கதையாசிரியர்:
தின/வார இதழ்: ஈழகேசரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 24, 2023
பார்வையிட்டோர்: 3,049 
 

(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

புராண படனம் ஆரம்பமாயிற்று. இந்தப் புராண படனம் மார்கழி மாதத்துத் திருவெம்பாவைக் காலத்தில் உச்சக் கட்டத்தை அடையும். சாதாரண கோவில்களிற் கூடத் திருவாதவூரடிகள் புராணம் படிக்கப்படும்.

மாஞ்சோலைக் கிராமத்து அம்பாள் ஆலயமும் இதற்கு விதிவிலக்கல்ல.

கிழக்கு வாயிலையுடைய அந்தக் கோவிலில் பலிபீடத்துக்கும் தேவசபைக்கும் நடுவே உள்ள சிறிய மண்டபத்தில் புராண வாசிப்பு நடைபெறப் போகிறது.

சிங்கப்பூர்ப் பென்சன்காரர் – பொன்னம்பலம் – குத்துவிளக் குக்குப் பக்கத்தில் தென்திசையில் உட்கார்ந்து புத்தகத்தை விரிக் கிறார். உள்ளூர்ப் பாடசாலையின் உபாத்தியார் – சிற்றம்பலம் – வடக்குப் பக்கத்திலே கிழக்குப் பார்த்த முகமாக இருந்து கர்ப் பூரத்தைக் கொளுத்துகிறார்.

தேங்காய் உடைக்கப்படுகிறது; காப்புப் பாடல் ஆரம்பமாகிறது.

“பவளமால் வரையி னிலவெறிப் பதுபோற்
பரந்தநீற் றழகுபச் சுடம்பிற் றிவழமா துடனின் றாடிய பரமன்
சிறுவனைப் பாரதப் பெரும் போர் தவளமா மருப்பொன் றொடித்தொரு கரத்திற்
றரித்துயர் கிரிப்புறத் தெழுதுங் கவளமா களிற்றின் றிருமுகம் படைத்த
கடவுளை நினைந்துகை தொழுவாம்”

பாடுகிறவரதும் உரைகாரரதும் குரல்கள் ஒன்றாய் இணைந்து கேட்போரது சிந்தையை ஒரு முகப்படுத்தி வேறோர் உலகத்துக்கு அழைத்துச் செல்கிறது.

அப்போதுதான் பொன்னம்மாக் கிழவி அங்கு வந்து சேர்ந்தாள்.

ஒட்டகத்தின் முதுகு போல் வளைந்த கூனல் முதுகைச் சாத்தி இருப்பதற்கு வசதியாகச் சுவர்ப்பக்கத்திலே வந்து, ஊன்றி வந்த பொல்லைப் பக்கத்தில் வைத்து விட்டுக் குந்துகிறாள். அவள் வாய், ‘அம்மாளாச்சி! தாயே!’ என்று முணுமுணுக்கிறது.

சிங்கப்பூர்ப் பென்சன்காரர் முதல் நாள் விட்ட இடத்திலிருந்து வாசிப்பைத் தொடங்குகிறார்.

“இரும்பசியுடையேன் அன்னே இனிய பிட்டளிப்பையாகில் குரம்பை கொண்டடைப்பன் யானே கோலறை முழுதும் என்ன” என்ற பாடலை ஏற்ற இராகத்தில் வாசிக்கிறார்.

பொன்னம்மாக் கிழவி பாட்டைக் கிரகித்த படியே சுற்று முற்றும் பார்க்கிறாள். நேற்றைய நாளிலும் பார்க்க இன்று பெண்களும் குழந்தைகளும் அதிகமாகத் தென்படுகிறார்கள். அதிகமாக என்றால் நூறோ இருநூறோ அல்ல. நேற்று இரண்டு மூன்று பேர்தான் கேட்டார்கள். இன்று பத்துப் பதினைந்து பெரிய வர்களும் பதினெட்டு இருபது குழந்தைகளும் இருக்கிறார்கள். அவ்வளவுதான்! |

அவளுக்குக் கண்ணில் நீர் துளிர்த்தது.

அவள் இருபத்தைந்து வயதுக் கட்டழகியாய் இருந்த காலத் தில் ‘அவரோடு ‘ கூடி வந்து பிட்டவித்துக் கொடுத்து, ‘ஜாம், ஜாம்’ என்று இந்தப் பிட்டுத் திருவிழாவை நடாத்திய காட்சி அவள் மனக்கண் முன் விரிகிறது…

ஆசிரியர் சிற்றம்பலம் உரை சொல்லத் தொடங்கி விட்டார்.

“கூலியாளராக வந்த எம்பெருமான், பிட்டு விற்றுச் சீவிப் பவளாகிய அந்தச் செம்மனச் செல்வியென்னும் நரை மூதாட்டி யைப் பார்த்து, ‘தாயே! நானோ அதிக பசியுடையவனாக இருக் கிறேன். நீ அவித்த பிட்டினை எனக்கு உண்ண அளித்தாயானால்?….”

உரை சொன்னவர், வாசித்த வரிக்கேற்ற பொருளை விரித் துக் கூற அவ்வளவில் நிறுத்துகிறார்.

வாசித்தவர், ‘குரம்பை கொண்டடைப்பன் யானே’ என்று ஏற்ற இராகத்திலே பாடி நிறுத்துகிறார்.

பொன்னம்மாக் கிழவி பழைய காட்சியை மறந்து கதையில் ஒன்றி விடுகிறாள்.

அவள் மனக்கண் முன் வைகை ஆறு பெருகுகிறது. சனங்கள் அல்லோலகல்லோலப்பட்டு : அரண்மனையை நோக்கி ஓடுகிறார்கள். அரிமர்த்தன பாண்டியன் வாதவூரரை அழைத்து, இருக்கை நல்கி, செய்த பிழையைப் பொறுத்து வைகை ஊர் கொளாமல் காக்க வேண்டுகிறான். வாதவூரரே தலைமை தாங்கி ஏவலாளர்களை ஏவி அரச கட்டளையே நிறைவேற்றுகிறார். வைகைக் கரை பங்கு போடப்படுகிறது. தன்னைப் போன்ற செம்மனச் செல்விக்கும் ஒரு பங்கு கொடுக்கப்படுவதையும் அவள் அதை அடைக்க முடியாமல் தவிப்பதையும் அகக்கண் ணால் நோக்குகிறாள்.

கிழவியின் கண்களில் இருந்து நீர் தாரை தாரையாக ஒழுகு கிறது. ஆம் ; அவள் செம்மனச் செல்வியேயாகிவிட்டாள்.

பென்சன்காரர் அடுத்த பாடலுக்குப் போய் விட்டார். அவருக்கு இது வெறும் கதை; இராக வாசிப்பு. ஆனால் பொன்னம்மாக் கிழவிக்கோ? தன் வாழ்க்கையோடு பிணைந்து விட்ட சோக நிகழ்ச்சி.

“கூற்றடுங்கமலபாதர் குறுந்துணிக்கரியசீரை ஏற்றிடும் பிட்டு வாங்கி”‘” என்ற அடுத்த பாட்டு வாசித்து நிறுத்தப்படுகிறது.

மணிகள் ஒலிக்கின்றன. மேளம் முழங்குகிறது. சங்கு ஊதப் படுகிறது.

மூலஸ்தானத்திலும் ‘உற்சவமூர்த்தி’ இருக்கும் இடத்திலும் பிட்டு வைத்து நைவேத்தியம் செய்கிறார் குருக்கள். கூடியிருந்த சிறு கும்பல் ‘அம்மாளாச்சிக்கு அரோகரா’ என்று ஏக காலத்தில் கத்துகிறது. ஒன்பது வயதுப் பையன் ஒருவன் அழுகிற தன் தம்பியிடம், “இனி ஐயர் பிட்டுத் தருவார், வாங்கிக் கொண்டு வீட்டை போவோம்” என்று அரவணைப்பது சிறிது உரத்த தொனியிற் கேட்கிறது. பொன்னம்மாக் கிழவி எழும்பவுமில்லை; ‘அரோகரா’ப் போடவுமில்லை. அவள் கனவு நிலையிருந்து விடுப்படவேயில்லை . அவள் தேகம் நடுங்குகிறது. ”ஐயோ , வெள்ளம் வருகின்றதே, அடைப்பார் யாருமில்லையே” என்று கத்துவது சிலருக்குக் கேட்கிறது. ‘பாவம், கிழவி தன் மகளைப் பிரிந்ததிலிருந்து இப்படித் தான் ஏதாவது அலட்டுகிறது’ என்கிறாள் ஒருத்தி மற்றொருத்தியிடம்.

கிழவி செம்மனச் செல்வியின் துயரம் போன்ற ஒரு துயரக் கனவில் மூழ்கிவிட்டாள். சென்ற வருடம் மார்கழி மாதத்தில் நடந்த சம்பவம் அது. அதுவும், வெள்ளம் வந்த சம்பவந்தான்.

வானநாயகன் பூமாதேவியை நெடுநாட் பிரிந்திருந்து திடீரென்று ஒரு நாள் தன் கரம் நீட்டித் தழுவியது போல மழை காற்றோடு சேர்ந்து சோனாவாரியாகப் பெய்கிறது. பனை வட் டெல்லாம் பேயாட்டம் போடுகிறது. தொழுவத்தில் நிற்கும் மாடும் கன்றும் குளிரினால் கொடுகுகின்றன. வாழைகள் தலை சாய்ந்து பூமாதேவியை முத்தமிடுகின்றன. காவோலைகளும் பனைமட்டை களும் யுத்த களப்பூமி போல வளவுக்குள்ளே காட்சி கொடுக் கின்றன.

பொன்னம்மாக் கிழவியின் குடிசை தெருவோரத்தில் சிறிய மேட்டு நிலத்தில் இருந்தது. அவளுக்குத் தொலைவில் வெள்ளம் வந்தாலும் தன் குடிசையை ஒன்றுஞ் செய்யாது என்று எண்ணம். ஆனால், அப்போது பெய்த ‘பேய்மழை’ அவளது எண்ணத்தில் மண்ணைப் போட்டுவிட்டது. தெருக்கானில் ஓடிய வெள்ளம் எங்கேயோ தடைபட்டுத் தேங்கி அவள் குடிசையின் வாயிலில் தளம்பி ‘இப்பவோ பின்னையோ’ என்று உட்புகக் காத்துக் கிடப்பது போலக் காட்சியளித்தது.

அவள் கத்தத் தொடங்கி விட்டாள். அவளுக்கு இருக்கிற உடைமையெல்லாம் அந்தக் குடிசை ஒன்று தான். அதிலும் வெள்ளம் புகுந்து சேதப்படுத்துவதென்றால்? ”ஐயோ! வெள்ளம்! வெள்ளம்!! என் சட்டி போகப் போகிறதே! பிட்டவிக்கும் பானை, நீத்துப்பெட்டி, குண்டான் எல்லாம் வெள்ளத்தால் அள்ளுப்படப் போகின்றனவே. ஐயோ! தெய்வமே! இதற்கு நான் என்ன செய்யப் போகிறேன்?” என்று கத்தினாள்.

அப்போது தான் அவன் வந்தான்; கண் கண்ட தெய்வம் போல வந்தான். வெள்ளையன் என்ற பெயர் கொண்ட அவனைக் கண்டதும் கிழவிக்கு உச்சி குளிர்ந்தது. அவன் எதுவும் பேச வில்லை. தான் கொண்டு வந்த பிக்கானால் தெருவைக் கொத்தி தேங்கி நின்ற வெள்ளத்தை மறுபக்கம் விடப் பெருமுயற்சி செய் தான். அவன் கூலி பேசி நேரத்தைப் போக்கவில்லை. ஆருமற்ற வருக்குத் தான் செய்ய வேண்டிய உதவி – தன் கடமை – என்று எண்ணிச் செய்யத் தொடங்கி விட்டான். வைரம் பாய்ந்த அவ னது தேகத்தில் மழைத்தண்ணீர் பட்டுச் சிதறுகிறது. அவன் குளிரால் நடுங்கவோ கொடுகவோ இல்லை. பொன்னம்மாக் கிழவி அவன் வயிற்றைப் பார்க்கிறாள். அவளுக்கு விடயம் புரிகிறது. தாயில்லாத் தன் குழந்தைக்கு ஏதாவது வாங்கிச் சாப்பிடக் கொடுக் கவோ, ஒவ்வொரு நாளும் தான் அவித்துக் கொடுக்கும் பிட்டை வாங்கிக் கொண்டு போகவோ அல்லது தன் பசிக்கு எதாவது வாங்கவோ தான் அவன் வந்திருக்கவேண்டும். ஆனால், பிக் கானும் கையுமாக வந்து நிற்கிறானே…. எதுவாயிருந்தாலும் அவனுக்குப் பசி!

அந்தக் காற்றிலும் மழையிலும் நடுங்குங் கரங்களால் அவள் பிட்டவிக்கத் தொடங்கி விட்டாள். பெரும் போராட்டத்திற்குப் பிறகு அடுப்புப் புகைகிறது. இனி என்ன? பிட்டு அவித்து முடிந்த மாதிரிதான்…. கிழவிக்கு அது ஒரு நிமிட வேலை. ஆண்டாண் டாய்ப் பழகிய கை. வேலை பரபரவென்று நடக்கிறது.

வெள்ளையனும் கற்களைப் பெயர்த்து, தடைகள் எல்லா வற்றையும் நீக்கி, சிறிய பூண்டுகளைக் கூடக் கொத்தி எறிந்து, வெள்ளம் ஓடுகின்ற அழகை இரசித்து கிழவியின் குடிசையின் ஒதுக்குப் புறத்திலே வந்திருந்து கொண்டே “கமக்காறிச்சி எப்படி வேலை?” என்று கேட்டான்.

“பொடியா, உன் வேலைக்கென்ன? இன்னும் அஞ்சு நிமிடத்திலை என் வேலையையும் பாரன்” என்கிறாள் கிழவி.

“எனக்குத் தெரியும் கமக்காறிச்சி? நீ பிட்டுத் தான் அவிப்பா யென்று, இந்தக் குளிரிலை பிட்டுத் தின்றால் எப்படி இருக்கும். தெரியுமே?”

கிழவிக்கு ஒரு நிமிடம் ஒரு யுகம் போலப்படுகிறது. அவன் பசிக்கு உடனே பிட்டைக் கொடுத்து விட வேண்டும் என்பது அவள் பரபரப்பு. பானையில் தண்ணீர் வடிகிறதா என்று அவள் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டேயிருக்கிறாள்.

அவன் பேச்சுத் தொடருகின்றது….

“ஒருக்காலும் இல்லாத மழை கமக்காறிச்சி. விடும் விடும் என்று பார்த்தன். விடவில்லை. தோட்டத்துக்குப் போய் மாடு கண்டுகளை அவிழ்த்துக் கொண்டு வந்து எங்கடை அண்ணமார் கோயிலுக்கை விட்டு விட்டேன். பாவம். வாயில்லாச் சீவன்களை முதலிலை பார்க்க வேண்டும். வீட்டை போனேன். என்ரை ஆத்தை கத்தத் தொடங்கி விட்டுது. கமக்காறிச்சியின்ரை வீடு என்ன பாடோ ஓடடா, ஓடடா எண்டு …. அது தான் பிக்கானையும் எடுத்துக் கொண்டு ஓடி வந்தனான்.”

தன்னுடைய பேரக் குழந்தை பசியினால் கத்துவதையும், தனக்கு நல்லாகப் பசி பிடுங்குவதையும் அவன் சொல்லவில்லை. கிராமத்துத் தொழிலாளியின் தம்மானம் அப்படிப்பட்டது.

கிழவி குண்டானை வெளியே எடுக்கிறாள். நீத்துப் பெட்டியிலிருந்து ஆவி பறக்கிறது. பிட்டின் வாசனை மூக்கைத் துளைக்கிறது.

அவள் ஓர் ஓலைப் பெட்டியில் பிட்டைப் போட்டு அவ னுக்குக் கொடுக்கிறாள். ”நீ தின்றுவிட்டு அந்தக் குஞ்சுப் பொடி யனுக்கும் கொண்டு போ” என்கிறாள்.

ஆனால், அவன் உண்ணவில்லை, “நான் வீட்டிலை கொண்டு போய் தின்னுகிறன். கமக்காறிச்சி, இந்தப் பிட்டுக்கு காசு நாளைக்குத் தாறேன்.”

“காசை ஆரடா கேட்டா? காசுக்காகவா இந்த மழையிலையும் குளிரிலையும் பிட்டவித்தேன். இந்த மழையிலை வேலை செய்து என்ரை குடிசையைக் காப்பாத்தி விட்டியே சிவபெருமான் கூட பிட்டுத் தின்று விட்டுத்தான் வேலை செய்தார். அவராலை கூடப் பசி பொறுக்க முடியவில்லை. நீ என்றால் வேலை செய் தாய். நானோ பிட்டுத் தந்தேன். காசைப் பத்தி இரண்டு பேருமே பேசக்கூடாது.”

கனவு நினைவில் இருந்து கிழவி கண்ணை விழிக்கிறாள். அப்போது “பேத்தி! இந்தா நைவேத்தியம்” என்று குருக்கள் நீட்டுகிறார். பொன்னம்மாக் கிழவி பக்கத்தில் கிடந்த வாழை யிலையைக் கிழித்து சிறிது பிட்டை தன் அருகில் வைத்துக் கொள் கிறாள். பிட்டை வாங்கிய கையோடு பலர் அவசரம் அவசரமாக வீட்டுக்குப் போகப் புறப்படுகிறார்கள். வாசிப்பவரும் உரை சொல்பவரும் நாலைந்து ‘கிழடு கட்டைகளும்’, மூலஸ்தானத்து ‘அம்மாளும்’, தூண்களும், குத்துவிளக்கும் தான் மிச்சம்.

பொன்னம்மாக் கிழவிக்கு வீட்டு வேலை ஒன்றுமில்லை. ‘போறவழிக்குப் புண்ணியமாக’ புராணத்தையாவது கேட்போம் என்று வந்தவள் அவள். இருப்பிடத்தை விட்டு அவள் அசையவே யில்லை .

பென்சன்காரர் முன் வாசித்த பாடலையே மறுபடியும் வாசிக்கிறார்.

“கூற்றடுங் கமலபாதர் குறுந்துணிக்கரிய சீரை ஏற்றிடும் பிட்டு வாங்கி இன்புற அமுது செய்து மாற்றரும் பசியை யன்னே மாற்றினை இனிப்போய் வைகை ஆற்றில்நின் கூற்றிலுண்டாம் அருங்கரை அடைப்பன் என்றார்”

வாசிப்பு முடிகிறது. பாடலைப் பொருளுக்கேற்பப் பிரிக் கிறார். ‘கூற்றடுங் கமலபாதர்’ என்று சிங்கப்பூர்ப் பென்சன்காரர் இராகத்தோடு நிறுத்தியதும், ஆசிரியர் சிற்றம்பலம் அதே இராகத் தில் “மார்க்கண்டேய முனிவரின் பொருட்டு இயமனை உதைத் தருளியவராகிய அழகிய திருவடிகளையுடைய சிவபிரானென் னுங் கூலியாளர்” என்று பொருள் கூறுகிறார். அருமையாக அவர் கூறிய பொருள் கிழவியின் செவிகளில் அரைகுறையாகவே விழுகிறது.

வெளியே கூக்குரல். பெருஞ்சத்தம். குழந்தைகளின் ‘அடிபிடி’!

“ஐயா, எனக்குப் பிட்டுத்தரவில்லை . அவன் வாங்கினவன், பிறகும் வாங்குகிறான்” – ஒரு குழந்தையின் முறையீடு இது.

“இவன் என் தலைக்கு மேலாலை கையை நீட்டி என்ரை பிட்டை வாங்கிப் போட்டான்” – கட்டைப் பையனின் புகார் இப்படி.

“நெடுக அவனுக்குத்தான் கொடுக்கிறீர்? எங்களுக்கும் கொஞ்சமாவது பிட்டுத் தாருங்கள்” பிறிதொரு குரலின் கெஞ்சல்.

“எல்லாம் முடிந்து விட்டது. நாளைக்கு வாருங்கள். கடலை யும் வாழைப்பழமும் தருகிறேன்” என்று சொல்லியபடியே அவசரம் அவசரமாகத் தட்டத்தில் இருந்த சிறிது பிட்டை யாரோ ஒரு குழந்தையில் கையிலே தட்டிக் கொட்டிவிட்டு, கிழவி ஒருத்தி நீட்டிய அர்ச்சனைப் பணத்தில் குறியாகத் திரும்புகிறார் குருக்கள்.

“வாடா, போவோம்.”

“இல்லை, எனக்குப் பிட்டு வேணும்.”

“வீட்டை வாடா அவிச்சுத் தாறேன்.”

“எனக்கு இப்ப இங்கே பிட்டு வேணும்.”

‘படார், படார்’ என்று குழந்தைக்கு அடி விழுகிறது. அதன் அலறல் கோவில் முழுவதும் துல்லியமாகக் கேட்கிறது.

“ஆத்தை எனக்குப் பிட்டு வேணும் “

சலிப்பு. பின்பும் அதே குழந்தையின் கதறல்.

கதையிலே இலயித்திருந்த பொன்னம்மாக் கிழவிக்கு கதறல் கேட்கிறது அவளுக்கு அத கேட்டுப் பழகிய குரலாகப்படுகிறது. அவள் பிட்டையும் பொல்லையும் எடுத்துக் கொண்டு புறப்படுகிறாள்.

‘நன்று நன்றின்னுமன்னே நயந்து பிட்டளிப்பையா கில்’ என்ற அடுத்த பாடலைப் பென்சன்காரர் பாடுவது அவள் காதிலே பட்டதும் படாததுமாக விழுகிறது. அவள் கோவில் முகப்பிலே வந்து பார்க்கிறாள். வெள்ளையனின் அந்தக் ‘குஞ்சுப்பையன்’ தான் அழுது கொண்டிருக்கிறான். அவனுக்கும் ஐந்தாறு பையன் களுக்கும் பிட்டுக் கிடைக்கவில்லை . விபரம் தெரிந்த சிறுவர்கள் போய்க்கொண்டிருக்கிறார்கள். ஆனால் விபரம் தெரியாத பிஞ்சு, குழந்தை. தன் மழலைமொழியால் பிட்டுக் கேட்டதற்கு வெள்ளை யனின் தாய் – கறுப்பி – அடித்துக் கொண்டிருக்கிறாள். கிழவிக்குத் தன் பேரக்குழந்தையை யாரோ அடிப்பது போன்ற உணர்ச்சி ஏற்படுகிறது. அவள் தன் முழுப்பலத்தையும் சேர்த்து “கறுப்பி! அடியாதையடி குழந்தைக்கு என்று உரப்புகிறாள்.

குழந்தை திருப்பிப் பார்க்கிறது.

“பாட்டி, பாட்டி, பிட்டு! பிட்டு!” என்று கத்திக் கத்திக் குழந்தை ஓடிவருகிறது.

“உனக்குத்தானே மேனே கொண்டு வந்தனான்? இந்தா தின், புட்டு” என்று ஆதரவோடு கொடுக்கிறாள்.

குழந்தை ஆசையோடு தின்னுகிறது. சிறிது தின்ற பின்பு துப்புகிறது.

“ஏண்டா, துப்புகிறாய்?”

“இது கூடாது பாட்டி” என்கிறது கொச்சை மொழியில் குழந்தை. பொன்னம்மாக்கிழவியும் மென்று பார்க்கிறாள். பாதி அவிந்ததும் பாதி அவியாததுமாகப் பிட்டு இருக்கிறது.

‘சுவாமிக்கு நைவேத்தியம் செய்யும் பிட்டைக் கொஞ்சம் கவனமாக அவிக்கக் கூடாதா? என்று அவள் மனதுள் நினைக் கிறாள். ஆனாலும், ”சுவாமிக்கு வைத்த பிட்டை கூடாதென்று சொல்லக் கூடாது” என்று குழந்தைக்குச் சொல்கிறாள்.

குழந்தை மறுபடியும் ”பாட்டி, பிட்டு வேணும்” என்று சிணுங்குகிறது.

“வாடா, வீட்டை போவோம். வீட்டிலை நல்ல பிட்டாய் அவித்துத் தாறேன்” என்கிறாள் அவள். குழந்தையின் கையைப் பிடித்தபடி பொன்னம்மாக் கிழவி நடக்க ஆயத்தமாகிறாள். கறுப்பி ஓடி வந்து குழந்தையைத் தூக்குகிறாள்.

“கமக்காறிச்சி செல்லம் குடுத்து இது கெட்டுப் போச்சு. எந்த நாள் பார்த்தாலும் எழும்பின நேரந்தொட்டு ‘புட்டு, புட்டு’ என்று கத்தியபடி…. நான் ஆரட்டைப் போறது? இண்டைக்குக் கோயி லிலை குடுக்கினம் என்று கேள்விப்பட்டு இங்கை வந்தேன். இங்கையும் தந்தால் தானே? இந்தக் கூப்பன் காலத்திலை அவை யையும் ஏன் தான் குறை சொல்லுவான்?”

‘ஏன்ரி கறுப்பி புறுபுறுக்கிறாய்? நான் தான் இவனுக்கு எப்போதும் பிட்டுக் கொடுக்கிறேனே? நீயும் வெள்ளையனும் கல்லடிக்கப் போய் விடுவியள். இவனை யார் வளர்த்தது? இவன்ரை தாயும் பெத்த வீட்டுக்கை செத்துப் போய்விட்டாளே. பாவம் தாயில்லாப் பிள்ளையென்று கொஞ்சம் செல்லம் கொடுத்திட்டேன்.”

“என்ன கமக்காறிச்சி எனக்கு இது தெரியாத கதை போலப் புதிதாய்ச் சொல்லுது. எண்டாலும் இனிமேல் அடிச்சுப் பயப் படுத்தி வளக்க வேணும். குழந்தைகளுக்கு செல்லம் கூடாது. பணக்கார வீட்டுப் பிள்ளையள் எப்படியெண்டாலும் வளரலாம். எங்கடை பொடியன் அப்பிடி வளரலாமோ? கமக்காறிச்சி, இன்று மேற்பட்டு இவனை உங்கடை வீட்டை விடேன். கல்லடிக்கிற இடத்துக்கு நானே கொண்டு போவேன். நீங்க குடுக்கிற செல் லத்தைப் பார்த்து ஊரார் எல்லாம் சிரிக்கினம். கமக்காறிச்சிக்கு விசர் என்று கூடச் சொல்லுகினம்.”

பொன்னம்மாக்கிழவிக்கு கறுப்பியின் இந்த வார்த்தைகள் ஆவேசத்தைக் கிளப்பி விட்டன. அவள் உருத்திரமூர்த்தியானாள். “என்னடி சொன்னாய் நீ வெள்ளையன் செய்த உதவிக்கு இந்தக் குழந்தைக்குப் பிட்டுக் கொடுத்து வளர்க்கிறேன் என்று நினைக் கிறாய் நீ. இல்லைடி இல்லை. எனக்கும் ஒரு பொம்பிளைப் பிள்ளை இருந்து இருபத்தொரு வயதிலை செத்துப் போச்சே அதுவும் கலியாணம் செய்து ஒரு பிள்ளையும் பெத்தால் ஆசை யாய் வளர்ப்பேன் என்று நினைத்தேன். முடியவில்லை. இந்தத் குஞ்சுப் பொடியனைக் காணும் போதெல்லாம் அந்த நினைப் புத்தான் வருகுது. அந்த நினைப்பிலே தான் பிட்டுக் கொடுக்கின் றேன். வளர்க்கின்றேன். ஊரில் ஆட்கள் விசர் என்று சிரிக்கினம் எண்டியே. சிரிக்கட்டும்; சிரிக்கட்டும். எனக்கென்ன? உவையே என்னைத் தூக்கிச் சுடப்போகினம்? எனக்காக அழப்போகினம்? என்னுடைய கையாலை பிட்டுத்தின்ற நீங்கள் தானே சுடப் போறியள் அழப்போறியள்; ஏண்டா உன் ஆத்தை உன்னை இனிமேல் என்னட்டை விடமாட்டாளாம். நீயும் அப்படியே அவள் சொல்லைக் கேட்டு நின்று விடுவாயா? நிண்டா அவ்வளவுதான். பிட்டுக்காரக் கிழவி அடுத்த நாள் செத்தே போய்விடுவாளடா”

கறுப்பியின் கண்கள் கலங்கின. ‘இப்படியும் ஒரு மனுஷப் பிறவி இருக்க முடியுமோ? ‘ என்று உருகுகிறாள்.

வீடு வந்து விட்டது. கிழவி பரபரவென்று அடுப்பை மூட்டி னாள். மாவைக் குழைத்து நீத்துப் பெட்டியில் வைத்துக் குண்டா னால் மூடினாள்.

அந்தச் சிறு ‘குஞ்சுப் பொடிய’ னும் முற்றத்தில் கிடந்த சிறு சுள்ளிகளை எடுத்து வந்து கிழவிக்கு நீட்டுகிறது.

கறுப்பி சிரிக்கிறாள். பொன்னம்மாக் கிழவியோ, “அடே! சின்னப்பயலே, வெள்ளையனும் வேலை செய்து போட்டுத்தான் பிட்டுத் தின்னுவான். அதிலும் ஒழுங்காகச் செய்வான். அவன் நல்ல பொடியன், நீயும் வேலை செய்கிறாயா? செய். செய். வேலை செய்தால் தான் வாழமுடியும்” என்கிறாள்.

பானையில் தண்ணீர் வடிகிறது. கிழவி பிட்டைக் கீழே இறக்குகிறாள். வழமை போல ஒருகை பிட்டை தட்டில் செருகி யிருக்கும் ‘அம்மன்’ படத்தின் முன் படைக்கிறாள். பின்பு குழந் தைக்குச் சிறிய அழகிய சிரட்டை ஒன்றில் போட்டுக் கொடுக் கிறாள்.

குழந்தை பிட்டைத் தின்றபடியே, “பாட்டி, பாட்டி இது நல்ல பிட்டு” என்கிறது. உள்ளத்தில் கிளர்ந்த இன்ப உணர்ச்சியின் பேறாக, பொக்குவாய் தென்னம்பாளை போல் வெடித்துக் கொள்ள, அவளது கொடுப்புப்பற்கள் இரண்டும் வெளியே தெரிகின்றன.

அப்போது கோவிலில் நடைபெறும் புராண படனத்தில் ‘கட்டு மரைத்துணிச்சீரை’ என்ற பாட்டு வாசிக்கப்படுகிறது.

(ஈழகேசரி)

– முற்போக்குக் காலகட்டத்துச் சிறுகதைகள், முதற் பதிப்பு: மாசி 2010, பூபாலசிங்கம் பதிப்பகம், கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *