சத்திய சோதனை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 19, 2014
பார்வையிட்டோர்: 9,884 
 
 

ஒவ்வொரு நாட்களையும்போலவே அன்றைய காலையும் விடிந்தது. என்றும்போலவே அன்றும் வேலைக்கு வந்தான். அன்றைய முழுவியளம் ஏதாவது விசேடமாக இருந்ததா என்றுகூட ஞாபகமில்லை. அப்படியாயின் இந்த யோகம் எந்தத் திசையில் இருந்து அடித்தது?

அல்லது…. காலையில் சாப்பாட்டுக் கடையில் நடந்த சம்பவத்துக்காக மனம் நொந்து கடவுளை வேண்டினானே… அதற்குப் பலனாகத்தான் கடவுள் கண் திறந்திருக்கிறாரோ என்று தோன்றியது சத்தியமூர்த்திக்கு!

வேலைக்கு வருமுன்னர் காலைச்சாப்பாட்டுக்காக வழக்கமான சாப்பாட்டுக் கடைக்குள் நுழைந்தான் சத்தியமூர்த்தி. எதையாவது வயிற்றுப்பாட்டுக்குப் போட்டுவிட்டு வந்து கணக்குக் கொப்பியை எடுத்தபொழுது முதலாளி சீறினான்.

‘சாப்பிட்டுச் சாப்பிட்டுப்போட்டு… கணக்குக் கொப்பியைத் தூக்கினாச் சரியோ? நான் என்ன இஞ்ச சத்திரமா நடத்துறன்… எப்ப தீர்க்கிறதாய் யோசனை?.. கொஞ்சத்தையெண்டாலும் இப்ப குடுக்கலாமே?”

பலர் முன்னிலையில் தலைகுனிந்த கூச்சம் ஒரு பக்கம் போக… “என்னடா இது? விடியக் காலமையே கடன் பிரச்சினை?” என எரிச்சலும் ஏற்பட்டது.

தினமும் அவன் கடவுளை வணங்கும்போது “விடியற்காலையே யாராவது கடன்காரர்கள் வந்து காசு கேட்கக்கூடாது?“ என வேண்டுவதுண்டு. காசு கொடுக்க வேண்டியிருக்கிறது. கொடுக்கிற வசதியுமில்லை. பிறகு எப்படி அவர்களைச் சமாளிப்பது என்பது போக, அவனுக்குப் பயம் இன்னொரு புறம். அவர்கள் ஏதாவது மனதைப் புண்படுத்துகிறமாதிரி பேசிவிட்டால் மறுகதை ஒன்றும் கதைக்க முடியாது. அன்று முழுவதும் மனம் குழம்பிப்போகும். சரியாக அலுவல்களில் ஈடுபட முடியாமலிருக்கும். ஆனால் இவையெல்லாம் சாப்பாட்டுக் கடை முதலாளிக்குத் தெரியவேண்டிய நியாயமில்லையே! அவருக்கு அவர் பணம்.

மாதாமாதச் சம்பளத்தில் சாப்பாட்டுக் கடைக்கும் ஒரு பகுதியைச் செலுத்தவதுண்டு. ஆனால் எப்போதும் ஒரேமாதிரியாகவா இருக்கிறது? காசுப் பிரச்சினைகள் வருவதற்கு ஒரு காரணமா தேவைப்படுகிறது? மனைவியின் பிள்ளைப் பேற்றுச் செலவுகள் வந்தன. அதற்காகச் சில இடங்களில் மாறவேண்டியேற்பட்டது. அதிலும் யாழ்ப்பாணத்தில் இப்போது காசு பிரட்டுவதே பெரும்பாடு.

மனைவி கடிதம் எழுதியிருந்தாள்… கடன்காரர் யாரோ நெருக்குகிறார்களாம்.

“பாவம் தனிய இருக்கிறவள் பிள்ளையோடு என்ன கஷ்டப்படுகிறாளோ… நான் எப்படியாவது சமாளித்துக்கொள்ளலாம்..“ என எண்ணிக்கொண்டு வீட்டுக்கு வழக்கமாக அனுப்புகிற தொகையைவிடக் கூடுதலாக அனுப்பிவைத்தான்.

கடை முதலாளி நெடுக அறிந்த மனிசன்தானே… கொஞ்சக்காலம் தவணை கேட்கலாம் என்றுதான்… கடந்த இரண்டுமாதமாக அவரைக் கவனிக்காமல் விட்டிருந்தான். ஆனால் அந்த மனிசனோ அவனது காசு செலுத்தப்படாமையால் கடையை இழுத்து மூடப்படவேண்டிய கஷ்ட நிலை எய்துவது போலப் பலர் முன்னிலையில் அவனது தோலை உரித்துவிட்டார்.

இச் சம்பவத்தினால் சத்தியமூர்த்தி மனம் வேதனைப்பட்டுக்கொண்டே வேலைக்கு வந்தான். ஓய்வு ஒழிச்சலின்றி ஓவர்ரைம் வேலை செய்து உழைத்தாலும் ஒரு முடிவையும் காணோம். “ஏனப்பா என்னை இப்படிச் சோதிக்கிறாய்?” என்று கடவுளிடம் கேட்டான்.

அதுதான் கடவுள் கண் திறந்திருக்கிறார்போலும்! இன்றைக்கு மாலையே சாப்பாட்டுக் கடைக்காரனின் முகத்தில் கொஞ்சக் காசையாவது எறியலாம்! – அலுவலகத்துக்கு வந்ததுமே அவனது பகுதி அதிகாரி வேலாயுதம் ஐயா சத்தியமூர்த்தியை அழைத்தார். தொழிற்சாலையின் மெசின்களுக்கு அவசரமாகத் தேவைப்படும் சில உதிரிப்பாகங்கள் வேண்டி வருமாறு கூறி அவனிடம் காசு ஐயாயிரம் ரூபாயையும் கையளித்தார். தொழிற்சாலை இயந்திரங்களுக்குத் தேவையான உதிரிப் பாகங்களையும் மற்றைய பொருட்களையும், வெளிநாட்டு ஓடர்ககளாகவோ அன்றி உள்ஊரிலோ பெற்றுக் கொடுக்கவேண்டிய பொறுப்பு கொள்வனவுப் பகுதியுடையது.

உள்ஊர்ப் பொருட்களை “பேச்சஸிங்“ செய்யப் போகிறவன் யோகராசன். அதில் அவனுக்கு நல்ல அடி இருக்கிறது என்று பரவலாக ஒரு கதை உண்டு. அந்த அடியில் ஒரு பங்க வேலாயுதம் ஐயாவுக்கும் போய்ச் சேருகிறது என்றும் சிலர் சொல்லிக்கொள்வார்கள். அதனால்தான் அவர் எப்போதுமே யோகராசனை “பேச்சஸிங்“ செய்ய அனுப்புகிறாராம்.

“யோகராசன் நல்லாகக் கதைக்கத் தெரிஞ்சவன்… நாலு இடங்களில் சுளியோடித் திரிஞ்சு எப்படியாவது தேவையான சமான்களையும் கொண்டு வந்துவிடுவான்..” என்பது வேலாயுதம் ஐயாவின் நியாயம். அது சரியான நியாயம்தான்! அதனால்தான் அவன் நன்றாகக் கதைத்து வேலாயுதம் ஐயாவையும் கைக்குள்ளே போட்டு வைத்திருக்கிறான் என்றும் செக்சனில் கதைத்துக்கொள்வார்கள்.

இதிலுள்ள உண்மை – பொய்யை அறிய சத்தியமூர்த்தி ஒருபோதும் முயன்றதில்லை. இது தனக்குத் தேவையற்ற விஷயமென்றே அவன் கரிசனைப்படாமலிருந்தான்.

நேர்மையான உழைப்பும், உண்மையான சம்பளமும்தான் நிறைவான வாழ்க்கை என நம்பியிருப்பவன் சத்தியமூர்த்தி. நேர்மையான உழைப்புக்குரிய பலனும் உயர்ச்சியும் ஒருவனுக்குக் கட்டாயம் கிடைக்கத்தானே வேண்டும்?

ஆனால் “ஐந்து வருடங்களுக்கு முன்னர் நாலாந்தரக் கிளாக்காக வேலையில் சேர்ந்து இன்னும் நாலாந்தரத்திலேயே நீ இருக்க, உன்னோடு நாலாந்தரக் கிளாக்காகவே வேலையில் சேர்ந்த யோகராசன் மட்டும் எப்படி விசேட தரத்துக்கு உயர்ந்துவிட்டான்…. அது வேலாயுதம் ஐயாவின் விசேட செல்வாக்கினால்தான்!” என்று கூட வேலைசெய்யும் தவச்செல்வன் அடிக்கடி சத்தியமூர்த்திக்குக் கூறுவான். அது சத்தியமூர்த்திக்குப் புரியாத விடயமல்ல. எனினும் அவன் மற்றவர்களைப்போல “ஒரு புரமோசனால் என்ன கிடைக்கப்போகிறது? பதவிப் புகழா?….. அல்லது கொஞ்சம் சம்பள ஏற்றமா? அவ்வளவு தானே…. சாப்பாட்டுக்காக உழைக்கிற உத்தியோகத்தை ஒரு பதவியாக நான் கருதவுமில்லை… இப்ப கிடைக்கிற சம்பளமே எனக்குப் போதும்…“ என்பான்.

“அதுதான்… நீ இன்னும் இந்தத் தரித்திர நிலையிலேயே இருக்கிறாய்….? உன்ரை நேர்மையும்… நீயும்! உனக்கிருக்கிற கடன்களை ஒருக்கால் லிஸ்ட் போட்டுக் காட்டு பார்ப்பம்…. கிடைக்கிற சம்பளம் போதுமெண்டால் ஏன் கடன்படுகிறாய்?“ எனக் கிண்டல் செய்வான் தவச்செல்வன்.

அதுகூட உண்மைதானோ?

யோகராசன் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறான்! ஒரு பிரச்சினையும் இல்லாதவன்மாதிரி சிரித்துச் சிரித்துக் கதைக்கிறான். தன்னைப் போல் “உம்“ என்றிராமல் செக்சனிலுள்ள பெண் பிள்ளைகளுடன் கலகலத்துப் பேசுகிறான்!

கழுத்தில் தங்கச் சங்கிலி, எந்நேரமும் சிகரெட் பெட்டி.. பொக்கட்டின் கனத்தைக் காட்டுகிறது. வேலையில் சேர்ந்தபிறகு ஊரிலே காணி வேண்டி வீடு வாசலும் கட்டியிருக்கிறான். அவனது பெயரில் ஒரு மினி பஸ்சும் ஓடித்திரிகிறதாம்! யோகராசனும் நேர்மையான உழைப்பையே நம்பியிருந்தால் இந்தச் செல்வாக்கெல்லாம் கிடைத்திருக்குமோ என்னவோ!

கடன் சுமைகள் அழுத்துகிறபொழுது காசுப் பிரச்சினைகள் தோன்றுகிறபொழுது மனதில் ஒரு சபலம் தோன்றுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. அதற்குத் தவச்செல்வனின் உந்துதலும் காரணமாயிருக்கலாம்.

யோகராசனைப்போல, பேச்சஸிங் போகிற வாய்ப்பு தனக்கும் கிடைத்தால், ஒருவேளை தானும் கடன் தனியில்லாமல் நிம்மதியாக இருக்கலாம்… என்று தோன்றும் சத்தியமூர்த்திக்கு. ஆனால் யோகராசன் இருக்கிறவரை அந்த வாய்ப்பு மற்றவர்களைக்குக் கிடைக்கப்போவதில்லை.

இன்றைக்கு என்ன காரணமோ யோகராசன் முன்னறிவித்தலின்றி வேலைக்கு வராமல் விட்டுவிட்டான். அதுதான் தனக்கு இந்த யோகம் அடிக்கக் காரணம் என சத்தியமூர்த்தி சந்தோஷமடைந்தான். இதனால் யோகராசனுக்கு அடுத்தப்படியாகத் தன்னைத்தான் வேலாயுதம் ஐயா கருதுகிறார் என்ற அற்ப பெருமையும் ஏற்பட்டது.

இந்தச் சந்தர்ப்பத்தை நன்றாகப் பயன்படுத்தி வேலாயுதம் ஐயாவிடம் நல்லபெயர் எடுக்க வேண்டும் என எண்ணிக்கொண்டான் சத்தியமூர்த்தி. அப்படியானால் அவர் தொடர்ந்தும் தன்னையே பேர்ச்சஸிங் செய்ய அனுப்பக்கூடும்!

இப்படியான கற்பனையில் மிதந்து, மனது ஆனந்தமடைந்தது. யோகராசன் வேண்டிவரும் பொருட்களை அதைவிடக் குறைந்த விலைகளில், தான் வேண்டிவந்து காட்டவேண்டும் எனத் திட்டமும் போட்டான். கொள்வனவுப் பகுதியில் பலகாலம் வேலை செய்வதால் யோகராசன் வேண்டிவரும் பொருட்களின் விலையை பிறகு மார்க்கட்டில் விசாரித்து வருவான் தவச்செல்வன்.

“இன்ன பொருள் இவ்வளவு குறைவாக இருக்கிறது… இவன் இவ்வளவு அடித்திருக்கிறான்” என மற்றக் கிளார்க்மார்களுடன் சேர்ந்து கதைப்பான். தனது சொந்தப் பணத்தையும், சொந்த நேரத்தையும் செலவு செய்து விசாரித்து வந்து அதை ஒரு கடமையைப்போல அவன் செய்வது வழக்கம்.

அப்படி அவர்கள் தன்னைப்பற்றியும் கதைக்க இடம் வைக்கக்கூடாது என நினைத்தான் சத்தியமூர்த்தி. “நியாயமான கொமிசன்” வைத்தக்கொண்டு பொருட்களை வேண்டி வந்தால் வேலாயுதம் ஐயாவின் மனத்திலும் இடம்பிடிக்கலாம்.. மற்றவர்களது குறைக் கதைகளுக்கும் இடம் இராது! அடிப்பது கொமிசன் அதில் குறைவாக, கூடுதலாக என்று நியாயம், அநியாயமெல்லாம் பேசுவதற்கு என்ன இடமிருக்கிறது… என்று நினைத்து பின்னர் சிரித்துக் கொண்டான்.

ஐயாயிம் ரூபாவிற்கும் சாமான்கள், வேண்டினால் குறைந்தது நானூறு ரூபாயாவது கையில் கிடைக்கும். ஒவ்வொரு பொருட்களுக்கும் குறைந்தது பத்துவீதம் என்றாலும் கொமிசனாக தருவார்கள் என்று தவச்செல்வன் சொல்கிறவன். கிடைக்கும் பணத்தை அப்படியே கொண்டுபோய்ச் சாப்பாட்டுக் கடைக்குக் கொடுத்துவிடலாம். என்ன இலகுவாக எல்லாக் கணக்கும் போட்டாயிற்று! ஆனால் அவ்வளவு இலகுவாகக் கைக்குக் காசு வந்துவிடுமா…. என்பது நம்ப முடியாமலிருந்தது.

உண்மையில் கடைகளில் கொமிசன் தருவார்கள் என்பது என்ன நிச்சயம்? அவர்களிடம் வலிந்து கேட்கவேண்டியிருக்குமோ! எந்த முகத்தை வைத்துக்கொண்டு கேட்பது? காசு தரும்படி கேட்பது இரந்து பிச்சையெடுப்பது போலத்தானே? அப்படித் தருவதானாலும் கடைக்காரன் என்ன புண்ணியத்துக்காகவா தரப்போறான்? பொருட்களின் பெறுமதிக்கு மேலாக எடுக்கும் கொள்ளைப் பணத்தில் ஒரு பங்கைத்தானே தரப்போகிறான். இது எவ்வளவு பொல்லாத விடயம். இது நிலைக்கக்கூடிய பணமா? இந்தப் பணத்தைக் கையிலெடுத்தால் உருப்பட முடியுமா?

பயம் மனதை ஆட்கொண்டது. நிம்மதி குலைவதுபோலிருந்தது. தான் செய்யப்போகும் காரியம் சரியானதா பிழையானதா என்ற குழப்பம் சத்தியமூர்த்தியின் மனதிலேற்பட்டது. நிம்மதி கெட்டுப்போவதைவிட நேர்மையாக உழைப்பது மேல். அதில் கடன் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கவேண்டி வரினும் அது அவ்வளவு மோசமானதல்ல! கடன்காரர்களைப்பற்றிய நினைவு எப்போதும் கலக்கத்தையளித்தாலும் நெஞ்சு சுத்தமாக இருக்கும்.

அதைவிட்டு என்ன பிழைப்பு இது?

சும்மா வருகிற காசை நினைத்தவுடனேயே கிலி தொடுகிறது. அந்தக் காசைக் கையில் எடுத்தால் என்னென்ன அனர்த்தங்கள் நடக்குமோ? தொழிலிலே சுத்தம் இருக்க வேண்டும். இன்றைக்கு வேண்டும் பொருட்களுக்குரிய விலையைச் சரியாகக் கொடுப்பது. ஒரு சதமும் எனக்கு வேண்டாம்.. என நினைத்துக்கொண்டான் சத்தியமூர்த்தி.

இவ்வாறு முடிவெடுத்து சிறிது நேரத்தில்… இதனால் வேலாயுதம் ஐயாவின் பகையைச் சம்பாதிக்க வேண்டிய கட்டமும் வந்துவிடுமோ என்ற கவலை தோன்றியது. வழக்கமாக யோகராசனின் அடியில் வேலாயுதம் ஐயாவுக்கு ஒரு பங்கு இருக்கிறது எனக் கதைத்துக்கொள்கிறார்கள். அது உண்மையானால் அதை அவர் தன்னிடமும் எதிர்பார்க்கக்கூடும். அது மட்டுமன்றி அவரைக் கவனிக்காமல் விட்டால் அவர் தன்னையும் கவனிக்காமல் விட்டுவிடக்கூடும்.

யோகராசன் ஒருபோதும் முன்னறிவித்தல் இன்றி லீவு எடுக்கிறவனல்ல. முன்னரே வேலாயுதம் ஐயாவிடம் பேசி அதற்குரிய ஒழுங்குகளைச் செய்துகொள்வான். இந்த ஒழுங்கு முறையினாற்தான் பேச்சஸிங் செய்யப்போகும் அலுவல் மற்றவர் கைகளுக்குள் போகாமல் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது யோகராசன் சொல்லாமற்கொள்ளாமல் வேலைக்கு வராமல் விட்டதற்கும் ஏதாவது உட்காரணம் இருக்கலாமல்லவா? அவர்களுக்கிடையில் ஏதாவது தெறிப்பு ஏற்பட்டிருக்கலாம். இந்தச் சந்தர்ப்பத்தைப் பிடித்துக்கொண்டு முன்னேறுவதை விட்டு இதென்ன வீண்வாதம்…. நேர்மை… உழைப்பு… மண்ணாங்கட்டி என்று. ஊரிலே இன்றைக்குக் குறுக்கு வழியில் சம்பாதிப்பவர்கள்தானே கடன் தனியில்லாமல் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.

“பேச்சஸிங்” செய்வதற்காக கார் ஒழுங்கு செய்திருப்பதாகவும், ஒன்பது மணிக்கு ட்ரைவர் அலுவலகத்துக்கு வருவான், எனவே ரெடியாகுமாறும் சத்தியமூர்த்தியிடம் வேலாயுதம் ஐயா சொன்னார். தொழிற்சாலை கொழும்பு நகரத்திலிருந்து சுமார் அறுபது மைல்களுக்கு அப்பாலுள்ளது. எப்பொழுதும் கொம்பனிக் காரிலேதான் யோகராசனும் பேச்சஸிற்கிற்காகக் கொழும்பு போய் வருவான். போனால், பொழுதுபட்ட பிறகுதான் திரும்ப வருவான். திரும்ப வரும்வரை “ஓவர்ரைம்” கிடைக்கிறது. இப்படி அவனுக்கு வருமானங்கள் பல. அவன் கொம்பனிக் காரிலேயே தனது சொந்த அலுவல்களையும் முடித்துக்கொண்டு வருகிறான் என தவச்செல்வன் சொல்வதுண்டு.

சத்தியமூர்த்திக்கும் கொழும்பிலே செய்யவேண்டிய அலுவல்கள் பல இருந்தன. அதற்காகப் பிரத்தியேகமாக லீவு எடுக்கவேண்டும்… அடிக்கடி ஊருக்குப் போய்வருவதால் அவனது லீவு நாட்கள் ஏற்கனவே முடிந்திருந்தன. லீவு எடுப்பதானால் “நோபேயில்“ போகவேண்டும் என்ற காரணத்தால் காரியங்களும், காலமும் இழுபட்டுக்கொண்டேயிருந்தன. இன்றைக்கு ஒருசில அலுவல்களையாவது முடித்து வரலாம் என நினைத்தான் சத்தியமூர்த்தி. இல்லாவிட்டால் தன்னை ஒரு “முழுப் பேயனாக” வர்ணிப்பான் தவச்செல்வன்.

சரியாக ஒன்பது மணியளவில் கார் வந்தது.

சத்தியமூர்த்தி பொருட்கள் வேண்டி முன்பின் அனுபவமில்லாதவன். எந்தக் கடையில் வேண்ட வேண்டுமென்பது தெரியாது. அதனால் பல கடைகளுக்கு அலைந்து திரியவேண்டியேற்படுமோ என நினைத்தான். எப்படியாயினும் உதிரிப்பாகங்களைச் சரியானதாயும், தவறாமலும் வேண்டி வரவேண்டுமென்ற பதட்டம் இருந்தது. ட்ரைவர் வழக்கமாக யோகராசனுடன் போகிறவன். ஆதலால் அவனிடம் விசாரித்துத் தெரிந்துகொள்ளலாம் என எண்ணிக் கேட்டான்.

“நீங்கள் ஒண்டுக்கும் பயப்படவேண்டாம். எல்லாம் நான் வேண்டித்தாறன்…” எனக் கூறி என்ன என்ன பொருட்கள் வேண்ட வேண்டுமென்பதையும் சத்தியமூர்த்தியிடம் கேட்டு அறிந்து கொண்டான் ட்ரைவர்.

பிறகு தனது கள்ளச்சிரிப்பை மெல்லக் காட்டினான்!

‘என்ன… இப்ப ஐயாவின்ரை பக்கம் காத்து அடிக்குதுபோல…!”

திடுமென சத்தியமூர்த்தி அதிர்ச்சி அடைந்தான். “என்ன இது?”

இவன் என்ன சொல்கிறான்? இவனும் அந்த விஷயத்தைக் குறிப்பிட்டுத்தான் கதைக்கிறானா? அடடே இது இவங்களுக்கெல்லாம்கூடத் தெரியவருமா? எவ்வளவு கேவலம்! நாளைக்குத் தன்னை ஒரு மனிசன் என இவன் மதிப்பானா?

‘நீ… என்னப்பா சொல்லுறாய்?…. எனக்கு விளங்கயில்லை…”

பபா! இதுக்கு ஒன்றுமே தெரியாது! இது பால்குடிக்கத் தெரியாத பூனை!

‘இல்லை… நெடுகலும் யோகு ஐயாதான் பேச்சஸிங் போறவர்…. இண்டைக்கு நீங்கள் வாறியாள்… அதுதான் கேட்கிறன்!”

‘அவர் இண்டைக்கு லீவு.. மெசினுக்கு ஏதோ பாட்ஸ் அவசரமாய்த் தேவையாம்… அதுதான் நான் போறன்.”

கொழும்பு போய்ச் சேர்ந்ததும் வேண்டவேண்டிய பொருட்களுக்குரிய “லிஸ்ட்டை” ட்ரைவர் சத்தியமூர்த்தியிடமிருந்து பெற்று, கடைக்காரனிடம் கொடுத்தான். கடைக்காரர் “பில்” போட்டு முடித்து மூவாயிரத்து இருநூற்றுச் சொச்ச ரூபா எனக் கணக்குச் சொன்னார். சத்தியமூர்த்தி பணத்தை கொடுக்கப் பெற்றுக்கொண்டு அதற்குரிய மிகுதியை அவனிடம் ஒப்படைத்தார்.

பிறகு இன்னும் மூன்று நூறு ரூபாய்த் தாள்களைக் கையிலெடுத்து கடைக்காரர்… சத்தியமூர்த்தியையும் ட்ரைவரையும் மாறி மாறிப் பார்த்து, எந்தப் பக்கம் நீட்டுவது என்று புரியாதவர்போல சிரிப்பைக் காட்டினார். பின்னர் அந்தக் காசை சத்தியமூர்த்தியின் பக்கம் நீட்டினார்.

‘இது … உங்கட கொமிசன்!”

சத்தியமூர்த்தி அதிர்ந்துபோனான். ஏதோ இவனிடம் நான் காசு கேட்ட மாதிரி ஏன் தூக்கித் தருகிறான்? அதுவும் ட்ரைவர் முன்னிலையில்! அதைக் கைநீட்டி வேண்டினால் ட்ரைவரும் தன்னை மட்டமாக நினைப்பானே! தன்னிடம் கொடுக்குமாறு ட்றைவர்தான் கண்ணசைத்துக் காட்டியதுபோலுமிருந்தது.

‘சீச்சி எனக்கு வேண்டாம்!”

‘இல்லை ஐயா பிடியுங்கோ!”

‘இதெல்லாம் எனக்குப் பிடிக்காத விஷயமப்பா… எனக்கு இந்தமாதிரிப் பழக்கம் ஒன்றும் இல்லை.”

இதைக் கேட்ட கடைக்காரர் சங்கடப்பட்டு ட்ரைவரைப் பார்த்தார்.

‘இதுக்குப் போய் ஏன் கனக்க யோசிக்கிறீங்கள்?… இதெல்லாம் வழக்கமான விஷயங்கள்தான்!… யோகு ஐயா என்றால் வலியக் கேட்டே வாங்குவார்” என ட்ரைவர் சத்தியமூர்த்தியை வற்புறுத்தினான்.

யோகுவைப்பற்றித் தன்னிடம் சொல்வதுபோல் இவன் தன்னைப்பற்றியும் இன்னொருவரனிடம் சொல்லத்தானேபோகிறான் என நினைத்து சத்தியமூர்த்தி விழித்தக்கொண்டே நிற்க, ட்ரைவர் மேலும் சொன்னான்:

‘சும்மா யோசிச்சுக்கொண்டு நில்லாமல்… வேண்டுங்கோ… இந்தக் காலத்தில முந்நூறு ரூபா… ஆர் தரப்போறாங்கள்?”

காலையில் அந்தப் பணத்திற்காக சன்னதம் கொண்டு நின்ற சாப்பாட்டுக் கடைக்காரர் கண்முன்னே வந்தார். அவருக்கு இன்றைக்குக் கொஞ்சக் காசாவது கொடுக்கவேண்டும்.. யாரிடமாவது மாறவேண்டும் என நினைத்தான். “அது சரி… இந்தக் காலத்தில முந்நூறு ரூபாய் ஆர் தரப்போறாங்கள்?”

அவனையறியாமலேயே சத்தியமூர்த்தியின் கை நீண்டது…

பணத்தை சத்தியமூர்த்தி பெற்றுக்கொண்டதும், கடைச்சேவகர்களும் ட்ரைவருமாக பொருட்களைக் காரில் ஏற்றினார்கள்.

சத்தியமூர்த்தியின் நெஞ்சிடி அதிகரித்தது. உடல் நடுக்கமெடுத்தது. சேர்ட் வியர்வையில் நனைந்தது. “என்ன காரியம் செய்துவிட்டேன்!“ யாருடனும் கதைக்காமல் ஊமையாக நின்றான்.

என்ன நடக்கிறது என அவனால் நிதானிக்க முடியவில்லை! காசு பொக்கட்டினுள் போய்விட்டது. எது சரி, எது பிழை என அவனால் தீர்மானிக்க முடியவில்லை. காசு வேண்டுவதில்லை என்ற எண்ணத்தில்தானே கடைக்குள் நுழைந்தான்! பிறகு காசை வேண்டிப் பொக்கட்டினுள் போட்ட பூதம் எங்கிருந்து வந்தது?

பிரமை பிடித்தவன்போல நின்ற சத்தியமூர்த்தியை ட்ரைவர் வந்து ஒரு வருத்தக்காரனைக் கூட்டிப்போகிற பக்குவத்துடன் அழைத்துக் காருக்குச் சென்றான்.

கார் உறுமலெடுத்துக் கிளம்பியது.

சத்தியமூர்த்தி ட்ரைவரையே திரும்பிப் பார்க்கப் பயந்துபோனவனாய் இருந்தான். காலையில் எப்படி ஒரு ராசாவைப்போல வந்து காரிலே ஏற முடிந்தது! அந்தக் கம்பீரமும் பெருமையும் உடைந்து சிதறிப்போக இப்போது மழையில் நனைந்த கோழிக்குஞ்சைப்போல சுருங்கிப் போயிருந்தான்.

கடைக்கண்ணால் இடையிடையே ட்ரைவரை நோட்டம்விட்டான். அவன் மேற்கொண்டு ஏதாவது பேசுவானோ என்று அச்சமாயிருந்தது. இந்த விஷயத்தை அவன் தொழிற்சாலையில் எல்லோரிடமும் பரப்பி விடுவானோ என மனது கலவரமடைந்தது. நிர்வாகத்திற்கும் இது தெரியவரத் தன்னை வேலையில் இருந்தே நிறுத்திவிடுவார்களே! கடவுளே, இது என்ன சோதனை?

ட்ரைவரிடம் சரணடைந்து விடவேண்டியதுதான். “அப்பனே என்னைக் காட்டிக் கொடுத்துவிடாதே!”

அல்லது அந்தப் பணத்தில் அவனுக்கும் ஒரு பங்கு கொடுத்தால் என்ன? அவனம் அதை எதிர்பார்க்கக்கூடும்.

‘அந்தக் காசிலை… உனக்கும் பங்கு தாறன். இந்த விஷயத்தை ஒருத்தரிட்டையும் சொல்லிப்போடாதை!” கும்பிடாத குறையாகப் பெரிய நடுக்கத்துடன் இதைச் சொல்லி முடித்தபொழுது சத்தியமூர்த்தி அழுதுவிடுவான் போலிருந்தது. இது காலையில் பலர் முன்னிலையில் அடைந்த வெட்கக்கேட்டை விடப் பாரதூரமாக மனதைப் பாதிப்படையச் செய்தது.

ட்ரைவர் பலமாகச் சிரித்தான்

‘எனக்கென்ன விசரா?… நான் ஏன் ஐயா சொல்லப்போறன்? நீங்கள் நல்ல ஆள்தான்…! யோகு ஐயா எண்டால் எனக்கு ஒரு செப்புக்காசும் கண்ணிலை காட்டமாட்டார்…! இது உங்கடை காசு… நீங்கள் வைச்சிருங்கோ!”

என்னடா இது! இவனுக்கு ஏன் இவ்வளவு தாராள மனசு!

பொழுதுபடுவதற்கு முன்னரே அவர்கள் தொழிற்சாலைக்குத் திரும்பி வந்து சேர்ந்தனர்.

பொருட்கள் சரியாக வந்திருப்பதை ஸ்டோர் அதிகாரியிடமிருந்து அறிந்து கொண்டு “வெரிகுட்“ சொன்னார் வேலாயுதம் ஐயா.

அன்றைய தபாலில் சத்தியமூர்த்திக்கு வந்திருந்த கடிதத்தைக் கொடுத்தான் தவச்செல்வன்.

கடிதம் மனைவியிடமிருந்து வந்திருந்தது. ஸ்வீற்! அவளது அன்பு முகம் தெரிஞ்சதுமே மற்றைய பிரச்சினைகளும் கவலைகளும் பறந்துபோயின. நெஞ்சில் ஆனந்தம் புகுவுது போலிருந்தது. நினைத்ததுபோலன்றியும் எல்லாம் சுபமாக பொக்கட்டில் வந்து சேர்ந்துகொண்ட முன்நூறு ரூபாயின் கனதியும் இந்த ஆனந்தத்துக்கு இன்னொரு காரணமாயிருந்தது. ஆறுதலாக கன்டீனில் இருந்து ரீயும் அடித்துக்கொண்டு கடிதத்தை வாசிக்கலாம் என்ற எண்ணத்தில் கன்டீனை நோக்கி நடந்தான்.

மனைவியையும் மூன்று மாதக் குழந்தையாக… பச்சைப் பாலகனையும் பிரிந்து வந்து இரண்டு மாதங்களுக்கு மேலாகின்றது. இப்பொழுது அந்நினைவுகள் ஒருவித கவலையாக மனதில் ஏறியது.

அவர்களைப் போய்ப் பார்க்கவேண்டுமென அடிக்கடி ஆசை எழுவதுண்டு. இப்போதெல்லாம் முன்னரைப்போல நினைத்தவுடன் யாழ்ப்பாணம் போகமுடிவதில்லை. ஏதாவது வில்லங்கம் வந்துவிடும். றெயின் சடுதியாக ஓடாமல் நிற்கும். பிறகு பஸ்கள் ஓடும். பல இடங்களில் நிறுத்திப் புறப்படும். ஆமிக்காரர்களின் பரிசோதனைகள்.. இழுபறி, உத்தரவாதமில்லாது புறப்படும் பிரயாணம். அதனால் ஏதாவது மிக முக்கிய அலுவலாக இருந்தாற்தான் சத்தியமூர்த்தி வீட்டுக்குப் போய்வருவான்.

இப்பொழுது கடிதத்தைக் கண்டதும் அந்த நினைவுக்குள் மீண்டும் வந்தன. வீட்டுக்குப் போக ஆசையாயிருந்தது. இப்பொழுது சுட்டிப் பயல் வளர்ந்திருப்பான்.

ஒவ்வொரு கடிதங்களிலும் பிள்ளையின் விளையாட்டுக்களைப் பற்றி மனைவி ஒவ்வொரு அர்த்தம் கற்பித்து எழுதுவாள். அவன் படுத்திருந்து கை, கால்கள் அசைக்கும் அழகை… குறிப்பிட்டு எழுதுவாள். அதையெல்லாம் வாசிக்கும்பொழுது தூர இருக்கிறோமே என்ற கவலை தோன்றினாலும் உள்மனதைச் சுண்டி இழுக்கும் ஒருவித ஆனந்தம் பாயும். ஆனால் இந்தக் கடிதத்தை வாசித்துக்கொண்டுபோக அவனுக்கு இரத்த அழுத்தம் அதிகரிப்பது போலிருந்தது.

இன்று வந்திருந்த கடிதம் அந்தக் கதைகள் எதையும் சுமந்து வராமல் அவசரத்தில் எழுதப்பட்டிருந்தது. பிள்ளைக்கு ஏதோ சுகயீனம் என எழுதியிருந்தாள் மனைவி. “சதா வீரிட்டு அழுகிறான், பால் குடிக்கிறானில்லை. உடம்பு அனலாய்ச் சுடுகிறது. நல்ல டொக்கடரிடம் கொண்டுசெல்லக்கூடக் கையில் காசு இல்லை. இக்கடிதம் கண்டதும் உடனடியாகக் காசு அனுப்பி வைக்கவும்.”

கொஞ்ச நேரம் பேச்சு மூச்சற்றுப் போயிருந்தான சத்தியமூர்த்தி. பிள்ளைக்குச் சுகயீனம் என்பதை அவனால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை. உடனே வீட்டுக்குப் போகவேண்டும்போலிருந்தது. ஆனால் நினைத்தவுடன் லீவு கிடைக்கப்போவதுமில்லை. லீவு கிடைத்தாலும் போய் வரும் செலவுக்கு ஒரு தொகைப் பணம் வேண்டியிருக்கும். அதைவிட அக்காசை அனுப்பிவிட்டால் பிரயோசனமாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால் காசு?

உடனே முந்நூறு ரூபாய் அவனது நினைவில் வந்தது. அவன் அதற்காகக் கடவுளுக்கு நன்றி கூறினான். இன்றைக்கு இந்தக் கடிதம் வந்த நேரத்தில் தான் வழக்கம்போல வெறும் கையுடனே இருந்திருந்தால் எவ்வளவு கஷ்டப்பட நேரிட்டிருக்கும் என நினைத்துப் பார்த்தான். யாரிடம் மாறுவது எனத் தலையைப் போட்டு உடைத்திருப்பானே! கடவுள் எவ்வளவு நல்லவர்! தனது இக்கட்டான நிலையை முன்னரே அறிந்துகொண்டுதான் இப்படி அருள் புரிந்திருக்கின்றார் எனப் பக்தி பெருக நினைத்தான்.

கன்டீனில் இருந்தவாறே பேப்பர் எடுத்து மனைவிக்குக் கடிதம் எழுதினான்… “இத்துடன் முந்நூறு ரூபா இருக்கிறது. உடனடியாக நல்லதொரு டொக்டரிடம் காட்டி மருந்து எடுக்கவும். மேற்கொண்டு பிள்ளையின் உடல்நிலை சுக நிலவரங்களை அறியத்தரவும்- அன்புடன் சத்தி.”

பிரதம தபாற் கந்தோருக்குச் சென்று கடிதத்தைத் தபாலிட்டுவிட்டு அறைக்குச் சென்றான் சத்தியமூர்த்தி. இரவு… சத்தியமூர்த்தி உறக்கம் கெட்டுப்போனான். மனது ஒரு நிலையில் இல்லாது தவித்தது. ஒருவித சோகமோ அன்றிப் பயமோ ஆட்கொண்டது. நிம்மதி கலைந்துபோனது.

குழந்தைக்கு எப்படியிருக்கும், இப்போது சுகமாயிருப்பானோ அல்லது இன்னும் கடுமைப்படுத்தியிருக்குமோ? டொக்டரிடம் போவதானால் யார் உதவியுடன் போனாளோ தெரியாது. பிள்ளையை, குழந்தை ஸ்பெசலிஸ்ட்டிடம் காட்டினால் நல்லது. மடைத்தனமாக இதைப்பற்றிக் கடிதத்தில் குறிப்பிடாமல் விட்டேனே என நினைத்து வருந்தினான்.

யாழ்ப்பாணம் இப்போது முந்தியமாதிரி இல்லை. பொழுதுபடுவதற்கு முன்னர் ஊடரங்கிவிடுகிறது. ராவிருட்டியில் மக்கள் வெளியே நடமாடுவது பயமாக இருக்கிறது. என்ன எது நடக்குமோ என எல்லோரும் அஞ்சியவண்ணமே இருக்கின்றனர். இரவில், அவசரத்துக்கு ஒரு கார் பிடிப்பதே பெரிய கஷ்டம். இரவு நேரங்களில் பிள்ளைக்கு ஏதாவது கடுமையென்றால் எப்படித்தான் டொக்டரிடம் கொண்டுபோவாளோ?

இந்த நிலைமைகளை எண்ணி அவனுக்குப் படுக்கையிலிருந்து அழுகையே வந்துவிடும்போலிருந்தது.

நித்திரையின்றிப் படுக்கையில் உருண்டவாறு கிடக்க, நேரம் நன்றாகக் கடந்ததும் வயிறு பசி எடுப்பதை உணர்த்தியது. ஓ! இன்றிரவு சாப்பிடவில்லையே என்பது சத்தியமூர்த்திக்கு நினைவு வந்தது. மனைவியின் கடிதம் சாப்பாட்டு நினைவையே அற்றுப்போகச் செய்திருந்தது என்ற காரணம் ஒரு புறமிருக்க, எந்த முகத்தை வைத்துக்கொண்டு சாப்பாட்டுக் கடைக்குப் போவது என்ற அந்த உள்ளார்ந்த எண்ணமும் இரவுச் சாப்பாட்டைத் தவிர்த்துவிட்டிருந்தது. இனி, கொஞ்சக் காசாவது சாப்பாட்டுக் கடைக்குக் கொடுக்காமல் சாப்பிடப் போவது முடியாத காரியமாக அவனுக்குப் பட்டது. அப்படியானால் நாளைக்குக் காலையிலும் பட்டினி!

நெடுநேரம் உறங்காமலிருந்து விடியப்புறமாகத்தான் அயர்ந்து போனதால் எழுவதற்குச் சற்று நேரம் கடந்துவிட்டது. நேரத்தைப் பார்த்துக்கொண்டு அவசரமாக வெளிக்கிட்டு வேலைக்கு ஓடியதால் காலைச்சாப்பாட்டைப் பற்றிய உணர்வும் மறந்துபோனது.

அலுவலகத்தில் வேலை ஓடவில்லை. மனசு வீட்டுக்கு ஓடிவிட்டது. குழந்தையின் சுகநிலையை எப்படி விரைவாக அறியலாம் எனத் தவிப்பாக இருந்தது. தான் அனுப்பிய காசு இப்பொழுது போய்ச் சேர்ந்திருந்தால் உதவியாக இருந்திருக்குமே…. போயிருக்குமோ என்னவோ… என எண்ணினான்.

இரவு நித்திரையில்லாதமையாற் போலும் உடல் அசதியாக இருந்தது. சற்று தலையிடியும் தொடங்கியது. மனச் சஞ்சலமும், வயிற்றுப் பசியும் அசதியும், உடல் காய்வது போன்ற உணர்வையும் அளித்தது.

நேரம் செல்லச் செல்ல காய்ச்சல் அதிகரித்தது. அதற்கு இன்னொரு பயமும் காரணமாயிருந்தது. குழந்தைக்கு மருந்து எடுப்பதற்காக அனுப்பிய பணம் நேர்மையாக உழைத்ததல்லவே என்ற நினைவு உள்மனதை அழுத்திக்கொண்டிருந்தது. யோசனையின்றி இப்படிக் குறுக்கு வழியில் வந்த பணத்தை அனுப்பியது சரியான செயலா என்ற பயம் விசுவரூபமெடுத்தது. ஒன்றும் அறியாத அந்தப் பாலகனுக்கு இந்தப் பணம் என்னென்ன தீங்குகளைச் செய்யுமோ என்ற அச்சம் நெஞ்சைத் துளைத்துக்கொண்டிருந்தது.

மாலை நாலு மணியைப்போல, சத்தியமூர்த்தியின் பெயருக்கு ஒரு “தந்தி” வந்திருந்தது. மனைவிதான் தந்திச்செய்தி அனுப்பியிருந்தாள்.- “பிள்ளைக்குச் சுகயீனம் கடுமை… உடனடியாக வரவும்.“

“நான் நினைத்தது சரியாகப் போய்விட்டது!” என சத்தியமூர்த்தி அதிர்ந்துபோனான். தந்தியை வாசித்த மறுவினாடியே அவன் மயக்கமுற்று கதிரையில் சாய்ந்தான். தவச்செல்வனும், கூட வேலை செய்கிற மற்றவர்களும் தண்ணீர் தெளித்து அவனைச் சுயநினைவுக்குக் கொண்டுவந்தனர்.

‘நான் வீட்டுக்குப் போகவேணும்… வீட்டுக்குப் போகவேணும்” என்று மாத்திரம் சொல்லிக்கொண்டிருந்தான்.

வேலாயுதம் ஐயா அவனுக்குத் தேறுதல் வார்த்தைகள் சொன்னார்.

‘ஒண்டுக்கும் பயப்பிடாதையும்… சத்தி! போய்ப் பிள்ளையை நல்ல டொக்டரிட்டைக் காட்டினால்… சுகமாயிடும்… சுகப்படுத்திப் போட்டுத் திரும்பி வாரும்…” அவனது பயணத்துக்கும், செலவுக்கும் தேவையான பணத்தைக் கொடுத்து அனுப்பிவைத்தார்.

அன்றைய இரவு சத்தியமூர்த்தி யாழ்ப்பாணம் பயணமானான்.

ஒருபோதும் இல்லாமல் பின் வழியில் சம்பாதிக்க நினைத்த தனது குறுக்குப் புத்திக்கு கடவுளாகப் பார்த்துத்தான் இந்தத் தண்டனையைத் தந்திருக்கிறார் என நினைத்தான் சத்தியமூர்த்தி. நேர்மை தவறியதுமல்லாமல் எல்லாவற்றிற்கும் கடவுளையே துணைக்கிழுத்து ஒவ்வொரு அர்த்தம் கற்பித்துக்கொண்டு, தான் ஒரு பாவமும் செய்யாத நிரபராதி என எண்ணியது என்ன மாதிரியான சந்தர்ப்பவாதம் என்று புரிந்தது. சும்மாவா சொன்னார்கள்… குறுக்குவழியால் வந்த பணம் நிலைக்காது… மற்றவர்கள் சொத்தைச் சுரண்டினால் உருப்பட முடியாது, என்று!

‘கடவுளே அதற்கு இந்தத் தண்டனையா?” என மானசீகமாக வேண்டினான்.

தான் அனுப்பிய அந்தப் பணத்தில் மருந்து வாங்கியமையாற்தான் குழந்தைக்கு வருத்தம் கடுமையாகியது என நிஜமாகவே நம்பினான் சத்தியமூர்த்தி. கொழும்பில் வேலை செய்யும் இந்த ஐந்து வருட காலத்தில் முன்னர் ஒரு நாளாவது யாருக்காவது வருத்தம் கடுமை எனத் தந்தி வந்து போகவேண்டிய அவசரம் ஏற்பட்டத்தில்லை. இப்ப இப்படித் தன்னை உலைப்பது அந்தப் பிசாசுதான். எத்தனையோ பேர் குறுக்கு வழியிற் சம்பாதிக்கிறார்கள்தான்.. நன்றாகச் சீவனம் செய்வதற்காகச் சொல்கிறார்கள்தான். எவர் எதை வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போகட்டும். அதையெல்லாம் நம்புவதற்குச் சத்தியமூர்த்தி தயாராக இல்லை. அவனுக்கு இந்த ஒரு சாபமே நல்ல படிப்பினை.

யாழ்ப்பாணம் போய்ச் சேர்வதற்குள் எத்தனையோ தெய்வங்களை இரந்து வேண்டினான் சத்தியமூர்த்தி. பல நேர்த்திக்கடன்களை ஒவ்வொரு தெய்வங்களுக்குமாக மனதில் வைத்தான். நாளைக்குப் பிள்ளையைக் கோயிலுக்குக் கொண்டு சென்று இறைவனின் பாதங்களில் கிடத்தி மனமுருகி அழுதாற்தான் செய்த பாவமெல்லாம் தீரும்.. கவலையும் அகலும், பயமும் போகும் என்று தோன்றியது.

வீட்டுக்கு வந்த சத்தியமூர்த்தியைக் கண்டதும் மனைவி அழுதேவிட்டாள். குழந்தைக்கு வருத்தமா அவளுக்கு வருத்தமா என நினைக்கத் தோன்றுகிற அளவுக்கு அவள் உருக் குலைந்துபோயிருந்தாள்.

குழந்தையைத் தூக்கியபொழுது அனலாய்க் காய்ந்தது. அடிக்கடி திடுக்குற்று விழிப்பதும், வீரிட்டுக் குளறுவதுமாக இருந்தான். அடிக்கடி வாந்தியெடுக்கிறான்.. வயிற்றோடமும் இருக்கிறது. முகம் வெளிறிப் போயிருக்கிறது…

‘டயரியாவா?” எனப் பயத்தோடு வினவினான்.

மனைவிக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. முதலில் கைமருந்துகள் செய்தாளாம்.. பிறகு கிட்ட உள்ள டொக்டரிடம் காட்டியதாகச் சொன்னாள். எனினும் வருத்தம் குறையவில்லை.

‘நல்ல டொக்டரிட்டைக் காட்டியிருக்கலாமே..!”

‘தெரியாதவையிட்டப் போறதெண்டால்… கையிலை காசுமெல்லோ வேணும்.”

‘ஏன்… நான் அனுப்பின காசு கிடைக்கவில்லையா?”

‘இல்லை!”

சத்தியமூர்த்தி அனுப்பிய கடிதம் இன்னும் கிடைக்கவில்லை. அந்தப் பணம் தனது குழந்தையின் மருந்துச் செலவுக்காகப் பாவிக்கப்படவில்லை என்பது ஆறுதலாக இருந்தது. எனினும் பதற்றம் சற்றும் குறையாமல் அதிகரித்தது.

அந்தக் கடிதம் எந்த நேரத்திலும் வரக்கூடும். ஒரு பிசாசைப்போல அனர்த்தங்கள் செய்யத் தொடங்கியிருக்கும் அந்தப் பணம் தன்னிடம் திரும்ப வரும்பொழுது அதை எதிர்கொள்வதற்கு, நெஞ்சுக்குத் துணிவு இருக்கிறதா என்பதே சந்தேகமாக இருந்தது.

பிள்ளையை டொக்டரிடம் கொண்டு போவதற்காக மனைவி அவசரப்படுத்தினாள். ‘சரி.. வெளிக்கிடு போகலாம்..” எனக் கூறிவிட்டு, இவன் நேரத்தைக் கடத்தினான்.

கடிதக்காரன் வந்தால் பார்த்துவிட்டுப் போகலாம். எப்படியோ அந்தப் பணம் இன்னமும் தனது தேவைகளுக்காகப் பாவிக்கப்படவில்லைதானே?

அதை அப்படியே கொண்டுசென்று கடைக்காரனிடம் கொடுத்துவிடலாமே என்று நினைத்தான் சத்தியமூர்த்தி. ஐயா, என்னைவிட்டால் போதுமையா… உனக்குக் கோடி புண்ணியம்!

ஆனால் அது நியாயமான காரியமா? கடைக்காரன் பொருளின் பெறுமதிக்கு மேலதிகமாக வைத்த இலாபத்தில் ஒரு பங்கைத்தானே தனக்குத் தந்திருக்கிறான். அதைத் திரும்பவும் அவனிடமே கொடுப்பது இன்னும் மோசமான காரியமாகும். அது தொழிற்சாலைக்கு உரிய பணம்.

அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு போய் வேலாயுதம் ஐயாவின் கையிற் கொடுத்துவிட்டு, சாஸ்டாங்கமாக விழுந்துவிடலாமா?…. எனக்கு அடைக்கலம் தந்தருளும் சாமி!

ஆனால் அது எவ்வளவு கேவலமானது. அதற்குப் பிறகு யார் தன்னை அங்கு ஒரு மனிதனாக மதிப்பார்கள் என்ற இயல்பான கூச்சம் நெஞ்சைக் கவ்வியது.

அப்படியானால் என்ன செய்வது?

எங்காவது கோயிலுக்குக் கொடுத்து பிராயச்சித்தம் செய்து கொள்ளலாமா? நல்ல கதை இது! கொள்ளையில் வந்த பணத்தைக் கோயிலுக்குக் கொடுப்பதா? இது இன்னும் பாவச்சுமையை ஏற்றிக் கொண்டதாக முடியும்.

குழந்தையின் அழுகை அவனைத் துடிதுடிக்கச் செய்து கொண்டிருந்தது. ஒருபுறம்…! மறுபுறம் அவன் கடிதம் வருகிறதா… வருகிறதா என வழியை வழியைப் பார்த்துத் துடித்துக்கொண்டிருந்தான்.

‘என்ன மனிசனப்பா நீங்கள்?.. பிள்ளை இப்படிக் குளறுது.. கடிதம் கடிதம் என்று சாகிறியள்!.. கிடக்கிற காசைக் கொண்டு வாங்கோவன்… டொக்டரிட்டைப் போயிட்டு வந்து பார்க்கலாம்தானே?”

சத்தியமூர்த்தி அந்தப் பக்கமா.. இந்தப் பக்கமா எனத் தவித்துக் கொண்டு நிற்க… தபால்காரன் வந்தான்.

வாசலுக்கு ஓடிச் சென்றான் சத்தியமூர்த்தி! மூச்சு வாங்கியது.

அவன் கொழும்பிலிருந்து பணத்தோடு அனுப்பிய கடிதம்தான்.. அவனது கையிலேயே இப்பொழுது கிடைத்துவிட்டது.

கடித உறையை உடைப்பதற்கு கை படபடத்தது. நெஞ்சு உடையப்போவது போன்ற பயம் மூச்சை இழுத்தது. வீட்டுக்குள்ளேயும் கடிதத்தைக் கொண்டுசெல்ல விருப்பமின்றி, அந்த இடத்திலேயே நின்று உடைத்தான்.

மிகக் கவனமாகக் கடித உறையை உடைத்து, கடிதம் எழுதிய தாளில் மடித்து வைக்கப்பட்டிருந்த முன்னூறு ரூபாயை எடுத்துக்கொண்டு கடிதத்தை மட்டும் உறையில் வைத்து ஒட்டி அனுப்பியிருந்தார்கள் யாரோ!

ஆஹா! அது போய்விட்டது!

காசு விரைவாக மனைவியின் கையில் கிடைக்கவேண்டுமென்பதற்காக மணியோடர் எடுக்காமல் ரூபாய் நோட்டாகவே வைத்து அனுப்பியிருந்தான்… அது போய்விட்டது!

ஆனந்தம் பொங்க ஓடிச்சென்று குழந்தையை அணைத்துக்கொண்டான்.

(சிரித்திரன் – 1986)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *