சீக்’இளைஞன் போல இருந்தான்.ஆனால்,தலையில் சிறிய கொண்டையோ,சுற்றிய துணியோ..இருக்கவில்லை.வேற யாரோவோ? வோக்கருடன்,அவனுடைய உடம்பு அங்கையும்,இங்கையும் ஆட காலை இழுத்து இழுத்து வந்தான்.பார்க்க பரிதாபமாக இருந்தான். என் வயசை விட குறைவாகவே இருப்பான்.உருவத்தில் என்னை விட பெரிய தோற்றம்.மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் சிறிலங்கனை விட பெரிய தோற்றத்துடன் தான் இருக்கிறார்கள்.அவன் நான் ஓடுற சிற்றூர்ந்தில் ஏற சிறிது நேரம் எடுத்தது. மூளைவளர்ச்சி குறைந்தவர்களைப் போல தோற்றம்.வெகுளியான சிரிப்புடன் “அக்கோடா”என்று பெலத்தாக கேட்டான். எனக்கு அவனுடைய மொழி புரியவில்லை.”என்ன பாசை” என்று கேட்டேன்.”எப்படி இருக்கிறாய்?,பேர்சியன் மொழியில் “என்று சிரித்தான்.அவன் சரியாய் தான் அந்த மொழியில் சொல்கிறானா..என்பதெல்லாம் எனக்கு தெரியாது.சீக் போல இருக்கிறவன் பஞ்சாபி அல்லவா பேச வேண்டும்.இந்தியனைப் போல இருக்கிறவனுக்கு எப்படி பேர்சியன் மொழி தெரியும்.ஒருவேளை 2-3 சொற்களை தெரிந்து கொண்டு வெளுத்து வாங்கிறானோ!இல்லாவிட்டால் ஈரானியன் தானோ?
ஸ்ரோக் வந்து பாதிக்கப்பட்டு தேறியவனாக இருக்க வேண்டும்.சிற்றூர்ந்தின் யன்னல் கண்ணாடிகளை எல்லாம் இறக்கி விட்டிருந்தேன்.வீதீயில் பக்கத்தில் செல்கிற நடைபாதை பயணிகளிடமும்”அக்கோடா”என்று அட்டகாசமாக கேட்டான் .சந்தோசமாக இருக்கிறான் போலும். மீற்றரை ஓன் பண்ண அது,$3 என சிவப்பு வெளிச்சத்தில் காட்டியது.”எங்கே போகணும்” கேட்டேன்.”முதலில் சேர்ச் அன்ட் வெலசியில் இருக்கிற TD வங்கிக்கு விடு”என்றான்.செலுத்தினேன்.”உனக்கு என்ன நடந்தது?இப்படி கால்,கை!, விபத்துக்குள்ளானாயா?”கேட்டேன்.
“நானும் சிற்றூர்ந்து ரைவராக இருந்தவன் தான்”என்று ஆச்சரியத்தில் ஆழ்த்தினான்.”அப்புறம்..?”.”இரவு நேரம்,ஜனநாயகத்தின் காவலர்கள்(பொலிஸ்),அதிவேக கார்க் குற்றவாளிகளை பிடிக்க துரத்திய போது,சந்தியில்..நின்ற என்ர சிற்றூர்ந்தை மோசமாக மோதித் தள்ளி விட்டார்கள்.நான் உள்ளே நசிங்கிப் போனேன்”என்றான் வருத்ததுடன்.இந்த காவலர்களின் கட்டுபாடற்ற ஓட்டங்களை நானும் ஓரிரு அதிகாலையில் பார்த்திருக்கிறேன். போதைப் பொருளை பாவித்து விட்டு ஓடுறவர்களைப் போல.. துரத்தல்களை செய்வார்கள்.
அதிகாலையிலே அந்த ஓட்டங்கள் அதிகம்.பகல்நேரத்தில் சிற்றூர்ந்து ஓடுறவர்கள் எல்லாம் ஏன் அதிகாலையிலே வேலை தொடங்குவதில்லை என்பது எனக்கு.. புரிந்தது.அவர்களில் பலர், அதிவேகமாக ஓடவேண்டும்’என்ற தம் ஆசைக்காகவும் துரத்தல்களைச் செய்கிறார்கள்.துரத்தியவர்களை குற்றவாளிகள் என்று பிடிக்கிறார்கள்.சட்டத்திற்கு முன் எல்லோரும் சமம் என்ற அளப்புகள் எல்லாம்’அரசு தான் புனிதம்’என்று சொல்லிக் காட்ட தான்.மிச்சப்படி..கடைபிடிக்கப் படுவதில்லை.
“எவ்வளவு காலம் சிற்றூர்ந்து ஓடினாய்?”கேட்டேன்.”2 வருசம்”என்றான்.அடப்பாவியே,லைசென்சுக்கு இறைத்து.., கஸ்டப்பட்டு ஓட வெளிக்கிட்ட காலத்திலேயே வந்து மோதித் தள்ளி இருக்கிறார்கள்.காவலரின் கார்களுக்கு முன்னால் இரும்பு பாதுகாப்பு வேற மேலதிகமாக இருக்கிறது.சிற்றூர்ந்து,அமெரிக்கன் காராக இருந்தாலும் கூட அப்பளமாக போய் விடுவது இருக்கிறது.
ஒருசமயம்,ஒருவழிபாதையில்,பல காவலர்களின் கார்கள் சைரன் ஒலியுடன் துரத்தி பல பக்கங்களிலும் ஒரு காரை மோதி நிறுத்தியதை நேரிலே பார்த்து அதிர்ச்சிஅடைந்திருந்தேன்.அடுத்த நாள் பேப்பரில்,குற்றவாளி எனக் கருதியவனின் சொந்தக் கார் அது என்றும்,சந்தேகத்திற்குரிய விதத்தில் ஓடியதால் மோதி நிறுத்த வேண்டியிருந்தது’எனசெய்தி வந்திருந்தது.காரின் ‘பொடிவேலையை நிச்சியமாக காவலர்களின் காப்புறுதி செய்திருக்காது’என நினைக்கிறேன்.அவர்கள் சிக்கனப் பேர்வழிகள்.அவர்களுக்கு ஒதுக்கப்படுற பணம்
பத்தாது என்பதற்காக’பார்க்கிங் டிக்கற்றுக்களை வைத்து பணம் பண்ணலாம்’என முனிசிபல் அரசாங்கம் அவர்களுக்கு அனுமதி அளித்திருக்கிறது.
“1-2 வருசமில்லை,4 வருசம் ஆஸ்பத்திரியிலேயே கிடந்தேன்”என்றான் கண்ணீர் பொங்க.கையிலே,காலிலே,உடம்பிலே என நிறைய சத்திர சிகிச்சைகள்.கம்பி வைத்தார்கள்.கோமாவில் கூட போய் கிடந்தேன்”என்றான்.அவன் பொய் பேசவில்லை என்று புரிந்தது.’எவ்வளவு காலம் கோமாவில் கிடந்தாய்’எனக் கேட்க மறந்து போனேன்.
சந்தியில் சிவப்பு லைட்டில் சிற்றூர்ந்து நின்றது.பக்கத்துக் கோட்டில்,சமர் வந்து விட்டதால் மெல்லிய அழகான ஆடையில்..ஆடைக்குறைப்புப் பற்றிய கவலை இல்லாமல்..,ஓரிளம் பெண்ணின் கார் நின்றிருந்தது.இவன் அவளைப் பார்த்து “அக்கோடா”என்று கத்தினான்.அவள் திரும்பிப் பார்த்தாள்.”கௌவ் வார் யூ? வெரி நைஸ் டே”என்றான் சிரிப்புடன்.வலது குறைந்தவன் போன்ற வெகுளித் தோற்றம் அவனுடையது.அவள் அனுதாபமாக பார்த்து சிரித்து விட்டு”பைன் மச் சனி,ஐ லைக் இட்”என்றாள்.இவன் என்னென்னவோ பேர்சியனில் சொல்லி கதைத்தான்.அவள் சிரித்துக் கொண்டு கையை காட்டி விட்டு போய்விட்டாள்.
நான் சிற்றூர்ந்தை TD வங்கிக்கு அருகாமையில் நிறுத்தினேன்.அவன் இறங்கி வோக்கருடன் போனான்.தனது அலுவல்களை முடித்துக் கொண்டு வந்தான்.திருப்ப ஏறிய பிறகு “ஜாவஸ் அன்ட் குவின்ன்னுக்குப் போ”என்றான். செலுத்தினேன்.”உனக்கு கல்யாணம் ஆகிவிட்டதா?”கேட்டேன்.அவன் வெறுப்புடன் சிரித்தான்.”ஒரு மகள் கூட இருக்கிறது.ஆஸ்பத்திரியில் இருக்கிற போது,டாக்டர்கள் என் மனைவியிடம் மெசினுடன் உள்ள இணைப்புக்களை அகற்றி ‘கருணைக் கொலை’செய்ய விருப்பமா?என்று கேட்டார்கள்.அவள் ‘ஓம்’என்றிருந்தாள்.என்னுடைய சகோதரங்கள் தடுத்து விட்டார்கள்.பிறகு அவள் பிரிந்து’மகளுடன் சிங்கிள் மதராக போய் விட்டாள்..!” வருத்தத்துடன் சொன்னான்.அவன் மனைவியை நேசிக்கிறான் என்பது புரிந்தது.ஆனால்,4 வருசங்கள் என்பது கொஞ்ச காலமில்லை,நிலமை மோசமானது தான்.
அவனை இறக்கி விட்டு..அன்றைய நாளை ஓடி முடித்தேன்.சிற்றூர்ந்துக்கு எரிபொருளை நிரப்பி விட்டு திரும்புற போது..அவனுடைய அப்பார்ட்மெண்ட் கட்டிடத்திற்கு முன்னால் உள்ள வீதிக்கு வார நடைபாதையின் ஓரத்தில்,வோக்கரை நிறுத்தி,அதிலிருக்கிற இருக்கையில் இருந்து கொண்டு வீதியில் போறவாரவர்களை அவன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
– ஜூன் 2007