகரிப்பாளோ என்று பயமாகவிருக்கிறது’ அவள் வெட்கத்துடனும் பயத்துடனும்; முணுமுணுத்தாள்.

அவளின் பயம் அவருக்கு அப்பட்டமாக விளங்கியது.
‘சரி அண்ணாவின் கல்யாணம் முடியும்வரை இது பற்றி அம்மாவுக்குச் சொல்லவேண்டாம்’ இருவரும் சினேகிதர்கள் மாதிரிக் காப்பி பாரை விட்டு வெளியேறினார்கள்.

அவர் வீட்டுக்கு வந்தபோது மகன் இன்னும் வரவில்லை என்று தெரிந்தது.
விமலா மேசையில் சாப்பாடுகளைக் கொண்டுவைத்தாள். அவள் நல்ல மனைவி. அன்பான தாய். தன் குழந்தைகளில் மிகவும் பாசம் வைத்திருப்பவள்.

மகள் மாலதி தனது சினேகிதியைச்(?) சந்தித்து விட்டுக் கொஞ்சம் பிந்தி வருவதாகச் சொன்னதாக விமலா சொன்னாள். அவர் மனதுக்குள் சிரித்துக் கொண்டார். மகளின் சினேகிதியின் பெயர் ‘ராகுல்’ என்று அவர் மனைவிக்குச் சொல்லவில்லை.

ஹார்வியைப் பற்றிச் சொன்னார். ஹார்வியின் மகன் மகளானதைப் பற்றிச் சொல்லவில்லை. ஹார்வியின் இரண்டாவது திருமணம் பற்றியும் அவர்களின் ஹனிமூன் திட்டம் பற்றியும் மனைவிக்குச் சொன்னார்.
‘என்ன சனங்களோ தெரியாது.. மாறி மாறி சோடி தேடுதுகள்’அவள் வழக்கம்போல் நிகழ்கால மாற்றங்களை நிராகரித்தாள்.

‘நாங்கள் ஒரு நாளும் ஹனிமூன் போகல்ல’ அவர் தனது படுக்கையில் இருந்தபடி சொன்னார். அவளுக்கு எப்படிப் புதிய சிந்தனைகளை,வாழ்க்கையின் யாதார்த்தங்களை விளக்குவது என்று அவர் மனம் அலைபாய்ந்தது.

அவர் ஹனிமூன் பற்றிப் பேசியதும்,அவள் முகம் அதைக் கேட்டுத் திடுக்கிட்டது. அவருக்கு மறுமொழிசொல்லாமல்,அவள் தனது அறைக்குப் போக வெளிக்கிட்டாள்.

‘நான் ஒன்டும் வாசிக்கல்ல..நீ இஞ்ச படுத்துக் கொள்ளலாம்’ அவர் மெல்லமாகச் சொன்னாh.;
அவள் வந்து அருகில் உட்கார்ந்தாள்.;’ ஹார்வி செய்வது ஒன்றும் ஒழுக்கம் கெட்டவேலையில்லை. மற்றவர்களக்குத் தொல்லை கொடுக்காமல் மனிதர் சந்தோசமாக வாழ நினைப்பது இயற்கையான உணர்வு’ என்று அவளுக்குச் சொன்னார்.

அவள் ஒரு குழந்தை மாதிரிக் கேட்டுக் கொண்டிருந்தாள். தனது கணவன் பெரிய படிப்பு படித்தவன் என்பதிலும் அவருக்குப் பல விடயங்கள் தெரியும் என்பதிலும் அவளுக்குப் பெருமை இருப்பது அவருக்குத் தெரியும்.

அவளிடம் தங்கள் குழந்தைகளின் வாழ்க்கையில் நாங்கள் தலையிடுவது சரியில்லை என்பதை எப்படி நாசுக்காகச் சொல்வது.அவர் யேசித்தபடி அவளைப் பார்த்தார்.

அவளது முகம் அப்பாவித்தனமாக அவரை எறுட்டுப் பார்த்தது.அவரில் மிகவும் நம்பிக்கை கொண்டவள் அவள் ஆனாலும் தனது குழந்தைகளின் எதிர்காலத்தை அவர் சரியாகக் கையாளுகிறாரா என்ற பயம் அவள் மனதில் இருக்கிறது.

அது அவருக்குத் தெரியும். அவளை எப்படியும் யதார்த்த நிலைகளை உணரப் பண்ணவேண்டும். இயந்திரமான குடும்வாழ்க்கைகளுக்கு அப்பால் ஒரு அழகான நெருக்கமான உலகம் இருக்கிறது என்பதை அவளுக்குக் காட்டவேண்டும். எப்படி?

‘நான் சொன்னது காதில கேட்டுதா..நாங்க ஒருக்காலும் தனியாக ஹொலிடேய் போகல்ல’ விமலாவுக்கு அவர் சொல்வது ஏதோ புரிவதற்குள் அவர் அணைப்பிற் துவண்டாள்.

(யாவும் கற்பனையே)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *