நகரத்தில் வாழும் ஒவ்வொருவரும் காலையில் எழுவது முதல் இரவு உறங்கச்செல்வது வரை பணம், சொத்து, பதவி எனும் சிந்தனையிலேயே தங்களது விலை மதிக்க முடியாத உடலைக்கூட சிறிதும் பொருட்படுத்தாமல், தங்களது செயல்களால் பிறர் படும் துன்பத்தைக்கண்டு கொள்ளாமல், எல்லாவற்றிக்கும் மேலாக சக மனிதனது இறப்பில் கூட ஆதாயமடையத்துடிக்கும் அற்ப மனிதர்களாக வலம் வருகின்றனர்.
பல கிரவுண்ட் நிலம் வைத்திருப்பவர், ஒரு கிரவுண்ட் நிலம் வைத்திருக்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கு ஓர் அடி நிலத்தைக்கூட விட்டுக்கொடுக்காத மனநிலை, கூலிக்கு சென்று உழைத்து பெறும் ஒருவரின் கூலிப்பணத்தை அவரது குடும்பத்தின் உணவுத்தேவைக்காகக்கூட வீட்டிற்கு கொண்டு செல்ல முடியாத வகையில் எங்கு வேண்டுமானாலும் மது கிடைக்கும் நிலை, உடலைக்கெடுக்கும் கலப்பட உணவு வகைகள், சட்டத்தை சிறிதும் மதிக்காமல் பாதைகளில் வாகன ஓட்டிகள் சென்று விபத்துக்களை உருவாக்குவது, வயதில் பெரியவர்களை மதிக்காத இளைய சமுதாயத்தினரின் பழக்கவழக்கங்கள், ஆடை குறைப்பு ஆபாசங்கள் என நகரத்தில் பார்த்ததில் மிகவும் மன வேதனையடைந்தார் கிராமத்து பெரியவரான ஆறுமுகம்.
பிறந்தது கிராமம் என்றாலும், சிறு வயது முதல் விவசாய தொழில் செய்து வந்தாலும் மகன் சரவணன் படித்து முடித்து நகரத்தில் வேலை அமைய , இருக்கும் நிலத்தை விற்று அதில் கிடைத்த பணத்தில் கட்டிய வீடு வாங்கி மகன், மருமகள், பேரக்குழந்தைகளுடன் வாழ்ந்து வருபவர்.
தீராத நோயால் பாதிக்கப்பட்ட மனைவி பரிமளம் கடந்த வருடம் காலமானதில் உடைந்து போனவர், மகனும், மருமகளும் வேலைக்கும், பேரக்குழந்தைகள் பள்ளிக்கும் சென்ற பின் வீட்டில் தனியாக இருக்க முடியாமல் வெளியில் நடை பயிற்சி போல் நகர வீதிகளை சுற்றிப்பார்ப்பார்.
இவ்வாறு தினமும் நடைப்பயிற்ச்சியின் இடையில் செல்லும் வழியில் உள்ள பூங்காவில் இளைப்பாறி செல்லும் நிலையில், பூங்காவில் ஓய்வெடுக்க தான் வரும் போது வரும் பெரிய தொழிலதிபர் பரந்தாமன், ஆறுமுகத்திடம் பேச்சுக்கொடுக்க தனது அனுபவங்கள், படித்த விசயங்கள், சமூக அவலங்களால் நல்லோரின் வேதனைகள் என மனதில் உள்ளதை கொட்டித்தீர்த்தார்.
“இந்த பூமில பிறந்த எல்லாருக்குமே நெனைச்சதை அடைய முடியறதில்லை. கெடைச்சவங்க கெடைக்காதவங்களுக்கு கொடுத்து எல்லாரும் சமமா வாழோனும்ங்கிறது தான் இயற்க்கையோட நியதி. ஆனா நெறைய இருக்கிறவங்க தான் இல்லாதவங்க கிட்டிருந்து பிடுங்க முயற்ச்சி பண்ணறாங்க” என கூறும் போது கண்களில் கண்ணீர் வடிய அதை தனது தோளில் போட்டிருந்த துண்டால் துடைத்துக்கொண்டு பேசினார்.
“எனக்கும் கிராமத்துல எங்க தாத்தா வாங்கின நிலம் இருந்தது. விவசாயம் செஞ்சா ஒரு கொழந்தையக்கூட பணங்கட்டற பள்ளிக்கொடத்துல சேர்த்து படிக்க வைக்க முடியல. ஒரு நிலத்தை வித்து படிக்க வெச்சேன். இன்னொரு நிலத்தை கொறைஞ்ச விலைக்கு வித்துட்டு வந்து இங்க பாக்கி கடன் வாங்கி ஒரு வீடு வாங்கிட்டோம். இப்போ நெலத்தோட வெலை கிராமத்துலயும் ஏறிப்போனதால டவுன்ல இருந்து வாங்க வர்றவங்க ஒரு பகுதிய வாங்கிட்டா, உள்ளூர்ல வேலைக்கு கிடைக்கிற முரட்டு ஆளுங்களை வெச்சிட்டு காலங்காலமா வாழ்ந்தவங்களை, சிறு விவசாயிகளை மிரட்டி, எடைஞ்சல் பண்ணி பாக்கி இருக்கிற நிலங்களை வாங்கிப்போடறாங்க. அத பல மடங்கு வெலைக்கு வித்துப்போடறாங்க. படிக்காத அப்பாவிகளான விவசாயிக பயந்திட்டு பிரச்சினை வேண்டாம்னு சாபம் உட்டுட்டு வித்திட்டு போயிடறாங்க. நானும் அப்படித்தான் வித்திட்டேன். என்ற காலத்துல நெலத்த ஏமாத்தினவங்க வாரிசுக நல்லா பொழைச்சதா பாக்கலே. படிச்சவங்கதான் இப்பெல்லாம் படிக்காதவங்கள ஏமாத்தறாங்க. கொழைந்தைகளே பெத்தவங்க சொத்த மெரட்டி வாங்கீட்டு ஊட்லிருந்து வெரட்டறத நெறைய பாக்கறேன்” என்றவர் தனது மகனிடமிருந்து வந்த அலைபேசியின் கேள்விக்கு பதில் கூறி விட்டு தோள் பையிலிருந்த தண்ணீர் கேனிலிருந்த நீரை எடுத்து பருகி தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டார்.
இதையெல்லாம் கேட்ட நகரவாசியான பரந்தாமன் குற்றம் செய்தவர் போல முகம் இறுகி, தலை குனிந்து ஆறுமுகத்தை நேருக்கு நேர் பார்ப்பதைத்தவிர்த்தார்.
“அந்தக்காலத்துல கெராமத்துல வெள்ளாம நல்லா வெளைஞ்சா வெளையாதவங்களுக்கு பங்கு போட்டுக்கொடுப்பாங்க. இருக்கறவங்க வறுமைல வாடறவங்களுக்கு கொடுக்கறதுக்கு பேரு தான் சனதனதர்மம் னு பெரியவங்க சொல்லுவாங்க. சனம்னா மனுசங்க தனம்னா பணம் மட்டுமில்ல தானியம், பணம், நெலம் எல்லாமே செல்வம் தான். செல்வம் ஒரே நெலைல சேராம செல்லறதுக்கு பேருதான் செல்வம். அதத்தர்மம் பண்ணணனம். எறைக்கற கெணறு தான் சொறக்கும். இல்லாதவங்களுக்கு கொடுத்தா மறுபடியும் சேரும்பாங்க. முன் வயசுல படிக்கோணும், நடுவயசுல கண்ணாலங்கட்டி பொண்டு புள்ளைகளோட வாழோணும், பெத்தவங்கள காப்பாத்தோணும், கடைசி வயசுல தொறவி மாதற வாழோணும். இது தான் சனதனதர்மம். ஆனா இந்தக்காலத்துல கடைசி காலத்துல தான் பணத்தாச, சொத்தாச புடிச்சு பரபரப்பா நிம்மதியில்லாம வாழறாங்க” என ஆறுமுகம் வருத்தத்துடன் கூறியதைக்கேட்ட, பல சொத்துக்கள் தன் பெயரில் வைத்திருக்கும் நகரவாசியான பரந்தாமன், தான் புதிதாக கிராமத்தில் வாங்கிய நிலத்தில் பாக்கியுள்ள நிலத்தை குறைந்த விலைக்கு அபகரிக்க ரவுடிகளை அனுப்பி உள்ளே செல்லும் பாதையை அடைக்கச்சொன்னவர், நிலத்துக்கு சென்றவர்களை அலைபேசியில் பதட்டத்துடன் அழைத்து பாதையை அடைக்காமல் தான் வாங்கிய நிலத்திலிருந்தும் சிறிது நிலத்தை பாதையை விரிவாக்க தானமாக கொடுத்து, உள்ளே சிறிய அளவுள்ள நிலத்தில் பரம்பரையாக விவசாயம் செய்பவருக்கு கொடுக்கச்சொன்ன போது, ‘தனது பேச்சினால் ஒரு மனிதராவது திருந்தினாரே’ என நினைத்து மகிழ்ந்தபடி வீடு சென்றார் பெரியவர் ஆறுமுகம்!